Sunday, August 24, 2014

ஜிகர்தண்டா ( இது சினிமா விமர்ச்சனம் அல்ல)



இன்று மாலை படம் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து, எந்த படத்துக்கு செல்வது என்று எங்க வீட்டில் பொதுக்குழு போட்டு முடிவெடுக்கும் போது,  அஞ்சான் தான் போக வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர் எங்க வீட்டு பொதுக்குழு தலைவி. நான் படம் பார்த்தது வீட்டுக்கு தெரியாது, சோ அமுக்கி அமர்ந்து வேடிக்கை பார்த்தேன், படத்தை பற்றியான அறிக்கையும், இணையதள விமர்ச்சனமும் சொல்ல மனது துடிக்குது ஆனாலும் சொல்ல முடியல, சரி டிக்கெட் வாங்கி வரேன் என்று சென்றேன். 

இன்னொரு முறை இதை பார்க்கவேண்டுமா என என்னி செந்தில் தியேட்டரில் டிக்கெட் வாங்காமல் பக்கத்து குமரன் தியேட்டரில் ஜிகர்தண்டாவுக்கு டிக்கெட் வாங்கி வந்துட்டேன். வீட்டின் பொதுக்குழுவின் முடிவை எதிர்த்த நடந்து கொண்டதால் எப்படி எதிர் கொள்வது என்று தடுமாறி நிற்கிறேன்.. இன்றைக்கு எனக்க இருக்கு....

இந்த மன நிலையிலேயே அஞ்சான் தான் பார்ப்பேன் என அடம்பிடிச்ச என் தங்கமணியிடம், ஜிகர்தண்டா பற்றி சொல்லாமல் தியேட்டருக்கு அழைத்து சென்றேன். அங்கே போன பின்பு தான் டிக்கெட்டை பார்த்த என் தங்கமணி செம்ம காண்டு, கார் ஓட்ட தெரியும் என்பதால் சாவியை கையில் எடுத்து என்னை முறைக்க, அட வாங்க வாங்க நேரம் ஆச்சு என்று நான் புக் செய்திருந்த Queen circle க்கு அழைத்துச்சென்றேன்.

உள்ளே போனதும் படம் போட்டதால் அக்னிப்பார்வையில் இருந்து தப்பித்தேன், சோப செட்டில் உட்கார்ந்து படம் பார்த்தும் திரும்பி ஒரு சிரி சிரிக்க முடியல. தங்கமணியின் ஆஸ்தான நாயகன் படத்துக்கு கூட்டிச்செல்லாததால் என் மேலே செம்ம கோபமாம். ஜிகர்தண்டாவை பார்த்த தங்கமணி கொஞ்சம் கொஞ்சமாக சிரிக்க, எனக்கும் படம் செம்ம இன்ட்ரஸ்டிங்காக சென்றது. இடைவேளையில் எனக்கு ஒரு ஐஸ்க்ரீம் மட்டும் போதும் என சொல்ல, அப்பவும் கோபத்தை குறைச்சிக்கல.

இடைவேளைக்கு பின் ஜிகர்தண்டாவுக்கு தியேட்டரில் செம்ம க்ளாப்ஸ். ஒரே சிரிப்பலை தான். வில்லன் செய்யும் அட்டகாசங்களும் அவன் ஆடும் ஆட்டங்களும் செம்ம.. இடையே என் பழைய சைட்டு அதுதாங்க படத்தின் ஹீரோயின் லஷ்மி மேனன் சும்மா வந்துட்டு வந்துட்டு போகுது. பட் நான் இந்த தடவை ரொம்ப சைட் அடிக்கல.. எனக்கு இந்த படத்தில் நொம்ப பிடிச்சது வில்லன் தான், அசால்ட்டா பட்டையக்கிளப்பி இருக்கறாது மனுசன். பிடம் ரீலிசுக்கு அவர் செய்த அலப்பறையும், படத்துக்கு அவர் வரும் அலப்பறையும் செம்ம க்ளாப்ஸ்..

படம் வெளியாகும் அன்று தியேட்டரில் டைரக்டர் மக்களின் கைதட்டலுக்கு காத்திருக்கும் அந்த இடம் மனதை வருடியது. இப்படித்தானே புதிதாக படம் எடுக்கும் டைரக்டர் எல்லாம் தனது படத்திற்கு மக்களின் விமர்ச்சனம் என்னவாக இருக்கும் என்று முதல் நாள் முதல் ஷோவிற்காக காத்துக்கிடப்பர். அந்த முதல் காட்சியில் வைத்த டிவிஸ்ட் செம்ம. அங்க தான் நம் மனதில் மிக இடம் பிடிச்சுட்டார் டைரக்டர்.

