Thursday, January 30, 2014

பெங்களூரு மாப்பிள்ளை !!



தினேஷ் கைநிறைய சம்பளத்தோடு பெங்களூரில் பணி புரிந்து கொண்டு இருந்தான். ஊரில் அவன் அம்மா சரசு மகனுக்கு பெண் பார்த்துக்கொண்டு இருந்தால், என் மகனுக்கு 60 ஆயிரம் சம்பளம் அதனால "5 லட்சம் 100 பவுன் ஒரு ப்ளசர்" கொடுக்கற மாதிரி இடம் வேணும். இதை எல்லாம் கொடுக்கற இடம் என்றால், உனக்கு கமிஷன் 10 ஆயிரம் என்று தரகரிடம் கறாராக சொன்னாள்.

தினேசைப்பொறுத்த வரை பெண் நன்றாக இருக்க வேண்டும், ஒரு டிகிரியாவது படித்து இருக்க வேண்டும், கிராமத்து மனசும், நகரத்து நடையும் வேண்டும் என்பது தான் அவனின் ஆவல். இதை வீட்டில் சொல்ல அவனுக்க பயம், இந்த மாதிரி பெண்கள் நம்மை விரும்பமாட்டாங்களா? என்ற கவலை வேறு.

தரகர் ஒரு நல்ல இடம் இருக்கும்மா, வரும் ஞாயிறு உங்கள் மகன் வந்ததும் சொல்லுங்க, பவானி கூடுதுறை கோயிலுக்கு அழைத்து செல்லலாம். பெண் வீட்டார் பள்ளிபளையம் தான் அவர்களையும், பெண்ணையும் அங்கே வரச்சொல்லிடலாம் என்றார்.

 " பெண்ணை என்னப்பா பாக்கறது ? நான் சொன்னதை கொடுப்பாங்களா ? "

" அம்மா, நீங்க கவலையே படாதீங்க, பையன் பெங்களூரில் வேலை என்றதும், 150 பவுன் நகை, ஒரு கார், அதுவுமில்லாமல் அவுங்களுக்கு 2 பொண்ணுங்கதான், 20 ஏக்கர் தோட்டம் இருக்கு அதுவும் காவிரி கரையோரம், முப்போகம் விலையும் பூமி, 30, 40 எருமைங்க இருக்கு இத விட வேறு என்ன வேண்டும் "

" இந்த இடம் அமைஞ்சா?  உனக்கு 10 ஆயிரம், இல்ல 25 ஆயிரம் "

" அம்மா மனசு வெச்சா நல்லதே நடக்கும், எனக்கும் "

"வரும் வாரம் மகன் வருவான் வந்ததும் சொல்கிறேன் "

உடனே தினேசுக்க போனை போட்டவள் இந்த வாரம் வந்துருப்பா, உனக்கு பொண் பார்க்கபோறம் என்றாள். உனக்க நிறைய சீர் சிரத்தி செய்ய காத்திருக்கறாங்க !! மகனே வா, நிச்சயம் செய்திடலாம், பொண்ணு மட்டும் பிடிக்கலன்னு சொல்லிடாதே என்றாள்.

" எதுக்கும்மா, சீர் சிரத்தி எல்லாம், நல்ல குடும்பமாக இருந்தா பத்தாதா ? "

"டேய் சும்மா இரு, உன்ன பெத்த எனக்கு தெரியும் எது நல்லது? எது கெட்டது? என்று !!"

அடுத்த நாள் காலை பெண் பார்க்க செல்லும் போது,  தரகரிடம் நான் கேட்டது எல்லாம் தருகிறார்கள் தானே? என்று மீண்டும் ஒரு முறை உறுதிப் படுத்திவிட்டு புறப்பட்டார்கள !  தினேசின் பெற்றோர்கள் !!

சக சந்திப்புகள் முடிந்த பின் காயத்திரியை ரொம்பவே பிடிச்சிருந்தது தினேசுக்கு !! அம்மாவிடம், அம்மா நான் பொண்ணுடம் பேசனும் என்றான் ? இதில் என்னப்பா இருக்கு, பையன் பொண்ணு கூட பேசனுமாம், அப்படியே கோயிலைச் சுத்தி ஒரு ரவுண்டு போய்ட்டு வாங்க, என்று அனுப்பினாள்.

" என்னை உங்களுக்கு, பிடிச்சிருக்கா? என்றான்"

" பிடிக்கலின்னு சொன்னா, வேண்டாம்ன்னு போய்டுவீங்களா?

" ம்ம்ம்.... உங்க விருப்பம் !! "

" எனக்கு சம்மதம் தான், உங்களுக்கு சம்மதாமா? "

" ம்.. சம்மதம் தான் !!"

" இந்த திருமணம் முழுவதும் உங்க விருப்பத்தில் நடக்குதா தினேஷ், இல்ல உங்க அப்பா அம்மா விருப்பத்துக்கு நடக்குதா? ஏன் கேக்கறன்னா, நீங்க இருப்பது பெங்களூர் அங்க அழகான பெண்கள் நிறைய இருப்பாங்க, டவுசர் போட்டுகிட்டு சுத்துவாங்க, இன்னும் சொல்லிகிட்டே போகலாம், அதனால கேக்கிறேன் "

" ஐய்யய்யோ அப்படி எல்லாம் இல்லீங்கோ, என் முழு சம்மதத்துடன் தான் நடக்குது "

" திருமணத்திற்கு அப்புறம் என்ன செய்யப்போறீங்க? என்றாள் !! "

"திருமணம் முடிஞ்சு ஒரு வாரத்தில் பெங்களூர் போய்விடலாம். நான் முன்னாடியே வீடு பார்த்து விடுகிறேன் என்றான். "

" எதுக்குங்க, பெங்களூர் போகனும் எங்களுக்கு 20 ஏக்கர் நிலம் இருக்கு, ஆடு மாடு நிறைய இருக்கு உங்களை 100 பவுன் 5 லட்சம் கொடுத்து கல்யாணம் செய்து வைக்கிறார் !! "

" அதுல புது வீடு வாங்கிடலாம்ன்னு சொல்ல வர்றீங்களா? "

" இல்லங்க, உங்கள நாங்க வாங்கிட்டோம்ன்னு சொல்ல வர்றேன் !!! "

" என்னங்க சொல்றீங்க? "

" உங்கள வாங்கி வீட்டோட மாப்பிள்ளையா வெச்சிக்கிறோம், இங்க 30 எருமை, மாடுங்க இருக்கு இத்தனை நாளா நான் தான் மேய்ச்சேன், இனி நாம ரெண்டு பேரும் மேய்ப்போம் !! "

" பேசிட்டு திரும்பி பார்த்தாள், காயத்திரி !!

" வேகமாக நடந்தான் கோயிலின் வெளிப்புறம் நோக்கி தினேஷ் !! "

Wednesday, January 29, 2014

அஞ்சறைப்பெட்டி 30.01.2014


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

வணக்கம் வலையுக நண்பர்களே...

ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினவிழா சிறப்பு நிகழ்ச்சிகளை அவ்வப்போது பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஒரு சேனலில் 2 படம் 10 திரைக்கு வர இருக்கும், வந்த படங்களின் விமர்ச்சனம், இது தான் இவர்களின் நாட்டுப்பற்று போல. இந்த காலத்தில் நாட்டுப்பற்றை விட பணப்பற்று தான் அனைவருக்கும் அதிகம்.
கோவையின் பிரபல ஷாப்பீங்மாலுக்கு ஞாயிறு மதியம் சென்றிருந்தோம் அங்கு புட் கோர்ட்டில் ஒருவர் சொன்னார் இந்த குடியரசு தினம் திங்கட்கிழமை வராதா? நமக்கு ஒரு நாள் லீவ் கிடைச்ச மாதிரி இருக்கும், வார நாட்களில் ஷாப்பிங் மால் வந்தால் நிறைய பிகர்களும் இருக்கும், இந்த வாரத்தில் இன்னொரு நாளும் கலர் கலரா கண்ணுக்கு குளிர்ச்சியா அனுபவிச்சிருக்கலாம் என அவர் புலம்பினார், அவருடைய கவலை அவருக்கு..

இங்கு எல்லாருக்கும் நாட்டுப்பற்றை விட பணப்பற்று தான் அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது.
.......................................


இரண்டு நாள் விடுமுறையில் சனிக்கிழமை  என் மகனின் அன்பு தொந்தரவால் யானை முகாமுக்கு சென்று, யானையை பார்க்கலாம் என்று மேட்டுப்பாளையம் அழைத்துச் சென்றேன்.

யானை முகாமில் 148 யானைகள் இருக்கின்றன அவற்றை எல்லாம் பார்க்கலாம், அது குளிக்கும் போது தண்ணீரை பீச்சியடிக்கும், தண்ணீரில் விளையாடும், அதன் மேல் பாகன் அமர்ந்திருப்பார், அத்தனை யானைகளை ஒன்றாக பார்ப்பது மிக கடினம் என்றெல்லாம் என் மகனுக்கு கதையாக சொல்லி மேட்டுப்பாளையம் வனபத்திகாளியம்மன் கோவில் அருகே உள்ள யானை முகாமிற்கு சென்றோம்.

நாங்கள் சென்ற நேரம் கூட்டமே இல்லை என்பதால் மிக்க மகிழ்ச்சியாக சென்றோம், உள்ளே சென்றதும் ஒரு கம்பி வேலி போட்டு இருந்தானர் அதன் மேல் நின்று பார்த்து விட்டு கிளம்புங்கள் என்று சொல்லி விட்டனர்.

என்ன அவ்வளவுதானா? ஏங்க யானையே தெரியலியே என்று கேட்டோம், கீழே போய் பார்த்தால் உசுருக்கு உத்திரவாதம் இல்லைங்க? என்றனர். அது வரை யானை கதை கேட்டுக்கொண்டு வந்த என் மகன் என்னை கேள்வியால் துளைத்துவிட்டான்.

அங்கு இருந்த கால்நடை மருத்துவர் ஒருவர் எனக்கு உறவினர், அவரிடம் பேசியதில் யானைகள் எப்போதும் போல இருக்காது அதுவும் நிறைய யானைகள் இருக்கும் போது அவைகளே சண்டை இட்டுக் கொள்ளும், அதனால் அருகில் போகக்கூடாது என்றார். தூரத்தில் இருந்தே நாலு யானைகளை பார்த்து விட்டு திரும்பினோம்.

யானை முகாம், யானைகளுக்கு மட்டும் தான் அங்கு யானைகள் புத்துணர்விற்காக வந்துள்ளது அங்கு அதை காட்சிப்பொருளாக பார்க்கப்போனது எங்க தப்பு தான், எல்லாத்துக்கும் காரணம் ஆசைதான் செலவே இல்லாமல் குடும்பத்தை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை தான் காரணம்...

.......................................

இந்த முறை பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் 3 அணியா அல்லது 4 அணியா என்று இன்னும் குழப்பமாகவே இருக்கிறது அரசியல் பார்வையாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும்.

ஓட்டுக்கள் பிரிய பிரிய பலமான ஓட்டு வங்கி உள்ள கட்சிக்கே ஆதாயம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

பாமக, பாஜக கூட்டணியில் வந்ததில் ஆச்சர்யம் இல்லை, கூட்டணி இருந்தால் தான்  வெற்றிகள் கிடைக்கும் என்று நன்கு அறிந்தவர் மருத்துவர் ஐயா என்பதை காட்டுகிறது.

மதிமுக விற்கு 6 இடம் என்று தான் பரவலாக பேச்சு அடிபடுகிறது வைகோவும் போதும் என்று நினைப்பார் போல.

காங்கிரஸ் யாருடன் கூட்டு என்று தேர்தலுக்கு முந்தைய வாரம் தான் சொல்லுவார்கள் அது வரை அவர்கள் அணி சஸ்பென்ஸ்...

.......................................

ஆம் ஆத்மியை அனைவரும் பார்த்து கொண்டு இருக்கின்றனர் என்பதை அறியாதவராக இருக்கிறார் கெஜ்ரிவால், தங்கள் அமைச்சர்களுக்கு சொல்லவேண்டாமா? எதைச் செய்தாலும் நிதானமாக யோசித்து செய்யுங்கள், எங்கு சென்றாலும் பார்த்து செல்லுங்கள், நம்மை ஊடகங்கள் மட்டுமல்லாமல் அனைத்து எதிர்கட்சிகளும் காலை வார காத்துக்கிடக்கின்றன என்ற அறிவுரையை கட்சி எம்எல்ஏக்களுக்கும், மந்திரிகளுக்கும் இனிமேலாவது பாடம் நடத்தினால் அவரின் கட்சிக்கு நல்லது.

.......................................  
பரபரப்பாக பேசி அரசியல் ஆதாயம் அடையளாம் அல்லது மக்களுக்கு இப்படி ஒரு தலைவர் இருக்கிறார் என்று அறிவதற்காகவே பேட்டி கொடுத்து பல போராட்டங்கள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்றனர் பல தலைவர்கள். காங்கிரஸ் பேட்டி கொடுத்தால் அதை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்துகிறது. பாஜக பேட்டி கொடுத்தால் அதை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. ஆக மொத்தம் போராட்டம் நடக்கிறது, பொதுமக்களுக்கு இடையூராக இருக்கின்றது என்பது தான் உண்மை.

.......................................  


அந்தமான் படகு விபத்து மிகவும் வருந்ததக்கது. நமது இந்திய சுற்றுலாவை இன்னும் மேம்படுத்த வேண்டும், முக்கியமாக சட்டதிட்டங்களை நேர்மையாக அதே சமயம் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் சுற்றுலா மையங்களில். விபத்து அனைத்து இடங்களிலும் நடக்க கூடிய ஒன்று தான் ஆனால் அவ்வாறு நடந்தால் எவ்வாறு தப்பிப்பது என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கை நம்ம ஊரில் எந்த சுற்றுலா மையத்திலம் இல்லை என கூறலாம்.

