Thursday, December 31, 2015

திரும்பி பார்க்கிறேன்.... 2015

2015 எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்த வருடம். வயதானாலும் விளையாட்டுப் பிள்ளையாய் சுற்றித்திரிந்த எனக்கு பல கட்டுப்பாடுகளை கற்றுக்கொடுத்த வருடம்.

எப்போதும் கண்டதை மூக்கு முட்ட தின்னும் நான் இந்த வருடம்  எதையும் அளவோடு சாப்பிடவேண்டும் என்ற விதியை முறையாக கடைபிடித்த வருடம்.

சம்பளக்காரனாய் இருந்த என்னை, என்னிடம் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு தன்னம்பிக்கையை ஊற்றி அதில் வெற்றி கண்ட வருடம்.

நட்பென்னும் போர்வையில் இருந்த சில கயவர்கள் எனக்கு அளித்த துரோகத்தில் அவர்கள் வெற்றி கொண்டுஇ மீண்டும் என் கண்முன்னே வீழ்ந்ததை காண நேர்ந்த வருடம்.. இருந்தாலும்  மன்னித்து நட்பை புதுப்பிக்க வழிய சென்று கை நீட்டிய வருடம்...

இந்த வருடத்தை பற்றி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் ஏன் என்றால் எனக்கு அதிக வெற்றியையும், தன்னம்பிக்கையையும் கொடுத்த வருடம்...

வரும் ஆண்டு தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் பயன்படுத்தி அடுத்த படி முன்னேறுவேன் என்ற நம்பிக்கையில் கால் பதிக்கிறேன் 2016ல்.....

என் அன்பிற்கினிய 
தோழர்களுக்கும்
தோழிகளுக்கும்....

இனிய ஆங்கில 
புத்தாண்டு
 நல்வாழ்த்துக்கள்...

Monday, December 28, 2015

அந்தியூர் ஈரட்டி நீர்வீழ்ச்சி

ஈரோடு மாவட்டம் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது அந்தியூர் வனம், இந்த அடர் வனத்தில் ஈரட்டி என்ற கிராமத்தை இங்குள்ளவர்களே அநேகம் பேர் அறிந்திருக்கமாட்டார்கள்.  இந்த மழை கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் காட்டில் நடந்து செல்ல வேண்டும் அவ்வாறு செல்லும் போது, இயற்கையின் அற்புதமான கொடை என்று சொல்லும் ஓர் எழில் மிகு பச்சைபசேல் என்ற காட்டினுள் அமைந்துள்ளது ஓர் நீர்வீழ்ச்சி. அநேகம்பேர் அறியாத இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த முறை பயணக்கும் வாய்ப்பும், அதில் ஆனந்த நீராடும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது. 

காடுகளில் பல நல்ல இயற்கை இலைகள் மீது பட்டு  மேடு பள்ளங்களை கடந்து ஓடையாக உருவெடுக்கிறது சில நீர் ஆதாரங்கள். அது மட்டுமல்லாமல் பல இடங்களில் சுனைகளில் இருந்து நீர் பெருகி அடர் வனத்தில் இருந்து பல ஓடைகள் வருகின்றன. 

இந்த ஓடைகள் எல்லாம் ஒன்றினைந்து சிறிய ஆறாக உருவெடுக்கிறது இதை காட்டாறு என்று சொல்கின்றனர். இந்த காட்டாறு ஓர் இடத்தில் இயற்கையாக அமைந்த பாறையின் மேல் விழுந்து சிறு நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. இந்த காட்டாறில் உள்ள மூலிகை நீரும், சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழும் நீர்விழ்ச்சி தண்ணீர் நம் மேல் படும் போது, நம்மை அறியாமல் நம் உடல் புத்துணர்வு பெறுகிறது.

சுமார் 1 மணி நேரம் இந்த நீரில் நீராடிய எங்களை மேலும் புத்துணர்வாக்கியது இந்த ஈரட்டி நீர்வீழ்ச்சி..



அதிக பேர் பயன்படுத்தாமல் இருப்பதால் சுற்றுச்சுழல் மாசின்றி அழகாகவும், சுத்தமாகவும் இருக்கிறது இந்த சிறிய நீர்வீழ்ச்சி...

வாய்ப்பிருப்பவர்கள் சென்று வாருங்கள்.. அந்தியூர் மலைப்பகுதியில் ஈரட்டி என்ற ஊரில் அமைந்து உள்ளது,

இதை ஈரட்டி நீர்வீழ்ச்சி என்று அழைக்கின்றனர்...



குறிப்பு: செல்லும் வாய்பிருப்பவர்கள் ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல், இயற்கையை ரசித்து, ருசித்து அனுபவிக்க வேண்டுகிறேன்...

அந்தியூரில் இருந்து ஈரட்டிக்கு பஸ் வசதி உண்டு...

Friday, September 25, 2015

லெக்கின்ஸ்ம் சங்கவியும்...



எப்பவும் போல தங்கமணியை அழைக்க மாலை வேளையில், மாலை என்பதை விட பாதி சூரியன் மறைந்தும் மறையாமலும், இருட்டியும் இருட்டாமலும் இருக்கும் ஓர் அற்புதமான தருணம் அந்த தருணத்தில் அவினாசி ரோட்டில் லஷ்மி மில்ஸ் சந்திப்பில் சில நிமிடங்கள் நின்றாலே இன்னும் சில நிமிடம் இங்கே கிடைக்காதா? என்பது போல ஏக்கப்பெருமூச்சு விடும் அளவிற்கு கண்ணிற்கும் மனதிற்கும் குளிர்ச்சியான இடம் லஷ்மி மில்ஸ் ஜங்சன் என்றும் சொல்லலாம்..

இப்படி ஓர் இடம் இருப்பதால் தான் தினமும் தங்கமணியை மாலை வேளையில் அழைக்க தவறாமல் ஆஜர் ஆகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பில்லை...

அந்த அற்புதான தருணத்தில் தான் ரொம்ப செவப்பு என்றும் சொல்ல முடியாது, ஆனால் மாநிறமும் இல்லாமல் ஒரு பாவை என்னை கடக்க முயன்றார். கொஞ்சம் கூர் முகம், கோனக்காய் போன்ற வளைந்த மூக்கும், பிறை போல இருந்த உதட்டின் மேல் நட்சத்திரம் போல மச்சம். ப்யூட்டி பார்லர் போகாத புருவமும் அமைந்த அந்த பாவை அழகு என்று சொல்லமுடிய வில்லை ! இல்லை என்றும் மறுக்க இயலவில்லை!! பட் பிடிச்சிருந்தது 11

ஒரு நிமிடம் அவள் கடக்கையில் இம்புட்டு தாங்க பார்க்க முடிந்தது. கடந்தது சென்றவளை மீண்டும் திரும்பிப்பார்த்தேன் அவள் அணிந்திருந்த அந்த ப்ளு கலர் டாப்ஸ் அந்த கொஞ்சூண்டு அழகிற்கு இன்னும் அழகை சேர்த்தது. அநேகமாக 3/4 என்று நினைக்கிறேன். டாப்ஸ்க்கு கீழே உடை அணிந்திருந்தாளோ என்ற அளவிற்கு சந்தேகப்படும்படியான ஸ்க்கின் கலர் லெக்கின்ஸ் அமைந்திருந்தது. அந்த அந்தி மாலை நேரத்தில் அந்த இடத்தில் அவளை கடந்தவர்களுக்கு நிச்சயம் அந்த லெக்கின்ஸ் கலவரப்படுத்தி இருக்காது. அம்புட்டு நேர்த்தியான உடை அணிந்திருந்தது வெகுமாக கவர்த்திழுத்தது என்னை...

இவ்வளவு அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் பராக்கு பார்த்து கொண்டு இருந்த என்னை ஒரு கை தோளை தட்டியது, திரும்பி பார்த்தேன் தங்கமணி... ஙே ஙே என்று ஒரு சிரிப்பை உதறிவிட்டு கம்முன்னு வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்து வீடு வந்து திரும்பும் போது மீண்டும் பார்த்தேன் அந்த ப்ளு கலர் டாப்சை. அப்படியே மனசு கோவைக்குற்றாலத்தில் கவுந்தடிச்சு விழுவது போல உணர்ந்தது...

Friday, September 4, 2015

விடியற்காலை அலப்பறைகள்...

கோழி கூவியும் கூவாமலும் இருக்கும் அந்த விடியற்காலை வேலையில் சென்னையில் புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி சீரிப்பாய்ந்து வந்தது. உள்ளே முக்கால் உறக்கத்தில் குடும்பத்தோடு உட்கார்ந்திருந்தேன் நான்.

கோவை ஜங்சனில் இறங்கினால் மூட்டை முடிச்சுக்களை எல்லாம் நிறைய நேரம் சுமந்து நடந்து வெளியே வரவேண்டும் அதுவும் இல்லாமல் கூட்டம் வேறு அம்மும். இந்த முறை லக்கேஜ் மூட்டையே நாலு ஆனாதால் போர்ட்டர் வெச்சுக்கலாமா என்று தங்கமணியிடம் கேட்டேன், அவளின் பார்வை அப்ப நீ எதுக்கு இருக்கிறாய் என்று கேட்பது போல இருந்தது. சரின்னு கம்முன்னு இருந்துவிட்டேன்.

இரயில் டப்புன்ன ஒரு ப்ரேக் போடும் போது எனக்கு ஓரு ஐடியா தோன்றியது பேசாமல் வடகோவையில் இறங்கி ஆட்டோ பிடிச்சு போய்விடலாம் என்று, நீண்ட நேரம் நடக்கவும் தேவையில்லை, போர்ட்டர் வேலையும் நமக்கு மிச்சம் என்று மனது குத்தாட்டம் போட்டது. சரி என்று தங்கமணியிடம் அனுமதி வாங்கி வடகோவையில் இறங்கினேன்.