இந்த சந்தோசத்தில் என் மேலே கோபமாக இருந்த என் தங்கமணி பக்கம் திரும்பி பார்த்தேன் அம்மிணிக்கு செம்ம சந்தோசம். நான் தங்கமணியை பார்ப்பதை கவனித்த அவள் ஓவரா வலியாத, அங்க  உன் சைட்டு லஷ்மி மேனன் வந்திருக்கா அவளையே பாரு என ஒரு பிதுக்கு பிதுக்கினாள். இது என் பழைய சைட்டு இப்ப என் சைட்டு நயன்தாரா என்று சொல்லி ஒரு இடி வாங்கியது தான் மிச்சம்...

படத்தில் சண்டைக்காட்களே இல்லை, முக்கியமாக பாதி உடை அணிந்த குத்தாட்டம் இல்லை, ஒவ்வொரு காட்சி அமைப்பும் செம்ம, அந்த வில்லனின் பாடி லேங்வேஜ், காமெடி நடிகரின் கலக்கல் காமெடி என படம் பட்டையக்கிளப்புது. புது முக இயக்குநருக்கு ஒரு க்ளாப்ஸ் பாஸ்...

படம் முடிஞ்சு வெளியே வரும் போது தங்கமணி பக்கத்து தியேட்டரில் போஸ்டரை பார்த்துட்டு உம் என்று வந்தவள் ( சூரியாவ பார்க்க முடியலின்னு கோவம் போல) காரில் ஏரியதும் படம் நல்லா இருக்குல. அதுக்குள்ள முடிஞ்சிடுச்சு, ஒரு காட்டுக்கத்தல் இல்ல, பாரீன் டூயட் இல்ல, பத்து பஞ்ச் டயலாக் இல்லாம, முழுமனதாக படம் பார்த்த திருப்திப்பா... சோ... நொம்ப நன்றி... இந்த படத்துக்கு அழைத்து வந்ததற்குப்பா....
சுபம்.....

Tuesday, August 19, 2014

பம்பாய் மிட்டாய்... ( ஜவ்வு மிட்டாய்)

 
ஒரு பெரிய மூங்கில் குச்சியில் ஓர் அழகான பெண் பொம்மை, கைதட்டும் அது கை தட்டும் போதெல்லாம் மணி அடித்து நம் கவனத்தை ஈர்க்கும் இந்த பம்பாய் மிட்டாய் வண்டி. பெரும் பாலும் கைகளில் தூக்கிக்கொண்டு வருவர். சிலர் சைக்கிளில் பம்பாய் மிட்டாயை கொண்டு வருவார்கள்.
இவர்களின் சத்தத்தை கேட்டதுமே இவர்கள் பின்னால் ஓடும் சிறு பிள்ளைகளின் கூட்டம். அம்மா நாலனா கொடும்மா ஒரு வாட்ச் வாங்கிக்கிறேன் ஜவ்வு மிட்டாய்க்காரர் வந்து இருக்கார் எனவும் அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி நாலணா வாங்குவதற்குள் அழுது புரள வேண்டும்.
பெரும்பாலும் இந்த ஜவ்வு மிட்டாய்கள் இரு வண்ணங்கள், அல்லது 3 வண்ணங்களில் இருக்கும். சிகப்பு வெள்ளை, சிகப்பு பச்சை வெள்ளை என்ற வண்ணங்கள் தான் அதிகம் இருக்கும்.

அம்மாவிடம் நாம் காசு வாங்குவதற்குள் பக்கத்து வீட்டுக்கார நண்பனுக எல்லாம் கையில் வாட்ச் கட்டிக்கொண்டு எனக்கு கொக்கானிக்கா காட்டிக்கொண்டு நிற்பர். சில பெண்குழந்தைகளோ கழுத்துக்கு நெக்லசும், சில வாண்டுகள் கார், ஜீப் என செய்து வாங்கி இருப்பர் ஆனால் அனேகம் பேருக்கு வாட்ச் தான் மிக பிடிக்கும்.
இப்போது எல்லாம் இந்த பம்பாய் மிட்டாய்க்காரை பார்ப்பது மிக அரிதாகிவிட்டது, அப்படியே அவர்கள் வந்தாலும் அவர்களை சுற்றி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக குறைவு தான்.
சமீபத்தில் தேர்கடையில் பம்பாய் மிட்டாயை பார்த்ததும் என் குழந்தைகளிடமும், அக்கா குழந்தைகளிடமும் இந்த மிட்டாய் பேர் பம்பாய் மிட்டாய் எனவும் ஜவ்வு மிட்டாய் எனவும் அழைப்போம் என்று கதை சொல்லி வாங்கிக்கொடுத்தோம். எங்க வாண்டுகள் எல்லாம் ஆளுக்கு ஒன்றாக வாங்கி இரண்டு முறை ருசி பார்த்து விட்டு அப்பா இது five start மாதிரி இல்ல எனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டனர்.

