Thursday, February 6, 2014

பொம்பளப் பேயும் நண்பர்களும்...


தூக்கத்தில் உச்சாப் போவதற்காக, இரவு விழித்த போது தலையில் ' தீ ' உடன் ஆத்துப்பள்ளத்தில் ஓர் உருவம் சென்று கொண்டு இருந்தது. பேயைப்பற்றிக் கேள்விப்பட்ட நான், அன்று தான் பார்த்தேன், பேய் இருப்பது உண்மைதான் என அப்போது தான் அறிந்தேன். அடுத்த இரண்டு நாட்களாகக் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையானேன்.

எங்க ஊரில் இரவு டியூசனுக்குச் சென்றால், காலையில் எழுந்துக் கொஞ்ச நேரம் படித்துவிட்டு வீட்டுக்குக் காலை 6.30 மணிக்குத்தான் வருவோம். வந்த உடன் பள்ளிக்குச் செல்ல நேரம் சரியாக இருக்கும். டியூசனுக்குச் செல்வது என்றால் எல்லோருக்கும் அலாதிப் பிரியம். ஆம், எங்க ஊர் ஓப்பன் தியேட்டரில் போடும் படங்களை அன்று இரண்டாவது ஆட்டம் ( செகன்ட் ஷோவை நாங்க இப்படித்தான் சொல்வோம்) படத்துக்குச் சென்று வருவது வாடிக்கை. இதற்காகவே எப்பப் பெரிய பையன் ஆகி 9ம் க்ளாஸ் செல்வோம் என்று காத்திருப்போம்.

டியூசனில், இரவு தங்கி இருக்கும் போது தான் உச்சாவுக்கு, எழுந்த நான் பேயைக்கண்டேன். காய்ச்சல் நன்றாகிப் பேயைப்பார்த்தேன் என்று விஜியிடம் சொன்னேன். அவன் கேவலமாகச் சிரிக்கிறான். குமாரிடம் சொன்னேன் அவனும் அதே, சுந்தர் தான் கொஞ்சம் பயந்து உண்மைதானே என்றான். ஆம் என்று முழுக் கதையையும் சொன்னதும், அன்று இரவு அனைவரும் தூங்காமல் பேயை எதிர்பார்த்துக் காத்திருந்தோம் மொட்டை மாடியில். வழக்கம் போல அன்று பேய் வரும் போது நானும் சுந்தரும் விழித்திருந்தோம்.

தீ எரிந்து கொண்டு இருக்கிறது, அந்தத் தீ நடந்து வருகிறது, நாங்கள் இருந்த இடத்தில் இருந்து காணும் பொழுதுத் தீ சிறிதுத் தூரம் போய் நின்றது. அப்போது தான் சுந்தர் ஆமாண்டாப் பேய் என்றும், உடனே விஜியையும், குமாரையும் எழுப்பியதில், தூக்கக்கலக்கத்தில் இருந்த அவர்கள் பேயைப்பார்த்து நடுங்கினர், கூடவே நாங்களும். சரி பேய் நாளை வருகிறதா? என்று அடுத்த நாள், காத்திருந்துப் பார்த்தோம். அடுத்த நாளும் வந்தது.

இப்போது தான் நான் சொன்னது உண்மை என்று, அனைவரும் நம்பினர். என்னசெய்யலாம், என்று கிணற்று மேட்டில் அனைவரும் ஆலோசனையில் ஈடுபட்டப் போது பேயை ச்சந்திக்கலாம் என்று முடிவுசெய்தோம். இதற்குத் தைரியமான ஆள் வேண்டும், என்று முடிவெடுத்த போது, பரந்தாமனை அழைக்கலாம் என்று முடிவெடுத்து, அவனை ஆள் விட்டுக் கூட்டி வரச்சொன்னோம். அவன் பேய்யைப் பார்த்தோம் என்றதும், பயங்கரமாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

அன்று இரவு டியூசனில் அவனைத் தங்க வைத்து இரவில் பேய் தீயைக் காண்பித்ததும், தைரியசாலியான அவனும் நடுங்க ஆரம்பித்தான். எல்லோரும் மாரியம்மன் கோயிலில் பூ போட்டுக் கேட்டோம், பேயைச் சந்திக்கலாமா? வேண்டாமா ? என்று, அம்மன் " பூ " சந்தியுங்கள் என்று வந்தது.