இறங்கி மெதுவாக வரும் போது முதல் ஆட்டோகாரர் வந்தார் பாப்பநாயக்கன் பாளையம் போகனும் என்றேன் 170 ரூபாய் என்றார். என்னங்க 170யா என்று கேட்டதற்கு ஆமாங்க எவ்வளவு நேரம் போகனும், வழியில், போக்குவரத்து நெறிசல் வேறு இருக்கும் என்றார் (விடியற்காலை 5 மணிக்கு) சிரிச்சிகிட்டே நடந்தேன், அடுத்தவர் வந்தார், 150 என்றார் 100 என்றால் வருகிறேன் என்றேன்.. கட்டாது கட்டாது என்று நகர்ந்துவிட்டார்.

அதற்குள் நெட்டை ஆன் செய்து OLA வில் கார் புக் செய்தேன். ஸ்டேசனை விட்டு வெளியே வருவதற்குள் கார் வந்துவிட்டது, கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் தான் வண்டி வந்துவிட்டது. வடகோவையில் இருந்து பாப்பநாயக்கன் பாளையம் வருவதற்கு நம்புங்கள் மக்களே 65 ரூபாய் தான் பில் வந்தது. 170 எங்கே 65 எங்கே என்று சொல்லிகிட்டே வந்தேன்.

இப்போது OLA நெட் அப்ளிகேசன் டவுன்லோடு செய்து கொண்டு வண்டி புக் செய்யும் போது அதிக பட்சம் 5 நிமிடங்களில் வண்டி வந்துவிடுகிறது. ( நேற்று சென்னையில் சுற்றும் போது அப்படித்தான்) குறைந்த பட்சம் இத்தனை கிலோ மீட்டர் இன்று டெக்னாலஜி நிறைய வளர்ந்து விட்டது, எல்லாருக்கும் எல்லாம் தெரியவில்லை என்றாலும் கொஞ்சமாவது தெரியும், இன்னும் இத்தனை கொடுங்க, அத்தனை கொடுங்க என்று சொல்லும் வண்டியில் மக்கள் நிச்சயம் ஏறுவதை தவிர்க்கத்தான் செய்வார்கள்.. இனியாவது யோசிப்பார்களா??

Tuesday, September 1, 2015

போகிற போக்கில்...

காலை வேலை கொஞ்சம் குளிராக இருந்தாலும், அலுவலகம் அவசரம், டென்சன் என்று நேரம் போவதே தெரியாது வீட்டில். நேரம் ஆன பின்பு அரக்க பறக்க ஒடியாந்து பேருந்து ஏறுவது வாரத்தில் 4 நாட்களாவது நடக்கும், இது தான் இன்றைய அசுர வேகத்தின் நிலை.

இப்படி அவசர கதியில் போய்க்கொண்டு இருக்கும் போது போன் வந்தால் நம்மா ஆட்கள் கம்முன்னு இருப்பாங்களா மாட்டாங்க. சொறங்கு புடிச்சவன் கையும் செல்போன் புடிச்சவன் கையும் ஒன்னு தான். சொறங்கு புடிச்சவன் சொறியுவான், செல்போன் பிடிச்சவன் பேசுவான், இல்ல சாட்டிங், பேஸ்புக், வாட்ஸ் அப்புன்னு பாத்துகிட்டே இருப்பான். எதுக்கால ஒருத்தன் செத்து கிடந்தாலும் அவனோடு செல்பி எடுத்து விட்டுதான் காப்பாத்துவான் இது தான் இன்றைய நிலைமை...

இப்படி நிலமையில் தான இன்று பையனை பள்ளியில் இறக்கிவிட்டு அலுவலகம் நோக்கி வந்தேன். நான் சிக்னலில் சிக்காமல் செல்ல சந்து பொந்துகளில் புகுந்து வருவேன். அவ்வாறு ஒரு சாலையில் புகுந்து வரும் போது என் முன்னே ஒருவர் செல்போனை கையில் பிடிச்சு பார்த்துக்கொண்டே ஒத்தக்கையில் தனது இரு சக்கர வாகனத்தி இயக்கினார். அவரு நேரம் உச்சத்தில் இருக்கும் போல அவரைத் முந்தி சென்ற இருவர் திட்டிக்கொண்டு சென்றனர். நம்ம ஆளு போடச்செர்த்தான் என்று திட்டிவிட்டு ஒரு கையில் போனும், ஒரு கையில் வாகனம், முன்னாடி மகன் வேறு அமர்ந்திருந்தான்.

எப்பவும் ஒரே மாதிரி போகதல்லவா, இவரு ஒத்த கையில் வண்டியில் போவாருன்னு நாய்க்கு தெரியுமா என்ன வேகமாக வந்த ஒரு பெண் நாயை ஆண் நாய்கள் துரத்தி வந்தது, வந்த வண்டி நாய் இவர் வாகனத்தில் மோத அவசரதத்தில் செல்போனை கீழே போடாமல் மனிதன் வண்டிய கீழே போட்டுட்டார். இவர் விழுந்தது இல்லாமல் இவரின் மகனும் விழுந்தான்.
கீழே விழுந்து எழுந்தவர் முதலில் மகனுக்கு கை கொடுக்காமல் செல்போனை தேடினார். மகனை விட செல்போன் தான் முக்கியமா போச்சு என்று அங்கிருந்தவர்கள் ஆளுக்கு நாளு வார்த்தை வீச மனிதன் செல்போனை பாத்துகிட்டே வண்டிய உதைக்கிறார்...

எத்தனை விழிப்புணர்வாக சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கன் இன்னும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன...

////////////////////////////////////////////

மாலை நேரங்கள் பரபரப்பான நேரமாகிவிட்டது இப்போது எல்லாம், அலுவலகம் முடிந்து அடிச்சி பிடிச்சு இருக்கின்ற வாகன நெறிசலை தாண்டி வீட்டுக்கு வருவதற்குள் டப்பா டேன்சாடிடும். சென்னை நெறியசலை ஒப்பிடுகையில் எங்க ஊர் நெரிசல் சப்பை மேட்டர் தான் இருந்தாலும் எங்களுக்கு அதுவே பெரும் பாடுதான்.

நண்பர் ஒருவரின் மகனின் பிறந்தநாள் விழாவிற்கு செல்ல வேண்டும் என்பதால் வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்து, அடிச்சி பிடிச்சு மகனையும், மனைவியையும் ஆழைத்து சென்றேன். நகர வாழ்க்கையை பொறுத்த வரை இந்த மாதிரி விழாக்ளில் தான் பல நண்பர்களை பார்க்க இயலும் அதனால் செல்ல அதிகம் ஆசைப்படுவேன்..

எப்போதும் வேலை வீடு, வார இறுதியில் ஊர், அப்பாவிற்கு மருத்துவமைன அழைத்து செல்வது என்று ஏகப்பட்ட வேலைகளோடு தான் ஊருக்கு செல்வேன். எங்கும் சிரிச்சு பேசி மகிழ அதிக நேரங்கள் கிடைப்பதில்லை. இரண்டு நாள் விடுமுறையும் பஞ்சாக பறந்துவிடும்.

இந்த பிறந்தநாள் விழாக்கள் எல்லாம் எனக்கு புதிய ஒன்று. கிராமத்தில் பிறந்தநாளுக்க கோவிலுக்க போவோம் பக்கத்து வீடுகளுக்கு மிட்டாய் கொடுத்து ஆசிர் வாதம் வாங்குவோம் அம்புட்டுத்தான். ஆனால் இன்று மிகப்பெரிய ஓட்டல்களில் சுவையான உணவோடு மிகச்சிறப்பாக, கையிறுப்பு கரையும் வகையில் கொண்டாடுகின்றனர்..

இந்த விழாவில் சென்று நண்பர்களிடம் பேசும் போது 5 நிமித்திற்கு மேல் ஒருவரிடமும் பேச இயலவில்லை, எனக்கு வீடு தொலைவு என்றும், இராத்திரி கிளைண்ட கால் இருக்கிறது என்றும், சீக்கிம் போகனும் நாளை பையனுக்கு பேன்சி டிரஸ் போட்டி இருக்கிறது என்று எல்லாரும் காலில் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றனர்..

என் பங்கிற்கு நானும் புதிய நண்பர்களோடு பேசி, பரிசுப்பொருளைக்கொடுத்து, ஓட்டல்காரர்கள் அழைத்து கையில் கொடுத்த தட்டை ஏந்தி அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்...

அன்று அந்த விழாவில் நடந்தவற்றை எல்லாம் அசைபோட்டு பார்த்தேன், முழுக்க முழுக்க செயற்கையான சிரிப்பு, செயற்கையான உணவு, செயற்கையான வாழ்த்து என்று அனைத்தையும் செயற்கையாகவே உணர்கிறேன்..

Thursday, June 11, 2015

மை நேம் ஈஸ் சின்ன "காக்கா முட்டை"

My Name is சின்ன காக்கா முட்டை...

பிரபல ஹீரோ கிடையாது, பிரபல டைரக்டர் கிடையாது, பிரபல இசையமைப்பாளர் கிடையாது, திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர்கள் எல்லாம் தியேட்டர் நோக்கி வர வைத்து விட்டார்கள் இந்த சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும்..

சென்னை நகரில் மிக பிரமாண்ட கட்டிடங்களும், மால்களும், பணக்காரர்கள் வாழும் ஏரியாவையே திரையிலும், சின்னத்திரையிலும் பார்த்த நமக்கு, ஒண்டிக்குடிசையில்அதிலேயே சமையல், உறக்கம், வீட்டுக்கு வெளியே உள்ள இடம் தான் குளியல் அறை என்று உள்ள அந்த மக்களின் சொர்க்கத்தை மிக அழகியலோடு படம் பிடித்து காட்டி இருக்கிறார். 

இதைப்பார்த்த பலருக்கு சென்னையில் இப்படியும் இடங்கள் இருக்கின்றனவா என்று வாயைபிளக்கத்தான் செய்கின்றனர்.

இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியையும் மனுசன் செதுக்கி இருக்கிறார். ஒவ்வொரு இடமும் கலையாக, இலக்கியமாக தெரிகிறது.

பசங்க நடக்கும் இடம், அவர்களின் நடை, உடை பாவனை என்று அங்கு வாழும் பசங்களை துல்லியமாக படம் பிடித்துள்ளார். மெட்ராசில் வசிப்பவனுக்கு எல்லா இடமும் அத்துப்பிடி என்று நினைத்துகொண்டு இருந்தேன், இப்போது தான் தெரிகிறது அங்கு குப்பத்தில் வாழும் குழந்தைகள் மையிலாப்பூரை கூட அதிகம் பார்த்ததில்லை என்று...

