Sunday, December 1, 2013

சிறுகதை எழுதுங்க... பரிசை அள்ளுங்க...


வெட்டி ப்ளாக்கர்ஸ் என்ற பெயரில் வெட்டியாக அரட்டை அடித்துக்கொண்டு இருந்த எங்கள் வெட்டி ப்ளாக்கர்ஸ் நடத்தும் அற்புதமான அதே சமயம் திறமை உள்ளவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து அதை பல பிரபலங்களிடம் கொண்டு சேர்க்கும் வண்ணமாக வெட்டிப்ளாக்கர்ஸ் நடத்தும் சிறுகதை போட்டி... இந்த போட்டியில் கலந்து கொண்டு அற்புதமான சிறுகதை எழுதுங்கள்.. பரிசுகளையும், புகழையும் அள்ளுங்கள்.. இதில் வெற்றி பெறும் சிறுகதையை குறும்படமாக எடுக்கவும் வெட்டிப்ளாக்கர்ஸ் அணி தயாராகிக்கொண்டு இருக்கின்றது...

வாருங்கள் உங்கள் கற்பனையை கதையாக்குங்கள்., பரிசுகளை அள்ளுங்கள்...


பரிசுத் தொகை
முதல் பரிசு ரூ 5000
இரண்டாம் பரிசு ரூ 2500
மூன்றாம் பரிசு ரூ 1500
சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு
விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)
2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.
3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்
4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. கதைக்களம் இலக்கியம்க்ரைம்சஸ்பென்ஸ்நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.
6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.
கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர்வலைத்தள முகவரிஉங்கள்தொடர்பு எண்  குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும். 
  • கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 
  • நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
  • போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.
  • கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்


நடுவர்கள்
முதல் சுற்று நடுவர்கள்
கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி (சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்
இரண்டாம் சுற்று நடுவர்கள்
பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
மூன்றாம் சுற்று நடுவர்கள்
வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)

ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com  என்ற முகவரிக்கு மடல் வரைக....

Wednesday, November 27, 2013

அஞ்சறைப்பெட்டி 28.11.2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

கடந்த 10 நாட்களாக கோவையில் உள்ள CBSE, ICSE பள்ளிகளுக்கு படையெடுத்தேன் ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் வாங்குகின்றார்கள் அங்கு என் மகனுக்கு சீட் கிடைக்குமா என்ற பல அழைந்தேன். நிறைய அறிந்தேன் முக்கியமாக பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை விட அதிகமாக தர பெற்றோர்கள் இங்கு நிறைய இருக்கின்றனர் என்பது தான் மறுக்க இயலாத உண்மை. சரி அத விடுவோம் என் கதைக்கு வருகிறேன். என் மகனை இந்த இரண்டு syllables சேர்த்துவது என்று எங்க வீட்டு செயற்குழுவும், பொதுக்குழுவும் முடிவெடுத்து விட்டனர். எனது நிலையான சமச்சீர் அரசுபள்ளி என்ற வாதம் வெட்டி வாதம் ஆகிடுவிடும் என்பதால் நானும் பொதுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்து விசாரிக்கும் வேளையில் தீவிரமானேன்...

இரண்டு பள்ளியில் பையன் நேர்முகத்தேர்வுக்கு சென்றான் இன்னும் ரிசல்ட் வரவில்லை இன்று மதியம் தான் ரிசல்ட் என்பதால் காத்திருக்கிறேன் எந்த பள்ளி என்று.

.......................................

நாட்டில் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை நாட்டை ஆள நினைக்கும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் பல பிரச்சனைகள், பக்கத்து வீட்டுக்காரருக்கும், எதிர்த்த வீட்டுக்காரருக்கும் குப்பை பிரச்சனை, பங்காளிகளுக்கு வாய்க்கா வரப்பு பிரச்சனை, குழந்தைகளுக்கு படிப்பு பிரச்சனை, ஆபிஸ் போன வேலை செய்ய பிரச்சனை என பல பிரச்சனைகள் இத்தனை பிரச்சனைய சொல்ற எனக்கு மகனை எங்கு சேர்த்துவது என்ற பிரச்சனை...

.......................................


ஏற்காடு இடைத்தேர்தல் தான் இன்று களைகட்டுகிறது தமிழகத்தில் ஆளும் கட்சியும் எதிர் கட்சியியும் போட்டி போட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றனர். தேர்தல் முடிந்ததும் ஏற்காட்டின் நிலையை நினைச்சுபார்த்தால் சிரிப்பு தான் பலமாக வருகிறது. சமீபகாலங்களில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி தான் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது. இங்கும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புவோம்... என்ன இருந்தாலும் இடைத்தேர்தல் வரும் தொகுதி மக்கள் ரொம்ப கொடுத்து வெச்சவங்கதான் என்பதை மறக்க இயலாது.



.......................................


தமிழ்நாட்டின் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் டெல்லியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 11 இடங்களில் போட்டியிடுவதை பாராட்டித்தான் ஆகவேண்டும். வெற்றியோ தோல்வியோ கவலையில்லாமல் டெல்லி சென்று அங்கு போட்டியிடுவது மிக பெருமைக்குரிய விசயம்.. கேப்டனுக்கு நம்ம அட்வான்ஸ் வாழ்த்தை சொல்லி வைப்போம்.

.......................................  



காதலனுக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி ரூ.120 கோடி மதிப்புள்ள தீவு ஒன்றை பரிசளிக்கிறார்.

பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (38). ஆஸ்கார் விருது பெற்றவர். இவரது காதலன் ஆலிவுட் நடிகர் பிராட் பிட். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றனர். 6 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் பிராட் பிட் தனது 50–வது பிறந்த நாளை வருகிற டிசம்பர் 18–ந்தேதி கொண்டாட உள்ளார். அதைத்தொடர்ந்து அவருக்கு தனது காதல் பரிசாக ஏஞ்சலினா ஜோலி இருதய வடிவிலான ஒரு சிறிய தீவை பரிசளிக்க உள்ளார். அது அமெரிக்காவின் பெட்ரா போஸ்ட்ஸ் பகுதியில் உள்ளது. இங்கு பிராட் பிட்டுக்கு மிகவும் பிடித்தமான கட்டிட கலை நிபுணர் பிராங்க் லியோட் ரைட் வடிவமைத்த 2 பிரமாண்ட பங்களாக்களையும் கட்டியுள்ளார்.

இவற்றின் மதிப்பு ரூ.120 கோடியாகும். பெட்ரா போஸ்ட்ஸ் பகுதிக்கு மேன்ஹட்டன் நகரில் இருந்து 15 நிமிடத்தில் செல்ல முடியும். இப்பகுதி இயற்கை எழில் நிறைந்தது.

 
தகவல்


பூமியின் துணைக்கோளான நிலவை ஆராய அடுத்த மாதம் பச்சை நிறத்திலான முயல்வடிவ ரோபோவை (ரோவர்) அனுப்ப சீனா திட்டமிட்டு வருகிறது. யூடு என்றழைக்கப்படும் இந்த ஆராய்ச்சியே சீனாவின் முதலாவது ஆளில்லா ஆய்வு என்று கூறப்படுகிறது.

நிலவில் தரையிறக்கப்படும் இந்த ரோவர் கருவியானது ரெயின்போ குடா என்றழைக்கப்படும் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு செய்யும். இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் விரைவில் முடிவடையுமானால் அடுத்த மாத மத்தியில் இந்த ரோபோவை நிலவில் இறக்க சீனா திட்டமிட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ள சீனா, 2007-ம் ஆண்டு நிலவை சுற்றிவந்து ஆராய சாங்கெ என்ற விண்கலத்தை அனுப்பியது.

விண்வெளியில் சீனா கட்டிவரும் வரும் விண்வெளி ஆய்வுக்கூடத்திற்கு கடந்த ஜூன் மாதம் 3 விண்வெளி வீரர்கள் சென்றனர். அவர்கள் சென்ற விண்கலத்தை ஆய்வுக்கூடத்தில் வெற்றிகரமாக இணைத்தனர். பின்னர் 15 நாட்கள் அங்கு தங்கி ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர்.

ரஷ்யா, அமெரிக்காவிற்கு அடுத்து மூன்றாவது நாடாக விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பிய நாடு என்ற பெருமையை சீனா பெறுகிறது.



தத்துவம்


தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!

நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.

