Wednesday, May 28, 2014

வாழ்த்துக்கள் மகனே....


நான்கு ஆண்டுகளுக்கு முன் தனியார் மருத்துவனையில் லேபர் வார்டு முன் குடும்பத்தில் உள்ள 30 பேரும் குழுமியிருந்தோம். ஆப்பரேசன் செய்ய வேண்டும் என்று சொன்னாதால் கிழமை, நேரம் எல்லாம் குறித்து மருத்துவர்களிடம் சொல்லி விட்டோம், சொந்த பந்தங்கள் எல்லாம் குழந்தையை பார்க்க காத்திருந்தனர் கூடவே நானும்... என்ன என் மனதில் இனம் புரியாத பயமும், பல தமிழ் படங்களின் பிரசவ சீன்கள் கண் முன்னே வந்தோடியது, படத்தில் வரும் மழை போல அன்றும் மழை பெய்து இடி இடித்ததால், உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் நடுக்கமுமாக காணப்பட்டேன். சரக்கடிக்கவும் தைரியமில்லை அடிச்சிருந்தாலாவது போதையில் பயம் தெளிந்திருக்கும். 10 மணியில் இருந்து 11 மணி வரை என்று நேரம் கொடுத்திருந்ததால், பிரசவ அறையின் சுவற்றில் காது வைத்து கேட்டுக்கொண்டு இருந்தேன்.

மகனின் முதல் குரலை நான் தான் கேட்க வேண்டும் என்ற ஆவலில், ஒரு சத்தமும் கேக்கவில்லை அந்த அளவிற்கு கெட்டியான பில்டிங்போல. 10.55க்கு வழக்கம் போல நர்ஸ்தான் முதலில் வந்தாங்க, எதுவும் பேசாம வேக வேகமா சென்றதால் மீண்டும் சினிமா காட்சிகள் நினைவில் வந்து கலக்கத்தை ஏற்படுத்தியது. உள்ளே சென்ற அனஸ்திசியா டாக்டரும் வெளியே வந்துவிட்டார், எங்கள் நெருங்கிய நண்பரான மருத்துவர் கடைசியாக பையனை கொஞ்சிக்கொண்டே கொண்டு வந்தார், நானும் சினிமா போல அப்பனிடம் தான் பையனை கொடுப்பார்கள் என்று தூரத்தில் இருந்தே என்னை கூப்பிடுவாங்கன்னு ஆவலா இருந்தேன். எங்க குடும்பம் இந்த சாங்கியம், சம்பிரதாயங்கள் நிறைந்த குடும்பம், குழந்தை பிறந்தால் வெள்ளித்தட்டில் வீட்டின் பெரியவர்கள் தான் முதலில் வாங்குவார்கள்.
குடும்பமே போய் பையன பார்த்து விட்டு எல்லோரும் அவ அம்மா மாதிரின்னு சொல்லிகிட்டே என்னைய பார்க்கவிடல, இங்கேயும் கடைசியாத்தான் என் கையில் வாங்கி கொஞ்சினேன். சொன்ன போலவே அவ என் கலர் இல்லை என்பதில் நிறைய மகிழ்ச்சிதான் எனக்கு...
செக்கச்சிவந்து கண் கூட திறக்காமல் அந்த மழலை மொழி எனக்கு.... எப்படியோ என்ன பாடாப்படுத்தி நீ அப்பானிட்டே என்றது போல இருந்தது...

இது நடந்து இன்றோடு 4 வருடம் ஆனாலும் எனக்கு நேற்று நடந்தது போல தான் உள்ளது எனக்கு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என் அன்பு பிரசன்னஸ்ரீஹரிக்கு...




Tuesday, May 13, 2014

ஊர்வலம்...


பவானிக்கு சென்று கொண்டு இருக்கும் போது வழியில் சரியான கூட்டம், என்னடா இது, இத்தனை கூட்டம் என்று பயம் வந்து விட்டது, பெரிய விபத்தாக இருக்குமோ? இல்லை, எதாவது கட்சி கூட்டமாக இருக்குமா? என்றால் நிச்சயம் இருக்காது, தேர்தல் முடிவு வந்த பின் தான் அதுவும் நடக்கும். அநேகமாக விபத்தாகத்தான் இருக்கும், இவ்வளவு கூட்டம் இருக்குது, எத்தனை உசிரு போச்சோ! என்று மனம் வருந்தி வண்டியை எறும்பை விட மெதுவாக ஊர்ந்து வரும் படி இயக்கினேன்.
தீடீர் என ஒரு பயம் போலீஸ்காரங்க செக் செய்கிறார்களோ? என்ற பயம், லைசென்ஸ், இன்சூரன்ஸ் என் நான்கு சக்கர வாகனத்தில் எல்லாம் பக்காவாக இருக்கிறது ஆனால் வண்டியை ஓட்டும் நான் தான் பக்காவாக இல்லை, காலையில 11 மணியில் இருந்து குடிச்ச மார்ப்பிஸ் இப்ப என்னைக்காட்டிக் கொடுத்திட்டால், எப்படியும் 1000 ரூபாய் பைன் போடுவாங்களே என்ற பயம் தான் காரணம். காசைக்கூட கட்டி விடலாம் ஆனால் உள்ளுர்காரன் யாராவது பார்த்து விட்டால் மான மரியாதை எல்லாம் போய் விடுமே என்ற பயந்தான் மிக அதிகம்.