ஒரு காலத்தில் உங்க அப்பன் இந்த மிட்டாய் சாப்பிடுவதற்கு அழைந்தது ரொம்ப, என்று சொன்னதும் அது உன் தலைஎழுத்து மாமா என்று பன்னு கொடுத்து என்னை ஆப் செய்து விட்டனர்..

ஆனாலும் என் நினைவுகள் இந்த ஜவ்வு மிட்டாயை கையில் மிட்டாயை ஒட்டி கொண்டு மிட்டாயின் இனிப்பு சுவையோடு கையில் வெய்யிலின் வேர்வையும் கலந்து உப்பு சுவை யோடு, மணிகணக்கில் அந்த ஜவ்வு மிட்டாயாய் சுவைப்பதே தனி ருசிதான்...
அநோகமாக படிக்கும் நீங்களும் இந்த ருசியை நிச்சயம் ருசிச்சு இருக்குங்க தானே நண்பர்களே...


Tuesday, August 12, 2014

வரலாற்று புகழ் மிக்க குதிரை சந்தை தொடங்கியது...


ஆடி மாதம் என்றாலே என் மனதில் நினைவிற்கு வருவது குதிரை சந்தை தான். எங்கு வேலை செய்தாலும் எப்ப இந்த திருவிழா வரும் 3 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்ற ஏக்கம் தான் இதற்கு காரணம். பதிவுலகில் இந்த சந்தையை 5வது முறையாக பதிகிறேன். வருடா வருடம் இந்த குதிரை சந்தை பற்றியான பதிவுகளை பதிவிடுவதற்கு காரணம், நிச்சயம் நாம் அனைவரும் காண வேண்டிய ஒன்று. இந்த பதிவை பார்த்து சந்தைக்கு மக்கள் வருவார்கள் என்பதற்காக பதிவிடுவதில்லை. வர இயலாதவர்கள் இதைப்பாத்து திருப்தி அடையவேண்டும் என்பதற்காக இந்த பதிவு. கடந்த வருடம் 8 இலட்சம் மக்கள் இந்த நான்கு நாள் திருவிழாவில் கலந்து கொண்டதாக அறிவித்திருந்தனர். இந்த வருடம் ஆகஸ்ட் 15ம் நாள் திருவிழாவையோட்டியே வருவதால் இந்த வருடம் நிச்சயம் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்..

குதிரைசந்தை

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபு குதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப் பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டும் அந்தியூரும் அதன் சுற்று வட்டாரமும்.

இத்தளத்தின் வரலாறு

சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் வனப்பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி, மூன்று குழவிக்கற்களை மட்டும் நட்டு வழிபட்டனர். இந்த கோயில் பூஜாரி வீட்டுப் பெண்ணை, ஆற்காடு நவாப் திருணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெண் கேட்டுள்ளார். உறவினர்களிடம் கலந்து பின் சம்மதம் தெரிவிப்பதாக நவாபின் ஜவானிடம் பூஜாரி கூறினார். உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அப்போது உறவினர் ஒருவருக்கு அருள்வந்து, நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாக சென்றுவிடுங்கள், என்று கூறினார். பூஜாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர். அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்கு சென்று பார்த்த போது யாரும் இல்லை. 
 
கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களை சேதப்படுத்தினர். கற்களுடன் சென்றவர்கள் பல ஊர் கடந்து பசியாலும், பட்டினியாலும் வாடி வதங்கினர். தங்களையே பாதுகாக்க இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்தனர். அடுத்தநாள் அனைவரும் புறப்பட்ட போது, தங்களுடைய கூடையில் மூன்று கல் சிலைகளும் இருந்ததைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அவற்றைத் தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்தனர். அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் என்ற இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்தனர். பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று மூன்று கற்களையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநிலமன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார்.
 
