Friday, July 29, 2011

புகழ்பெற்ற அந்தியூர் குதிரை சந்தை 10ம் தேதி தொடங்குகிறது...


நண்பர்களுக்கு வணக்கம்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி ஆலயம் உள்ளது இக்கோவில் திருவிழா ஆடி மாதம் நடைபெறும். இத்திருவிழாவின் போது இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற குதிரை சந்தை, மாட்டுச்சந்தை நடைபெறும் .

இந்த வருடம் இத்திருவிழா வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கி 14 வரை நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது. குதிரைசந்தை மற்றும் மாட்டுச்சந்தை 10ம் தேதி தொடங்கி 13ம் தேதி நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவில் கடந்த வருடம் மட்டும் 5 லட்சத்துக்கு அதிகமானோர் கலந்து கொண்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இக்கோவில் அந்தியூர் மழை அடிவாரத்தில் உள்ளது வருடா வருடம் இத்திருவிழாவின் போது எங்கள் குடும்பம் சார்பாக நண்பர்களை  அழைத்து வனத்தில் கிடா விருந்து கொடுப்போம். இந்த வருடம் சிறப்பாக கொண்டாடலாம் அனைவரையும் விருந்துக்கு அழைக்கலாம் என்று இருந்தேன். எங்கள் பெரியப்பா தவறியதால் இந்த வருடம் எங்கள் பொங்கல் இல்லை. 

திருவிழா நடக்கும் நான்கு நாட்களும் அங்கே தான் இருப்பேன் அதனால் வரும் நண்பர்களை அழைத்து திருவிழாவில் ஊரைச்சுற்றலாம் என்று முடிவு செய்து அனைவரையும் அழைக்கவே இப்பதிவு.

நண்பர்களே திருவிழாவையும், குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தையை காண உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

சில நண்பர்கள் வருவதாக உறுதி அளித்துள்ளனர் வர இருக்கும் நண்பர்கள் முன்கூட்டியே சொன்னால் அனைவரும் சேர்ந்து திருவிழாவை காணலாம். வர இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

கடந்த வருடம் இக்குதிரை சந்தையைப்பற்றி பதிவிட்டு இருந்தேன் அப்பதிவை காண...



Thursday, July 28, 2011

அஞ்சறைப்பெட்டி 28.07.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
இப்போது ஊழல் பிரச்சனையில் சிக்கித் தவிப்பதில் அடுத்து சேர்ந்துள்ளவர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இவர் பதவிக்கு வந்த நாளில் இருந்து இன்று வரை இவருக்கு வந்துள்ள பிரச்சனைகளை தீர்ப்பதிலேயே எல்லா நாட்களும் சென்று விட்டது அநேகமாக அடுத்த பதிவிற்குள் அடுத்த பிரச்சனையை சந்திக்க நிறைய வாய்ப்பிருக்கிறது...

...............................................................................................

சமச்சீர் கல்வி விவகாரத்தில் இன்னும் முடிவு தெரிந்தபாடில்லை நீதிமன்றத்தில் மேல் முறையீடு போய்கிட்டே இருக்கு..

...............................................................................................

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவின் வாதத்தை கேட்கும் போது இதில் அவர் கூறியவர்களுக்கும் தெரிந்திருக்குமா, தெரிந்திருக்காதா ஒரே குழப்பமாக இருக்கிறது.


........................................................................................................

லண்டன் அருகே உள்ள யார்க்ஷைர் நகரில் வசிப்பவர் ஆல்பிரடோ மெரிகோ (43). இவரது மனைவி லிண்டா (40).  

இவர்களுக்கு 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவி நடத்தையில் மெரிகோவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் திருமணமான ஒரு வருடத்திலேயே லிண்டா கணவரை பிரிந்து அருகில் உள்ள டிரிப்பீல்டு என்னும் இடத்தில் குழந்தையுடன் தனியே வசித்து வந்தார்.

கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். சமரசத்தை ஏற்க மனைவி மறுத்ததால் அவரை கொடூரமாக கொலை செய்ய திட்டமிட்டார். இதற்கு முன்பு நடந்த கொலைகள் பற்றிய விவரங்களை இண்டர்நெட்டில் தேடினார்.

அதில் ஒருவரை கொல்வது எப்படி? என்ற தலைப்பில் 10 டாப் டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. எப்படி கொலை செய்யலாம், கொலைக்கு என்னென்ன வகையான தண்டனைகள் கிடைக்கும் என் பதையும் இன்டர்நெட் மூலம் அவர் தெரிந்து கொண்டார்.

பின்னர் கொலை திட்டத்துடன் மெரிகோ நேற்று முன்தினம் மனைவி வீட்டுக்கு வந்தார். 2 வயது குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்த லிண்டோவை மெரிகோ கத்தியால் சரமாரியாக குத்தினார். 100 முறை மாறி மாறி வெறியுடன் குத்தினார். இதில் லிண்டோ துடிதுடித்து செத்தார்.

பின்னர் உடலை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசி விட்டார். போலீசார் விசாரணை நடத்தி மெரிகோவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி முன்பு மெரிகோ மேற்கண்ட தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்தார். 


........................................................................................................


பாமக திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் தனியாக ஒரு அணி அமைத்து போட்டியிடப்போகிறார்களாம். 

எப்படியோ இப்பவாவது தோணுச்சே., இனி தெரியும் அவர்கள்  பலம் அவர்களுக்கு...

தகவல்


ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஹமாத். சமீபத்தில் அவர் அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார்.

தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் சுமார் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்து தரையில் பதித்து வைத்துள்ளார்.   அந்த எழுத்துக்களை விண்ணில் பறந்தபடியே பார்க்க முடிகிறது. இந்த எழுத்துக்கள் “பேஷ்புக்” இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை தண்ணீரால் அழிக்க முடியாதபடி எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில், இவர் ரூ.12 கோடிக்கு உலகின் மிக விலை உயர்ந்த அதிநவீன காரை வாங்கினார். அபுதாபியில் இவருக்கு ஆட்டோமொபைல் மியூசியம் உள்ளது. அதில் கவர்ச்சிகரமான 200 வெளிநாட்டு கார்கள் உள்ளன. இவர் மிகப்பெரிய ஒரு லாரியை வடிவமைத்துள்ளார். அது அவரது மாளிகையை விட 64 மடங்கு பெரியது.


அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் ஓம் சிவாய நமக என்னும் பெயரில் குரு பால மாதேசு என்பவர் எழுதி வருகிறார். இவர் பதிவில் நிறைய கோயில்களைப்பற்றி பல அற்புதமான தகவல்களை அளித்துள்ளார்.

http://kavithaimathesu.blogspot.com/

 

தத்துவம்


சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாக கணிக்கப்படுகிறது.


உரலில் தலையை விட்ட பிறகு உலக்கைக்கு அஞ்சக்கூடாது.

 ........................................................................................................

அலுவலகத்தில் நிறைய வேலைப்பளு காரணமாக நண்பர்களின் பதிவையும் படிக்கவும் ஓட்டுப்போடவும் முடியவில்லை எழுதி வைத்த பதிவை மட்டும் தற்போதைக்கு பதிவிடுகிறேன். விரைவில் வேலைப்பளு குறைந்ததும் வருகிறேன். 

நன்றி...

Tuesday, July 26, 2011

கோவை "பரளிக்காடு" அரிய பறவைகளின் படங்கள்...

நாங்கள் பரளிக்காடு செல்லும் போது எங்களுடன் எங்கள் Project Manager டேவிட் அவர்கள் உடன் வந்தார் அவர் பறவைகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வமிக்கவர் நாங்கள் பரளிக்காட்டில் இயற்கையை ரசிக்கும் போது அவரின் கேமராவைத் எடுத்துக்கொண்டு பறவைகளை தேடிக்கொண்டு இருந்தார். பின் அங்கிருந்து வந்த பின் அவர் பறவைகளின் புகைப்படத்தை காண்பித்தபின்தான் தெரிந்தது அவரின் ஆர்வமும் அற்புத புகைப்படங்களும் அங்கு அவர் எடுத்த அற்புதமான பறவைகளின் புகைப்படங்கள்...















 
 இப்படங்களுடன் நம் மூதாதையர்...

இக்கட்டுரையுடன் எனது பரளிக்காடு பயணக்கட்டுரை நிறைவு பெறுகிறது...

இச்சுற்றுலா தளத்தைப்பற்றி இதுவரை 3 பதிவுகள் எழுதி உள்ளேன் இதுவரை எனது பதிவுகளை விட இப்பதிகளை வாசிச்ச நண்பர்கள் அதிகம் இந்த பதிவின் மூலம் நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள் என்பது பெருமைக்குரிய விசயம் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்...

இயற்கை எழில் கொஞ்சும் கோவை "பரளிக்காடு " 2

 காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

 தோட்டத்தின் நடுவே மரத்தின் மேல் சிறுவீடு

பரிசல் சவாரி முடிந்ததும் உணவிற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் அழைத்து வந்தார்கள். உணவு தயாராகி விட்டது வந்து கொண்டு இருக்கிறது அதுவரை தூரி ஆடுங்கள் என்று ஆலமரத்தில் நீளமான கயிறு கட்டு கீழே பலகையில் கட்டப்ட்டு இருந்தது ரொம்ப நாளைக்கு அப்புறம் கயிறு தூரி. ஆடி மாத திருவிழாவின் போது வீட்டில் அருகில் உள்ள மரங்களில் கயிறு கட்டி விளையாடியது போன்று இருந்தது. சில்லென்று காற்றும் மிதமான வெய்யிலும் நல்ல சுகமான காலநிலையில் நன்றாக அனுபவித்து விளையாடினோம்.
 தூரியில் ஆட்டம்

கயிற்று கட்டிலும், சேர்களும் போட்டு இருந்தார்கள் அதில் ஆற அமர பேசிக்கொண்டு இருக்கும் போது உணவு வந்து விட்டது என்றார்கள். உணவு மழைவாழ் மக்களே பரிமாறினார்கள்  தட்டுக்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றோம். உணவு  தட்டில் வெளியில் உள்ள உணவகங்களில் இருப்பது போல் இலைகளை அழகாக வெட்டி வைத்திருந்தனர்.
 சைவ உணவு

 களி உருண்டையும், நாட்டுக்கோழி குழம்பும்

உணவுகளில் கேசரி, சப்பாத்தி, குருமா, வெஜ்பிரியாணி, தயிர்பச்சடி, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை முதல் ரவுண்டில் கொடுத்தார்கள் அடுத்த களியும் களிக்கு நாட்டுக்கோழி குழம்பு மற்றும் கீரைக்குழம்பு பின் தயிர் சாப்பாடு கொடுத்தார்கள் அனைத்தும் எதிர்பார்க்காத வகையில் சுவையாக இருந்தது இவ் உணவை தயாரித்தவர்கள் மழைவாழ் சுயஉதவிக்குழு மகளிர் இவர்களுக்கு கோவை அவிநாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உணவு தயாரிக்கும் விதத்தை பயிற்சி அளித்துள்ளனர்.

 மதிய உணவு

உணவு உண்ட பின் மழைவாழ் மக்களின் உதவியுடன் பலாப்பழம் 10 பழம் 150 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு  பவானி ஆற்றில் குளிக்கச்சென்றோம். ஆறு ஆழம் இல்லை ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது நன்றாக இழுத்துச்செல்லும் அளவில் இருந்தது உடன் வனக்காவலர்கள் பாதுகாப்புக்காக இருந்தனர். ஒரு மணி நேரம் தண்ணீரில் ஆட்டம் போட்டோம் தண்ணீர் நல்ல குளுமையாக இருந்தது.

 ஆற்றில் ஆட்டம்

இனிமையாக இருந்தது பரளிக்காடு. இவ்விடம் ஒரு சுற்றுலாத்தளம் என்று கூற முடியாது ஒரு நாள் பொழுது போக்க அற்புதமான இடம். இந்த இடம் அதிக அளவில் வெளியில் தெரியாததால் கூட்டம் குறைவாக நன்றாக இயற்கையை ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் இனிமையான பயணமாக அமைந்தது இந்த பரளிக்காடு.

 ஆற்றில் ஆட்டம்

கண்ணுக்கு குளிர்ச்சியாக
எங்கள் பயணத்தில் எங்க Project Manager டேவிட் பறவைகளை புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வமிக்கவர் அவர் பரளிக்காட்டில் எடுத்த சில அற்புதமான புகைப்படங்கள் அடுத்த பதிவில்....

Wednesday, July 20, 2011

அஞ்சறைப்பெட்டி 21.07.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

சமச்சீர் கல்வியினால் தற்போது யார் சந்தோசமாக இருக்கிறார்களோ இல்லியோ குழந்தைகள் மிக சந்தோசமாக உள்ளனர். கல்விமுறையை அமுல் படுத்தும் வரை எல்லாரும் சந்தோசமாக இருங்க...
...............................................................................................