மணிகண்டன் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட்டை செதுக்கி இருக்கிறார். ஒவ்வொரு இடமும் நச். படத்தில் குழந்தைகள் பேசும் அந்த பேச்சு, குழந்தைகள் நேர்மையாக வாழவேண்டும் என்று நினைப்பது போன்றவற்றை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்.

இந்த படம் பார்க்கும் போது இடைவேளை என்று போட்டதும் மனைவியிடம் சொன்னேன் அதுக்குள்ள இடைவேளையா என்று அதே போல் படம் முடிந்ததும் படம் முடிந்ததா என்று கேள்வியோடு தான் நின்றேன். அந்த அளவிற்கு படத்தோடு ஒன்றிப்போயிருந்தேன்.

செவ்வாய்கிழமை மாலை காட்சிக்கு சென்றேன், தியேட்டர் புல், எங்க ஊரில் எல்லாம் வார இறுதி நாட்களில் தான் தியேட்டர் நிரம்பும் என்றார்கள், நல்ல படத்தை எப்போதும் நம் மக்கள் கைவிடவில்லை என்பதற்கு இதுஒன்றே சாட்சி...
நான் அனுபவித்துவிட்டேன் இந்த சுகானுபவத்தை.... நீங்கள்...???

இந்த படத்தை பற்றி எழுதினால் ஒவ்வொரு காட்சியாக எழுதிக்கொண்டே போகலாம்.. இந்த படத்தை பற்றி பேசுவதை விட படத்தை பார்த்து அனுபவிப்பதே சுகானுபவம்...

காக்கா முட்டையின் நினைவுகளில் இருந்து நிறைய பேர் மீளவில்லை... அதில் நானும் ஒருவன்..

அப்ப ஒரு நாள் ஒரு சொந்தக்காரன் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க போயிருந்தோம். நாங்க போய் இருந்த அந்த வீட்டுக்காரர் நல்ல வசதி அப்பவே காரு, பைக்கு, போன் எல்லாம் வெச்சிருந்தாரு ( இது நடந்தது 1986) வீட்டுக்குள்ள போனதும் எங்க இருவரையும் ஏற, இறங்க பார்த்தாரு....

அந்த பெரிய மனுசன் நல்லாவே மூஞ்சு கொடுத்து பேசல, அப்படி ஒரு கேவளமான பார்வை பார்த்தாரு. என் கூட வந்த அண்ணன் மற்றும் கல்யாண மாப்பிள்ளைக்கு ரொம்ப தர்மசங்கடாமா போச்சு..

இவன் எல்லாம் கண்ணாலத்துக்க வந்தா என்ன? வரலீனா என்ன ? மனதில் திட்டிகிட்டே பத்திரிக்கையை கொடுத்தோம். அவரு டேபிள்ல வை என்று சொல்லி விட்டு உள்ளே போய்ட்டார்.

எழுந்து புறப்பட வெளியே வந்தோம், கிளம்பிட்டீங்களா காபி போடச்சொல்லாம்ன்னு இருந்தேன் சரி சரி கிளம்புங்க என்றார்.

இந்த காக்காமுட்டை படம் பார்த்த உடன் என் கண்ணீரோடு, அந்த ஞாபகமும் எட்டி பார்த்தது....

கிளம்புங்க என்று சொன்னது கூட பரவாயில்லை இனிமே இந்த மாதிரி துணி, செருப்பு எல்லாம் போட்டுட்டு என் வீட்டுபக்கம் வராதீங்க தம்பி, அக்கம் பக்கத்தில் என்னை என்ன நினைப்பாங்க என்று வெளியே தள்ளாத குறையாக தள்ளினார்...

Monday, June 1, 2015

கல்யாண சோறு


இந்த வருட வைகாசியில் உறவுகள் மற்றும் நண்பர்களின் பல திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணம் என்றாலே உணவு தான் எல்லா வீட்டிலும் முக்கியமானதாக இருக்கும் மற்றும் அனைவரும் உணவிற்குத்தான் மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அனைத்து இடங்களிலும் கொடுப்பார்கள். அந்த முக்கியத்துவம் அவர்களின் அந்தஸ்த்து போல இருக்கும், அதற்காக நிறைய செலவு செய்து உழைத்திருப்பார்கள் என்றால் அது மிகையாகது. 

நான் சாப்பிட்ட எல்லா இடங்களிலும் (ஒரு திருமணத்தை தவிர) உணவுகள் எங்குமே நம் பாரம்பரிய உணவு முறைகளில் இல்லை, ரொட்டி அல்லது நான் கொடுக்காத திருமணமே இல்லை, நான், பன்னீர் மசாலா, தயிர் சேமியா, ஊத்தாப்பாம் என்று எதுவுமே நம் உடலிற்கு ஏற்ற உணவாகவே இல்லை. இதை குறையாக எழுதவில்லை நிறைய செலவு செய்து இந்த மாதிரி நம் பாரம்பயித்திற்கும், நம் மண்ணிற்கேற்ற நம் உடலிற்கும் சம்பந்தம் இல்லாத உணவை பெருமை என்ற பெயரிலும். கெத்து என்ற பெயரிலும் பணத்தை வாரி இறைத்து உணவாக வைக்கின்றனர்.

அதுவும் கல்யாண வீட்டில் பபே என்ற பெயரில் நமக்க சம்பந்தமில்லாத உணவு முறையை இப்பொழுது எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் கொண்டு வருகின்றனர். நம்ம ஊர் பெருசுங்க எல்லாம் தோசை ஒன்னு, கொஞ்சம் சட்னி கொடுப்பா என்று தட்டை எடுத்துக்கொண்டு வரிசையில் காத்து நின்று வாங்கி உண்ணுகின்றனர். இது தான் நம் பாரம்பரிய மிக்க கல்யாண சாப்பாடா? என்றால் கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது.

அதுவும் இந்த பபே முறையில் எல்லா வகை சட்டினிக்களும், குழம்பும் ஒன்றாக கலந்து விடுகின்றது, இதில் எங்க சட்டினியின் சுவையை சுவைப்பது சுவைத்து உண்பது என்று தான் இன்னும் விளங்கல..

இதை எல்லாம் தான் நம் மக்கள் விரும்புகின்றனர். ஒவ்வொரு பப்பே முறை உணவிற்கு செல்லும் போது என் மனதிற்கு தோன்றுவது மேல் உள்ள என் குமுறல்கள்... இப்படி பபே பற்றி நம்ம ஊர் ஆட்களிடம் காதும் காதும் வைத்த மாதிரி கேட்டால் பொழுந்து கட்டுவார்கள்.

வரிசையாக வந்த திருமணத்தில் கடந்த சனி இரவு ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன் மணமகனின் அப்பா பாரம்பரியத்தை மிக விரும்புபவர் போல அனைவருக்கும் தலைவாலை இலை, 3 வகையாக காய்கள், கூட்டு, வடை, பாயசம் அப்பளம் என்று 15 வருடத்திற்கு முந்தைய திருமண விருந்தை கடைபிடித்து கலக்கி இருந்தார்.

திருப்தியாக சாப்பிட்டு விட்டு கையை கழுவிவிட்டு வெற்றிலை பாக்கு போடும் போது ஒரு ஆத்தா சொன்னது, இந்த மாதிரி விருந்து சாப்பிட்டு நொம்ப நாள் ஆச்சு... சின்னச்சாமி கலக்கிபுட்டாரு என்றது...

நானும் சொல்கிறேன் இதை போல, விருந்து சாப்பிட்டு நிறைய நாள் ஆச்சு என்று.... 

இனி எந்த கண்ணாலத்தில் இப்படி சோறு போட போறாங்களோன்னு என் மனசு அல்லோல்டுது.

Sunday, April 26, 2015

பயணமும், சுவையும்..

ஞாயிறு காலை அவரசமாக ஆந்தியூர் செல்ல வேண்டி இருந்ததால் இருக்கின்ற வேலை எல்லாம் விட்டுபுட்டு ஊருக்கு புறப்பட்டேன்.. எப்பவும் போல பெருமாநால்லுர் வழியாக சென்றேன். பெருமாநல்லுர் வரை மண்டை காய்ச்சல் தான் புதிய நான்கு வழிச்சாலை என்பதால் வழி எங்கும் ஒதுங்கி நிற்க ஒரு மரத்தையும் காணவில்லை. இந்த சாலை போட்டு முடித்ததற்கு பின் சாலை இரு பக்கத்திலும் உள்ள மிச்ச சொச்ச இடத்தில் மரத்தை நட்டு வைத்தால் புண்ணியமாக போகும்.
 
பவானி போய் அந்தியூர் போலம் என்றால் விசயமங்கலத்தில் டோல்கேட்டில்  50 ரூபாயை புடுங்கி விடுவார்கள் என்பதால் குன்னத்தூர், கோபி வழிய சென்று விடுவேன். எப்பவும் சாமக்கோழி போல ராத்திரியில் சென்றவனுக்கு பகலில் சென்றது ஓர் இன்ப அதிர்ச்சி தான்.
 
குன்னத்தூரில் தொடங்கி கோபி வரை வழி எங்கும் சாலையோர கடைகள். இரு பக்கமும் எதுவும் விளையாத காடுகள், சாலை இருபக்கமும் புளியமரம், இதை விட முக்கியம் அந்த சாலை நேர்த்தியாக போடப்பட்டு இருந்தது. முந்தைய நாள் பெய்த மலைக்கு மண்வாசத்தோடு இருந்தது அந்த சாலை. சாலையா நமக்கு முக்கியம் சாலையோரம் இருந்த கடைகள் தானய்யா முக்கியம்.
 

 
முதலில் நொங்கு கடையில் வண்டியை ஓரம் கட்டி, ஒரு ரவுண்டு கட்டினோம். அதுவும் நொங்கை சீவி அதில் இருக்கும் 3 கண்களை பாத்ததும் வாயில் வாட்டர்பால்ஸ் கொட்டியது. சீவிய நொங்கை வாங்கி பெருவிரலை உள்ளே விட்டு நோண்டி தண்ணீரை குடித்துவிட்டு, அந்த கண்களை பெருவிரல் பதம் பார்க்க நாக்கு நொங்கின் ருசியில் மதிமயங்கி தாண்டவமாடியது. நொங்கின் விலை மிக குறைவு தான் ஆனால் சுவைதான் அருமை.. அந்த சாலையின் செல்பவர்கள் மறக்காம நொங்கு சாப்பிடுங்க..
 