கோயில் சுற்றுப் பிரகார நடுப்பகுதியில் 11 அடி நீளம், 11 அடி அகலம், 11 அடி உயரம் கொண்ட குலுக்கை என்னும் பெட்டகம் உள்ளது. அதனுள் பூஜை பொருட்களை வைத்து வந்தனர். ஆடி மாதத் திருவிழாவில், விழாவிற்கு முந்திய நாள் குலுக்கையைத் திறந்து பூஜைப் பொருட்கள் எடுப்பது வழக்கம். இக்குலுக்கைக்கு நான்குபுறமும் வாசற்படிகள் இல்லை. மேல்பகுதி வழியாக ஆள் புகுந்து வரும் நுழைவாயில் உள்ளது. கீழே துவாரம் காற்றோட்ட வசதிக்கு அமைத்து அத்துவாரத்தில் பாதுகாப்புக்காகப் பாம்புகளை விட்டு வைத்தனர். ஆகம விதிப்படி விரதம் இருந்து வரும் பூசாரிகளில் ஒருவர் மட்டும் திறப்பார். மற்றவர்கள் அந்த பெட்டகத்தில் நுழைய முயற்சித்தால் பாம்பால் கடியுண்டு இறப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. பக்தர்கள் தங்கள் தோட்டங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களால், தங்களுக்கு ஆபத்து நேராமல் இருக்க, குலுக்கைக்கு பூக்கள் இட்டு வணங்குகின்றனர். இந்த குலுக்கை பார்ப்பதற்கு புற்று போல உள்ளது.
 
இங்குள்ள காமாட்சியம்மன் தவமிருக்க அந்தியூர் வனத்துக்குச் சென்றாள். மாய மந்திரத்தில் பிரசித்தி பெற்ற உத்தண்ட முனிராயன் என்பவர் அம்பாளுக்கு வனப்பகுதியை விட மறுத்தார். அவனை குருநாத சுவாமியின் சீடரான, அகோர வீரபத்திரர் சண்டையிட்டு அழித்தார். அவன் அழியும் முன், “என் அகந்தையை அழித்த குருநாதா! உன் கையால் அழிவதால், என் பூர்வ ஜன்ம சாபம் நீங்கப் பெற்றேன். இவ்வனத்தில் தாய் காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ளட்டும். இந்த வனம் இன்றிலிருந்து ஸ்ரீகுருநாதர் வனமாக இருக்கும். நான், அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க, நீ இங்கேயே அருள்புரிவாய்” என்று வரம் கேட்டான். அந்த வரத்தை குருநாத சுவாமி கொடுத்தார். இதனடிப்படையில், அசுரகுணம் கொண்டவர்களுக்கு கூட குருநாத சுவாமி பூர்வ ஜன்ம சாபத்தையும், பாவத்தையும் தீர்ப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்தக் கோயிலில் சிறிய கல் உருவம் ஒன்றை வீரபத்திரரும், உத்தண்ட முனியும் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். அந்தக் கல் குன்றாக வளர்ந்துள்ளது. மக்களும், “குருநாதா. உன் குன்று வளர்வதைப் போல் என் குடும்பத்தையும் வாழ வையப்பா” என வேண்டுகின்றனர். காமாட்சி அம்மன் தவநிலையில் இருக்கிறாள். அருகில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன், நவநாயகிகள், ஏழு கன்னிமார்கள் உள்ளனர். பாட்டன், பாட்டி, நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன், அண்ணன்மார் என்னும் முன்னுடையார், 18 சித்தர்கள் உள்ளனர். அகோர வீரபத்திரர் எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் உள்ளது.
 
----------------------- 

இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த திருவிழாவை கான வருபவர்களுக்கு ஈரோடு, கோபி, சத்தியமங்ளத்தில் இருந்து நிறைய சிறப்பு பேருந்துகள் உண்டு...


 படங்கள் எல்லாம் பழைய படங்கள், இந்த வருட படங்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து உங்களை தேடி வரும் இணையத்தில்....

Tuesday, August 5, 2014

இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு...



கோவை சேலம் ஹைவே ரோட்டில் சித்தோடு என்ற ஊரிற்குள் செல்லும் வழியில் அந்த ஊர் எல்லையில் உங்களை வரவேற்கும் இந்தியன் பஞ்சாபி தபா.