நண்பனின் நண்பன் வீட்டுக்கு எதெச்சையாக சென்றேன் நண்பரின் மகன் 7 ம் வகுப்பு படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு  டைனிங் டேபிளில் படித்துக்கொண்டு இருந்தான், நண்பருடன் நலம் விசாரிப்பிற்கு பின் என்ன ஞாயிற்றுக்கிழமை கூட கொஞ்ச நேரம் விளையாடமல் படிக்கிறாய் என்றேன் சிரித்து விட்டு மீண்டும் படித்தான் என்னடா இது இன்னும் பள்ளியில் பாடம் நடத்தவே ஆரம்பிக்கவில்லை இவ்வளவு சின்சியராக படிக்கிறானே என்று பக்கத்தில் சென்றேன் அது காந்தியைப்பற்றிய ஆங்கில புத்தகம், பக்கத்தில் தமிழ் புத்தகமும் வைத்திருந்தான் ஆச்சரியத்துடன் நண்பரை விசாரித்தேன் .
எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இப்பதான் ஏற்பட்டது இநத் அருமையான பழக்கத்தை மகனுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கடந்த 1 வருடமாக அவனுக்கு மாதம் ஒரு புத்தகம் வாங்கித்தருகிறேன் தற்போது தலைவர்களைப்பற்றியான புத்தகங்கள் தான் வாங்கிக்கொடுத்தேன் நான் எப்போது புத்தகம் வாங்கினாலும் அதன் ஆங்கிலப்பதிப்பையும் வாங்கி விடுவேன் முதலில் படி படி என்றேன் தற்போது அவனே ஒவ்வொரு தலைவர் பேராக சொல்லி வாங்கித்தரச்சொல்கிறான் இப்புத்தகத்தை வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் படித்துவிடுகிறான் தற்போது பள்ளியில் பாடம் நடத்ததாததால் மாலையிலும் படிக்கிறான் என்றார். அற்புதமான விசயம் மிகவும் ஆச்சர்யப்பட்டேன் நாமும் இதை செய்வோமா என்ற யோசனை மனதில்....

அருமையான யோசனைக்கு நன்றி நண்பரே....

...............................................................................................

ஒவ்வொரு மாவட்டமாக கைது படலம் ஆரம்பமாகி உள்ளது. எங்க பார்த்தாலும் கோடிகளில் தான் பேசுகிறார்கள் புகார் தருகிறார்கள். 
தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்.

........................................................................................................

கோவையில் நடக்க இருக்கின்ற திமுக செயற்குழு, பொதுக்குழுவிற்கு ஊரேங்கும் ப்ளக்ஸ் பேனர்களும், தோரணங்களும் களை கட்டுகிறது.

இதை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.


........................................................................................................

உள்ளாட்சித்தேர்தலில் மேயர்கள் நகரசபை தலைவர்கள் நேரடியாக தேர்வு செய்யும் திட்டம் வரவேற்கத்தக்கது. 10 கவுன்சிலர் சேர்ந்து தேர்ந்தேடுப்பவர்கள் கட்சி யாரை அறிவிக்கின்றதே அவர் தான் தலைவராக இருப்பார் இதை விட மக்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அருமை. 


........................................................................................................

சமீபத்தில் கோவை அருகே உள்ள பரளிக்காடு  என்ற கிராமத்துக்கு சென்று இருந்தேன் கோவைக்கு மிக அருகே ஒரு நாள் முழுக்க ரசிக்கும் மலைப்பகுதியாகும் இதைப்பற்றி எனது பதிவில் தொடராக பதிந்து வருகிறேன் இதற்கு நம் சகபதிவர்கள் பலர் அந்த இடமும் சொன்ன விதமும் அருமை நாங்கள் வந்தால் நிச்சயம் எங்களை அங்கே கூட்டிச்செல்லுங்கள் என்று தொலைபேசியிலும், மின் அஞ்சல் வழியாக கேட்டுக்கொண்டனர் நிச்சயம் வாங்க நண்பர்களே அழைத்து செல்கிறேன்.


எனது நண்பர் பறவைகளை புகைப்படம் எடுப்பதில் மிக்க ஆர்வமிக்கவர் அவரையும் அழைத்து சென்று இருந்தேன் அவர் எடுத்த பறவைகளின் புகைப்படங்கள் எல்லாம் அருமை அந்தப்படங்களை விரைவில் பதிவாக பதிய இருக்கிறேன் நிச்சயம் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

நாட்டு நடப்பு
சமச்சீர் கல்வியின் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் குழப்பத்திலும் மாணவர்கள் உற்சாகமாகவும் காணப்படுகின்றனர்.

தகவல்


உடலை குளிர வைக்கும் ஏர்கண்டிசன் சட்டையை ஐப்பான் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆபீசில், வீட்டில் ஏர்கண்டிசனில் இருந்தே பழக்கப்பட்டவர்கள் வெளியே வெயிலில் செல்லும்போது மிகவும் சிரமப்படுவர்.

வெயிலின் தாக்கம் அவர்களை கடுமையாக பாதிக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கும், வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த குச்சோபுடு என்னும் அந்த நிறுவனம், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, ஏர்கண்டிசன் சட்டையை தயாரித்துள்ளது.

மழைக்கோட்டு போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டையில் உள் பகுதியில் 2 மின்சார விசிறிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அவை உயர் சக்தி கொண்ட பேட்டரிகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பேட்டரிகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் தாக்குப்பிடிக்கும்,

பேட்டரிகள் மூலம் இயங்கும் மின்சார விசிறிகள் ஒரு நிமிடத்துக்கு 20 லிட்டர் காற்றை உற்பத்தி செய்து, சட்டையின் உள்பகுதி முழுவதும் பரவச் செய்கிறது. இந்த காற்று உடனக்குடன், சட்டையின் கழுத்துப் பகுதி மற்றும் கையின் மணிக்கட்டு வழியே வெளியேற்றப்படுகிறது. இதனால், உள்ளே சுழலும் காற்று, சூடாகாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.

