Thursday, July 24, 2014

மனம் நிறைந்து சினிமா பார்க்கலாம் இங்கு.

செந்தில், குமரன் தியேட்டர், கோவை

நீண்ட நாட்களுக்கு பிறகு வார நாட்களில் படம் பார்க்க நேற்று வாய்ப்பு கிடைத்தது. வீட்டுக்கு அருகில் இருக்கும் தியேட்டருக்கே போகலாம் என யோசித்த போது நண்பர் பாலாஜி குப்தா செந்தில் தியேட்டருக்கு போங்க பெஸ்ட் ஆக இருக்கும் என்றார். 

வேலையில்ல பட்டதாரி படத்துக்குத்தான் செல்லவேண்டும் என்று என் இன்ஜினியர் மனைவி சொன்னதால் சரி என்றேன். ஊருக்குள்ள இந்த மால்கள் வந்த பின் எப்பவாவது பார்க்கும் ஒரு படத்தையும் மால்களில் தான் பார்ப்போம், டிக்கட்டுக்கு 450, பாப்கார்ன், பப்ஸ், பெப்சி என்று 500, பார்க்கிங்கிற்கு 50 என 3 பேருக்கு 1000 செலவாகிடும். இதற்காகவே எப்போதாவது ஒரு படம் பார்ப்போம்.

நேற்று செந்தில் தியேட்டருக்கு 2 மணி காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்று தான் சென்றேன். Queen circle 85, King circle 80. first class 50 என்று விலைப்பட்டியல் இருந்தது. கவுண்டர் சென்றால் கிங் சர்க்கில் தான் இருக்கிறது என்றனர் அதுவும் 2 டிக்கெட்தான் என்றதும் சரி என்று படத்திற்கு சென்றேன். தியேட்டர் சுத்தமாகவும், அழகாகவும் இருந்தது. படம் போடுவதற்கு முன் திரை அப்படியே மேலே செல்லும், அதை ஈரோடு அபிராமி தியேட்டரில் நீண்ட நாட்களுக்கு முன் பார்த்த ஞாபகம். 

தியேட்டரின் சுத்தம் தான் எப்போதும் முக்கியம், அந்த சுத்தத்தை அந்த தியேட்டரில் பார்த்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. முக்கியமாக கழிப்பறை மாலைகளில் உள்ள கழிப்பறைகளை விட மிக சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுவதில் மகிழ்ச்சி. தியேட்டருக்குள் உச்சா வந்தால் அந்த கப்பிற்காகவே உச்சாவை அடக்கி வந்து காலமெல்லாம் எங்க ஊர் தியேட்டரில் படம் பார்க்கும் போது நிகழ்ந்தது உண்டு.

மிக முக்கியமாக  திண்பண்டங்கள், நிச்சயம் நிறைய பேர் மால்கள் மற்றும் பிற சினிமா தியேட்டருக்கு சென்று, திண்பண்ங்களை வாங்கும் போது மனசு நிறைஞ்சு பணம் கொடுத்திருக்கமாட்டோம், நான் மட்டுமல்ல இங்கு நிறைய பேர் கொடுத்திருக்க மாட்டீங்க, ஒரு பெப்சி 60 ரூபாய், ஒரு பாப்கான் 125 சொல்கிறான் என்று மனதார திட்டிகிட்டுத்தான் வாங்கி இருப்போம், அதில் படத்துக்கு செல்லும் போதோ நம்ம பைய அவர்கள் வாங்கி சல்லடை போட்டு தேடும் படலம் எல்லாம் நடக்கும். இதை எல்லாம் சகிச்சிகிட்டு தான் நாம் படம் பார்க்கிறோம் இல்லை என்று யாரும் மறுக்க இயலாது.