ஆங்கில சேனல் பாக்கிறோம் அதில் கடற்கரையில் குளிக்கின்ற பலர் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர் உடனே அவர்களை மீட்க அங்கே மீட்பு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது அவர்கள் எவ்வாறு மீட்கின்றனர், எவ்வாறு கண்காணிக்கின்றனர் என்று எல்லாம் மிக தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றனர். அதில் ஒரு பகுதியை கூட நாம் செயல்படுத்துவதில்லை எந்த சுற்றுலாமையத்திலும். கண்காணிப்பு இல்லாத பகுதிகளில் நிச்சயம் என்றாவது ஒரு நாள் பெரிய விபத்து ஏற்படத்தான் செய்யும்.

பல பெரிய விபத்துக்கள் நடந்து இருப்பதை பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். இனியவாது தடுப்பார்க்ளா பொறுத்திருந்து பார்ப்போம்.
.............................. 


பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பல ஜாதிக்கட்சிகள் ஐக்கியமாகின்றன. குறிப்பிட்ட பகுதியில் ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக இருக்கின்றனர் அதை வைத்து ஜாதிக்கட்சிகள் எல்லாம் கூட்டணியில் சேர்ந்து தங்களுக்கு அதிக சீட் வேண்டும் என்று வேண்டு கோள் வைக்கின்றனர், அது தவறு என்று சொல்ல முடியாது அவர்கள் உரிமை கேட்கிறார்கள். 

திராவிட கட்சிகளுக்கு எதிராக புதிய கூட்டணி அமைத்திருப்பது பெரிய விசயம். ஆனால் மக்கள் வழக்கமான திராவிட கட்சிகளை ஏற்றுக்கொள்வார்களா ? அல்லது ஜாதிக்கட்சிகளை ஏற்றுக்கொள்வார்களா? என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Tuesday, January 28, 2014

சோத்துக்கடை - ஹோட்டல் அன்னலட்சுமி, சத்தியமங்கலம்


ஒரு வருடத்திற்கு முன் சத்தியமங்கலம் வழியாகத்தான் ஒவ்வொரு வாரமும் அந்தியூர், பவானி செல்வேன். இப்போது தேசிய நெடுஞ்சாலை ஒரளவிற்கு சரி செய்ததால் தேசிய செடுஞ்சாலையிலேயே பயணிக்கிறேன். சத்தி வழியாக சென்றாலும் அதிகம் சாப்பிடுவதில்லை வழியில் கிடைக்கும் நொங்கு, பதனீர், கொய்யா என வழியில், சாலையில் விற்கும் பழங்கள் எல்லாம் வாங்கி சாப்பிடுவதுதான் வாகனத்தில் செல்லும் போது உற்சாகமாக இருக்கும்.

ஆசனூர் செல்வதற்காக சத்தியில் கறி வெட்டிக்கொண்டு இருந்தோம், கறிக்கடைக்காரரிடம் இங்கு காலை உணவிற்கு இட்லியும், குடல்கறியும் எங்கே கிடைக்கும் என்று விசாரித்தோம் அவர் அப்படி எல்லாம் இங்கு கிடைக்காதுங்க என்றார், சரி தேடுவோம் என்று ஒவ்வொரு இடமாக விசாரிக்க ஆரம்பித்தோம்.

காலை உணவுகள் அதிகம் இட்லியாகத்தான் இருக்கும் அநேக வீட்டில், ஞாயிறு அன்று மட்டும் அசைவம் வைத்து சாப்பிடுபவர்கள் சிக்கன் அல்லது கறிக்குழம்போடு சாப்பிடுவர், இட்லிக்கு எத்தனையோ குழம்புகள் சுவையாக இருக்கும் என்று சொன்னாலும் இட்லியும், குடல்கறியையும் அடிச்சக்கவே முடியாது, குடல் கறி பிரியர்கள் அநேகம் பேர் இந்த வரியை நிச்சயம் வழி மொழிவார்கள். அதுவும் குடல் பொறியலை விட குடல் குழம்புக்குத்தான் இட்லியுடன் கலந்தடிக்கும் போது சுவை கூடும். இதற்காகவே வெளியூர் சென்றால் இட்லி குடல்கறி எங்கே கிடைக்கும் என்று ஒரு சுத்து சுத்தி வருவேன் அந்த ஊரை.

நிறைய பேருக்கு அவர்கள் ஊரில் ஹோட்டல் இருக்கிறது என்று தெரியும் ஆனால் அங்கு என்ன நன்றாக இருக்கும் என்றும் அதற்காக நிறைய பேர் அங்கே சாப்பிட வருகிறார்கள் என்று தெரியாது. ஊரின் அருமை ஊர்க்காரர்களுக்கே தெரியாது என்று கூட கூறலாம். இந்த ஹோட்டல் படத்திற்காக நண்பர்களை தொடர்பு கொண்ட போது அப்படியா, அங்க இது பேமஸா என்ற எதிர் கேள்வி கேட்கின்றனர்.

சத்தியமங்கலத்தில் ஒரு ஆட்டோ டிரைவரிடம் விசாரிக்கும் போது அன்னலட்சுமிக்கு போங்க இதே ரோட்டில் என்றார். அன்னலட்சுமி ஹோட்டல் வாசல் வந்தததும் பெரிய கடை, முன்னாடி விசாலமான வாகனம் நிறுத்தும் இடம், ப்ளக்ஸ் போர்டில் அன்னலட்சுமி சைவம், அசைவம் என எழுதி இருந்தது, கடையின் உள்ளே சென்றதும் குடல் ரெடியா என கேட்டேன், அண்ணே குடல் ரெடியாக இன்னும் 5 நிமிடம் ஆகும் ஆனா, தலைக்கறி ரெடி என்றனர். என் கூட வந்த உடன்பிறப்புக்கள் அப்படியா தலைக்கறி என்றால் ஒகே என்று உள்ளே வந்தால் உட்கார இடம் இல்லை. பேருந்து நிலையம் பக்கத்தில் இருப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் தான் அநேகம் பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர் அவர்களின் தினசரி காலை உணவு அங்கேதானாம்.

சிறிது நேரத்தில் இடம் கிடைத்தது வரிசையாக உட்கார்ந்து கொண்டு இட்லி தலைக்கறி ஆர்டர் செய்தோம். ஆளுக்கு இரண்டு இட்லி கூடவே ஒரு சிறிய தட்டு நிறைய க்ரேவியுடன் தலைக்கறி. இட்லியை பிச்சு கிரேவியுடன் தொட்டு நாவில் வைத்தவுடன் அளவான காரத்தில் இருந்தது கிரேவி அப்படியே நாவில் கரைந்தது. எதிர்பார்க்கவில்லை நான் அவ்வளவு சுவையை தலைக்கறி வரமிளகாய், தேங்காய் மற்றம் சிறு வெங்காயம் போட்டு வதக்கி கொடுத்திருந்தனர். முக்கியமாக நன்றாக வெந்து இருந்தது. இரண்டு இட்லிக்கு ஒரு ப்ளேட் தலைக்கறியை காலி செய்தேன். நான் மட்டும் தான் காலி செய்தேன் என்று திரும்பி பார்த்தால் என் சகாக்கள் எல்லோம் காலி செய்தனர்.

மீண்டும் அண்ணே குடல் ஆகிவிட்டதா என்றேன், இரண்டு நிமிடம் பொறுங்க தம்பி, இப்பதான் இறக்கி வைத்துள்ளனர் என்றார். அதற்குள் என் சகா இன்னும் இரண்டு இட்லி ஒரு ப்ளேட் தலைக்கறி என சொல்ல, எனக்கு மீண்டும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது, எனக்கும் அதே போல என சேர்த்து சொன்னேன். மறுபடியும் இரண்டு இட்லிக்கு அந்த ப்ளேட் தலைக்கறியும் சாப்பிட்டாச்சு, சாப்பிட்டு நிமிரும்போது குடல் ரெடி எத்தனை ப்ளேட் என்றனர், இப்ப ஆளுக்கு ஒன்னு என்று ஆர்டர் சொல்லி காத்திருக்கவில்லை சுடச்சுட உடனே வந்தது, ஒரு ப்ளேட் நிறைய குடல் கறி எங்கள் இலையை பதம் பார்த்தது.

குடல் கறியில் நன்றாக வெந்த பின் அதில் மசாலாவை தூக்கலாக சேர்த்து இருந்தனர் மசலாவும், குடலும் நன்கு பிணைந்திருந்தது. அதன்பின் பெரியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பில்லை உடன் பெப்பர் கொஞ்சம் கலந்து குடலோடு சேர்த்து கிரேவியாக கொடுத்தனர். இதற்கும் இட்லிக்கும் உண்டான காம்பினேஷனில் மீண்டும் இரண்டு இட்லி உள்ளே போனது. ஆசானூருக்கு சென்று சாப்பிட இடம் இல்லாமல் இங்கேயே வயிறு நிரம்பியது.

நிச்சயம் சத்தியமங்கலம் பக்கம் சென்றால் சாப்பிட்டு பாருங்க தலைக்கறி, மற்றும் குடல் கறியையும் எப்போதும் மறக்காத சுவை. மீண்டும் சாப்பிட தோன்றும் சுவை. சத்தியமங்கலம் என்றலே வீரப்பன் ஞாபகம் வரும் தற்போது எனக்கு தலைக்கறியும், குடல்கறியும் தான் ஞாபகம் வருகிறது.

ஒரு நபர் எட்டு இட்லி 2 ப்ளேட் தலைக்கறி, 2 ப்ளேட் குடல் கறி சாப்பிட்டால் நிச்சயம் நகர்புறத்தில் 300 ரூபாய்க்கு மேல் தான் பில் வரும். ஆனால் இங்கு மிக குறைவான விலையில் அசத்தலான டேஸ்ட்டில் இருந்தது.

பெயர்:  ஹோட்டல் அன்னலட்சுமி ( சைவம், அசைவம்)
இடம்: சத்தியமங்கலம் ( பஸ்நிலையத்தில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் இடப்பக்கம் உள்ளது
விலை: ஒரு ப்ளேட் தலைக்கறி 40 ரூபாய், குடல்கறி 40 ரூபாய் என மிக குறைந்த விலைதான். 

Monday, January 27, 2014

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் எனது பார்வையில்...


லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் இன்றைய இணையத்திலும், சென்னை புத்தக கண்காட்சியிலும் பரபரப்பாக பேசப்படும் புத்தகம் இந்த புத்தகத்தை நிச்சயம் வாங்க வேண்டும் என்று எண்ணிவர்களின் நானும் ஒருவன். புத்தக கண்காட்சிக்கு செல்லவில்லை என்றாலும் என் இனிய நண்பன் மூலம் இந்த புத்தகம் எனக்கு வந்தது. கையில் கிடைத்த அன்றே வாசித்து முடித்துவிட்டேன் இப்புத்தகத்தை.

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் இந்த புத்தகத்தை படித்தால் போதுமா நமக்கு பிடிச்ச நாலுகருத்தை சொல்லவேண்டும் அல்லவா? அதற்காக இது விமர்ச்சனம் என்று எண்ணவேண்டாம் வா.மணிகண்டனை விமர்ச்சிக்கும் தகுதி நிச்சயம் எனக்கில்லை என்று நன்றாக தெரியும். ஆனால் புத்தகத்தை வாசித்து விட்டு சும்மா போகலாமா? போகுற போக்கில் நானும் நாலு கருத்தை பதிவு செய்ய விரும்பிகிறேன்..

மின்னல் கதைகளை படிக்க படிக்க நிச்சயம் அதில் வரும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டது போலவும், நமக்கு அருகில் நடந்தது போலவும் இருக்கிறது. இந்த புத்தகத்தில் வரும் பெரும்பாலான ஊர்கள் மற்றும் பள்ளி சம்பந்தப்பட்ட வரிகள், ஆசிரியர் பெயர்கள் எல்லாம் எனக்கு நன்கு பரிச்சமானவை அதனால் இந்த புத்தகத்தோடு நான் வெகு நேரம் பயணித்து கொண்டு இருக்கேன் இதற்கு காரணம் நானும் அதே ஊர்களில் சுற்றியவன், அந்த பள்ளியியே படித்தவன்  என்பதால் கூட இருக்கலாம்.

"சாவதும் ஒரு கலை" என்ற கதையில்

"செக்ஸ் என்றவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?" என்கிறாள்.

தூக்கி வாரிப்போட்டது என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை

"என்னங்க? இப்படி தீடீர்ன்னு கேட்டா?"

"அதான் கேட்டேன்ல. சொல்லுங்க"

"இல்லை.. என்ன சொல்றதுன்னு" தெரியலை

இந்த வரிகள் நிச்சயம் இன்றைய காதலர்கள் பயணித்த வார்த்தைகளாக இருக்கும். இதைப்படிக்கும் போது ஒரு காதலியிடம் காதலன் அல்லது காதலி பேசியவைகள் நிச்சயம் நினைவில் நிழல் ஆடும்.

சரோஜா தேவி, துலுக்கன் இன்னும் பல கதைகள் அவரின் நிசப்தத்தில் முன்னரே படித்ததால் அடுத்து வரிகள் என்னவாக இருக்கும் என்று யூகிக்கமுடிந்தது ஆனால் இணையத்தில் படிப்பதற்கும் புத்தகத்தில் படிப்பதற்குமான ரசனை நன்கு அறியமுடிகிறது. ஜாகீர்நாயக்கன் பாளையம் பற்றி இணையதில் எழுதி இருந்தார் அதையும் கூட சேர்த்திருக்கலாம்.