12 வருடங்களுக்கு மேல் இருக்கிறது இந்த தாபா. ஈரோடு சுற்றி உள்ள ஊர்களில் தாபா ரொம்ப பிரபலம். ஈரோடு பெருந்துறை ரோட்டில் நிறைய தாபா இருக்கின்றனது அதைப்பற்றி பிறகு பார்ப்போம். இன்று ஈரோடு பவானி சாலையில் உள்ள இந்தியன் பஞ்சாபியை பற்றி பார்ப்போம்.

பெரிய சாலை போட்டு அதில் கயித்து கட்டில் போட்டு வைத்து இருப்பார்கள், கட்டில் நடுவே ஒரு பலகை இருக்கும். கட்டிலில் இரண்டு பக்கமும் இருவர் அமர்ந்து கொண்டு சாப்பிடும் படி அமைந்திருக்கும். இந்த கட்டிலில் அமர்ந்ததும் நமக்கு சின்ன வயதில் தாத்தா வீட்டு கயித்து கட்டிலில் ஆட்டம் போட்டது ஞாபகம் வரும்.

நாங்கள் நான்கு பேர் சென்ற இருந்ததால் இரண்டு கட்டிலை ஆக்கரமித்திருந்தோம். உட்கார்ந்ததும் பெல்லாரி வெங்காயத்தை ரவுண்டாக வெட்டி, அதன் கூட எழுமிச்சை ஊர்காய் வைத்து தட்டிலில் கொடுத்தனர். வெங்காயத்தை எடுத்து ஊர்காயில் தொட்டு ஒரு கடி கடித்தால் வெங்காய காரமும் எழுமிச்சையின் காரம் மற்றும் புளிப்பு இணைந்து நாக்கில் படும் போது மீண்டும் சாப்பிடத்தூண்டும் சுவை.

எல்லா இடங்களிலும் இடம் பெறும் வழக்கமான மெனுக்கள் தான் என்றாலும் சுவையில் தான் அதன் தரம் இருக்கின்றது. ஓரு ஹோட்டல் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க வேண்டும் எனில் நிச்சயம் அங்கு எதாவது சுவையாக இருக்கும் அதற்காகவே அந்த ஓட்டல் நன்றாக இயங்கும்.

இங்கும் அதுபோலத்தான் ரொட்டி, டால், நான் என வகை வகையாக கொடுத்தாலும் இங்கு கிடைக்கும் ப்ரைடு ரைஸ் நன்றாக இருக்கும். மிக சன்னமான அதே சமயம் உதிரி உதிரியாக உள்ள சாப்பாட்டில், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் மற்றும் முட்டை சம விகிதத்தில் கலந்து சாப்பாட்டோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். அந்த சாப்பாட்டை ஒரு கை வாயில் துணிக்கும் போது தான் அதன் சுவையும் தரமும் மனதில் நிற்கும்.

தயிர்சாதம் பஞ்சாபி தாபாக்களில் தயிர்சாதம் அருமையாக இருக்கும் என்று கேள்விபட்டு இருப்பீர்கள், இங்கு காணலாம் அந்த சுவையை. நன்கு குழைந்த சாப்பாட்டில் கெட்டி தயிர் ஊற்றி, அளவான உப்பு கலந்து கொடுக்கும் இந்த தயிர்சாதம் ஒரு கப் எல்லாம் நமக்கு பத்தாது, அவ்வளவு அருமையான சுவை.
இந்த பஞ்சாபியில் முக்கியமாக சாப்பிடவேண்டிய ஒன்று பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் இரண்டும் கிடைக்கும். நான் எப்போதும் ஆர்டர் செய்வது நாட்டுக்கோழி பள்ளிபாளயம் தான். இங்கு கிடைக்கும் நாட்டுக்கோழி பள்ளிபாளையத்தில் வெங்காயமும், தேங்காயும் நிறைய கலந்து இருக்கும் சிக்கன், வெங்காயம் மற்றும் தேங்காய் என ஒவ்வொன்றும் சாப்பிட சாப்பிட அதன் காரமும், தேங்காயின் இனிப்பும் நாவை பதம் பார்க்கும். இந்த பள்ளிபாளையம் சிக்கனுக்கு ஈரோட்டு மக்கள் ரசிகர்கள். எல்லா கடையிலும் கிடைக்கும் பட் இந்த சுவை கிடைக்காது.

கடைசியில் பாயாசம் சில் என்று இருக்கும் பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும் மிதக்கும் இதுவும் ஒரு கப் பத்தாது. நன்கு காரம் சாரமாக சாப்பிட்டு முடித்ததும் இந்த பாயசம் ஒரு தேவார்மிதம். நிச்சயம் தாபாவில் ஒரு நாள் சாப்பிடுங்க, சாப்பிடும் போது பள்ளிபாளையம் சிக்கன், பிரைடு ரைஸ், தயிர்சாதம் மற்றும் பாயாசத்தை மறந்திடாதீங்க...