ஒரு பெரியவரிடம் கேட்டேன் என்னங்க எதவாது அடிபட்டுருச்சா? அதற்கு அவர் கண்கலங்க தலையை மட்டும் இல்லை என்று ஆட்டினார். அப்போது எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் போக அவரை அழைத்ததும் எப்பவும் என்னைக் கண்டால் நன்றாக பேசும் அவர், என்னடா என்றார், எண்ணன்னே கூட்டம் என்றோன், அட ஊரில் இருந்த நல்லவர்களில் மிக இளவயது நல்லவன் ஒருவன் போய்ட்டாண்டா என்று கதறினார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சரி என்றேன். கூட்டத்தைப்பாருடா என்றார் எனக்கு தெரிஞ்சு தலைவனாக, கட்சி பிரபலமாக இல்லாத ஒருவருக்கு இத்தனை கூட்டம் என்பது மிக ஆச்சர்யம் தான், சுடுகாட்டுக்கு போகும் வரை கூட்டம், நிச்சயம் எல்லோர் மனதிலும் இருப்பவருக்குத்தான் இத்தனை கூட்டம் வரும், அந்த அளவிற்கு கூட்டம், போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்யவே கிட்டத்தட்ட அரைமணிநேரம் ஆனது அந்த அளவிற்கு கூட்டம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

பொதுவாக நமது ஊரில் ஊர்வலம் என்றால் அதற்காக கூடும் கூட்டங்களை விட கூட்டப்படும் கூட்டம் தான் அதிகமாக இருக்கும், கோயில் திருவிழா ஊர்வலங்களில் வருபவர்கள் பாதி பேர் வேண்டுதலுக்காகவும், இன்னும் பாதி பேர் சைட் அடிப்பதற்காகவும் வருபவர்கள் தான் அதிகம், ஒருவர் ஊர்வலத்துக்கு வருகிறார் என்றால் நிச்சயம் ஆதாயம் இருக்கும், அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆதாயம் இல்லாமல் ஊர்வலத்துக்கு கூட்டம் கூடுகிறது என்றால் அது சவ ஊர்வலம் தான். பிறக்கும் போது தொப்புள் கொடியோடு பிறந்து வளருபவன் பின்னாளில் எதை சம்பாரிச்சாலும் போகும் போது கொண்டு போவது ஒன்றும் இல்லை. அவன் அணிந்த அருணாக்கொடி கூட அத்துகிட்டு தான் எரிப்பர். அவ்வளவு நல்ல சமூகம் நம்முடிடையது. ஆனால் சுடுகாட்டிற்கு போகும் போது அவனிற்கு பின்னால் வரும் கூட்டம் தான் அவனின் பேர் சொல்லும் சொத்து என்றால் மிகையாகது.
இன்னும் கிராமத்தில் சொல்வார்கள் நல்லதுக்கு போகவில்லை என்றாலும் கெட்டதற்கு நிச்சயம் போக வேண்டும் என்பார்கள். பங்காளி சண்டையால் பல வருடம் பிரிந்து இருப்பவர்கள் கூட திருமணத்தில் சேருவதை விட, இறப்புக்கு சேர்ந்தவர்கள் தான் அதிகம். என் அப்பத்தா அப்படித்தான் எனக்கு ஞபாகம் தெரிந்ததில் இருந்து அதனுடன் நான் பேசியது இல்லை, எங்கள் வீட்டில் சண்டை போட்டுகிட்டு கோவிச்சிகிட்டு போய் விட்டது என்பார்கள், அது இறக்கும் தருவாயில் ஒரு வார காலம் நாங்கள் தான் கூட இருந்தோம், ரொம்ப வருத்தப்பட்டது இத்தனை நாள் உன்னை கொஞ்ச முடியவில்லை என்று, சாவுக்கு ஒன்று சேர்ந்தால் தான் என் கட்டை வேகும் என்று அடிக்கடி சொல்லும் என்று பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் சொல்வாங்க.
ஒருவன் இருக்கும் போது இருக்கும் மரியாதையை விட அவன் சாகும் போது அவனுக்கு கிடைக்கும் மரியாதையில் தான் அவன் வாழ்ந்த வாழ்க்கை இருக்கும்...

Tuesday, May 6, 2014

திருவிழா கிடாக்கறியும்...


நமது கலாச்சாரத்தின் அடையாளம் தான் திருவிழா. நம் மண்ணின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில் இந்த திருவிழாவிற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. கிராமங்களில் தான் கலாச்சார பின்னணியில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு கொண்டாடுவர் திருவிழாக்களை.

