Showing posts with label உணவகம். Show all posts
Showing posts with label உணவகம். Show all posts

Tuesday, June 17, 2014

சோத்துக்கடை - அவிநாசி ரோடு வடக்கடை

சோத்துக்கடை பகுதியில் வடக்கடை எழுதலாமா? வேண்டாமா? என்று நெடுநாளாக யோசித்து, கடைசியாக இதிலே எழுதிவிடவேண்டும் எனவும், உணவகங்களை பற்றி எழுதும் அனைத்து கட்டுரைகளையும் இனி சோத்துக்கடையில் எழுதுவது என்று முடிவெடுத்துவிட்டேன், நிறைய டீக்கடைகளைப்பற்றியும் விரைவில் எழுதனும்.


அவிநாசி ரோடு வடக்கடை

இந்த வடக்கடைக்கு நாங்கள் வைத்த பெயர் தான் அவிநாசி ரோடு வடக்கடை, கடையின் முதலாளி இந்தக்கடைக்கு பேரே வைக்கவில்லை என்பது தான் இந்த கடையின் ஸ்பெசல்.

எனது அலுவலகத்தின் மிக அருகில் இந்தக்கடை உள்ளது. ஒரு 3 வருடங்களுக்கு முன் மாலை நேர பசி காரணமாக லஷ்மி மில்ஸ் ஜங்சனில் அதிக கடைகள் இல்லை, எங்க போய் என்ன சாப்பிடலாம் என்று யோசிச்சு திரும்பும் போது ஏர்டெல் ஆபிசின் நேர் எதிர்புறம், அம்மன் குளம் போகும் வழிக்கு பக்கத்தில் இடதுபுறம் கூட்டமாக நின்று கொண்டு கையில் தட்டை ஏந்தி சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர், சரி நாமும் போய் பார்ப்போமே என்று ஒரு தட்டை வாங்கி 2 மெது வடைகள் வாங்கினேன், சாப்ட் என்றால் சாப்ட் அப்படி ஒரு மெதுமெதுப்பு, லபக் லபக் என்று உள்ளே போனதே தெரியாமல் போனது. காரம் அதிகம் இல்லாமலும், உப்பு அதிகம் இல்லாமலும் அவர்கள் கொடுத்த தேங்காய் சட்டினியோடு வழுக்கி விழந்தது நாவில் அப்புறம் என்ன மெது வடை மட்டும் 6 உள்ள போய்டுச்சு, கூட்டம் அதிகமானதால் அடுத்த முறை வந்து மற்ற வடைகளை சாப்பிடவேண்டும் என்று கிளம்பிவிட்டேன்..


மீண்டும் நான்கு நாட்கள் கழிச்சு ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் சப்பாத்தி சாப்பிட்டதால் 4 மணிக்கு பசி மீண்டும் வயிற்றை எட்டிப்பார்த்து கிள்ளியது, ஓவராக கிள்ளியதால், யாரையும் துணைக்கு அழைக்காமல் வடக்கடை முன் நின்றேன். கூட்டமும் குறைவாக இருந்ததால் முதலில் கட்லெட் சொன்னேன், கட்லெட் சைஸ் சின்னதாகத்தான் இருந்தது ஆனால் சுவை செம்ம.. அடுத்து வெஜ்ரோல் இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தனர் ஒரு உருண்டையில் எல்லா காய்கறிகளையும் வேக வைத்து அதை அந்த உருண்டையில் வைத்து, எண்ணெய்யில் பொறிச்சு எடுத்து தருகின்றனர், சுடச்சுட வெஜ் ரோல் சாப்பிடும் போது அற்புதமான சுவையால், 1 எல்லாம் பத்த மாட்டிங்குது, குறைந்தது 4 சாப்பிட்டால் தான் "நா" அடங்குகிறது.


அடுத்து பன்னீர் போண்டா, இது பெரும் ஓட்டலில்தான் அதிகம் கிடைக்கின்றது, இதைப்போல சின்ன கடைகளில் இப்போது தான் சாப்பிட்டேன், இதன் சுவையும் செம்ம.. என்ன கடந்த 2 முறையாக சென்ற போது பன்னீர் போண்டா அதிகம் போடுவதில்லை என்று என் "நாக்கை" காய வைத்து விட்டனர்.

சமோசா வழக்கான சுவையில்லாமல் வீட்டில் செய்வது போன்ற சுவை, வாழக்காய் பஜ்ஜி, பருப்பு வடை என ஒரு 7 விதமான வடைகள் போட்டு கொடுக்கின்றனர், குறைஞ்ச பட்சம் 7 வகைகளையும் சாப்பிடும்போது தான் சாப்பிட்ட திருப்தி ஏற்படுகின்றது.



இந்த கடையின் சுவைக்கு காரணம் என்ன வென்று பார்த்தால் இவர்கள் தரமான பொருட்களை உபயோகிப்பதோடு, எண்ணெய் அடிக்கடி மாற்றுகின்றனர், 3 முறைக்கு மேல் எண்ணெய்யை உபயோகிப்பதில்லை என்பதால் சுவை கூடுகிறது. கோவை பக்கம் வருபவர்கள் மாலை வேலையில் பஜ்ஜி, போண்டா சாப்பிட இந்த கடைக்கு நிச்சயம் வரலாம்..

