Wednesday, July 31, 2013

முகநூலில் 1000 ஷேர்களை தாண்டிய என் கட்டுரை....


இந்த கட்டுரை வலைப்பதிவில் எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது அப்புறம் முகநூலில் ஒரு ரவுண்டு வந்தது இக்கட்டுரையால் நிறைய நண்பர்களின் நட்பு கிடைத்தது இந்த கட்டுரையால் என் வீட்டு ஞாபகம் வந்தது என ஏகப்பட்ட மெயில், சாட், போன் என நிறைய பேச்சு இதைப்பற்றி என்னிடம் பகிர்ந்தார்கள் இன்று காலை அலுலலக தோழி முகநூலில் ஆசிரியர் பக்கம் என்று ஒன்று இருக்கு பாருங்க என்றார். ஏன் என்றேன் அது நீங்களும் உங்க மகனும் இருக்கும் படம் தானே என்றார் ஆம் என்றேன்.

அதன் பின் தான் அந்த கட்டுரையை பார்த்தேன் இது நம் கட்டுரையாச்சே என்று படிக்கும் போது கீழே என் பெயரை போட்டு இருந்தார்கள். அப்படியே ஷேர் செய்த எண்ணிக்கையை பார்க்கும் போது 880 என்று இருந்தது ஆச்சர்யம் அப்புறம் மதியம் பார்த்தேன் ஆயிரம் ஷேர்கள் என்றால் மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும் கட்டுரை மற்றும் நானும் என் மகனும் இருக்கும் புகைப்படம் நிறைய பேரை சென்றடையும் போது...  இது தாங்க அந்த கட்டுரையும் புகைப்படமும்....




அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "

உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான்.

எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.

உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..

தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.

தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.

சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.

ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...

நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை பட நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம் தெரிந்தது.

நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம் நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்பது என் ஆவா. 


https://www.facebook.com/Aasiriyarpakkam?hc_location=timeline


Tuesday, July 30, 2013

தாவணிக்கனவுகள்...


 இன்று எத்தனையோ நவ நாகரீக உடைகள் வந்தாலும் இந்த பாவடை தாவணியின் அழகிற்கு ஈடு இல்லை என்று தான் சொல்வேன். அந்த அளவிற்கு தாவணியை ரசித்தவர்களில் நானும் ஒருவன்..

நிறைய பேர் அவர்களின் ரசிப்பை சொல்ல கூச்சப்படுவர், சிலர் வெட்கப்படுவர் பலர் ஐயோ நான் ரொம்ப நல்லவன் என்பார்கள் ஆனாலும் இவர்கள் எல்லாம் நிச்சயம் ரசித்து இருப்பர் இந்த தாவணி உடையை.

ஒரு பேருந்து நிறுத்தத்தில் 50 பெண்கள் இருந்தால் அதில் ஒரு பெண் தாவணி அணிந்திருந்தால் அந்த பெண் தான் நிச்சயம் அனைவரின் கண்ணுக்கு பளிச் என்று இருப்பால் இதை மறுக்க இயலாது.


அவள் எப்போதும் தாவணி தான் அணிவாள்  12ம் வகுப்பு படிக்கும் அவள் பள்ளியின் உடையான அந்த பச்சைகலர் தாவணியும் வெள்ளை கலர் ரவிக்கையும் இன்றும் கண்ணை விட்டு அகலவில்லை. நெற்றியில் ஒரு மெல்லிய கோடாக திருநீறும் அதன் கீழ் குங்குமம் ஒரு கோடு போலவும் இரட்டை சடை பின்னி அதில் ஒரு நாள் கனகாம்பரமும், ஒரு நாள் செம்பருத்தியும் அணிந்து வரும் அவள் அழகை காண கோடிக்கண் வேண்டும்..

வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளித்து மல்லிகை பூவும் உடன் காதுக்கு பின் ரோஜாப்பூவை சரோஜதேவி ஸ்டைலில் குத்தியிருப்பாள் எம்ஜிஆரும் சரோஜாதேவியும் டூயட் பாடுவது போல நானும் அவளும் என் அன்றைய  கனவில் அவளோடு தான் டூயட் பாடுவோம்.

இரண்டு லாங் சைஸ் நோட்டும் டிபன் பாக்சும் வைத்து இருகைகளால் அதை மார்போடு அனைத்த படி அவள் வருகையில் சைக்கிளில் இரண்டு மூன்று முறை அந்த சாலையில் அவள் கண்ளில் படுவது போல வண்டி ஓட்டுவது ஒரு 3 மாதமாக தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

எனக்கு வேறு
எதுவும் வேண்டாம்
உன் நோட்புக்காக
மட்டும் நான்
இருந்தால் போதுமடி.....

ஒற்றைச்சடையோடு
தலை குணிந்து
ஞானத்தோடு
உன் கால் விரல்கள்
கோலம் போட
ஏங்குகிறேன்
உன்ஓரப்பார்வைக்காக...
இப்படி எல்லாம் அன்றைக்கு கடிதம் எழுதத் தெரியவில்லை. இன்று நினைவுகளோடு எழுதுகிறேன்.

காலில் கொழுசு சத்தம் ஜல் ஜல் என சல சலக்க தோழிகளின் நடுவில் அவள் இருப்பாள் சுற்றிலும் பாதுகவாலர்கள் போல இந்த பக்கம் இரண்டு அந்த பக்கம் இரண்டு என அந்த ஐவர் அணியை காண நாங்கள் சுத்தி சுத்தி வருவோம். அந்த ஐவர் அணிக்கு நாலு பக்கமும் கண்கள் போல எங்கிருந்து வந்தாலும் பார்த்து தகவல் சொல்லிவிடுவார்கள்.

8.20க்கு அவள் வரும் ABT பஸ்ஸைக்காக 8 மணிக்கே தவமாய் தவமிருப்போம். சனிக்கிழமைகளில் அவள் கலர் தாவணி அணிந்து வருவாள் பச்சை நிற பாவடையில் ரோஸ் நிற தாவணியும் என்னவென்று சொல்வது வஞ்சி அவளின் அழகை, எப்படி சொன்னாலும் கடைசியில் அவள் அழகு என்று தான் சொல்லவேண்டும்.