சக்கிலிப்பையன் என்னும் கதையில் வரும் தலைப்பை மாற்றி இருக்கலாம் என்று தோன்றுகிறது. கதை ஜாதியை பற்றி இல்லை என்றாலும் அதன் தாக்கம் என் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது, எனக்கு மட்டுமல்ல எங்கள் பகுதியில் நிறைய பேர் இதே சம்பவம் நிச்சயம் நடந்து இருக்கும், நிறைய நண்பர்கள் வீட்டில் வசைபாடி இருப்பர் என்பதில் மாற்று கருத்து இருக்காது.

நீதானே என் பொன்வசந்தம் என்னும் கதையில் எதார்த்ததையும் தாண்டி அவரின் கற்பனை கலந்து அற்புதமான கதையாக வந்துள்ளது. இன்றும் பல இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் இப்படித்தான் நடைமுறையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை கூறி உள்ளார் அதுவும் எல்லீஸ்பேட்டை என்றதும் அவன் அம்மாவின் பேச்சு வேறு விதமாக இருந்தது என்பதை நன்றாக சுட்டிக்காட்டி உள்ளார்.

பல கதைகள் உண்மையை அடிப்படியாக கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து நமக்கு மின்னலாக நம் நினைவுகள் வந்து போகக்கூடிய அளவிற்கு கொடுத்துள்ளார் என்பதில் மகிழ்ச்சேயே அதுவும் பறவளவு என்ற கதை நம்பியூர் ஏரியாவில் பெரும் பரபரப்பை எற்படுத்திய நிகழ்வு என்பதை மறுக்க மறக்க இயலாது.

வா.மணிகண்டனின் நிசப்தத்தை வாசிப்பவர்கள் அனைவரும் நிச்சயம் விரும்பி படிப்பார்கள் இந்த புத்தகத்தை. வாசிப்பனுபவம் அதிகம் உள்ளவர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று. ஈரோடு, கோவை, சேலம் பகுதியில் உள்ளவர்கள் அவர்களின் வட்டார வழக்கிலேயே இவரின் எழுத்து நடை இருப்பதால் படிக்க படிக்க புத்தகத்துடனே பயணித்தது போல நிச்சயம் இருக்கும். அவரின் நிசப்தத்தில் இன்னும் பல சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன அதையும் ஏன் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை. அடுத்த புத்தகத்தில் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

Wednesday, January 22, 2014

அஞ்சறைப்பெட்டி 23/01/2014


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

வணக்கம் வலை நண்பர்களே...

2014ம் ஆண்டின் முதல் அஞ்சறைப்பெட்டி உங்களை அன்போடு வரவேற்கின்றது. 2014ம் ஆண்டிற்கான திட்டங்கள் அனைத்தையும் வகுத்து செயல்பட்டுக்குகொண்டு இருப்பீர்கள் அனைவருக்கும் சிறப்பாக இருக்க என் வாழ்த்துக்கள்...

நிறைய எழுதவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் அதற்கான காலத்தை சரியாக பின்பற்றாததே எழுத இயலாமல் போகிறது என்பதை அறியமுடிகிறது.. பார்ப்போம் இந்த வருடமாவது காலத்தை சரியாக ஒதுக்குகிறோமா என்று.

.......................................

ஆம் ஆத்மியின் போராட்டங்கள் மக்கள் மனதில் நிறைவாக போய்ச்சேருகின்றது. போலீசார் அமைச்சர்கள் பேச்சை கேட்பதில்லை என்று தர்ணாவில் ஈடுபட்டு கடைசியாக அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டு  முதல்வர் அன்றாட பணிகளை தொடர்கிறார். கட்டாய விடுப்பில் சென்றால் போதுமா? அந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று பத்திரிக்கைகளில் செய்தியை தேடினால் கெஜ்ரிவால் புகழ்தான் இருக்கிறது தீர்வைக்காணம். ஆக மொத்தம் தர்ணா போராட்டத்தின் மூலம் பிரதமர் ரேசில் கெஜ்ரிவால் இருப்பது அவர் பெருமைப்பட வேண்டிய விசயமே...

.......................................

சமூக வலைத்தளங்களில் கேப்டனை புகழ்பாடமல் கழுவி ஊற்றியவர்கள் தான் அதிகம் எல்லோர் வாயையும் அடைக்கும் படி உள்ளது இன்று திமுக, காங்கிரஸ், பாஜக என எல்லா கட்சிகளும் எங்க கூட்டணிக்கு வாங்க வாங்க என்று கேப்டனை மலேசியா வரை போய் ஆதரவு கேட்பது. கேப்டன் தெளிவாக முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அவர் ஜெயிக்கும் குதிரையை சரியாக தேர்ந்தெடுத்து அதன் மீது பயனித்தாள் அவர் கட்சியின் எதிர்காலம் டெல்லியிலும் ஓர் நிலையான இடம் கிடைக்கும். அதிக பாராளுமன்ற இடங்கள் கொடுக்கிறார்கள் என்று சீட்டுக்கு ஆசைப்பட்டு கூட்டணி அமைத்தால் நிச்சயம் முடிவு அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது.

.......................................

தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணிக்கு எல்லா கட்சிகளும் கூடி கூடி விவாதிக்கின்றன. அதிமுக தனித்து போட்டி என்று சொல்லிக்கொள்கின்றனர் நிச்சயம் தனித்து போட்டி இருக்காது என்பது என் கருத்து. கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி நிச்சயம் இருக்கும். மேல்சபை தேர்தலில் இதன் வெளிப்பாடு தெரியவரும் என்பதில் ஐயமில்லை.

.......................................  

சென்னையில் இப்போது தான் புத்தக திருவிழா ஓய்ந்திருக்கிறது சென்னை மக்கள் மட்டுமில்லாமல் அனைத்து பகுதியில் இருப்பவர்களும் சென்னை சென்றால் புத்தக திருவிழாவில் கால் பதிக்காமல் திரும்புவதில்லை முகநூலிலும், டிவிட்டடிரிலும் திறந்தாலே நான் வாங்கிய, வாங்க மறந்த புத்தகம் என்ற பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இதுவரை அதிகம் புத்தக கண்காட்சிக்கு எல்லாம் நான் சென்றது இல்லை அடுத்த முறை புத்தக கண்காட்சிக்கு செல்லவேண்டும் என்று இந்த முறையே தேதி குறித்து வைத்துக்கொண்டேன். ( இந்த முறை வருவதாகத்தான் இருந்தேன் பட்ஜெட் ரொம்ப உதைத்தால் கம்முன்னு இருந்து விட்டேன். எனக்கு வேண்டிய புத்தகத்தை மட்டும் மச்சி ஆரூர்மூனாவிடம் சொல்லி இருந்தேன் இன்று கையில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்... மச்சி அனுப்பீட்டீங்க தானே?? )

.......................................  


எனது வலைப்பூவில் புதிதாக சோத்துக்கடை எழுத ஆரம்பித்துள்ளேன் கொங்கு மண்டல பகுதியில் தரமான நிறைய உணவகங்கள் உள்ளன. 5 பேர் மட்டுமே உட்கார்ந்து வயிறார சாப்பிடும் உணவகங்களாக பதிய இருக்கிறேன். பெரிய கடைகளுக்கு சென்று ஒரு புரோட்டோவும், கறிக்கொழும்பும் 250 ரூபாய்க்கு தின்பதற்கு பதில் புரோட்டாவும், நாட்டுக்கோழி குழம்பும் 50 ரூபாய்க்கு கிடைக்கும் கடைகள் இங்கு நிறைய உள்ளன அந்த கடைகள் தான் நம் சோத்துக்கடை. 

சோத்துக்கடை இன்னும் எந்த மாதிரி இருக்கவேண்டும் என்று தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

என்றும் அன்புடன்
சதீஸ் சங்கவி...

முகநூல் மாப்பிள்ளை...



வணக்கம் நான் நந்தினி நான் பொறியியல் பட்டதாரி எனக்கு பொழுது போக்கு எல்லோரையும் போல மூஞ்சிபுத்தகம் தான், வேற என்ன, எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க பட் யாரையும் நான் நேரில் பார்த்ததில்லை எனது போட்டோவையும் அனுப்பமாட்டேன் பசங்ககிட்ட நைசா பேசி என் கண்ணின் போட்டோவை மட்டும் கொடுத்து, அவுங்க போட்டோவை வாங்கிடுவேன் எப்பூடி?? பேஸ்புக்கில் எனக்கு இன்னொரு பெயர் உண்டு அது தாங்க பேக் ஐடி அதன் பேர் சிந்து. சரிங்க போர் அடிக்குது நான் சாட்டிங்க்கு போகிறேன்..

" ஹாய், விநோத் எப்படி இருக்கே? "

" நான் நல்லா இருக்கேன், நீ ஏன்? போட்டோ அனுப்ப மாட்டீங்கற? "

" இல்லடா உன்னை நேரில் பார்க்க ஆசை, சோ அதுதான்.. கொஞ்சம் வெயிட் பன்னு செல்லம் "

(இவன் இப்படித்தாங்க எப்பவும் போட்டோ கேட்டுகிட்டே இருப்பான், நான் என்ன இவன மாதிரி அம்மூஞ்சிய உடனே கொடுக்க)

" ஹாய், சதீஸ் எப்படி மச்சி இருக்கே "

" நான் நலம் சிந்து நீ எப்படி இருக்க? "

" நலம், நலம் அறிய ஆவல் "

" ஆவல் எல்லாம் போதும், உன் குரலையும், உன் அழகான கண்ணையும் நான் எப்ப பார்ப்பது "

" ஏண்டா அலையற, வெய்ட் மச்சி சீக்கிரம் காமிக்கிறேன்
உனக்கு இல்லாததா? "

(இவன் ஒரு புகழ்ச்சி மன்னன், புகழ்ந்துகிட்டே இருப்பாங்க)

" ஹாய், சிந்து எப்படி இருக்க? "

" ஹாய் பிரபு, நீங்க ஆன்லைன்ல தான் இருக்கீங்களா? "

" என்ன சிந்து, நீ எப்ப வருவேன்னு உனக்காகத்தான் நின்னுகிட்டு இருக்கேன்"

" ஏம்ப்பா சேர் இல்லையா? "

" நாட் ஜோக்ம்மா, உண்மைய சொல்கிறேன் "

" சரி சரி ஆபிஸ் எப்படி இருக்கு? "

" போய்கிட்டு இருக்கு! அப்புறம் !! "

" என் வீட்டில் எனக்கு பொண்ணு பாக்கறாங்க! "

" அப்படியா குட் ஜாப், சீக்கிரம் கல்யாணம் செய்துக்கப்பா !! "

" இல்லப்பா. உண்யைத்தான் கண்ணாலம் செய்வேன் முடிவு செய்திருக்கேன் "

" என்னையவா? ஹா ! ஹா ! வேண்டாம்ப்பா ரொம்ப கஷ்டப்படுவாய் "

" இல்லப்பா, நீ தான் எனக்கு வேணும் செல்லம் "

" சரி சரி ஓவரா வழியாத அப்புறம் வழுக்கிடுவாய் "

(பிரபு இவன் எப்பவும் ஓவர் ஏக்டிங், அப்படியே உசிர கொடுக்கற மாதிரி வழிவான், என்ன செய்வது இவனையும் லிஸ்டில் சேர்த்து இருக்கேன்)

" ஹாய், சாய் எப்படி மச்சி இருக்கே ? "

" என்ன மச்சியா, மாமான்ன மரியாதையா கூப்பிடுங்க, மரியாதை தெரியாத பொண்ணா இருக்க, இப்படித்தான் சொல்லிக்கொடுத்தாங்களா ? "

" போதும் போதும் உங்க அட்வைஸ் ! "

" அப்ப வாம்மா வழிக்கு, எப்படி இருக்காங்க என் மாமனார், மாமியார் ? "

" ஹலோ நான் உங்களை லவ் பன்னவே இல்ல இதுல எங்கிருந்து வந்தாங்க மாமனார், மாமியார் !! "

" காலப்போக்கில் லவ் செய்து தானே தீருவாய், அதனால கேட்டேன்ம்மா !! "

" பார்க்கலாம், பார்க்கலாம் "

(இவன் கொஞ்சம் திமிராத்தான் பேசுவான் அதனால பிடிகக்கும் என் லிஸ்ட்டில் இவன் தான் முதலில் ஆள் கருப்பா இருந்தாலும் கலக்கலா இருப்பான்)

" ஏம்மா சிந்து, போதும் பேஸ்புக்கில் சாட் செய்தது, வா வந்து சாப்பிடு "

"சரிப்பா, என்னம்மா மாப்பிள்ளை போட்டோ கொடுத்தா ஈமெயில் ஐடி கேக்கறீயாமே, அம்மா சொன்னா ? "

" பேஸ்புக்கில் அவன கண்டுபிடிச்சி நல்லவனான்னு பார்க்கத்தான் அப்பா !! "

" கவலைப்படாதே உன் அப்ப செலக்சன் சோடை போகாது, அப்படி யாராவது நல்லவனை காதலிச்ச சொல்லு, அப்பாவுக்கு காதல் எல்லாம் தடையே இல்லம்மா !! "

" சரிப்பா "

ரம்யா எங்க அப்பா மாப்பிள்ளை செலக்ட் செய்துட்விட்டாராம், கல்யாணம் செய்துக்கு என்கிறார், நான் தினமும் சாட்டிங் செய்கிற நண்பர்களை என்ன செய்யலாம், அதில் ஒருத்தனை தேர்ந்தெடுக்கலாம் என்றும் யோசிக்கிறேன் எங்கப்பா காதலுக்கு எதிரி எல்லாம் இல்ல ரம்யா, இவுங்க நாலுபேரையும் ஒரே இடத்தில் சந்திக்கலாமா? எனக்கு சாய் பிடிச்சிருக்குடி அவன ஒகே செய்யலாம் என்று இருக்கேன்.