Wednesday, November 20, 2013

அஞ்சறைப்பெட்டி 21.11.2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

பெங்களூர் ATM கொள்ளை சம்பவம் பொது மக்களிடையே மிகவும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது. இனி பணம் எடுக்க செல்பவர்கள் கூட ஒருவரை அழைத்து செல்லனும் போல குறிப்பாக பெண்கள். இந்த கொள்ளை சம்பவத்துக்கு முக்கிய காரணம் உள்ளே என்ன நடந்தாலும் வெளியே தெரியாத அந்த ATM அமைப்பு தான். ஒரு ஆள் மட்டும் நிற்கவும் உள்ளே ஆள் நின்றால் வெளியே தெரிவது போல அமைத்திருக்கலாம். உள்ளே ஒருவர் நுழைந்தவுடன் கதவு தானாக லாக் ஆகிவிடுவது போல நிறைய ATM இருந்தாலும் அது சரியாக வேலை செய்வதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

ATM பாதுகாவலர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம் அவர்கள் வயதானவர்களாகத்தான் அதிகம் இருக்கின்றனர் அதனால் அவர்களை குறை சொல்லி பயன் இல்லை. வங்கிகள் ஆட்களை நியமிக்கும் போது திடகார்த்தமான ஆட்களை நியமிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். நம் பணத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் வங்கிகள் அதை நாம் பெறும் போதும் பாதுகாப்பாக பெற வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும்... இப்படி நிறைய சொல்லி கிட்டே போகலாம் ஆனால் இது போல கொள்ளைகள் குறைவாக இருக்குமா என்பது கேள்விக்குறி... அதற்கு மிக முக்கிய தீர்வாக கடுமையான தண்டனைகள் கொடுப்பதன் மூலம் ஓர் அளவு கட்டுப்படுத்தலாம்.

எதற்கும் பணம் எடுக்க போகும் போது பாதுகாப்பான இடங்களை தேர்ந்தெடுங்கள் மிக முக்கியமாக மக்கள் நடமாடும் நேரங்களில் செல்லுங்கள்..


.......................................


காமன்வெல்த் மாநாட்டிற்கு சென்ற பிரதமர்களில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் அவர்களை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். மாநாட்டுக்கு போணமா ஊரைச்சுற்றி பார்ப்பவர்கள், மாநாடு சிறப்பாக நடைபெற்றது என்று ஜால்ரா தட்டுபவர்கள் இவர்களை எல்லாம் கடந்து வடபகுதியில் தனது பயணத்தை மேற்கொண்டு மக்களிடம் பேசி அவர்கள் கருத்தை அறிந்த ஒரே பிரதமர் இவர் தான் அதற்காகவே இவரை நிச்சயம் பாராட்டவேண்டும்..

நம் பிரதமரும் இதைச் செய்திருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்க மிக வசதியாக இருந்திருக்கும் அந்தவாய்ப்பை நழுவிவிட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்...

.......................................

சமீபத்தில் திருக்கொள்ளிக்காடு சென்றிருந்தேன் காவிரி டெல்ட்டா மாவட்டங்களுக்கு இதுவரை இரு முறை தான் சென்றிருக்கிறேன். தஞ்சையில் இருந்து மன்னார்குடி வழியாக சென்றிருந்தேன். தஞ்சை, மன்னார்குடி, திருக்கொள்ளிக்காடு வரை செல்லும் போது தான் தெரிஞ்தது காவிரியின் மகிமை சாலையில் இருபுறமும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என நெற்பயிர்கள் அவ்வப்போது காரை நிறுத்தி ரொம்ப ரசித்தேன் இப்பகுதிகளை அம்மூட்டு அழகு.. கொடுத்து வைச்சவர்கள் அந்த ஏரியாவில் இருப்பவர்கள். வழியில் இருக்கும் ஊர்கள் எல்லாம் நிறைய இடங்களில் பழமை மாறாமல் இருந்தது.



வடுவூர் பறவைகள் சரணாலாயம் நாங்கள் சென்ற காலைப்பொழுதில் ரம்மியமாக இருந்தது. சில்லென்ற சாரல் மழையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பறவைகள் நிறைய வித்தியாமாக இதுவரை பார்க்காத பறவைகள் எல்லாம் இருந்தது மனதை நிறைய கொள்ளை அடித்தது அந்த இடம்.



நிச்சயம் செல்லவேண்டிய ரசிக்கவேண்டிய ஊர்கள் அங்கு நிறைய இருக்கு.....


.......................................


இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் குழந்தை பிறந்த பின்னர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் குட்டி இளவரசர் ஜார்ஜை பேணி பாதுகாப்பதில் அக்கறையாக உள்ளார்.

முதன்முதலாக லண்டனில் உள்ள ஒரு பள்ளி விழாவில் பங்கேற்க ஒப்புக்கொண்ட அவர் இன்று காலை காரில் வந்து இறங்கினார். கருப்பு நிற குட்டை பாவாடை அணிந்து 'சிக்' என்று வந்திறங்கிய இளவரசியை தங்களது கேமராக்களில் சிறைபிடிக்க நிருபர்கள் முந்தியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.

அவரை வரவேற்ற ஒரு சிறுமி இளவரசிக்கு பூங்கொத்தை அளித்தபோது, அதை பெற்றுக்கொள்ள அவர் குனிந்தார். அந்த நேரம் பார்த்து வீசியடித்த சுழற்காற்றில் குட்டை பாவாடை விரிக்கப்பட்ட குடை போல மேல்நோக்கி பறந்தது.

இந்த அபூர்வ காட்சியை படம் பிடிக்க போட்டோ கிராபர்களுக்குள் கடும் போட்டோ போட்டியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

சுதாரித்துக்கொண்ட கேட் மிடில்டன் பாவாடை மேலும் உயர்ந்து விடாதபடி இடது கையால் சரிசெய்தார்.

லண்டன் ஊடகங்களில் மட்டுமின்றி, சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கூட இங்கிலாந்து இளவரசியின் குட்டை பாவாடை காற்றில் பறந்த செய்திதான் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ளது.

.......................................  


அண்டார்டிகா கடலுக்கு அடியில் குமுறும் எரிமலை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பனி பிரதேசமான அண்டார்டிகாவில் கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஐஸ் கட்டிகளுக்கு அடியில் ஏதோ ஒன்று மெதுவாக கொழுந்து விட்டு எரிவதை அறிந்தனர்.

அதைத்தொடர்ந்து ரேடார் மூலம் அப்பகுதியில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பனிக்கட்டிக்கு அடியில் 1 கிலோ மீட்டர் ஆழத்தில் எரிமலையின் சிகரம் தெரிந்தது. அதற்குள்ளே குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை இருப்பது தெரிய வந்தது.

இந்த எரிமலை ஒருநாள் திடீரென வெடித்து சிதறும். இதனால் தற்போது விட 1000 மடங்கு வெப்பம் வெளிப்பட்டு அதன் மூலம் பெரிய அளவில் ஐஸ் கட்டிகள் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பல லட்சம் காலன் அளவிலான அந்த தண்ணீரால் ஏராளமான ஏரிகள் நிரம்பும் என்றும் தெரிவித்தனர். இதன் மூலம் கடலின் நீர் மட்டம் பெருமளவில் உயர்ந்து தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
 
தகவல்



 கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கடந்த மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

பிறக்கும் போதே சுவாசக் கோளாறுடன் இருந்ததால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர். கடந்த 12ம் தேதி குழந்தையின் நிலைமை மோசமடைந்ததால் அதை காப்பாற்ற வெகு நேரம் போராடிய டாக்டர்கள் அது இறந்துவிட்டதாக தெரிவித்து, இறப்பு சான்றிதழும் வழங்கி டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பினர்.

சோகத்தில் மூழ்கிப்போன பெற்றோர் அதை புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தபோது உடலில் சிறு அசைவு ஏற்பட்டதை உறவினர் ஒருவர் கவனித்தார்.

இதனையடுத்து, அவசர அவசரமாக அன்ஹுய் மாகாண அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் தூக்கிக்கொண்டு ஓடினர்.

உடனடியாக, உயிர் காக்கும் கருவிகளின் துணையுடன் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. உயிருடன் உள்ள குழந்தை இறந்து விட்டதாக சான்றிதழ் தந்த டாக்டர் மற்றும் நர்ஸ் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதை குழிக்கு போகும் வழியில் உயிர் பிழைத்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தத்துவம்







காலம் கடந்து கொடுக்கப்படும் எந்த ஒரு சரியான தீர்ப்பும் தவறானதே!

ஜெயிக்கிறவன் எவனும் பேச மாட்டான்! பேசாம இருக்குறவன் எவனும் ஜெயிக்க மாட்டான்

கஷ்டம் என்றால் என்னவவென்று தெரிந்துகொள்ளவே கஷ்டப்படுகிறேன்! 

Wednesday, October 30, 2013

அஞ்சறைப்பெட்டி 31/10/2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........



ஐப்பசியில் அடை மழை என்பது இந்த வருடம் கொஞ்சம் பழிக்கிறது போல அங்காங்கு மழை பெய்து நிலத்தை குளிரவைக்கிறது. எப்படியோ தீபாவளி அன்று மழை பெய்தால் தீ விபத்துக்கள் வெகுவாக குறையும் ஆதலால் வரவேற்போம் மழையை...
.......................................