அந்த தேவதைக்கு ஒரு சுபநாளில் காதலை சொல்ல முற்பட்ட போது , எங்கிருந்தோ இடையில் வந்த அப்பா. என்னடா இங்கே ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறாயா? அவள் காது பட அழைத்து கொத்தாக அள்ளிப்போனார்.

ஆஹா இந்த தாவணி எனக்கில்லை போல அப்பா அவமானப்படுத்தி விட்டார் என்று எண்ணும் போது தாவணியின் உடன் வந்த சின்ன தாவணி நண்பனுக்கு அப்புறம் என்ன அடைகாத்த கோழி போல நண்பனுடன் ஒட்டி திரிந்தோம். சில நாட்கள் கழித்து எல்லோரும் பாரியூர் கோயிலுக்கு போறோம் நீங்களும் வாங்க அண்ணா என்று நண்பனின் காதலி எங்களை அழைக்க, நண்பனின் காதிலோ புகை. (ஐவர் அணி கூட தனியாக போகவேண்டும் என்பது அவன் நினைப்பு ) எப்படா சனிக்கிழமை வரும் கோயிலுக்கு போவோம் எஎன காத்திருந்தோம் கோயிலுக்கே போகாத எங்களைஅந்த தாவணிக்காக எல்லா கோயில் படியேறவும் காத்திருந்தோம் எங்கள் மூவர் அணி.



சனிக்கிழமை காலை இருப்பதிலேயே ஒசத்தியான சட்டையும், பேண்டும் போட்டுகிட்டு முகத்துக்கு கொஞ்சம் பேரன் லவ்லியும் பான்ஸ் பவுடரும் அப்பி நெற்றியில் சந்தனம், குங்குமம் என்று பக்தி பழமாக நான் மட்டும் வருகிறேன் என்று நினைத்தால் எனக்கு முன்னே நண்பனுகள் வெய்ட்டிங். 9 மணி பேருந்துக்கு 7 மணியில் இருந்தே காத்திருக்கிறோம்.

சைக்கிளை விட்டுவிட்டு பஸ்நிலையத்தில் காத்திருக்கும் போது அவர்களும் ஒவ்வொருவராக வந்து சேர பாரியூர் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பக்கத்தில் இருக்கும் உருளி வரை பேசிக்கொண்டே நடந்தோம் ஏனோ அன்று தாவணி கொஞ்சம் எடுப்பாகவும் மல்லிகையும், அவள் அழகிடம் தோற்று போய் இருந்தது. சரி எப்படியும் இன்று என் காதலை சொல்லிடவேண்டும் என்று முடிவில் நான் இருக்க எனக்கு முன்னே அவள் இதழ்கள் பேசத் துவங்கியது.

இனிமேல் நீங்க என்னைய பார்க்க முடியாது,  திங்கள் முதல் நாங்க எல்லாம் விடுதிக்கு செல்கிறோம் அதனால தான் உங்கள வரச்சொன்னோம் சும்மா காதலிக்கிறேன் நீ தான் உலகம் என்று எல்லாம் சுத்திகிட்டு இருக்காம +2 பாஸ்ஆகும் வழியப்பாருங்க..

நாங்களும் பாஸ் ஆகி எல்லாரும் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேருவோம் இதுதான் நம்ம டார்கெட். நீ படிச்சு பாஸ் ஆகி காலேஜ் வரும் வரை இதே போல அப்பவறைக்கும் என் மேல பாசம் இருக்கா உனக்குன்னு பார்ப்போம் எப்பவும் என்னையே நினைக்காமா பாஸ் ஆகற வழிய பாரு என்றாள்.

ஆக உனக்கு என்னை பிடிச்சிருக்கு சொல்லு ஆமா இந்த மரமண்டைக்கு விம் பவுடர் போட்டு விளக்கனுமா. ஊர் நோம்பி போது சும்மா பின்னாடியே சுத்தாதே சரியா..

சரி உனக்கு தீபாவளிக்கு துணி எடுத்து தரணும் என்பது என் ஆவல் சங்ககிரி செட்டியார் கடைக்கு போய்ட்டு அப்புறம் வீட்டுக்கு போய்டுங்க சரியா. உதை வாங்க போற நீ.

நானொல்லாம் அங்க வரமாட்டேங்க நீங்களே எடுத்து காவ்யா கிட்ட கொடுத்து விடுங்க..

சரி உனக்கு நதியா மாடல் சுடிதார் ஒகே தானே ....

நோ நோ நான் எப்பவும் தாவணி தான் அணிவேன் உன் டேஸ்ட்டுக்கு எனக்கு ஒரு தாவணி எடுத்து கொடு அது போதும் எனக்கு, கல்யாணம் ஆகும் வரை தாவணி அப்புறம் சேலை தான் என் சாய்ஸ்.

சரி சரி எடுத்து கொடுத்துவிடுகிறேன் எனறு பல அளவாடளுக்கு பிறகு பிரிந்தோம்.

சிகப்பு கலர் தாவணியும், கருப்பு கலரில் பூப்போட்ட பாவடையோடு ஒரு மியூசிக் கிரிட்டிங்கார்டு வாங்கி தோழியிடம் கொடுத்து அனுப்பினேன் நாட்கள் செல்ல செல்ல கடிதம் மூலம் வளர்ந்தது காதல்.

 +2 பரிட்சை முடிஞ்சு  ரிசல்ட் வந்ததும் கோபி ஆர்ட்சில் சேர வேண்டும் என தீயாக படிச்சோம். விடுதியில் இருந்த வரை நடந்த கடிதப்போக்குவரத்து வீட்டுக்கு வந்ததும் நின்றது.