ஆனால் இந்த தியேட்டரில் பாப்கான் 15, ஐஸ்கிரீம் 15, பப்ஸ் 12, காபி 10 என அனைத்து பொருட்களும் 15 ரூபாய்க்கு மேல இல்லீங்க இது தான் ஆச்சயர்மான உண்மையும் கூட. எதோ ஒரு தியேட்டரில் பப்ஸ் 50 ரூபாய்க்கு வாங்கி திட்டிகிட்டே திண்ணு அனுபவம் உண்டு. ஆனால் நேற்று பாராட்டிகிட்டே சாப்பிட்டேன். படம் முடிந்த பின் அந்த ஸ்கிரீனை கீழே இறக்கியது அந்தநாள் ஞாபகத்திற்கு கொண்டு போய்விட்டது..

சுத்தமாகவும், சுகாதராமாகவும், தரமாகவும், விலைகுறைவாகவும் நிம்மதியாக படம் பார்க்கவேண்டும் என்றால் நம்பி செல்லலாம் இந்த தியேட்டருக்கு...

எல்லா தியேட்டரும் இப்படியே இருந்தா நிச்சயம் மக்கள் விசிடியை தேடாமல் தியேட்டரை நோக்கி படை எடுப்பார்கள்...



Friday, July 18, 2014

எடுறா இரண்டாயிரம் ரூபாயை...

அலுவலக இடைவேளை நேரத்தில் செல்போனை கையில் பிடிச்சு செவுத்தில் சாய்ந்து, கிடைக்கும் 5 நிமிடத்தையும் உச்சா கூட போகாம நேரத்தை பயன் படுத்துகின்றனர் நம் ஆட்கள். அவர்கள் பேசுவது அவர்களின தனிப்பட்ட உரிமை தான் இதை நீங்களும் நானும் கேட்டா, போட கேனப்பையான்னு திட்டத்தான் செய்வானுக.

இப்படி அடிக்கடி அலுவலகத்தில் ஓதுங்கி பேசும் ஒருவனைப் பார்ப்பேன், அவன் பக்கத்து அலுவலகம் தான், ஆனாலும் அவ்வப்போது அவன் கொஞ்சி, அழுது பேசுவதை நான் கொஞ்சம் ரசிச்சு பார்த்து, சின்ன ஸ்மைலியோட சென்று விடுவேன்.

6 மணிக்கு அலுவலகத்தை விட்டு ஓடும் ஆட்களில் நான் முதல் ஆள். வண்டிய எடுத்து தலைக்கவசத்தை அணியும் போது, அந்த பையன் போனை எடுத்து, தலைக்கவசத்தின் உள் வைத்து பேசிகிட்டே சென்றான். ஏந்தம்பி பேசிகிட்டே வண்டிய ஓட்டுகிறாய் என்று யார் கேட்கமுடியும், கேட்டா போட வெண்ணெய் என்பான்.

2 நிமிடத்திற்கு பின் எப்பவும் போல என் வீட்டுக்கு செல்ல ஆயுத்தம் ஆனேன். சில நாட்களாக சாரல் மழையாக இருந்த கோவையில் நேற்று தான் சூரியன் எட்டிப்பார்த்தது. அப்படியே அலுவலக கேட்டிற்கு என் யமாஹாவைக் கிளப்பி வந்து நின்றேன். பக்கத்தில் இருந்த பள்ளி மாணவிகள் எல்லாம் அவர்களுக்கு பிடிச்ச தோழிகளோடு சிரித்து சிரித்து கூடவே தலைக்கவசத்துடன் இருந்த என்னையும் நமட்டு சிரிப்பு சிரிக்க வைத்தனர்.

சிங்கத்தை சிலிப்பி வண்டியை முறுக்கினேன், எங்கிருந்தோ சைக்கிளில் வந்த ஒருவன் அந்த பெண்களை கடக்கும் போது கையை நீட்டினான் அந்த பெண் லபக் என்று வாங்கி பள்ளி பாட மூட்டையில் திணித்தாள்.. ஆஹா 2014லிலும் காதல் கடுதாசி கொடுத்து காதலிக்கிறானே என்று மிக ஆச்சர்யம். அந்த காதலை வாழ்த்த வேண்டும் போலத்தான் இருந்தது. இந்த காதல் கடிதத்தை நானும் நிறைய எழுதி, நிறைய பேர்க்கு கொடுத்திருந்தாலும் ஒருத்தியும் என்னை காதலிக்கவில்லை என்பது தனிக்கதை. இந்த பேஸ்புக், டிவிட்டர், செல்போன் கலாச்சாரத்தில் காதல் கடிதம் என்பது நிறைய மகிழ்ச்சியை தந்தது. வாழ்க அந்த கடிதக்காதல்.

