Thursday, December 29, 2016

Service Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...

எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று தான் வாய்ப்பு கிடைத்தது. உடனே வண்டியை சர்வீஸ்க்கு விட்டேன். சர்வீஸ் சூப்பர்வைசர் 2000க்குள் செலவு வரும் சார் என்றார். கையில் பணம் இல்லண்ணே கார்டுதான் போடனும் என்று கூறினேன். அப்ப தலைமை அலுவலகத்தில் தான் சார் கார்டு போடனும், சர்வீஸ் சார்ஸ் போடுவாங்க கேட்டுக்குங்க என்றார். சரிங்க என்று சொல்லி வண்டியை விட்டு விட்டு வந்துவிட்டேன்.
மாலை வண்டியை எடுக்க சென்றேன் பில் தொகை 1850 சார், நீங்க தலைமை அலுவலகத்தில் கார்டு போட்டுக்குங்க என்று அனுப்பி வைத்தார். தலைமை அலுவகத்திற்கு சென்றேன் பில் தொகை அதனுடன் 1.75 service tax 33 ரூபாய் சேர்ந்து வரும் என்றார் அங்க பில் போட்ட பெண்மணி.
எதற்கு சர்வீஸ் சார்ஜ் அது தான் இப்போது கேஸ்லெஸ் என்ற முறை வந்திருக்கிறது கார்டில் பணம் கட்டினால் சர்வீஸ் சார்ஜ் இல்லை என்று சொன்னார்கள், நீங்கள் சர்வீஸ் சார்ஜ் கேட்கறீர்கள் என்றேன். எனக்கு தெரியாது சார் நீங்க அக்கவுண்டன்ட் சாரைத்தான் கேட்கனும் என்றார்.
அக்கவுண்டன் சாரை கேட்டால் எனக்கு தெரியாது சார், நீங்க மேனேஜரைத்தான் பார்க்கனும் என்றார். சரி என்று இருக்கும் நேரத்தை எல்லாம் வீணாக்கி அவரை சென்று சந்தித்தேன்.
ரொம்ப தெளிவாக நிறுத்தி நிதானித்து பேசினார் மேனேஜர். சார் நாங்க சர்வீஸ் சார்ஜ் போடுவது உண்மை தான் ஆனால் அந்த பணம் எங்களுக்கு வருவதில்லை அது வங்கிக்கு போகுது என்று அவருடைய அக்கவுண்ட் புத்தகத்தை காண்பித்தார் ( வங்கி ஸ்டேட்மெண்டை காண்பித்தால் உண்மை தெரிந்துவிடுமுள்ள) இல்ல சார் இது தவறாக தெரிகிறதே என்றேன்.
நீங்கள் வங்கியைத்தான் கேட்கவேண்டும், வேண்டும் என்றால் நாளை வாங்க வங்கிக்கு சென்று கேளுங்கள் என்றார் அதாவது உங்க பில் தொகை 1850 தான் எங்களுக்கு வரும், சர்வீஸ் வரி வங்கிக்கு போய் விடும் என்றார். நேரம் 8 மணி ஆகிவிட்டது, அதற்கு மேலும் அங்கு பேச மனதில் தெம்பு இல்லை சரி என்று பில் போட வந்தேன்.
சரி அந்த சர்வீஸ் டேக்ஸ்க்கு பில் போட்டு கொடுங்க என்றால் அது வங்கிக்கு போகும் பணம், நாங்க எப்படி பில் போடுவது என்று சார் என்று மறுபடியும் பேசினார். போய்த்தொலையுது என்று பில்லை கட்டினேன்.
நான் பில் கட்ட கட்ட இன்னொருவரும் இதே சண்டையையிட்டார். அவரிடமும் சமாதானம் பேசி, அங்க இருந்து அனுப்பிவிடுவதிலேயே குறியாக இருந்தார் மேனேஜர்.
இந்திய பிரதமர் அறிவித்த பின்பும் சர்வீஸ் வரி பிடிக்கிறார்கள், கேட்டால் வங்கியில் பிடிக்கிறார்கள் என்கிறார்கள் அதற்கும் பில் தருவதில்லை. வங்கியில் பிடிக்கும் பணத்திற்கு நாங்கள் எப்படி பில் தருவது என்கிறார். என்னுடைய சந்தேகம் எல்லாம் இந்த 33 ரூபாய் யாருக்கு போகிறது வங்கிக்கா? இல்லை Orpi Agencyக்கா?.
வங்கி அதிகாரியை கேட்டால் வங்கியில் பிடிப்பதில்லை என்கிறார். Orpi Agency கேட்டால் வங்கிதான் பிடிக்கிறது என்கிறார்கள்..
நான் யாரை போய் கேட்பது. கண் முன்னே என் பணம் கருப்பு பணமாக மாறுகிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது. கேஸ்லெஸ் என்று அதற்காக பல திட்டங்களை போடுகிறார்கள் பல வழிகளை சொல்கிறார்கள் ஆனால் வரி என்ற பெயரில் சிறு சிறு பணமாக நம்மிடம் பிடுங்குகிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆக நம் செய்யும் செலவிற்கு ஒவ்வொன்றிற்கும் வரி கட்டுகிறோம். கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும்...

