Wednesday, April 30, 2014

பருவங்கள் மீண்டும் கிடைப்பதில்லை...


+2 முடித்து கல்லூரி செல்லும் வரை இருக்கும் காலம் அனைவருக்கும் ஒரு துண்டு விழும் இந்த பருவத்தில் அனைத்தும் அறிந்திருப்போம், என்ற கர்வம் இருக்கும். உண்மையில் இது ஓர் அறியாப்பருவம் தான் அனைவருக்கும். எதை செய்தாலும் நாம் செய்வது தான் நல்லது, நாம் செய்வது தான் சரி என்ற அகந்தை உள்ள பருவம். நான் சொல்லும் இந்த பருவம் இப்போது உள்ளவர்களுக்கு ஒத்துப்போகாது நான் சொல்வது எல்லாம் 1995 இருந்து 2002 வரை  கல்லூரி சென்றவர்கள் இதை அனுபவித்திருக்ககூடும்.

வீட்டில் எந்த பொறுப்பும் கிடையாது, துக்கம் என்றாலும் சந்தோசமான காலகட்டம் அது, ஊரில் எதாவது பெரிசு இறந்தால் அங்கு அப்படியே ஆஜர் ஆவோம் ஒத்த வயதுடைய அனைவரும் அங்கு எல்லா காரியங்களையும், தம் வீட்டு காரியங்கள் போல் இழுத்துப்போட்டு வேலை செய்வது, கல்யாண வீட்டுக்கு சென்றால் எதைப்பற்றியும் யோசிக்காமல் பந்தி பரிமாறுவது என உதவிகளை அள்ளிக்கொடுக்கும் பருவம்.

அப்போது தான் ஊரில் எல்லா வீட்டுக்கும் போன் வந்தது மாதத்திற்கு 80 லோக்கல் கால் இலவசம் என்ற அறிவிப்போடு, காலை தூங்கி எழுந்ததும் காட்டுப்பக்கம் சொம்பைத்தூக்கிக் கொண்டு சென்ற காலம் அது. காட்டுப்பக்கம் போவதற்கு இந்த இலவச போன்கால் தான் அப்போது எல்லாம் எங்களுக்கு பயன்பட்டது. காட்டுப்பக்கம் போவதற்கு ஒருத்தன் தனியாக போக மாட்டோம் அது என்னவே திருவிழாவிற்கு போவது போல் குறைந்த பட்சம் 10 பேர் சென்று, வாய்க்காலை காலையிலேயே அசிங்கம் செய்து விட்டு வருவது நாங்களாகத்தான் இருக்கும்.

முந்தையநாள் வேலைக்கு சென்ற அனுபவம், நேர்முகத்தேர்வு அனுபவம், டியூசன் அனுபவம், பேருந்தில் பயணித்தபோது மேட்டூர் பொண்ணுகளை சைட் அடித்த அனுபவம் என்று ஆள் ஆளுக்கு தன் அனுபவத்தை சொல்லும் போது கிண்டல், கேலி, கதை சொல்பவனை கலாய்ப்பது என்று அன்றைய காலைப்பொழுது சந்தோசத்தோடு தொடங்கும்.

அடுத்து நேரா வீட்டுக்கு போகமாட்டோம், ஆயா கடையில் உட்கார்ந்து அன்றை செய்தித்தாளில் வந்த செய்திகளோடு எங்களுக்கு தெரிஞ்ச கிசுகிசுக்களை சொல்லிக்கொண்டே அந்த இடம் ஒரே போர்க்களமாக இருக்கும். இதில் தினமும் கஷ்டப்பட்டு பால் பீச்சி, பால் சொசைட்டிக்கு கொண்டு வரும் நண்பனிடம் பிட்டை போட்டு ஒரு டீ வாங்கி அதை 4 பேர் குடித்த காலம் அது.

எப்பவும் குடிப்பது வில்ஸ் பில்டர் என்பதால் வீட்டில் தேடிப்பிடிச்து 1.25 பைசா எடுத்து வந்திருப்பேன். அதில் வில்ஸ் பில்ட்ரை வாங்கி பத்த வைத்தால் ஆள் ஆளுக்கு எனக்கு ஒரு பப் என்று புடுங்கி புகையை உள்வாங்குவார்கள், விட்டால் எனக்கு கிடைக்காது என்று "Last pup of the cigrate, first kiss of the lady" என்று ஒரு கிளு கிளு பிட்டைப்போட்டால்தான், காசு கொடுத்து வாங்கிய எனக்கு 4 பப்பவாது கிடைக்கும். இப்படியாக காலை டிபன் சாப்பிட வீட்டுக்கு போவோம். காலை டிபன் என்றதும் இட்லி, பூரி பொங்கல் என்று நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. நேற்று இரவு மீதான நெல்லஞ்சோறு உடன் கொஞ்சம் எருமைத்தயிர், ரெண்டு சின்னவெங்காயம், ஒரு பச்சைமிளகாய், எழுமிச்சை ஊறுகாய் இது தான் அன்றைய காலை உணவு. இன்று எவ்வளவு பெரிய ஓட்டலில் சாப்பிட்டாலும் அந்த பழைய சோறு, பழைய சோறு தான்.  நாம் சாப்பிட நினைக்கும் போது இவைகள் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் ரசிச்சு ருசிக்க நேரம் இல்லை இது தான் இன்றைய நிலை.