+2 பரிட்சையில் அவள் மட்டும் பாஸ் எங்களுக்கெல்லாம் எல்லாம் ஊத்திகிச்சு அவள் கல்லூரியில் படிக்கிறாள் என்று கேள்விப்பட எந்த கல்லூரி என்று அறிய பக்கத்து ஊரான அவள் ஊருக்கு சென்று புதிதாக அவள் ஊரில் நண்பர்களை ஏற்படுத்தி அப்புறம் எந்த கல்லூரி என்று கண்டுபிடித்து அவள் இருக்கும் விடுதி எல்லாவற்றையும் கண்டுபிடித்து அவளின் வீட்டு வளையத்தில் இருந்து அவளை பார்க்கவேண்டும் என்பதற்குள் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது அதற்குள் இங்கு பல தாவணிகள் வந்து போய்விட்டது மனதில்.  நானும் வேலை விசயமாக ஊரைவிட்டு வந்தாச்சு.

கடைசியாக கோபி பாய்ண்டு பாய்ண்ட் பஸ்சில் அவளைப்பார்த்தேன் தாவணியில் ஆனால் பேச இயலவில்லை கூடவே வில்லன்கள் இருப்பதால் கண்களில் மட்டும் மோதின ஆனால் பேச இயலவில்லை என் தாவணி கனவாகவே போய்விட்டாள்...

கடந்த முறை அவள் ஊர் நண்பனை எதாச்சையாக சந்தித்தபோது அவள் எப்படி இருக்காள் என்று விசாரித்தேன் அண்ணே அந்த அக்கா கல்லூரி முடிச்சதும் அமெரிக்கா மாப்பிள்ளைக்கு கட்டிவெச்சிட்டாங்க. எங்க வீட்ல நான் கூட கல்யாணத்துக்கு போகல எங்கண்ணன்தான் போனோன் என்றான்...

அடப்பாவமே பாவாடையும், தாவணியும், புடவையை மட்டும் காதலித்து அணிந்தவள் இன்று அமெரிக்காவில் எப்படி மாடன் உடையில் இருப்பாளோ அவள் தாவணியும் கனவாகிவிட்டது.....

(இது உண்மைக்கதை என்று மட்டும் நம்பிடாதீங்க மக்களே)

Monday, July 29, 2013

மனைவியின் அன்பை பெற...


இல்லற வாழ்வு இனிமையாக கழிய அன்பு தான் முக்கியம். மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது.

பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்.....

முதலில் மனைவியிடம் நிறைய நேரம் பேசுங்கள் ஆபிசில் இருந்து வந்ததும் அவளின் உடையைப் பார்த்துவிட்டு கொஞ்சம் பாராட்டுங்க. அடுத்து சாப்பிட்டாயா, காலைல இருந்து என்ன செய்தாய் என்று பேசிகிட்டே இருங்க..
உங்க அலுவலக டென்சனை எல்லாம் வீட்டின் முன் நுழையும் போது செப்பலை கழட்டு விடும் போது அந்த நினைப்புகளை கழட்டிவிட்டுறுங்க.

இன்று தான் திருமணம் ஆனது போல் ஒவ்வொரு நாளையும் நினைச்சுகுங்க. புதுமாப்பிள்ளை போல் எப்பவும் சந்தோகமாக திரியுங்கள் உங்கள் மனைவியின் முன்.

வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள் வேற வழியில்லை வீட்டு வேலைகளை நீங்க தான் நண்பர்களே செய்ய வேண்டும் .. என்னை அடிக்க வர வேண்டாம் ஒகேவா? பெண்களை மயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதுக்கே சோர்ந்து போனா எப்படி?

பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.

மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் ( மல்லிகை பூ, அல்வா ) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள் .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள். வெளியில் அழைத்து சென்று அதாவது ஒரு அன்பு பரிசை அளியுங்கள் (அப்புறம் உங்களிடம் அன்பு பொங்கும்)

ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப உண்மை. அதற்க்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. உணர்வு பூர்வமான இடங்களில் அழுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்..

நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள். அவர்கள் முடிவு சரியாக இருந்தால் அதன் படி நடங்கள்..

பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். (நண்பர்களே மனைவியிடம் சண்டைப்போட்டு சாப்பாடு கிடைக்காத நாள்களில் இது நமக்கு மிகவும் கை கொடுக்கும்.. மாதத்தில் பாதி நாள் சண்டைதானே?) அவர்களுக்கு பிடித்தமானவற்றை நீங்களே சமைக்க முயலுங்கள் சாப்பிட்டதும் உங்களை மிக பாராட்ட வேண்டும். மாதத்தில் 4 முறையாவது சமைச்சு போடுங்க ( என்னைப்போல் தினமும் சமைத்து மாட்டிக்காதீங்க)

பெண்களுக்கு பேசுவது என்றால் பிடிக்கும். எனவே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல் , பொருளாதாரம் , ஊழல், உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக்கும் சைட்டுக்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுங்கள். நீங்கள் அடிக்கும் சைட்டைப்பற்றி அரை குறையாக சொல்லுங்கள் அப்புறம் உங்களுக்கு எமன் ஆகிவிடும் பார்த்து சொல்லுங்க.. மற்ற பெண்கள் அழகை மனைவியின் முன் விவரிக்காதீங்க ( அப்புறம் விவாகரத்தாகிவிடும்)

உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகிவிட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத்தாரோடு ஒத்து போங்கள்.அவர்கள் வீட்டில் உள்ளவர்களையும் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். ( முக்கியமாக மச்சினிச்சு கேட்டத வாங்கிக்கொடுத்துடுங்க )

மிக முக்கியமாக உங்கள் மனைவியின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் வெளியே செல்லும் போது அவர்களுக்கான புடவை, நகைகளை நீங்களே அவர்களிடம் கொடுத்து இன்று இதை அணி இந்த புடவைக்கு இது தான் அழகு என்று கொஞ்சலை அதிகரியுங்கள்... (திரும்ப உங்களுக்கு ஏகப்பட்ட கொஞ்சல்கள் வரும்)

அவ்வப்போது டயலாக் பேசுவதை விட்டுவிடாதீர்கள் டயலாக் பேசும் போது நீதான் என் உலக அழகி.. உன்னைத்தவிர எனக்கு வேற எதுவும் அழகா தெரியலை என்று பேசுங்க ( ஒரு பொய் சொல்வதான் ஒன்னும் குறைஞ்சு போக மாட்டிங்க.. மற்றொன்று அழகான பொய்களை பெண்கள் ரொம்ப விரும்புவாங்க)....