பேயை சந்திக்கச் சரியான நாள் பார்த்தோம், சனிக்கிழமை என்று சொன்னார்கள். அதனால் ஒரு சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து அன்று பேய்க்கு "கருப்பு" என்றால் பயமாம், அதனால் எல்லோரும் கையில் "கருப்புக் கயிர்" கட்டிக்கொண்டோம், "செருப்பு" என்றால் பயம் என்றார்கள் எல்லோரும் செருப்பு போட்டுக்கொண்டோம், "சீவக்கட்டையில் அடித்தால் ஓடிவிடுமாம் 2 சீவக்கட்டை எடுத்துக்கொண்டு பேயை சந்திக்க தயாரானோம்". இவ்வளவு பயத்திலும் விஜிக்குமட்டும் ஒரு கிளுகிளுப்பு பொம்பளப் பேயாக இருந்தா, நான் ஒரு தடவை கட்டிப்பிடிச்சிக்கிறேனடா? என்று எங்களை சூடாக்கினான்.

பேயைச் சந்திக்க ஆத்துப்பள்ளத்துக்குச் செல்வதற்கு, அன்று மாலையில் இருந்தே, எந்ந வழியில் போவது, பேய் வந்தால் எப்படி ஒடுவது, என்று எல்லா இடங்களையும் ஆய்வு செய்தோம். அன்று இரவு டியூசன் முடிஞ்சதும் நாங்கள் 5 பேரூம் தயாராக இருந்தோம், மணி 12 ஆகப்போகுது பேய்யைக்காணம், ஆனால் எங்கள் பயம் மட்டும் குறையவே இல்லை. பேய்க்கு கால் இருக்காது, என்றும் அது வெனீர் நிறத்தில் இருக்கும் என்றும் , குலை நடுங்க முழித்திருந்தோம்.

எதிர்பாத்தப்படி பேய் வந்தது. பேய் நடந்து வர வர நாங்களும், மொட்டை மாடியில் இருந்து கீழே வந்து, எங்கள் ஆயுதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஆத்துப்பள்ளத்தை நோக்கி நடந்தோம். பேய் அக்கறையில் போக நாங்க இக்கரையில் நின்றோம். பேய்யை நாங்கள் புல் மறைவில் இருந்து யார்?, முதலில் பார்ப்பது என்று பயந்து கொண்டு இருந்தோம்.

பரந்தாமன் தான் முதலில் பார்த்தான், பார்த்தவன் பேய் அறைந்தது போன்று நின்றான், எங்களுக்கு பயம் தொற்ற. அவன் எங்களை எட்டி உதைத்தான், அடப்பன்னிங்களே. அது பேய்யல்லடா மீன்காரன் சண்முகம் என்றான். எட்டிப்பாத்ததை பார்த்த சண்முகம் என்னங்கடா மீன் வேண்டுமா?  என்ற கேட்க எங்களுக்கு சிரிப்பு கூடவே. பேயைப்பார்க்காத ஏமாற்றம், விஜிக்கோ கட்டிப்பிடிக்க இயலவில்லை என்று வருத்தம்.

அதன் பின் சண்முகத்திடம் பேசும் போது. தான் தெரிந்தது இரவு ஆத்து மேட்டில் கட்டிய வலையில் மீன் இருக்கிறதா? என்று பார்ப்பதற்காக. தீப்பந்தம் பிடித்துக்கொண்டு வருவேன், மீன் இருந்தால் எடுத்து இந்த வலையில் போட்டு விட்டு மீண்டும் காலை வந்து மார்க்கெட் செல்வேன் என்றார். எங்களுக்கோ பேயை பார்க்க இயலாத வருத்தம்...

Tuesday, February 4, 2014

சோத்துக்கடை - டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை..


கோவையில் உள்ள பழமையான ஊர்களில் ஒன்று பேரூர். கோவையைச்சுற்றிப் பார்ப்பவர்கள் பட்டியலில் நிச்சயம் பேரூர் இருக்கும். இந்த ஊரின் எல்லையிலேயே புரதான நகரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் பலகையோடு தான் ஆரம்பிக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் ஆலயம். பேரூர் சாந்திலிங்க அடிகளாரின் மடமும், தமிழ்கல்லூரியும் இங்கு அமைந்துள்ளது இந்த ஊரின் சிறப்பு.