மீண்டும் சிங்கத்தை சிலிப்பி எஸ்என்ஆர் காலேஜ் தாண்டி பாப்பாநாயக்கன் பாளையத்திற்கு வண்டியை திருப்பினேன், மகன் வந்திருப்பான் அவன வீட்டு பாடம் எழுத வைக்க இன்னிக்கு என்ன பொய் சொல்லாம் என்று யோசிச்சிகிட்டே வந்தேன். சில முக்கிய முடிவுகள் இப்படித்தான் எடுக்க முடிகிறது. தனியோ யோசிச்சுகிட்டு போற ஒரே இடம் பயணம் தான். கவனத்தை சிதறவிடாதே, அப்புறம் நீ சிதறிவிடுவாய் என நீங்க நினைக்கறது புரியுது, எப்பவும் 40க்கு மேலே எண் சிங்கம் சீராது, சீரவும் விடமாட்டேன் அப்படி ஒரு கட்டுப்பாடு.

சிங்கம் திரும்பியதும் வேகத்தடைக்கு பக்கத்தில் நிறைய கூட்டம், நமக்குத்தான் ஊராம் வீட்டு விசயம் என்றால் மூக்க தூக்கிட்டு போய் அது என்ன நாத்தம் என்று பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராதே. வண்டியை நிறுத்தி இறங்காமல் வேடிக்கை பார்த்தேன், ஓர் அழகான ஆண்டி வந்து என் முன் நின்றது, அதன் முடி முட்டியை தாண்டி நின்றதால் ஒரு நிமிடம் சண்டையை விட்டு விட்டு ஆண்டடிய பார்க்க ஆரம்பித்தேன். தலைக்கவசத்தை கழட்டி ஆண்டடியிடம் பேசி விட வேண்டும் என்று கழட்டும் போதே அந்த ஆண்ட்டி அந்த குழந்தை மேல தான் தப்பு, இவுங்க விடாம சண்டை போடுறாங்க பாருங்க என்றதும், ஆஹா இது தான் சாக்கு என்று அப்படீங்களா என்று கதை கேட்ட ஆரம்பித்தேன், ஆண்டியின் நீள முடியை ரசிச்சபடியே..

இருசக்கர வாகனத்தில் மெதுவாகத்தான் வந்திருக்கிறான், வேகத்தடை இருந்ததால் மெதுவாகத்தான் வரமுடியும், வேகமாக வர வாய்ப்பு இல்லை, ஒளிஞ்சு விளையாட்டு விளையாடிய பாப்பா ஓடி வந்து வண்டிக்குள் விழுந்து விட்டது இது தான் மேட்டர். அந்த பெண்ணுக்கு கையில் சிராய்ப்புடன் கூடிய காயம் மட்டுமே பட் 2000 கொடு இல்லை என்றால் வா ஆஸ்பத்திரிக்கு போகலாம் அந்த ஸ்கேன், இந்த ஸ்கேன் என்று இவர்கள் போட்ட பிட்டில் பையன் திரு திரு என்று விழித்து நின்றான்.

நான் வண்டிய விட்டு இறங்கிய அவன் மேல தப்பு இல்லை என்று சொல்லனும் என்று என் மனசு துடிச்சது, கூட ஆண்டடி வேற இருக்கிறாங்க என் தைரியத்தை காட்டவேண்டும் என்று வேகமாக இறங்கினேன், ஆண்டி வேண்டாம் தம்பி நமக்கேன் வம்பு, அவுங்கள பார்த்தா பணம் வாங்காம விட மாட்டாங்க போல, நாம பொழப்ப பார்ப்போம் என்றது, எனக்கும் அது தான் சரி என பட்டது. நாம நியாயம் கேட்க போய், அவர்கள் நிறைய இருந்தாங்க, நம்மள ரெண்டு வீசினால் நாம் அடிவாங்கி ஓட வேண்டும் என்று  நம்ம ஊர் சராசரி மனது நினைத்தது, வா வீட்டுக்கு போகலாம் என்றும் சொன்னது மனசு, ஆண்டியிம் கிளம்பி விட்டது.. நானும் கிளம்பிட்டேன்..

