Thursday, June 11, 2015

மை நேம் ஈஸ் சின்ன "காக்கா முட்டை"

My Name is சின்ன காக்கா முட்டை...

பிரபல ஹீரோ கிடையாது, பிரபல டைரக்டர் கிடையாது, பிரபல இசையமைப்பாளர் கிடையாது, திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர்கள் எல்லாம் தியேட்டர் நோக்கி வர வைத்து விட்டார்கள் இந்த சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும்..

சென்னை நகரில் மிக பிரமாண்ட கட்டிடங்களும், மால்களும், பணக்காரர்கள் வாழும் ஏரியாவையே திரையிலும், சின்னத்திரையிலும் பார்த்த நமக்கு, ஒண்டிக்குடிசையில்அதிலேயே சமையல், உறக்கம், வீட்டுக்கு வெளியே உள்ள இடம் தான் குளியல் அறை என்று உள்ள அந்த மக்களின் சொர்க்கத்தை மிக அழகியலோடு படம் பிடித்து காட்டி இருக்கிறார். 

இதைப்பார்த்த பலருக்கு சென்னையில் இப்படியும் இடங்கள் இருக்கின்றனவா என்று வாயைபிளக்கத்தான் செய்கின்றனர்.

இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியையும் மனுசன் செதுக்கி இருக்கிறார். ஒவ்வொரு இடமும் கலையாக, இலக்கியமாக தெரிகிறது.

பசங்க நடக்கும் இடம், அவர்களின் நடை, உடை பாவனை என்று அங்கு வாழும் பசங்களை துல்லியமாக படம் பிடித்துள்ளார். மெட்ராசில் வசிப்பவனுக்கு எல்லா இடமும் அத்துப்பிடி என்று நினைத்துகொண்டு இருந்தேன், இப்போது தான் தெரிகிறது அங்கு குப்பத்தில் வாழும் குழந்தைகள் மையிலாப்பூரை கூட அதிகம் பார்த்ததில்லை என்று...

மணிகண்டன் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட்டை செதுக்கி இருக்கிறார். ஒவ்வொரு இடமும் நச். படத்தில் குழந்தைகள் பேசும் அந்த பேச்சு, குழந்தைகள் நேர்மையாக வாழவேண்டும் என்று நினைப்பது போன்றவற்றை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்.

இந்த படம் பார்க்கும் போது இடைவேளை என்று போட்டதும் மனைவியிடம் சொன்னேன் அதுக்குள்ள இடைவேளையா என்று அதே போல் படம் முடிந்ததும் படம் முடிந்ததா என்று கேள்வியோடு தான் நின்றேன். அந்த அளவிற்கு படத்தோடு ஒன்றிப்போயிருந்தேன்.

செவ்வாய்கிழமை மாலை காட்சிக்கு சென்றேன், தியேட்டர் புல், எங்க ஊரில் எல்லாம் வார இறுதி நாட்களில் தான் தியேட்டர் நிரம்பும் என்றார்கள், நல்ல படத்தை எப்போதும் நம் மக்கள் கைவிடவில்லை என்பதற்கு இதுஒன்றே சாட்சி...
நான் அனுபவித்துவிட்டேன் இந்த சுகானுபவத்தை.... நீங்கள்...???

இந்த படத்தை பற்றி எழுதினால் ஒவ்வொரு காட்சியாக எழுதிக்கொண்டே போகலாம்.. இந்த படத்தை பற்றி பேசுவதை விட படத்தை பார்த்து அனுபவிப்பதே சுகானுபவம்...

காக்கா முட்டையின் நினைவுகளில் இருந்து நிறைய பேர் மீளவில்லை... அதில் நானும் ஒருவன்..

அப்ப ஒரு நாள் ஒரு சொந்தக்காரன் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க போயிருந்தோம். நாங்க போய் இருந்த அந்த வீட்டுக்காரர் நல்ல வசதி அப்பவே காரு, பைக்கு, போன் எல்லாம் வெச்சிருந்தாரு ( இது நடந்தது 1986) வீட்டுக்குள்ள போனதும் எங்க இருவரையும் ஏற, இறங்க பார்த்தாரு....

அந்த பெரிய மனுசன் நல்லாவே மூஞ்சு கொடுத்து பேசல, அப்படி ஒரு கேவளமான பார்வை பார்த்தாரு. என் கூட வந்த அண்ணன் மற்றும் கல்யாண மாப்பிள்ளைக்கு ரொம்ப தர்மசங்கடாமா போச்சு..

இவன் எல்லாம் கண்ணாலத்துக்க வந்தா என்ன? வரலீனா என்ன ? மனதில் திட்டிகிட்டே பத்திரிக்கையை கொடுத்தோம். அவரு டேபிள்ல வை என்று சொல்லி விட்டு உள்ளே போய்ட்டார்.