நொங்கை சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்து பயணத்தை துவக்கினால் கம்மங்கூழ் வா வா என்று வழி எங்கும் அழைக்கிறது. ஒரு பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் வண்டியை புளிய மரத்தடியில் ஓரங்கட்டினால், கம்மங்கூல் மற்றும் கரும்புச்சாறு கடைகள் இருந்தன.
 
எதை சாப்பிடுவது எதை விடுவது என்று தெரியாமல் அப்போதைக்கு கம்மங்கூழ் சாப்பிட்டோம். கம்மங்கூழ் வீட்டில் இருப்பது போல தயிர் சேர்த்து நன்றாக கரைத்து வைத்திருந்தனர் கூட கொஞ்சம் வெங்காயத்தை போட்டு கொடுத்தார். தொட்டுக்க நிறைய சைடிஸ் இருந்தாலும் நான் சாப்பிட்டது பச்சை மிளகாய் தான். ஒரு மிளகாய் ஒரு வாய் கம்மங்கூழ், காரமும் கூழும் உள்ளே போக போக வயிறு கின்னுன்னு ஆனது.
 
வயிறு கின்னுன்னு ஆனா சும்ம விட முடியுமா அதை போக்க எதவாது குடிக்க வேண்டும் என்று தோன்றியது கோபி, குன்னத்தூர், கொளப்பலுர் ஏரியாவில் கிடைக்கும் ஒயிட்ரோஸ் ஞாபகத்துக்கு வந்தது. அந்த ஏரியாவின் தண்ணீருக்கு சுவை அதிகம் அதுவும் கேஸ் கூட சேர்ந்ததால், கோலிசோடவில் ஒயிட்ரோஸ் வைத்திருந்தனர். ஒயிட்ரோஸ் நிரம்பி இருந்த வயிரை ஜீரணமாக்கியது.
 
அப்புறம் எங்கேயும் நிற்காமல் ஊர் செல்ல வேண்டும் என்று சென்று கொண்டு இருந்தோம். கோபி தாண்டி அத்தாணி செல்லும் சாலையில் வலைந்து நெளிந்து செல்ல வழி எங்கும் அப்போது பறித்த வெள்ளரி பிஞ்சுகளும், வெள்ளரி பழமும். வெள்ளரி பிஞ்சு அடிக்கடி சாப்பிடுவேன். பழம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆனதால் என் நாவின் கட்டுப்பாட்டில் நின்றது வண்டி. ஒரு வெள்ளரி பழம் 25 ரூபாய்க்கு வாங்கினேன். எப்படியும் 4 கிலோ வரும். வெள்ளரி பழம் வாங்கி செல்கையிலே வெள்ளரிபழத்தின் மனதோடு என் நாசி ஒன்ற, கூடவே நாக்கும் சேர்ந்து கொண்டது.
 

வீட்டுக்கு சென்றதும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து வெள்ளரி பழத்தை ஒரு பிரட்டு பிரட்டி சாப்பிட வேண்டும், இல்லையேல் வெள்ளரி பழத்தோடு நாட்டுச்சக்கரை சேர்த்த பழரசம் சாப்பிடவேண்டும் என்ற கற்பனையோடவே சென்று விட்டேன் ஊருக்கு.. சென்றதும் வெள்ளரிபழத்தோடு நாக்கு சண்டையிட்டு தோல்வி அடைந்திருந்தது.
 
இரவு ஊருக்கு கிளம்பி வந்ததால் பகல் எங்கும் பட்டைய கிளப்பிய சாலையோர கடைகள் எல்லாம் உறங்கி இருந்தன.
 
அந்த சாலையில் பயணிக்கும் போது மறக்காமல், நேரத்தை பற்றி கவலை இல்லாமல் நாக்கை கொஞ்சம் தாண்வமாடவிடுங்கள்...

Sunday, April 19, 2015

சவரக்காரனின் கவிதை மயிருகள்...

ஒவ்வொரு கிராமங்களிலும் நிச்சயம் நாவிதன் இருப்பார்கள். நாவிதன் இல்லாத கிராமத்தை பார்ப்பது அரிது. குடிமகன்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் உயர் வகுப்பினரின் நிகழ்வுகளில் சாங்கியம், சம்பிரதாயம் என்ற சடங்குகளை செய்வார்கள். சாங்கியம் சம்பிரதாயத்துக்கு வைத்துக்கொண்டாலும் அவர்களின் வாழ்வாதாரம் சற்று சிறப்பாக இல்லை என்றே சொல்லாம்.

இந்த நாவிதர்களை பற்றி நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும், சிறுவயதில் தகரடப்பாவில் கத்தியும், கத்திரியும் கொண்டு வீடு வீடாக வருவார்கள், வீட்டு பின்னால் உட்கார வைத்து கதற கதற இருக்கும் முடிகளை ஒன்ட வெட்டுவார்கள். பின் காலம் மாற மாற  ஊருக்குள் ஓரு கடை வைத்து அதில் ஒரு சேர் முன்னாடி பின்னாடி பார்க்க கண்ணாடி, கடை முழுவதும் அரசியல் தலைவர்கள் படம், நிறைய செய்தித்தாள்கள் என அவர்களை அலங்கரித்திருக்கும். அவர்கள் கடைக்கு சென்று பேச்சுக்கொடுத்தால் உள்ளுர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

எனக்கு பார்பர்ஷாப் என்றதும் உடனே நினைவுக்கு வருவது அங்கு சுவரில் சிறைபட்டு இருக்கும் அழகிகளின் படங்கள் தான். மது கோப்பையை ஏந்தி தலை முடிகளை பறக்கவிட்டு, ஒரு கண்ணை ஓரமாக பார்த்து உதடை பிதுக்கும் அந்த அழகி தான் என் அப்போதைய கனவு கன்னி.

பத்திரிக்கைகள் அறிமுகம் ஆனாது எல்லாம் பார்பர்ஷாப்பில் தான். இப்படி நிறைய விசயங்கள் கூடவே இருக்கும். ஒரு கிராமத்தில் அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை அவரின் கோபத்தை அவருக்கு உரித்தே வகையில் அவர் சமூகம் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தோலுருத்திகாட்டி உள்ளார் இந்த சவரக்காரனின் கவிதை மயிறுகளில் கவிஞர் கலைவாணர்.

சில நாட்களுக்கு முன் திருப்பூர் குணா அவர்கள் கீற்று இணையதளத்தில் சவரக்காரனின் கவிதை மயிறுகள் என்று புத்தகத்தின் விமர்ச்சனத்தை எழுதி இருந்தார். அதில் கலைவாணனின் கோபமான உண்மையான வரிகளை பற்றி எழுதி இருந்தார், அதில் இருந்து இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று தேடிக்கொண்டு இருந்தேன்.

நேற்று முன் தினம் அண்ணன் அவைநாயகத்திடம் இருந்து இந்த புத்தகத்தை பெற்று இந்த வார இறுதி நாட்களை சவரக்காரனின் கவிதை மயிருகளிடையே பயணித்தேன். நீண்ட நாட்களுக்கு பின் வாசிக்கும் கவிதை புத்தகம் என்பது மட்டுமல்ல, ஒரே மூச்சில் படித்து முடித்த தொகுப்பும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிதன்
முண்டிதன்
இங்கிதன்
சங்கிதன்
நால்விதன்
தெரிந்தவனே நாவிதன்

என்ற நாவிதன் பற்றியான அவரின் அறிமுகத்திலேயே எழுந்து உட்காந்து விட்டேன்.

படிப்பு வரலைன்னா
உங்கப்பங்ககூட
செரைக்கபோக வேண்டியது தானே..

என்ற வரி அந்த இனத்தின் மாணவர்கள் பலர் தான் காதுகளில் இந்த வரியை கேட்டு பதில் சொல்ல இயலாமல், கோபத்தை எல்லாம் மனதில் போட்டு பூட்டி வைத்த வரியாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஊரில் யார் வீட்டிலாவது பெண்கள் சமைஞ்சுவிட்டாள், அவர்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் இவர்கள் பார்த்து பாத்து செய்கின்றனர். ஆனால் இவர்கள் வீட்டு பெண் சமைஞ்சதை யாரிடமும் சொல்லவில்லை என்று அவர்களின் ஏழ்மைநிலமையை பகிரங்கமாக பதிவு செய்திருக்கிறார்.

தன் சாதியை கலப்பு திருமணம் நடக்கும் இடத்தில் தன் சித்தப்பா சொல்லிவிடுவாறோ என்ற பயத்தை இப்படி சொல்கிறார்.

அடுத்த மாசம்
அக்கா மகனுக்கு
மெட்ராசுல கல்யாணம்
நாயக்காமாரு வீட்ல
பொண்ணு எடுத்திருக்கு

ஊர்ல இருந்து
ஓட்ட வாயரு
விஜயன் சித்தப்பாவும்
வருவாராம்

பொண்ணு வீட்டுகாரன்கிட்ட
அவரு என்ன சொல்வாரோன்னு
அக்கா ஊருபட்ட சாமிய கும்பிடுக..

தன் சாதியை தன் சாதி மக்களே  சொல்லிடுவாங்களோ என்று அந்த அளவிற்கு சாதியை அவர்களே கீழ்தரமாக பார்க்கின்றனர் என்பதை சொல்லி இருக்கிறார்.

வீடு சுத்தமாக வைத்திருப்பதை மற்ற சமூகத்தினர் எப்படி பார்க்கின்றனர் என்பதை இப்படி சொல்கிறார்

ஒரு நாள் வீட்டுக்கு வந்த
செட்டி தெரு ஸ்ரீமதி
சொல்லிட்டு போனா

மல்லிகாளுக்க அடுக்கள
நாசுவத்தி குடி மாதிரியா இருக்கு
பிராமணத்தி வீடு
தோத்து போயிரும்.