பெயர்: அவிநாசி ரோடு வடக்கடை

இடம்: லஷ்மி மில்ஸ் சந்திப்பில் இருந்து அவிநாசி செல்லும் வழியில் ஏர்டெல் ஆபிசிக்கு எதிரே, கேஆர்எஸ் பேக்கரியின் பக்கத்துல் இருக்கிறது ( மதியம் 12 மணியில் இருந்து ஒருவர் வடை போட்டுக்கொண்டே இருப்பார், 4 பேர் நின்று சாப்பிட்டுக்கொண்டே இருப்பர்)
விலை: எந்த வடை எடுத்தாலும் 7 ரூபாய் மட்டுமே...

Monday, April 28, 2014

சோத்துக்கடை - கிருஷ்ணபவன், சித்தாபுதூர், கோவை


கோவையில் உள்ள சிறந்த சைவ உணவகத்தில் இதுவும் ஒன்று, என்று நிச்சயம் சொல்லலாம், விலையோ மற்ற சைவ உணவகத்தை விட மிக மிக குறைவு என்று தைரியமாக சொல்லக்கூடிய உணவகம். சைவ உணவகத்திற்கு கோவையில் நிறைய உணவகங்கள் உள்ளன, அதுவும் பல இடங்களில் கிளைகளைக் கொண்ட பிரபல உணவகங்கள் நிறைய இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ஈடாக இங்கு கூட்டம் நிறைந்து இருக்கும் என்பது கண்கூட கண்டது.

இந்த கிருஷ்ணபவன் உணவகத்திற்கு 8 வருடமாக நான் வாடிக்கையாளர், திருமணம் முடிந்து கோவைக்கு தனிக்குடித்தனம் வந்த உடன் என் மனைவிக்கு முதன் முதலாக நான் அறிமுகப்படுத்தியது இந்த உணவகம் தான், வீட்டில் சோறு ஆக்கவில்லையா, இருக்கவே இருக்கு கிருஷ்ணபவன் என்று எங்களோடு கலந்த உணவகம்.

வெளியே சிறிய கடை மாதிரிதான் இருக்கும், உணவகத்தின் உள்ளே சென்றால் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு 60 பேருக்கு மேல் அமரக்கூடிய அளவில் இருக்கும் உணவகம், ஒரு மேற்பார்வையாளர் அனைவரும் உட்கார இடவசதி செய்து கொடுப்பார், இடம் இல்லாதவர்களை அமர வைத்து முன் வந்தவர்களுக்கு இடம் ஏற்பாடு செய்து தருவார். இந்த கவனிப்பிலேயே நம்மை முதலில் மனநிறைவாக்கி விடுவர்.

இந்த உணவகத்தில் தட்டுக்களைத்தான் பயன்படுத்துகின்றனர் தட்டுக்கள், கழுவி அதன் பின் சூடாக்கப்பட்டு பின்பு தான் பரிமாற டேபிளுக்கு கொண்டு வருகின்றனர், மிக சுத்தமான முறையில் இருக்கும் டேபிளும், தட்டும் அடுத்து பரிமாறுபவர்கள் அனைவரும் கையில் உறை உடன் தான் காணப்படுவர், மிக சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் இந்த உணவு விடுதி.

சரி உணவுக்கு வருவோம். நான் குடும்பத்தோடு எப்போதும் இங்கு வந்தாலும் முதலில் ஆர்டர் செய்வது மினி இட்லி, காரக் கொழுக்கட்டை, இனிப்பு கொழுக்கட்டை, இடியாப்பம், பணியாரம், பூரி, சேவை, சில்லி கோபி, ரவா ரோஸ்ட் கடைசியாக கம்மங்கூழ். இது தான் எங்கள் ரெகுலர் மெனு, கூட வந்திருக்கும் நண்பர்களைப் பொறுத்து மாறும் மற்ற வகைகள். ஆர்டர் செய்த பின் அதிக நேரம் காத்திருக்கவேண்டியதில்லை 5 நிமிடத்தில் டேபிளுக்கு மினி இட்லி வந்து விடும்.

மினி இட்லி ஒரு குழியான தட்டில் சாம்பாரோடு மிதந்து வரும் உடன் கொஞ்சம் நெய்யும், கொஞ்சம் வெங்காயமும் இருக்கும். தேங்காய் சட்னி, தக்காளி காரச்சட்னி, பொதினா சட்னி, கத்திரிக்காய் சட்னி என்று நான்கு வகையான சட்டனிக்கள் எப்போதும் டேபிளில் இருக்கும், தேங்காய் சட்னி கொஞ்சம் எடுத்து மினி இட்லி, சாம்பார், நெய், வெங்காயம் கலந்து ஒரு துளி நாவில் வைக்கும் போது நல்ல சுவையும் இருக்கும், மீண்டும் அடுத்த எப்ப நாவில் இட்லியை வைப்பார்கள் என்று நா ஏங்கும் அளவில் இருக்கும் சுவை. இரண்டு நிமிடத்தில் மினி இட்லி சாம்பார், சட்னி எல்லாம் கலந்து உள்ளே சென்று விடும். அந்த சுவையை மறக்க கொழுக்கட்டை சாப்பிட்டு நாவை அடுத்த சுவைக்கு தயாராக வைக்கவேண்டும்.

கொழுக்கட்டை காரம், இனிப்பு என இரண்டு வகையில் கிடைக்கும் நல்ல தரமாகவும், சுவையாகவும் இருக்கும். அடுத்து இடியாப்பம் வந்தது கூடவே தேங்காய்ப்பால், காரக்கடலை குழும்பு, தக்காளி சாஸ் உடன் வந்தது. வந்த சுவடே தெரியாமல் கரைத்தது என் நாக்கு. அடுத்து வந்த ரவா ரோஸ்ட்க்கு அவர்கள் கொடுக்கு நான்கு வகையான சட்டினி மற்றும் சுவையான சாம்பாருக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும் நம் நாக்கு. இங்கு தினமும் ஒரு வகையான சேவை உண்டு, நான் சாப்பிட்டது லெமன் சேவை அதிக புளிப்பும் இல்லாமல், காரமும் இல்லாமல் லெமன் சுவையுடன், சாம்பரும் சேர்ந்ததால் சுவையில் சொக்கிப்போனது என் நாக்கு. 