பகலில் எல்லாம் கிரிக்கெட், அப்புறம் சாப்பாடு பின் மாலை வேளைகளில் ஊரைத்தாண்டி போகும் பேருந்துகளில் சைட் அடிப்பது தான் பொழுது போக்கு. டீக்கடையில் உட்கார்ந்து டீ குடிக்காமல் வெட்டியாக பேசும் பேச்சு, டீக்கடைக்காரர் எழுந்து போங்கடா, என்று சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு, அடுத்து சலூன் கடை கடையில் டிவி வைத்தற்காக அவர் ஏங்கிய ஏக்கம் நமக்கு இப்போது தான் சிரிப்பாக வருகிறது. அதுவும் கிரிக்கெட் மேட்ச் போட்டு விட்டால் சலூன்கடையை ஆக்கரமித்து உட்கார்ந்த பருவம், அடுத்தவரைப்பற்றி கவலைப்படாத பருவம் என சொல்லிகிட்டே போகலாம்..

தினமும் மாலை வேளையில் குளிச்சி பவுடர் அடிச்சி, தெளிவா வந்து நிற்போம் பஸ் நிலையத்துக்கு. இரு சக்கர வாகனங்களில் போகும் சுடிதார்களின் எண்ணிக்கையும், புடவைகளின் எண்ணிக்கை, பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்துருக்கும் மங்கைகளின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிய பருவம், மீண்டும் கிடைக்கா பருவம்...

Tuesday, April 29, 2014

யாரும் கண்டு கொள்வதில்லை??

புரூக் பீல்ட் அல்லது பன் மாலில் எப்போது சினிமாவிற்கு போனாலும் கூட்டம், கோவையில் எத்தனை தியேட்டர் இருந்தாலும் இங்கு மட்டும் தான் கூட்டம் அலைமோதுகிறது. இத்தனைக்கும் டிக்கெட் விலையோ மற்ற தியேட்டர்களை விட கூடுதல் தான் ஆனாலும் இங்கு Apps போனை கையில் வைத்துக்கொண்டு உடலை பாதி மூடியும், மூடாமல் துணியை போர்த்திக்கொண்டும் திரிகின்றனர் அதுவும் நாம் கையில்லாத பனியனை உள்ளாடையாக பயன்படுத்துகிறோம் அதைத்தான் இவர்கள் மேலாடையாக பயன்படுத்துகின்றனர், ஆக சினிமாவோடு இலவசமாக சினிமா பார்க்கும் கூட்டம் தான் இங்கெல்லாம் திரிகிறது.

எங்கு பார்த்தாலும் கூட்டமாக திரியும் இளைஞர்களையும், யுவதிகளையும் நான் குறை கூறவில்லை காரணம் ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கின்றனர், இப்பவெல்லாம் பிஇ 2 ம் வருடம் படிக்கும் போதே எப்படி கேம்பசில் செலக்ட் ஆவது என்று ப்ளான் போட்டு படிக்கறவங்க தான் இங்கு அதிகம், அப்படி படித்தவர்கள் இன்று நல்ல நிலையில் அருமையான சம்பளத்தில் இருக்கின்றனர் என்பது மகிழ்வான ஒன்று.. எனக்கு தெரிஞ்ச பையன் மிக ஏழ்மையான குடும்பம் அவன் அப்பா செம்ம தண்ணி வண்டி இருந்தாலும் அவனை கஷ்டப்ட்டு படிக்க வெச்சார்., பையன் படிப்பில் செம்ம சுட்டி ஆனால் ஆங்கிலத்தில் தத்தி, இது இவனுக்கு மட்டுமல்ல அரசு உயர்நிலைப்பள்ளியில் படிச்சவனுக்கு எல்லாம் வருவது தான். ஆனாலும் பையன் கொஞ்சம் உஷார். பிஇ சேர்ந்த கையோடு ஆங்கில பயிற்சி வகுப்பில் சேர்ந்து தத்தி தத்தி மேலேறிவிட்டான். 3 வது வருடம் படிக்கும் போது கேம்பசில் செலக்ட் ஆகி பெங்களூரில் வேலை, படிப்பு முடிஞ்சு இன்று பெங்களூரில் குடும்பத்தோட செட்டில். அன்று அவன் குடும்பத்தை உதாசீனப்படுத்தியவர்கள் எல்லாம் இன்று பொண்ணு கொடுக்க வரிசையாக வருகிறார்கள் என்று சொல்லி பெருமைப்பட்டார் அன்றைய குடிகார தந்தை, இப்ப அவர் குடிப்பதில்லையாம் அது தான் கூடுதல் சிறப்பு.