சுற்றுலாத்தளம் அருகில் நல்ல உணவு விடுதி கிடைப்பது அரிது என்பதும் பேரூர்க்கும் பொறுந்தும். நிச்சயம் காலை வேலை தரிசனத்துக்கு வருபவர்கள் நல்ல உணவகம் இல்லை என்று வருத்தப்படுவர். ஆனால் மாலை வேளையில் அந்த பிரச்சனை இல்லை, கோயிலின் பின்பக்கம், சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது டோபாஸ் ஐயர் மெஸ். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடை இயங்குகிறது.

மாலை 4 மணியில் இருந்து கடை இயங்க ஆரம்பிக்கிறது, கோவையில் கும்பகோணம் டிகிரி காபி ஒரிஜினலாக குடிக்க விரும்புவர்கள் நிச்சயம் இங்கு வந்து குடிக்கலாம், அந்த அளவிற்கு சுவையான காபி இங்கு கிடைக்கும். மிக்சர், முறுக்கு போன்ற பலகாரங்களும் ஐயர் வீட்டு முறைப்படியும், அவர்களின் வீட்டு சுவையிலும் இருக்கும். 7 மணிக்கு மேல் சென்றால் முறுக்கு, மிச்சர் கிடைக்காது. அந்த அளவிற்கு பிரபலம்.

மாலை 6 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கிறது சிற்றுண்டி, இங்கு சாப்பிட 7 பேர் அமர்ந்து சாப்பிடும் படியான இடம் மட்டுமே அமைந்திருக்கும், பார்சல் கட்டுவதற்கு மட்டும் 3 பேர் இருக்கின்றனர். இங்கு வந்து ஆர்டர் செய்பவர்கள் மாமி எனக்கு 4 இட்லி, 2 புரோட்டா என்று ஆர்டர் சொல்லிக்கொண்டே இருப்பர். மாமியும் பொறுமையாக அனைவருக்கும், பொட்டலம் கட்டிக்கொடுத்துக் கொண்டு இருப்பார். 9 மணிக்கு மேல் சென்றால் தோசை மட்டுமே கிடைக்கும்.

மாலை வேளைகளில் இட்லி, சேவை, பிரியாணி, உப்புமா, புரோட்டா, தோசை, ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட், நெய் ரோஸ்ட், ராவா தோசை என ஆர்டர்கள் பறக்கும். இங்கு கொடுக்கப்படும் சாம்பாரின் சுவையே சுவைதான். தேங்காய் சட்டினி, காரச்சட்டினி, வெஜ் குருமா என அனைத்தும் வீட்டில் சாப்பிடுவது போலவே சுவையாக இருக்கும்.

நான் கடந்த 4 வருடமாக இந்த கடைக்கு வாடிக்கையார், அதாவது இந்த ஏரியா குடி வந்ததில் இருந்து வாரம் இரு முறை இங்கு பார்சல் வாங்கிடுவேன். இட்லிக்கும் இந்த ஐயர் மெஸ் சாம்பாருக்கும் அப்படியொரு சுவை. நான் இட்லியை இந்த சாம்பாரில் மூழ்கடிச்சு கரைத்து சுவைப்பேன் அப்படி ஒரு சுவை இந்த சாம்பார். எப்பவும் பார்சல் வாங்கிவிட்டு சாம்பார் பாக்கெட் எக்ஸ்ட்ராவாக கேட்டு வாங்காமல் வருவதில்லை இன்று வரை.