கோபி சில்லி மற்ற இடங்களில் சாப்பிடுவதை போல இருக்காது, அதன் சுவையும் நன்கு இருக்கும், இது இல்லாமல் கோதுமை தோசை, ராகி, கம்பு, சோளம் என வித விதமான தோசைகள், அடை அவியல் என் ஒவ்வொன்றும் கிராமத்து வீட்டுச்சுவையுடனே இருப்பதால் இந்த உணவகம் ஒரு ஸ்பெசல் உணவகமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த உணவகத்தில் எதை சாப்பிடாமல் விட்டாலும் கம்மங்கூழ் மட்டும் சாப்பிடாமல் வரக்கூடாது அம்புட்டு சுவை. கம்மங்கூழுடன் கொஞ்சம் வெங்காயம், ஒரு மோர் மிளகாய், ஒரு வடு மாங்காய் என நம்மை திணடிக்கின்றனர் அவர்களது சுவையான உணவுகளால்.

கோவை வந்தால் இரவு சாப்பிடுவதற்கு நல்ல சைவ உணவகம் வேண்டும் என்றால் தைரியமாக செல்லலாம் கிருஷ்ண பவனுக்கு. இங்கு நீங்கள் செல்லும் போது கடையின் வெளியில் நிற்கும் கார்களைப்பார்க்கும் போதே தெரியும் இந்த கடையின் வாடிக்கையார்களைப்பற்றி. அடுத்து மாலை நேர உணவகம் என்பதால் 7 மணி முதல் 11 மணி வரை செயல்படுகிறது. 8 மணிக்கு பின் எப்போது போனாலும் க்யூவில் நின்று தான் சாப்பிடவேண்டும். அம்புட்டு கூட்டம் இருக்கும், அங்கு இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது தான் தெரியும் யார் வீட்டிலும் சோறு ஆக்குவதில்லை என்று.

பெயர்: ஸ்ரீ கிருஷ்ணா டிபன் ரூம்
இடம்: மகளில் பாலிடெக்னிக்கில் இருந்து இராமகிருஷ்ணா மருத்துவமனை செல்லும் வழியில் பெருமாள் கோயில் முன்புறம்.
விலை: மற்ற உயர்தர சைவ உணவகத்தை விட மிக குறைவுதான். அனைத்து தரப்பு மக்களும் சாப்பிடும் விலை தான்...

Tuesday, February 4, 2014

சோத்துக்கடை - டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை..


கோவையில் உள்ள பழமையான ஊர்களில் ஒன்று பேரூர். கோவையைச்சுற்றிப் பார்ப்பவர்கள் பட்டியலில் நிச்சயம் பேரூர் இருக்கும். இந்த ஊரின் எல்லையிலேயே புரதான நகரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் பலகையோடு தான் ஆரம்பிக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் ஆலயம். பேரூர் சாந்திலிங்க அடிகளாரின் மடமும், தமிழ்கல்லூரியும் இங்கு அமைந்துள்ளது இந்த ஊரின் சிறப்பு.

சுற்றுலாத்தளம் அருகில் நல்ல உணவு விடுதி கிடைப்பது அரிது என்பதும் பேரூர்க்கும் பொறுந்தும். நிச்சயம் காலை வேலை தரிசனத்துக்கு வருபவர்கள் நல்ல உணவகம் இல்லை என்று வருத்தப்படுவர். ஆனால் மாலை வேளையில் அந்த பிரச்சனை இல்லை, கோயிலின் பின்பக்கம், சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது டோபாஸ் ஐயர் மெஸ். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடை இயங்குகிறது.

மாலை 4 மணியில் இருந்து கடை இயங்க ஆரம்பிக்கிறது, கோவையில் கும்பகோணம் டிகிரி காபி ஒரிஜினலாக குடிக்க விரும்புவர்கள் நிச்சயம் இங்கு வந்து குடிக்கலாம், அந்த அளவிற்கு சுவையான காபி இங்கு கிடைக்கும். மிக்சர், முறுக்கு போன்ற பலகாரங்களும் ஐயர் வீட்டு முறைப்படியும், அவர்களின் வீட்டு சுவையிலும் இருக்கும். 7 மணிக்கு மேல் சென்றால் முறுக்கு, மிச்சர் கிடைக்காது. அந்த அளவிற்கு பிரபலம்.

மாலை 6 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கிறது சிற்றுண்டி, இங்கு சாப்பிட 7 பேர் அமர்ந்து சாப்பிடும் படியான இடம் மட்டுமே அமைந்திருக்கும், பார்சல் கட்டுவதற்கு மட்டும் 3 பேர் இருக்கின்றனர். இங்கு வந்து ஆர்டர் செய்பவர்கள் மாமி எனக்கு 4 இட்லி, 2 புரோட்டா என்று ஆர்டர் சொல்லிக்கொண்டே இருப்பர். மாமியும் பொறுமையாக அனைவருக்கும், பொட்டலம் கட்டிக்கொடுத்துக் கொண்டு இருப்பார். 9 மணிக்கு மேல் சென்றால் தோசை மட்டுமே கிடைக்கும்.

