Friday, January 10, 2014

பேருந்து பயணமும், நாய்க்காதலும்..



பேருந்து பயணம் எப்போதும் சுகமான ஒன்று எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு அதுவும் ஜன்னல் ஓரம் சீட்டு கிடைச்சால் சுகமான காற்றில் ஒவ்வொரு ஊரையும் பராக்கு பார்த்து விட்டு இயற்கையை கண்ணால் உள் வாங்குவதும் ஒரு ரசனையான காதல் என சொல்லலாம் அதுவும் நமக்கு பிடிச்ச இளையராஜா பாடலோடு செல்வதில் மன அமைதி சற்று அதிகமாகவே இருக்கும்.

பேருந்து பயணம் சமீபகாலமாக குறைந்து விட்டது எனக்கு கோவையில் இருந்து பவானி அல்லது அந்தியூர் செல்ல அதிக பட்சம் 3 மணி நேரம் தான் ஆகும் இதுதான் நான் அடிக்கடி பயணிக்கும் தொலைவு. முன்பெல்லாம் பேருந்து பயணத்தில் அந்த வாரத்து வார இதழ்களை எல்லாம் வாசித்துவிடுவேன் அதுதான் எனக்கு வாசிக்கும் நேரமும் கூட இப்போது அப்படியில்லை.

சமீபத்தில் மீண்டும் ஒரு 3 மணி நேர பேருந்து பயணம் கிடைத்தது அதிகாலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது நான் பவானி செல்லும் பேருந்திலேயே ஏறி ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து ஒவ்வொரு பேருந்து நிலையமாக பராக்கு பார்க்க ஆரம்பித்தேன் அப்படியே பேருந்தினுள் வலை வீசியதில் அதிக கூட்டமில்லை காலை பேப்பரை படிக்கும் பெரிசுகள் நாலும் இருவர் உட்காரும் சீட்டில் படிக்கட்டுக்கு அடுத்த இரண்டு சீட் தள்ளி இரண்டு ஜோடிகளும், நான்கைந்து பெருசுகளும் உட்கார்ந்திருந்தன.

பேருந்து கேஎம்சிஹெச் தாண்டியதும் நடத்துனர் சீட்டு கொடுத்து உட்கார்ந்தார் ஓட்டுனர் செம்ம ரசனைக்காரர் போல இளையராஜா இசையில் மைக் மோகனின் பாட்டுக்கள் காலைத்தூக்கத்தை வர வைத்தது. பேருந்து எப்போதும் போல் சென்று கொண்டு இருந்தாலும் உள்ளே சில கூத்துக்கள் நடந்து கொண்டு தானே இருக்கும் அப்படித்தான் ஒரு இந்திய குடிமகன் அவரால் முடிந்த மட்டும் குடிச்சிருப்பார் போல அவரும் அவருடன் வந்தவரும் தமிழ்நாட்டில் ஆரம்பித்து டெல்லி போய், மோடிய பிடிச்சு மீண்டும் சினிமாவுக்குள் புகுந்து அவர்களது கருத்துக்களை ரசிக்கும் படி பகிர்ந்தனர். டீக்கடை பெஞ்ச் போல அமைந்தது அன்றைய பேருந்து பயணம் எனக்கு.

என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் தூங்க வழிவதும் என் மேல் பொத்து பொத்தென்றும் விழுந்தார் இரண்டு முறை அவர் விழ வரும் போது நான் தள்ளி உட்கார்ந்து விடுவேன் பொத் என்று இடையில் விழுந்தவார் எழுந்து திரும்பி பார்த்து மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டார் அவருக்கு ராத்திரி எல்லாம் ரொம்ப வேலை போல.

இப்படி ஒவ்வொருவரும் ஒரு செயலை செய்து கொண்டு இருந்தனர் அது வரை கவனிக்காமல் இருந்தா நான் அப்போது தான் கவனித்தேன் பேருந்து அவிநாசி வந்து விட்டது. இரண்டு சீட் தள்ளி இருந்த ஜோடிகளை பார்த்தபோது தான் தூக்கி வாரிப்போட்டது.