குளிர் தன்மை அப்படியே பராமரிக்கப்படுகிறது. இந்த சட்டையை அணிந்து கொண்டால், ஏர்கண்டிசனில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தொடர்ந்து 11 மணி நேரம் பயன்படுத்த முடியும். மற்ற ஏர்கண்டிசனுடன் ஒப்பிடும்போது, இதை இயக்கச் செய்ய ஆகும் செலவு குறைவு. தனி நபர் ஏர்கண்டிசன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டையின் விலை குறைந்த பட்சம் 87 பவுண்டுகள் ஆகும். இதை விட அதிகமான விலைக்கும் சட்டைகள் உள்ளன.

இந்த சட்டைக்கு ஜப்பானில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மேலும் பல நிறுவனங்கள் ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் ஈரோடு தங்கதுரை இவரின் வலைப்பதிவின் பெயரும் இதுவே. பல தொழில் நுட்ப பதிவுகளை எளிமையாக எழுதி வருகிறார். மிகவும் பயன் உள்ள தகவலாக இருக்கிறது இவரது வலைப்பதிவு...

http://erodethangadurai.blogspot.com/


தத்துவம்

நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.

Tuesday, July 19, 2011

இயற்கை எழில் கொஞ்சும் கோவை "பரளிக்காடு " 1

தண்ணீர் குறைந்த பில்லூர் அணை
பரிசல் சவாரிக்கு செல்ல காட்டுக்குள் பயணம்

பரிசல் சவாரி

பரளிக்காட்டின்  மிக முக்கியமான நிகழ்வு பரிசல் சவாரி தான். சுக்கு காபி குடித்த பின் பரிசல் சவாரி போகலாம் என்று வனக்காவலர் கூறினார். எங்களுக்கு முன் வந்த மங்கையர் கூட்டம் எல்லாம் கயிரு தூரி ஆடிக்கொண்டிருந்தனர் மங்கையரையும் ரசித்து சுக்கு காபியையும் ரசித்து அருந்தினோம். காபியில் கருப்பட்டி கலந்து வைத்திருந்தார்கள் அருமையான சுவை நான் இரண்டு டம்ளர் குடித்தேன்.

அத்திக்கடவு கூட்டு குடிநீர்  இரண்டாவது திட்டம் வேலை நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் தற்போது அணையில் தண்ணீர் தேக்குவதில்லையாம் அதனால் பரிசல் சவாரிக்கு ஒரு கிலோமீட்டர் தள்ளி தான் செல்ல வேண்டும் அனைவரும் வாகனத்தில் ஏறுங்கள் உங்களுக்கு துணையாக வனக்காவலர் வருவார் என எங்களை வழி அனுப்பு வைத்தனர். செல்லும் வழியில் எல்லாம் வாழைத்தோட்டம் தோட்டத்திற்கு நடுவே மரத்தில் காவலுக்கு வீடுகட்டி இருந்தார்கள் அடுத்து பரளிக்காடு கிராமம் வந்தது.


மலைவாழ் மக்கள் கிராமம், ஒவ்வொரு வீட்டிலும் சோலார் சிஸ்டம்

இந்த கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி பரிசலுக்கு செல்லும் போது அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் மலைகிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது இவர்கள் பயன்படுத்தும் மின்சாரம் சோலார் மின்சாரம் தானாம். தெருவிளக்கும் சோலார் விளக்கைத்தான் பயன்படுத்துகின்றனர். எல்லா வீட்டிலும் டிடிஎச் பொருத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள கிராமமக்களின் முக்கிய தொழில் விவசாம் ஆடு, மாடு வளர்த்தல், காடுகளில் விளையும் பழங்களை பறித்து ஊரில் உள்ள சந்தைகளில் விற்பது தான் இவர்கள் பிரதான தொழில். 

இவை அனைத்தையும் பார்த்துவிட்டு பரிசலுக்கு கூட்டிச்சென்றனர். அங்கு சென்றதும் கிராம இளைஞர்கள் எங்களுக்கு பாதுகாப்பு கவசம் அணிவித்து பரிசலுக்கு அழைத்துச்சென்றனர். பரிசல் பைபரால் செய்யப்பட்டு அழகான வண்ணத்தில் இருந்தது ஒவ்வொரு பரிசலுக்கும் நான்கு பேர் அனுமதி என்றனர். நாங்கள் நான்கு பேர் பரிசலில் ஏறியதும எங்கள் பரிசல்ஓட்டி இளைஞரை விசாரித்தோம் அவர் பெயர் ஆறுமுகம் என்றும் இங்கு பரிசல் சவாரி துவக்கியதில் இருந்து பரிசல் ஓட்டுகிறாராம் 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன் இதே அணையில் சிறுவயதில் இருந்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தேன் தற்போது வார இறுதி நாட்களில் பரிசலும் மற்ற நாட்களில் மீனும் பிடிப்பதாக கூறினார்.


பரிசல் சவாரிக்கு முன் பாதுகாப்பு கவசத்துடன்

பரிசல் பயணம் செல்லும் போது வானம் மேகமூட்டமாக சில்லென்று வீசய  குளு குளு காற்றுடன் சுற்றி உள்ள மலைகளை ரசித்துக்கொண்டே ஒரு மணி நேரம் சுற்றினோம் சுற்றும் போது அணை அருகில் உள்ள ஒரு கரையில் இறக்கிங்னோம் அங்கு கொண்டு சென்ற திண்பண்டங்களை எல்லாம் தின்று முடித்து விட்டு தண்ணீர் குடிக்க அணையில் உள்ள தண்ணீரை அள்ளி பருகினோம் தண்ணீரின் சுவை அருமையாக இருந்தது. சுத்தமான தண்ணீர் எனவும் மரத்தில் உள்ள இலைகள் எல்லாம் விழுந்ததால் இதை மூலிகை தண்ணீர் என்றும் கூறுகின்றனர்.




80 அடி ஆழ தண்ணீரில் இருந்து இயற்கை காட்சிகள்.

தண்ணீர் பார்ப்பத்ற்கு பச்சை பசேல் என்று காட்சியளித்தது கையில் அள்ளியதும் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. இந்த தண்ணீரை குடிக்கவே இன்னொரு முறை செல்லாம்.