 மோடி பேசிய பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்தது என்பது பாதுகாப்பு அலட்சியத்தை காட்டுகிறது. யாராக இருந்தாலும் சரியான பாதுகாப்பு கொடுக்கவேண்டியது அந்த மாநிலத்தின் கடமை. காழ்ப்புணர்ச்சியால் பாதுகாப்பை குறைத்தது அல்லது அலட்சியமாக இருந்தது கண்டிக்கத்தக்கது. இனியும் இது போன்ற தவறுகள் நடக்கா வண்ணம் இருக்கவேண்டும். ஒரு முறை போனால் கிடைக்காது உயிர் அது தலைவர்களது உடலாக இருந்தாலும் பொதுமக்கள் உடலாக இருந்தாலும் அதற்ககாவாவது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்...

 .......................................


தமிழகத்தின் அனைவரும் ஆவாலாக பார்ப்பது ஏற்காடு இடைத்தேர்தலைத்தான் அந்த அளவிற்கு மக்களுக்கு தேவையானவற்றை உடனே செய்து கொடுப்பாதல் மக்கள் இடைத்தேர்தலை விரும்ப ஆரம்பித்து விட்டனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அப்போது நடக்கும் இடைத்தேர்தலில் அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்பது அவர்களுடைய ஆவலாக இருக்கின்றது இப்போதும் அப்படித்தான். இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி நிச்சயமாக்கப்பட்ட ஒன்று..

.......................................

சென்னையில் புதிய பஸ்களில் இலைச்சின்னம் வரைந்துள்ளனர் இதனால் அவர்களது சின்னத்தை மக்களுக்கு விளம்பரப்படுத்துகின்றனர் என பலர் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். என்னைய பொறுத்தவரை பொதுக்கள் பேருந்தில் இடம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்களோ தவிர படத்தை பார்த்து யாரும் பேருந்தில் ஏறுவதில்லை. பொதுமக்களுக்கு இந்த பேருந்தால் பயன் இல்லையா என்றால் கோர்ட்டுக்கு சென்றவர்கள் எல்லாம் நிச்சயம் பதில் சொல்ல தயங்குவர்...

.......................................  



செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற் கொள்ள அமெரிக்காவின் 'நாசா' மையம் அங்கு கியூரியா சிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு மற்றும் மலையை போட்டோ எடுத்து அனுப்பி வைத்தது. காற்றின் வேகம், தட்ப வெப்ப நிலை போன்ற வற்றை அளவீடு செய்து தகவல்களை அனுப்பி வருகிறது.

கியூரியா சிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நிலப் பரப்பில் ஆங்காங்கே நகர்ந்து மாதிரிகளை சேகரித்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் உள்ள கொலந்தர் என்ற பெரிய மலையின் வடமேற்கு பகுதியில் ஏறி அங்குள்ள மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து வருகிறது.

15 முதல் 20 டிகிரி செங்குத்தான உயரத்தில் 2 முதல் 6 மீட்டர் வரை ஏறியுள்ளது. அது 40 மீட்டர் உயரம் ஏறி அங்குள்ள மண் மற்றும் பாறைகளை வெட்டி எடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்.

கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் சுமார் 10 ஆண்டுகள் தங்கியிருந்து ஆராய்ச்சி நடத்துகிறது.



..............................



இணைய நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மனம் திறந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
 
தீபாவளி அன்று அனைவரும் மறக்காமல் எண்ணெய் தேய்த்து குளித்து குடும்பத்துடன் கொண்டாடுங்கள் தீபாவளியை...


 
தகவல்

 
 
நார்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள எழில் மிகும் கிராமம், ர்ஜுக்கான்.

இதர பெரிய வசதிகள் ஏதுமற்ற இந்த கிராமத்தில் உள்ள நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு ஒர் உரத் தொழிற்சாலையும் ரெயில் பாதையும்  மட்டும் உண்டு.

இந்த உரத்தொழிற்சாலையையும், இப்பகுதியில் வளமான மண் உள்ளதால் விவசாயம் செய்து பிழைத்து கொள்ளலாம் என நம்பி 1900-ம் ஆண்டு வாக்கில் வெறும் 300 பேர் இங்கு குடியேறினார்.

தற்போது சுமார் 3500 மக்கள் வசிக்கும் இந்த கிராமம் ஆண்டில் 6 மாதங்கள் (மழை மற்றும் குளிர் காலம்) சூரிய ஒளியை சந்திக்க முடியாதபடி சுற்றிலும் உள்ள மலை முகடுகள் தடைக்கற்களாக இருந்தன.

இங்குள்ள மக்களின் உடலில் சூரியனின் கதிர்கள் விழ வேண்டும் என்றால் பல மைல்களுக்கு அப்பால் மலையை கடந்து செல்ல வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் இருந்த இங்கு வந்த மார்ட்டின் ஆண்டர்சன் என்பவர் இந்த கிராமத்தை கவ்வியிருந்த இருளை போக்க ஒரு வழியை கண்டுபிடித்தார்.

சூரிய காந்தி பூவைப் போல் சூரியன் போகும் திசையில் எல்லாம் அதை பின்தொடர்ந்து செல்லும் தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர்களின் உதவியுடன் இயங்கும் ராட்சத நிலைக் கண்ணாடிகளை மலைகளின் வடக்கு பகுதி உச்சியில் அவர் அமைத்தார்.

8 1/2 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட இந்த நிலைக்கண்ணாடிகள் மூலமாக இந்த கிராமத்தின் மையப் பகுதியான  சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதி ஆண்டின் 365 நாட்களிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கிறது.

தத்துவம்


பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.

ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.

Wednesday, October 9, 2013

அஞ்சறைப்பெட்டி 10.10.2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........




மீண்டும் புயல் வருகிறது தமிழகத்துக்கு அவ்வளவு அபாயமில்லை என்று தினமும் ஒரு செய்தியாக வருகிறது.. உண்மைய சொன்னால் எங்க ஊரில் கடந்த சில நாட்களாக வெய்யில் பட்டைய கிளப்புது. மழை வந்தால் சந்தோசமாகத்தான் இருக்கும். மழை வரனும், குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பனும், விவசாயம் செழிப்பாக இருக்கனும் இது தான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும்... பார்ப்போம் என்ன நடக்குது என்று...

.......................................

நிறைய முறை எழுதி இருந்தாலும் நான் அடிக்கடி செல்லும் வழித்தடம் என்பதால் மிக மிக ரசிப்பேன் நான் மட்டுமல்ல கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அனைவரும் நிச்சயம் ரசிக்கவேண்டிய பாதை அது.. கோபியில் இருந்து அத்தாணி செல்லும் பாதையும், கோபியில் இருந்து கள்ளிப்பட்டி செல்லும் பாதை, கோபியில் இருந்து பங்களாப்புதூர் செல்லும் இந்த 3 பாதைகளையும் தான் நான் மிக ரசிப்பது.. எவ்வளவு மனச்சுமை இருந்தாலும் அந்த பாதைகளில் சொல்லும் 20 நிமிடத்தில் நம் மனது சுத்தமாக ரிலாக்ஸ் ஆவது நன்றாக தெரியும்... கோபி போன நிச்சயம் இந்த பக்கம் போய்ட்டு வாங்கப்பா...



 .......................................

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி  முதல்வர் சுரேஷ், இவரை மாணவர்கள் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றது. இந்த செய்தியை படித்ததும் நிச்சயம் அந்த தவறு  செய்த மாணவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இந்த சம்பவத்திற்கு தரும் தண்டைனயால் மற்ற மாணவர்களுக்கு பாடமாக அமையவேண்டும்.

இன்று கல்லூரியில் சேரும் முன்பே எப்படியாவது கேம்பசில் வேலை வாங்கிட வேண்டும் என்று வெறியுடன் படிக்கும் மாணவர்கள் நிறைய கேள்விப்பட்டு இருக்கோம். கேம்பசில் வேலை கிடைக்காமல் வெளியே வந்து 5000ற்கு வேலைக்குச்செல்லும் பல மாணவர்கள் இருக்கின்றனர் இன்றும். இந்த மாதிரி தவறுகள் எதோ சில மாணவர்கள் செய்வதால் பாதிப்பு எல்லோருக்கும் தான் என்பதை இன்னும் உணரவேண்டும் மாணவர்கள்...

.......................................


இந்த வருடம் ஏற்காடு சட்டமன்றத்தில் வசிக்கும் மக்களுக்கு ஏறுமுகம் தான் எல்லா சாலைகளும் செப்பனிட்டு இருப்பர், எல்லா குடிநீர் குழாய்களிலும் தண்ணிர் வரும், மின்சாரம் தடைபடாது, தேவைகளை அனைத்தையும் உடனே செய்து கொடுப்பர் எல்லாம் இடைத்தேர்தல் படுத்தும் பாடு  இந்த முறை திமுக முன்னதாகவே களம் இறங்கி உள்ளதால் ஏற்காடு வாக்காளர்களுக்கு கொண்டாட்டம் தான்....

