Thursday, December 31, 2015

திரும்பி பார்க்கிறேன்.... 2015

2015 எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்த வருடம். வயதானாலும் விளையாட்டுப் பிள்ளையாய் சுற்றித்திரிந்த எனக்கு பல கட்டுப்பாடுகளை கற்றுக்கொடுத்த வருடம்.

எப்போதும் கண்டதை மூக்கு முட்ட தின்னும் நான் இந்த வருடம்  எதையும் அளவோடு சாப்பிடவேண்டும் என்ற விதியை முறையாக கடைபிடித்த வருடம்.

சம்பளக்காரனாய் இருந்த என்னை, என்னிடம் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு தன்னம்பிக்கையை ஊற்றி அதில் வெற்றி கண்ட வருடம்.

நட்பென்னும் போர்வையில் இருந்த சில கயவர்கள் எனக்கு அளித்த துரோகத்தில் அவர்கள் வெற்றி கொண்டுஇ மீண்டும் என் கண்முன்னே வீழ்ந்ததை காண நேர்ந்த வருடம்.. இருந்தாலும்  மன்னித்து நட்பை புதுப்பிக்க வழிய சென்று கை நீட்டிய வருடம்...

இந்த வருடத்தை பற்றி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் ஏன் என்றால் எனக்கு அதிக வெற்றியையும், தன்னம்பிக்கையையும் கொடுத்த வருடம்...

வரும் ஆண்டு தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் பயன்படுத்தி அடுத்த படி முன்னேறுவேன் என்ற நம்பிக்கையில் கால் பதிக்கிறேன் 2016ல்.....

என் அன்பிற்கினிய 
தோழர்களுக்கும்
தோழிகளுக்கும்....

இனிய ஆங்கில 
புத்தாண்டு
 நல்வாழ்த்துக்கள்...

Monday, December 28, 2015

அந்தியூர் ஈரட்டி நீர்வீழ்ச்சி

ஈரோடு மாவட்டம் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது அந்தியூர் வனம், இந்த அடர் வனத்தில் ஈரட்டி என்ற கிராமத்தை இங்குள்ளவர்களே அநேகம் பேர் அறிந்திருக்கமாட்டார்கள்.  இந்த மழை கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் காட்டில் நடந்து செல்ல வேண்டும் அவ்வாறு செல்லும் போது, இயற்கையின் அற்புதமான கொடை என்று சொல்லும் ஓர் எழில் மிகு பச்சைபசேல் என்ற காட்டினுள் அமைந்துள்ளது ஓர் நீர்வீழ்ச்சி. அநேகம்பேர் அறியாத இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த முறை பயணக்கும் வாய்ப்பும், அதில் ஆனந்த நீராடும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது. 

காடுகளில் பல நல்ல இயற்கை இலைகள் மீது பட்டு  மேடு பள்ளங்களை கடந்து ஓடையாக உருவெடுக்கிறது சில நீர் ஆதாரங்கள். அது மட்டுமல்லாமல் பல இடங்களில் சுனைகளில் இருந்து நீர் பெருகி அடர் வனத்தில் இருந்து பல ஓடைகள் வருகின்றன. 

இந்த ஓடைகள் எல்லாம் ஒன்றினைந்து சிறிய ஆறாக உருவெடுக்கிறது இதை காட்டாறு என்று சொல்கின்றனர். இந்த காட்டாறு ஓர் இடத்தில் இயற்கையாக அமைந்த பாறையின் மேல் விழுந்து சிறு நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. இந்த காட்டாறில் உள்ள மூலிகை நீரும், சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழும் நீர்விழ்ச்சி தண்ணீர் நம் மேல் படும் போது, நம்மை அறியாமல் நம் உடல் புத்துணர்வு பெறுகிறது.

சுமார் 1 மணி நேரம் இந்த நீரில் நீராடிய எங்களை மேலும் புத்துணர்வாக்கியது இந்த ஈரட்டி நீர்வீழ்ச்சி..



அதிக பேர் பயன்படுத்தாமல் இருப்பதால் சுற்றுச்சுழல் மாசின்றி அழகாகவும், சுத்தமாகவும் இருக்கிறது இந்த சிறிய நீர்வீழ்ச்சி...

வாய்ப்பிருப்பவர்கள் சென்று வாருங்கள்.. அந்தியூர் மலைப்பகுதியில் ஈரட்டி என்ற ஊரில் அமைந்து உள்ளது,

இதை ஈரட்டி நீர்வீழ்ச்சி என்று அழைக்கின்றனர்...



குறிப்பு: செல்லும் வாய்பிருப்பவர்கள் ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல், இயற்கையை ரசித்து, ருசித்து அனுபவிக்க வேண்டுகிறேன்...

அந்தியூரில் இருந்து ஈரட்டிக்கு பஸ் வசதி உண்டு...