Monday, January 12, 2015

காணமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்...

இப்போது எல்லாம் கடிதங்கள் வருவது மிக குறைந்துவிட்டது. வங்கியின் ஸ்டேட்மெண்ட் மற்றும் பணபரிவர்த்தனைக்கான அட்டைகள் மட்டுமே கடிதங்களாக வருகின்றன அதுவும் கூரியரில் தான் வருகின்றது.
பொங்கல் அட்டைகளை வாங்க காசு சேர்த்த காலம் எல்லாம் உண்டு. கயித்து கட்டில் மேல் ஆயா மூட்டாய் கடையில், பவானி போய் பொங்கல் வாழ்த்து அட்டை வாங்கி வரும் அதற்கு காசு சேர்க்க ஆகும் ஒரு வாரம். சித்தப்பன், பெரியப்பன், அங்காளி பங்காளி எல்லாம் வீட்டை சுற்றி இருப்பதால்  பொங்கல் அட்டைகள் அனுப்புவது அதிகபட்சம் தாய்மாமாவிற்கும், தாத்தாவிற்குமாகத்தான் இருக்கும்.
25 பைசாவிற்கு பொங்கல் அட்டை வாங்கி அதில் 5 பைசா ஸ்டாம் ஒட்டி ஊருக்கு நடுவில் இருக்கும் தபால் பெட்டியில் போட்டு அதை தபால்காரர் எடுக்கும் போது பார்த்து பரவசம் அடையும் தருணங்கள் எல்லாம் மீண்டும் கிட்டா..
சித்தார் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் படிக்கம் போது தான் எனக்கு முதன் முதலாக பொங்கல் வாழ்த்து வந்ததாக ஞாபகம்.
தபால்காரர் வீட்டுப்பக்கம் வருகிறார் என்றால் அது கொளப்பலுரில் இருந்து என் தாத்தா அனுப்பிய பொங்கல் வாழ்த்தாகத்தான் இருக்கும். அதுவும் அந்த பொங்கல் வாழ்த்து கலர் அட்டைகளாலும், அதன் உள் ஒரு தாள் இணைத்து அதில் சில வாழ்த்து வரிகளை எழுதி அன்புடன் தாத்தா என்று அனுப்பி இருப்பார்.
பொங்கலுக்கு 2 நாள் முன் பள்ளிவிட்டு வந்ததும் அந்த வாழ்த்தை கையில் வைத்துக்கொண்டு பக்கத்து வீடு, எதிர்த்த வீடு மற்றும் கில்லி விளையாட அழைக்கும் நண்பர்கள் என ஒவ்வொருவரிடம் அதை காண்பித்து அதில் காணும் சுகத்திற்கு தான் எல்லையே இல்லை.
மேல்படிப்புக்காக பேருந்து ஏரி செல்லும் போது, அதுதாங்க 6, 7, 8 ம் வகுப்பு படிக்க பேருந்து ஏரி செல்லும் போது வாழ்த்து அட்டை பற்றி பேசுவோம். எங்கள் பள்ளியில் ஒரு தபால் பெட்டி வைத்து விடுவார்கள் அதில் நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பினால் அது அவர்களின் வகுப்பில் தினமும் மாலை கொடுத்துவிடுவார்கள்.
நமக்கும் எதாவது நண்பர்கள் அனுப்புவார்கள் என்று ஆசையோடு காத்திருந்த தருணம் அது. நமக்கு அனுப்பினால் அவர்களுக்கு திருப்பி நாம் அனுப்பவேண்டுமே என எங்கு நல்ல வாழ்த்து அட்டை கிடைக்கும் என்று விசாரித்த போது பவானி தனா புத்தக நிலையத்தில் தான் நல்லா கிடைக்கும் என்று அறிந்து, அதன் பின் ஒரு மாத காலமாக காசு சேர்த்து, வீட்டுக்கு தெரியாமல் கிருஷ்ண மூர்த்தியையும், பரந்தாமனையும் ஒரு ரூபாய் பஸ் சார்ஜ் போட்டு பவானி போய் கடைவீதியில் உள்ள தனா கடைக்கு சென்றால் நிறைய கலர் கலரான அட்டைகளை எதை வாங்குவது, எதை விடுவது என பேந்த பேந்த விழித்து கொண்டே பார்த்தேன்.
நடிகர்கள் படம் கொண்ட வாழ்த்து, முருகன், விநாயகர், சரஸ்வதி என பக்தி மயமான வாழ்த்து, அரசியல் தலைவர்கள் வாழ்த்து, ஜிகினா ஒட்டியது, உள்ளே விரித்தால் சாமி தெரியுற மாதிரி இருக்கும் அந்த வாழ்த்து, எம்ஜிஆர், கலைஞர், ரஜினி, கமல் போட்ட வாழ்த்து என புதிய உலகமாக இருந்தது அந்த வாழ்த்து அட்டைகடை.
நல்ல ஜிகினா உடன் உள்ள சரஸ்வதி படம் போட்ட ஒரு வாழ்த்து அட்டையும், எங்க தாத்தாவிற்கு அவருக்கு பிடித்த கலைஞர் படம் போட்ட வாழ்த்து அட்டையும் வாங்கிட்டு அடுத்த நாள் பள்ளி சென்றேன். முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என  என்றுமே எனக்கு வாழ்த்து அட்டை வரவில்லை. 
சரி யாரும் நமக்கு அனுப்பவில்லை என்றால் என்ன நமக்கு நாமே அனுப்புவோம் என்று ஜிகினா போட்ட சரஸ்வதியை எனக்கு நானே வேறு பெயரில் அனுப்பி காத்திருந்தேன் கையில் கிடைக்கும் வரை.
தேன்மொழி, கயல்விழி, புனிதா எல்லாம் வகுப்பில் உட்கார்ந்திருக்க எங்க ரவி வாத்தியார் என் பெயரை அழைத்து அந்த அட்டையை என்னிடம் கொடுக்கும் போது ஏற்பட்ட ஆனந்தமும், அதற்கு பின் தேன்மொழி அந்த அட்டையை கொடு பாத்துட்டு தருகிறேன் என வாங்கி பின் அவள் கையால் எனக்க கொடுத்தது இன்றும் நிழல் ஆடுகிறது அந்த ஆனந்த தருனம்...
இன்று டெக்னாலஜி வளர்ந்து வாழ்த்து அட்டை காணமல் போனது வருத்தமாக இருந்தாலும் அதன் நினைவுகள் சுகமானதே....