மாலை வேளைகளில் இட்லி, சேவை, பிரியாணி, உப்புமா, புரோட்டா, தோசை, ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட், நெய் ரோஸ்ட், ராவா தோசை என ஆர்டர்கள் பறக்கும். இங்கு கொடுக்கப்படும் சாம்பாரின் சுவையே சுவைதான். தேங்காய் சட்டினி, காரச்சட்டினி, வெஜ் குருமா என அனைத்தும் வீட்டில் சாப்பிடுவது போலவே சுவையாக இருக்கும்.

நான் கடந்த 4 வருடமாக இந்த கடைக்கு வாடிக்கையார், அதாவது இந்த ஏரியா குடி வந்ததில் இருந்து வாரம் இரு முறை இங்கு பார்சல் வாங்கிடுவேன். இட்லிக்கும் இந்த ஐயர் மெஸ் சாம்பாருக்கும் அப்படியொரு சுவை. நான் இட்லியை இந்த சாம்பாரில் மூழ்கடிச்சு கரைத்து சுவைப்பேன் அப்படி ஒரு சுவை இந்த சாம்பார். எப்பவும் பார்சல் வாங்கிவிட்டு சாம்பார் பாக்கெட் எக்ஸ்ட்ராவாக கேட்டு வாங்காமல் வருவதில்லை இன்று வரை.

ஒரு நாள் வீட்டில் எல்லாரும் ஊருக்கு சென்றாதால் அங்கு சாப்பிடச் சென்றேன். இன்று ஆணியன் ரோஸ்ட் ஸ்பெசல் என்றனர், சரி என்று ஒரு ரோஸ்ட்டை ஆர்டர் செய்தேன், கையில் தட்டோடு சாம்பாரை வலிச்சு நக்கிக்கொண்டே காத்திருந்தேன். முக்கோண வடிவில் வந்த ஆணியன் ரோஸ்ட்டை பிச்சு அவர்கள் கடை சாம்பாரில் முக்கி வாயில் துணித்தேன் அவ்வ்வ்... அப்படியே வழுக்கியது தோசை. அளவான உப்பில், புளிக்காத மாவில் நன்கு எண்ணெய் ஊற்றப்பட்ட ஆணியன் தோசை என்னோடு சண்டையிடாமல் வேகமாக உள் இறங்கியது. ஆணியன், கேரட் துறுவல், முந்திரி, திராட்சை போட்டு சுட்டு இருந்தனர். அன்றில் இருந்து இன்று வரை அந்த கடை ஆணியன் ரோஸ்ட்டுக்கு அடிமை நான்.

நெய் ரோஸ்ட், ரவா ரோஸ்ட் அவ்வப்போது சாப்பிடுவேன், புரோட்டாவும் குருமாவும் என் மகனின் பேவரைட். இங்கு பார்சலுக்கு வரும் கூட்டத்தை பார்த்தாலே புரியும் இந்த கடையின் சுவைபற்றி. இந்த ஐயர் மெஸ்  சுகாதாரமாகவும் இருக்கும்.

இந்த மெஸ்சில் விலைப்பட்டியல் நிச்சயம் அதிகமாக இல்லை. வயிறு நிறைய சாப்பிட்டாலும் 60 ரூபாயை தாண்டாது அந்த அளவிற்கு குறைவான விலை, தரமான உணவு நிச்சயம் நம்பி சாப்பிடலாம். எங்கு சாப்பிட்டாலும் அடுத்த நாள் காலை பிரச்னை இன்றி இருக்கவேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருப்போம். நம்பி சாப்பிடலாம் வயிற்றை எந்த பதமும் பார்க்காது என்பது உறுதி.

பெயர்: டோபாஸ் ஐயர் டிபன் சென்டர்

இடம்: பேரூரில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் வலது பக்கம்.

விலை: 2 இட்லி 10, ஆணியன் ரோஸ்ட் 30, புரோட்டா 10

Tuesday, January 28, 2014

சோத்துக்கடை - ஹோட்டல் அன்னலட்சுமி, சத்தியமங்கலம்


ஒரு வருடத்திற்கு முன் சத்தியமங்கலம் வழியாகத்தான் ஒவ்வொரு வாரமும் அந்தியூர், பவானி செல்வேன். இப்போது தேசிய நெடுஞ்சாலை ஒரளவிற்கு சரி செய்ததால் தேசிய செடுஞ்சாலையிலேயே பயணிக்கிறேன். சத்தி வழியாக சென்றாலும் அதிகம் சாப்பிடுவதில்லை வழியில் கிடைக்கும் நொங்கு, பதனீர், கொய்யா என வழியில், சாலையில் விற்கும் பழங்கள் எல்லாம் வாங்கி சாப்பிடுவதுதான் வாகனத்தில் செல்லும் போது உற்சாகமாக இருக்கும்.

ஆசனூர் செல்வதற்காக சத்தியில் கறி வெட்டிக்கொண்டு இருந்தோம், கறிக்கடைக்காரரிடம் இங்கு காலை உணவிற்கு இட்லியும், குடல்கறியும் எங்கே கிடைக்கும் என்று விசாரித்தோம் அவர் அப்படி எல்லாம் இங்கு கிடைக்காதுங்க என்றார், சரி தேடுவோம் என்று ஒவ்வொரு இடமாக விசாரிக்க ஆரம்பித்தோம்.