ஒரு நாள் வீட்டில் எல்லாரும் ஊருக்கு சென்றாதால் அங்கு சாப்பிடச் சென்றேன். இன்று ஆணியன் ரோஸ்ட் ஸ்பெசல் என்றனர், சரி என்று ஒரு ரோஸ்ட்டை ஆர்டர் செய்தேன், கையில் தட்டோடு சாம்பாரை வலிச்சு நக்கிக்கொண்டே காத்திருந்தேன். முக்கோண வடிவில் வந்த ஆணியன் ரோஸ்ட்டை பிச்சு அவர்கள் கடை சாம்பாரில் முக்கி வாயில் துணித்தேன் அவ்வ்வ்... அப்படியே வழுக்கியது தோசை. அளவான உப்பில், புளிக்காத மாவில் நன்கு எண்ணெய் ஊற்றப்பட்ட ஆணியன் தோசை என்னோடு சண்டையிடாமல் வேகமாக உள் இறங்கியது. ஆணியன், கேரட் துறுவல், முந்திரி, திராட்சை போட்டு சுட்டு இருந்தனர். அன்றில் இருந்து இன்று வரை அந்த கடை ஆணியன் ரோஸ்ட்டுக்கு அடிமை நான்.

நெய் ரோஸ்ட், ரவா ரோஸ்ட் அவ்வப்போது சாப்பிடுவேன், புரோட்டாவும் குருமாவும் என் மகனின் பேவரைட். இங்கு பார்சலுக்கு வரும் கூட்டத்தை பார்த்தாலே புரியும் இந்த கடையின் சுவைபற்றி. இந்த ஐயர் மெஸ்  சுகாதாரமாகவும் இருக்கும்.

இந்த மெஸ்சில் விலைப்பட்டியல் நிச்சயம் அதிகமாக இல்லை. வயிறு நிறைய சாப்பிட்டாலும் 60 ரூபாயை தாண்டாது அந்த அளவிற்கு குறைவான விலை, தரமான உணவு நிச்சயம் நம்பி சாப்பிடலாம். எங்கு சாப்பிட்டாலும் அடுத்த நாள் காலை பிரச்னை இன்றி இருக்கவேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருப்போம். நம்பி சாப்பிடலாம் வயிற்றை எந்த பதமும் பார்க்காது என்பது உறுதி.

பெயர்: டோபாஸ் ஐயர் டிபன் சென்டர்

இடம்: பேரூரில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் வலது பக்கம்.

விலை: 2 இட்லி 10, ஆணியன் ரோஸ்ட் 30, புரோட்டா 10

Monday, February 3, 2014

சொம்படிக்கும் சுயபுராணம்...


எதை, எதையோ எழுதினாலும் அதில் கருத்து இருக்கிறதா? இல்லையா? என்று பார்ப்பதில்லை. நமக்குப் பிடிச்சிருக்கு எழுதுகிறோம்! படிச்சாப் படி, இல்லை என்றால் விடுங்க, இது என் ஏரியா, அப்படித்தான் எழுதுவேன் என்று இருந்த எனக்குப் பயன் உள்ளதாக எழுத வேண்டும், எழுத்துப்பிழை, சந்திப்பிழை எல்லாம் எழுதிப் பழக வேண்டும் என்ற எண்ணம் இப்பபொழுதுதான் வந்திருக்கு. நான் தினமும் ஒரு பதிவு எழுதுவது எழுத்தாளன் ஆவதற்கு அல்ல. என் தமிழை முறையாக எழுதிப் பழகுவதற்கு என்று தான் சொல்வேன். எப்ப இருந்து படிக்க ஆரம்பிச்சேன், எப்ப இருந்து எழுத ஆரம்பிச்சேன்னு ஒரு சுயபுரணம்.

சிறுவயதில் இருந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் எனக்கு உண்டு. முதலில் வாரம் தவறாமல் படிப்பது காமிக்ஸ் புத்தகங்கள் தான். அதுவும் மாயாவிக் கதை என்றால் மிகப் பிடிக்கும், அப்போதுதான் கப்பல் கொள்ளை, கடல் கொள்ளை, செவ்விந்தியர்களைப் பற்றி எல்லாம் அறிய முடிந்தது. தினமும் காலையில் தினத்தந்திப் படிக்கும் பழக்கம் நான் படிச்சுப் பழகிய காலத்தில் இருந்தே உண்டு. அப்போது எல்லாம் வெள்ளிமலர்ப் பேப்பரைப்பார்த்ததும் ச்சீ அசிங்கம் என்று சொல்லும் அளவிற்கு நல்லவன்.

பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லாக் கதைகள் எனக் கோயிலுக்குப் போகும் போதெல்லாம் அங்கிருக்கும் புத்தகக் கடையில் அழுது அடம் பிடிச்சு வாங்குவேன். வீட்டிற்கு வந்ததும் ஒரே மூச்சில் படிச்சி முடிச்ச உடன் தான் அடுத்த வேலை.

9ம் வகுப்பு படிக்கும் போது ஹாஸ்டல் செல்லப் பவானியில் இருந்து கோபி செல்லும் 21 நெம்பர்ப் பேருந்தில் 1 மணி நேரத்தில் ஆனந்த விகடன், குமுதம், ஸ்பேர்ட்ஸ் ஸ்டார் போன்ற வார, மாத இதழ்களைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் பின் பேருந்துப் பயணம் என்றாலே என்னுடன் புத்தகங்களும் பயணிக்கும் எனக்குத் தெரிந்து 17 வயதில் இருந்து நக்கீரன், ஜீவி, நெற்றிக்கண், குமுதம் ரிப்போர்ட்டர்ப் சில வருடங்களுக்கு முன் வந்த தமிழக அரசியல் போன்ற அரசியல் பத்திரிக்கைகளை வாரம் தவறாமல் இன்று வரை படித்து வருகிறேன்.

குமுதத்தின் ஒரு பக்க சிறுகதை, விகடனின் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை என அப்படித்தான் சிறுகதைகள் அறிமுகம். எனக்கு தெரிந்த நாவல் எல்லாம் ராஜேஸ்குமாரின் பாக்கெட் நாவல்கள் தான். அப்படி இப்படி என்று பல புத்தகத்தை படித்து எழுத்தார்வத்தை வளர்த்து கொண்ட நான் சில சிறுகதைகள், துணுக்குகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பினேன் கன்னித்தீவு போல இன்று வரை படிக்கிறேன் ஒன்னும் வரவில்லை. இலவசமாக கிடைத்த இணையத்தில் இலவசமாக பலவற்றை பதிந்தாச்சு, திரும்பி பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது அத்தனை பிழைகள்.

இந்த சுயபுராணமே இதுக்குத்தாங்க நன்றாக எழுத வேண்டும் முக்கியமாக பிழைகள் இன்றி எழுதனம். ஒரு முறை ஆங்கிலம் கற்க ஒரு பேராசிரியரிடம் போய் கற்றுக்கொண்டேன் அப்போது அவர் சொன்னார் உனக்கு ஆங்கிலம் வரவில்லை என்று சொல்லதே!! "உனக்கு சரியாக தமிழ் தெரியவில்லை என்று காயடித்துவிட்டார்". உனக்கு மட்டுமல்ல இந்த வகுப்பில் உள்ள அனைவருக்கும் என்று நங்குன்னு ஒரு போடு போட்டார் எல்லோருக்கும்...

மக்களே தினமும் இப்போது பதிவெழுத ஆரம்பித்தாற்கு காரணம் நான் தமிழை ஒழுங்காக எழுதி பழகத்தான். இதற்கு சுயபுராணம் என்று பெயர் வைத்திருந்தால் சரி அது எதுக்குடா சொம்படிக்கும் சுயபுராணம் என்று நீங்க கேட்பது  புரிகிறது. ஒரு விளம்பரம்....

Sunday, February 2, 2014

பிலோமி டீச்சர் - வா.மு.கோமு


எதுவுமே இங்குத் திட்டமிட்டு நடப்பதில்லை தான். யாருக்கும் யார் மீதும் பிரியம் தோன்றலாம். அதற்காகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தவேண்டியது இல்லை. ஜான்சனின் தூய ஆத்மாவைப் பிலோமி டீச்சர் ஒரு புள்ளியில் உணர்ந்து சிலிர்த்துப்போனாள்.

கணவனை இழந்துத் தன் மகளுக்காக வாழும் ஒரு டீச்சர் தன் மேல் யாரும் அக்கறையற்றவர்களாக இருக்கும் போது, தன் மேலும், தன் குழந்தை மேலும் அக்கறை காட்டும் ஒருவன் மீது காதல்வயப்படுகிறாள். இவளுக்குக் காதல் அவனுக்குக் காமம் என்பதை எதார்த்தமாக வாமு.கோமுவிற்கே உண்டான நடையில் நம்மைக் கட்டிப்போடுகிறார். இந்தக் கதையைப் படித்து அதில் இருந்து நாம் மீள்வதற்கு வெகு நேரம் ஆகும் என்பதில் ஐயமில்லை.