இதை எல்லாம் மறக்காமல் செய்து பார்த்து எனக்கு சொல்லுங்க நானும் எங்க வீட்டில் முயற்சி செய்கிறேன்.. விடா முயற்சி பலனைத்தருமாம்...

Saturday, July 27, 2013

இதழ்களின் வரிகள்... ( அவளுக்காக)





கூட்டுக்குடும்பத்தில்
அனைவரும் இருக்கையில்
அவளை கண்ணால்
கொல்லைப்பக்கம்
அழைப்பதில் இருக்கிறது
காதலின் " கிக் "

------------------------------------------

கண்ணை மூடினால்
கனவில் அவள்
வருவதில்லை
ஏன் என்றேன்
மனைவியாய் வருகிறேன்
என்கிறாள் !!

------------------------------------------

அவள் என்னிடம்
சண்டையிடும்
போதெல்லாம்
முத்தம் தான்
என் சமாதானப்பறவை...

ஆதாலால் தினமும்
எதிர்பார்க்கிறேன்
அவள் சண்டையை....

------------------------------------------



நான் மட்டுமல்ல
இந்த அகிலமே
மயங்கும் மங்கையின்
தேசம் அவளின் " இடுப்பு "

------------------------------------------

இரும்பு மனம்
கொண்டவனையும்
இளகிய மனம் ஆக்கும்
லெக்கின்ஸ் உடையில்
அவள் செம்ம ஹாட்டு
மச்சி...
 
  

------------------------------------------



உன் உதட்டு
சுழிப்புக்கு கவிதை
எழுத இயலாமல்
தவிக்கிறது என்
விரல்கள்....
 
 

Friday, July 26, 2013

இதெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா???



திண்ணை

திண்ணை இல்லா வீட்டை பார்க்கமுடியாது முன்னொரு காலத்தில் அந்த அளவிற்கு மக்களோடு ஒன்றி இருந்தது திண்ணை. வீடு கட்டினால் நிச்சயம் பெரிய திண்ணை சின்ன திண்ணை என்று நிச்சயம் வீட்டின் முன் கட்டி இருப்பர்.

திண்ணை என்பது ஒரு திண்டு போல இருக்கும். இது வீட்டின் முன் பகுதியில் அல்லது தலைவாசல் பகுதியில் திறந்த வெளியில் அமைந்திருக்கும். சுவற்றில் சாய்ந்தும், காலைத் தொங்கவிடுவதற்கும் வசதியான அமைப்பாக அமைத்திருப்பர். இதில் இருக்கும் தூண்கள் வீட்டைத்தாங்கிக்கொண்டு இருக்கும்.

திண்ணையில் உட்கார்ந்து ஊர் கதை பேசுவதும் வீட்டுக்கு வரும் உறவினர்கள் அங்கு உட்கார்ந்து ஊர்க்காரர்களோடு அளவாடுவதும், பள்ளிப்பாடங்களை சிறுவர்கள் அங்கு உட்கார்ந்து படிப்பதற்கும், வீட்டு பஞ்சாயத்து, ஊர் பஞ்சயாத்து என ஒவ்வொரு திண்ணைகளும் அந்த கால கதையை சொல்லும்..

தங்களது அனுபவங்களை பகிரும் இடமாக இருந்த திண்ணை இன்று இல்லாமலே போய் விட்டது.. திண்ணை கட்டும் இடத்தில் ஒரு 4 க்கு 4 அறை கட்டி வாடகைக்கு விடும் காலம் இந்த காலம்...

கிராமத்துத் திண்ணை நினைவுகளில்
அலைபாயும் நெஞ்சில் ஏக்கம்வடியுது;
இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?

--------------------------------------


நொங்கு வண்டி...

இந்த மாதிரி வண்டி ஓட்டி ரொம்பநாள் ஆச்சு... இப்ப நம் வீட்டில் இருக்கும் நம் குழந்தைகளுக்கு இந்த வண்டியைப்பற்றி ஒன்றுமே தெரிய வாய்ப்பில்லை ஆனால் ஒரு கால்த்தில் இது தான் எனக்கெல்லாம் காண்டசா, பிரிமியர் பத்மினி கார் போல... 4 முதல் 10 தொட்டிகளை வைத்து வண்டி செய்து அழகான கவட்டி தயாரித்து கவட்டிக்கு கலர் பேப்பர், சைக்கிள் டியூப் எல்லாம் கட்டி சேர்த்து வண்டியை ஓட்டுவது மகிழ்ச்சியான ஒன்று...

எல்லா சீசனுக்கும் இந்த வண்டி கிடையாது கோடைகாலத்தில் தான் எங்க ஏரியாவில் நொங்கு வண்டி ஓட்டுவது எல்லாம்.. நொங்கு வண்டி ரேஸ் வைத்து முதல் பரிசாக ஆற்றில் இருந்து எடுத்து வரும் அழகான கற்களை பரிசாக கொடுப்போம்...

"நொங்கு வண்டி கால ஓட்டத்தில் மறைந்தாலும் மனதை விட்டு மறையாத நிகழ்வு"
------------------------------------



பனை ஓலை காத்தாடி...

இன்று ஏறக்குறைய அழிந்த ஒரு விளையாட்டு என்றே சொல்லலாம்... பனையோலையை நன்கு காய வைத்து அதை அழகாக வடிவத்தோடு கட் செய்து மூன்று இலைகளை கொண்டு நடுவில் காத்தாடி முள் என்று அழைக்கப்படும் நீளமான முள்ளைக்கொண்டு மூன்று ஓலையின் நடுவில் குத்தி எதிர் முனையை கையில் பிடித்துக்கொண்டு கையை வேகமாக முன்னும் பின்னும் கொண்டு செல்கையில் அழகாக சுழலும் காத்தாடி.. இது அன்றைய நம் மெக்கானிசம் என்றே சொல்லாலாம் ஒவ்வொருவரும் ஒரு காத்தாடியை வைத்துக்கொண்டும் ஓடிவரும் அழகு இன்று கூட கிராமங்களில் பார்ப்பது அரிது தான்...
 
 

Wednesday, July 24, 2013

அஞ்சறைப்பெட்டி 25.07.2013



  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........