எங்களை இறக்கிவிட்ட இடத்தில் ஒரு மணி நேரம் காற்றுப்பகுதியில் சுற்றினோம் பல பறவைகளின் சத்தம் கேட்டது இதற்கு ஒவ்வொரு சத்தத்தையும் விளக்கினார் எங்களுடன் வந்த ஆறுமுகம். பின் மீண்டும் ஒருமணி நேர பரிசல் பயணம் குளிர் காற்றுடன் சூரிய ஒளி இல்லாததால் அந்த இடத்தின் சீதோஷணநிலை ரொம்ப பிடித்திருந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் படகை சுற்றியே இருந்தோம். (எந்த ஒரு சுற்றுலா மையத்துக்கு சென்றாலும் இவ்வளவு நேரம் படகில் செல்ல இயலாது என்று நினைக்கிறேன்)



பில்லூர் அணையின் உட்புற தோற்றம்

பரிசல் பயணம் முடிந்தது வரும்போது உணவு தாயாராகிவிட்டது ஆலமரத்து இடத்துக்கு சென்று இளைப்பாருங்கள் என்று அன்புக்கட்டளை இட்டார் வன அலுவலர். அப்போது அங்கு வந்த எங்கள் பரிசல் ஓட்டி ஆறுமுகத்திடம் பலாப்பழம் வேண்டும் என்றோம் நீங்க சாப்பிட்டு விட்டு வாங்க சார் உங்களை காட்டுக்குள் கூட்டி செல்கின்றேன் எந்த பழம் வேண்டுமோ அதை பறித்து தருகிறேன் அப்படியே காட்டுக்குள் செல்கின்றோம் என்று வன அலுவலரிடம் சொல்லிடுங்கள் என்றார்.

அருமையான மதிய உணவு, பாலாப்பழம் வாங்கியது, ஆற்றில் குளித்தது மற்றும் வனத்தில் எடுத்த பல பறவைகளின் புகைப்படங்கள் வரும் பதிவுகளில்...

இக்கட்டுரையின் முதல் தொகுப்பு இங்கே

இயற்கை எழில் கொஞ்சும் கோவை "பரளிக்காடு"

http://www.sangkavi.com/2011/07/blog-post_18.html

Monday, July 18, 2011

இயற்கை எழில் கொஞ்சும் கோவை "பரளிக்காடு"

 வெள்ளியாங்காடு

அலுவலகத்தில் ஒரு நாள் பிக்னிக் செல்லலாம் என்று முடிவெடுத்து கோவைக்கு அருகாமையில் காலை சென்று மாலை திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்த இடம் தேடிய போது நம் சக பதிவர்களின் பதிவை புரட்டும் போது கிடைத்த இடம் பரளிக்காடு. காலை சென்று மாலை திரும்பலாம் கோவையில் இருந்து குறைந்த தொலைவு தான் என்று முடிவாகியது அனைவரும் பதிவை பார்த்து விட்டு இந்த இடத்திற்கே போகலாம் என்றார்கள். நண்பர்கள் கொடுத்த தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு வன அலுவலர் ஆண்டவரிடம் பேசினோம் நிச்சயம் வாங்க என்ற அன்பு உபசரிப்போடு தேதி குறித்துக் கொண்டார்.
16ம் தேதி காலை அனைவரும் அலுவலகத்தில் ஒன்று சேர்ந்து புறப்படும்போது காலை 6 மணி. காலையில் வாகன நெறிசல் இல்லா கோவையை ரசித்துக்கொண்டே சென்றோம். தற்போது தமிழகத்தில் மிக மோசமான சாலைகளில் ஒன்றான கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன் பாளையம் ஆனந்தாசில் காலை உணவாக அனைவரும் சொல்லி வைத்தாற் போல் ஆணியன் ஊத்தாப்பத்தை முடித்து விட்டு காரமடையில் நின்று தாகசாந்திக்காக அரசு கடையை தேடினால் 10 மணிக்கு முன் திறக்கமாட்டோம் என்றனர் அப்புறம் அங்குள்ள நண்பர்களை விசாரித்தால் 16 கிலோ மீட்டர் தான்டி வெள்ளியாங்காடு என்ற கிராமத்தில் அரசு கடை இருப்பாதாக தகவல் சொன்னார்கள்.

கடை திறக்கவில்லை என்ற கோபத்தில்

தாகசாந்தி கடைக்கு செல்லம் போது மணி 9.35 அங்கும் 10 மணிக்கு தான் திறப்போம் என்றனர் காலை கடை திறந்தால் நாம் தான் முதல் ஆள் என்று நினைத்தால் கடை திறந்ததும் வந்தது கூட்டம் சுமார் 20 பேருக்கு அப்புறம் தான் வாங்க முடிந்தது. வாங்கிய பின் பணியாளர் சொன்னார் பாருங்க ஒரு வரி.. சார் திரும்ப வரும்போது நிச்சயம் வாங்க உங்களுக்காக கூலிங் அதிகமாக போட்டுவைக்கிறேன் என்று (இந்த அன்பு இருப்பதால் தான் கூட்டம் அலைமோதுது போல).

வெள்ளியாங்காட்டில் இருந்து ஒரு 8 கிலோமீட்டர் சென்றதும் வலப்பக்கம் பில்லூர் செல்லம் வழி என்றார்கள் வழி எங்கும் விவசாய பூமி தான் ஆனால் நம்மாளுக அங்கியும் காட்டைத் துண்டாக்கி வீடு கட்ட லேஅவுட் போட்டு வைத்திருந்தார்கள் விசாரித்ததில் சென்ட் 80 ஆயிரமாம். வழி நெடுக மல்லிகைப் பூ தோட்டமும், செவ்வந்திப் பூ தோட்டமும், வறண்ட காடுகளும் நிறைந்து இருந்தன.

 செக்போஸ்ட்

முதல் செக் போஸ்ட்டில் வண்டியை நிறுத்தி வன அலுவலரிடம் பரளிக்காடு செல்ல வேண்டும் என்றதும் வாங்க வாங்க இப்பதான் எங்க அலுவலகர்கள் எல்லாம் சென்றார்கள் இன்று நாங்க மட்டும் தானா இல்ல வேற யாராவது புக் செய்திருக்கிறார்களா என்று விசாரித்ததும் இப்பதாங்க சார் ஒரு பேருந்து 4 போச்சு என்றார் பக்கத்தில் நின்றவர் ஒரே பொண்ணுங்க கூட்டமா இருந்துச்சுங்க என்றார் ( அட இத இதத்தாண்டா எதிர்பார்த்தோம்) ஆர்வக்கோளாறில் எங்க ஓட்டுநரை வேகமாக போங்க சார் என்று விரட்டினால் அவரும் விரட்டினார்.