இந்த கேம்பசில் செலக்ட் ஆகாத பசங்க தான் ரொம்ப பாவம், நிறைய செலவு செய்து படித்தும், இங்கு 6 ஆயிரம் ரூபாய்க்கு வேலைக்கு க்யூவில் நிற்பது பரிதாபத்துக்குரியது. அதுவும், நேற்று என் சொந்தக்காரப்பையன் என் கம்பெனிக்கு தேர்வுக்கு வந்திருந்தான், பிஇ முடிச்சு 75 சதவீதம் வைத்திருந்தான், ரொம்ப சந்தோசமாக இருந்தது ஒரு வருடம் நிறைய தேர்வுக்கு போய்ட்டு வந்து விட்டான் ஆனாலும் தேர்வாகவில்லை, அவன் அப்பா ரொம்ப புலம்பினார், சரி வாடா என்று வரச்சொல்லி தேர்வு எழுதச்சொன்னா, பையன் எல்லாத்திலும் பெயில், ஏன் என்று கேட்டால் communication problem இந்த communication எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல இது இல்லாம இன்று நிறைய பேர் அல்லாடுகிறார்கள் என்பது நம் கண் கூட தெரிகிறது.

இந்த communication இல்லாதாற்கு யார் காரணம். அரசு பள்ளியில் படித்தது காரணமா அங்கு வரும் வாத்திகளுக்கே இது இல்லாதது காரணமா இதற்காக முயற்சி எடுக்காதது காரணமா அரசு இதற்கு தனிக்கவனம் செலுத்தாதது காரணமா என்று கேட்டுகிட்டே போகலாம், ஆனால்  அவன் அவனுக்கு வேணும் என்பது தான் பதிலாக இருக்கும்.

Monday, April 28, 2014

சோத்துக்கடை - கிருஷ்ணபவன், சித்தாபுதூர், கோவை


கோவையில் உள்ள சிறந்த சைவ உணவகத்தில் இதுவும் ஒன்று, என்று நிச்சயம் சொல்லலாம், விலையோ மற்ற சைவ உணவகத்தை விட மிக மிக குறைவு என்று தைரியமாக சொல்லக்கூடிய உணவகம். சைவ உணவகத்திற்கு கோவையில் நிறைய உணவகங்கள் உள்ளன, அதுவும் பல இடங்களில் கிளைகளைக் கொண்ட பிரபல உணவகங்கள் நிறைய இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஈடாக இங்கு கூட்டம் நிறைந்து இருக்கும் என்பது கண்கூட கண்டது.

இந்த கிருஷ்ணபவன் உணவகத்திற்கு 8 வருடமாக நான் வாடிக்கையாளர், திருமணம் முடிந்து கோவைக்கு தனிக்குடித்தனம் வந்த உடன் என் மனைவிக்கு முதன் முதலாக நான் அறிமுகப்படுத்தியது இந்த உணவகம் தான், வீட்டில் சோறு ஆக்கவில்லையா, இருக்கவே இருக்கு கிருஷ்ணபவன் என்று எங்களோடு கலந்த உணவகம்.

வெளியே சிறிய கடை மாதிரிதான் இருக்கும், உணவகத்தின் உள்ளே சென்றால் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு 60 பேருக்கு மேல் அமரக்கூடிய அளவில் இருக்கும் உணவகம், ஒரு மேற்பார்வையாளர் அனைவரும் உட்கார இடவசதி செய்து கொடுப்பார், இடம் இல்லாதவர்களை அமர வைத்து முன் வந்தவர்களுக்கு இடம் ஏற்பாடு செய்து தருவார். இந்த கவனிப்பிலேயே நம்மை முதலில் மனநிறைவாக்கி விடுவர்.

இந்த உணவகத்தில் தட்டுக்களைத்தான் பயன்படுத்துகின்றனர் தட்டுக்கள், கழுவி அதன் பின் சூடாக்கப்பட்டு பின்பு தான் பரிமாற டேபிளுக்கு கொண்டு வருகின்றனர், மிக சுத்தமான முறையில் இருக்கும் டேபிளும், தட்டும் அடுத்து பரிமாறுபவர்கள் அனைவரும் கையில் உறை உடன் தான் காணப்படுவர், மிக சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் இந்த உணவு விடுதி.

சரி உணவுக்கு வருவோம். நான் குடும்பத்தோடு எப்போதும் இங்கு வந்தாலும் முதலில் ஆர்டர் செய்வது மினி இட்லி, காரக் கொழுக்கட்டை, இனிப்பு கொழுக்கட்டை, இடியாப்பம், பணியாரம், பூரி, சேவை, சில்லி கோபி, ரவா ரோஸ்ட் கடைசியாக கம்மங்கூழ். இது தான் எங்கள் ரெகுலர் மெனு, கூட வந்திருக்கும் நண்பர்களைப் பொறுத்து மாறும் மற்ற வகைகள். ஆர்டர் செய்த பின் அதிக நேரம் காத்திருக்கவேண்டியதில்லை 5 நிமிடத்தில் டேபிளுக்கு மினி இட்லி வந்து விடும்.