.......................................  

மோடி, மோடி எங்கும் இந்த பேச்சுதான், 10 வருடம் காங்கிரஸ் ஆட்சியில் அத்தியாவிசயப்பொருட்களின் விலை ஏற்றம், தமிழக மீனவர்கள் தாக்கல், கூடங்குளம், முல்லை பெரியார் என நிறைய தீர்க்கப்படாத பிரச்சனைகள், மோடிக்கும் இணையதளங்கள், மீடியாக்களால் பொது மக்களிடமும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது இது மோடி வெற்றிக்கான அறிகுறி என்று கூட சொல்லாம்.. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

..............................

தமிழக கட்சிகள் மத்திய ஆட்சிக்கு கூட்டணிக்கு அச்சாரம் இன்னும் தெளிவாக அறிய இயலவில்லை இங்கு மும்முனை போட்டி இருக்குமா அல்லது வழக்கம் போல் இரு முனை போட்டியா என்று குழப்பம் எல்லோரையும் போல எனக்கும் உள்ளது ஏற்காடு தேர்தலுக்கு பின் முழுதாக தெரியும்... அதற்கு பின்தான் இங்கு யாருக்கு 40க்கு 40 என்ற விவாவதம் களைகட்டும்..



..............................



குழந்தைகள் முதல் முதியவர் வரை சாக்லேட் என்ற மந்திர வார்த்தையை கேட்டவுடன் இளமுறுகலான அந்த பொன்னிறமும், மனதை சுண்டி இழுக்கும் அதன் மணமும், சுவையும் நாக்கில் நீரை சுரக்கச் செய்து விடும்.

கோக்கோ என்னும் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் அசல் சாக்லேட்களுக்கு உலகளாவிய அளவில் கடும் கிராக்கி உள்ளது. ஒருபுறம் சாக்லேட் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம், கோக்கோவை பயிரிடும் விளை நிலங்கள் நாளடைவில் குறுகிக்கெண்டே போகின்றன.

கோக்கோவை பணப் பயிராக விளைவித்து வந்த விவசாயிகள் பலர் தற்போது அதிக லாபம் தரக்கூடிய ரப்பர் மரத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கி விட்டனர்.

தரமான கோக்கோ விளைச்சலுக்கு பெயர் போன தென்னாப்பிரிக்க நாடுகளும் இனி கோக்கோவை பயிரிடுவதால் பெரிய லாபத்தை பார்க்க முடியாது என்று முடிவெடுத்து விட்டது.

இந்நிலையில், தேர்வில் 'பாஸ்' ஆகிய செய்தியை சொல்ல, காதலை வெளிப்படுத்த என ஆண்-பெண் இருபாலருக்கும் அருமையான தூதுவனாக இருந்து வந்த சாக்லேட்டின் விலை தாறுமாறாக எகிறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுவும், முழுக்க முகுக்க பதப்படுத்திய கிரீமி சாக்லேட்களுக்கு பதிலாக, சிறிதளவு சாக்லேட் கலக்கப்பட்ட மொறுமொறுப்பான 'வேஃபர்' வகைகள் தான் சந்தையில் கிடைக்கும்.

2020-க்கு பிறகு தூய சாக்லேட் என்பது சாமான்ய மக்களின் கைகளுக்கு எட்டாத அரிபொருளாகி விடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



 
தகவல்


உலகின் ஏல நிறுவன வரலாற்றில் முதன்முறையாக ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அரிய வகை வைரம் ஒன்று 3 கோடி டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 180 கோடி ரூபாய்) ஏலம் போனது.

பிரபல சோத்பை ஏல நிறுவனம் இந்த முட்டை வடிவ வைரத்தை ஏலம்விட போவதாக அறிவித்த போது 2 கோடியே 80 லட்சம் மற்றும் 3 1/2  கோடி டாலர்களுக்கு இடையே இது விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹாங்காங்கில் நேற்று 6 நிமிடம் நீடித்த இந்த ஏலத்தின் போது போன் மூலம் ஏலம் கேட்ட ஒருவர் இறுதியாக 238.68 ஹாங்காங் டாலர்களுக்கு இந்த வைரத்தை தனதாக்கி கொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள வைர சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட போது இந்த வைரம் 299 கேரட் எடை கொண்டதாக இருந்தது. பட்டை தீட்டி இந்த வடிவத்திற்கு வந்துள்ள அதன் தற்போதைய எடை 118.28 கேரட் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தத்துவம்

உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால், எதிலும் மிதமாக இரு

அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே

தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே

 

 


Wednesday, October 2, 2013

அஞ்சறைப்பெட்டி 03/10/2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........


எனது இதழில் எழுதிய கவிதைகள் புத்தகத்திற்கு நண்பர்களின் விமர்ச்சனம் எழுதியது மிக சந்தோசமாக இருந்தது. நமக்கு பிடிச்சதை எழுதுகிறோம் அதை விமர்ச்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு அதில் தூற்றுதலும் இருக்கலாம், போற்றுதலும் இருக்கலாம். என்னைப்பொறுத்தவரை போற்றுதலை பார்த்து விட்டு, தூற்றுதலைதான் ரொம்ப வரவேற்றேன். எனக்கு பிடித்ததும் அது தான். அடுத்தமுறை இந்த தவறுகள் வராமல் பார்த்து கொள்ளவேண்டும். விமர்ச்சித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...

.......................................

ஒரு மாதமாக படாத பாடு படுகிறேன் ஒரு சின்ன Hair Line Fracture ஏற்பட்டதால் தற்போது தான் வழிகள் குறைந்து ஓரளவிற்கு நடக்க முடிகிறது கட்டு பிரிக்க இன்னும் 2 நாட்கள் உள்ளதால் எப்போது பிரிப்போம் என்று ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.. அந்த அளவிற்கு கட்டு வெயிட்டாக உள்ளது. கை, கால்கள் உடைந்தால் கூட கட்டுப்போட்டு பொறுத்துக்கலாம் இந்த சின்ன விரிசலுக்கு பொறுத்துக்கொள்வதற்குல் போதும் போதும் என்றாகிவிட்டது.


 .......................................

 
மனைவிக்கு பைக் ஓட்டி பழக்கிறேங்கற பேர்ல பின்னாடி உட்கார்ந்து பழக்கிவிடும் இந்த கணவன்கள் பன்ற இம்சை தாங்கல...

சம்பவம்
சனிக்கிழமை இரவு மனைவி வண்டியை ஓட்ட கணவன் பின்னாடி உட்கார்ந்து கையபுடிச்சி ஓட்டிய மனுசன் கைய எடுக்கும் போது மனைவி இடுப்பை கிள்ள மனைவி தடுமாற வண்டிய திருப்ப வீட்டு வாசலில் நின்று இருந்த நடுத்தரவயதுக்காரார் மேல விழ தம்பதியினர் ரோட்டில் விழுந்துட்டாங்க.. பாவம் வேடிக்கை பார்த்தவர் சாக்கடையில் விழுந்து படாத பாடு பட்டார்... ( இடுப்பை கிள்ளாம இருந்திருந்தா தப்பிச்சிருப்பார்) அவர் நேரம்...

.......................................



பெட்ரோல் விலையை 3 ரூபாயை குறைத்து டீசல் விலையை ஏற்றிவிட்டனர் டீசல் விலையை உயர்த்துவதால் தினமும் புழுங்கும் பொருட்கள் விலை இன்னும் உயரும் என்பதை அறிந்தும் உயர்த்துகின்றனர். எவ்வளவு உயர்த்தினாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் அந்த பொருளை அந்த விலை கொடுத்து வாங்கும் நாம் இருக்கும் வரை உயர்த்திகொண்டு தான் இருப்பர்.
 
.......................................  


2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை அப்போது உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 970 கோடியாக உயரும் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த 200 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 7 மடங்கு அதிகரித்து தற்போது 710 கோடியாக உள்ளது.

இதில் 130 கோடி பேர் சீனாவிலும், 120 கோடி பேர் இந்தியாவிலும் உள்ளனர். அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியா மற்றும் சீனாவில் பிறந்தவர்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


..............................


 
எந்த பத்திரிக்கை எடுத்தாலும் மோடி பற்றி செய்தி இல்லாமல் இருப்பதில்லை அந்த அளவிற்கு தினமும் ஒரு மாநிலத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அந்த மாநிலம் மட்டும் இல்லாமல் எல்லா இடத்திலும் பேசவைக்கிறார் அவர் பேச்சை. மக்களிடம் நன்கு பிரபலமான ஒருவராக உருவெடுத்து வருகிறார் நிச்சயம் இந்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு என தனி அந்தஸ்து கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.