நரேந்திரமோடி அமெரிக்க செல்லக்கூடாது என்பதில் அமெரிக்கரை விட இந்தியர்களே அதிக ஆர்வத்தில் உள்ளனர். எம்பிக்கள் கையெழுத்து போட்டு அனுப்பியதில் பொய் கையெழுத்தும் உள்ளது என்கின்றனர். ஒரு மாநில முதல்வர் அயல் நாட்டிற்கு போவதில் என்ன தவறு அவரு என்ன அந்த நாட்டு அதிபருக்கு போட்டியாகவே போகிறார். அவரை பல நாடுகள் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. 

அமெரிக்க அவர் செல்லக்கூடாது என்று சொல்லி அவரை அமெரிக்காவிலும் பிரபலப்படுத்துகின்றனர் என்பது தான் நிதர்சனம்..

.......................................


பல நாட்களுக்கு முன் எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சு மின்சாரம் பற்றாக்குறை பற்றி தான் ஆனால் இன்று தமிழகத்தில் உள்ள நீர் மின் நிலையங்கள் எல்லாம் மீண்டும் மின்சாரம் தயாரிக்க தொடங்கிவிட்டன. போதக்குறைக்கு காற்றாழை மின்சாரங்கள் கை கொடுத்து அதனால் மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கின்றது இன்று தமிழக மக்களுக்கு. இன்னும் மழை பெய்ய வேண்டும் அணைத்து அனைகளும் நிரம்ப வேண்டும், மின்சாரம் பற்றாக்குறையற்ற மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் என்பது எல்லா தமிழனைப் போல் எனக்கும் ஆவல்..

தடையின் போது பல ஸ்டேட்டஸ்கள் விட்டவர்கள் எல்லாம் இப்போது எதுவும் சொல்லாதாது அவர்களின் பின்னடைவை காட்டுகிறது. மின்சாரப் பிரச்சனை தீர்க்கப்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை அதிமுக பெறும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

 .......................................


இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி இளவரசி கேத்திற்கு இரு தினங்களுக்கு முன் லண்டன் ஆஸ்பத்திரியில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் அவர் குழந்தையுடன் கென்சிங்டன் அரண்மனைக்கு திரும்பினார்.

அந்த ஆண் குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என்று நேற்று பெயர் சூட்டப்பட்டது.

.......................................

பாதாள சாக்கடை திட்டத்தால் பாதாளத்தில் இருந்த சாலைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக செப்பனிடப்படுகிறது. இதற்கு புது சாலைகள் என்று வருமோ என எதிர்பார்த்து இருக்கிறோம் கோவை வாசிகள். என்று முடியும் இந்த திட்டம் என தினமும் இருசக்கர வாகனத்தில் போகும் போதெல்லாம் மனம் கேட்கத்தவறாத கேள்வி இது தான்..

.......................................

 

ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கு நடந்து போய்விடலாம் போல அந்த அளவிற்க இருக்கிறது ஆட்டோ கட்டணம் ஏனப்பா இவ்வளவு கட்டணம் என்றால் பெட்ரோல் விலை உயர்வை சொன்னால் கூட பரவாயில்லை அங்க பாருங்க எவ்வளவு ட்ராபிக் என்று இதில் எப்படி வண்டி ஓட்டுவது இதில் வண்டி ஓட்டுவது என்றால் இவ்வளவு தான் விலை என்கின்றர் கூடவே இஷ்டம் என்றால் ஏறுங்க இல்லை என்றால் விடுங்க என்ற பதில் தான் வருகிறது.

இந்த ஆட்டோ வேண்டாம் வேறு ஆட்டோவில் செல்லாம் என்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்து எவ்வளவு என்று கேட்டால் நிற்கும் ஆட்டோ கேட்ட தொகையை விட பாதி தான் கேட்கிறார்... யாரைக்குற்றம் சொல்ல? அரசு தலையிட்டு ஆட்டோ கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு இது தான் என்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் எல்லாம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் வாங்குவார்கள் என்று நம்பி இருந்தால் நிச்சயம் நாம் ஏமாறத்தான் போகிறோம்...  சென்னை போல நம்ம ஆட்டோ கோவைக்கும் வராதா என்ற ஏக்கத்தில் இருக்கோம் விரைவில் வரும் என்று நம்புவோம்...

....................................... 



மனிதர்கள் உணவு பழக்கத்தால் ஏற்படும் நன்மை – தீமை பற்றி சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் பெரும்பாலானவர்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை என்று தெரிய வந்தது.

மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்கள், அதிக நேரம் உழைப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், போதிய உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் காலை உணவை சாப்பிடாமல் உள்ளனர் என்றும் தெரிந்தது. காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு மற்றவர்களை விட திடீர் மாரடைப்பு ஏற்பட 27 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துக் கணிப்பு மற்றும் மருத்துவ ஆய்வை ஒப்பிட்டு எச்சரித்துள்ளனர்.

அது போல இரவு நேர உணவை 10 மணிக்கு பிறகே சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. இது இதய நோய்களை கொண்டு வந்து விடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து விட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆபத்து ஆகிய பிரச்சினைகளும் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

..............................



ஜாக்கி சேகரின் படங்களில் ஒன்று.
 
தி ஹிந்து நாளிதழும், லண்டன் பிர்க்பெக் பல்கலைக்கழகமும் இணைந்து தேசிய அளவிலான புகைப்பட போட்டிகளை நடத்தி வருகின்றன. தற்போது நடந்து வரும் போட்டியின் தலைப்பு  - உழைக்கும் முதியவர்கள். இந்த போட்டியில் தமிழ்ப்பதிவர்களில் பிரபல பதிவரான ஜாக்கி சேகரும் பங்கேற்கிறார்.
 
மேலும் தகவல்களை அறிய: http://www.thehindushutterbug.com/
ஜாக்கி சேகர் எழுதிய பதிவினைப்படிக்க:
 http://www.jackiesekar.com/2013/07/blog-post_22.html#more 
 
நமது ஜாக்கி சேகர் எடுத்த புகைப்படத்திற்கு வாக்களித்து வெற்றிக்கு வழிவகுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். 
வாக்களிக்க இறுதி நாள்: 28/07/2013 இரவு 11 வரை.  31 ஜூலை அன்று வெற்றி பெற்றவர்கள் பட்டியல் http://www.thehindushutterbug.com/ தளத்தில் வெளியாகிறது. 
 