" போடி சினிமா மாதிரி இருக்கும் நாலு பேரும் நம்ம கம்பெனியில் தானே வேலை செய்கிறார்கள், கேன்டீன்க்கு வரச்சொல்லு  மச்சி மீட் பண்ணுவோம் "

" குட் ஐடியா மச்சி !! "

அன்று இரவு சாட்டிங்கில் வினோத், சதீஸ், பிரபு, சாய் என நான்கு பேரையும் நம்ம டைட்டில் பார்க் கேண்டீன்க்கு வாங்க நிச்சயம் சந்திக்கலாம் என்று 2 நாள் தள்ளி மாலை 7 மணிக்கு சந்திப்பதாக திட்டம். கடைசி டேபிள்க்கு வாங்க நானும் தோழியும் இருப்போம் என்றேன்.

ரம்யா மற்றும் சரண்யாவை அழைத்து கொண்டு கார்னர் டேபிளில் உட்கார்ந்துருந்த போது வரிசையாக வந்தனர் கூப்பிட்டு உட்கார வைச்சதும், அந்த டேபிளில் மொத்தம் 7 பேர் உட்கார்ந்திருந்தோம்.

" வினோத், சதீஸ், பிரபு, சாய் என அனைவருக்கும் எங்களை தெரியும் ஆனால் இதில் சிந்துங்கறது யார் என வரிசையாக கேட்டனர் (அப்ப சிந்து பேக் ஐடியா என நால்வருக்கும் கொச்ம் கடுப்பு போல)  "

சிறிது மௌனத்திற்கு பிறகு நான் தான் என கூறினேன். எல்லோர் முகத்தையும் பார்க்காமல் சாய் முகத்தை மட்டும் கவனித்தேன். 

" முதலில் பேசியவன் சாய் தான் அவன் தான் அம்மா தாயி ஆள விடு, தெரியாம சாட் செய்துவிட்டேன் என முதல் எஸ்கேப் அவன் தான் !! "

" அடுத்து ஆட்களும் துண்டைக்காணம் துணிய காணம் என்று ஓட, நான் சாய் போய்ட்டானே என்ன செய்யலாம் என்று யோசித்தேன் "

கூட இருக்கும் இருவரும் சிரி சிரி என்று சிரித்து இப்ப என்னடி செய்ய போகிறாய் என்று கிண்டலாக கேட்க...

" வேற என்ன செய்யறது எங்கப்பன் பார்த்த இழிச்சவாயனேயே கட்டிக்க வேண்டியது தான் வேற வழி என்று நடையை கட்டினேன்,  வீட்டுக்கு !! "

Monday, January 20, 2014

சோத்துக்கடை - அவிநாசி திருமூர்த்தி டீ ஸ்டால்


சோத்துக்கடை நிறைய எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வப்போது இதுவரை யாரும் அறியாத அதாவது அந்த ஊர்க்கராருக்கே அதன் சுவை தெரியாமல் இருப்பது போன்ற கடைகளை எழுதினால், என்னைப்போல தேடி தேடி சாப்பிடுபவர்களுக்கு மிக பயனாக இருக்கும் அவ்வாறு இருக்கும் கடைகளை மட்டும் பதிவாக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

இன்று நாம் சாப்பிடும் சோத்துக்கடை அவிநாசி திருமூர்த்தி டீ ஸ்டால் & மெஸ் இதன் பெருமை அந்த ஊர்க்கரார்களுக்கே சிலருக்கு தெரியவில்லை என்பது தான் முக்கிய அம்சம். டீ ஸ்டால் என்று தான் அனைவரும் நினைப்பர் ஆனால் உள்ளே என்நேரமும் 20 பேர் உட்கார்ந்து அவர்களின் கையும், வாயும் சண்டை இட்டுக்கொண்டு இருக்கும் என்பதை அறிந்து இருக்கமாட்டார்கள்.

2000ம் வருடம் எனக்கு அறிமுகம் இந்த திருமூர்த்தி டீ ஸ்டால், நண்பர் ஒருவருடன் கோவைக்கு காலையில் நேரத்திலேயே பயணித்துக்கொண்டு இருந்தோம் அவிநாசி வரும் போது காலை உணவை இங்கேயே முடித்துக்கொள்ளலாம் என்றார் சரி என்று இட்லியும், ஆப்பமும் சாப்பிட்டேன் ஏனோ அந்த கடையில் சுவை பிடித்து விட காரில் செல்லும் போது எல்லாம் சாப்பிடும் கடையாகிவிட்டது.

சமீபத்தில் குடும்பத்துடன் சென்றேன், குடும்ப மக்கள் எல்லாம் இந்த கடை அந்த கடை என்று லைட் வெளிச்சம் அதிமாகவும், பளீர் என்று தெரியும் படி உள்ள கடையை கை காண்பித்தனர். கம்முன்னு வாங்க ஒரு நல்ல டீக்கடையை காண்பிக்கிறேன் என்றதும் டீக்கடையா? என்று ஆளாளுக்கு மூஞ்சியை இழுத்தனர்.

அவிநாசி பஸ் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் டெலிபோன் ஆபிசை தாண்டி அரச மரத்துக்கு பககத்தில் காலை 8 மணிக்கு வண்டியை நிறுத்த இடமில்லாமல் தள்ளி நிறுத்தி இது தான் அந்த கடை என்றேன். இதுவா, என்று ஆளாளுக்கு வாயை பிதுக்கினர். வெளியில் பெஞ்ச் போடப்பட்டு அடுத்து உள்ளே போவதற்கு தயாராக உட்கார்ந்திருந்தனர் சில குடும்பங்கள் அடுத்து நாங்கள் போய் நின்றதும் எங்க குடும்ப மக்கள் எல்லாத்துக்கும் என் மேல அம்மூட்டு கோபம்.

அப்போது ஒரு குடும்பம் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து அவர்களின் BMW காரில் ஏறி அமர்ந்தனர். அப்போது தான் வீட்டு மக்களிடம் சொன்னேன் பாருங்க இந்த கடை வாடிக்கையார்களை என்று. அடுத்து எங்களுக்கு இடம் கிடைக்க ஆள் ஆளுக்கு கிடைத்த இடத்தில் உட்கார்ந்தோம் இலை வைத்து தண்ணீர் வைத்த உடன் இட்லி ஆர்டர் செய்தோம். (நிற்க கவனிக்க இட்லிக்கா எங்களை இவ்வளவு தூரம் படிக்க வைத்தாய் என்று தோணிருக்குமே ) இட்லி என்றால் குஷ்பு இட்லியான்னு தான் நம்மாளுக கேப்பாங்க ஆனா அது இல்லீங்க நன்றாக சுடச் சுட நல்ல வெளீர் நிறத்தில் பஞ்சு போல இட்லியை வைத்தனர் கூடவே சட்னியும், சாம்பார் மற்றும் காரச்சட்டினி அட அட இட்லியை எடுத்து சட்னியில் தொட்டு, சாம்பாரில் தொட்டு சாப்பிட்டால் லபுக்கு என்று உள்ளே போகும், போகும் போது அடுத்த துண்டு எப்ப நாக்கிற்கு வரும் என்று நாக்கு நிச்சயம் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும். நான் எப்பவும் இட்லி சட்னி, சாம்பார் மூன்றையும் நன்கு பிசைந்து சாம்பாரை நிறைய ஊற்றி குடுக்கும் ஆள் அதனால் நான் எப்பவும் 7 இட்லிக்கும் குறையாமல் சாப்பிடுவேன்.

அடுத்து தோசை, ஆப்பம் என சிம்பிளான உணவு வகைகள் தான் அவ்வப்போது பொங்கல் இருக்கும் இவை அனைத்துக்கும் அவர்கள் கொடுக்கும் சட்னி சாம்பாரின் ருசியில் நிச்சயம் மனம் குளிர்ந்து தான் போகவேண்டும். அன்று சாப்பிட்டுவிட்டு என் குடும்பத்தினர் இனி ஊருக்கு வரும் போது எல்லாம் வண்டி அவிநாசி போய்ட்டுத்தான் வரனும் என்று அன்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

காலை தான் இப்படி என்றால் இரவு இடம் கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிச்சுத்தான் இடமே கிடைக்கும் அந்த அளவிற்கு கூட்டம் நிற்கும். இரவு மெனுவும் ஒன்றும் பெரியதாக இல்லை இட்லி, தோசை, பொடி தோசை, ஆப்பம், சப்பாத்தி என்று சிம்பிளாகத்தான் இருக்கும் ஆனால் சுவைதான் மீண்டும் அங்கு வரத்தோணும். சின்ன இடம் என்றாலும் சுவையானது என்றால் தேடிப்போவதில் ஒன்றும் தவறில்லை..

பெயர்:  திருமூர்த்தி டீ ஸ்டால்

இடம்: அவிநாசி (புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது)

விலை: மிக மிக குறைவுதான்

படம் நெட்டில் சுட்டது...

Thursday, January 16, 2014

தொழில்அதிபர்...



பெயரோ கோடீஸ்வரன் ஆனால் ஊரில் எல்லோரிடமும் கடன். சிறுவயது முதலே கோடீஸ்வரன் ஆகவேண்டும் எண்ணம் உள்ளவன் தினேஷ் அதனால் அவனுக்கு பட்ட பெயர் தான் கோடீஸ், இவன் தான் நம் கதையின் நாயகன், இவன் கோடீஸ் ஆனானா? இல்லையா?

தினேஷ் ஒரு விவசாய கூலி குடும்பத்தில் பிறந்தவன் இவனின் இலட்சியமாக தொழில் அதிபர் கனவு மட்டுமல்ல கொஞ்சம் இல்ல நிறையவே பேராசைக்காரன். போராசை பெரு நஷ்டம் என்பதை அறியாதவன் அல்ல ஆனாலும் கனவு தொழில் அதிபர் ஆச்சே.

இவனுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது ஆனால் அது தரிசு நிலம் அந்த இடத்தை வாங்க ஆள் இல்லாததால் மழை பெய்தால் கடலை சாகுபடி செய்வார் அவரின் தந்தை மற்றபடி கூலி வேலை தான். நம் கோடீஸ் பால் ஊற்றியே  தொழில் அதிபர் ஆனார்  என ஒருத்தரைப்பற்றி படித்துள்ளான். அடுத்து 4 எருமை வாங்கியே தீரவேண்டும் என குறிக்கோளோடு இருந்தவன் அப்பாவின் தயவில் 2 எருமை மட்டுமே வாங்கினான்.

என்னதான் புண்ணாக்கு, வைக்குபுள் வைத்தாலும் காலை மாலை என மொத்தம் 5 லிட்டர் பாலுக்கு மேல் கொடுக்கவில்லை அந்த எருமை. இப்படியே போன எங்க தொழில் அதிபர் ஆவது என்று 5 லிட்டரை 6 ஆக்கினான் ஆனாலும் போராசை விடவில்லை 5 யை 10 ஆக்கினான் கொஞ்ச நாள் வண்டி ஓடியது இவன் பால் சுத்த தண்ணீர் என உள்ளுரிலும், வெளியூரிலும் பால் வாங்க மறுத்தனர் அப்புறம் என்ன நஷ்டம் தான்.

அடுத்த தொழில் மண் விற்பனை செய்வது என்று முடிவெடுத்து இருக்கற அஞ்சு பத்தை புரட்டி மண் விற்பனை செய்தான் நன்றாக போனது நல்ல முன்னேற்றம் தொழிலில் இரவு பகலாக மண் விற்பனை செய்தவன் தீடீர் என எத்தனை நாளைக்கு அரசாங்கத்திடம் வாங்கி விற்பது நாமே மண் தோண்டினால் என்ன என அவன் தொழில் அதிபர் புத்தி குறுக்கு வேலை செய்ததது ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது ஆனால் முடிவு தாசில்தார்கிட்ட மாட்டி இருக்கறத எல்லாம் பைன் கட்டி மிச்ச மீதியுடன் விட்டால் போதும் என அங்கிருந்து பறந்தான்.

இதன் பின் தொழிலை மறந்து வேலைக்கு செல்லாம் என்று முடிவெடுத்து பைக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான் தற்காலிகமாக தள்ளி வைத்தன் தொழில் அதிபர் வேலையை. எசக்கு பிசக்காக ஐடியா கொடுக்கும் நண்பர்கள் உடன் பல அறிவுரைகளை சொல்லி நல்ல வசதியாக வீட்டுப்பெண்ணாக திருமணம் செய்து கொள் நிறைய பணம் கிடைக்கும் தொழிலுக்கும் வசதியாக இருக்கும் என ஐடியா கொடுக்க அடுத்து பெண் தேட ஆரம்பித்தான். 10 ஏக்கர் நஞ்சை நிலம் புள்ள சித்தோடு சின்ராசுவிற்கு இரண்டு பெண்கள் எனவும் அதில் ஒன்னை கட்டினால் 5 ஏக்கர் நஞ்சை கன்பார்ம் என கூட இருக்கும் நட்புக்கள் ஏற்றிவிட சரி என்று தாலி கட்டினான் சின்ராசுவின் மகள் துளசிக்கு. துளசி நல்ல பாட்டாளி எல்ல வேலைகளையும் இழுத்து போட்டு செய்பவள்.