Monday, June 13, 2016

போகிர போக்கில்...

கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோடு எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை, மேல் தட்டு நடுத்தர வர்க்கம் எல்லாம் இங்கு தான் குண்டூசி கூட வாங்குவார்கள் அந்த அளவிற்கு பிரபலமான, மக்கள் அதிகம் நடமாடும் சாலை, அதுவும் தற்போது 100 அடி சாலையில் வேலை நடப்பதால் இங்கு எப்போது சென்றாலும் ஊர்ந்து தான் செல்ல வேண்டி இருக்கு அந்த அளவிற்கு வாகன நெறிசல்.

சிக்னலில் இருந்து முன்னாடி சென்ற உயர்தர வாகனங்களுக்கிடையே எறும்பு போல ஊர்ந்து சென்றது என் வாகனம், முன்னால் சென்ற பொலிரோவின் புகையால் தத்தளித்தது என் நாசி. இம்புட்டு கூட்டத்தின் நடுவிலே தேடினேன் அந்த பூக்கார அக்காவை. மங்களகரமாக உட்கார்ந்து அவுங்க பூ விற்கும் அழகே தனி. மல்லிகைப்பூ நெருக்கமாக கட்டியவை ஒரு கூடையின் மேலும், கொஞ்சம் லுசா கட்டிய பூக்கள் ஒரு கூடையிலும், துளசி கலந்து பூ ஒரு கூடையிலும், சாதி மல்லிகைப்பூ ஒரு கூடையின் மேலும் அழகாக வரிசையாக அடுக்கி அதன் நடுவே ஒரு பூப்போல அமர்ந்திருப்பார்.

வருபவர்களை வாஞ்சையாக வரவேற்று அவர் பூ அளக்கும் அழகே தனி, தம்பி வாங்க என்ன வேனும் என்று ஒவ்வொன்றின் விலையை அடுக்கி சொல்வோர் நமக்கு வேண்டியதை வாங்கி திரும்பும் போது, தம்பிக்கு புது கண்ணாலம் போல இந்த ரோசவையும் வாங்கிக்க சம்சாரம் சந்தோசமாக வாங்கிக்கும் என்று அங்கேயே வீட்டு நெனப்பை மனம் முழுவதும் பரப்பி விடுவார்.


எனக்கு அவுங்க எப்பவும் சென்டி மெண்ட், அதனால் அந்த சாலையில் பயணிக்கும் போது எல்லாம் பூ வாங்க மறக்கமாட்டேன். இம்புட்டு நெறிசலில் பூ வாங்க இயலவில்லை என்ற வருத்தத்தோடு வண்டியை உருட்டிக்கொண்டே சென்றேன். நான் பொருள் வாங்க வேண்டிய கடை வந்தது ஆனால் வாகனத்தை நிறுத்தத்தான் வழியக்காணம். வரிசையாக நிற்கின்றன இரு சக்கர வாகனங்கள். கடைசியாக ஒரு ஆண்டி தன் ஏக்டிவ்வாவை எடுத்ததும் அந்த இடத்தில் சொருகி நிறுத்தினேன்.

வண்டியில் இருந்து இறங்கி அப்படியே கண்ணாடிய பார்த்து புகைக்கு நடுவில் சிக்கிய என் முகத்தை சிறு துண்டின் மூலம் துடைச்சு கொஞ்சம் என் முகத்தை அழகாக்கி அந்த கண்ணாடியில் புன்னகையை காட்டி நடைய கட்டினேன் நான் செல்லும் கடைக்கு.