அப்போது கூட்டத்தில் சத்தமாக கேட்டது உனக்கு வேண்டாம் எனக்கும் வேண்டாம் எடுறா 2000 ரூபாயை....

Monday, July 14, 2014

சோத்துக்கடை - வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை


தேடி தேடி உண்ணும் உணவகத்தில் இந்த கடையும் ஒன்று. நண்பர் ஒரு வர் இங்க போய் சாப்பிடுங்க நிச்சயம் பிடிக்கும் என்றார். சரி என்று சனிக்கிழமை இரவு சாப்பிட சென்றேன். ரேஸ்கோர்ஸ் காஸ்மாபாலிடன் க்ளபை ஒட்டு உள்ள சாலையில் சென்றபோது இடது பக்கம் வளர்மதி மெஸ், கொங்கு நாட்டு சமையல் முறைப்படி என்று எழுதி இருந்தது. காரை கடையின் எதிரில் பார்க் செய்து விட்டு குடும்பத்தோடு உள்ளே சென்றேன். ஒரு 30 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏர்கண்டிசனோடு அமைந்திருந்தது இந்த உணவகம்.
சாப்பிட உட்கார்ந்ததும் மெனு கார்டு கொடுங்க என்றேன், மெனு கார்டு இல்ல சார் எங்க ஸ்பெசல் என்று பிரியாணி, புரோட்டா, முட்டை புரோட்டா, சிக்கன் கறி தோசை, மட்டன் கறி தோசை, பிச்சு போட்ட சிக்கன் பெப்பர் வறுவல், மீன், நெத்திலி மீன் என்று வரிசையாக சொன்னார்.
நான் புரோட்டா, சிக்கன் கறி தோசை, பிச்சு போட்ட சிக்கன் வறுவல், நெத்திலி மீன், ஒரு ரோஸ்ட் என்று ஆர்டர் செய்து காத்திருந்தோன். இரண்டு சின்ன ஜக்கில் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு என்று வைத்தனர். தலைவாழை இலை போட்டு, தண்ணீர் தெளித்து காத்திருந்தேன் சாப்பிடுவதற்கு.