இறந்தவருக்கு செய்யும் சடங்கை சொல்லி அதன் முடிவை சொல்லும் போது நெகிழவைக்கிறார்

மது போதையில்
மாரடைத்து போன
பரமேஸ்வரன் நாயருக்கு

சவரம் செய்து
மூக்குச்சளி, குண்டி பீ துடைத்து
குளிப்பாட்டி பவுடர் போட்டு
கை கால்
பெருவிரல்கள் சேர்த்து கட்டி
உடை மாற்றி சென்ட் அடித்து

பிரதேசத்தை கருநீள  பெஞ்சில்
நீளமாக படுக்க வைத்து விட்டு
கொஞ்சம் அரிசியுடன் வந்தார் அப்பா

அன்னைக்கு ராத்திரி
வீட்டுல சோறு பூரா
பொண நாத்தம்...

இந்த கவிதை வரிகளை போகுற போக்கில் நிச்சயம் பார்க்க இயலாது. இறந்த பிணத்தை வாய் கட்டி பொட்டு வைத்து விரல் கட்டி நடு வீட்டில் போடும் வரை அனைத்தையும் செய்பவர்கள் நாவிதர்களே. அதைச்சொல்லி கடைசியாக அன்று இரவு சாப்பிடும் சாப்பாட்டு பொண நாத்தம் முடித்துவிட்டார். அறிவியல் பூரணமாக பார்க்கும் போது இதில் நிறைய தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் நிறைய இருக்கு, ஆனால் இன்று வரை பல இடங்களில் இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த கவிதை புத்தகத்தில் தன்னை மட்டுமல்லாமல் அப்பா, அம்மா, அக்கா தங்கை என குடும்பம் தவிர அரசியல், சாதியின் சமூக அவலங்கள் என ஒவ்வொன்றாக பிரிச்சு மேய்ந்திருக்கிறார்.

இவர் சவரம் மட்டுமல்ல பல தொழில்கள் செய்துள்ளார், பலவற்றில் அவமானப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். அக்குள், அடிவயிறு, முகம், தலை என ஒதுக்கப்படும் மயிருகளை வைத்து கவிதையாக பிணைத்துள்ளார். ஒரு காலத்தில் இவர்கள் சமூகம் பூர்வ குடி சித்த மருத்துவர்களாக வாழ்ந்துள்ளனர். காலப்போக்கில் மருத்துவத்தை பணம் உள்ளவர்கள் எடுத்துகொண்டு சவரத்தை மட்டும் இவர்கள் கையில் கொடுத்துவிட்டனர்.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை புத்தகத்தை முழுமையாக வாசித்து அதைப்பற்றி எழுதவும் என்னை துண்டி உள்ளது இந்த கவிதை புத்தகம். தன் சமூகத்தின் அவலத்தை கவிஞர் நம்முன் அடையாளம் காட்டி, தன் கோபத்தையும் கொட்டி உள்ளார்.

நாவிதர்களின் வரலாறு என்று நிறைய சொல்லலாம் ஆனால் அது வட்டாரத்துக்கு வட்டாரம் மிக மாறுபடும், கலைவாணர் அவர்கள் கூறியது அவர்களின் வட்டாரத்தை பற்றியானலும் இவர் சொன்ன பல சடங்கு முறைகள் எல்லா வட்டாரத்துக்கும் ஒத்து போகும்.

நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு தொகுப்பு. கவிதையை ரசித்து ரசித்து வாசிப்பவர்களுக்கு எல்லாம் இது ஒரு பொக்கிசம் என்பதை பதிவு செய்வதில் பெருமையடைகிறேன்.

92 பக்கங்கள்
விலை ரூபாய்- 75
கீற்று வெளியீட்டகம்
1/47ஏ அழகியமண்டபம்
முளகுமூடு அஞ்சல்
குமரி மாவட்டம்- 629167

Sunday, April 12, 2015

இளநீ எம்புட்டுங்க??

உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி போகும் போது சிப்காட் அருகில் உள்ள ரயில்வே கேட் போடுவதற்குள், அந்த இடத்தை கடந்து விடவேண்டும் என்று நான் மட்டுமல்ல, அந்த வழியா போகும் பலர் மனதிலும் நிச்சயம் வந்து போகும் இந்த சாதாரண நிகழ்வு.

அதுவும் எனது அலுலவகம் சில வருடத்திற்கு முன் இரத்தினம் டெக் பார்க்கில் இருந்ததால் வாரத்தின் 5 நாட்களும் என் நினைப்பு இரயில்வே கேட் மேலே தான் இருக்கும். அவ்வப்போது லாக் ஆகிடும் அப்புறம் ஊரைச்சுற்றித்தான் அலுவலகம் செல்லவேண்டும்.

மேம்பால பணிகள் முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் அந்த பக்கம் நான் செல்லும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது அடிக்கிற வெய்யிலில், அனல் காற்றோடு அந்த மேம்பாலத்தை கடக்கும் போது சும்மா ஜிவ்வென்று இருந்தது. என்ன அந்த வழியாக சாலையில் செல்லும் போதும் சரி, மேம்பாலத்தில் செல்லும் போதும் சரி, உயிரைகையில் பிடித்துக்கொண்டு தான் போகவேண்டி இருக்கும், ஆம் எமன் வடிவில் அந்த சாலையில் வரும் தனியார் பேருந்துகள் எல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் வந்து செல்லும்.

அடிக்கிற வெய்யிலுக்கு சாலையில் செல்வது நொம்ப கஷ்டந்தான். உடல் வெப்பத்தை தனிக்க அந்த சாலையில் இளநீர், நொங்கு, தெலுவு என வரிசையாக விற்றுக்கொண்டு இருப்பனர், கற்பகம் காலேஜ் தாண்டி இடது பக்கம் ஒரு இளைஞர் இளநீர் விற்றுக்கொண்டு இருந்தார். வண்டியை ஓரங்கட்டி நின்றேன். அவரை சுற்றிலும் செவந்த இளநீ, மற்றும் இளநீ குழை குழையாக இருந்தது. எந்த குழையில் எந்த இளநீ வேண்டும் என்று சொல்கிறோமோ அந்த இளநீயை வெட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
இந்த இளநீ கடை பையன் கிடா மீசை, மிரட்டும் பார்வை எல்லாம் இல்லை பையன் இந்தி பட ஹீரோ மாதிரி வழுவழுன்னு இருந்தார். ஒரு வேளை இந்திக்கார பையனோ என்று பேச்சை ஆரம்பித்தேன்.

"தம்பி, இளநீ எவ்வளவு ? "

" சார், 30 ரூபாய்ங்க "

"என்னய்யா இது ஊருக்குள்ள தான் 30, 35ங்குறாங்க பொள்ளாச்சிக்கு பக்கத்துல இருந்து கிட்டு 30 ரூபாய் சொன்னா நியாயமாப்பா ??"

" சார் உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் 25 ரூபாய்க்கு தர்றேன்"

"சரி தம்பி, 2 இளநீ கொடுப்பா, நல்ல வழுக்கையா கொடுப்பா, நீ பாட்டுக்கு தேங்காயா கொடுத்திடாதே, இல்ல அரை பதமா கொடுப்பா "

"சார், வழுக்கை இல்ல சார், வேனும்னா அரை பதமாக தருகிறேன் "

"சரிப்பா, இந்த குழல் எல்லாம் வேண்டாம் அப்படியே வாய வெச்சு ஊரிஞ்சுவது போல கொடு"

இரண்டு இளம் இளநீயை எடுத்து அவனுடைய நன்கு தீட்டப்பட்ட அருவாளில் இரண்டு சீவு தான் சீவினான், ஒரு கையில் இளநீ ஒரு கையில் அருவாள் என அவன் கத்தியை வீசிய இலாவகம் பயமாக இருந்தாலும், அழகாக இருந்தது இப்போது இளநீ..

" இந்தாங்க இளநீ என்று கொடுத்தான். "

நாங்க இளநீ வாங்கி கொடுக்கையில் அந்த சாலையை பார்த்துக்கொண்டே இளநீ குடித்தோம், சாலையில் எமன்கள் எட்டி எட்டி பார்த்துக்கொண்டு சென்று கொண்டு இருந்தார்கள். போதக்குறைக்கு கார்களும் அப்படித்தான் சென்று கொண்டு இருந்தன.

எங்கிருந்தோ வேகமாக வந்த ஸிப்ட் கார் அந்த கடையை நோக்கி வந்து சர்ர்ர் என்று பிரேக் அடித்து நின்றது. அந்த காரில் தேவதைகள் இருப்பது என் எக்ஸ்ரே கண்ணுக்கு பட. தேவதையை பார்க்க ஆர்வம் ஆனது எனது கண்கள்.

பின் இருக்கையில் ஜீன்ஸ் பேண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பரத்தை தாங்கிய ஒரு அரைக்கை பனியனோடு இறங்கியது அந்த தேவதை, அப்படி திரும்பி நின்றது அதன் நெஞ்சில் மேல் நின்று இருந்தார் டோணி ( மனுசன் கொடுத்து வெச்ச ஆளய்யா) தேவதையை பார்த்ததும் என் கண்கள் சப் என்று ஆகியது. உடையையும் அலங்காரத்தையும் கலைத்தான் நிச்சயம் அது என் கண்களுக்கு தேவதையாக தெரியாது, சுமாராகத்தான் இருந்தது  அதானல் அடுத்த இளநீக்கு ஆர்டர் தராமல் இளநீயை வெட்டி அரைப்பதத்தை சாப்பிடலாம் என்ற அந்த தம்பியிடம் நீட்டினேன்..

அப்போது அந்த பெண்ணோடு வந்திருந்த அழகு பையன் நல்ல வாட்டசாட்டமாக இருந்தான். "அழகு பையனுக்கு சுமார் பிகர் தான் வாய்க்கும் என்பது சரியாகத்தான் இருக்கும் போல" என்று மனதில் அசை போட்டுகிட்டே அவர்கள் அருகில் சென்றேன்.

அந்த பையன் தம்பி இளநீ எவ்வளவு என்றான், 1 நாற்பது ரூபாய் சார் என்றான். சரி தம்பி 2 கொடு என்றான். நான் அவன் வெட்டிக்கொடுத்த அரை பதத்தை சாப்பிட்டுக்கொண்டு, இவர்கள் மீண்டும் பேரம் பேசுவார்களா என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்தேன்.