பொருளை வாங்கிவிட்டு கடையில் இருந்து காலை வெளியே வைத்தேன், அப்படியே ஒரு கூட்டம் இந்த பக்கம் தள்ளியது, இன்னொரு கூட்டம் எதிர்புறம் தள்ளியது, தள்ளி தள்ளி என் வாகனம் இருக்கும் இடைத்தை தாண்விவிட்டேன், எதிரே திரும்பினால் வழி எங்கும் வாகனங்கள் ஆமையை விட வேகம் குறைவாக நகர்ந்தன, ஸ்ரீதேவியில் இருந்து கூட்டம் இறங்குவதும், உள்ளே நுழைவதுமாக இருந்தது. கால் டெக்சி ஆட்களோ வழக்கம் போல நடுரோட்டில் ஆட்களை ஏற்றி இறக்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது தான் கவனித்தேன் என் வாகனத்தின் அருகே ஒரு டிப்டாப் ஆசாமியை, பார்ப்பதற்கு ஆள் இந்தி நடிகன் போல இருந்தார், ஆனால் இவரை எல்லாம் எங்க ஊர் ஆட்களிடம் காட்டினால் பெட்சீட் விக்கர இந்திக்கார பையனட்டியே இருக்குதும்பாங்க.. ஆம் அப்படித்தான் இருந்தார் ஒரு சாயலில். அவர் வந்து லாயமாக என் வண்டியின் பக்கத்தில் அவரின் பல்சரை நிறுத்திவிட்டு பந்தாவக இறங்கியவரை ஒரு நிமிடம் ஏற இறங்க பார்த்தேன், பின்னாடி பிகர் எதாவது கூட்டிக்கொண்டு வந்தாரா என்று... ம்கும் ஒன்னையும் காணம்.

அதற்குள் இறங்கிய அந்த இந்தி ஆசாமி வேகமாக என் வண்டியின் கண்ணாடியை திருப்பி தலையை வாரு வாரு என்று வாரினார். நீ எல்லாம் ஆல்ரெடி அழகு தான்டா அப்புறம் ஏன் சீவுகிறாய் என்று கேட்க தோன்றியது, வாட்ட சாட்டமா இருக்கிறான் ஒரு வீசு வீசினால் பல்லு 32ம் போய் விடும்மோ என்ற பயந்தான். இருந்தாலும் அவன் வண்டியை விட்டு விட்டு என் வண்டி கண்ணாடியை திருப்பி தலை சீவுபவனுக்கு ஒரு பஞ்ச் வெக்க வேண்டுமல்லாவா??

தலை வாரி முடித்த பின் அவன் திரும்புகையில், சார் இது என் வண்டி தான் என்றேன் தைரியத்தை வரவைத்துக்கொண்டு...

Sorry sir, sorry sir, very sorry sir என்று சொல்லிக்கொண்டே வேகமாக சென்று விட்டான்.. கண்ணாடியை சரி செய்யாமலே... 

தலையில் அடித்துகொண்டு வண்டியை எடுத்து வந்தேன், ஆனால் அவனை எத்தி போட்டு மிதித்துக்கொண்டு இருந்தேன் என் மனதில்...

Tuesday, May 17, 2016

மார்க் முக்கியம் இல்லடா மாக்கானுகளே !!

+2 தேர்வு முடிந்ததும் மார்க் எவ்வளவு, மார்க் எவ்வளவு என்று ஊர்ல போறவன், வர்றவன் எல்லாம் கேள்வியா கேட்டு சாகடிப்பானுக, 1000க்கு மேலே மதிப்பெண் பெற்றவன் எல்லாம் கெத்தா சொல்லுவான், என்னைப்போல 700க்கு கீழே உள்ளவன் எல்லாம் பல்ல மட்டும் தான் காட்டுவோம்.

மதிப்பெண் குறைவா எடுத்தா மதிப்பும் குறைந்து விடுகிறது, அந்த மதிப்பை மீட்க பல காலம் போராட வேண்டி இருக்கு, இந்த மதிப்பெண் சிஸ்டத்தை கொண்டுவந்த அரசாங்கம் இன்னும் அப்படியே இருக்கு..  காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டாமா? இன்னும் மார்க், மார்க் என்று குழந்தைகளை தாளிக்கின்றனர்...
நமது அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இன்னும் கல்வியின் தரத்தில் நாம் குறைவாகத்தான் இருக்கிறோம். நம்ம ஊரில் ஐஐடி யில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவு, இதே ஆந்திர மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஏன் அதிகம், ஏன் குறைவு என்று ஒப்பிட்டு பார்த்து கல்வியை சரி செய்ய இங்கு யாரும் முன்வருவதில்லை..
இன்ஜினியரிங் படிப்பு எல்லாம் தகுதி அற்ற பலர் படித்து விட்டு இன்னிக்கு 5000க்கும், 6000க்கும் ஙே என்று அழைந்து கொண்டு இருக்கின்றனர்.
எனக்கு தெரிந்த ஒரு பையன் 6000 சம்பளத்திற்கு வேலைக்கு படித்த வேலைக்கு போகாமல், செக்கியூரிட்டி வேலைக்கு செல்கிறான், ஏன்டா இங்கன்னு கேட்டேன், இங்க 10000 சம்பளம் அண்ணா அதுவும் இல்லாமல் நிறைய நேரங்களில் படிக்க நேரம் கிடைக்கிறது, அதானல மேல படிக்க உதவும், மற்றும் நேரம் கிடைக்கையில் நேர்முகத்தேர்வுக்கு போகிறேன் என்றான். மகிழ்வாக இருந்தது அவன் சொன்னது. இன்றைய காலத்தில் படித்த வேலைக்குத்தான் போக வேண்டும் என்றால் கடைசியாக திருவோடு தான் மிஞ்சும்.
எத்தனையோ படிப்பு இருக்கிறது, ஆனால் இன்ஜினியரிங் படித்து பராக்கு பார்ப்பவர்கள் நிறைய.
இன்று வந்த +2 தேர்வின் முடிவில் என் சித்தியின் மகன் 705 மார்க் தான் பெற்றான், எனக்கோ மிக மகிழ்ச்சி என்னை விட 30 மார்க் தான் அதிகம் வாங்கி இருக்கிறான் என்று.
இன்ஜினியரிங் சேர்த்தலாம் என்று ஒத்தக்காலில் நின்னாங்க, நான் தான் மண்டைய கழுவி ஆங்கில இலக்கியம் படிக்கட்டும் என்று அவனுக்கு ஆசைய உண்டாக்கி, அதிலேயே சேர விண்ணப்பம் வாங்க அனுப்பிவிட்டேன்.
தயவு செய்து +2 முடிச்ச மாணவச் செல்வங்களை மேலே என்ன படிக்கறீங்கன்ன கேளுங்க, மார்க்கை கேட்டு அவர்களின் மனதை மானபங்கபடுத்தாதீர் !!