காலை உணவுகள் அதிகம் இட்லியாகத்தான் இருக்கும் அநேக வீட்டில், ஞாயிறு அன்று மட்டும் அசைவம் வைத்து சாப்பிடுபவர்கள் சிக்கன் அல்லது கறிக்குழம்போடு சாப்பிடுவர், இட்லிக்கு எத்தனையோ குழம்புகள் சுவையாக இருக்கும் என்று சொன்னாலும் இட்லியும், குடல்கறியையும் அடிச்சக்கவே முடியாது, குடல் கறி பிரியர்கள் அநேகம் பேர் இந்த வரியை நிச்சயம் வழி மொழிவார்கள். அதுவும் குடல் பொறியலை விட குடல் குழம்புக்குத்தான் இட்லியுடன் கலந்தடிக்கும் போது சுவை கூடும். இதற்காகவே வெளியூர் சென்றால் இட்லி குடல்கறி எங்கே கிடைக்கும் என்று ஒரு சுத்து சுத்தி வருவேன் அந்த ஊரை.

நிறைய பேருக்கு அவர்கள் ஊரில் ஹோட்டல் இருக்கிறது என்று தெரியும் ஆனால் அங்கு என்ன நன்றாக இருக்கும் என்றும் அதற்காக நிறைய பேர் அங்கே சாப்பிட வருகிறார்கள் என்று தெரியாது. ஊரின் அருமை ஊர்க்காரர்களுக்கே தெரியாது என்று கூட கூறலாம். இந்த ஹோட்டல் படத்திற்காக நண்பர்களை தொடர்பு கொண்ட போது அப்படியா, அங்க இது பேமஸா என்ற எதிர் கேள்வி கேட்கின்றனர்.

சத்தியமங்கலத்தில் ஒரு ஆட்டோ டிரைவரிடம் விசாரிக்கும் போது அன்னலட்சுமிக்கு போங்க இதே ரோட்டில் என்றார். அன்னலட்சுமி ஹோட்டல் வாசல் வந்தததும் பெரிய கடை, முன்னாடி விசாலமான வாகனம் நிறுத்தும் இடம், ப்ளக்ஸ் போர்டில் அன்னலட்சுமி சைவம், அசைவம் என எழுதி இருந்தது, கடையின் உள்ளே சென்றதும் குடல் ரெடியா என கேட்டேன், அண்ணே குடல் ரெடியாக இன்னும் 5 நிமிடம் ஆகும் ஆனா, தலைக்கறி ரெடி என்றனர். என் கூட வந்த உடன்பிறப்புக்கள் அப்படியா தலைக்கறி என்றால் ஒகே என்று உள்ளே வந்தால் உட்கார இடம் இல்லை. பேருந்து நிலையம் பக்கத்தில் இருப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் தான் அநேகம் பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர் அவர்களின் தினசரி காலை உணவு அங்கேதானாம்.

சிறிது நேரத்தில் இடம் கிடைத்தது வரிசையாக உட்கார்ந்து கொண்டு இட்லி தலைக்கறி ஆர்டர் செய்தோம். ஆளுக்கு இரண்டு இட்லி கூடவே ஒரு சிறிய தட்டு நிறைய க்ரேவியுடன் தலைக்கறி. இட்லியை பிச்சு கிரேவியுடன் தொட்டு நாவில் வைத்தவுடன் அளவான காரத்தில் இருந்தது கிரேவி அப்படியே நாவில் கரைந்தது. எதிர்பார்க்கவில்லை நான் அவ்வளவு சுவையை தலைக்கறி வரமிளகாய், தேங்காய் மற்றம் சிறு வெங்காயம் போட்டு வதக்கி கொடுத்திருந்தனர். முக்கியமாக நன்றாக வெந்து இருந்தது. இரண்டு இட்லிக்கு ஒரு ப்ளேட் தலைக்கறியை காலி செய்தேன். நான் மட்டும் தான் காலி செய்தேன் என்று திரும்பி பார்த்தால் என் சகாக்கள் எல்லோம் காலி செய்தனர்.

மீண்டும் அண்ணே குடல் ஆகிவிட்டதா என்றேன், இரண்டு நிமிடம் பொறுங்க தம்பி, இப்பதான் இறக்கி வைத்துள்ளனர் என்றார். அதற்குள் என் சகா இன்னும் இரண்டு இட்லி ஒரு ப்ளேட் தலைக்கறி என சொல்ல, எனக்கு மீண்டும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது, எனக்கும் அதே போல என சேர்த்து சொன்னேன். மறுபடியும் இரண்டு இட்லிக்கு அந்த ப்ளேட் தலைக்கறியும் சாப்பிட்டாச்சு, சாப்பிட்டு நிமிரும்போது குடல் ரெடி எத்தனை ப்ளேட் என்றனர், இப்ப ஆளுக்கு ஒன்னு என்று ஆர்டர் சொல்லி காத்திருக்கவில்லை சுடச்சுட உடனே வந்தது, ஒரு ப்ளேட் நிறைய குடல் கறி எங்கள் இலையை பதம் பார்த்தது.

குடல் கறியில் நன்றாக வெந்த பின் அதில் மசாலாவை தூக்கலாக சேர்த்து இருந்தனர் மசலாவும், குடலும் நன்கு பிணைந்திருந்தது. அதன்பின் பெரியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பில்லை உடன் பெப்பர் கொஞ்சம் கலந்து குடலோடு சேர்த்து கிரேவியாக கொடுத்தனர். இதற்கும் இட்லிக்கும் உண்டான காம்பினேஷனில் மீண்டும் இரண்டு இட்லி உள்ளே போனது. ஆசானூருக்கு சென்று சாப்பிட இடம் இல்லாமல் இங்கேயே வயிறு நிரம்பியது.