துளசியிடம் தன் கனவை சொல்ல அவளும் நல்ல விசயம் தான் ஆனால் அதற்கு கடுமையாக உழைக்கவேண்டும் என அறிவுரை சொல்ல உங்க அப்பாகிட்ட கேட்டு 5 ஏக்கரை நம் பேருக்கு மாற்றி லோன் வாங்கிக்கொள்ளலாம் என தினேஷ் ஒரு பிட்டை போட இவன் பிட்டை போட்ட அடுத்த வாரத்தில் ப்ளேக் நோயால் சின்ராசு உலகை விட்டு பறந்தான். சின்ராசுவிற்கு இரண்டு பெண்கள் என அறிந்தவனுக்கு இரண்டு பொஞ்சாதி, இரண்டாவதற்கு 4 பெண்கள் என்பதை அறிய மறந்தான், நஞ்சை யாருக்கு என்று எல்லோரும் நீதிமன்றத்தில் நீதி கேட்க புறப்பட்டனர் நம் நாயகன் தலையை தொங்கப்போட்டு இனி ஒழுங்கா வேலைக்கு போகலாம் என்று முடிவு செய்தான்.

கடவுள் கொடுக்க ஆரம்பிச்சிட்டா நிச்சயம் கொடுப்பார் என்பது போல தினேஷ்க்கு அதிஷ்டம் அழைத்தது அவன் மேட்டாங்காட்டின் மேல் நான்கு வழிப்பாதை வருகிறது நிலம் அளந்தனர். அப்படி அளக்கும் போது அவனது அரை ஏக்கர் அரசாங்கத்துக்கு போனது அதில் கொஞ்சம் பணம் அவனுக்கு கிடைத்தது இதை என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் துளசி டெபாசிட் செய்யலாங்க தொழிலை அப்புறம் பார்த்துக்கலாம் என்று கூற சரி என்றான் நம்ம கோடீஸ்..

துளசியின் யோசனையில் வேலையை துறந்தவன் சித்தோடு நான்கு வழிசாலை அருகில் கும்பகோணம் டிகிரி காபி கிடைக்கும் என கடையை அவனது இடத்திலேயே வைத்து வருமானத்துக்கு வழிதேடினான். எதேச்சையாக ஒருநாள் கும்பகோணம் டிகிரியை ருசிக்க இறங்கிய நான் ஏன்டா கோடீஸ் உன் தொழில்அதிபர் கனவு நனவாகும் போது ஏம்ப்பா டீக்கடை வைத்தாய் என்றேன்.. என்னடா சொல்ற, ஆமண்டா பேசாம இந்த இடத்தை ப்ளாட் போட்டு விற்றிருந்தாள் நீ தொழில் அதிபர் ஆகி இருக்கலாமடா என்றேன்.. ஐயா சாமி டிகிரி காப்பி இன்னொன்னு சாப்பிடு காசு வேனா தராதா இந்த ஐடியா கொடுத்து உசுப்பேத்தற வேலைய விடுங்கடா, எனக்கு இதுவே போதும் என்று அடுத்த வந்த ஆடி காருக்கு கும்பகோணம் டிகிரி காபியை இவன் ஆத்த துளசி காசு வாங்கி கல்லாவில் போட்டாள்..


Wednesday, January 15, 2014

சோத்துக்கடை - UPM கெடாக்கறி விருந்து



நிறைய தேடித் தேடி சாப்பிடுவேன் வித விதமாக சாப்பிடுவதில் அலாதி பிரியம் எனக்கு ஆனாலும் இது வரை சாப்பாட்டை பற்றியும், மெஸ் பற்றியும் எழுதியதில்லை முகநூலில் நம்ம டைரக்டர் கேபிள் அண்ணன் அவர்கள் தொடங்கிய சாப்பாட்டுக்கடையில் அவ்வப்போது பதிவிடுவேன் அவ்வளவு தான் எனது சோத்துப்பதிவு. நான் கடைகளை பற்றியும், உணவை பற்றியும் பதிவிடாததற்கு மிக முக்கிய காரணம் அங்கு மொபைலில் போட்டோ எடுத்தால் என் ரங்கமணிக்கு பிடிக்காது அதனால் பதிவிடுவதில்லை. 

நான் பதிவிடும் இந்த சோத்துக்கடை ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை பகுதிகளில் மிக பிரபலமானது. ஈரோடு பகுதிகளில் கெடாவிருந்து ஓட்டல்கள் மிக பிரபலம், இன்று இந்த பகுதியில் நிறைய கடைகள் இருக்கிறது அந்த கடைகளுக்கு எல்லாம் முன்னோடி தான் இந்த UPM கெடாவிருந்து சோத்துக்கடை. பெருந்துறையில் இருந்து வரும் போது சீனாபுரத்துக்கு அருகிலும், பெருமாநல்லூரில் இருந்து குன்னத்தூர் வழியாக சீனாபுரம் வரும் போதும் இந்த சோத்துக்கடை இருக்கிறது.

இது கடை அல்ல, ஒரு தோட்டம் இந்த தோட்டத்தின் பெயர் தான் UPM இந்த தோட்டத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் ஒரு பனியாள் ஒருவரோடு நடத்தப்படுகிறது இந்த சோத்துக்கடை மதியம் மட்டும் தான் கெடாவிருந்து காலை, மாலையில் கிடையாது. கெடாவிருந்துக்கு நாம் செல்ல வேண்டும் என்று நினைத்தால் முந்தைய நாள் மாலை அல்லது காலை 10 மணிக்குள் முன்பதிவு செய்யவேண்டும் அப்போது தான் நமக்கு கிடைக்கும் கெடாக்கறி விருந்து.

ஈரோடு மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் ஜவுளி மற்றம் கட்டிட கான்ட்ராக்டர்ஸ் அதிகம் உள்ள பகுதி, திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் அதிகம் இருப்பதால் அவர்களும் அதிகம் தங்களது வாடிக்கையார்களுடன் வருவதால் இந்த UPM கெடாவிருந்து தோட்டம் எப்போதும் கெடாக்கறி விருந்திற்காக உணவு ரசிகர்களின் கூட்டம் நிரம்பி இருக்கும்.

அப்படி என்னதான் சோறு போடுகிறார்கள் இந்த கெடாக்கறி விருந்தில் என்று நானும் நண்பர்களோடு சென்றிருந்தோன் சோறு போடுகிறார்கள் என்றால் முதலில் நிற்பது நானாகத்தான் இருக்கும். அன்று கோபியில் இருந்து நண்பர்களோடு குன்னத்தூர் வழியாக UPM கெடாக்கறி விருந்திற்கு தோட்டத்திற்கு சென்றோம். எளிமையான வரவேற்பில் அசத்தினார் தோட்டத்துக்காரர்.

மதியம் 1.30 மணிக்கு சரியாக சாப்பிட அழைத்தார் எங்களை, அதற்கு முன் சாப்பாடு ஒரு ஆளுக்கு 350 ரூபாய் என்று சொன்னாதால் நிறைய சாப்பிடவேண்டும் என்ற எண்ணமும் நிறைய சாப்பிடுவதற்கு ஒரு 60 ML மட்டும் சாப்பிட்டால் போதுமென்று கொஞ்சாமாக தாகசாந்தி அருந்திவிட்டு வெறும் வயிரோடு போருக்கு (சாப்பிட) தயாரானோம்.

வழக்கம் போல தலைவாழை இலையும், உப்பும் வைத்துவிட்டு பசியை தூண்டினர். பின் தலைக்கறி வைத்தனர் சும்மா சொல்லக்கூடாது 1 கரண்டி தான் வைத்தனர் நன்கு மசால், கொஞ்சம் பெப்பர் போட்டு தூக்கலான மணத்துடனும், நல்ல காரத்துடனும் இருந்தது அடுத்த நிமிடத்தில் வயிற்றுக்குள் சென்று விட்டது. அதில் இருந்த கிரவி என் ஆட்காட்டி விரலால் வழித்து வழித்து நக்கப்பட்டது.

குடல்கறி என்றதும் குடல் மட்டும் வரவில்லை கூடவே இரத்தமும், இதன் இரண்டுடன் சேர்த்து தேங்காய்ப் பூ போட்டு வைத்தனர். குடல் நன்கு வேகவைக்கப்ட்டு இருந்ததால் மெல்லுவதற்கு இதமாக இருந்தது.

நுரையீரல் வறுவல், எலும்புக்கறி, கறிவருவல், ஆட்டு மூளை, கொத்துக்கறி, கோலா உருண்டை என ஆட்டு வகையும், அப்புறம் வந்தது நாட்டுக்கோழி வறுவல், சில்லி சிக்கன், பள்ளிபாளையம் சிக்கன், பெப்பர் சிக்கன் அப்புறம் முட்டை வைத்தனர். இதை எல்லாம் வைத்த பின்தான் பிரியாணி அளவாக ஒரு கப்பில் வைத்தனர்.

பிரியாணி பொன்னி அரிசியில் தனித்தனியாக நெய்யால் உலர்ந்திருந்தது. மசாலா பிரியாணியுடன் ஒட்டவில்லை ஆனாலும் பிரியாணியின் நாவில் இருக்கும். அடுத்து அரிசி சோறு கூடவே கறிச்சாரோடு சதக்கறியும், இவை இரண்டையும் பிசைந்து ஒரு கவளை வாயில் போடும் போது தான் கையில் அரைச்ச குழம்பின் பக்குவம் தெரியும். குழம்பை மட்டும் நிச்சயம் இரு முறை கேட்டு வாங்கி சாப்பிடத்தோன்றும். அடுத்து சோறு உடன் எழும்பு குழம்பு இது கொஞ்சம் தண்ணி போலத்தான் இருக்கும் இதை எழும்பு ரசம் என்றும் கூறுவர்.

சோறுடன் புளி ரசம், ரசத்தை பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் ஒரு சுவை இருக்கும் ஒவ்வொன்றும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடும் படியும் இருக்கும் சாப்பிட்டது ஜீரணம் ஆக புளி ரசம், கடைசியாக எருமத்தயிர் ஒரு கப். இந்த தயிர் சாப்பிட்டால் கொழு கொழு என்று ஆகாலம் என்று சொல்வாங்க, இன்னொன்றும் சொல்வாங்க புல்லா சரக்கடிச்சிட்டு வாந்தி எடுத்து வயிறு, தொண்டை எல்லாம் எரிபவர்கள் ஒரு கப் அடிச்சா போதும் எரிச்சல் பஞ்சா பறந்திடும் என கூட சொல்வாங்க..

முடிவில் வெற்றிலைபாக்கு கொடுத்து விருந்தை முடிச்சிடுவாங்க. 350 ரூபாய்ககு இத்தனை வகையான உணவுகள் நிச்சயம் கிடைக்காது, அப்படியே கிடைச்சாலும் அது குடலை பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும் இது எல்லாம் கறிவிருந்தில் இருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம் இங்கு செய்யப்படும் மசாலாக்கள் அம்மிக்கல்லில் அரைச்சி குழும்பு வைக்கின்றனர் என்பது தான் இந்த ருசியின் ரகசியம்.

நிச்சயம் அனைவரும் சாப்பிடவேண்டிய உணவகம், இன்று இதே போல் ஈரோட்டைச்சுற்றி நான்கு கடைக்கு மேல் இருக்கு எல்லா இடத்திலும் இதே போல் தான் இந்த கறிசோத்துக்கடை தான் முதலில் ஆரம்பிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு இந்த கடைக்கு நான் சென்று 1 வருடத்திற்கு மேல் இருக்கும் நேற்று நண்பர்களுடன் அளவாடும்போது இங்கு போய் சாப்பிட்டதை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் அந்த ஞாபகத்தில் எழுதிய கட்டுரை இது.

நாளை காணும் பொங்கல் என்று ஒரு சில பகுதியில் சொல்வாங்க ஆனா எங்க ஊரில் கறி நாள் என்று தான் சொல்வோம் அந்த கறிநாளுக்காக இந்த கெடகறிவிருந்து.

Monday, January 13, 2014

பொங்கலோ பொங்கல்

நண்பர்கள்
அனைவருக்கும்
என் இனிய
பொங்கல் திருநாள்
வாழ்த்துக்கள்...


Saturday, January 11, 2014

மாட்டு வண்டி பயணம்...

மாட்டு வண்டி நான் சென்ற முதல் வாகனம் இதுதான். எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊர் திருவிழாவிற்கு முதன் முதலாக 4 மாத குழந்தையாக இருக்கும் போது சென்றேன் பின்னாளில் எனது அம்மா சொன்னதாக ஞாபகம். எனக்கு மட்டுமல்ல 25 ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் வாகனம் மாட்டு வண்டியாகத்தான் இருக்கும். இன்றும் மாட்டு வண்டிகள் அழியவில்லை ஆனால் குறைந்து இருக்கின்றது.

கிராமங்களில் விடாப்பிடியாக இன்னும் சில பேர் மாட்டு வண்டி வைத்து கொண்டு விவசாயம் பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .மாட்டு வண்டி ஓட்டுவது ஒரு கலை மாட்டின் சுபாவத்திற்கு ஏற்ப அதை அதட்டி ஓட்டுவார்கள்.
எனக்கு சிறுவயதில் இருந்து அதிகம் மாட்டுவண்டியுடன் புழக்கம் உள்ளது. இவ்வண்டியை நெல் சுமக்க, அரைக்க, சந்தைக்கு செல்ல என அனைத்து பொருட்களையும் தூக்கி செல்ல மாட்டு வண்டியைத்தான் பயன்படுத்தினர் ஒரு காலத்தில். இப்போது இதை பயன்படுத்துவது குறைந்தாலும் கிராமத்தில் இதற்கான வரவேற்பு இன்றும் உண்டு.