மினி இட்லி ஒரு குழியான தட்டில் சாம்பாரோடு மிதந்து வரும் உடன் கொஞ்சம் நெய்யும், கொஞ்சம் வெங்காயமும் இருக்கும். தேங்காய் சட்னி, தக்காளி காரச்சட்னி, பொதினா சட்னி, கத்திரிக்காய் சட்னி என்று நான்கு வகையான சட்டனிக்கள் எப்போதும் டேபிளில் இருக்கும், தேங்காய் சட்னி கொஞ்சம் எடுத்து மினி இட்லி, சாம்பார், நெய், வெங்காயம் கலந்து ஒரு துளி நாவில் வைக்கும் போது நல்ல சுவையும் இருக்கும், மீண்டும் அடுத்த எப்ப நாவில் இட்லியை வைப்பார்கள் என்று நா ஏங்கும் அளவில் இருக்கும் சுவை. இரண்டு நிமிடத்தில் மினி இட்லி சாம்பார், சட்னி எல்லாம் கலந்து உள்ளே சென்று விடும். அந்த சுவையை மறக்க கொழுக்கட்டை சாப்பிட்டு நாவை அடுத்த சுவைக்கு தயாராக வைக்கவேண்டும்.

கொழுக்கட்டை காரம், இனிப்பு என இரண்டு வகையில் கிடைக்கும் நல்ல தரமாகவும், சுவையாகவும் இருக்கும். அடுத்து இடியாப்பம் வந்தது கூடவே தேங்காய்ப்பால், காரக்கடலை குழும்பு, தக்காளி சாஸ் உடன் வந்தது. வந்த சுவடே தெரியாமல் கரைத்தது என் நாக்கு. அடுத்து வந்த ரவா ரோஸ்ட்க்கு அவர்கள் கொடுக்கு நான்கு வகையான சட்டினி மற்றும் சுவையான சாம்பாருக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும் நம் நாக்கு. இங்கு தினமும் ஒரு வகையான சேவை உண்டு, நான் சாப்பிட்டது லெமன் சேவை அதிக புளிப்பும் இல்லாமல், காரமும் இல்லாமல் லெமன் சுவையுடன், சாம்பரும் சேர்ந்ததால் சுவையில் சொக்கிப்போனது என் நாக்கு. 

கோபி சில்லி மற்ற இடங்களில் சாப்பிடுவதை போல இருக்காது, அதன் சுவையும் நன்கு இருக்கும், இது இல்லாமல் கோதுமை தோசை, ராகி, கம்பு, சோளம் என வித விதமான தோசைகள், அடை அவியல் என் ஒவ்வொன்றும் கிராமத்து வீட்டுச்சுவையுடனே இருப்பதால் இந்த உணவகம் ஒரு ஸ்பெசல் உணவகமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த உணவகத்தில் எதை சாப்பிடாமல் விட்டாலும் கம்மங்கூழ் மட்டும் சாப்பிடாமல் வரக்கூடாது அம்புட்டு சுவை. கம்மங்கூழுடன் கொஞ்சம் வெங்காயம், ஒரு மோர் மிளகாய், ஒரு வடு மாங்காய் என நம்மை திணடிக்கின்றனர் அவர்களது சுவையான உணவுகளால்.

கோவை வந்தால் இரவு சாப்பிடுவதற்கு நல்ல சைவ உணவகம் வேண்டும் என்றால் தைரியமாக செல்லலாம் கிருஷ்ண பவனுக்கு. இங்கு நீங்கள் செல்லும் போது கடையின் வெளியில் நிற்கும் கார்களைப்பார்க்கும் போதே தெரியும் இந்த கடையின் வாடிக்கையார்களைப்பற்றி. அடுத்து மாலை நேர உணவகம் என்பதால் 7 மணி முதல் 11 மணி வரை செயல்படுகிறது. 8 மணிக்கு பின் எப்போது போனாலும் க்யூவில் நின்று தான் சாப்பிடவேண்டும். அம்புட்டு கூட்டம் இருக்கும், அங்கு இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது தான் தெரியும் யார் வீட்டிலும் சோறு ஆக்குவதில்லை என்று.

பெயர்: ஸ்ரீ கிருஷ்ணா டிபன் ரூம்
இடம்: மகளில் பாலிடெக்னிக்கில் இருந்து இராமகிருஷ்ணா மருத்துவமனை செல்லும் வழியில் பெருமாள் கோயில் முன்புறம்.
விலை: மற்ற உயர்தர சைவ உணவகத்தை விட மிக குறைவுதான். அனைத்து தரப்பு மக்களும் சாப்பிடும் விலை தான்...