8 comments:

  1. அது ஒரு கனாக் காலம் !

    ReplyDelete
  2. நமக்கு வாழ்த்து அட்டைகள் நம் குழந்தைகளுக்கு வாட்ஸ் அப். நாம் இப்படி பேசுவது போல எதிர்காலத்தில் அவர்களும்ம் இப்படிதான் அந்த காலத்தில் நாங்க்ள் வாட்ஸ் அப்பில் வாழ்த்தை அனுப்பி பகரிந்து கொண்டோம் என்று பேசிக் கொண்டிருப்பார்கள்

    ReplyDelete
  3. அருமை நண்பரே.. என் நினைவுகளையும் பின்னோக்கி தவழ வைத்து விட்டீர்கள்.. மிக நன்றி..
    அதுவும் தாத்தாவிற்கு கலைஞர் படம்.. என் தாத்தாவிற்கும் நான் கலைஞர் படம் போட்ட பொங்கல் வாழ்த்து அட்டையை தேடி கண்டுபிடித்து.. அவர் கேன்சர்'யின் இறுதி கட்டத்தில், சுயநினைவு சரியாக இல்லாத போது, அந்த அட்டையை காண்பித்து யார் இது என்று கேட்டு அவரு சரியாக சொன்னது ஞாபகம் வந்து இப்போது கண்ணீர் நிறைத்தது..

    ReplyDelete
  4. இன்னும் எத்தனை எத்தனையோ மறந்து விட்டது...

    ReplyDelete
  5. வாழ்த்து அட்டைகள் வாங்க காசு சேர்ப்பதும் வாங்கிய அட்டைகளை அனுப்ப மனமில்லாமல் வைத்துக் கொள்வதும் என அது ஒரு அழகிய காலம்தான்!

    ReplyDelete
  6. அது ஒரு கனாக்காலம். நானும் இதே போன்ற ஒரு கட்டுரை பகிர்ந்திருக்கிறேன்.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Sathish.. Indru dhaan Unadhu ValaithaLathai mudhan mudhalil parkiren.. Ennangalin Pradhipalippukal Arumai...
    Keep going.
    -Shrikhanth (Uyarvoam Uyarthuvoam)

    ReplyDelete