ஆர்டர் சொன்னவைகள் வர சிறிது நேரம் ஆகும் என்பதால் சிக்கன் குழம்பை கொஞ்சம் ஊற்றி, தொட்டு நக்கி பார்த்தேன். மசாலா கையில் அரைச்சிருப்பாங்க போல குழம்பு அதிகம் காரம் இல்லாமல், சரியான விகிதத்தில் உப்பு கலந்து, மசாலா மனம் இல்லாமல் குழம்பு மனத்தில் இருந்தது. ஊர்ப்பக்கத்தில் கையில் அரைச்சி குழம்பி வைக்கும் போது தான் இந்த பக்குவம் வரும், ஆஹா ஒரு கரண்டி குழம்பு உள்ளே போய்விட்டது.
மட்டன் குழம்பும் இது போலவே இருந்தது. உள்ளே ஒரு பீஸ் இருந்ததால் அதையும் சாப்பிட்டு பார்த்தேன், மசாலாவோடு நன்கு வெந்திருந்தது. மசாலாவும் கறியும் நல்ல சுவையில் இருந்தது.
சிக்கன் கறி தோசையும், பிச்சுப்போட்ட சிக்கன் வறுவலும் வந்தது. தோசையின் மேல் முட்டை மற்றும் வெங்காயம், சிறு பச்சை மிளகாய், கொத்தமல்லி தலையோடு சிக்கன் பீசை போட்டு நன்றாக முன்னும் பின்னும் சரியான பக்குவத்தில் சுட்டு கொடுத்திருந்தனர். கொஞ்சம் கூட தீயாமல் இருந்தது. அந்த தோசையை பிச்சு சிக்கன் கிரேவியில் தடவி அப்படியோ நாவில் கொண்டு போய் தோசையை வைக்கும் போது தான் தெரிந்தது அதன் உச்சபட்ச சுவை. நன்றாக ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டதில் 2 நிமிடத்தில் காணமல் சென்று விட்டது சிக்கன் கறி தோசை.
அடுத்து பிச்சு போட்ட சிக்கன் பிரை இதில் நன்கு வேகவைக்கப்பட்ட சிக்கனில் வெங்காயம், பச்சை மிளாகய், கறிவேப்பில்லை கூடவே பெப்பரும் போட்டு நன்றாக பிரட்டி கொடுத்திருந்தனர். தோசையின் நடுவே இந்த சிக்கனை வைத்து அப்படியே குழம்பில் துவட்டி துவட்டி சாப்பிடுவதில் தான் எவ்வளவு சுவை. இதற்காகவே மீண்டும் அங்கே போகனும் போல இருக்குங்க..
நெத்திலி மீன் வறுவல் கொடுத்தனர், மீனை முதலில் சாப்பிட்ட என் மனைவி மீன் வாசமே இல்லை நன்றாக ப்ரை செய்து இருக்காங்க, காரமும் குறைவு என்றதும் மகனுக்கும் கொடுத்தேன் அவனும் சாப்பிட்டு எனக்கு இன்னொன்று என்றான். அடுத்த நான் நெத்திலியை எடுத்து கடிக்கும் போது தான் தெரிந்தது அது புது நெத்திலிமீன் என்றும், மீன் வாடை துளியும் இல்லாமல் சுவையாக சமைத்திருந்தது பிடிச்சிருந்தது.
புரோட்டாவும் நன்றாகவே இருந்தது. மொத்தத்தில் மனசு நிறைய கொங்கு சமையலை சாப்பிட வளர்மதி மெஸ்க்கு போகலாம். மதிய உணவு இன்னும் சாப்பிட்டு பார்க்கவில்லை விரைவி போய் சாப்பிடனும். விலை மற்ற ஏசி உணவகங்களின் விலை போலத்தான் சுவைக்காக தைரியமாக கொடுக்கலாம். நாங்க 3 பேர் சாப்பிட்டதற்கு 425 ரூபாய் ஆச்சு இரவு உணவிற்கு...
அமைவிடம்: ரேஸ்கோர்ஸ் காஸ்மா பாலிடன் க்ளப் பக்கத்து ரோடு மற்றும் போட்டோ சென்டருக்கும் எதிர்ரோட்டில் அமைந்துள்ளது.

Sunday, July 13, 2014

கிளுகிளுப்பான கதை சொல்லி "சொக்கன் தாத்தா"

ஒவ்வொரு ஊரிலும் பல பெரிசுங்கள் ஆலமரத்தடியிலே, வேப்பமரத்தடியிலோ உட்கார்ந்து, ஊர் நாயம், உலக நாயம் பேசும் வழக்கம் எல்லா கிராமங்களிலும்  இருப்பார்கள். இவர்கள் மரத்தடி இருப்பார்கள், பாட்டிகளோ திண்ணையிலும், கிணற்றடியிலும் வெற்றிலை மடித்து வைத்து உரலில் இடிச்சிகிட்டே ஊர் நாயமும், உள்ளுர் கிசு கிசுக்களையும் பேசியே காலத்தை போக்குவார்கள்.

இவர்கள் பேசும் பேச்சில் பல அனுபவங்களும், நிறைய கருத்துக்களும் அடங்கி இருக்கும், என்ன பேசும் போது கொச்சை வார்த்தைகளை நிறைய பயன்படுத்துவார்கள். இப்போது நமக்கு கொச்சை வார்த்தையாக பட்டாலும் அப்போதெல்லாம் அந்த வார்த்தைகளின் மேல் ஈர்ப்பு இருந்ததை மறக்க இயலாது.