..............................



இங்கிலாந்து பெண்ணுக்கு ஒரே கருமுட்டையில் உருவான 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த பெண் கில்பெர்ட். இவர் கர்ப்பிணி ஆக இருந்தார். டாக்டரிடம் சென்று சோதனை செய்தபோது ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகி இருந்தது தெரிய வந்தது.

இது போன்று ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகுவது ஆபூர்வமாகும். 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும். எனவே டாக்டர்கள் அவரை தீவிரமாக பரிசோதித்தனர்.

அப்போது, இக்குழந்தைகளை தாங்கி சுமந்து பெற்றெடுக்கும் வகையில் கில்பெர்ட் உடல் நிலை இல்லை என தெரிந்தது. எனவே, இக்குழந்தைகளை கருக்கலைப்பு செய்யும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் அதை கில்டெர்ட்டும் அவரது கணவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக கடந்த ஆகஸ்டு மாதத்தில் நியூபோர்ட்டில் உள்ள ராயல் ஜிவென்ட் ஆஸ்பத்திரியில் 3 குழந்தைகளும் பிறந்தன. அவை அனைத்தும் பெண் குழந்தைகளாகும்.

அக்குழந்தைகள் தலா 1.75 கிலோ எடை இருந்தன. இவர்களுக்கு பியான், மட்டிசான், பாய்ஜ் என பெயரிட்டுள்ளனர். 6 வாரங்கள் ஆஸ்பத்திரி பராமரிப்பில் இருந்த அக்குழந்தைகள் சமீபத்தில் வீடு திரும்பினர்.



 
தகவல்



சனி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘காசினி’ விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது சனியின் துணை கிரகமான டைட்டனிலும் ஆய்வு மேற்கொண்டது. அப்போது டைட்டனின் கீழ்மட்ட வான்வெளியில் ‘புரோபைலீன்’ என்ற மூலப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தது. அது சனி கிரகம் மற்றும் அவற்றின் துணை கிரகங்களிடம் இருந்து வெளியாகும் வெப்ப அளவை ‘இன்பிராட் ஸ்பெக்ட்ரோ மீட்டர்’ மூலம் காசினி விண்கலம் அளந்த போது அது தெரிய வந்தது.

‘புரோபைலீன்’ என்ற இந்த ரசாயன மூலப்பொருள் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இதில் இருந்து தான் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. அது ‘பாலிபுரோபைலீன்’ என்றழைக்கப்படுகிறது.

இந்த தகவலை நாசா விஞ்ஞானி கார்னர் நிஸான் தெரிவித்துள்ளார். கடந்த 1980–ம் ஆண்டில் ‘வாயேஜர்–1’ என்ற விண்கலம் சனி கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டது. அது டைட்டன் கிரகத்தை ஒட்டி பறந்த போது அங்கு புரோபைலீன் இருப்பதை சூசகமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தத்துவம்


நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.

மிகக் குறைந்த செல்வத்தைக் கொண்டு எவன் திருப்தி அடைகின்றானோ அவன்தான் முதன்மை செல்வன். ஏனெனில் இயற்கையின் செல்வம் திருப்திதான்.

சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

Wednesday, September 18, 2013

அஞ்சறைப்பெட்டி 19.09.2013



  



உள்ளுரில் இருந்து உலகம் வரை........



வணக்கம் நண்பர்களே.

உங்களை எல்லாம் வலைப்பதிவில் சந்தித்து கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகிவிட்டது கால ஓட்டத்தில் நானும் முகநூலில் அதிக நேரம் செலவிடுவதால் பதிவுகள் எழுத நேரம் வருவதில்லை. இத்தனைக்கும் தினமும் யோசிக்கும் பதிவுகளை எல்லாம் டைப் செய்து  draft ஆக வைத்திருக்கிறேன் 50க்கும் மேற்றபட்ட பதிவுகள் அதை சரி செய்ய சரியான நேரம் போதவில்லை என்பதால் தினமும் பதிவு எழுத இயலவில்லை. அஞ்சறைப்பெட்டியை மட்டுமாவது வாரம் தோறும் எழுத வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு எழுதி முடித்துவிட்டேன் இன்று.

.......................................


நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக களம் இறக்கி பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது பாஜக. நரேந்திர மோடி குஜராத்தில் நல்ல ஆட்சி நடத்துகிறார் என்று எல்லா ஊடகமும் சொல்லி இன்று நாட்டு மக்களிடம் மோடி நிறைய எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ளார் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா? முதலில் காங்கிரசின் வியூகத்தை உடைத்து வெற்றி பெறுவாரா? என்று பல கேள்விகள் தொடங்கி உள்ள நிலையில் 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு மாற்றாக ஒரு ஆட்சி வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் நான்.

 .......................................

தமிழ் ஹிந்து பத்திரிக்கையை கடந்த 2 நாட்களாக படித்து வருகிறேன் நிறைய தகவல்கள் இருக்கின்றன நம் பதிவுலகை போல் நிறைய கட்டுரைகள் இருக்கின்றன ஆனால் அதை படிக்கத்தான் போதிய காலம் இல்லை. இந்த அவரச உலகத்தில் செய்தித்தாளை முழுக்க மேயும் ஆட்கள் குறைவுதான். விடுமுறை நாட்களில் நன்றாக உட்கார்ந்து படித்து பொழுதை போக்கலாம் இதே போல் தினமும் நேரம் செலவழித்து படிப்பது எதிர்பார்க்க இயலாது. லோக்கல் செய்திகளுக்கான முக்கியத்துவம் அதிகம் இல்லை அது போக போக சரியாகிடும் என்று நினைக்கிறேன். தந்தி. தினமலர் எல்லாம் அந்த வட்டார செய்திகளை அதிகம் வெளியிட்டுத்தான் பேர் வாங்கி இன்றும் நிரந்திரமாக நிற்கின்றனர்.. பார்ப்போம் வரும் நாட்களில்..

தமிழ் பத்திரிக்கைகள் அனைத்தும் நெட்டில் அவர்கள் பக்கத்தில் இலவசமாக தருகின்றனர் ஆனால் இந்து மட்டும் பணம் கொடுத்து படிக்க வேண்டி உள்ளது.

.......................................


சமீபத்தில் வருத்தமில்லா வாலிபர் சங்கம் படம் பார்த்தேன் மிக குறைந்த பொருட்செலவில் நல்ல நகைச்சுவையுடன் கூடிய படம். படம் முழுக்க சிரிக்கவேண்டி இருந்தது இருந்த மனச்சுமை எல்லாம் காணமல் போனது போல ஓர் எண்ணம். படம் பார்த்து கதையில் ஈர்த்து அதற்காக அழுத காலம் எல்லாம் போய் படத்துக்கு போனமா சிரிச்சமா வந்தமா என்பது தான் இன்றைய காலத்திற்கு ஏற்ற சினிமா. நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் கலக்குவது மிக சந்தோசத்திற்குரியது.. இனி இந்த மாதிரி படங்களை நிறைய எதிர்பார்க்கலாம்.
 
.......................................  
மால்களில் சினிமா பார்க்க சென்றால் குறைந்த பட்சம் 3 பேருக்கு டிக்கெட், பாப்கார்ன், பப்ஸ், கார்பார்க்கிங் செலவு என குறைந்த பட்சம் 1000 தொடுகிறது பட்ஜெட். எம் பட்ஜெட்டுக்கு மாசத்துக்கு ஒரு படம் தான் பார்க்க முடியும் போல.


..............................

முதல்வரின் 10 ரூபாய் குடிநீர் திட்டம் மக்களிடம் மிக வரவேற்பை பெற்றுள்ளது சந்தோசத்திற்குரியது. எல்லா இடங்களிலும் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். அம்மாவின் உணவு திட்டம் மிக வெற்றியான திட்டம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

..............................

சென்னையில் ஆட்டோ கட்டணம் வரைமுறைப்படுத்தப்பட்டது மிக சந்தோசத்திற்குரியது. வடபழனியில் இருந்து சென்ரலுக்கு வருவதற்கு செப் 1ம் தேதி 220 ரூபாய் கேட்டனர் அப்புறம் துரத்தி புடிச்சி நிறைய வண்டிகளை பார்த்து பேசி 160 ரூபாய்க்கு வந்தோம். அப்போது ஆட்டோக்காரர் கட்டண விகிதம் உள்ள அட்டையை காண்பித்தார் அதே தொலைவிற்கு 160 போட்டு இருந்தது. அப்போது அந்த ஆட்டோக்காரர் எதுக்கு சார் மக்கள் காசை புடுங்கனும் எனக்கு இந்த அட்டை கொடுத்த நாள் இருந்து இதில் உள்ள காசுக்குத்தான் ஆட்டோ ஓட்டுகிறேன் என்றார் மகிழ்ச்சியாக. இப்படியும் நிறைய நல்ல மனம் படைத்த ஆட்டோ ஓட்டுநர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதே தொலைவிற்கு அதிக 220 கேட்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.