பரபரப்பான நேரத்திலே...

அவிநாசி ரோட்டில் உள்ள நாட்டுடமையாக்கப்ட்ட வங்கிக்கு அரக்க பறக்க சென்றேன். பத்து நிமிட பர்மிஷனில் வேலையை முடிச்சிட்டு ஓடனும் என்ற வேகமும், சொன்ன நேரத்துக்கு அலுவலகத்துக்கு போகவேண்டும் என்ற மனஓட்டமும் எண்ண ஓட்டமாக மாறி இருந்தது.

பரபரப்பாக இருந்த அந்த வங்கியில் தானியங்கி டோக்கன் வாங்கும் போது என்னுடைய டோக்கன் எண் 73, வரிசையில் 55வது டோக்கன் போய்க்கொண்டு இருந்தது. அப்படியே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்த வாரே எனது படிவத்தை பூர்த்தி செய்தேன். ஒரு குழந்தை தன் தாயின் மடியில் தவழ்ந்து கொண்டு இருந்தது, ரிட்டேர் ஆன மூத்தவர்கள் எல்லாம் தங்கள் வரிசையை எதிர் நோக்கி காத்திருந்தனர். எங்கு சென்றாலும் அங்கு யாரையாவது தேடி அவர்களை நோக்குவது நம் பழக்கமாக இருந்ததால் சுற்றி சுற்றி பராக்கு பார்த்தேன்... ம்கும் இன்னிக்கு கண்ணுக்கு குளிர்ச்சி இல்லை என்று ஆண்டவன் சொல்லிட்டான்ன போல, பசுமையே இல்லாமல் வறண்டு இருந்தது அந்த இடம்.

அவ்வப்போது கவுண்டரில் யார் பேரையாவது அழைத்து பேசிக்கொண்டு இருந்தனர். செக்புக், பாஸ்புக் என மிக பரபரப்பாக இருந்த வேளையில் தான் நம்ம ஹீரோ உள்ளே வந்தார். ஆள் நன்கு வாட்டசாட்டமாக எல்லாம் இல்லை பட் தோல் வெள்ளை, இவரைப்பற்றி விளக்க வேண்டும் என்றால், நம்ம ஊருக்கு பீகாரிங்க பெட்சீட் விற்க வருவாங்கதானே அவுங்களைப்போல இருந்தான். பட் அவனது உயர்தர ஆடையும், உயர்தர சென்டும் கலக்கியது.
டோக்கனை எடுத்து என் அருகில் அமர்ந்தவன் உங்க டோக்கன் எண் என்ன சார் என்றான் 73 என்றேன், ஓஓ.. என்னுது 80 இன்னும் 20 நிமிடம் ஆகும் போல என்று பேசிக்கொண்டே அவனது ஆப்பிளில் மூஞ்சி புத்தகத்தை நோண்ட ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் ஒரு கெட்ட வாடை அடித்தது, பக்கத்தில் இருப்பவர்கள் என்னைப்பார்க்க, நான் திரு திரு வென விழித்தேன். பெரிதுங்க எல்லாம் மேலேயும் கீழேயும் பார்த்து விழித்தனர். வாடை அதிகமாக அதிமாக என்னால் உட்கார இயலவில்லை. எங்கிருந்து வருகிறது என பார்க்க. நம்ம ஹீரோ 3500 ரூபாய் வுட்லேண்ட் சூவில் இருந்து காலை வெளியே எடுத்து கால் மேல் கால் போட்டு இருந்தார். நாங்க எல்லாம் மூக்கு மேல் இரண்டு கையையும் பொத்தி இருந்தோம்.

இவ்வளவு காசு போட்டு வாங்குறவன்,  10ரூபாய்க்கு தண்ணி வாங்கி அதை துவைக்கமாட்டான் என யோசிக்கும்போது டோக்கன் 65 தான் போய் இருந்தது.
கப்பு முடியாமல் வெளியேற எத்தனிக்கும் போது அந்த பெட்சீட் விற்பவனை பார்த்தேன் மனுசன் அம்புட்டு கப்புலியும் ஒன்னுமே இல்லாதது போல உட்கார்ந்திருந்த அவன் நேர்மையை என்னவென்று சொல்வது...