பழைய திரைப்படங்களில் மாட்டு வண்டியைப்பற்றிய பாடல்களும், மாட்டு வண்டிகளும் அதிகம் இடம் பெற்று இருக்கும் கிராமத்து படம் என்றால் மாட்டு வண்டிக்கு நிச்சயம் இடம் உண்டு. மாட்டு வண்டியைப்பற்றி புகழ் பெற்ற பாடல்கள் நிறைய இருக்கின்றன.

முன்காலத்தில் சரக்கு வாகனமாக மக்கள் பய்னபடுத்தியது மாட்டு வண்டியைத்தான் இவ்வண்டியைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பனின் தாத்தா கூறிய தகவல் இன்னும் நன்றாக இருந்தது. அவர் காலத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் அதிகம் நடக்குமாம் ஊர் ஊராக சென்று மாட்டு வண்டி ஓட்த்தில் நிறைய பரிசுகள் பெற்று இருக்கின்றாராம். மாட்டு வண்டி பந்தயத்திற்கு சென்ற இடத்தில் தான் பந்தயத்தை பார்க்க வந்த அவர் மனைவியையும் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். வண்டிக்கு பெயிண்ட் அடித்து அழகாக பராமரித்து வருகிறாராம் இப்ப பட்டணத்துக்கு குடி வந்தாதால் அதெல்லாம் நினைவுகளோடு சரி என்கிறார்.

இன்றும் பல ஊர்களில் ரேக்ளா ரேஸ் என்ற பெயரில் மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

 அந்த காலத்தில் சுற்றுலா என்றால்  பழனிதான் அதிகம் செல்வார்கள் பழனி செல்லும்போது வீட்டில் உள்ள மாட்டு வண்டியின் மேல் சாக்கு கட்டி விட்டு அதுதான் நிழல் போகும் போது கட்டுச்சோறு செய்து கொண்டு போவோம். வரும் போது விறகு பொறுக்கி சில இடங்களில் கல் வைத்து சாப்பாடு செய்து கொள்வோம். பழனி சென்று வர ஐந்து நாட்கள் ஆகும் இவர் திருப்பதிக்கும், ராமேஸ்வரத்துக்கும் மாட்டு வண்டியிலேயே குடும்பத்துடன் சென்று வந்தவர்கள் நிறைய பேர்.
15 வருடத்திற்கு முன்பு திருமணம் என்றால் எல்லாரும் வண்டி கட்டிக்கொண்டு தான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்வார்கள் அதானால் தான் அக்காலங்களில் 3 நாட்களுக்க திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இப்போது 3 மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது திருமண நிகழ்வுகள்..

மாட்டு வண்டியில் கரும்பு ஏற்றிக்கொண்டு செல்வார்கள் பின்னால் சென்று கரும்பை சத்தம் வராமல் உடைத்து வந்து சாப்பிடுவோம். மாட்டு வண்டியில் இரு மாடுகளை பூட்டி அதை லவகமாக கையில் பிடித்து சின்ன சாட்டையை வைத்து அடித்து மேதுவாக நகரும் போது ஆடி ஆடி செல்லும.பொருட்கள் ஆட்கள் என எல்லோரையும் இழுக்கும் வண்டி நம்ம ஊரு மாட்டுவண்டி..

மாட்டுவண்டியை ஒவ்வொருவரும் அவர்களது வசதிக்கேற்ப வண்டியை அழகு படுத்தி வைத்திருப்பர்.  சிலர் அழகாக கூண்டு அடித்து அதற்கு பெயின் அடித்து வைத்திருப்பர். இன்னும் சிலர் கட்டை வண்டியாகவே வைத்திருப்பர். வைக்கோள் போட்டு அதன் மேல் பெட்சீட் போட்டு மெத்தை போல வடிவமைத்து வைத்துருப்பர் இதை எல்லாம் நின்று பொறுமையாக ரசிக்கத்தோணும்.

இவ்வண்டிகளைப் பொறுத்த வரை ஹய் ஹய் என்று கத்தி சாட்டையில் மெதுவாக ரெண்டு போட்டால் வேகமாக செல்லும். ஹோ ஹோ என்று சத்தமிட்டு கயிரை இறுக்கப்பிடித்தால் அப்படியே நிற்கும். இதற்கு இதுதான் எக்ஸ்லேட்டர், பிரேக் எல்லாம். வண்டி ஓட்டுபவரின் குரல் தான் இதற்கு மிகப்பெரிய பலம் அவரின் குரலுக்கேற்ப நகரும்..
இவை இரண்டும் மாட்டு வண்டிக்கு முக்கிய தேவைகள்...

அச்சாணி: இரவு நேரங்களில் பயனம் முடிந்ததும் வண்டியை லாக் செய்வது போல் மாட்டு வண்டிக்கு வண்டி சக்கரம் கழண்டு விடாமல் தடுக்கும் இரும்பு பட்டை.

நோத்தடி: மாடு வண்டியில் பூட்டபடும் கம்பு. வண்டி சும்மாக இருக்கு பொழுது சீசா மாதிரி விளாயாடலாம்.
இன்றும் ஊருக்கு சென்றால் மாட்டு வண்டியில் செல்ல மனம் அடித்து கொள்ளும். சமீபத்தில் வண்டியில் இருந்து இறங்கி ஒரு 5 நிமிடம் மாட்டு வண்டியில் சென்றேன் ஆடி ஆடி குழியில் இறங்கி செல்லும் போது பின்புறம், முதுகு, கை எல்லாம் வலி எடுத்தது. அந்த வலியும் ஒரு சுகமான கிராமத்து நினைவுகள் தான்....

Friday, January 10, 2014

பேருந்து பயணமும், நாய்க்காதலும்..



பேருந்து பயணம் எப்போதும் சுகமான ஒன்று எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு அதுவும் ஜன்னல் ஓரம் சீட்டு கிடைச்சால் சுகமான காற்றில் ஒவ்வொரு ஊரையும் பராக்கு பார்த்து விட்டு இயற்கையை கண்ணால் உள் வாங்குவதும் ஒரு ரசனையான காதல் என சொல்லலாம் அதுவும் நமக்கு பிடிச்ச இளையராஜா பாடலோடு செல்வதில் மன அமைதி சற்று அதிகமாகவே இருக்கும்.

பேருந்து பயணம் சமீபகாலமாக குறைந்து விட்டது எனக்கு கோவையில் இருந்து பவானி அல்லது அந்தியூர் செல்ல அதிக பட்சம் 3 மணி நேரம் தான் ஆகும் இதுதான் நான் அடிக்கடி பயணிக்கும் தொலைவு. முன்பெல்லாம் பேருந்து பயணத்தில் அந்த வாரத்து வார இதழ்களை எல்லாம் வாசித்துவிடுவேன் அதுதான் எனக்கு வாசிக்கும் நேரமும் கூட இப்போது அப்படியில்லை.

சமீபத்தில் மீண்டும் ஒரு 3 மணி நேர பேருந்து பயணம் கிடைத்தது அதிகாலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது நான் பவானி செல்லும் பேருந்திலேயே ஏறி ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து ஒவ்வொரு பேருந்து நிலையமாக பராக்கு பார்க்க ஆரம்பித்தேன் அப்படியே பேருந்தினுள் வலை வீசியதில் அதிக கூட்டமில்லை காலை பேப்பரை படிக்கும் பெரிசுகள் நாலும் இருவர் உட்காரும் சீட்டில் படிக்கட்டுக்கு அடுத்த இரண்டு சீட் தள்ளி இரண்டு ஜோடிகளும், நான்கைந்து பெருசுகளும் உட்கார்ந்திருந்தன.

பேருந்து கேஎம்சிஹெச் தாண்டியதும் நடத்துனர் சீட்டு கொடுத்து உட்கார்ந்தார் ஓட்டுனர் செம்ம ரசனைக்காரர் போல இளையராஜா இசையில் மைக் மோகனின் பாட்டுக்கள் காலைத்தூக்கத்தை வர வைத்தது. பேருந்து எப்போதும் போல் சென்று கொண்டு இருந்தாலும் உள்ளே சில கூத்துக்கள் நடந்து கொண்டு தானே இருக்கும் அப்படித்தான் ஒரு இந்திய குடிமகன் அவரால் முடிந்த மட்டும் குடிச்சிருப்பார் போல அவரும் அவருடன் வந்தவரும் தமிழ்நாட்டில் ஆரம்பித்து டெல்லி போய், மோடிய பிடிச்சு மீண்டும் சினிமாவுக்குள் புகுந்து அவர்களது கருத்துக்களை ரசிக்கும் படி பகிர்ந்தனர். டீக்கடை பெஞ்ச் போல அமைந்தது அன்றைய பேருந்து பயணம் எனக்கு.

என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் தூங்க வழிவதும் என் மேல் பொத்து பொத்தென்றும் விழுந்தார் இரண்டு முறை அவர் விழ வரும் போது நான் தள்ளி உட்கார்ந்து விடுவேன் பொத் என்று இடையில் விழுந்தவார் எழுந்து திரும்பி பார்த்து மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டார் அவருக்கு ராத்திரி எல்லாம் ரொம்ப வேலை போல.

இப்படி ஒவ்வொருவரும் ஒரு செயலை செய்து கொண்டு இருந்தனர் அது வரை கவனிக்காமல் இருந்தா நான் அப்போது தான் கவனித்தேன் பேருந்து அவிநாசி வந்து விட்டது. இரண்டு சீட் தள்ளி இருந்த ஜோடிகளை பார்த்தபோது தான் தூக்கி வாரிப்போட்டது.

பேருந்து என்றும் பார்க்காமல் அவர்கள் கன்னத்துக்கு இடையில் ஒரு சுண்டு விரல் தான் போகும் போல அந்த அளவுக்கு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு பேசி பேசி அவர்கள் சந்தோசம் அடைந்தனர் மற்றவர்களை உசுப்பேத்திவிட்டு.

யார் சொல்வது அவர்களிடம் இது பேருந்து நாகரீமாக நடந்து கொள்ளுங்க என்று, நடத்துநர் சொல்வார் என்றால் அவர் ஓட்டுநருடன் அவரின் பிரச்சனைகள் ஊரரிய கொட்டிக்கொண்டு இருந்தார்.

நானே போய் சொல்லலாமா என்றால் என் மனது உனக்கு ஏன் இந்த வேலை வந்தம்மா பாட்டை ரசிச்சு தூங்கினோமோ போனோமா இரு என்றது என்மனம் வேறு யாராவது சொல்வார்களா என்று சுத்தி பார்த்தால் ஆளாளுக்கு அவர்கள் வேலையில் பிசியாக இருந்தனர். தூக்குவதும் உலக அரசியல் பேசுபவர்களும், அந்த ஜோடிகளை ரசிப்பவர்களுமா சென்றது பேருந்து.

செங்கப்பள்ளியில் இறங்கிய ஒரு 60 வயது பெண்.. த்த்தூ பஸ்ல வந்தா எப்படி நடந்துக்கவேண்டும் என்று கூட தெரியவில்லை நாலு சுவத்துக்குல பேசறத எல்லாம் இங்க வந்தா பேசுவாங்க அறிவு கெட்ட ஜென்மங்கள், நாய்ங்கதான் இப்படி செய்கிறது என்றாலும் மனுச ஜென்மங்களும் இப்படி நடந்துக்குதுங்க என்று ஒரு போடு போட்டது.

இப்போது உஷராகி தள்ளி உட்கார்ந்தது ஜோடிகள்...

ஆனால் அந்த அம்மா திட்டிய அறிவு கெட்ட ஜென்மங்கள் என்ற வார்த்தை அவர்களை தட்டிக் கேட்காத என்னையும் சொன்னது போல குத்துகிறது...

Wednesday, January 8, 2014

ஏன்டா, மச்சி கோவிச்சுகிட்டியா?


எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு புதிதாக என்னுடன் பணிபுரிபவர்களை சீக்கிரம் நண்பனாக்கும் வித்தை எனக்கு உண்டா என்று தெரியாது, ஆனால் எல்லோரும் என்னுடன் நட்பாகிவிடுவார்கள்.

அப்போது தான் நான் முதலில் ஐடி கம்பெனிக்குள் நுழைகிறேன் அப்போது நிறைய நண்பர்கள் எப்போதும் போல எனக்கே அதிகம். எல்லோரிடமும் சகஜமாக பேசுவதும் வார இறுதியில் ஒன்றாக ஒரு  விடுதியில் சரக்கு அடிப்பதும் வழக்கமான ஒன்று.

புதிதாக அலுவலகத்திற்கு வந்த சரண் அப்போது தான் அறிமுகம் அதிகம் பேசியதில்லை இருவரும், ஆனாலும் கோபியில் படித்ததால் கொஞ்சம் நெருங்கியி நட்பு வட்டத்தில் வந்துவிட்டான். கோபியை பற்றியும், எங்களது பள்ளியை பற்றியும் பேசிக்கொள்வோம். பாரியூரின் அழகையும், வள்ளி தியேட்டரில் பாட்ஷா படம் பார்த்ததை பற்றி கூட விளக்கமாக பேசுவோம்.