மார்க் முக்கியமில்லடா மாக்கானுகளே !!

Monday, February 29, 2016

கையை நீட்டும் முட்டாள் பெற்றோர்கள்...

 
குழந்தையை வளர்க்கும் விதம், அவர்களின் எதிர்காலம் குறித்த கவலை நிச்சயம் பெற்றோருக்கு இருக்கும், இருக்க வேண்டும் அதில் தவறில்லை. ஆனால் குழந்தை இப்படித்தான் செல்ல வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவர்களை நம் கைக்குள் கொண்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல.
அவ்வாறு குழந்தைகளை அடக்க ஒடுக்கும் போது அவர்கள் இயலாமை வரை நம்மிடம் அடங்கி இருப்பார்கள், ஒரு கட்டத்துக்கு மேல் நம்மை அவர்கள் எதிர்க்க தவறுவதில்லை என்பதை நாம் கண்கூட கண்டிருக்கிறோம்.. நான் அவ்வாறு கண்டசம்பவம்....
தினமும் பள்ளிக்கு குழந்தைகள் சரியான நேரத்திற்கு வரவேண்டும் என்பது பள்ளியின் சட்டம், அப்போது தான் அவனுக்கு காலத்தின் அருமை தெரியும். குழந்தை பள்ளிக்கு 8.45க்கு போக வேண்டும் என்றால் நமது வீட்டுக்கும், பள்ளிக்கும் உள்ள இடைவெளி மற்றும் செல்லும் வழியில் உள்ள போக்குவரத்து நெறிசலை கணக்கிட்டு, நாம் முன்னதாக கிளம்பவேண்டும் இது தான் எல்லா வீட்டிலும் வழக்கம்..
நானும் வழக்கம் போல் மகனை பள்ளியில் விட்டு விட்டு, பள்ளியின் வாசலில் பராக்கு பார்த்து கொண்டு இருக்கும் போது, நேரத்திற்கு வராதவர்கள் எண்ணிக்கை தினமும் சிலபேர் இருப்பார்கள். சிறிதி நேரத்தில் பள்ளி காவலர் வந்து கதவை திறந்து உள்ளே அழைத்து செல்வார்.
அன்றும் கொஞ்சம் வித்தியாசமான நாளாக பட்டது எனக்கு, குழந்தையை அதன் அம்மா காரில் வந்து இறக்கிவிட்டார் 10 நிமிடம் தாமதமாக, வழக்கம் போல காவலர் வந்து திறந்தார் ஆனால் அந்த குழந்தை அன்று பள்ளி போக மறுத்தது, ஒரு முறை போ என்று கத்திய அந்த குழந்தையின் தாய் அடுத்து தனது அஸ்திரத்தை எடுத்தார். ஆம் கைகளால் தாக்க துவங்கினார்.
இதை கண்ட எமது நண்பர் ஏன்மா அடிக்கறீங்க? என்று கேட்டார், இது என் குழந்தை விடுங்க நான் பார்த்து கொள்கிறேன் என்றார். நமக்கு ஏன் வேண்டாத வேலை என்று நாங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை தான் பார்த்தோம், வேற வழி..
நான்கு, ஐந்து அடி, அந்த குழந்தையின் தாயின் கண்களில் காளி குடியிருந்தது போல முழி, ஒரு ருத்திர தாண்டவமே ஆடினார், அந்த பொது இடத்தில். நான்கு அடி வாங்கிய குழந்தை அழுது கொண்டே அவள் அம்மாவின் கையில் இருந்த பையை பிடுங்கிக்கொண்டு பள்ளி கதவை நோக்கி நடந்தது.
அந்த கேட் அருகே போய் நின்று, அவள் அம்மாவை நோக்கி நீ அடிச்சிக்கோ, எத்தனை அடிச்சாலும் நான் உள்ளே போக மாட்டேன், நீ தானே என்னை லேட்டா கூட்டி வந்த போய் தாத்தா கிட்ட சொல்றேன் பார் என்று அழுது கொண்டே கத்தியது... இப்போது அந்த அம்மாவிற்கு கோபம் தலைக்கு ஏறி இருந்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல் வாரி அணைத்து கொண்டு, இல்லை இல்லை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றது.
குழந்தைக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று நாம் முடிவு செய்தாலும் அவர்களிடம் கருத்து கேட்க வேண்டும், குறைந்த பட்சம் அவர்கள் சொல்ல வருவதையாவது என்ன ஏது என்று கேட்கவேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்து கை நீட்டுவதை இந்த பெற்றோர்கள் என்று தான் விடுவார்களோ.
நீ அடிச்சுக்கோ நான் போகலை இந்த வார்த்தை எவ்வளவு வீரியமான வார்த்தை, அப்போ அதுக்கு அடிமேல் பயம் இல்லை, எத்தனை அடி அடிப்பாங்க என்று இந்த வயதிலேயே நன்றாக யோசித்து பேசுகிறது. முட்டாள் பெற்றோர்கள் தான் யோசிக்க மறுத்து அடியை மட்டுமே பிரதானமாக கொண்டு குழந்தையை வளர்கின்றனர்..
பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றாலும், குழந்தைக்காக தினமும் ஒரு அரை மணி நேரம் செலவிடுவதில் தவறே இல்லை. நம் வேலையை பார்த்து கொண்டே அவனிடம் பேசலாம், சமைக்கும் போதும், அலுவலக வேலை இருந்தாலும் அதை பார்த்து கொண்டே அந்த குழந்தையிடம் பேசலாம், இதை விட்டு விட்டு எங்க அவனோடு பேசவே நேரம் இல்லை என்று நேரத்தின் மீது தான் பழிபோடுகின்றனர் இங்குள்ளவர்கள்.
 