நிச்சயம் சத்தியமங்கலம் பக்கம் சென்றால் சாப்பிட்டு பாருங்க தலைக்கறி, மற்றும் குடல் கறியையும் எப்போதும் மறக்காத சுவை. மீண்டும் சாப்பிட தோன்றும் சுவை. சத்தியமங்கலம் என்றலே வீரப்பன் ஞாபகம் வரும் தற்போது எனக்கு தலைக்கறியும், குடல்கறியும் தான் ஞாபகம் வருகிறது.

ஒரு நபர் எட்டு இட்லி 2 ப்ளேட் தலைக்கறி, 2 ப்ளேட் குடல் கறி சாப்பிட்டால் நிச்சயம் நகர்புறத்தில் 300 ரூபாய்க்கு மேல் தான் பில் வரும். ஆனால் இங்கு மிக குறைவான விலையில் அசத்தலான டேஸ்ட்டில் இருந்தது.

பெயர்:  ஹோட்டல் அன்னலட்சுமி ( சைவம், அசைவம்)
இடம்: சத்தியமங்கலம் ( பஸ்நிலையத்தில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் இடப்பக்கம் உள்ளது
விலை: ஒரு ப்ளேட் தலைக்கறி 40 ரூபாய், குடல்கறி 40 ரூபாய் என மிக குறைந்த விலைதான். 

Monday, January 20, 2014

சோத்துக்கடை - அவிநாசி திருமூர்த்தி டீ ஸ்டால்


சோத்துக்கடை நிறைய எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வப்போது இதுவரை யாரும் அறியாத அதாவது அந்த ஊர்க்கராருக்கே அதன் சுவை தெரியாமல் இருப்பது போன்ற கடைகளை எழுதினால், என்னைப்போல தேடி தேடி சாப்பிடுபவர்களுக்கு மிக பயனாக இருக்கும் அவ்வாறு இருக்கும் கடைகளை மட்டும் பதிவாக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

இன்று நாம் சாப்பிடும் சோத்துக்கடை அவிநாசி திருமூர்த்தி டீ ஸ்டால் & மெஸ் இதன் பெருமை அந்த ஊர்க்கரார்களுக்கே சிலருக்கு தெரியவில்லை என்பது தான் முக்கிய அம்சம். டீ ஸ்டால் என்று தான் அனைவரும் நினைப்பர் ஆனால் உள்ளே என்நேரமும் 20 பேர் உட்கார்ந்து அவர்களின் கையும், வாயும் சண்டை இட்டுக்கொண்டு இருக்கும் என்பதை அறிந்து இருக்கமாட்டார்கள்.

2000ம் வருடம் எனக்கு அறிமுகம் இந்த திருமூர்த்தி டீ ஸ்டால், நண்பர் ஒருவருடன் கோவைக்கு காலையில் நேரத்திலேயே பயணித்துக்கொண்டு இருந்தோம் அவிநாசி வரும் போது காலை உணவை இங்கேயே முடித்துக்கொள்ளலாம் என்றார் சரி என்று இட்லியும், ஆப்பமும் சாப்பிட்டேன் ஏனோ அந்த கடையில் சுவை பிடித்து விட காரில் செல்லும் போது எல்லாம் சாப்பிடும் கடையாகிவிட்டது.

சமீபத்தில் குடும்பத்துடன் சென்றேன், குடும்ப மக்கள் எல்லாம் இந்த கடை அந்த கடை என்று லைட் வெளிச்சம் அதிமாகவும், பளீர் என்று தெரியும் படி உள்ள கடையை கை காண்பித்தனர். கம்முன்னு வாங்க ஒரு நல்ல டீக்கடையை காண்பிக்கிறேன் என்றதும் டீக்கடையா? என்று ஆளாளுக்கு மூஞ்சியை இழுத்தனர்.

அவிநாசி பஸ் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் டெலிபோன் ஆபிசை தாண்டி அரச மரத்துக்கு பககத்தில் காலை 8 மணிக்கு வண்டியை நிறுத்த இடமில்லாமல் தள்ளி நிறுத்தி இது தான் அந்த கடை என்றேன். இதுவா, என்று ஆளாளுக்கு வாயை பிதுக்கினர். வெளியில் பெஞ்ச் போடப்பட்டு அடுத்து உள்ளே போவதற்கு தயாராக உட்கார்ந்திருந்தனர் சில குடும்பங்கள் அடுத்து நாங்கள் போய் நின்றதும் எங்க குடும்ப மக்கள் எல்லாத்துக்கும் என் மேல அம்மூட்டு கோபம்.

அப்போது ஒரு குடும்பம் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து அவர்களின் BMW காரில் ஏறி அமர்ந்தனர். அப்போது தான் வீட்டு மக்களிடம் சொன்னேன் பாருங்க இந்த கடை வாடிக்கையார்களை என்று. அடுத்து எங்களுக்கு இடம் கிடைக்க ஆள் ஆளுக்கு கிடைத்த இடத்தில் உட்கார்ந்தோம் இலை வைத்து தண்ணீர் வைத்த உடன் இட்லி ஆர்டர் செய்தோம். (நிற்க கவனிக்க இட்லிக்கா எங்களை இவ்வளவு தூரம் படிக்க வைத்தாய் என்று தோணிருக்குமே ) இட்லி என்றால் குஷ்பு இட்லியான்னு தான் நம்மாளுக கேப்பாங்க ஆனா அது இல்லீங்க நன்றாக சுடச் சுட நல்ல வெளீர் நிறத்தில் பஞ்சு போல இட்லியை வைத்தனர் கூடவே சட்னியும், சாம்பார் மற்றும் காரச்சட்டினி அட அட இட்லியை எடுத்து சட்னியில் தொட்டு, சாம்பாரில் தொட்டு சாப்பிட்டால் லபுக்கு என்று உள்ளே போகும், போகும் போது அடுத்த துண்டு எப்ப நாக்கிற்கு வரும் என்று நாக்கு நிச்சயம் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும். நான் எப்பவும் இட்லி சட்னி, சாம்பார் மூன்றையும் நன்கு பிசைந்து சாம்பாரை நிறைய ஊற்றி குடுக்கும் ஆள் அதனால் நான் எப்பவும் 7 இட்லிக்கும் குறையாமல் சாப்பிடுவேன்.