ஒன்னும் நடக்கல என்பதால் வண்டியை ஸ்டார்ட் செய்ய உதைத்தேன். அந்த கார் கார ஹீரோ 80 ரூபாய் கொடுத்தான், அதை வாங்கிக்கொண்டே அந்த பையன் என்னை பார்த்தான் மெல்லிய புன்னகையோடு, அவன் முகத்தில் தெரிந்தது அவன் தொழில் விரைவில் அதிபர் ஆவதற்கான ஒளிவட்டம்...

Thursday, April 9, 2015

போகிற போக்கில்..

கோவையில் இருந்து கோபி செல்லும் பேருந்தில் கடந்த வாரத்தில் ஒரு நாள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது, லஷ்மி மில் பேருந்து நிலையத்தில் முன் வாசலில் ஏறி வண்டியை கடைசி வரை நோட்டமிட்டேன், இருக்கை இல்லாததால், பின் பாகத்தை கம்பியில் முட்டக்கொடுத்து நின்று ஊரை பராக்கு பார்க்க ஆரம்பித்தேன்.
 
ஒவ்வொரு நிறுத்தத்திலும் சிலர் ஏற ஏற வண்டி நிரம்பிக்கொண்டே வந்தது, மருந்துக்கு கூட நடத்துனர் சிரிக்கவே இல்லை மனிதன் உர் என்றே இருந்தார். ஒரு வேளை சிரித்தால் சில்லரை கொட்டி விடும் என்று நினைத்திருப்பார் போல. அக்கினி நட்சத்திரம் வரவில்லை ஆனால் அக்னியின் அனல் கதகதத்தது. பேருந்தின் மேற்கூரையை பொத்துக்கொண்டு வந்தது வெய்யிலின் உக்கரம்.
 
சித்ரா நிறுத்தத்தில் ஒரு பெரியவர் தள்ளாடி ஏறினார், இரண்டாவது இருக்கையில் இருந்த ஒருவர் எழுந்து பெரியவருக்கு இடம் கொடுக்க எழுந்தார். உண்மையிலே மிகவும் பாரட்ட தோன்றியது அந்த இடம் கொடுத்தவரை, பெரியவர்களுக்கு வழி விடும் மற்றும் இடம் கொடுக்கும் ஆட்களை எல்லாம் இங்கு விரல் விட்டு எண்ணலாம்.
 
இத்தனைக்கும் பெரியவர் மேலே ஏறியதும் அதன் பக்கத்தில் இருந்தவர் காதில் பெரியதாக ஸ்பீக்கரை வைத்துக்கொண்டு மண்டையை ஆட்டி ஆட்டி வந்தார். எனக்கு மண்டையில் போடனும் போல தோன்றியது. அதன் அருகில் இன்னொருவன் சின்ன ஒயரை காதில் விட்டுக்கொண்டு அவனுக்கு ஏத்தாற் போல் மண்டையை ஆட்டி வந்தார்.
 
மனிதாபிமானம் அற்ற ஊரில் நாம் இருக்கிறோம் என்று என் மனம் என்னை யோக்கியனாக காட்டியது. நான் அவ்வப்போது இடம் விடுவேன், எதாவது புத்தகம் கையில் இருந்தால் மருந்துக்கு கூட திரும்பி பார்க்கமாட்டேன் என்பது தான் நிதர்சனம். பேசிகிட்டே பெரியவரை விட்டுட்டேன் பாத்தீங்களா...
 
பெரியவருக்கு இடம் விட அந்த நல்ல மனிதர் எழுந்ததும் பெரியவர் அங்கே வந்தார் அப்போது என் அருகில் இருந்த ஒரு பன்னி மூஞ்சி வாயன் ஓடிப்போய் அந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டான், பெரியவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஆனால் அந்த இடம் விட்டவர் கேள்வி கேட்டார், அதற்கு அவன் சொன்ன பதிலோ இடம் இருந்தது உட்கார்ந்தேன் அவ்வளவு தான் என்றான்.
 
இப்போது பேருந்து கோல்டுவின்சை தாண்டி சென்றது.
 
இவர்கள் சத்தம் போடுவதை பார்த்த சிரித்தால் சில்லறை கொட்டும் என்று இருந்த நடத்துனர் பெரியவருக்கு சீட் விடலாமுள்ள தம்பி என்று பேசினார். இந்த பன்னி மூஞ்சு வாயனைப்பத்தி சொல்லாம விட்டுட்டேன் பாத்தீங்களா.. கட்டையா, குட்டையா நல்ல உயர்தர பேண்ட், சர்ட், வுட்லேண்ட் சூ என்று ஆள் பெரிய இடத்து பிள்ளையாகத்தான் இருந்தான் ஆனால் கருத்தவன் அதனால் தான் எல்லோர் கேள்வி கேட்கும் போதும் டக் டக்குன்னு பதில் சொன்னான்.
 
கடைசியா எல்லாரும்  உட்கார்ந்து தொலைகிறான் என்று விட்டு விட்டு, வேத்து ஊத்தும் உடலை வெப்பக்காற்றால் நனைத்துக்கொண்டு இருந்தனர் நானும் தான். பேருந்து கருமுத்தம்பட்டியை அடைந்தது இறக்கமற்ற அந்த பன்னி மூஞ்சிவாயன் இறங்கி போனன்.
 
படிச்சா மட்டும் போதாது கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டும், இவனுக எல்லாம் நாளைக்கு அடிபட்டா எவனும் கண்டுக்காம, போகும் போது தான் இவனுக்கு மனிதாபிமானம் என்றால் என்ன வென்ற தெரியும் என்று முனு முனுத்தார் சிரித்தால் சில்லறை கொட்டும் என்று நான் நினைத்த நடத்துனர்.

அஞ்சறைப்பெட்டி 09.04.2015

இந்த வாரம் தமிழ் சமூகத்திற்கு இழப்பான வாரம், இழப்புகள் ஒவ்வொன்றும் மீட்க முடியாதவை, எட்ட இருந்து பார்க்கும் நமக்கு அது செய்தியாகத்தான் இருக்கும், ஆனால் அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எவ்வழியிலும் ஆறுதல் சொல்ல இயலாமல் தவிக்கத்தான் வேண்டும்..

*************************

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச்சென்ற கூலித்தொழிலாளிகளை சுட்டுக்கொன்றுள்ளது ஆந்திர அரசு. இதன் மூலம் ஹைடெக் முதல்வர் என்று எல்லோராலும் அறியப்பட்டவர் என்ன சொல்ல வருகிறார் என்று தான் புரியவில்லை.

காட்டை அழிக்க சென்றார்கள் அதனால் சுட்டோம் என்கின்றனர். இவர்கள் வெறும் கைக்கூழிகள் தான் இவர்களை வெட்ட அனுப்பிய அந்த கொள்ளைக்கார கும்பல் தலைவனை இன்னும் பிடித்தாக தெரியவில்லை, முக்கியமாக சொல்லப்போனால் அம்புகளை சுட்டு வீரத்தை காண்பித்துள்ளனர் அம்பை எய்தவனை பிடிக்க முடியாமல். 

நிச்சயம் பெரிய பின்புலம் உள்ளவராகத்தான் இருப்பார் இந்த கும்பலின் தலைவன், மொத்தத்தில் பணம் படைத்தவனை காப்பாற்ற அப்பாவி மக்களை கூலித்தொழிலாளிகளை கொன்றள்ளனர். அப்பாவிகளை கொன்ற வீரர்களுக்கு என் கண்டனத்தை பதிவாக்குகிறேன்...

*************************



இந்த வாரத்தின் முக்கிய இழப்பு, முக்கியமாக தமிழ் இலக்கிய உலகில் எழுத்து உலகில் ஜேகே என்று கம்பீரமாக அழைக்கும் அந்த எழுத்து சிங்கம் ஜெயகாந்தன் அவர்கள். அவர் எழுதிய ஒரு பத்து கதைகளை மட்டும் தான் நான் இதுவரை படித்துள்ளேன். ஆனால் அவரின் எழுத்து வசீகரம் ரொம்ப ஈர்க்கிறது. படிக்க ஆரம்பித்தவுடன் முடித்து விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு அகலுவேன் அந்த அளவு ஈர்ப்பான எழுத்து.

இனி இவர் போல் இன்னொரு எழுத்தாளனை அடையாளம் காண்பது அரிது.

*************************

" இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை "  இப்போதும் இந்த கனீர் குரலை கேட்டுக்கொண்டுதான் எழுதிக்கொண்டு இருக்கேன். வசீகரமான குரல், ஒவ்வொருமுறை இவரின் பாடல்களை கேட்கும் போதெல்லாம் புத்தணர்வு வந்தது போலத்தான் இருக்கும், இவரின் மறைவு இசையுலகில் ஈடுசெய்ய இயலாத மறைவு..

*************************

ஊரில் இருந்து சொந்த பந்தங்கள் வீட்டுக்கு வந்தார்கள் என்றால் அவர்களை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்று தான் அழைத்துவருவேன், பின் அவர்கள் செல்லும் போது அங்கு தான் இறக்கி விட்டு பேருந்தில் ஏற்றிவிடுவேன். எப்போது சென்றாலும் பேருந்து நிலையத்தின் முன் உள்ள மரங்களின் முன் தான் வண்டியை நிறுத்துவேன்.

எப்போதும் அந்த இடம் குளிர்ச்சியாகவே இருக்கும், அதற்கு எதிர்புறம் உள்ள தமிழ்நாடு ஓட்டலை ஒட்டியுள்ள பகுதிகளும் அப்படித்தான் இருக்கும். அங்கு சென்று வருவேதே மனதிற்கு இதமான ஒன்றாகத்தான் இருக்கும்..

நேற்றும் ஒர் உறவினரை இறக்கிவிடச்சென்றேன் இப்போது எங்கள் ஊர் அந்த இயற்கை காற்றை தின்று செயற்கை காற்றும் இல்லாமல் மொட்டை வெய்யில் நங் என்று உச்சந்தலையை அழகு பார்க்கிறது.