அன்பு பவன் ரவா தோசையும், டவுன் பிரியாணியின் பிரியாணி வாசத்தைப்பற்றியும் பேசிய நாங்கள் தேர்வீதியின் நடைபாதை கடையின் தட்டுவடையை பற்றியும், அங்கு கிடைக்கும் காரப்பொறியும், மசாலா வடை  என  தீனி தின்னும் படலம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

என்னைப்போலவே தேடி தேடி திண்பதில் அவனுக்கும் அலாதி விருப்பம் அதையே கோவையிலும் தொடர்ந்தோம். அப்புறம் கோபியில் உள்ள ஈரோடு பிஸ்கட் பேக்கரி பற்றியும் அங்கு கிடைக்கும் நெய் பிஸ்கட் பற்றி பேசிய அவன் தினமும் 100 கிராம் நிச்சயம் சாப்பிடுவேன் என்றான். அந்த பிஸ்கட் பேக்கரி பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் அந்த அளவிற்கு சுவையும் மனமும் கொண்ட பேக்கரி நிச்சயம் கோபியை விட்டு சென்றவர்கள் எல்லாம் அந்த சுவையை தவற விட்டுவிட்டார்கள் என்று அடிச்சு சொல்லலாம்.

ஒரு வார இறுதியில் ஊருக்கு போகமல் இங்கேயே இருந்ததால் கோவையை சுற்ற கிளம்பினோம் அப்போது தான் 1000 ரூபாய்க்கு செருப்பு வாங்கி அந்த செருப்புக்கு பெருமை சேர்த்தான். மதியம் அஞ்சப்பரில் சாப்பிட்டு விட்டு எல்லோரும் ஊரைப்பற்றியும் பிகர் பற்றியும் பேச ஆரம்பித்தோம்.

அவனும் கோபியில் படித்ததால் நான் எனக்கு தெரிந்த எங்கள் கால கட்ட்த்தில் மிக பேமஸ் ஆக இருந்த கண்மணி பற்றி பேச அவன் அவுங்க எனக்கு நன்றாக தெரியும் நிறைய பேர் ரூட் போட்டாங்க,  நானே லட்டர் கொண்டு போய் கொடுத்திருக்கிறேன் என்றான். என்ன நீ லட்டர் கொடுத்தாயா என்றதும் இல்லங்க என்கிட்ட கொடுத்து கொடுக்க சொல்வாங்க என்றான்.

அப்புறம் என் சைட்டப்பத்தி சொன்னேன் அவள் ரொம்ப கலர் இல்லப்பா ஆனாலும் கண்களும், மூக்கும் எனக்கு மிக பிடிச்ச ஒன்று, செம்ம கட்டை என்று சொல்ல இயலாது ஆனாலும் வலிப்பான உடற்கட்டு, ஒன்றைக்கண்ணு போல இருக்கும் ஆனால் ஒன்றை கண் அல்ல, அந்த புளுகலர் பேக்கை நெஞ்சோடு அளுத்தி கொண்டு போவாள், நான் தான் அந்த புளு பேக் என்று நினைத்து பொங்கிய காலம் அது. லவ்வச்சொன்னியான்னு குறுக்கு கேள்வி வந்தது, சொன்னேனப்பா பட் உன்னை எனக்கு பிடிக்க வில்லை என்று சொல்லிடுச்சு அந்த கருவா பொண்ணு.

அவளுக்கு பிடிக்க வில்லை என்றால் என்ன எனக்கு பிடிச்சிருக்கே என்று விடாமல் முயற்சி செய்து என்னை திரும்பி பார்க்க வைத்தேன், அந்த கருப்பு வைரத்தை, என்னைப்பார்த்து நின்று சிரித்து விட்டும், அடுத்த சில நாட்களில் டாட்டா காட்டும் அளவிற்கு சென்றது என் காதல். ஒரு வெள்ளிக்கிழமை பச்சமலை கோயிலுக்கு போய்விட்டு படிக்கட்டு வழியாக வரும் போது காதலை சொன்னேன், அவ்வளவு பிடிக்குமா என்னை என்று கேட்டுவிட்டு, பட் எனக்கு பிடிக்கலப்பா என்று துள்ளி குதித்து ஓடிவிட்டாள். அடிக்கள்ளி இந்த துள்ளளுக்காகத்தானடி துரத்துகிறேன் உன்னை என்பதை அறியாமல் போய்விட்டாள்.

அப்புறம் பார்வையிலே போய்விட்டது பாதிநாட்கள், பேசுவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது அதற்குள் அவுங்க வாத்தியார் அப்பாவிற்கு மாறுதல் கிடைச்சு ஈரோட்டுக்கு போய்ட்டாங்க நானும் மறந்திட்டேன், அட அந்த வைரத்து பேர் சொல்ல மறந்திட்டனே அந்த கருப்பு தேவதையின் பெயர் சுபா, அப்புறம் ஒவ்வொருவராக கலைந்து அன்றை பொழுதை போக்கும் போது நானும், ரவியும் இருந்தோம் சிறிது நேரத்தில் ரவிக்கு போன் வந்தது எடுத்தால் சரண், என்னடா என்றால், இனி சதீசை அவனை என்னோடு பேசவேண்டாம் என்று சொல் என்றான்.

ஏன் மச்சி கோவிச்சிகிட்டியா, இன்னிக்கு சரக்கு சாப்பிடவில்லை என்று?

இல்லடா !

சதீஸ் என்னை ரொம்ப கடுப்பாக்கிட்டான் !!

என்னடா செய்தான்? காலையில் இருந்து நானும் தானே உங்க
கூட இருக்கேன் !

இல்லடா ரொம்ப கடுப்பாயிட்டேன் !!

ஏன் மச்சி இப்படி சொல்ற?

அடேய் அவன் 8 வருசத்துக்கு முன்னாடி துரத்தி துரத்தி சைட் அடிச்சேனே அந்த சுபா !!

ஆமா அதுக்கு என்னடா இப்ப ?

"அது, அது தான் மச்சி என் சுபா" !!

தினமும் சாலையில் ஈர்க்கும் குரல்...


வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மறக்காமல் கடை பிடியுங்கள்

சாலைவிதிகளை கடை பிடிக்கும் போது விபத்தில் இருந்து தவிர்க்கலாம்

சாலை விதி மீறல்களால் தான் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன

சரியான பாதையில் வாகனத்தை நிறுத்தும்போது தான் எதிர்த்து வரும் வண்டிகள் சரியாக செல்ல முடியும்

பள்ளி வாகனங்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் சாலை விதிகளை கடைபிடிப்பதில்

பாதசாரிகளுக்கு வழி விட்டு நிற்கும் போது தான் அவர்கள் எந்த தடங்களும் இல்லாமல் செல்ல முடியும்

சிக்னலில் நிற்கும் போது சிக்னலை மட்டும் கவனி

போக்குவரத்து போலீசாரின் வழிகாட்டுதல் படி வாகனத்தை இயக்கினால் நெறிசலை தவிர்க்கலாம்..

என்ன போக்குவரத்து சட்டமா சொல்கிறேன் என்று நினைக்காதீர் முன்பு கோவையில் க்ராஸ்கட் ரோட்டில் போக்குவரத்து போலீசாரால் ஒலிபெருக்கில் இந்த வரிகளை அவ்வப்போது கேட்டு இருக்கிறேன் இப்போது டவுன்ஹால் சிக்னலில் தினமும் கேட்கும் வரிகள்.

போக்குவரத்து போலீசார் டவுன்ஹால் ஏரியாவில் இப்போது வீடியோ கொண்டு கண்காணிப்பதால் அந்த வீடியோவைப்பார்த்து ஒருவர் மைக்கில் பேசும் வார்த்தைகள் தான் இவை.

இவரின் குரல் மணிக்கூண்டு வரை ஒலிக்கும் தினமும் நான் இந்த பாதையில் செல்வதால் இந்த குரல் எனக்கு பரிச்சயமாக ஒன்று. தினமும் இவர் போக்குவரத்தை சரி செய்யும் பாங்கு மகத்தானது.

சிக்னலில் ஒரு நாள் வெள்ளை கோட்டை தாண்டு அதிக தூரம் சென்று விட்டேன் என்னை வீடியோவில் பார்த்தவர் அந்த வெள்ளை சட்டைக்காரால் ரொம்ப முன்னாடி வந்து விட்டார் வாழ்க்கையில் முன்னுக்கு வந்தால் மிக பாராட்டலாம் ஆனால் சாலையில் முன்னுக்குவருவதால் போக்குவரத்துக்கு பாதிப்பும் விபத்தும் தான் ஏற்படும் என்றார். உடனே நான் என்னை சொல்வதை அறிந்து கொண்டு வேகமாக பின் வந்தேன் பின்னே போகும் போது இன்னும் மெதுவாக போங்க உங்க தவறை உணர்ந்தால் சரி, தவறு செயவது மனித குணம் அதை திருத்திக்கொள்வது தான் மனப்பக்குவம் என்றார்.

உண்மையிலேயே போக்குவரத்து விதிகளை ஓரளவு கடைபிடிப்பேன் சிட்டிக்குள் செல்லும் போது குறிப்பிட்ட வேகத்தைல் செல்வேன் என்ன மஞ்சள் லைட் போட்டதற்கு பின் சிக்னலை கடக்கும் தவறை இப்போது செய்வதில்லை.

டவுன்ஹால் தாண்டி செல்பவர்களில் நிறைய பேர் என்னைப்போல மைக்கில் அறிவுரை வாங்கி இருப்பார்கள் போல அந்த இடத்தில் இப்போது ஓரளவு அனைவரும் சாலை விதிகளை மதிக்கின்றனர் எனத் தெரிகிறது. மணிக்கூண்டில் பேசும் அவரின் குரல் வசீகரமானது உண்மையில் நிறைய பேர் அவர் பேச்சை கேட்கின்றனர் என்பது யாராவது தவறாக முன் சென்று விட்டால் அவர் அவர்களை குறிப்பிட்டு சொல்லும் போது பின் உள்ளவர்கள் எல்லாம் சிரிப்பார்கள் அதில் இருந்தே தெரிகிறது மக்கள் கவனிக்கிறார்கள் என்பதை.

போக்குவரத்தை தன் குரல் மூலம் சரி செய்யும் அவருக்கு நம் பாராட்டுக்கள் ஆனால் அவரை நாம் பாராட்டுவதை அவர் நிச்சயம் விரும்பமாட்டார். தவறுகளை திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள் நாம், நம் தவறுகளை திருத்தி சரியான சாலை விதிகளை கடைபிடிப்பது தான் அவருக்கான மிகச்சிறந்த பாராட்டாக இருக்கும் என்பது என்கருத்து.

Tuesday, January 7, 2014

இவர்களும் அரசியல்வாதியாக மாறலாம்...

ஆம் ஆத்மி கட்சி ஊடகங்களால் வளர்ச்சியை பெற்ற கட்சி. டெல்லியில் நடந்த பல போராட்டங்களை முன்நின்று நடத்தி அதன் மூலம் ஊடகங்களின் அபரீத ஆதரவினால் இன்று டெல்லி சட்டமன்றத்தில் 28 இடங்களைப்பிடித்து காங்கிரசின் தயவால் ஆட்சியையும் பிடித்துள்ளது.

ஆம் ஆத்மியின் இந்த அபரீத வளர்ச்சி பாராட்டுக்குரியது தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் குறிப்பிட்ட அளவு இலவசமாகவும், மின்சார கட்டணம் பாதியாகவும் குறைப்போம் என்றனர் அதே போல் குறைத்துள்ளனர் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இனி தான் நாம் மிகவும் கவனிக்கவேண்டிய ஒன்று எத்தனை மாதங்களுக்கு இவ்வாறு கொடுப்பார்கள் என்று பார்க்க வேண்டும். மற்ற மாநிலங்களை ஆள்பவர்களுக்கு தெரியும் இது கரைசி வரை நிறைவேறாது என்று.

ஆம் ஆத்மியின் மீது நான் விமர்ச்சனங்களைத்தான் வைப்பேன் இதுவே ஒரு வருடத்திற்குப்பின் அவர்களின் ஆட்சியையும், திட்டத்தையும் முக்கியமாக அதை செயல்படுத்தும் விதம் பற்றி நன்கு தெரியும். அன்றும் இவர்கள் சொன்னதையே செய்து நேர்மையானவர்களாக இருப்பின் அப்போது போடலாம் நம் ஓட்டை ஆம் ஆத்மிக்கு.

எங்கள் மதிய உணவு வேளையில் தினமும் கார சார விவாதம் நடக்கும் அதில் ஆம் ஆத்மிக்கு எதிர்ப்பாகத்தான் நான் பேசுவேன் அப்படி பேசுகையில் சொன்ன ஒன்று "இன்னும் எந்த திட்டத்துக்கும் அவர்கள் டெண்டர் விடவில்லை, டெண்டர் விட்ட பின் தானே தெரியும் அவர்களின் நேர்மை பற்றி".

பணம், புகழ் மற்றும் அதிகாரத்திற்கு மயங்காதவர்கள் மிக மிக குறைவே அவ்வாறு ஆம் ஆத்மியில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு வருடத்திற்கு பின்  இவ்வாறே இருந்தால் அவர்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

ஒரு கட்சி ஒரு இடத்தில் ஆட்சியை பிடித்ததும் அந்த கட்சிக்காக இன்று நிறையபேர் ஆள் பிடிக்க கிளம்பிவிட்டார்கள் ஒரு மாநிலத்தில் ஒரு இலட்சம், தமிழகத்தில் 3 லட்சம் பேர் உறுப்பின்ர்கள் என்று எல்லாம் போகிற போக்கில் பிட்டை போட்டுச்செல்கின்றனர். தினமும் பத்திரிக்கையில் நிறைய பிரபலங்கள் ஆம் ஆத்மியில் இணைகின்றனர் என்ற செய்தி வருவது பாராட்டுக்குரியது. சேருபவர்கள் எல்லாம் நேர்மையானவர்களா அவர்கள் இது வரை எத்தனை நல்ல காரியங்களை செய்துள்ளனர் என்று பின்புலத்தை பார்க்கும் போது தான் தெரியும். 