தினமும் பேஸ்புக்கிற்கும், வாட்ஸ் அப்பிற்கும் ஒதுக்கம் நேரத்தை விட குழந்தைக்கு ஒதுக்கம் நேரம் குறைவாகத்தான் இருக்கிறது.  குழந்தை அடம் பிடிக்கும் போது, அடிக்கிறதை விட்டு விட்டு, எல்லா கோபத்தையும் அடக்கிகொண்டு பேசிபாருங்கள், நிச்சயம் விரைவில் உங்கள் செல்லக்குட்டி, உங்களோடு சிறிதி நேரமே பேசினாலும், அந்த சிறிது நேரம் எப்போது வரும் என்று ஏங்கித்தவிப்பான்...

Monday, February 22, 2016

விதிமுறை என்ற பெயரில், பணம் பிடிக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா....

எல்லாரும் வங்கிக்கு செல்வோம், அங்கு சென்று பணத்தை போடுவோம், எடுப்போம் அடுத்து லோன் வாங்குவதற்காக, லோ லோ என்று அழைவோம் இது தான் என்னை போன்ற கிராமத்தானுக்கு வங்கியை பற்றியான அனுபவம்..

நான் சில வருடங்களுக்கு முன் தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் என் சொந்த ஊரான சித்தாரில் கணக்கை துவங்கினேன். அதில் அப்ப இப்ப என்று 100, 200 ரூபாய் போடுவதும் எடுப்பதும் வழக்கம்.

சம்பளம் மற்றும் இதர லோன்கள் எல்லாம் மற்ற வங்கியில் இருப்பதால் அதன் நடை முறைகள் ஓரளவிற்கு தெரியும், இந்த ஸ்டேட் பாங்கின் நடைமுறை அந்த அளவிற்கு அத்துப்படி அல்ல.

கடந்த இரு மாதங்களாக எனது வங்கி கணக்கில் வீட்டில் இருந்து அப்பா அவ்வப்போது பணத்தை எனக்கு அனுப்புகிறார். அதில் கடந்த மாதம் 2000, 3500, 3000 என்று 5 முறை அனுப்பினார். அதற்கு மேலும் 1000, 2000 மொத்தம் 8 முறை அனுப்பி இருந்தார்.