ஒவ்வொரு ஊரிற்கும் மண் மாறுபடுவதை போல திருவிழாக்களும் மாறுபடும், அந்த ஊரின் பெருமைகளையும், அந்த மண்ணின் மரியாதையையும் இந்த திருவிழாக்கள் தெரியப்படுத்தும். குறிப்பாக தமிழகம் முழுவதும் நிறைய இடங்களில் நிறைய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், மாரியம்மன் கோயில் தான் அதிக அளவில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஊர் மாரியம்மனுக்கும் ஒரு சிறப்பு உண்டு அந்த வகையில் திருவிழாக்கள் அமைந்திருக்கும், எங்கள் ஈரோடு பகுதியில் நிறைய மாரியம்மன் கோயில்கள் உண்டு, இங்கும் நிறைய வகையில் திருவிழாக்களை கொண்டாடுவர். எங்கள் ஊரைப்பொருத்தவரை திருவிழாவையும், கிடா வெட்டையும் பிரிக்கமுடியாது. அந்த அளவிற்கு திருவிழாவோடு இணைந்தது கிடா.

எங்கள் ஊரைப்பொருத்தவரை சித்திரை மாதம் தான் திருவிழா. மாரியம்மனுக்கு கம்பம் நட்டு பதினைந்து நாட்களுக்கு கொண்டாடுவோம் திருவிழாவை. எப்போதும் அக்னி நட்சத்திரத்தில் தான் எங்கள் திருவிழா வருவதால் வெய்யில் வாட்டி வதைக்கும். கம்பம் நட்டு 15 நாட்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பூஜை செய்வார்கள். 

இந்த திருவிழாக்களில் பகுத்தறிவிற்கு எதிராக நிறைய சம்பிரதாயங்கள் இருக்கும் நாம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை காரணம் மக்கள் அதை விரும்புகிறார்கள், நாம் ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என விட்டுவிடவேண்டும்.

நகர்புறத்தில் உள்ளவர்களுக்கு பொழுது போக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், வாட்டர் தீம் பார்க் என நிறைய இருக்கின்றன, உல்லாசமாக பொழுதை போக்குவதற்கு. கிராமத்தில் அப்படி இல்லை கிணறும் அதை ஒட்டி அமைந்துள்ள தோட்டம் இது தான் பொழுது போக்கு. களைப்பில் இருப்பவர்களை சந்தோசப்படுத்தத்தான் முன்னோர்களால் ஆரம்பிக்கப்பட்டது திருவிழா. அப்போது எல்லாம் விளையாட்டுப்பொருட்கள் வேண்டும் என்றால் அந்த ஊர் நோம்பியில் வாங்கித்தருகிறேன், இந்த ஊர் நோம்பியில் வாங்கித்தருகின்றேன் என்பது எனக்கெல்லாம் வேத வாக்கு. அதை மனதில் வைத்திருந்து சொல்லி வாங்கச்சொல்லும் போது தான் குடும்ப வறுமை தெரியும் கால கட்டமிது.

எனக்கு தெரிய எங்க வீட்டு இட்லி குண்டா எல்லாம் அந்தியூர் திருவிழாவில் வாங்கியது தான். அந்த அளவிற்கு திருவிழாவோடு ஒன்றிப்போனவர்கள் நாங்கள். 

ஆட்டம், பாட்டம் மட்டுமல்ல திருவிழா வெய்யில் காலங்களில் அனைவரும் சுத்தமாக இருக்கவேண்டும். ஊரில் கம்பம் நட்டு விட்டால் அனைவரும் இரு வேளை குளித்து கோயிலுக்கு செல்வர், அடுத்து அனைவரும் மஞ்சளை கம்பத்துக்கு பூசி தண்ணீர் ஊற்றுவதால் அது கிருமியை அண்ட விடாமல் தடுக்கும். இது போன்ற நிறைய அறிவியில் காரணங்களையும் சொல்லுவர்.



சரி எதுக்குடா இவன் இவ்வளவு திருவிழா புராணம் பாடுகிறான் என்று நினைக்கின்றீர்களா, ஆம் எங்க ஊரில் திருவிழா, நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை நான், திருவிழாவை கொண்டாடுவதற்காகவே விடுமுறையை சேமித்து ஒட்டு மொத்தமாக எடுக்க காத்திருக்கிறேன். இன்று மாலை ஊருக்கு கிளம்பி இன்று இரவு முழுவதும் ஆடடம் பாட்டத்துடன் நானும் கலந்து கொண்டு கும்மியடிக்போகிறேன்.. கரகாட்டாம், நையாண்டிமேளம், சிங்காரி நடனம், நடன நிகழ்ச்சி அப்படியே கிடாக்கறி விருந்தும், கூட்டாஞ்சோறு விருந்தும் இருக்கு இதை எலலாம் முடிச்சிட்டு வந்து அனுபவங்களோடு உங்களை சந்திக்கிறேன்..