தகவல்



டால்பின் மீன்கள் பொதுவாக புத்திசாலித்தனம் நிறைந்த விலங்குகளாகக் கருதப்படுபவை. ஸ்காட்லாந்து நாட்டின் தொன்மையான செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டால்பின் மீன்கள், ஒவ்வொரு மீனுக்கும் ஒரு குறிப்பிட்ட சத்தம் வரக்கூடிய விசில் ஒலியினை எழுப்பி அழைக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியே பெயர் இருப்பதுபோல் டால்பின்களுக்கும் தனித்தனியான விசில் சமிக்ஞைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஸ்காட்லாந்து கடல்பகுதிகளில் வாழும் டால்பின் மீன்களிடையே கடல் உயிரியல் ஆராய்ச்சியாளர்களான ஸ்டெபானி கிங்கும், வின்சென்ட் ஜானிக்கும் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

அவர்கள் ஒலி பின்னணி பரிசோதனைகளை டால்பின்களிடம் மேற்கொண்டனர். டால்பின்களின் விசில் ஒலியை பிரதியெடுத்து திரும்ப ஒலிக்கும்போது அவை அந்த ஒலிக்கு செயல்படுகின்றனவா? என்பதை ஆராய்ந்தார்கள்.

இந்த விஞ்ஞானிகள் குறிப்பிட்ட டால்பின்களை பின்தொடர்ந்து, அவற்றின் விசில் ஒலிகளைப் பதிவு செய்து அவற்றுக்கு மற்றொரு பிரதி எடுத்தனர். அதேபோல் மற்றொரு பிரிவினைச் சேர்ந்த விலங்குகளின் அறிமுகமில்லாத விசில் ஒலிகளையும் பிரதி எடுத்தனர்.

இதுபோல் கலந்து எடுத்த ஒலிகளைக் குறிப்பிட்ட மீன்களிடையே மறுபடி ஒலிக்கச் செய்தபோது அவை தம்முடைய குறிப்பிட்ட விசில் ஒலிக்கு மட்டுமே செவி அசைத்ததையும், அதைத் தவிர மற்ற ஒலிகள் அந்த டால்பின்களிடம் எந்த விளைவையையும் எற்படுத்தாதையும் அவர்கள் கண்டறிந்தனர். இதன்மூலம், டால்பின்கள் தனிப்பட்ட ஒலிகளுக்கு செயல்படுவதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.


தத்துவம்

ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது.

தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றையும் கற்றுக்கொண்டல் எந்த வேலையையும் செய்து முடிக்கலாம்

முதல் கணிணி அனுபவம்... தொடர்பதிவு...


 தொடர்பதிவு 3 வருடங்களுக்கு முன்னால் தொடர் பதிவு என்பது செம்மையா களை கட்டும்.. இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது இது வரவேற்க வேண்டிய விசயம்.. முதலில் சீனு காதல் கடிதம் எழுத வைத்தார் அனைவரையும் அடுத்து எங்க ராஜியக்கா கணிணி பற்றி தொடர் பதிவ ஆரம்பிச்சு வெச்சுதும் படிச்சும் வேலைகிடைக்காம இருந்த பட்டதாரி போல இருந்த பதிவகம் வேலை கிடைச்சு வேலைக்கு போவது போல கல கலன்னு இருக்கு இந்த தொடர்பதிவால்.. ஆரம்பிச்சது அக்காவாக இருந்தாலும் என்னை அழைச்சது எங்க அண்ணன் பாலகனேஷ் அவர்கள் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஆரம்பிக்கின்றேன் என் ஆனந்த தொல்லையை...

+1 படிக்கும் போது பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் வந்து விட்டது அந்த க்ருப்பில் படிக்கும் மாணவர்களை எல்லாம் பெரிய ஆளுங்க மாதிரி சுத்தி சுத்தி வரும் சில கூட்டங்கள்.. கம்ப்யூட்ர் என்றால் என்ன அது எப்படி இருக்கும் என்ற பல கேள்விகள் எங்கள் மனதில் ஆனால் அதை பார்ர்கக கூட கொடுத்து வைக்கல என்பது தான் வருத்தம்.

அதுவும் இந்த க்ருப்பில் படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர் லேப்போடு க்ளாஸ் ரூம்மும் அமைந்திருக்கும் புல் ஏசி அறை இவனுக பன்ற அலப்பறைக்காகவே வேண்டும் என்றே கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களிடம் வம்புக்கு போவோம் அந்த அளவுக்க அவனுக மேல காண்டு. ப்ளாபி டிஸ்க் கருப்பு கலரில் இருக்கும் அதை கையில வெச்சிகிட்டு இவனுக பன்ற அலப்பறை தாங்க முடியாது...

அது வேலை செய்யுமா செய்யாதா என்று எங்களுக்கு தெரியாது கையில் தொடுவதற்கு கூட விடமாட்டானுக.. இதனால் அவனுக கையில் கொண்டு வரும் போது வேண்டும் என்றே மேலே மோதி ப்ளாப்பியை கீழே தள்ளிவிட்டு ஏளனம் செய்வது எங்களது கடமைகளில் ஒன்று. சரி இப்படியே இருந்தா எப்படி கம்ப்யூட்டரை பார்க்கனுமே எனும் போது என் நண்பன் சசி அந்த க்ருப்தான் படிச்சான் அதனால அவனோட அந்த அறைக்கு போவது என்று முடிவு செய்து காத்திருந்தேன்.

கம்யூட்டர் க்ருப் மாணவர்களை கிண்டல் அடிக்கும் போது டேய் நீங்க எல்லாம் வரலாறு நாங்க தான் இன்றைய லேட்டஸ்ட் யூகம் உங்களுக்கு புத்தகமே கதி ஆனா நாங்க அப்படி இல்ல என்று கிண்டல் செய்ததோடு,

கோபால் தெரியுமா? - என்றான்

ம்ம்ம் தெரியுமே எங்க பக்கத்து வீடு என்றேன்...!!

