Monday, January 19, 2015

DJHSS Gobi - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இந்த காணும் பொங்கல் எனக்கு மறக்க முடியாத காணும் பொங்கல் என்றால் அது மிகையாகது. ஆம் 1996ம் ஆண்டு கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் எனது பள்ளி பருவத்தை நிறைவு செய்தேன். அதன் பின் அந்த சாலையில் செல்லும் போது அந்த பள்ளியையும், படித்த நாட்களையும் நினைவு கூர்வதோடு சரி. பள்ளி படிப்பில் கூட இருந்த நண்பர்கள் வட்டம் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே சென்றது என்பது தான் உண்மை.
நிறைய பள்ளியிலும், கல்லூரியிலும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்று செய்தி வரும்போது எல்லாம் மனதில் தோன்றும், நாம் என்று இப்படி சந்திக்க போகிறோமோ என்று. சமூக வலைத்தளங்களுக்கு வந்த பின் பள்ளியின் நண்பர்களை எல்லாம் தேடுவேன் அப்படி தேடிம்போது ஆர்குட் காலத்திலேயே நண்பர் ஆக்கியது கோடீஸ்வரன் என்னும் நண்பரைத்தான்.
நண்பன் ரவிசங்கர் நீண்ட நாட்களாக சமூகவலைத்தளம் வழியாக பழக்கம் அவர் தான் அசோக் என்ற நண்பர் வாட்ஸ்அப்பில் ஒரு குரூப் தொடங்கி உள்ளார் நம் 1996 பேட்ச் நண்பர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிறார் என்று சொன்னதுடன் என்னையும் அதில் இணைத்தார். வாட்ஸ்அப்பில் இருந்து டெலகிராம் மாறிய உடன் 25 நண்பர்களாக இருந்த நட்பின் எண்ணிக்கை 100 தொட்டது.
கடந்த 2 மாதங்களாக நண்பர்கள் டெலிகிராமில் பேசிய பேச்சு அளவிடமுடியாதது அதே போல் ஒவ்வொன்றையும் படிக்க படிக்க 1996 ஆம் ஆண்டிற்கே போன மன திருப்தி. நம் பள்ளியில் தற்போது பணிபுரியும் செந்திலை எனக்கு முதலில் முகம் சரியாக ஞாபகத்திற்கு வரவில்லை. அங்கு பேசும் போது தான் கவுந்தப்பாடி மாரப்பா தியேட்டருக்கு படம் பார்க்க சென்று விட்டு பின் பேருந்துக்கு பணம் இல்லாததால் அங்கிருந்து கோபி வரை நடந்து வந்தோம் என்ற தருணம் ஞாபகம் வந்தது.

டெலிகிராம் பேச்சு பேச்சோடு முடியவில்லை அசோக்கின் சீரிய முயற்சியில் முபாரக், தியாகு, கணேசன் போன்ற நண்பர்களின் உறுதுணையால் 17ம் தேதி சந்திப்புக்கு தேதி குறிக்கப்பட்டது. இந்த சந்திப்பு எப்படி இருக்கும் என்று அப்போது எல்லாம் கற்பனைக்கு கூட நான் செல்லவில்லை. எப்படியும் கோபியில் எங்காவது சந்திப்போம் ஒரு 25 பேர் இருப்போம் என்றிருந்தேன்.

அதன் பின் அவ்வப்போது தான் டெலிகிராம் வருவேன், ஆப்போது பார்த்தால் ஷனவாஸ், விநோத், ரபி, சசி, GSK மற்றும் நண்பர்கள் ( நிறைய பேர் பேரை விட்டுட்டேன் மச்சி கோவிச்சுக்காதீங்கடா) எல்லாரும் மிக பழகியவர்களை இவர்களின் பேச்சை தினமும் கேக்க முடியாமல் போனாலும் டெலிகிராமில் சந்திக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