எழுந்து புறப்பட வெளியே வந்தோம், கிளம்பிட்டீங்களா காபி போடச்சொல்லாம்ன்னு இருந்தேன் சரி சரி கிளம்புங்க என்றார்.

இந்த காக்காமுட்டை படம் பார்த்த உடன் என் கண்ணீரோடு, அந்த ஞாபகமும் எட்டி பார்த்தது....

கிளம்புங்க என்று சொன்னது கூட பரவாயில்லை இனிமே இந்த மாதிரி துணி, செருப்பு எல்லாம் போட்டுட்டு என் வீட்டுபக்கம் வராதீங்க தம்பி, அக்கம் பக்கத்தில் என்னை என்ன நினைப்பாங்க என்று வெளியே தள்ளாத குறையாக தள்ளினார்...

Monday, June 1, 2015

கல்யாண சோறு


இந்த வருட வைகாசியில் உறவுகள் மற்றும் நண்பர்களின் பல திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணம் என்றாலே உணவு தான் எல்லா வீட்டிலும் முக்கியமானதாக இருக்கும் மற்றும் அனைவரும் உணவிற்குத்தான் மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அனைத்து இடங்களிலும் கொடுப்பார்கள். அந்த முக்கியத்துவம் அவர்களின் அந்தஸ்த்து போல இருக்கும், அதற்காக நிறைய செலவு செய்து உழைத்திருப்பார்கள் என்றால் அது மிகையாகது. 

நான் சாப்பிட்ட எல்லா இடங்களிலும் (ஒரு திருமணத்தை தவிர) உணவுகள் எங்குமே நம் பாரம்பரிய உணவு முறைகளில் இல்லை, ரொட்டி அல்லது நான் கொடுக்காத திருமணமே இல்லை, நான், பன்னீர் மசாலா, தயிர் சேமியா, ஊத்தாப்பாம் என்று எதுவுமே நம் உடலிற்கு ஏற்ற உணவாகவே இல்லை. இதை குறையாக எழுதவில்லை நிறைய செலவு செய்து இந்த மாதிரி நம் பாரம்பயித்திற்கும், நம் மண்ணிற்கேற்ற நம் உடலிற்கும் சம்பந்தம் இல்லாத உணவை பெருமை என்ற பெயரிலும். கெத்து என்ற பெயரிலும் பணத்தை வாரி இறைத்து உணவாக வைக்கின்றனர்.

அதுவும் கல்யாண வீட்டில் பபே என்ற பெயரில் நமக்க சம்பந்தமில்லாத உணவு முறையை இப்பொழுது எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் கொண்டு வருகின்றனர். நம்ம ஊர் பெருசுங்க எல்லாம் தோசை ஒன்னு, கொஞ்சம் சட்னி கொடுப்பா என்று தட்டை எடுத்துக்கொண்டு வரிசையில் காத்து நின்று வாங்கி உண்ணுகின்றனர். இது தான் நம் பாரம்பரிய மிக்க கல்யாண சாப்பாடா? என்றால் கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது.

அதுவும் இந்த பபே முறையில் எல்லா வகை சட்டினிக்களும், குழம்பும் ஒன்றாக கலந்து விடுகின்றது, இதில் எங்க சட்டினியின் சுவையை சுவைப்பது சுவைத்து உண்பது என்று தான் இன்னும் விளங்கல..

இதை எல்லாம் தான் நம் மக்கள் விரும்புகின்றனர். ஒவ்வொரு பப்பே முறை உணவிற்கு செல்லும் போது என் மனதிற்கு தோன்றுவது மேல் உள்ள என் குமுறல்கள்... இப்படி பபே பற்றி நம்ம ஊர் ஆட்களிடம் காதும் காதும் வைத்த மாதிரி கேட்டால் பொழுந்து கட்டுவார்கள்.

வரிசையாக வந்த திருமணத்தில் கடந்த சனி இரவு ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன் மணமகனின் அப்பா பாரம்பரியத்தை மிக விரும்புபவர் போல அனைவருக்கும் தலைவாலை இலை, 3 வகையாக காய்கள், கூட்டு, வடை, பாயசம் அப்பளம் என்று 15 வருடத்திற்கு முந்தைய திருமண விருந்தை கடைபிடித்து கலக்கி இருந்தார்.

திருப்தியாக சாப்பிட்டு விட்டு கையை கழுவிவிட்டு வெற்றிலை பாக்கு போடும் போது ஒரு ஆத்தா சொன்னது, இந்த மாதிரி விருந்து சாப்பிட்டு நொம்ப நாள் ஆச்சு... சின்னச்சாமி கலக்கிபுட்டாரு என்றது...

நானும் சொல்கிறேன் இதை போல, விருந்து சாப்பிட்டு நிறைய நாள் ஆச்சு என்று.... 

இனி எந்த கண்ணாலத்தில் இப்படி சோறு போட போறாங்களோன்னு என் மனசு அல்லோல்டுது.