ஏற்கனவே அவிநாசி சாலை வெய்யிலுக்கு ஒதுங்க சிறு இடம் கூட இல்லாமல் அத்தனை மரங்களையும் பலாத்காரம் செய்து சாலையை விரிவாக்கிவிட்டனர்..

எங்கள் ஊர் உலகத்தரத்திற்கு மாறகிறது, இயற்கையின் சுவடே இல்லாமல்...


Thursday, March 26, 2015

அஞ்சறைப்பெட்டி 27.03.2015

வெற்றி தோல்வி வீரனுக்கு சகஜம் என்பது தான் நம்ம ஊர் மொழி.. உலக கோப்பையில் டோணியின் அணி செமி பைனலில் இருந்து வெளியே வந்து விட்டது என்பதை நம் இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எப்போதும் நாமே வெற்றி பெற்றுக்கொண்டு இருக்க இயலாது என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் எண்ணம் இங்கு இல்லை.

சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனால் மேட்ச் முடிந்தது என்ற காலம் போய் சமி வரை மேட்ச் பார்க்க வைத்த பெருமை டோணியை சேரும். அந்த வகையில் டோணி அணியை நடத்தும் விதம் மிக பாராட்டுக்குரியது.

உலககோப்பை கிரிக்கெட்டை ஊத்தி மூடியாச்சு, நம்மை வைத்து முழுக்க முழுக்க சம்பாரிப்பதற்காகவே விரைவில் வருகிறது ஐபிஎல். நாமும் நம்மால் முடிந்த அளவு ஸ்டேட்டஸ் போட்டு விளையாட்டை பறப்புறை செய்து பணம் உள்ளவர்களிடமே பணத்தை கொட்டை வைப்போம்....

 -----------------------------------------------------------------------------

வாட்ஸ் அப்பில் ஒரு புதிய எண்ணில் இருந்து Call me என்று இருந்தது. சரி என்று போனைப்போட்டு யார் என்று பார்த்தால் செல்லமுத்து அண்ணன் எங்க ஊர்க்காரர்தான். நன்றாக பழகுவார் சிறிய வயதில் இருந்தே பழக்கம் அண்ணனுக்கு ஒரு 60 வயதிருக்கும் பட் எப்பவும் பார்க்க இளமை ததும்புவது போலத்தான் காணப்படுவார்.

என்னன்னே போன் எல்லாம் மாற்றி வாட்ஸ் அப் எல்லாம் பயன்படுத்துவீங்க போல என்றேன். கால ஓட்டத்துக்கு நாமும் மாறிக்கவேண்டுமல்லவா அதனால தான் இந்த மாற்றம் அப்புறம் பேஸ்புக் எல்லாம் ஓபன் செய்துட்டீங்களா என்று அடுத்த அம்மை வீசினேன். ஓபன் பன்னிட்டேன்பா பட் எனக்கு என்னமோ அது கும்முன்னு இல்ல வாட்ஸ்அப்பத்தி தான் பேப்பரில் அதிகம் வருகிறது. அதனால அது தான் பிடிச்சிருக்கு என்றார். சரிண்ணே சரிண்ணே என்றேன்..

சரி தம்பி இந்த வாட்ஸ் அப்பில் நிறைய வீடியோ எல்லாம் வருதாம், நம்ம சிவாதான் சொன்னாரு ஆனா பாருப்பா எனக்கு எதுவுமே வரமாட்டிங்குது என்றார். சரிண்ணே இந்த fun video எல்லாம் இருக்கு அனுப்புறேன் என்றேன். தம்பி அது கிடக்க தம்பி இந்த நடிகை வீடியோ எல்லாம் வருதுன்னு நம்ம தினத்தந்தியில் பக்கம் பக்கமா எழுதுறாங்க அது எல்லாம் அனுப்புப்பா... எப்பப்பா அனுப்புவா என்ற கேள்விக்கான பதிலோடு போனை கட்செய்தேன்..
அப்புறம் ஒரு ரேசியோவில் அறிந்தேன்.... பல பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதே அதுக்குமட்டம்தான் போல...

--------------------------------------------------------------

குழந்தைகளுக்கு கதை சொல்வது செம்ம கடுப்பான வேலை என்று தான் நினைத்தேன், அதற்காக முதலில் நிறைய நாட்கள் மெனக்கெட்டேன் அப்புறம் அப்படியே மறந்து போய்விட்டன், மகனும் கதை கேட்பதை விட்டுவிட்டான். சரி இப்படியே போனால் மறுபடியும் சோட்ட பீன்க்கு அடிமையாகிடுவான் என்று திக்கு தெரியாமல் விழிக்க ஆரம்பித்தேன்.

சில நாட்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது அவனுக்கு காடுகள், விலங்குகள், யோகா போன்றவற்றில் விருப்பம் இருப்பதை அறிந்தேன். அவனுக்கு பிடிச்ச மாதிரியே பேசினால் தான் பேசுகிறான் என்பதால் எனக்கு தெரிந்த தகவலை சேர்த்து காடுகள் பற்றி பேசினேன், பேசிகிட்டே டேபிள் காடுகளை பற்றி தேடினால் தகவலாக கொட்டுகிறது. சில தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தேன்.

நம்ம ஊர் அந்தியூர் அங்க காடு இருக்குதுன்னு ஆரம்பிச்சு அப்படியே சத்தியமங்கலம் வந்து, திம்பம், தாளவாடின்னு கதை சொல்ல ஆரம்பிச்சு முதுமலை வரை வந்துட்டேன். இப்போது அவனுக்குள்ளான காடு பற்றியான பிம்பம் நிறைய வந்துவிட்டது. இரவில் பேசிய காட்டைப்பற்றி காலையில் சந்தேகம் கேட்பதும் இன்னிக்கு எதைப்பற்றி பேசப்போறப்பா என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டான்.

ஆக குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு காம்ப்ளான் தான் சாப்பிடனும் என்று சொல்லாமல் எப்புவும் போல பாலை மட்டும் கொடுத்திட்டு நன்றாக கதை சொன்னால் போதும் அவர்களின் ஞாபகசக்தி அபாரமாக உள்ளது.
நான் தான் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைக்க ரொம்ப யோசிக்கிறேன். மூட்டை கட்டி வைத்து விட்டால் சிறந்த தகப்பனாகி விடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

-----------------------------------------------------------------------------

உடல் எடை அதிகமாக பல காரணங்கள் உள்ளன அதில் மிக குறிப்பிடத்தக்க காரணத்தில் சர்க்கரையும் உண்டு. பார்ப்பதற்கு கவர்ச்சியாக பளிச்சென்று இருப்பதால் நம் இல்லங்களில் கடந்த 30 வருடங்களாக நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டது வெள்ளைச் சர்க்கரை. வெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளைச் சர்க்கரை என்றைக்கு நம் அன்றாட உபயோகத்திற்கு வந்ததோ, அன்றைக்கே நாம் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டோம்.

நமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்படை வயிறு, அதாவது செரிமானம் கெடுவதுதான். இந்த அடிப்படையான வயிற்றை ஆட்டங்கான வைத்து, இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக இந்த வெள்ளைச் சர்க்கரையைச் சொல்லலாம்.
இந்த வெள்ளை சர்க்கரை வருவதற்கு முன் நாம் எதை பயன்படுத்தினோம் நாட்டு சர்க்கரையைத்தான் அப்போது எல்லாம் சுகர் வந்தவர்கள் நம்ம ஊரில் நிறைய என்பதை விட முக்கால்வாசி ஆட்கள் என்றால் அது மிகையாகாது.
டீ, காபி குடிப்பவர்கள் எப்பவும் போல குடிங்க ஆனால் அதற்கு வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சக்கரையை பயன் படுத்துங்கள்.

நாட்டுச்சக்கரையில் அதிரசம், லட்டு போன்ற பலகாரங்களைச் செய்யலாம். வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் மறக்காமல் நாட்டுச்சர்க்கரையை பயன்படுத்துங்கள்... தொடர்ந்து பயன்படுத்தும் போது தான் அதன் பலன் கிடைக்கும் என்பதை மறந்துடாதீங்க...

நாட்டுச்சக்கரைக்கு மிக பிரபலமான ஊர் எது தெரியுமா ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி தான் மிக பிரபலமான ஊருங்க..

----------------------------------------------------------------------------

சாப்பாட்டை பொறுத்தவரை ஒவ்வொருத்தரும் ஒரு சுவைக்கு அடிமை, நிச்சயம் அதற்கு நானும் விதிவிலக்கல்ல.. எனக்கு நிறைய பிடிக்கும் எது எதுன்னு பிரிச்ச சொன்னா நிறைய சொல்லாம், அதைப்பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் நான் இப்போது சொல்லும் என் அமிர்தம் நிச்சயம் எனக்கு மட்டுமல்ல நம்ம ஊரில் 80 சதவீத பேர் இந்த உணவிற்கு அடிமைதான் என்று அடிச்சு சொல்லாம்... அது என்னான்னா...

தலை வாழை இலையில் சூடாக சாப்பாட்டை போட்டு ரசம் (புளி அல்லது தக்காளி) மொத்தத்தில் ரசம் ஊத்தி நன்றாக சாப்பாட்டை பிசைஞ்சு ரசம் நிறைய ஊற்றி அப்படியே வலிச்சு வலிச்சு கையில் உள்ள ரசமும் சாப்பாடும் மிக்ஸ் ஆன கலவையை உறிஞ்சி பாருங்க...

அப்படியே நாவில் நிற்கும் இந்த காம்பினேஷன்...
இது அமிர்தம் தேவாமிர்தம் என்று கூட சொல்லாம்..

Wednesday, March 25, 2015

புடவை செலக்ட் செய்வது கஷ்டம்தானுங்க...

