Sunday, January 11, 2015

ஆண்மை வீரியத்திற்கு கருஞ்சதை நாட்டுகோழி சாப்பிடுங்க...

நாட்டுக்கோழி என்றாலே இங்கு பல பேருக்கு நாவில் எச்சில் ஊறும், அந்த அளவிற்கு சுவையானது. இன்று பிராய்லர் கோழியின் வருகையால் பலர் நாட்டுக்கோழியை சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி இருக்கும். இருந்தாலும் என்னை போல் நாட்டுக்கோழியை தேடி தேடி உண்ணும் நண்பர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கின்றனர்.

சமீபத்தில் நண்பர்களோடு ஓர் புத்துணர்வு முகாமிற்கு சென்றிருந்தோம், இந்த முறை கிராமத்தில் கிடைக்கும் நாட்டுக்கோழி மட்டுமே வாங்கி செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்ததால், நண்பனின் அப்பாவிடம் சொல்லி இருந்தோம். எங்கள் பக்கம் காவிரி கரையில் சுற்றி திரியும் கோழிகளுக்கு கொஞ்சம் மவுசு அதிகம்.

காவிரியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் டெல்டா மாவட்டங்களை அள்ளி அணைத்து அவர்களுக்கு வாரி கொடுக்கிறாள் காவிரி, ஆனா எங்களைப்போன்ற ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட மக்களை எல்லாம் அள்ளி அணைக்க மனமின்றி தள்ளிவிட்டு ஒரசியபடியே செல்கிறாள். எங்களை உரசி செல்லும் இந்த காவிரி கரையில் காவிரியின் நீரை குடித்து வளரும் கோழிகளின் சுவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நண்பனின் தந்தை எங்களுக்காக ஓரு கோழி 3 கிலோ எடை வரும் அளவிற்கு, காவிரி கரையில் சுற்றி திரிந்த 7 கோழிகளை வாங்கி கொடுத்திருந்தார்.

அந்த கோழிகளில் 3 கோழிகள் கருஞ்சதை நாட்டுக்கோழி, நாட்டுக்கோழிகளில் பெருஞ்சாதி, சிறுஞ்சாதி , கருஞ்சதை, கட்டுசேவல் என பல வகைகள் உண்டு. நம் கிராமங்களில் அதிகம் கிடைப்பது பெருஞ்சாதி வகையிலான நாட்டுகோழிகள் தான். அதுவும் 1 வருடம் அல்லது 2 வருடம் நன்கு வளர்ந்த கோழிகளை சாப்பிடுவதில் தான் நிறைய சத்துக்கள் இருக்கும் என்று சொல்வார்கள்.

இந்த கருஞ்சதை நாட்டுக்கோழி நான் சாப்பிட்டதே இல்லை, கோழியின் இறகுகள் கருப்பாக இருக்கும், கால்கள் நன்கு கருப்பாகவும், கறியின் சதையும் மிதமான கருப்பாக இருக்கும், நான் பல முறை இந்த கோழிகளை பாத்திருந்தாலும் கருப்பா இருந்தால் நோய் தாக்கி இருக்குமோ என்று அஞ்சி இத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தேன்.

சமீபத்தில் கோழி புடிக்க ஊர் பக்கம் சென்றிருந்த போது ஒரு பெருசை சந்தித்தேன் அவர் தான் சொன்னார் நாட்டுக்கோழி சாப்பிட்டால் கருஞ்சதை நாட்டுகோழியாக சாப்பிடனும் அப்பதான் உடம்புக்கும் மனசுக்கும் தெம்பு என்றார். அன்றில் இருந்து இந்த கோழி மேல் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் அந்த பெருசு சொல்லும் போது இதயத்திற்கு மிக நல்லதாம், சளி பிடிச்சிருக்கும் போது சாப்பிடும் கோழிச்சாறு இந்த கருஞ்சதை நாட்டுக்கோழியின் சாறாக இருந்தால் சளியும் காணமல் போய்விடுமாம்.

இதய நோய் இருப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாமாம் இந்த கோழியை, அதுவும் நன்கு வளர்க்கபட்ட இக்கோழிகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்களுக்கு எதிப்பு சக்தி உடலில் மிக அதிமாக வருமாம், குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி வர வர அவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருக்காதாம்.

மேலும் அந்த பெரியவர் சொல்லும் போது தம்பி அந்த காலங்களில் புதிதாக திருமணம் ஆனவர்களை விருந்துக்கு அழைப்பாங்க கேள்விபட்டு இருக்கியா என்றார், ஆமாங்க இப்பவும் அந்த சம்பிரதாயம் இருக்கு என்றேன். தம்பி இப்ப எல்லாம் ஒரு வேளை உணவு தான் விருந்துக்கு செல்கின்றனர். அப்போது எல்லாம் கோழி அடிச்சு 2 நாளைக்கு விருந்து போடுவோம், அதுவும் கருஞ்சதை நாட்டுக்கோழியை தேடிப்பிடிச்சு சமைச்சு போடுவோம். இக்கோழியின் கறி ஆண்மை வீரியத்திற்கு மிக அற்புதமான மருந்து என்றார். அதனால தான் கண்ணாலம் ஆனவர்களுக்கு விருந்து என்ற பெயரில் இக்கோழியை தேடி தேடி சமைச்சு போடுவாங்க என்றார்.


அப்போது எல்லாம் குழந்தை பிறக்காதவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவுதான்.. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை மிக அதிகம் தானே என்றார். ஆஹா பெருசு மிக தெளிவாத்தான் பேசுது என்று நினைத்துக்கொண்டு, தங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்றேன் எனக்கு பொட்ட புள்ளைங்க 4, ஆம்பள பசங்க 3 என்றார். அப்ப நிறைய விருந்துக்கு போயிருப்பீங்க போல என்றதும் அவர் சிரித்த சிரிப்பு மிக மகிழ்ச்சியாக இருந்தது.


இந்த கருஞ்சதை கோழியின் கதை கேட்டதில் இருந்து தேடி தேடி புடிச்சதில் இந்த முறை 3 கோழி மட்டுமே கிடைத்தது. ஆனாலும் ரசித்து ருசித்து மிக்க மகிழ்ச்சியாக சாப்பிட்டோம்... 

நீங்களும் கிடைச்சா சாப்பிடுங்க மக்களே 3 கிலோ எடையுள்ள ஒரு கோழி 1500 ரூபாய்க்கு வாங்கினோம்.....

2 comments:

  1. போன வாரம் எங்க வீட்லயும் நாட்டுக் கோழி தானுங்கோ !

    ReplyDelete