அறிவியல் மாற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சி, தொலை தொடர்பு வளர்ச்சி எல்லாம் அதிகரித்து அனைவருக்கும் பாலியியல் கல்வி களைப்பற்றி நிறைய அறிந்து கொள்ள இப்போது ஏதுவாக இருக்கிறது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்னர் ஒருத்தருக்கும் ஒன்னும் தெரியாது, இந்த மாதிரி பெருசுங்கள் எல்லாம் தங்களின் அனுபவங்களை கதையாக சொல்லி சொல்லித்தான் வளர்த்தார்கள் தங்கள் சந்ததியினரை. இவர்கள் சொல்லும் கதைகள் எல்லாம் இன்று நாம் கேட்கும் போது, அட இதுவா என்று தான் கேட்கத் தோணும், ஆனால் அன்று கதை கேட்க பெருசுங்களை துரத்தி துரத்தி இளைஞர்கள் படையெடுத்த காலம் அது.

இப்படி கதை சொல்வதில் எங்கள் ஊரில் பேர் பெற்றவர் சொக்கன் தாத்தா இவரைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும், இருவருக்கு எங்கள் சிறுவயதில் நாங்கள் வைத்த பெயர் கெட்டவார்த்தை தாத்தா. இந்த தாத்தா எங்களை பார்க்கும் போது வாடாக் குஞ்சு மணி, உள் டவுசர் கீது ஒன்னும் போடாமா அப்படியே ஆட்டிக்கிட்டு வர்றாம்பாரு என்று சத்தமாக அவர் பேசும் போது வெட்கமாக அந்த இடத்தை விட்டு ஓடிடுவோம்.

புதுசா கண்ணாலம் ஆன சேகர் அண்ணன் எப்ப பாரு தாத்தாவையே சுற்றி வருவார், நாங்களும் அப்படி என்னடா சொல்லுது இந்த கெட்டவார்த்தை தாத்தா என்று ஒட்டு கேக்க திணறுவோம். ஒரு நாள் கிணற்றுமேட்டில் அவர்கள் உட்கார்ந்து பேச பஞ்சாயத்து திண்ணைக்கு அடியில் படுத்து கதை கேட்கும் போது சொக்கன் தாத்தா பார்த்து விட்டார். உங்களுக்கு எல்லாம் இன்னும் வயசாகனுமடா குஞ்சாண்டிகளே என்று அவர் கத்த, நாங்க எஸ்கேப்.

வயது ஆக ஆக எங்களுக்கும் பெண்கள் மேல் ஈர்ப்பு இருக்கும் ஆனால் சைட் அடிக்க பயந்து தலைய குணிந்து மாட்டை ஓட்டிகிட்டு போய்டுவோம், ஆனால் தாத்தாவோ பெண்களை கண்டால் என்ன கொமுரி சமைஞ்சுட்டா போல, வெட்கத்தை பாரு என்று சத்தமாகவே கிண்டல் செய்வார். இதற்கு பின் தான் சொக்கத்தாத்தாவை நண்பராக்கி அவரிடம் கதை கேட்க ஆரம்பித்தோம்.

மங்குனி, கிங்குனியில் ஆரம்பித்து ராஜா ராணி கதைகள் என பல பாலியியல் கதைகளை சொல்வார். ஒவ்வொரு கதையின் முடிவில் வெட்கம் இருந்தாலும் அதில் பின்னப்பட்ட விசயங்கள் நிறைய இருக்கும். 