தமிழக அரசு பறக்கும் படை அமைத்து மீட்டர் உட்பட ஆட்டோவின் உரிமங்களை பரிசோதிப்பதை நிறைய பேர் வரவேற்றும் நிறைய ஆட்டோக்காரர்களும் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.


எது எப்படியோ பொதுமக்கள் ஆட்டோவில் மீட்டர் போட்டால் மட்டுமே ஓட்டுவேன் என்று மீட்டர் போடாத வண்டியில் ஏறுவதை தவிருங்கள் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்...


..............................

தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்கும் போது வாரத்திற்கு இருமுறை ஊரிற்குள் யாணை வந்தது பொதுமக்கள் பாதிப்பு என்று தலைப்பு செய்தியாக போடுகின்றனர் ஆனால் யாணை இருக்கும் இடத்தில் வீட்டை கட்டிவிட்டனர் இதனால் யாணை வழிதவறுகிறது என்பதை மட்டும் ஏனோ சொல்ல தயங்குகின்றனர். பொதுமக்களுக்கு பாதிப்பு சரிதான். விலங்குகளுக்கு பாதிப்பு என்பதை மட்டும் ஏனோ விழுங்குகின்றனர். விலங்குகள் தொலைக்காட்சி பார்ப்பதில்லை அதனால் ரேட்டிங் எகிறுவதில்லை என்பதாலோ...

..............................

வீட்டில் எப்போதும் மகனுடன் பேசும் போது அப்பா உன் நண்பர்கள் பெயரைச் சொல்லு என்பான் நான் Boy Friend ya., Girl Friend ya., என்பேன்...
தினமும் பல நண்பர்கள் பெயரை சொல்வேன் அப்படி நேற்று சொல்கையில் நம்ம ப்ளாக்கர் நண்பர்கள் ஞாபகம் வர உடனே

பன்னிக்குட்டி ராம்சாமி
விக்கியுலகம் வெங்கட்
ஆரூர் மூனா
இலக்கியச்செம்மல் வெளங்காதவன்
வால் பையன்
அஞ்சா சிங்கம்
மங்குனி அமைச்சர்
ஸ்கூல் பையன்
மாலுமி. ப்ரொபசனல் குடிகாரன்
இப்படி நம்ம மக்கள் பேரைச் சொன்னதும் அவன் நல்லாயிருக்குப்பா என்றான்.. அடுத்த நாள் மனைவியின் தோழிகள் வீட்டில் அவனிடம் பேசும் போது அப்பா எங்கே என்றதும் எங்கப்பா அவர் நண்பரை பார்க்க போய்யிருக்கிறார்.. யாருடா உங்கப்பா நண்பர் என்று கேட்க பன்னிக்குட்டி ராமசாமியும், வௌங்காதவனும் என்று அவன் சொல்ல வீட்டில் ஒரே சிரிப்பலையாம்... நான் உள்ளே போனதும் உங்களுக்கு நல்ல பேர்ல நண்பர்களே இல்லையா.. உங்க ப்ளாக் பேரை எல்லாம் பையங்கிட்ட சொல்லி மானத்த வாங்கதீங்கோ என்கிறாங்க... நான் மட்டும் தான் இப்படி பன்னு வாங்கிறேனா.. இல்ல எல்லாருக்கும் இதே நிலைமை தானா.... டவுட்டு...

 
தகவல்



திபெத்தில் 4,334 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து செயல்படும் விமான நிலையம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை விஸ்தரிக்கும் வண்ணமும், நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெறும் அரசியல் அமைதியின்மையைக் கண்காணிக்கவும் 4,411 மீட்டர் உயரத்தில் புதிய விமான நிலையம் ஒன்றினை சீனா அமைத்துள்ளது. டயோசெங் யாடிங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம், உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சிவிலியன் விமான நிலையம் என்ற பெருமையைப் பெறுகின்றது.

இத்தகைய உயரத்தில் விமானத்தின் உந்துசக்தி குறைவாக இருக்கும் என்பதால் நீளமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 4,200 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை நியூயார்க்கின் ஜான் எப் கென்னடியில் உள்ளதைவிட 242 மீட்டர்தான் குறைவாக உள்ளது. பயணிகளுக்கும்கூட காற்றழுத்தக் குறைவினால் வரும் நோய்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் இந்த புதிய விமான நிலையத்திலிருந்து பயண சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுவாக இங்கிருந்து பேருந்து மூலம் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவிற்குச் செல்ல இரண்டு நாட்கள் பிடிக்கும். இந்த விமானப் பயணம் அதனை 65 நிமிடங்களாக குறைக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் மற்ற சேவைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தின் நுழைவாயிலாக விளங்கும் இந்தப் பகுதியின் கீழ் வாழும் திபெத்திய மக்களின் மத்தியில் உள்ள எதிர்ப்பைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்தி ஒரு சுற்றுலாப் பகுதியாக இந்த இடத்தை மேம்படுத்த சீனா முயன்று வருகின்றது.


தத்துவம்




பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்களாகவே பட்டு உணர்ந்து பாடம் கற்கவேண்டுமெனில் இந்த ஆயுள் போதாது.

சிந்தித்து, சிந்தித்துப் பார்ப்பதால் மட்டும் சிறந்த
 எண்ணங்கள் உதிப்பதில்லை. மனம் மட்டும்
 ஒழுங்காக இருந்தால் நல்ல எண்ணங்கள் தாமாகவே உதிக்கும்.


 வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.



Tuesday, September 3, 2013

பதிவர் சந்திப்பும் பாமரனின் பட்டைய கிளப்பும் பேச்சும்...



தமிழ் வலைப்பதிவர்களின் 2ம் ஆண்டு பதிவர் சந்திப்பு விழாக்குழுவில் என்னையும் நண்பர்கள் சேர்த்தது மிக்க மகிழ்ச்சியான ஒன்று. எனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்யவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டு என்னால் இயன்ற வரை செய்து கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி.

பதிவர் சந்திப்போடு எனது கவிதை நூல் வெளியீட்டு விழாவும் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்ததால் எனது பொறுப்பு இன்னும் அதிகமாகியது. விழா ஏற்பாட்டுக்காக சென்னையில் வாரம் வாரம் நடக்கும் சந்திப்புக்கு மட்டும் தான் செல்லவில்லை மற்ற தகவல்கள் என்க்கான வேலைகளை என ஆருர்மூனாவிடம் தினமும் அப்டேட் செய்துகொள்வேன் விழா சிறக்க எனது பங்களிப்பும் இருந்தது என்பதில் மகிழ்ச்சி.

பதிவர் சந்திப்பு என்றாலே மிக முக்கியமானது பதிவர் அறிமுகம்தான் அது தான் முதல் நிகழ்ச்சியாக இருக்கவேண்டும் அப்போது தான் அனைவருக்கும் யார் வந்து இருக்கிறார்கள் என்பது தெரியும் என்பதால் திட்டமிட்டு அற்புதமாக நடந்தது இந்நிகழ்ச்சி. ஒவ்வொரு பதிவருக்கும் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர் நம் சக பதிவர்கள். ஒவ்வொரு பதிவர் பேசும் போதும் கைதட்டலும் விசிலும் அள்ளி சென்றனர்.

பதிவர் சந்திப்பு திருவிழா என்றதுமே யார் சிறப்பு பேச்சாளர் என்று தான் அடுத்த கேள்வி இருக்கும் அந்த அளவில் இந்த முறை பாமரன் என்று அறிவித்ததுமே மிக்க மகிழ்ச்சி கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஈரோட்டு சந்திப்பில் இவரின் பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மீண்டும் கேட்க வேண்டும் என்பதால் ஆர்வம் அதிகமாகியது இந்த பதிவர் சந்திப்பு. இவரும் பதிவர் என்பது மிக சிறப்பு.



திருவிழாவில் பாமரன் பேசியதாவது.

வணக்கம் தோழர்களே... பொதுவா ஒரு படத்துக்கு அதிகமாக பில்டப் கொடுக்கும் போது ட்ரைலர் பயங்கரமாக இருந்தால் அந்த படம் அதிகம் ஓடாது என்பதை போல என்னைப்பற்றி அதிகமாக பில்டப் கொடுத்துட்டாங்க இனி நான் என்ன கதிக்கு ஆளாகப்போறேன் என்று தெரியவில்லை. என்னைப்பற்றி கூறும் போது என் பெயர் எழில்கோ என்று சொன்னார் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எழில் என்றால் அழகு கோ என்றால் அரசன் நான் பிறக்கும் போது எப்படி இருப்பேன் என்று அவர்களுக்கு தெரியாது நம்பிக்கையில் இந்த பேரை வைத்திருக்கின்றனர். பொதுவாக நம் நாட்டில் ஆஸ்மா இருப்பவர்களுக்கு ஆரோக்கிய சாமி என்று பெயர் இருக்கும் அது போலத்தான் இதுவும்.