இருக்கறத விட்டுட்டு பறக்கறதை பிடிக்க ஆசைப்படாதே என்பது பழமொழி அது போல போய் சேருகின்றனர்.  சுயநலம் இன்றி சேருபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகத்தான் இருக்கும். தமிழகத்தில் நாம் முன்னரே இந்த கட்சியில் சேர்ந்து விட்டால் நாளை சீனியர் என்று நமக்கு சீட் கிடைச்சாலும் கிடைக்கும் என்று சேர்பவர்கள் தான் அதிகம் இருப்பர்.

திட்டங்களை செயல்படுத்துகின்றோம் என்றனர் ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் இல்லாமல் நடந்து கொள்வோம் என்ற சூளுரைகள் எல்லாம் கேட்க இனிதாக இருக்கிறது நாம் பார்க்க இன்னும் நாள் இருக்கிறது.

அக்கட்சி ஆட்சி அமைத்து 1 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் மக்களவை தேர்தலில் 20 மாநிலங்களில் 300 தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக பத்திரிக்கைகள் கூறுகின்றனர் ஒரு வேளை 300இல் 274ல் ஜெயித்து பிரதமர் ஆகிவிடலாம் என்று கூட நினைக்கலாம். எது எப்படியோ நம் விமர்ச்சனங்களை ஒரு வருடம் ஒத்தி வைப்போம். அதற்கு பின் அவர்களின் ஆட்சியை ஒப்பிட்டு போடுவோம் அவர்களுக்கு சலாம்.

குறிப்பு: எனக்கு அரசியல் கொஞ்சம் தூரம் தான், பட் டீக்கடையில் இப்படித்தான் பேசுவோம் என்பதை பதிவாக்கி உள்ளேன்..

Sunday, January 5, 2014

இதற்கு பெயர் தான் விடாமுயற்சியா?


தினமும் பேரூரில் இருந்து வண்டியில் வரும் போது டிவிஎஸ் பெப்பில் அவளை சந்திப்பேன்  என் பின்னே அல்லது முன்னே செல்வாள் சில சமயங்களில் உப்பிலிபாளையம் சிக்னலில் அருகருகே நிற்கும் அதிஷ்டமும் கிடைக்கும். அருகே நிற்கும் போதெல்லாம் திரும்பி திரும்பி பார்ப்பேன். ஒரு முறையேனும் திரும்புவாளா என அவளை பார்க்கது போல் பார்த்து கொண்டே இருப்பேன் ஆனால் எப்போதும் அவள் தரிசனம் கிடைக்காமல் சிக்னல் போட்டதும் முதல் ஆளாக பறப்பது தான் என் தினசரி நடவடிக்கை.

அன்று எதேச்சையாக என் யமஹா மக்கர் செய்ய பின் வண்டியை வேகமெடுத்து அடுத்த சிக்னலில் இருவரும் பக்கத்தில் ஆனாலும் ஏனோ திரும்ப வில்லை திரும்பினாலும் இருவரும் ஹெல்மெட் அணிந்துருப்பதால் கண்கள் மட்டும் தான் பேச முடியும், அதற்கும் வாய்ப்பு இல்லை ஆனால் எனக்கு இது தினசரி பொழுதுபோக்காகிவிட்டது. அலுவலகம் செல்லும் போது கூலாக செல்ல வழிவகுக்கிறது இந்த பைக் சேசிங்.

கரைச்சார் கரைச்சா கல்லும் கரையும் என்பது போல அன்னிக்குத்தான் முதன் முதலாக திரும்பி பார்த்தாள் நான் பார்க்கும் போது எப்பவும் சரியாக விழாத சிக்னல் அன்று சரியாக விழுந்து விட்டது அன்றிலிருந்து தினமும் ஒரு நட்பான பார்வை ஓடிக்கொண்டு இருந்தது ஆனாலும் எந்த வித காத்திருப்பும் இன்றி. சனி ஞாயிறு விடுமுறை ஆதாலால் வெள்ளி வரை மட்டுமே எனது பார்வை படலம் தோன்றும்..

ஏதோ சாமி ஊர்வலம் என்று வண்டியை உக்கடம் வழியாக திருப்பிவிட்டனர் அந்த இடத்தில் வண்டிகள் ஊர்ந்து சென்றது மெதுவாக சென்ற அவளது வண்டி கூட்டத்தில் என் வண்டி மேல் இடிக்க இரண்டு முறை பார்க்கதவன் போல் 3 வது முறை வேகமாக திரும்பினேன் சாரி, சாரி என்று என்னை வாய் திறக்க முடியாமல் செய்தது அவள் குரல். எல்லோரும் போல பரவாயில்லை என்றேன் ( இன்னம் 2 இடி வேனா இடிச்சுக்குங்க என்றது மனது) உக்கடம் வந்ததும் அங்கும் சாலை நெறிசல் எனக்கோ அவளை முன் செல்ல விடாமல் என் பின்னால் வருவது போலவே பார்த்து கொண்டேன் இந்த முறை சற்று பலமாக இடித்தால் என் இன்டிகேட்டர் உடைந்து விட்டது அவளை திட்ட இயலவில்லை ஆனால் இது தான் சாக்கு என்று முதலில் திட்டுவது போல வேகமாக இறங்கினேன் ஆனால் மீண்டும் சொன்னாள் சாரி, அடுத்து திட்ட தோணவில்லை பேச தோண்றியது எனக்கு.

அதற்குள் அவள் நான் மாற்றி கொடுத்துவிடுகிறேன் எவ்வளவு பணம் என்று சொல்லுங்கள் என்றால் ஹெல்மெட்டை கழட்டியவாறு. வாவ் இப்போது தான் பார்த்தேன் அவள் முகத்தை கருப்பு என்றும் சொல்ல இயலாது சிகப்பு என்றும் சொல்ல இயலாது கொஞ்சூண்டு கருப்பு என்றே சொல்லலாம் பட் அவள் மூக்குத்தியில் நான் மூச்சடைத்து தான் போனேன். பரவாயில்லைங்க நான் மாற்றி கொள்கிறேன் சர்வீஸ்க்கு போக போகுது மாத்திக்கிறேன் என்று கிளப்பினேன் என் வாகனத்தை, பார்த்து போங்க என்றால் ( இனி எங்கு பார்த்து போவேன் என்பதை அறியாமல்) அச்சச்சோ பேர் கேட்காம விட்டுட்டமே என்று ஆபிஸ் வந்து தான் அடித்துக்கொண்டேன்..

மீண்டும் தினசரி அதே பார்வை என போய்க்கொண்டு இருந்தது ஒரு நாள் சிக்னலில் வண்டி நிற்கும் போது சிரித்து விட்டு உங்க பேர் என்றாள் சாம் என்றேன் ஐ எம் திவ்யா என்று சொல்லி விட்டு சிக்னலில் சிட்டாக பறந்தாள்.. அப்படியே பட்டாம் பூச்சி பறப்பது போல் இருந்தது. என்றும் 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகாத என் யமஹா அன்று 90ல் பறந்தது அவிநாசி சாலையில்.

அடுத்த நாள் எங்க வேலை பாக்கறீங்க என்ற கேள்வியில் நான் ஐடி கம்பெனி என்றேன், அவள் வங்கி என்றாள் இப்படியாக போய்க்கொண்டு இருந்தது எங்கள் பைக் மெட் ( காலேஜ் மெட், ஸ்கூல் மெட், பஸ் மெட் என்பது போல இது பைக் மெட்).

சிலநாட்கள் கழித்து அவள் வண்டியில் பின் ஒருவர் அமர்ந்திருந்தார் அண்ணாக இருக்கலாம் ஏன் கணவனாக இருக்கலாம் என்று நெற்றியை தேடினேன் ஹெல்மெட் தான் இருந்தது காலைப்பார்த்தால் கவசம் போல் இருந்தது அவள் செருப்பு, சரி யாராக இருந்தா நமக்கென்ன என்ற போது அடுத்த சிக்னலில் இவர் சாம் என்றும் அவர் என்று சொல்லும் போது சிக்னல் விழுந்து விட்டது.

அடுத்த நாள் இருவரும் தான் வந்தனர் ஒரு நிமிடம் பேசமுடியுமா என்றார் அவர் இன்று வண்டியை ஓட்டியது அவர் பின்னால் அவள். ஓ பேசலாமே என்றேன் (என்னடா தீடீர் என பேசுகிறேன் என்கிறார்கள் நாம் சும்மா பார்த்ததோட சரியே அப்படியே வேகமாக போய் வேலை இருக்கிறது என்று ஓடிவிடலாமா இல்லை போன் வந்தது போல் பாவலா செய்யலாமா என்ற பல எண்ண ஓட்டங்கள் மனதில்) சரி என்று வஉசி மைதானம் அருகே வண்டியை நிறுத்த அவர்கள் அறிமுகம் ஆகி அவர் தனது நண்பர் எனவும் இருவரும் வங்கியில் பணிபுரிகிறோம் என்றனர்.

என்னிடம் சம்பிரதாய விசாரிப்புக்கு பின் வங்கியில் நாங்க இன்சூரன்ஸ் ஏஜெண்ட் சார் நீங்க எங்களுக்கு ஒரு பாலிசி போடுங்களேன் என்று இருவரும் தங்கள் பங்குக்கு விலாவாரியாக விளக்க ஆரம்பித்தனர் விம் பார் போட்டாக்கூட அப்படி விளக்கமுடியாது அந்த அளவுக்கு விளக்கினர்.

நான் யோசிக்கிறேன் என்று சொல்லி கிளம்பினேன் என் மொபைல் நெம்பரை அவளிடம் விட்டு விட்டு, இன்று வரை அவர்கள் கண்ணிலும் சிக்கவில்லை... மொபைலில் கூப்பிடும் போது இப்பவேண்டாங்க என்று சொன்னால்  பரவாயில்லைங்க அடுத்த மாதம் முயற்சி செய்யுங்க என்று கூலாக போனை துண்டிக்கின்றனர்.. மாதம் மாதம் போன் வந்து கொண்டு இருக்கிறது அவர்கள் முயற்சியில் பின்வாங்காமல்...

Saturday, January 4, 2014

நானும் ஆரம்பிச்சிட்டேன் என் அலப்பறையை....

2014யை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிக்குவோம்...

வணக்கமுங்க...

2013 முடிஞ்சு நாலு நாள் ஆச்சு ஆனா பாருங்க ஒரு வாழ்த்து சொல்லி பதிவு போட முடியவில்லை அந்த அளவிற்கு சோம்பேறித்தனம் தலை தூக்கிவிட்டது. இந்த சோம்பேறித்தனம் எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு வந்துவிட்டது. அந்த அளவிற்கு இப்போது வரும் பதிவுகள் குறைந்து விட்டன.

2013ல் நான் சாதித்தது என்னவென்றால் நிறைய முக்கியமாக எனக்கு இருந்த கடனில் பாதியை அடைத்துவிட்டேன் என்பது தான் என் நினைவில் வருகிறது. அடுத்து என் மகனை பள்ளியில் சேர்த்தது. அப்புறம் என் கிறுக்கல்களை புத்தகமாக்கியது என சொல்லிகிட்டே போகலாம்.

2013ல் நான் இழந்ததும் நிறைய முக்கியமாக வலைப்பதிவில் வந்து எழுதுவது மிக குறைந்து போனது ஆனால் வாசிப்பு பழக்கம் மட்டும் தொடர்ந்தது. வலைப்பக்கத்தில் எழுதுவது ஒரு காதல் என்றே சொல்லவேண்டும் நாலு வரி எழுதினால் போதும் முகநூலில், ஆனால் இங்கு அப்படி அல்ல கற்பனை குதிரையை ஓட விட்டு ஒரு கட்டுரை அளவிற்காகவது எழுதவேண்டும் அப்போது தான் முற்றுப்பெறும் ஒரு பதிவு. சோம்பேறித்தனத்தால் எழுதவில்லை என்பது தான் உண்மை எனக்கு நிறைய நேரம் கிடைக்கும் எழுதுவதற்கு என்பது என் நெருங்கியவர்களுக்கு தெரியும்.

அடுத்து 2014ல் சபதம் எல்லாம் நான் எடுக்கவில்லை ஏன்என்றால் என் சோம்பேறித்தனம் என் சபதத்தை குலைத்துவிடும் என்று எனக்கு நன்றாக தெரியும். குறைந்தபட்சம் முயற்சி செய்யவேண்டும் தினமும் எழுத, தினமும் எழுதுவதால் நம் எழுத்து புதிய பரிணாமம் பெறும் என்பது தான் உண்மை நடக்குமா என்றால் சாத்தியம் குறைவுதான்.

2014யை பொறுத்தவரை எனக்கு மிக முக்கிய வருடம் நிறைய பிரச்சனைகளை சந்திக்க போகிறேன் என்று நன்றாக தெரிகிறது முக்கியமாக கடன் பிரச்சனை மே மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும் என தீயாக வேலை செய்கிறேன்.

அடுத்து மனஅமைதிக்காக நிறைய படிக்கவேண்டும், நிறைய எழுதவேண்டும் என்றும் தீயாக வேலை செய்யனும், தினமும் எழுத ஆரம்பித்தாலே மனம் பூரண அமைதிகிட்டும் என்று என் குரு இன்று தான் சொன்னார்.

சரிங்க எழுதியே ஆகனும் என்று என்னை கட்டாயப்படுத்தி உட்கார்ந்து எழுதினேன் இந்த மொக்கை பதிவை..

இனி அடிக்கடி வரும் எனது சீரிய மொக்கை என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்...

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....

என்றும் அன்புடன்
சங்கமேஸ்வரன் @ சதீஸ் சங்கவி...