பேருந்து என்றும் பார்க்காமல் அவர்கள் கன்னத்துக்கு இடையில் ஒரு சுண்டு விரல் தான் போகும் போல அந்த அளவுக்கு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு பேசி பேசி அவர்கள் சந்தோசம் அடைந்தனர் மற்றவர்களை உசுப்பேத்திவிட்டு.

யார் சொல்வது அவர்களிடம் இது பேருந்து நாகரீமாக நடந்து கொள்ளுங்க என்று, நடத்துநர் சொல்வார் என்றால் அவர் ஓட்டுநருடன் அவரின் பிரச்சனைகள் ஊரரிய கொட்டிக்கொண்டு இருந்தார்.

நானே போய் சொல்லலாமா என்றால் என் மனது உனக்கு ஏன் இந்த வேலை வந்தம்மா பாட்டை ரசிச்சு தூங்கினோமோ போனோமா இரு என்றது என்மனம் வேறு யாராவது சொல்வார்களா என்று சுத்தி பார்த்தால் ஆளாளுக்கு அவர்கள் வேலையில் பிசியாக இருந்தனர். தூக்குவதும் உலக அரசியல் பேசுபவர்களும், அந்த ஜோடிகளை ரசிப்பவர்களுமா சென்றது பேருந்து.

செங்கப்பள்ளியில் இறங்கிய ஒரு 60 வயது பெண்.. த்த்தூ பஸ்ல வந்தா எப்படி நடந்துக்கவேண்டும் என்று கூட தெரியவில்லை நாலு சுவத்துக்குல பேசறத எல்லாம் இங்க வந்தா பேசுவாங்க அறிவு கெட்ட ஜென்மங்கள், நாய்ங்கதான் இப்படி செய்கிறது என்றாலும் மனுச ஜென்மங்களும் இப்படி நடந்துக்குதுங்க என்று ஒரு போடு போட்டது.

இப்போது உஷராகி தள்ளி உட்கார்ந்தது ஜோடிகள்...

ஆனால் அந்த அம்மா திட்டிய அறிவு கெட்ட ஜென்மங்கள் என்ற வார்த்தை அவர்களை தட்டிக் கேட்காத என்னையும் சொன்னது போல குத்துகிறது...

10 comments:

  1. அவருக்கு ராத்திரி எல்லாம் ரொம்ப வேலை போல//

    ஹா ஹா ஹா ஹா பாவம்ய்யா பொழச்சி போகட்டும் ஹி ஹி...

    ReplyDelete
  2. முதுகிலேயும் இரண்டு போடு போட்டிருக்கணும்...!

    ReplyDelete
  3. சுண்டு விரல் அளவு கேப்பாவது இருந்துச்சேன்னு சந்தோசப்படுறதை விட்டு மனசு குமுறலாமா!?

    ReplyDelete
  4. விமான பயணங்களில் சிலர் செய்வதைப் பார்க்கும்பொழுது இதெல்லாம் ஒன்றுமே இல்லை ராசா.

    ReplyDelete
  5. என்ன இருந்தாலும் பெரியவங்களுக்கு இருக்கற தைரியம் நமக்கு இருப்பதில்லைதான்! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. அடுத்தவங்க செய்றதைப் பார்த்தா மட்டும் தான் இப்படித் தோணும் !
    +1

    ReplyDelete
  7. மதுரையிலிருந்து அந்நாட்களில் ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்ராயிருப்புக்கு வேலைக்குச் சென்ற காலங்கள் நினைவுக்கு வந்தன. அதிகாலைப் பயணம். சுகமான பாடல்கள்.

    ReplyDelete
  8. நமக்கு பிடிச்ச இளையராஜா பாடலோடு செல்வதில் மன அமைதி சற்று அதிகமாகவே இருக்கும்.//இப்ப அது எல்லாம் ஒரு கணக்காலம் போல!

    ReplyDelete
  9. இதுவும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது போன்றதுதான் ...உண்மையான காதலர்கள் அப்படி செல்லமாட்டார்கள்...

    ReplyDelete
  10. தில்லி மெட்ரோவில் இன்னும் இதைவிட அதிகமாய் படம் காண்பிக்கிறார்கள் சங்கவி!

    ReplyDelete