Monday, April 21, 2014

வாருங்கள் ஜனநாயக கடமையாற்றுவோம்..


நம் நாட்டில் நமக்கு எத்தனையோ உரிமைகள் இருந்தாலும், வாக்குரிமைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. நமது உரிமையை என்றும் நாம் யாருக்கும் விட்டுத்தரக்கூடாது என்று சொல்வோம், அது போலத்தான் நம் ஓட்டுரிமையை யாருக்கும் விற்கக்கூடாது, விட்டுத்தரக்கூடாது. நம் ஒரு வாக்கில் என்ன ஆகப்போகிறது என்று தான் இங்கு நிறைய பேர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர், ஒரு வாக்கில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் ஆக எது நடந்தாலும் நம் கடமையை தவறாமல் நிறைவேற்றியே ஆக வேண்டும், தவறாமல் வாக்களியுங்கள் நண்பர்களே...

என் கன்னி வாக்கை முதன் முதலாக 1999ல் பாராளுமன்ற தேர்தலில் தான் வாக்களித்தேன். கோபிசெட்டிபாளையம் தான் எங்கள் பாராளுமன்ற தொகுதி முதல் வாக்கு பாராளுமன்ற தேர்தலுக்க அளித்ததில் மிக்க மகிழ்ச்சி. அதற்கு முந்தைய தேர்தல் வரை வாக்கு இல்லை என்றாலும் திமுகவிற்காக பூத் சிலிப் எழுதும் பணியில் இருப்பேன். வரும் அனைவருக்கும் பூத் சிலிப் கொடுத்து வாக்கு கேட்கும் அந்த ஒரு நாள் மிக சந்தோசமாக போகும். 1991 தேர்தலின் போது நான் 9ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் அப்போதே பூத் சிலிப் எழுதிக்கொடுத்துக்கொண்டு இருப்பேன். எல்லோரும் ஓட்டுப்போடுகிறார்கள் நமக்கு எப்படி ஓட்டு போடும் உரிமை கிடைக்கும், வாக்காளன் என்ற தகுதி கிடைக்கும் என்று ஏங்கிய காலம் அது.

இது வரை வந்த அனைத்து தேர்தலிலும் தவறாமல் வாக்களித்துவிடவேண்டும் என்பதில் எள்ளவும் மாற்று கருத்து கிடையாது. 2006 ம் ஆண்டு தேர்தல் எனக்கு மறக்கமுடியாத தேர்தல் காரணம் எங்கள் வாக்குச்சாவடியில் கடைசி ஓட்டு என்னுடையது என்பதால். அது த்ரில்லிங்கான நாள். வாக்குச்சாவடி முடிய முடிய ஒடியாந்து ஓட்டு போட்ட தருணம் அது.

நான் சார்ந்த கட்சிகளுக்கு பரப்புறை ஆற்றுவதில் நிறைய அனுபவம் உண்டு, அதுவும் சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் எல்லாம்  ஊர் சுற்றிய அனுபவங்கள் மிக அதிகம். ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டுரை எழுதலாம் அதில் ஒரு கிளு கிளு அனுபவத்தை இன்று பார்ப்போம்..

1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது எங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தை சேர்ந்தவர் தான் திமுகவில் 12வது வார்டு கவுன்சிலருக்கு நின்றார். எங்கள் அப்பாவும் தீவிர திமுககாரர் என்பதால் அவருக்காக தீவிரமாக பரப்புறை செய்தோம். அப்போது எனக்கு வாக்கு இல்லை என்றாலும் சிலிப் எழுதுவது, வாகனங்கள் மெயின்டேன் செய்வது என்று தீவிரமாக வேலை செய்தேன். 12ம் வகுப்பு முடிச்ச வாலிப வயசு எனக்கு. அப்போது என்னிடம் சரக்கு சாப்பிடும் பழக்கம் எல்லாம் இல்லை, நண்பர்கள் சரக்கடிச்சு அவர்கள் கிளு கிளு கதைகள் சொல்லும் போதெல்லாம் காதை தீட்டி கேட்டுவிட்டு அவர்கள் போதை தெளிந்ததும் அவ்வப்போது கிண்டல் அடிப்பது வழக்கம்.

எங்கள் பிரச்சாரத்திற்காக ஒரு சுவராஜ் மஸ்தா வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள் அதில் முன் பின் ஸ்பீக்கர் கட்டி, பொன்னான வாக்குகளை உதயசூரியனுக்கு போடுங்க என்றும், போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனைப்பார்த்து என்று தீவிர பரப்புறை செய்வோம்.