சிரி சிரி என்று சிரித்தனர் !!

டாஸ் தெரியுமா ?

தெரியாதுப்பா? தாஸ் தான் தெரியும்!

வேர்ட் ஸ்டார் தெரியுமா? லோட்டஸ் 123 தெரியுமா? என்று கலங்கடித்தனர்..



அப்புறம் இதெல்லாம் என்ன வென்று சசியிடம் கேட்டு தெரிந்த போது தான் கம்ப்யூட்டர் மேல் காதல் வந்தது. இதை எப்படியாவது கத்துக்கனும் என்ன செய்யனும் என்ற போது கோபியில் கம்ப்யூட்டர் சென்டர் அப்ப இல்ல ஈரோட்டில் தான் இருந்தது. அதை அப்புறம் பார்க்கலாம் முதலில் கம்ப்யூட்டரையே பார்த்தது இல்லை என்று கூட இருப்பவர்கள் எல்லாம் உசுப்பேத்த சரி இன்று கம்ப்யூட்டர் லேப்புக்குள் போகலாம் என்று முடிவெடுத்தோம்.

நான், குணா மற்றும் அம்பேத் 3 பேரும் மதியம் கம்ப்யூட்டர் ரூமிற்குள் போவது என்றும் போய் அதை பார்த்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தோடு சசியை அணுகினால் டேய் சார் திட்டுவார் அவர் இல்லாத போது தான் பார்க்கவேண்டும் என்றான்.. இது சரிபட்டு வராது என்று அப்வே முடிவெடுத்து தனியாக சென்று பார்க்கவேண்டும் என முடிவு செய்தேன். தனியாக சென்று காதலியை முதலில் எப்படி பார்ப்போமோ அது போல பல ப்ளான்கள் போட்டு சந்திக்க முயன்றேன்..

ஒருநாள் ரொம்ப ரோசம் பொத்துகிட்டு வந்து நேரடியாக கம்ப்யூட்டர் அறைக்கு செல்ல முடிவெடுத்து மதிய உணவு இடைவேளையில் சென்றேன் நேராக சென்று கம்ப்யூட்டர் ஆசிரியரை பார்த்தேன் என்ன வேணும் என்றார் எனக்கு கம்யூட்டரை பார்க்கனும் இதில் கோபால் எல்லாம் இருக்குதாம் அப்படின்ன என்னசார் நான் வரலாறு க்ருப்பில் இருப்பதால் இதை எல்லாம் அறிய முடியாதா என்றேன்.. அவருடன் இருந்த மாணவர்கள் எல்லாம் அதற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ருப் எடுத்திருக்கனும் இப்ப யோசிச்சு என்ன பன்றது என்றனர்..

அவர் சிரித்துக்கொண்டே மாலை 5 மணிக்கு மேல்வா இப்ப எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்றார் அவர் பெயர் ராதாகிருஷ்ணன். மாலை போனதும் அந்த கால அதாவது 1995 ம்ஆண்டு கம்யூட்டரான் கருப்பு வெள்ளை மானிட்டர் அதன் கீழ் சிபியு இருந்தது. இது தான் கம்ப்யூட்டர் உட்காரு என உட்கார வைத்தவர் வேகமாக டைப் அடித்தார். அப்புறம் கொஞ்ச நேரம் அதைப்பற்றி சொன்னவர் கவலைப்படாதே.. கம்ப்யூட்டர் க்ளாஸ் சென்று இதை எல்லாம் நீ கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார்.. அப்போது அந்த அறையை விட்டு வர மனம் இல்லாமல் 10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தான் இப்படி ஒரு நிலை என்று மனதை தேத்திக்கொண்டு வெளியே வந்தேன் குப் என்று வியர்த்தது ஏசி அறையில் இருந்து வெளியே வந்தால் அப்படித்தானே இருக்கும்...

அப்புறம் கம்ப்யூட்டர் சென்டருக்கு ஈரோடு வந்து LCC & Silicon என்ற இடங்களில் படித்து Graphic Designer, Layout Artist, Artist, Printing Team Lead, Print Tech-lead , Layout Specialist என்ற பல வேலைகளை இன்றும் செய்து கொண்டு இருக்கேன்..

இந்த தொடர் பதிவிற்கு யாரை அழைக்கலாம் என்று யோசிக்கும் போது கிட்டத்தட்ட இன்று தினம் பதிவெழுதும் நண்பர்களை எல்லாம் அழைச்சிட்டாங்க போல எல்லோரும் எழுதி தள்ளுகின்றனர்.. அனைவரும் வாழ்த்துக்கள்... என்னை எழுத அழைத்த அண்ணன் பாலகணேஷ்க்கு நன்றி...

Monday, July 22, 2013

வைரவிழா மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையம்...

 



கோபி கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மிகவும் பழமை வாய்ந்ததும் அனைவரும் அறிந்த பள்ளி தான் வைரவிழா மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் படிப்பதே பெருமை என்ற அளவிற்கு இன்றும் இருந்து வருகிறது.. ஊரில் நிறைய தனியார் பள்ளிகள் வந்தாலும் வைரவிழாவிற்கு என்று தனி இடம் எப்போதும் உண்டு..

இந்த பள்ளி கட்டுவதற்காக நிலத்தை தானமாக வழங்கியவர் கோபிசெட்டிபாளையத்தின் பெரும் நிழக்கிழார் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் சொத்து சுகங்களை இழந்த லட்சுமண ஐயர் ஆவார்.