 வனம்

வழி நெடுக தொலை தூரத்தில் உள்ள வீடுகள் என்று இயற்கையை ரசித்துக்க ரசிக்க ஆனந்தம் மனதில் வழியில் அத்திக்கடவில் நின்று தாகசந்தி அருந்திவிட்டு பரளிக்காடு புறப்பட்டோம். வழி நெடுக வாழைத்தோப்பும் அங்கு யாணை வராமல் இருக்க சோலார் பென்ஸ்ம் போட்டு இருந்தார்கள் ஒவ்வொரு வாழைத்தோப்பிற்கும் நடுபில் மரத்தின் மேல் வீடுகட்டு இருந்தார்கள் விசாரித்ததில் யாணை வந்தால் துறத்துவதற்காம். அடுத்த செக்போஸ்ட். அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பரளிக்காடு.

 பழையகால பாலம்

பரளிக்காட்டில் இறங்கியதும் வெறும் வண்ணமயம் எல்லா வகையாக பொண்ணுகளும் பசங்களுக்கு வழி விடாமல் இவர்களே ஆலமரத்தில் வனத்துறையினரால் கட்டப்பட்டிருந்த கயிறு தூரியில் ஆட்டம் பாட்டமாக இருந்தனர். அங்கு நண்பர்களுக்கு முன் ஒரு காதல் ஜோடி சக நண்பர்களுக்கு தெரியாமல் கண் அடித்து விளையாடியது எனக்கு பழைய நினைவுகள் ( அடுத்தவன் சந்தோசமாக இருந்தால் பிடிக்காதே)

இறங்கி சென்றதும் வனஅலுவலர் ஆண்டவர் எங்களை வாங்க வாங்க என அன்புடன் வரவேற்றார். மகளிர் சுயஉதவிக்குழுவினர் சுக்கு காபி கொடுத்தனர் கருப்பட்டியில் செய்ததாம் இதமாக இருந்தது. வன அலுவலர் சார் தற்போது அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டம் வேலை நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் தண்ணீர் தேக்கவில்லை அதனால் இரண்டு கிலோமீட்டர் தள்ளி நாம் பரிசல் சவாரி போகலாம் என்றார் சரி என்று அங்கே புறப்பட்டோம்.


பரிசல் சவாரிக்கு சென்றதும் அங்கு இளைஞர்கள் எங்களை வரவேற்று அனைவருக்கு பாதுகாப்பு கவசம் அணிவித்தனர். அதன் பின் 4 பேர் மட்டும் பரிசலில் ஏற்றினர் இந்த பரிசல் பைபரால் செய்யப்பட்டது அதன் வடிவமைப்பு நேர்த்தியாக இருந்தது. எங்களுக்கு பரிசல் ஓட்டியாக வந்தவர் ஆறுமுகம். நான் எந்த இடங்களுக்கு சென்றாலும் அதன் வரலாறு தெரிந்து கொள்ள ஆசைப்படுபவன் அதனால் அறுமுகத்தை விசாரித்தோம் பரளிக்காடு எப்படி சுற்றுலாத்தளம் ஆனது என்று காட்டுவாசி இளைஞர்கள் கூறியதாவது.

பரளிக்காடு ஒர் மலை கிராமம் இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம. இங்கு பில்லூர் அணை கட்டும் போது தான் தார் சாலை போடப்பட்டுள்ளது அதற்கு முன் வண்டி சாலை தான். காரமடையில் இருந்து வெள்ளியாங்காடு வழியாக வனத்துக்குள் சென்று நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, மஞ்சூர் செல்லலாம். பில்லூர் அணையின் உட்புறம்தான் பரளிக்காடு.

இங்கு வாழும் காட்டுவாசிகளுக்கு வன அலுவர்கள் தான் உதவி செய்பவர் குழந்தைகளின் படிப்பு முதல் மருத்துவம் வரை. இந்த வனப்பகுதியில் ரேஞ்சராக இருந்தவர் நாகராஜன், பாரஸ்டர் கிருஷ்ணசாமி, கன்ஸ்வெடடர் கண்ணன் இவர்கள் காரமடை வனப்பகுதியில் பணியாற்றும் போது மலைவாசிகளுக்கு பல வகையில் உதவி செய்தார்கள். இவர்கள் யோசனையில் இங்கு உள்ள அனையின் பின்புறத்தில் சுற்றுலாப்பயணிகளை பரிசல் சவாரி கூட்டி சென்றால் இங்குள்ள இளைஞர்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் என அப்போது மாவட்ட வன அதிகாரியாக இருந்த அன்வர்ஜான் என்பவரிடம் கூறிஉள்ளனர். அவரும் சரி என வன அதிகாரிகளிடமும், மின்வாரிய அதிகாரிகளிடமும் அனுமதி வாங்கி இவர்கள் கொஞ்சம் பணம் போட்டு தப்பையால் செய்யப்பட்ட பரிசல் 4 வாங்கி சுற்றுலாவாக துவக்கினார்கள்.

 பரளிக்காடு தூரி ஆடும் இடம்

4 வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட இச்சுற்றுலா  மையத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு உணவு செய்து கொடுத்தால் மழைவாழ் பெண்களுக்கு வருமானம் கிடைக்கும் என்று கோவை அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரி உணவு பிரிவு மாணவிகள் மூலம் உணவு செய்யும் முறையை  அவர்களுக்கு கற்றுத்தர வனஅதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவர்களிடம் கற்ற இப்பெண்கள் சிறப்பான உணவை கொடுத்து வரும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. இப்பெண்களே காரமடை சென்று பொருட்கள் வாங்கி சமைத்து தருகின்றனர். இதற்கு கூலியாக ஒரு நபருக்கு 100 ரூபாயும் கொடுத்து வந்துள்ளனர் தற்போது அது 125ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

பரிசலை ஓட்டும் இளைஞர்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூபாய் 200 தருகின்றனர் இதுபோக இதில் வரும் இலாபத் தொகை இங்கு குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்கு உபயோகப்படுத்துகின்றனராம். இங்கு பணியாற்றிய வன அலுவலர்கள் செய்த உதவியால் இப்போது நிறைய மாணவர்கள் படித்துவருகின்றனர். அடுத்து வந்த வனஅலுவலரான ஸ்ரீனிவாசம் நிறைய சுற்றுலாபயணிகளை இங்கு கூட்டிவந்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. பரளிக்காட்டை சுற்றுலாத்தளம் ஆக்கியதால் இங்கு நிறைய குடும்பங்கள் வாழ்கின்றன.   எங்கள் குழந்தைகள் படிக்கின்றர் என்றனர் இளைஞர்கள் இவர்ளில் ஒருவர் பெயர் ஆளுமுகம்.