எப்பவும் இல்லாமல் இன்று ஆன்லைன் அக்கவுண்ட்டை ஒபன் செய்தேன். அதில் 57 ரூபாய் மூன்று தடவை பிடித்தம் செய்திருந்தார்கள். அதுவும் 3500, 2000, 1000 ரூபாய்க்கு தலா 57 ரூபாய். 2000 ரூபாய்க்கு 57 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்று போட்டு இருந்தது.

அடங்கொன்னியா கந்து வட்டி, மீட்டர் வட்டி தான் கேள்விப்பட்டு இருக்கோம் இது என்னடா வட்டி என்று கொஞ்ச நேரம் மண்டை காய்ந்துவிட்டேன். 2000 ரூபாய்க்கு 57 ரூபாய் என்பது எல்லாம் என்னை போல வேலைக்கு போய் சம்பாரிக்கும் அன்றாடங்காட்சிகளுக்கு எல்லாம் ரொம்ப அதிகம். 57 ரூபாயில்  ஒரு நாள் முழுக்க 3 வேளை சாப்பிட்டு விடுவேன்.

சரி என்று அப்பாவை நம்ம ஊர் வங்கி கிளைக்கு அனுப்பு பேச சொல்லாம் என்றால் அவர் உடல் முடியாததால், எப்பவும் பணம் அனுப்பும் தம்பியை அனுப்பினேன். தம்பி துணை மேலாளரை பார்த்து உள்ளார். அவரோ 25000 ரூபாய்க்கு மேலே போனால் பிடிப்போம் என்று சொல்லி உள்ளார். தம்பி எனக்கு போன் செய்து விவரத்தை சொன்னான், 25000 பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அவ்வள இல்லை என்று பதில் சொல்ல சொன்னேன், அவர் இது RBI ரூல்ஸ்ப்பா என்னை கேட்டால் நான் என்ன செய்ய என்று அவர் விலகிவிட்டார்.

அடுத்து அங்கு எப்பவும் உதவும் காசாளர் ஒருவரை பிடித்து விபரம் கேட்டு இருக்கின்றான் தம்பி, அவர் இது வந்துங்க RBI ரூல்ஸ்ங்க 5 முறைக்கு மேல் பணம் அனுப்பினால், 6 வது முறை நீங்கள் அனுப்பும் பணத்திற்கு 57 ரூபாய் சர்வீஸ் சார்ஜாக எடுத்து கொள்வார்கள் என்றார் இதை தம்பி என்னிடம் சொன்னதும்அழைபேசியில் அழைத்து நான் விபரம் கேட்டேன். ஆமாங்க சார் 5 முறைக்கு மேல் பணம் அனுப்பினாலோ, பணம் எடுத்தாலோ 57 ரூபாய் பிடிப்பாங்க இது RBI ரூல்ஸ் என்றார் மறுபடியும்.
சரி அவரிடம் பேசி பயன் இல்லை என்று அழைபேசியை அணைத்துவிட்டேன்.
உடனே எனது கனரா வங்கியின் கணக்கை எடுத்து பார்த்தேன் அதில் 5முறைக்கு மேல் பணம் போட்டு இருக்கேன், ஆனால் அவர்கள் எதுவும் பிடித்தம் செய்யவில்லை அதுவும் சேமிப்பு கணக்கே..
இந்த பிரச்சனையால் எனக்கு பல சந்தேகங்கள்... அவை,,,

எனது கணக்கில், எனது கிளையில், என் பணத்தை நான் 5 முறைக்கு மேல் போட்டால் 57 ரூபாய் பிடித்தம் செய்தால், என்னை போல அன்றாடங்காட்சி எல்லாம் எப்படி பணத்தை சேமிப்பது என்பது தான் விளங்கல.

ஒரு சின்ன கடை வைத்து உழைத்து சம்பாரித்து வங்கியில் சேமிப்பு கணக்கில்  500 ரூபாய் வீதம் மாதம் 10 தடவை போடுகிறார் ஒருவர்., அதில் 5 முறைக்கு 57 ரூபாய் வீதம் பிடித்தம் செய்தால் அப்புறம் எதற்கு அதற்கு சேமிப்பு கணக்கு என்று பெயர்.. அவர் உழைத்து பணம் கட்டுவராம் இவர்கள் விதிமுறை என்ற பெயரில் பிடிச்சுக்குவாங்கலாம்... இதற்கு எதற்கு சேமிப்பு கணக்குன்னு வெச்சானுகன்னு தான் புரியல.

RBI ரூல்ஸ் என்கின்றனர் அப்படி என்றால் எல்லா வங்கிளும் அல்லவா பிடித்தம் செய்யவேண்டும் ( ஒரு வேளை எனக்கு தெரியவில்லையா)

சேமிப்பு கணக்கு தொடங்கினால் இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் என்று, கணக்கு தொடங்கும் போதோ, அதற்கு பின்னாலே பகிரங்கமாக சொல்லலாம் அல்லவா.