எங்கள் வேன் எப்போது கழுவ செல்கிறேன் என்று செல்லும் போதெல்லாம் வேனில் ஆட்கள் புல்லாகி வண்டி காவிரிக்கு கழுவ போகும். எனக்கு முதல் 4 நாட்கள் ஒன்றும் புரியவில்லை, சரி சரக்கடிக்க போவாங்க என்று தான் இருந்தேன், எப்ப போனாலும் சரி ஆள் ஆளுக்கு பேசிகிட்டே கிளம்பிடுவாங்க. என்ன செய்யறாங்க என்று கண்டு பிடிக்க ஒரு நாள் அவர்கள் சென்றதும் பின் நானும் நண்பனும் செல்ல, வண்டி ஆற்றின் ஓரத்தில் ஒதுக்குப்புறத்தில் நின்று கொண்டு இருந்தது. என்னடா செய்கிறார்கள் என்று பார்த்தால் உள்ளே நீக்ரோவின் கிளு கிளு படம். அடப்பாவிகளா எங்கிட்ட சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேனே என்றேன்... நீ சின்னப்பையன் இங்க வரக்கூடாதுன்னு தொறத்திவிட்டுட்டானுக படுபாவிப்பசங்க.. எப்ப தேர்தல் பிரச்சாரம் என்றாலும் இது கண்முன்னே எனக்கு ஓடும், அன்று நடந்ததை இந்த தேர்தல் அன்று எங்கள் நட்புக்கள் எல்லாம் பேசி பேசி சிரிப்போம்...

2009க்கு முன் நடந்த தேர்தலில் எல்லாம் தீவிரமாக திமுகவிற்கு பரப்புறையில் ஈடுபட்டு இருப்பேன், அதற்கு பின் நடந்த சில சம்பவங்களால், பெரியப்பாவோடு இணைந்து கட்சியும் மாறி, காட்சியும் மாறிவிட்டேன். இப்போதெல்லாம் போனமா ஓட்டப்போட்டமா வந்தம்மா என்று இருக்கிறேன்... என் ஜனநாயக கடமையாற்ற ஆவலோடு இருக்கிறேன்....


Wednesday, April 16, 2014

அஞ்சறைப்பெட்டி 17.04.2014


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

வணக்கம் வலையுக நண்பர்களே...

அனைவரும் நலமா., நீண்ட நாட்களுக்கு பின் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த தமிழ் புத்தாண்டு அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

.......................................

இந்த பாராளுமன்ற தேர்தல் இதுவரை இல்லாத அளவு இந்த முறை களை கட்டியுள்ளது. கடந்த தேர்தலை விட இப்போது டெக்னாலஜி அதிகம் ஆனதால் முகநூல், டிவிட்டர் என இணையதளங்களும் கலக்குகின்றன. 
பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர் இந்த தேர்தலை சந்திக்க, காரணம் எப்போதும் தமிழகத்தில் இரு முனைப்போட்டி தான் இருக்கும் இந்த முறை அது 4 மற்றும் 5 முனை போட்டி என்று கூட சொல்லலாம். இந்த தேர்தலில் தான் தெரியும் எந்தக்கட்சிக்கு எவ்வளவு வாக்கு வங்கி என்று. கருத்துக்கணிப்பில் ஒரு நாளைக்கு ஒரு கட்சி முன்னிலை என்கின்றனர். அதுவும் குழப்பமான மனநிலையையே உண்டாக்குகின்றது.
இணையதளங்களில் புள்ளிவிபரங்கள் எல்லாம் சொல்லி எங்கள் கட்சி தான் வெற்றி பெறும் என ஆள் ஆளுக்கு சுயதம்பட்டம் அடிக்கின்றனர். கருத்துகணிப்போ, சூறாவளி சுற்றுப்பயணம் என எதை எடுத்தாலும் ஒவ்வொருவருக்கும், ஒருவர் சளித்தவர் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது இத்தேர்தல்.. முடிவுகளுக்காக காத்திருப்போம் மே 3ம்வாரம் வரை...

.......................................

தேர்தல் நாள் அன்று முதல் ஆளாக ஓடி வாக்குச்சாவடியில் 7.10க்குள் எனது வாக்கை பதிவு செய்து விடுவேன். இந்த முறை மிக முக்கிய திருமணம் சென்னையில் தேர்தல்நாள் அன்றே வருவதால் என்ன செய்வது என்று குழப்பத்திலேயே இருக்கிறேன். ஆனாலும் டிக்கெட் எதுவும் முன் பதிவு செய்யாததால் எப்படியும் என் ஜனநாயக கடமையை ஆற்றிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறேன். வீட்டு மக்களே முக்கியமான திருமணம் போயே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.. ஜனநாயக கடமையா?? குடும்பமா?? என்று தவிக்கிறேன்...

.......................................

வீட்டில் குழந்தைகளிடம் பன்னு வாங்குவதே தனி இன்பம், அப்படி வாங்கிய சில பன்கள்...

அப்பா, எல்லாத்துக்கும் பணம் வேணுமா?

ஆமா, தங்கம்....

வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம், இப்ப கோயிலுக்கு போனமுள்ள, அங்க கார் நிறுத்தியதற்கு கூட பணம் கேட்கும் போது நீதானே கொடுத்த??

ஆமா !!