அடுத்து தோசை, ஆப்பம் என சிம்பிளான உணவு வகைகள் தான் அவ்வப்போது பொங்கல் இருக்கும் இவை அனைத்துக்கும் அவர்கள் கொடுக்கும் சட்னி சாம்பாரின் ருசியில் நிச்சயம் மனம் குளிர்ந்து தான் போகவேண்டும். அன்று சாப்பிட்டுவிட்டு என் குடும்பத்தினர் இனி ஊருக்கு வரும் போது எல்லாம் வண்டி அவிநாசி போய்ட்டுத்தான் வரனும் என்று அன்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

காலை தான் இப்படி என்றால் இரவு இடம் கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிச்சுத்தான் இடமே கிடைக்கும் அந்த அளவிற்கு கூட்டம் நிற்கும். இரவு மெனுவும் ஒன்றும் பெரியதாக இல்லை இட்லி, தோசை, பொடி தோசை, ஆப்பம், சப்பாத்தி என்று சிம்பிளாகத்தான் இருக்கும் ஆனால் சுவைதான் மீண்டும் அங்கு வரத்தோணும். சின்ன இடம் என்றாலும் சுவையானது என்றால் தேடிப்போவதில் ஒன்றும் தவறில்லை..

பெயர்:  திருமூர்த்தி டீ ஸ்டால்

இடம்: அவிநாசி (புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது)

விலை: மிக மிக குறைவுதான்

படம் நெட்டில் சுட்டது...

Wednesday, January 15, 2014

சோத்துக்கடை - UPM கெடாக்கறி விருந்து



நிறைய தேடித் தேடி சாப்பிடுவேன் வித விதமாக சாப்பிடுவதில் அலாதி பிரியம் எனக்கு ஆனாலும் இது வரை சாப்பாட்டை பற்றியும், மெஸ் பற்றியும் எழுதியதில்லை முகநூலில் நம்ம டைரக்டர் கேபிள் அண்ணன் அவர்கள் தொடங்கிய சாப்பாட்டுக்கடையில் அவ்வப்போது பதிவிடுவேன் அவ்வளவு தான் எனது சோத்துப்பதிவு. நான் கடைகளை பற்றியும், உணவை பற்றியும் பதிவிடாததற்கு மிக முக்கிய காரணம் அங்கு மொபைலில் போட்டோ எடுத்தால் என் ரங்கமணிக்கு பிடிக்காது அதனால் பதிவிடுவதில்லை. 

நான் பதிவிடும் இந்த சோத்துக்கடை ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை பகுதிகளில் மிக பிரபலமானது. ஈரோடு பகுதிகளில் கெடாவிருந்து ஓட்டல்கள் மிக பிரபலம், இன்று இந்த பகுதியில் நிறைய கடைகள் இருக்கிறது அந்த கடைகளுக்கு எல்லாம் முன்னோடி தான் இந்த UPM கெடாவிருந்து சோத்துக்கடை. பெருந்துறையில் இருந்து வரும் போது சீனாபுரத்துக்கு அருகிலும், பெருமாநல்லூரில் இருந்து குன்னத்தூர் வழியாக சீனாபுரம் வரும் போதும் இந்த சோத்துக்கடை இருக்கிறது.

இது கடை அல்ல, ஒரு தோட்டம் இந்த தோட்டத்தின் பெயர் தான் UPM இந்த தோட்டத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் ஒரு பனியாள் ஒருவரோடு நடத்தப்படுகிறது இந்த சோத்துக்கடை மதியம் மட்டும் தான் கெடாவிருந்து காலை, மாலையில் கிடையாது. கெடாவிருந்துக்கு நாம் செல்ல வேண்டும் என்று நினைத்தால் முந்தைய நாள் மாலை அல்லது காலை 10 மணிக்குள் முன்பதிவு செய்யவேண்டும் அப்போது தான் நமக்கு கிடைக்கும் கெடாக்கறி விருந்து.

ஈரோடு மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் ஜவுளி மற்றம் கட்டிட கான்ட்ராக்டர்ஸ் அதிகம் உள்ள பகுதி, திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் அதிகம் இருப்பதால் அவர்களும் அதிகம் தங்களது வாடிக்கையார்களுடன் வருவதால் இந்த UPM கெடாவிருந்து தோட்டம் எப்போதும் கெடாக்கறி விருந்திற்காக உணவு ரசிகர்களின் கூட்டம் நிரம்பி இருக்கும்.

அப்படி என்னதான் சோறு போடுகிறார்கள் இந்த கெடாக்கறி விருந்தில் என்று நானும் நண்பர்களோடு சென்றிருந்தோன் சோறு போடுகிறார்கள் என்றால் முதலில் நிற்பது நானாகத்தான் இருக்கும். அன்று கோபியில் இருந்து நண்பர்களோடு குன்னத்தூர் வழியாக UPM கெடாக்கறி விருந்திற்கு தோட்டத்திற்கு சென்றோம். எளிமையான வரவேற்பில் அசத்தினார் தோட்டத்துக்காரர்.