நண்பர்களின் அற்புத முயற்சியால் 17ம் தேதி நடக்க இருக்கும் இந்த சந்திப்பிற்கு 100 பேருக்கு மேல் வருவதாகவும் அதனால் நிகழ்வை சீதா கல்யாண மண்டபத்தில் நடத்துவதாகவும் நண்பர்கள் சொன்னவுடன் மிக மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு மட்டுமல்ல அந்த 100 பேருக்கும்...
நண்பர்கள் அழகாக திட்டமிட்டு பாரியூர் மற்றும் பொங்கல் திருவிழா என்பதால் அனைவரும் ஊரிற்கு வரும் நாளாக பார்த்து 17ம்தேதியை செலக்ட் செய்ததே அற்புதம். சரி இவர்கள் சந்திப்பை எப்படி நடத்துவார்கள் என்ற ஆர்வம் அன்று முதல் 17ம் தேதி காலை வரை நீடித்தது.
சந்திப்பு 17ம் தேதிதான் ஆனால் நிகழ்ச்சி நடக்க ஏதுவாக இருந்த நண்பர்கள், பல நாட்கள் கண்விழித்து ராப்பகலாக அவர்கள் உழைத்த உழைப்பு, மூன்று நாட்களுக்கு முன்பாக சந்தித்த எனக்கு புரிந்தது.
மேடையில் ஓர் பெரிய பேனர், மண்டபத்தின் முன்பு ஒரு பேனர், வரவேற்பு, நாற்காலி, போட்டோ என ஏற்பாடுகள் முந்தைய இரவே நண்பர்களின் திட்டமிடல் அற்புதமாக முடிந்திருந்தது.

மிகவும் நெகிழ்சியான, மகிழ்சியான அந்த 17ம் தேதி காலை 9 மணிக்காக காத்திருந்தேன். முந்தைய இரவில் யார் யார் வருவார்கள், எப்படி இருப்பார்கள் யார் என்று ஒவ்வொருவரின் முகத்தையும் பார்ப்பதற்காக ஏங்கி காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். நண்பர்களின் யார் என்ன நிலைமையில் இருப்பார்கள், எங்கு இருப்பார்கள் என்பதை விட சந்தித்த பின் எண்களை பறிமாறிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உதித்துக்கொண்டே இருந்தது அன்று இரவு முழுவதும்.
17ம் தேதி காலை 7 மணிக்கே மண்டப வாசலுக்க வந்திருந்தனர் வரவேற்பு குழுவினரானர். இரவெல்லாம் கண்விழித்து காலை 7 மணிக்கு மகிழ்வாக வருவதே பெரும் முயற்சிதான்.
நண்பர்கள் மண்டபத்திற்குள் வந்த உடன் அவர்ளின் வருகையை பதிவு செய்து கொள்ள பேப்பர், பேனா, அவர்களின் விபரங்களை கொடுக்க விண்ணப்பம் உள்ளிட்டவை நண்பர்களிடம் கொடுத்தனர்.
அசோக் நிகழ்வை தொடங்கி வைக்க ஒவ்வொரு நண்பர்களம் தங்களைப்பற்றியான சுய விபரங்களை கூறி அறிமுகப்படுத்தினர். கிட்டத்தட்ட 110 பேர், ஒவ்வொருவரையும் ஆரவாரமாக நட்புக்கள் பேசிய பின் கைதட்டி மகிழ்வித்தது மிக்க மகிழ்சியாக இருந்தாது ஒவ்வொருவருக்கும்.
அடுத்து அசோக்  நாம் ஒன்றிணைந்து என்ன செய்ய போகிறோம், நம் சந்திப்பின் நோக்கம் சந்தோசம் மட்டமல்லாமல், ஏழை குழந்தைகளின் படிப்புக்கு நாம் எப்படி உதவ இருக்கிறோம் என்று முன் மாதிரி திட்டத்தை நன்றாக செதுக்கி இருந்தார். அது வந்திருந்த அணைவருக்கும் மிக்க மகிழ்வான ஒன்றாக இருந்தது ( இந்த திட்டம் பற்றி நாம் சங்கம் பதிவு செய்த உடன் விரிவாக எழுதுகிறேன்) உயர்வோம் உயர்த்துவோம் என்ற நம் வாசகம் இனி எங்கும் மறக்கா...
அடுத்து குருப்போட்டோ செல்பி போட்டோ என ஆள் ஆளுக்கு தங்களின் செல்போனில் படத்தை சுட்டுக்கொண்டு இருந்தனர். 
நிகழ்வின் இறுதியாக சாப்பாடு. மனிதன் போதும் என்று சொல்லும் ஒன்றே ஒன்று சோறு தான் என்பதை நண்பர்கள் முன்னாடியே திட்டமிட்டு திகட்ட திகட்ட சாப்பாடு போட்டு கொங்கு மண்ணின் பாரம்பரிய மிக்க விருந்தோம்பலை அட்டகாசமாக நிறைவேற்றி இருந்தனர். 
முதலில் சாப்பாடு வைத்த முபா இத்தனை வகைகள் உள்ளது என்று சொல்லாமல் சாப்பாடு வைக்க  நான் சாம்பார் நிறைய வாங்கி பாதி வயிறை நிரப்பி விட்டேன், அடுத்து மோர் குழம்பை கணேசன் ஊற்ற ஆஹா என நினைக்கும், புளிக்குழம்பு அடுத்து பச்சை பயிர், தட்டைபயிர், கீரை மசியல் என ஒவ்வொன்றாக இலையை பதம் பார்க்க, வயிற்றில் இடம் இல்லாமல் சுவையால் என் நாக்கு தடுமாறியது.
உண்டகளைப்பில் நண்பர்களோடு நினைவுகளில் அசைபோடு அடுத்து எங்கள் பள்ளிக்கு சென்றோம். ஒடோடி நின்று என் வகுப்பறையின் முன் படம் எடுத்து கொண்டேன் அம்புட்டு மகிழ்வு.
எனக்கு கணித ஆசிரியராகவும், விடுதி காப்பாளாகராகவும் இருந்தவர் தான் தற்போது தலைமையாசிரியர் அவரை பார்த்ததும் அவர் என்னை விளாசு விளாசியது தான் ஞாபகம் வந்தது. எனக்கு மட்டுமல்ல என் 9, 10 ம் வகுப்பு நண்பர்கள் நீ எப்படி எல்லாம் மாத்து வாங்கினாய் என்று சொல்லி உசுப்பேற்றினார்கள்.
அவரைபார்த்து, அவருடன் பேசி அவரும் எங்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி, கேக் வெட்டி மகிழ்வோடு திரும்பினோம்... நிச்சயம் அன்றைய நிகழ்வில் கலந்த எம் நண்பர்கள் அன்று இரவு நினைவுகளோடு அவர்களின் நெஞ்சமும் கலந்திருக்கும்....
(சந்தித்த, வந்திருந்த அனைத்து நண்பர்களின் பெயரையும் குறிப்பிட இயலவில்லை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்)