ஏம்பப்பா சாமிகிட்ட என்ன வேண்டுன??

நிறைய சம்பாரிக்கனும், எல்லோருடனும், சந்தோசமா இருக்கனும் வேண்டினேன் !!

சாமிகிட்ட சம்பாரிக்கனும்ன்னு வேண்டிகிட்டு, பூசாரி தட்டுல எதுக்குப்பா காசு போட்டே, இப்படி போட்டுகிட்டு இருந்தா, அப்புறம் எங்க சம்பாரிக்கிறது....?????

இப்படி மாத்தி மாத்தி தினமும் பன்னு கொடுக்கிறான் எம்மவன், தாங்கமுடியல யுவர் ஆனர்....

.......................................  
ஆழ்துளைக்குழாய் செய்தியை கேட்டாவே பயமா இருக்குது, நிச்சயம் எனக்கு மட்டுமல்ல குழந்தை இருக்கும் எல்லா வீட்டுக்கும் இது தான் நிலமை.. ஆழ்துளை குழாய் அமைப்பவர்கள் அன்றே குழாய் இறக்கி மூட அடைக்கவேண்டும், இல்லையேல் சாக்கை கொண்டு நன்கு கட்டி மேலே ஒரு கல் வைத்து பக்கத்தில் பாதுகாப்புக்கு ஒரு ஆள போடனும், இல்லை என்றால் ஊர் ஊருக்கு குழந்தைகள் விழத்தான் செய்யும்... பெற்றோரும் கொஞ்சம் விழிப்புணர்வோடு குழந்தையை கண்காணிக்கனும்....

.......................................  

வெய்யில் அதிகம் அடிச்சா கோலா, பெப்சி எல்லாம் சாப்பிட்டு பந்தா விடும் நண்பர்களை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது..

எப்பவும் மளிகை பொருட்கள் வாங்கும் கடையில் குத்திய கம்பு கூழ் காய்ச்ச ஏதுவாக இருக்கும் கம்பு அரைகிலோ 15 ருபாய்கிக்கு விற்றார்கள், வாங்கி வந்து குக்கரில் வைத்து ஒரு ட்ம்ளர் கம்புக்கு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டேன், கம்பு கூலாகியது அதை ஒரு மண் சட்டியில் ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை வெறும் வயிற்றில் ஒரு சிறு வெங்காயத்தோடு குடித்தேன், தேவமிர்தம் தானாக கிடைக்காது நாம் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும் அந்த அளவுக்கு சுவையாக இருந்தது...

தினமும் மதியம் ஒரு கப் குடித்துவிடுகிறேன்.. பாட்டில் ட்ரிங்ஸ் குடித்து உடம்பை கொடுத்துக்கொள்வது பதில் இது எவ்வளேவோ மேல்...

.............................. 

ரொம்ப நாளைக்கு அப்புறம் நேற்று தியேட்டரில் படம் பார்க்க போனேன்.. தியேட்டரில் கூட்டமும் நிரம்பி இருந்தது மான்கரேத்தேவிற்கு, முக்கியமாக பொடுசுங்க கூட்டம் அதிகமாகவே இருந்தது, நிறைய நாட்களுக்குபின் தியேட்டரில் குடும்பம் சகிதமாக படம் பார்ப்பது அதிகரித்துள்ளது போல. பெரிய பெரிய ஸ்டார்களுக்கு தான் ஓப்பனிங்கில் பயங்கர கைதட்டல் இருக்கும், அந்த கைதட்டல் இப்போது சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருப்பது மிகவும் மகிழத்தக்கது, நிறைய பேர் படம் மொக்கை என்றனர் ஆனாலும் குடும்பத்தினர் அனைவரும் மிக ஆர்வமாக இருந்தால் படத்திற்கு சென்றிருந்தோம்... படத்தில் சதீஸ் காமெடி ரசிக்கும் போல இருந்தது, அவருக்கு ஒரு நல்ல இடம் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்....
 .............................. 

யாரும் கண்ணு வெச்சிடாதீங்க மக்களே...


திருநங்கைகள்

 
திருநங்கைகளுக்காக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். நிறையத் திருநங்கைகள் முகநூலில் நட்பாக இருந்தாலும் அவ்வளவாக யாரிடமும் கதைத்தது இல்லை, ஆனால் எனக்கு நன்கு அறிமுகமானவன் திருநங்கையாக ஆனது தான் என்னில் மிக ஆச்சர்யம்..