கடலோரக்கவிதைகள் டீச்சரில் ஆரம்பித்த, வருத்தப்படாத வாலிபர்ச் சங்கம் வரை டீச்சராக வருபவர்கள் அவ்வளவு சீக்கிரம் நம் மனதை விட்டு அகலுவதில்லை அது போலத்தான் இந்தப் பிலோமி டீச்சர். டீச்சருக்காக மனதை அலைய விடுகிறோமோ இல்லையோ வாமு.கோமுவின் யதார்த்தமான நடைக்காக மனது அலைகிறது பிலோமி டீச்சரை நினைத்து.



இந்த நாவல் ஈரோடு புத்தகச் சந்தையில் வாமு.கோமுவிடம் இருந்து தான் பெற்றேன், அப்போது முழு வீச்சில் படித்தவன் போகிற போக்கில் படித்தது போல இருந்தது. நேரம் கிடைக்கையில் அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் பொழுது அதனுடன் இரண்டு நாள் பயணிக்க வேண்டி இருக்கு.

ஒரு பெண் உண்மையாக ஒருவனை விரும்பினாள் அவளிடம் எந்த ரகசியமும் இருக்காது. எல்லாவற்றையும் அவனோடு பகிர்ந்துவிடுவாள். அப்போது அவளது இதயம் சுத்தமாக இருக்கும். அவள் உடலும் அவனுக்காகத் தயாராக இருக்கும். அவன் எங்குக் கூப்பிட்டாளும் உடன் செல்ல தயாராக இருப்பாள் - உண்மையாக ஒரு பெண் நேசிக்க ஆரம்பித்துவிட்டாள் இது எல்லாம் நடக்கும் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார். இந்த வரிகளைப் புரியாத பல ஆண்கள் " இவளுக்கு முன்னாடியே அனுபவம் இருக்குமோ நம்மிடம் இவ்வளவு தாராளமாக நடந்து கொள்கிறளே " எனச் சந்தேகத்தோடு பார்க்கும் பல காதலன்கள் இந்தச் சமூகத்தில் உண்டு.

பஞ்சும் நெருப்பும் என்ற கதையில் இன்றைய திருப்பூரின் காதல் கதைகளைச் களமாக்கி அற்புதமான சிறுகதையாகக் கொடுத்திருக்கிறார். வேலைக்குச் செல்லும் இடத்திலும், பயணிக்கு வழியிலும் ஏற்படும் இயற்கையான பார்வை மோதல்களைக் காதலக்கி இவர் கையாண்டு இருக்கும் விதம் நம்மை மீண்டும் ஒரு முறை படிக்க வைக்கிறது இந்தக் கதையோடு பயணிக்கவும் முடிகிறது.


சாதிகள் இல்லையடி பாப்பா என்ற கதையில் காதல் திருணம் செய்து குடும்பத்தை விட்டு ஓடி வருபவர்கள் அறை எடுத்து தங்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அது போலீசாரால் எப்படித் தீர்க்கப்படுகிறது என்பதை நம் ரசிக்கும், என்ன நடக்குமோ என்று யோசிக்கும் வகையில் த்ரில்லாக சென்று செண்டிமெண்டாக முடித்து நம்மைக் காதலானாக மாற்றுகிறார்.

அந்த விசயம் தான் பெரிய விசயம் என்ற கதையில் கல்யாணத்துக்குப் பின் தடுமாறுகிறவர் எப்படி மாறுகிறார் என்பதை அவரது நடையில் அசத்தி இருக்கிறார்.

 ஒவ்வொரு கதையின் ஓட்டமும் என் மனதில் ஓடுகிறது இந்தப் பிலோமி டீச்சர் புத்தகத்தை வாசித்ததில் இருந்து....

எதிர் வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகம் 180 ரூபாய். எல்லாப் பிரபல புத்தகக் கடையிலும் கிடைக்கின்றது.