7 comments:

  1. Meega Arumai Nanba

    ReplyDelete
  2. arumaiyana padhivu Nanba.... Kalakkara... Keep Brushing your writing skills... Innum meruhetru......

    ReplyDelete
  3. பழைய நண்பர்களின் சந்திப்பு என்றாலே குதூகலம்தான்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. ஆஹா .. இதுக்கு முன்னாடி போட்ட comment வந்ததான்னு தெரியலை அதனால மறுபடியும்...

    பதிவு நல்லா வந்திருக்கு. நேரம் எடுத்து எழுதுனதுக்கு மிக்க நன்றி. கட்டுரையோடு உங்க கவிதையும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ... அடுத்த பதிவுன்னு ஒரு புதிர் போட்டிருக்கீங்க, முடிந்தால் ஒரு ரெண்டு வரி கவிதையை காட்டுங்கள் :)

    "இதழில் எழுதிய கவிதைகள்" - என்னைப்போன்ற இனைய வாசகர்களுக்கு கிடைக்க ஏதேனும் முயற்சி உள்ளதா ... amazon ebook மிகவும் எளிமையாக நீங்களே பிரசுகரிக்கலாம்.

    ReplyDelete
  5. 👍👍👍👍மாப்ள!!!! Waiting for the detailed version soon...

    ReplyDelete
  6. Super nanba.. பதிவு நல்லாருக்கு..

    ReplyDelete
  7. ஒரு வருடம் நீங்கள் எனக்கு ஜூனியர் :-) நான் மீரான் செட். 1995 ல் முடித்தேன்.

    நானே கஷ்டப்பட்டு இரண்டு பேரை பிடித்தேன்.. மீரானையே கடந்த வருடம் தான் சந்தித்தேன்.. 18 வருடங்களுக்குப் பிறகு.

    ஊருக்கு மொத்தமாக வந்த பிறகு திரும்ப இது போல நண்பர்களை திரட்ட வேண்டும். இவ்வளவு பேர் நீங்கள் அனைவரும் இணைந்தது எனக்கு ஆச்சர்யமாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது.

    அப்போது மொபைல் ஃபேஸ்புக் போன்றவை இல்லாததால் பல தொடர்புகள் விட்டு போய் விட்டது.. இவற்றால் தொல்லைகள் இருக்கிறது என்றாலும் இது போல நன்மைகளும் இருக்கிறது.

    ReplyDelete