புருசன் பொஞ்சாதி, மாமனார், மாமியார், அத்தை  என ஒவ்வொரு உறவுக்கும் ஒரு கதை சொல்வார். புருசன் பொஞ்சாதி பிரச்சனைகளையும், அவர்கள் தப்பு செய்த போது எப்படி சமாளித்தார்கள் என்று பாலியில் கலந்து அவர் சொல்லும் கதைகள் நிறைய மணதில் ஓடுகின்றன. ராஜா ராணி கதைகள் தான் எப்போதும் செம்ம சூடா இருக்கும். அண்ணன் தம்பி கதைளில் சொத்துக்காக அவர்கள் செய்யும் திருட்டுத்தனத்தை நிறைய சொல்வார், அவர் சொன்னதில் "மங்குனிக்கு மங்குனியும் கெட்டு, கிங்குனிக்கு கிங்குனியும் கெட்டு, போதக்குறைக்கு வாயும் கெட்டு" என அவர் சொல்லும் போது எங்கள் சிரிப்புச்சத்தம் பக்கத்து ஊருக்கு கேக்கும்.
ஒரு நாள் கோயிலுக்கு போய்ட்டு வந்தேன் தாத்தா திருநீறு எடுத்துக்கோ என்றேன், எந்த கோயிலுக்கு என்றவரிடம் பவானி கூடுதுறைக்கு என்றேன். அங்கு இருக்கும் சிற்பங்களை எல்லாம் பாத்திருக்கிறாயா என்றார், எங்க தாத்தா எங்கப்பனும், ஆத்தாலும் தலையில் தண்ணிய தெளிச்சிகிட்டு, அந்த அர்ச்சனை, இந்த அர்ச்சனை என்று கோயிலில் என்னை கைய எடுத்து கும்பிடச்சொல்லி நச்சு நச்சுன்னு நச்சுங்கறாங்க...

அட போடா போக்கத்தவனே, அங்க நிறைய கண்ணாலம் ஆன புது புது சோடிகள் எல்லாம் வருவாங்களே, ஆமாம் தாத்தா நிறைய இருந்தாங்க என்றதும், அட அவுங்க எல்லாம் சாமி கும்பிட்டுட்டு அப்படியே, அங்க இருக்கும் சிற்பத்தை பார்க்கவந்தவங்க என்றும், அடுத்த முறை போய் ஒவ்வொரு சிற்பமாக பாருடா எங்குஞ்சாமணி, ஒவ்வொன்றும் ஓர் கதை சொல்லும் என்பார்.

தனியா போனா எப்படி என்று கூட்டாளிகளோடு கோயிலுக்கு சென்று அங்குள்ள சிலைகளை பார்த்து எங்களுக்கு தெரிஞ்ச விளக்கத்தை அப்போதைக்கு விளக்கி கொண்டோம். நாங்கள் ஒவ்வொருத்தனும் படிச்சு வெளியூரு வேலைக்கு போனாலும் சொக்கன் தாத்தாவை நினைச்சாலே மனசு செம்மையாக சிரிக்கும். நண்பர்கள் திருவிழா சமையத்தில் சரக்கடிக்க ஒன்னு சேரும் போது சொக்கன் தாத்தாவின் பேரனை கலாய்ப்பது வழக்கம்.

கண்ணாலம் ஆன புதிதில் சொக்கன் தாத்தா வீட்டுக்கு சென்றபோது என் பொஞ்சாதிய இருக்கும் போது சிலை சிலையா பார்த்தபையன் என்று கலாய்த்து அனுப்பினார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் சொக்கன் தாத்தாவின் பேரன் போன் செய்தான், தாத்தா  94 வயதில் சாமிகிட்ட போய்ட்டாருடா, ரெண்டு நாள் ஆச்சு இன்னிக்குத்தான் காரியம்டா, தகவல் சொல்லாம்ன்னு கூப்பிட்டேன், உங்க அப்பாவும், அம்மாவும் வந்திருந்தாங்கடா அப்படியே நம்ம பசங்களுக்கு சொல்லிடுடா என்று போனை துண்டித்தான்.

இரண்டு நாட்களாக அவர் நினைவுதான். கிராமத்தை பொறுத்த வரை எல்லா தாத்தாவும் நம் தாத்தாக்கள் தான் சொந்த தாத்தாவை விட மற்றவர்கள் தான் மிக கிண்டலும் கேலியுமாக இருப்பார்கள். இந்த சொக்கன் தாத்தா அவர் மட்டுமா போனார், அவரின் நினைவுகள், பல பாலான கதைகள், அந்த கிராமத்தின் மண்ணை அறிந்த அந்த மகராசன் போனபோதே, அவரின் நினைவுகளையும், கதைகளையும் கொண்டு போய்ட்டார். இன்னும் இருப்பதோ சில தாத்தாக்கள் தான் அவர்களிடம் உள்ள கதைகளும் சீக்கிரம் அவர்களுடனே போய்விடும்....