என்னை இந்த நிகழ்விற்கு உங்களில் ஒருவனாக மதித்து பேச கூப்பிட்டு இருப்பது மனநிறைவான ஒன்று. ஆனா நான் ஏன் எழுத வந்தேன் என்னைய ஏன் அனைவரும் எழுத்தாளன் எழுத்தாளன் என்று சொல்றாங்க என்று நானும் மண்டைய போட்டு குழம்பிகிட்டு இருக்கேன். நானும் மண்டைய துடைச்சி பார்த்துட்டேன் கடைசியா யாரும் எனக்கு ஞானப்பாலும் கொடுக்கல, எனக்கான சமூக அக்கறையும் அல்ல, ஒரு வெங்காயமும் இல்ல, நான் எழுதியதற்கு மிக முக்கிய காரணம் அந்தகாலத்தில் பெண்கள், பெண்கள், பெண்கள் தான். எனக்கு அந்த காலத்தில் பெண்களை பார்த்தால் ரொம்ப பிடிக்கும் காரணம் என்னவென்றால் நான் இருபாலரும் படித்த பள்ளியில் படிக்க வில்லை.

பெண்கள் தான் என்னை  எழுத வைத்தனர் அவர்களின் ரசிப்பைத்தான் நான் எழுத ஆரம்பித்தேன் பெண்களை பற்றி எழுத வேண்டும் என்றால் அனைவரையும் போல நானும் முதலில் எழுதியது கவிதை தான்.

கண்ணே நீ காகிதம்
போல் என்று தெரிந்திருந்தால்
நான் கழுதையாக பிறந்திருப்பேன்

டிஆர் கொடி கட்டி பறந்த காலம் அது அப்ப அவரைப்போல எழுத ஆரம்பித்தேன் அவரின் பாதிப்பு அதிகம், பாடாத பாடு பட்ட காலம் அது, என அவர் பாணியில் கொஞ்ச நாள் கவிதை எழுதினேன். இதற்கெல்லாம் நண்பர்களுடன் கூடி பட்டி மன்றம் போட்ட காலம் அது. 

இந்த கேள்விக்களுக்கு
பதில் எழுதினால்
மதிப்பெண் கிடைக்கும்
மதிப்பெண் கிடைத்தால்
தேர்வு கிடைக்கும்
தேர்வு கிடைத்தால்
வெற்றி கிடைக்கும்
வெற்றி கிடைத்தால்
பட்டம் கிடைக்கும்
பட்டம் கிடைத்தால்
வேலை கிடைக்குமா
என்ற ஒரு கேள்வி கிடைக்கும்

என்று எழுதிய காலம் எல்லாம் உண்டு இதற்கு மதிப்பெண் கிடைத்த காலம் எல்லாம் உண்டு. நான் பச்சையாக சொல்கிறேன் இந்த தமிழ் சமூகத்திற்கு நான் செய்த நல்ல காரியம் கவிதை எழுதுவதை விட்டது தான்.


கல்லூரியில் படிக்கும் போதும் சரி, வேலைபார்க்கும் போதும் சரி நம்மை ஈர்க்கவேண்டும் என்ற என்னம் இருக்கும். அந்த கால கட்டங்களில் 10 ரூபாய் கொடுத்து ரப்பர் ஸ்டாம்ப் ஒன்று வைத்திருந்தேன் எழில் கோ. கோவை 14. என்று போட்டு இருக்கும் ரப்பர் ஸ்டாம்ப் வைத்து எழுதுவேன். அப்ப எல்லாம் குமுதம் வாங்கி வாசகர் கடித்ம் எழுதுவேன். வாசகர் கடிதம் எழுதினால் அதை வெளியிடுவார்கள் என்று இருபது முப்பது வாசகர் கடிதம் எழுதிய அனுபவமும் உண்டு. வாசகர் கடிதம் ஒன்னு குமுதத்தில் வந்திருந்தது அதை ஊரே காட்டியது அனுபவம் உண்டு.

இதற்கு அடுத்தது தான் துணுக்கு எழுதுவது துணுக்கு எழுதினால் பத்திரிக்கையில் வெளியிடுவார்கள் என்பால் அதை எழுத ஆரம்பித்தேன் அதற்கு பல துணுக்குகள் எழுதுதியதால் மணியார்டர் வர ஆரம்பித்தது ஆரம்பத்தில் இப்படி கேவலமாக எழுதியவன் தான் இன்று உங்க முன்னால் நின்று கொண்டு இருக்கேன். 

1983 ஆம் ஆண்டு இறுதி கல்வி கட்டம் வெளிக்கடை சிறையில் குட்டிமணி, ஜெகன் தங்கதுரை கொடூர கொலை என்று செய்தி வெளிவந்திருந்தது. இவர்கள் மூவரும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்திய போது நாங்கள் நிரபாராதிகள் நாங்கள் எங்கள் தமிழர்களுக்காக போராடுகிறோம் நாங்கள் இறக்க நேர்ந்தால் எங்கள் கண்களை எடுத்தி தமிர் இளைஞர்களுக்கு பொறத்துங்கள் என்றனர். இந்த செய்தியை அப்படியே நிவர்த்தி செய்தனர் சிங்களர்கள். அவர்கள் வெளிக்கடைக்கு சென்று 53 பேரை கோர கொலை செய்து இவர்களின் கண்களை நோண்டி பூட்ஸ் காலால் அழித்தனர். அதை படிக்க படிக்க தான் மிக யோசித்தேன் அப்போது தான் இத்தனை மக்கள அழிகின்றனர் அவர்களுக்கு எதாவது செய்யவேண்டும் நாம் ஏன் இவர்களுக்காக எழுதக்கூடாது என்று அப்போது தான் உணர்ந்தேன். நம் சமகாலத்தில் இத்தனை பேர் இறந்து கிடக்கின்றனர் தமிழர்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் வந்த நேரம் என்னிடம் குறைந்தபட்சம் நல்ல விசயம் இருக்கும் என்று நம்பினீர்கள் என்றால் ஈழத்தமிழர்களின் நிகழ்வு தான்.

அப்புறம் நானும் ஒரு கம்பெனியில் வேலை செய்தேன் அப்போது பிரபல கட்சியில் கொஞ்சநாள் வேலை செய்தேன் எதுவாக இருந்தாலும் தலைவர் தான் அப்போது என்க்கு ஒரு பையன் இருந்தான். கரும்பலகைகளில் போராட்டத்தை வரைந்து விளக்குவான் அந்த குட்டி தான் மண்ணாக இருந்த என்னை மனிதனாக்கியவன். இன்றும் அவன் என் மனதில் இருக்கிறான். தலைவர் பற்றியும் தலைவரின் பத்திரிக்கை பற்றியும் இதற்கு இந்த பெயர் தேவைதான என்று பல கேள்விகளுக்கு எனக்கு பதில் ஊட்டியவன் அந்த குட்டி தான். நம்ம தலைவர் நம்ம தலைவன் என்று என்னை கவுத்தியன் அவன் அதற்கு பின் நான் எந்த கம்பெனியிலும் வேலை செய்யவில்லை எந்த கட்சியிலும் இருக்க வில்லை.

ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் எழுதும் போதும் அதாவது குமுதத்திற்கு எழுதினால் குமுதம் போலவும், விகடனுக்கு எழுதினால் விகடன போலவும் வண்ணத்திரைக்கு எழுதினால் அது போலவும் தான் எழுதனும் சுயமாக எழுதிட முடியாது சுயமாக கருத்து சொல்ல இயலாது என்று முடிவெடுத்தேன். இனி எந்த பத்திரிக்கைக்கும் அவர்களைப்போல எழுதுவதில்லை என்று.

தோழர்களே என்ன என்னைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறான் என்று நினைக்காதீர்கள் எப்படி பிறந்து எப்படி வளர்ந்து என் பயணத்தை உங்களுக்கு அறியச்செய்தேன்.

கொஞ்ச நாளைக்கு பின் அன்புத்தோழி என்ற முதல் பத்திரிக்கை வெளியிட்டேன் அதில் பெரியாரைப்பற்றியும், காரல் மார்க்ஸ் பற்றியும் எழுதுவேன். இது நிறைய பேருக்கு பொறுத்தமானதாக இல்லை. பொதுவுடமைகளைப்பற்றியும், திராவிடக்கட்சிகளைப்பற்றியும் எழுதுவேன் எனக்கு இரண்டும் பிடித்த ஒன்று இதனால் என்னை இரு கட்சிக்காரர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அப்புறம் சுற்றுப்புற சூழல் பற்றி எழுதினேன் அதை இலண்டனில் வரை நல்ல பெயரை வாங்கிகொடுத்தது. அதை ஐயா கோவை ஞாநி அவர்கள் எல்லாம் வெளியே எடுத்துரைத்தனர்.