எத்தனை கோடி அக்கவுண்ட் இருக்கும், அதில் குறைந்த அளவு மக்களுக்கு கூட இந்த விதிமுறை தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.

அக்கவுண்டில் பணம் எடுக்கும் போதும், போடும் போதும் குறுஞ்செய்தி அனுப்பும் வங்கிகள், பிடித்தம் செய்யும் போது மட்டும் ஏனோ எதுவும் அனுப்புவதில்லை.

நாம் கண்ணுக்கு தெரிந்து பணம் போடுகிறோம், அவர்கள் நமுக்கு தெரியாமலே விதிமுறை என்ற பெயரில் பிடித்தம் செய்துவிடுகின்றனர்.

எனது வங்கி இருக்கும் பகுதி கிராம பகுதி அங்கு பல பேர் பணத்தை போட்டு எடுக்கின்றனர், நிச்சயம் அவர்களுக்கும் பணத்தை பிடித்திருப்பார்கள், நிச்சயம் அவர்களுக்கு தெரிந்திருக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்ற சத்தியம் செய்து சொல்லாம்...

57 ரூபாய்க்கா இந்த குமறல் என்று கூட நினைக்கலாம், நினைத்து பாருங்கள் என்னை போல லட்சம் பேருக்கு பிடிச்சால் எம்புட்டு ஆகும் என்று..

இந்த பணம் பிடித்த புகாரை யாருக்கு, எப்படி அனுப்பவேண்டும் என்று விபரம் அறிந்தவர்கள் கூறுங்கள். என்னால் முடிந்த அளவு கல்லை வீசிப்பார்க்கிறேன்...

Wednesday, February 17, 2016

சோத்துக்கடை: சாய் கபே, அண்ணா சிலை அருகில். கோவை.

தினமும் என் நண்பர்கள் காலை குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு பின் சிறு நட்புக் கூட்டத்தை முடித்து விட்டு அண்ணாசிலை அருகில் உள்ள இந்த சாய் உணவகத்தில் சிம்பிளா காலை உணவை உண்பார்கள்.

நான் சில மாதங்களாக அதிகம் உணவு விடுதியின் உணவை உண்பதில்லை என்பதால் இவர்களோடு அதிகம் சாப்பிட செல்வதில்லை. ஆனால் தினமும் பூரி செம்ம, புட்டும் கடலை குருமாவும் செம்ம, இன்னிக்கு மின்ட் பூரி என தினமும் ஒவ்வொரு மெனுவாக அடுக்கி என் வயிற்றில் பசியை உருவாக்குவார்கள். அதிலும் இந்த குழவில் 75 வயது யூத் ஒருவர் இருக்கிறார் அவர் காபியை பற்றி சொல்லி என் வயிற்றை கிள்ள வைத்து விடுவார்.

சரி என்று நேற்று நண்பர் அசோக் பிறந்தநாள் என்பதால் சாப்பிட வந்தே ஆகவேண்டும் என்று சொல்லி விட்டார். ஏற்கனவே வீட்டில் மூக்கு முட்ட தின்றதால் கொஞ்சம் திணறித்தான் சாப்பிட சென்றேன். இன்றைய ஸ்பெசல் மின்ட் பூரி என்றார்கள். நண்பர்கள் புட்டு கடலை, பொங்கல், கோதுமை உப்புமா, மினி இட்லி, ஊத்தாப்பாம் என ஒவ்வொன்றாக ஆர்டர் செய்ததில், இத்தனையும் திங்க முடியாது சாமி வேண்டும் என்றால் டேஸ்ட் பார்க்கிறேன் என்ற பெயரில் ஒவ்வொன்றையும் ருசி பார்த்தேன்.

சும்மா சொல்லக்கூடாது விலையும் குறைவு, தரமும் நிறைவு. மின்ட் பூரியும் அதற்கு கொடுத்த உருளை மசாலும் செம்மப்பா.. சுடச்சுட பூரியுடன் உருளையை உள்ளே வைத்து கப்புன்னு ஒரு கடி கடிக்கும் போது தான் தெரிந்தது, மின்ட் பூரியும் கிழங்கின் காம்பினேசனின் சுவை. கொண்டக்கடலையும் புட்டும் ஒரு துளி புட்டு, கடலையில் கலந்து சாப்பிட்ட அச்சச்சோ, அருமையோ அருமை.

மினி இட்லியில் நெய்யும், வெங்காயமும் மிதங்க வந்தது, இட்லி, சாம்பார், நெய் கூட வெங்காயம் இவை அனைத்தும் ஒன்று சேர ஒரு வாய் போட்ட பின், இட்லியிலும் சொர்க்கத்தை காண முடிந்தது.