என்னுடன் 7 மற்றும் 8ம் வகுப்பு படித்தவன் திருமுருகன் அதற்குப் பின் நான் பள்ளி மாறியதால் அவனைப்பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் ஈரோட்டில் பணிபுரியும் போது பேருந்து நிலையத்தில் குமார் டீக்கடையில் தினமும், ஒரு டீயும் ஒரு வில்ஸ் பில்டரும் அடித்தால் தான் அன்றைய பொழுது சிறப்பாக அமையும் என்பது என் நினைப்பு, கிட்டத்தட்ட 3 வருடம் தினமும் காலை அங்கு தம்மோடு இருப்பேன். எப்பவும் போல வில்ஸ் பில்டர் வாங்கிப் பற்ற வைக்கும் போது தான் அந்தக் கடையினுள் என்னைப் பார்த்து உருவம் ஒன்று மறைவது போல் இருந்தது, அந்தக் உருவத்தின் முன் நின்றவர்கள் திருநங்கைகள்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் திருநங்கைகளைச் சர்வசாதரணமாகப் பார்க்கலாம். அதுவும் மாலை 7 மணிக்கு மேல் அங்கு நிறையப் பேர் சுற்றித்திரிவர். அவர்களுக்காக நிறையப் பேர் காத்தும் இருப்பர், நான் சொல்வது 2003ல் இப்போது எப்படி என்று தெரியவில்லை. பேருந்து நிலையம் எப்போதும் இப்படித்தான் இருக்கும் நாம் தான் கண்டும் காணமலும் போக வேண்டும்.

டீக்கடையின் உள்ள இருந்தவர்கள் என்னைப் பார்த்து சிரிக்க, கடை ஓனர் குமார் என்னய்யா உன்னைப்பார்த்து லைலா ஒளியுது என்றார். லைலாவா யாரு  என்று எனக்குப் புரியவில்லை முதலில், அப்புறம் லைலா வெளியே வந்து, என்னைத்தெரியுதா என்று பேச, டேய் திருமுருகா என்னடா ஆச்சு உனக்கு என்றேன், கண்களில் நீருடன் என் கை பற்றி என் தலைஎழுத்துங்க, நீங்க எப்படி இருக்கீங்க என்ற விசாரிப்போடு எங்க படித்தாய் என்ன வேலை செய்கிறாய் என்ற நார்மல் விசாரிப்போடு விலகினான். அடுத்த நாள் குமாரிடம் விசாரித்த போது பாம்பே போய் எல்லாம் கட் செய்து வந்துவிட்டு இப்போது லைலாவாக மாறிவிட்டான் என்றார். அதற்குப் பின் அவனை நான் பார்க்கவில்லை.

மீண்டும் ஒரு வருடம் கழித்து என் ஊர் திருவிழாவில் கரகாட்டம் ஆட ஒரு திருநங்கைகள் குரூப் வந்துள்ளது என்றனர், அப்போதைய கரகாட்டத்தில் ஆடியவர்கள் எல்லாம் திருநங்கைகளாக இருந்தாலும் ஆட்டம் சூப்பர் என்றனர். கரகாட்டம் என்றாலே என் மனது உடல் எல்லாம் அந்த இடத்தில் தான் இருக்கும் அப்புறத் நான் ஆட்டம் பார்க்காமல் போனால் எப்படி என்று உடனே ஓடி பார்த்தேன் அங்குக் குறவன் குறத்தி ஆட்டத்தைக் கலக்கியது லைலா என்கிற திருமுருகன். எனக்கு என்னவோ போல் இருந்தது என்னடா இவன் இப்படி ஆகிவிட்டானே என்று. அன்றைய ஆட்டம் முடிவில் என்னைப் பார்த்த அவனிடம் பேச முயன்றேன், ஆனால் கண்ணில் நீருடன், எல்லோரும் உன்னைத் தப்பா நினைப்பாங்க என்னிடம் பேச வேண்டாம் போ என்றான்.

மீண்டும் பல நாட்கள் கழித்து அவன் ஊர் வழியாகக் கிரிக்கெட் மேட்ச் ஆட சென்றோம், அப்போது அவன் ஊரில் பயங்கரக் கூட்டம் என்னவென்று பார்த்தால் லைலாவை அவன் குடும்பத்தினர் ஏன்டா இந்த ஊருக்கு வந்தாய் என்று அடித்துத் துரத்தினர், துரத்தியவர்கள் எல்லோரும் அவன் உறவினர்கள் என்பது மிக குறிப்பிடத்தக்கது. அன்று அவனைப்பாத்தபோது நான் மட்டுமல்ல என்னுடம் படித்த அவன் ஊர் பெண்களும் அங்கு இருந்தனர். அனைவரின் கண்களிலும் கண்ணீர் என்கண்களிலும் சேர்த்து தான்.

அதன் பின் அவனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, அவன் ஊர்பக்கம் விசாரித்த போது அப்போது போனவன் தான் இதுவரை இங்கு வரவில்லை என்றும், சென்னையில் இருக்கின்றான் என்று சொல்கின்றனர் வேறு எந்தத் தகவலும் இல்லை.

உச்சநீதிமன்ற இந்தத் தீர்ப்பை பார்த்ததும் அவன் ஞாபகம் தான் வந்தது எனக்கு. அவன் எங்கு இருப்பனோ என்று தெரியவில்லை ஆனால் அவனுக்கும் ஒரு அங்கிகாராம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்...