 


விக்டோரியா மகாராணி ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுற்ற நிழையில் இங்கிலாந்து அரசு ஆழும் இடங்களில் எல்லாம் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடினர். அந்த காலகட்டத்தில் கோபிசெட்டிபாளையம் ஆங்கிலேயரின் மாவட்ட தலைமையிடமாக செயல் பட்டதாம். இன்றும் கோபி தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், துணை ஆட்சியல் அலுவலகம் எல்லாம் அந்த கால கட்டிடங்கள் என்பார்கள். அந்த கட்டிடங்களின் அமைப்பும் சிறப்பாக இருக்கும். அந்த விழாவை கொண்டாடும் போதுதான் கோபிசெட்டிபாளையத்தி சேர்ந்த நிழக்கிழார்கள், வக்கீல்கள் மற்றும் மருத்துவர்கள் எல்லாம் ஒன்றினைந்து கோபியில் எவ்வாறு கொண்டாடுவது என்று யோசிக்கும் போது தான் பள்ளி திறக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். பள்ளி திறக்கலாம் பள்ளிக்கு இடம் என்றதும் கொடை வள்ளல் ஐயா லட்சுமண ஐயர் அவர்கள் அவரின் இடத்தை தானமாக கொடுத்துள்ளார்.

பள்ளியின் பெயரையும் வைரவிழா என்று சூட்டிவிட்டனர். இந்த விழா கொண்டாடிய சமயங்களில் பல இடங்களில் இந்த பெயரை சூட்டி இருக்கலாம்.. டாக்ட‌ர்.வ‌ர்கீஸ் குரியன் எங்கள் பள்ளியில் படித்தார் என்று அடிக்கடி பெருமையாக கூறுவார்கள்.. பள்ளியின் காலை அசெம்பளி நடக்கும் இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கும் இங்கு தான் காந்தி அமர்ந்திருந்தார் என்பார்கள்.. காந்தி பள்ளிக்குவந்த வரலாறு உண்டு அங்கு அமர்ந்தார் என சொல்லத்தான் நான் கேட்டுள்ளேன்.. அதே ஆலமரத்தில் விநோபாவும் அமர்ந்தார் என்றும் அந்த அளவிற்கு புகழ்பெற்றது இந்த மரம் என்பார்கள்.. ( நானும் அடிக்கடி அந்த மரத்தடியில் உட்காருவேன் பின்னாளில் ஒரு புகழ்ச்சிக்கு ஆகுமள்ளவா)

பள்ளி துவக்கத்தில் இருபாலரும் படிக்கும் பள்ளியாகத்தான் இருந்துள்ளது பிற்காலத்தில் பெண்களுக்கு என்று பழனியம்மாள் பள்ளியை துவக்கிவிட்டனர். இந்த ஆண்கள் பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்பது என் விதி போலும். 9 ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை இங்கு தான் படித்தேன்.. இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் இன்று உலகில் பல இடங்களில் பல உயர் பதவிகளில் இருக்கின்றனர். இவர்களை எல்லாம் கணக்கெடுத்தால் பதிவின் எண்ணிக்கை தாங்காது.

1992 முதல் 1996 வரை இந்தபள்ளியின் மாணவனாக நான் இருந்ததில் எனக்கு மிக பெருமையே. இந்த பள்ளியில் அப்போதெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிட் தினமும் பாட வேளைகளில் அடி பின்னி எடுப்பார்கள்.. எங்கள் கணித ஆசிரியரை பற்றி மிக முக்கியமாக குறிப்பிட வேண்டும் அவர் பெயர் கந்தசாமி தற்போது தலைமையாசிரியர் என்று கேள்விப்பட்டேன். இவர் தான் எனக்கு வகுப்பாசிரியர் மற்றும் எங்கள் விடுதியின் காப்பாளரும் இவர் கணித வகுப்பு வராமல் கட்டி அடித்துவிட்டோம் என்றால் காரமடை பெரம்பை எப்போதும் கையில் வைத்திருப்பார் அதிலேயே பின்னி பெடல் எடுப்பார். அவரின் வகுப்புக்கு சரியான நேரத்தில் வந்து விடுவார் அவர் கணிதம் சொல்லிக்கொடுக்கம் பாணியே தனி. ஒவ்வொரு முறை என்னை அடிக்கும் போதெல்லாம் கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறாங்க நீ என்னடா என்றால் ஊர் சுற்றுவதிலேயே குறியாக இருக்கிறாயா என்று விலாசு விலாசு என்று விலாசுவார் பள்ளியில் மட்டுமல்ல விடுதியிலும்...

எங்கள் பள்ளி விளையாட்டில் அப்போதைய கோபி கல்விமாவட்டத்தில் மிக புகழ்பெற்றது கால்பந்து, கூடைபந்து, ஹாக்கி, பால்பேட்மின்டன், கோ கோ என அனைத்து விளையாட்டிலும் கொடி கட்டி பறப்போம். விளையாட்டில் நானும் உண்டு எங்கள் பள்ளியின் ஜீனியர் சீனியர் என இரு அணிகளுக்கும் நான்  தான் கோல்கீப்பர். ஹாக்கி பேட்டை தூக்கிகிட்டு கூடவே பேடு, ஹெல்மெட் என கவச குண்டலத்தோடு வலம் வருவேன். அப்போது மாவட்ட அளவிலான இரு பரிசுகளையும் அப்புறம் டிவிசன் லெவலில் கோவைக்கு வந்தும் விளையாடி உள்ளோம்.

ஒவ்வொரு விளையாட்டும் ஒரு விளையாட்டு ஆசிரியர் என்று அப்போது 6 பேர் பணியாற்றினார்கள். எங்கள் பள்ளியில் நான் படிக்கும் போது கிட்டத்தட்ட 3 ஆயிரம் மாணவர்கள் படித்தார்கள் தற்போதைய நிலவரம் அறியவில்லை. எனது கல்வி படிப்பை அங்கு நிறைவு செய்யும் போது இனியன் அ. கோவிந்தராஜன் பள்ளியின் முதல்வராக இருந்தார். 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை அப்போது டவுசர் எல்லாம் கிடையாது அனைவருக்கும் முழுக்கால் பேண்ட் தான். ஈரோடு சத்தியமங்களம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பள்ளியை இன்று கடக்கும் போது நினைவுகள் ஊஞ்சலாடும்... எனக்கு மட்டுமல்ல முன்னாள் மாணவர்களுக்கெல்லாம்...

 பல பெரிய கட்டிடங்களையும், பல படிப்பாளிகளையும், உயர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் மற்றும் விளையாட்டு வீரர்களையும் இன்றும் அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிறது எங்கள் வைரவிழா மேல்நிலைப்பள்ளி..