சினிமாப்பாடல்கள் எல்லாம் என் பையன் பாடுவான் என்னடா இப்படி பாடுகிறாய் என்றால் சினிமா பாட்டுப்பா என்பான் அட நாமதான் எந்த சினிமாவும் பார்ப்பதில்லை என்று  இருந்தேன். தமிழ் சினிமாவில் இவ்வளவு கேலமான பாடல்கள் எல்லாம் உள்ளதா என்று யோசித்தேன் மற்றும் நான் கவனிக்காதது நிறைய இருக்கு என்று. அப்போது தான் 1996 வைரமுத்து அவர்கள் பற்றி ஆபாசம் என்ற  நூழை மிக கடுமையாக எழுதினேன். அந்த நேரத்தில் மாலன் அவர்கள் படித்து விட்டு எனக்கொரு கடிதம் எழுதினார் நிறைய படித்திருக்கிறேன் உங்கள் எழுத்துக்களை என்று என்னைப்பற்றியும் கிண்டல் அடித்திருந்தீர்கள் நீங்கள் குமுதத்தில் எழுதமுடியுமா என்றார். அப்போது தான் எழுதலாமா வேண்டாமா என்று யோசிக்கும் போது நான் கொடுப்பவற்றை அப்படியே வெளியிடுவதாக இருந்தால் எழுதுகிறேன் என்றேன் அவரும் சரி  என்றார் அப்போது தான் பகிரங்க கடிதங்கள் என்ற பெயரில் குமுதத்தில் ஒரு தொடர் எழுதினேன்.

அதில் முதல்  கட்டுரையே என்னை அடிக்க துரத்தியது மரியாதைக்குய ஐயா பாலச்சந்தர் ஆல்ப்ஸ் சிகரம் என்று ஒன்று எழுதினேன் அதில் அவரை விமர்ச்சிருந்தேன் அப்போது மிக புரட்சியான படமான கல்கி என்ற படம் வந்திருந்தது அதில் வெறும் பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல பெண் என்று கேட்டு எழுதி இருந்தேன். நிறைய பேருக்கு நிறைய கண்டம் இருக்கும் எனக்கு எழுத்தில் கண்டம் என்பது போல அப்போது அவரை கேட்டு எழுதி இருந்தேன் இதுவரை நான் எழுதியது உங்கள் நாடகத்தை பற்றித்தான் எப்போது சினிமா எடுக்க போறீங்க அதுவும் வீடு, உதிரிப்பூக்கள் போன்ற படங்கள் என்றேன் அப்போது சினிமா உலகம் பற்றிக்கொண்டது பலத்த எதிர்ப்புக்கள் எனக்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர் அது அந்த கால கட்டடத்தில் பெரிய பஞ்சாயாத்து ஆகியது.

அப்புறம் வைகோ மற்றும் தலைவர்களுக்கு எல்லாம் எழுதினேன் அப்புறம் இளையராஜாவிற்கு எழுதினேன் மற்றவர்களுக்கெல்லாம் நான் மூளையில் இருந்து எழுதினால் இவருக்கு மட்டும் நான் இதயத்தில் இருந்து எழுதுகிறேன் என எழுதினேன் இப்படி ஒரு பயணத்தில் நான் வந்தேன்.

இனி பேசவேண்டியது தான் நம்ம மேட்டர் இணையதளம் பற்றி தான் நம்மாளுக பதிவ எழுதி கமெண்ட் என்ற பெயரில் வியற்காலை 3 மணிக்கு எழுதி அடுத்தவன் என்ன எழுதி இருந்தாலும் அடுத்தவனை போட்டு தாக்குவது. இப்படி யார் எல்லாம் நமக்கு நல்ல கமெண்ட் போடுகிறார்களோ அவர்களை நம்மாளக்கி வெச்சிகிட்டேன் அப்பதான் நம்ம பேமஸ் ஆகமுடியும். அப்புறம் தேவதர்ஷனி என்று ஒரு பெண் பெயரில்  நிறைய சாட் செய்து நண்பர்களை கலாய்த்தேன். அப்புறம் எனக்கு ஒரு வலைப்பூ ஒன்று நண்பன் எழுதுவது என்று சொல்லி கொடுத்தார் அப்புறம் எப்படி தமிழ்மணத்தில் எழுதுவது என்று ஓசை செல்லா சொல்லிக்கொடுத்தார்.

அப்புறம் தமிழ்மணத்தில் ஓட்டிங்க எல்லாம் இருக்காம் எப்படி ஓட்டிங் வருது போகுது 7 ஓட்டு போட்டால் தான் முன்னாடி வரும் என இப்பதான் இருந்தனர். அதுவும் 6 ஓட்டுக்கு அப்புறம்  7வது ஓட்டுக்கு மச்சிக்கு போன் செய்து ஓட்டு போடு என்று திருமங்கலம் தேர்தலை மிஞ்சும் அளவிற்கு உள்ளது தமிழ்மணம் ஓட்டு.

வலைப்பதிவுகளில் நான் நிறைய படித்திருக்கிறேன் நிறைய அறிந்திருக்கிறேன் நிறைய இடங்களை பற்றியும் பல தகவல்களை பற்றியும் அறிய நிறைய உதவி இருக்கிறது இந்த இணையதளம். உலக சுற்றுச்சுழல், ஈரான், ஈராக் என பல தகவல்கள் இவர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று கூட யோசித்திருக்கிறேன் அனால் இங்கு எழுதக்கூடியவர்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மனித நேயத்திற்கு யாருக்கும் சலித்தவர்கள் இல்லை என்பதை அறிந்திருக்கிறேன் அவர்களை வாழ்த்துகிறேன். 2009 இலங்கை பிரச்சனையில் நம் பதிவர்கள் சோடை போகாமல் எழுதியது பாராட்டத்தக்கது.

அடுத்தது என் மனைவியே என்னுடன் பேசுகிறேன் என்றால் பேஸ்புக்கில் நண்பனாக்கினால் தான் பேசுவேன் என்கிறார், அதுவும் இன்று எனக்கு 4000 நண்பர்கள் என்பார்கள் ஆனால் எதிர்தத வீட்டுக்காரரையும், பக்கத்து வீட்டுக்காரரையும் அவருக்கு தெரியாது அந்த அளவிற்கு உள்ளது பேஸ்புக் மோகம். பேஸ்புக் கொசுத்தொலைக்கு எல்லையே இல்லை நேற்று கீரை சாப்பிட்டேன் இன்று வயிறுஆடுதுங்கிறான். வீட்டில் உள்ள நாய்கிட்ட போட்டோ எடுத்து நாயும் நானும் என்கிறான். பிரசவத்துக்கு போற பெண் கூட் நான் ஆஸ்பத்திரிக்கு போகிறேன் என் குழந்தையை பார்க்க போகிறேன் என்கிறார். அடுத்து ஒருவன் அப்பா இறந்துவிட்டார் என்று ஒரு ஸ்டேட்டஸ் போடுகிறான் அதற்கு 200 லைக் வேற.

அடுத்து சண்டை இவ ஒரு கருத்து அவன் ஒரு கருத்து என்று மாத்தி மாத்தி போட்டுதாக்கிக்கிறாங்க. பேஸ்புக்கில் இருக்கும் ஒருவன் 65 வருடம் உயிர் வாழ்கிறான் என்றால் தொடர்ந்து இருந்தால் அவன் 35 வருசம் தான் இருப்பான். இந்த அளவிற்கு போகுது முகநூல்.

இணையம் என்பது இணைப்பதற்கான தளம் உலகில் எங்கிருப்பவர்களிடம் தொடர்பு கொள்ளலாம் நிறைய நிறையவான நட்புக்களை பெறலாம் அதை நோக்கி நாம் செல்வோம் என்று மிக சிறப்பாக பேசினார்.

இவரின் பேச்சுக்கு பின் மதிய உணவும், கண்மணி குணசேகரனின் பேச்சும், புத்தகம் வெளியீடும் சிறப்பாக நடந்தது..

( இந்த சந்திப்பை பற்றி நிறைய பதிவுகள் வரும் ஆனால் இவரின் சிறப்பான பேச்சை தொகுப்பாக கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் நான் சந்தித்த நண்பர்களின் பெயரை குறிப்பிடாமல் இந்த பதிவை வெளியிடுகிறேன் வழக்கமான பானியில் சந்திப்பு பற்றிய கட்டுரை மிக விரைவில்)