ஆறுமுகத்திடம் பேசிக்கொண்டே பரிசல் பயணம் இனிதாக நடந்தது. அடுத்து நாங்கள் பார்த்த விலங்குகள், வாங்கிய பழங்கள், மலைவாழ்மக்களின் உணவு,  தூரி ஆடுதல், இயற்கை காட்சி படங்கள், ஆற்றுக்குளியல் போன்றவற்றை தொடர்பதிவாக வருகிறது....

Friday, July 15, 2011

இதய நோயை கட்டுப்படுத்தும் கடுகு...


நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு நோயின்றி நூறாண்டு வாழ்ந்தனர். ஒவ்வொருவீட்டிலும் சமையல் அறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியில் அற்புத மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.

உணவோடு சேர்ந்து நம் உடலைக் காக்கும் அற்புத கூட்டணிதான் இந்த அஞ்சறைப் பெட்டி பொக்கிஷங்கள். 

இந்த அஞ்சறை பெட்டியில் உள்ள அற்புதமான அரு மருந்து மற்றும் உணவுப் பொருட்களில் நாம் அதிகம் பயன்படுத்துவது கடுகு. கடுகை மூன்று வகைகளாக கூறுவர். நாய்கடுகு, மலைக்கடுகு, சிறு கடுகு என்று.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. கடுகு அந்தளவிற்கு முன்னோர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இதன் பயன்களும் ஏராளம்.

நீரழிவு நோயை கட்டுப்படுத்த... 

கடுகு, ஆவாரை ‌விதை, மரம‌ஞ்ச‌ள், கருவேல‌ம் ‌பி‌சி‌ன் ஆ‌கியவ‌ற்றை எடு‌த்து சு‌த்த‌ப்படு‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
வீ‌‌ட்டி‌ல் அ‌ம்‌‌மி இரு‌ந்தா‌ல் அ‌தி‌ல் இவ‌ற்றை வை‌த்து இடி‌த்து பொடியா‌க்க வே‌ண்டு‌ம்.
இதனை ‌நீ‌ர்‌வி‌ட்டு ‌‌பிசை‌ந்து சூரணமா‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
நீ‌‌ரி‌ழிவு நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ள் இ‌ந்த ‌சூரண‌த்தை 1-2 ‌கிரா‌ம் உ‌ள்ளு‌க்கு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ‌‌நீ‌ரி‌ழிவு நோ‌ய் க‌ட்டு‌ப்படு‌ம்.

சிறுநீர் பெருக்கி

கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

கடுகு எண்ணெய்

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.

விக்கல் நீங்க

வெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.

மேலும் பல பயன்கள்

விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கு, 2 கிராம் கடுகு நீர் விட்டு அைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுக்க விஷம் வெளியேறும்... 

தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாக்கும்.

கடுகை தூள் செய்து வெந்நீரீல் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணப்படுத்தும்

கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும்

கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும் உடனடியாக விரைப்பு சீராகும்.

கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்... 

Thursday, July 14, 2011

அஞ்சறைப்பெட்டி 14.07.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

மும்பையில் மீண்டும் குண்டுவெடிப்பு கொஞ்ச நாள் அமைதியாக இருந்தது மும்பை நகரம் மீண்டும் குண்டு வெடித்து அமைசியை கெடுத்து விட்டனர் படுபாவிகள் எத்தைனை அப்பாவி மக்கள் இன்று உயிருக்கு போராடுகின்றனர் குண்டு வைக்கும் போது இதை யோசிக்க மாட்டார்களா படுபாவிகள்.

உங்களுக்கும் அரசுக்கும் பிரச்சனை என்றால் அரசிடம் நேரடியாக மோத வேண்டியது தானே?

அதை விட்டு விட்டு அப்பாவி மக்களை பயமுருத்துபவர்கள் தீவிரவாதிகள் என்ற பெயரில் ரத்த வெறி பிடித்த மிருகங்கள்...


...............................................................................................


கோவையில் காவல் நிலையம் முன்பு அதிக மக்கள் நடமாட்டமுள்ள சிக்னலில் பட்ட பகலில் ஒரு கொடூர கொலை வீடியோவைப்பார்த்து வௌவௌத்துப்போனேன்.

இருவர் இருசக்கர வாகனத்தில் வருகிறார் வரும் போது சிக்னலில் எதிரே இருப்பவர் மேல் மோதுகிறார் அப்போது நான்குபேர் சேர்ந்து வாகன ஓட்டியின் மேல் கல்லைத்தூக்கிப்போட்டு கொலை செய்கின்றனர். மேலும் இதைப்பற்றி விசாரிக்கும் போது பாரில் தண்ணி அடிக்கும் போது தும்மலில் ஏற்பட்ட பிரச்சனை என்றார்கள்.

அடப்பாவிங்களா தண்ணி அடிச்சு நீங்க அடிச்சிகிட்டதாலே இன்று 5 குடும்பம் நடுத்தெருவில்......(இறந்தவன் குடும்பம் உள்பட..)


...............................................................................................

சமீபத்தில் கோயிலுக்கு சென்றிருந்த போது சமீபத்தில் திருமணம் நடந்த நண்பனை குடும்பத்துடன் சந்தித்தேன் பரஸ்பரவம் விசாரித்து விட்டு அனைவரும் வரிசையில் நின்று கொண்டு இருந்தோம் கூட்டத்தில் நண்பனின் மனைவி குங்குமம் வாங்காமல் வந்து விட்டார் இதை வெளியில் வந்து அவர் சொல்லும் போது பக்கத்தில் இருந்த அவர்களின் உறவினர் பெண் இந்தாம்மா குங்குமம் என்று கொடுத்தார்.

அந்த பெண் கொடுக்கும் போது அனைவரும் வேண்டாம் வாங்க வேண்டாம் என்ற கண்ணோட்டத்தோடு பார்த்தனர் ஆனால் நண்பனின் மனைவி மகிழ்ச்சியுடன் குங்குமத்தை வாங்கினார். அப்போது தான் குங்குமம் கொடுத்த பெண்ணைப்பார்த்தேன் அவர் பூவை இளந்த பெண்.