மதியம் 1.30 மணிக்கு சரியாக சாப்பிட அழைத்தார் எங்களை, அதற்கு முன் சாப்பாடு ஒரு ஆளுக்கு 350 ரூபாய் என்று சொன்னாதால் நிறைய சாப்பிடவேண்டும் என்ற எண்ணமும் நிறைய சாப்பிடுவதற்கு ஒரு 60 ML மட்டும் சாப்பிட்டால் போதுமென்று கொஞ்சாமாக தாகசாந்தி அருந்திவிட்டு வெறும் வயிரோடு போருக்கு (சாப்பிட) தயாரானோம்.

வழக்கம் போல தலைவாழை இலையும், உப்பும் வைத்துவிட்டு பசியை தூண்டினர். பின் தலைக்கறி வைத்தனர் சும்மா சொல்லக்கூடாது 1 கரண்டி தான் வைத்தனர் நன்கு மசால், கொஞ்சம் பெப்பர் போட்டு தூக்கலான மணத்துடனும், நல்ல காரத்துடனும் இருந்தது அடுத்த நிமிடத்தில் வயிற்றுக்குள் சென்று விட்டது. அதில் இருந்த கிரவி என் ஆட்காட்டி விரலால் வழித்து வழித்து நக்கப்பட்டது.

குடல்கறி என்றதும் குடல் மட்டும் வரவில்லை கூடவே இரத்தமும், இதன் இரண்டுடன் சேர்த்து தேங்காய்ப் பூ போட்டு வைத்தனர். குடல் நன்கு வேகவைக்கப்ட்டு இருந்ததால் மெல்லுவதற்கு இதமாக இருந்தது.

நுரையீரல் வறுவல், எலும்புக்கறி, கறிவருவல், ஆட்டு மூளை, கொத்துக்கறி, கோலா உருண்டை என ஆட்டு வகையும், அப்புறம் வந்தது நாட்டுக்கோழி வறுவல், சில்லி சிக்கன், பள்ளிபாளையம் சிக்கன், பெப்பர் சிக்கன் அப்புறம் முட்டை வைத்தனர். இதை எல்லாம் வைத்த பின்தான் பிரியாணி அளவாக ஒரு கப்பில் வைத்தனர்.

பிரியாணி பொன்னி அரிசியில் தனித்தனியாக நெய்யால் உலர்ந்திருந்தது. மசாலா பிரியாணியுடன் ஒட்டவில்லை ஆனாலும் பிரியாணியின் நாவில் இருக்கும். அடுத்து அரிசி சோறு கூடவே கறிச்சாரோடு சதக்கறியும், இவை இரண்டையும் பிசைந்து ஒரு கவளை வாயில் போடும் போது தான் கையில் அரைச்ச குழம்பின் பக்குவம் தெரியும். குழம்பை மட்டும் நிச்சயம் இரு முறை கேட்டு வாங்கி சாப்பிடத்தோன்றும். அடுத்து சோறு உடன் எழும்பு குழம்பு இது கொஞ்சம் தண்ணி போலத்தான் இருக்கும் இதை எழும்பு ரசம் என்றும் கூறுவர்.

சோறுடன் புளி ரசம், ரசத்தை பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் ஒரு சுவை இருக்கும் ஒவ்வொன்றும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடும் படியும் இருக்கும் சாப்பிட்டது ஜீரணம் ஆக புளி ரசம், கடைசியாக எருமத்தயிர் ஒரு கப். இந்த தயிர் சாப்பிட்டால் கொழு கொழு என்று ஆகாலம் என்று சொல்வாங்க, இன்னொன்றும் சொல்வாங்க புல்லா சரக்கடிச்சிட்டு வாந்தி எடுத்து வயிறு, தொண்டை எல்லாம் எரிபவர்கள் ஒரு கப் அடிச்சா போதும் எரிச்சல் பஞ்சா பறந்திடும் என கூட சொல்வாங்க..

முடிவில் வெற்றிலைபாக்கு கொடுத்து விருந்தை முடிச்சிடுவாங்க. 350 ரூபாய்ககு இத்தனை வகையான உணவுகள் நிச்சயம் கிடைக்காது, அப்படியே கிடைச்சாலும் அது குடலை பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும் இது எல்லாம் கறிவிருந்தில் இருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம் இங்கு செய்யப்படும் மசாலாக்கள் அம்மிக்கல்லில் அரைச்சி குழும்பு வைக்கின்றனர் என்பது தான் இந்த ருசியின் ரகசியம்.

நிச்சயம் அனைவரும் சாப்பிடவேண்டிய உணவகம், இன்று இதே போல் ஈரோட்டைச்சுற்றி நான்கு கடைக்கு மேல் இருக்கு எல்லா இடத்திலும் இதே போல் தான் இந்த கறிசோத்துக்கடை தான் முதலில் ஆரம்பிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு இந்த கடைக்கு நான் சென்று 1 வருடத்திற்கு மேல் இருக்கும் நேற்று நண்பர்களுடன் அளவாடும்போது இங்கு போய் சாப்பிட்டதை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் அந்த ஞாபகத்தில் எழுதிய கட்டுரை இது.

நாளை காணும் பொங்கல் என்று ஒரு சில பகுதியில் சொல்வாங்க ஆனா எங்க ஊரில் கறி நாள் என்று தான் சொல்வோம் அந்த கறிநாளுக்காக இந்த கெடகறிவிருந்து.