கோதுமை ரவை நன்கு வேகவைக்கப்பட்டு, எண்ணெய் அதிகம் இல்லாமல் நிறைய வெங்காயம் போட்டு இருந்த உப்புமா, இன்னொரு முறை சாப்பிட வைத்தது.

இப்படி ஒவ்வொன்றாக டேஸ்ட் பார்த்து விட்டு கடைசியாக, காபி குடிச்சேன் பாருங்க பில்டர் காபி எல்லாம் எட்ட நிற்க வேண்டும் போல இருந்தது இந்த திக்கான காபி. தண்ணீர் கலக்காத பாலில் போட்டு இருப்பாங்க போல. நிறைவான சுவை...

8 பேர் காலை உணவை சாப்பிட்டு, பின் 1 பை 2 என்ற கணக்கில் காபி சாப்பிட்டும் வந்த பில் தொகை எண்ணவோ 340 தான்.

கோவை அவிநாசி ரோட்டில் பயணிப்பவர்கள், காலை உணவிற்கு தைரியமாக இந்த கடையை தேர்ந்தெடுக்கலாம். சுவையும், தரமும் நன்று.

அவிநாசி சாலையில் அண்ணாசிலையில் இருந்து ரயில்வே ஸ்டேசன் போகும் வழியில் திரும்பியதும் முதல் கடை இந்த சாய் கபே தான். மதிய உணவும், மாலை போண்டா வகைகளும் சூப்பரா இருக்கும் என்றனர் நண்பர்கள். நான் இன்னும் சாப்பிட்டு பார்க்கல விரைவில் அதையும் செய்யனும்..

இனி அடிக்கடி சந்திப்போம் சோத்துக்கடையில்...

Thursday, February 4, 2016

தே.....மு.....

இது ஒரு கெட்ட வார்த்தை தான், இதை நிறைய இடங்களில் பரவலாக பயன்படுத்துவது தான். அதுவும் என்னை போன்ற கிராமத்தான்கள் கோபம் வந்தால் இதைத்தான் முதல் வார்த்தையா பயன்படுத்துவோம். இப்ப எதுக்கு இங்க இந்த வார்த்தை என்றால், சமீபத்தில் மகனுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் உள்நோயாளியாக இருக்கவேண்டி இருந்தது.

பொதுவாக குழந்தைகள் தேமு, காமு, கேபு இது போல வார்த்தைகளை 99.9 சதவீதம் தவிர்ப்பேன். இந்த மருத்துவமனையில் பக்கத்து படுக்கையில் உள்ள ஆட்களை எல்லாம் மகன் வேடிக்கைபார்த்துக் கொண்டு படுத்து இருந்தான், அருகில் நானும்.

எங்களுக்கு எதிர்படுக்கையில் ஒரு நான்கு வயது சிறுவன், அவன் அம்மா நக நாகரீக மங்கை என்பது அவர்களின் உடையிலேயே தெரிந்தது. ஜீன்ஸ், டாப்ஸ், கூலிங்கிளாஸ் என செம்ம பந்தாவாக காட்சியளித்தார். அவர் மகனுக்கு சாப்படு ஊட்ட, அதை சாப்பிட மறுத்த அவன், எடுத்ததும் உபயோகித்த வார்த்தை தே...மு... இப்ப எதுக்கு எனக்கு ஊட்ற என்று கத்தினான். நான் மட்டுமல்ல செவிலியர்கள், மற்றும் அங்கு இருந்த பார்வையாளர்கள் என அனைவரும் கொஞ்சம் அதிர்ந்து திரும்பி பார்த்தோம்.. மீண்டும் அந்த பையன் அப்பா இந்த தே..மு.. என்ன சாப்பிடு சாப்பிடுன்னு தொந்தரவு செய்கிறாப்பா என்றதும், அவன் தந்தை சமாதனப்படுத்தினார்...

இப்ப பிரச்சனையே இதைப்பார்த்த பிரசன்னா தே..முன்னா என்னப்பா என்றான். நானும் அருகில் இருந்த செவிலியரும் பேந்த பேந்த விழிக்க, உடனே சுதாரித்த செவிலியர் டிவியை ஆன் செய்து சோட்டா பீனை போட்டு அந்த வார்த்தையில் இருந்து அவன் கவனத்தை திருப்பினார்..
நாம் என்ன பேசுகிறோமோ அதைத்தான் குழந்தைகளும் பேசுவார்கள், ஆடம்பரமாக உடை அணிந்து, உயர்தரவாகனங்களில் பவனி வந்தாலும் குழந்தைகள் முன் பேசும் போது கவனமாக பேசவேண்டும், இதை பெற்றவர்கள் உணரவேண்டும்..