நண்பனின் மனைவியிடம் இதைப்பற்றி கேட்கும் போது மற்றவர்கள் கொடுத்த குங்குமத்தை விட அவர்கள் கொடுக்த குங்குமம் சிறப்பானது ஏன் என்றால் மற்றவர்கள் கொடுக்கம் போது குங்குமமாக கொடுப்பர் ஆனால் இவரின் ஆழ்மனதில் இருந்து இந்த குங்குமம் உன் வாழ்நாள் முழுவதும் இருக்கனும் என்று நிச்சயம் மனதில் நினைத்து தான் கொடுத்து இருப்பார் அதனால் அவரின் வாங்கினேன் என்றார். என் கண்ணில் ஆனந்தக்கண்ணீர்.


........................................................................................................

சமீபத்தில் நில அபகரிப்பு வழக்கிலும், மிரட்டல் வழக்கிலும் கடந்த ஆட்சியில் நல்ல பதவியில் இருந்தவர்கள் எல்லாம் நிறைய அனுபவத்துள்ளனர் இப்போது பலர் மேல் வழக்கு பதிவு செய்து உள்ளே செல்வது மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது ஏன் எனில் மாட்டியவர்கள் எல்லாம் பலகோடியில் தான் புழங்கி இருக்கின்றனர். ஒரு சாமனியன் நினைத்து பார்க்காத தொகையைத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பாரித்து இருக்கிறார்கள். இச்செய்தியை அலுவலகத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போது என் நண்பன் திடீரென் இப்பாடலை பாடினான்...

மாட்டிக்கிட்டாரடி மைனர் காளை......கட்டிப்போட்டதடி கண்டாங்கிச்சேலை...



........................................................................................................

தற்போது முதல்வர் அளித்த மருத்துவர் காப்பீட்டுத்திட்டம் நிறைய பயன்கள் உள்ளது. பாராட்டப்ட வேண்டிய திட்டம்.

இத்திட்டத்துடன் அரசு மருத்துவமனைகளை உயர் தொழில்நுட்பத்துடன் மாற்றி அனைத்து திட்டங்களையும் அரசு மருத்துவமனையில் நிறைவேற்ற முயற்சி செய்யலாம். இன்றும் சாமானிய மக்கள் அரசு மருத்துவமனையில் தான் அதிகம் சிகிச்சை எடுக்கின்றனர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தினால் இன்னும் ஏராளமானோர் பயன் பெறுவார்கள்.


அரசு மருத்துவமனை என்றாலே நிறைய குறை கூறுபவர்கள் தான் அதிகம் ஆனால் அங்கும் தரமான சிகிச்சைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. தரமான மருந்துகள் கொடுத்து வருகின்றனர் என்பதை தற்போது நேரடியாக உண்ர்ந்தேன்.


உயர் இரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரைக்கும் எனது தந்தைக்கு மாதம் தனியார் மருத்துவமனையில் எல்லா டெஸ்ட் உடன் மாத்திரைக்கு மாதம் 2000 செலவு செய்து வருகிறேன். ஆனால் அவர் எங்கள் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரிடம் விசாரித்து இருக்கிறார் அவர் வாரம் வாரம் செவ்வாய்கிழமை இங்க எல்லா டெஸ்ட்டும் செய்து இலவசமாக மருந்துகள் தருகிறோம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார் இவரும் சென்று மருந்துகள் அனைத்தையும் வாங்கி வந்து உபயோகப்படுத்துகிறார். ஊரிற்கு சென்றிருந்த நான் அந்த மருந்துகளையும் இதற்கு முன் தனியார் கொடுத்த மருந்தையும் பார்த்தால் கம்பெனிதான் வேறு மற்றபடி இரண்டும் ஒன்று தான் அப்பொழுது விசாரிக்கும் போது இங்கு குறைந்த பட்சம் வாரம் 200 பேர் மருந்துகளை வாங்கிச்செல்கின்றனர் என்றனர்.


அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தினால் இன்னும் நிறைய பயனாளர்கள் பயன் பெறுவர்.


நாட்டு நடப்பு

மாநிலங்களவை உறுப்பினராக செய்தியாளர் ரவிபெர்னாட் அதிமுக சார்பாக தேர்வு, இது விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு.

மிரட்டல், நில அபகரிப்பு வழக்கில் தமிழகம் எங்கும் தினமும் பரபரப்பான செய்தி சுடச்சுட வந்து கொண்டே இருக்கிறது.


திருவனந்தபுரத்தை அடுத்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதையல் இருக்கும் என புரளி கிளம்பியுள்ளது இருந்தால் நமக்கு மிக்க மகிழ்ச்சி தான்...



தகவல்



இஸ்ரேலில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆப்ரகாம் தமிர் என்பவர், தனது மாணவர்கள் துணையுடன் மனித மூக்குகள் குறித்த ஆராய்ச்சியில் இறங்கினார்.
மனிதர்களின் முக்கிய உறுப்புகளில் மூக்கும் ஒன்று. முகத்துக்கு அழகை சேர்ப்பது மூக்கு என்றால் அது மிகையாகாது. மனிதர்களுக்கு எத்தனை வகை மூக்குகள் உள்ளன? என்பதை கண்டறியவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆராய்ச்சியில் மனிதர்களுக்கு 14 விதமான மூக்குகள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
பிறைவடிவிலான மெல்லிய மூக்கு, சதைப் பிடிப்பு மூக்கு, உருண்டை மூக்கு, ரோமன் மூக்கு என மொத்தம் 14 விதமான மூக்குகள் பட்டியலிடப்பட்டு உள்ளது.
சதைப் பிடிப்பிடிப்புள்ள மூக்குகள் ஆண்களிடம் தான் அதிகமாக காணப்படுகின்றன. இந்த மூக்குக்கு உதாரணம் கூற வேண்டுமானால், இளவரசர் பிலிப்பை சொல்லாம். நடிகர் டாம் குரூஸிடம் “ரோமன்” மூக்கு அமைந்துள்ளது. மூக்கு விஷயம் சாதாரணமானது அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்துவதாக பேராசிரியர் ஆப்ரகாம் தபிர் கூறுகிறார்.   
எந்த வகையான மூக்கை விரும்புகிறீர்கள் என்று பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் லேசாக விளைந்த பிறை வடிவ மூக்கை விரும்புவதாக 13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தள்ளனர். நீண்ட மூக்கை பெரும்பாலானோர் விரும்பவில்லை. தடிமனான மூக்குக்கு 5 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தள்ளனர். 
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் சூர்யஜீவா திருவண்ணாமலையைச் சேர்ந்த இவரின் அரசியல் கட்டுரைகள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கும் ஆணிவேர் என்ற பெயரில் எழுதி வருகிறார்.

http://suryajeeva.blogspot.com/

 
தத்துவம்


கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.


மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.