பொஞ்சாதிக்கு பிறந்தநாள் அன்றைக்கு தீடீர் இன்பம் கொடுக்கலாம் என்று முடிவுசெய்து என்ன பரிசு கொடுக்கலாம் என்று பரீசீலித்தேன். பெண்களைப் பொறுத்த வரை தங்க வைர ஆபரணங்களை பரிசாக கொடுத்தால் தான் மிக சந்தோசமாக இருப்பார்கள் ஆனால் அந்த அளவிற்கு எனக்கு படஜெட் இல்லை, வேறு என்ன வாங்கிக்கொடுத்தால் குதுகலமாக இருப்பார்கள் என்று என் களிமண் மண்டையை கவுட்டி கவுட்டியாக யோசிக்க வைத்தேன் கடைசியாக முடிவுக்கு வந்தேன். இவளுக்கு மட்டுமல்ல இவளை பார்க்கும் எல்லோரும் இதைப்பற்றி பெருமையா பேசவேண்டும் என்று புடைவை வாங்கிகொடுக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

புடவை வாங்கலாம் ஆனால் வாழ்க்கையில் மிக முக்கியமானது பட்ஜெட் தானே, சரி என்ற அடுத்து 3 மாதங்களுக்கான செலவை கணக்கிட்டேன், ஆனால் பட்ஜெட்டில் ஓட்டை விழுந்தது. சரி வாயக்கட்டி வயித்தக்கட்டி பட்ஜெட்டை அதிகமாக்கிடலாம் என்று முடிவுக்கு வந்தேன். இந்த இடத்தில் வாயைகட்டி வயித்தைக்கட்டி என்றால், ஓட்டலுக்கு போய் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற முடிவெடுத்தேன், அடுத்து வயித்தக்கட்டி என்பது அப்படியே தவிர்க்க இயலாமல் போய்விட்டால் எப்பவும் வரும் பில் தொகையை விட பாதியாக வருமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து என் சக்திக்கு மீறிய ஒரு பட்ஜெட்டை ஒதுக்கிவிட்டேன்.

புடவை வாங்கலாம் சரி எங்க வாங்கலாம் என்று அதற்கு தனியாக மூளையை மீண்டும் கவுட்டி கவுட்டியாக யோசிக்கவிட்டேன். பல இடங்களை என் கண் முன் நிறுத்தியது என் மூளை. முதலில் நங்கவள்ளி, வனவாசி பட்டு எடுக்கலாம் என்று முடிவு செய்து ஊருக்கு சென்ற போது யாருக்கும் தெரியாமல் தோழனை அழைத்துக்கொண்டு நங்கவள்ளி சென்றேன். வழி நெடுக தென்னை மர நிழலியே சென்று அந்த ஊருக்க போய் நிறைய கடைய பார்த்தேன் அப்போதும் என் மனசுக்கு எதுவுமே பிடிக்கல. பிடிக்கல என்பதை விட நான் எதிர்பார்த்தது இல்லை, தலையை தொங்கபோட்டுட்டு மீண்டும் ஊரு வந்து சேர்ந்தேன்.

அடுத்து கோவைக்கு அருகில் உள்ள சிறுமுகைக்கும், சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டாம்பாளையத்துக்கும் சேலை வாங்க போனேன் ஆனாலும் நான் எதிர்பார்த்த சேலை இல்லை, பரவாயில்லை என்று ஒரு நாலு சேலை எடுத்து வந்தேன். அதை வீட்டுக்கு கட்டிலுக்கு அடியுல் ஒளித்து வைத்துவிட்டு, மனதுக்கு பிடிச்ச நடிகை எல்லாம் எப்படி சேலை உடுத்துறாங்கன்னு மனச அலை அலை என்று அலைய விட்டேன்.

ஒரு கட்டத்தில் சாலையில் மிக அழகாக புடவை கட்டி வந்த ஒரு பெண்மணியை ரொம்ப பிடிச்சிருந்தது சத்தியமாக புடவை மட்டும் தாங்க புடிச்சிருந்தது. அவரிடம் சென்று எப்படி அழைப்பது என்று தவித்தேன் கடைசியில் அக்கா என்றழைத்து இந்த புடவை எங்க வாங்கியது என் மனைவிக்கு எடுக்கனும் சொல்லுங்களேன் என்றதும், அந்த அக்கா சிரித்துக்கொண்டே இது நெகமம் பட்டு என்றது இதற்காக நெகமத்துக்கு அழைய முடியாது என்று கோவையிலேயே எங்க எடுக்கலாம் என்று விசாரித்தேன்.

ஆனால் இப்ப தாங்க தெரியுது ஒரு புடவை எடுக்க தேவையில்லாமல் 4 புடவை எடுத்துவிட்டேன் ஆனாலும் மனசுக்கு பிடிச்ச புடவை கிடைக்கலீயே என்ற வருத்தம் தான் அதிகம் இருந்தது.

புடவைக்கடைக்கு போனா பொண்ணுங்க ஆதிக நேரம் தேடி தேடி கடைசியில் மனசுக்கு பிடிச்சும் பிடிக்காமலும் ஒரு புடவை எடுக்க எம்புட்டு நேரம் ஆகிறது என்பதை அறிய முடிந்தது.

கோவையிலேயே சென்னை சில்க்சில் ஆரம்பித்து, ஸ்ரீதேவி, போத்தீஸ், பிஎஸ்ஆர்  என கடை கடையா ஏறி சுத்தினாலும் அந்த புடவை கிடைக்கல. சரி இப்படியே போனா புடைவ எடுக்க முடியாது அப்புறம் பிறந்தநாள் போய் பொங்கலே வந்துடும் என்று புடவைக்காக அழை அழை என்று அழைந்து கடைசியா மஹாவீர்ல புடிச்சங்க அந்த அழகான புடைவையை, வாயக்ட்டி வயித்தக்கட்டி சேர்த்து வைத்த பணம் எல்லாம் கொடுத்தாலும் புடவை அம்சமாக இருந்தது.

இதில் சிறப்புஅம்சமே என்றாலும் நான் எடுத்த புடவையை எனக்கு வேண்டும் என்று இரண்டு அழகு ஆண்ட்டிகள் என்னிடம் வந்து கேட்டதில் தான் சந்தோசம், ஆனந்தத்தில் மஹாவீரில் இருந்து கீழே கிராஸ்கட் ரோட்டில் குதிக்கலாமான்னு இருந்துச்சு.. அப்படி ஒரு மகிழ்ச்சி.

புடவை எடுத்த காசுல கால் பங்கு கொடுத்து பிளவுஸ்ம் தெச்சு, பொறந்தநாள் அன்னிக்கு பொஞ்சாதிக்கு கொடுக்கும் போது செம்ம சந்தோசம் !!

இருக்காதா பின்ன எச்சை கையில் காக்கா ஓட்டாத பையன் இம்புட்டு செலவு செய்து புடவை எடுத்து கொடுத்தா மகிழ்ச்சியாத்தானே இருக்கும். சரி எதுக்கு இம்புட்டு செலவுல எனக்கு புடவைன்னு ஒரு கேள்வி, எல்லாம் உனக்காகத்தான் இந்த வருசம் ஸ்பெசல் என்று ஒரு பிட்ட போட்டுட்டு மனசுக்குள்ள நெனச்சேன், சோழியும் குடுமையும் சும்மா ஆடுமா, பசங்களோடு கோவா டூர் திட்டம் போட்டு இருக்கேன்னு, நேரம் வரும் போது கப்புனு சொல்லனும்ன்னு முடிவு செய்துட்டேன்...

புடவை கட்டிகிட்டு வேலைக்கு போய் வந்த மனைவி  சந்தோசமாத்தான் கோயிலுக்கு போகலாம், அங்க போகலாம்ன்னு பேசிகிட்டு இருந்தா, நான் தான் வாய வெச்சிகிட்டு இருக்காமல் ரெண்டு கடலைய போட்டு மென்னுகிட்டே அப்புறம் என்ன சொன்னாங்க உன் தோழிகள் எல்லாம் கேட்டது தான் மீதி. அடப்போங்க ஒருத்தங்க பார்டர் பெரிசா வெச்சா நல்லா இருக்கும்ங்குறாங்க, ஒருத்தர் சின்னதா வெச்சா நல்லா இருக்கும்ங்குறாங்க, இன்னொருத்தர் அந்த கலர் இருந்தா நல்லா இருக்கும்ங்குறாங்க, ஆனா யாருமே நல்லா இருக்குன்னு சொல்லலீங்க ஆனா கருத்து மட்டும் சொன்னாங்கன்னு பொசுக்குன்ன சொல்லிட்டா.

அடப்பாவி தோழிகளே இது உங்களுக்கே நியாயமா கஷ்டப்பட்டு  துணி எடுத்து கொடுத்தேன், இப்படி பொசுக்குன்னு கருத்து சொல்லாமா போய்ட்டீங்களே, இனி எப்படி நான் கோவா போறது???

Wednesday, March 18, 2015

பயணங்கள்...

நீண்ட நாட்களுக்கு பின் நண்பர்களை சந்திக்க ஈரோடு செல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டியதும் சித்தாரில் இருந்து ஈரோட்டுக்கு பேருந்தில் செல்லவேண்டும் என்று முடிவு செய்ததேன் அதுவும் ABT யில் தான் போக வேண்டும் என சொல்லியது என் மனது. ஓரு காலத்தில் ரெகுலராக பயணிக்கும் பேருந்து என்பதால் எப்போதும் அதில் தான் பயணிக்கவேண்டும் என சொல்லும் மனது.

ஊருக்குள்ளே பால்ய நண்பர்களோடு பேசியதில் பொழுது போனதே தெரியவில்லை. எங்க ஊரில் அதிகம் பயன்படுத்தப்படும் மைலம்பாடி ஆட்டுக்கறியை காலையிலேயே ஒரு தாக்கு தாக்கியதால் அது ஜீரனமாகும் அளவிற்கு நாயம் அரங்கேறும் வெங்கிடு அண்ணா டீக்கடை அருகே. ஈரோடு எப்படா வருவாய் என்று குஞ்சான் போன் செய்ததுதான் ஞாபகம் வந்துது ஐய்யயோ நேரம் ஆச்சு என்று..

ஊர் நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டு அக்காவிடம் எல்லாம் பேசிக்கொண்டு இருந்த ஞாயத்தை மூட்டை கட்டி வெச்சிட்டு குளிப்பதற்கு துண்டை எடுத்துக்கொண்டு பொடக்காலிக்கு ஓடினேன். உள்ளே போய் காக்கா குளியல் தான் போடனும் என்றிருந்தேன் அப்போது தான் பொறி தாட்டியது, போகுவது ABT பஸ்ஸில் எப்படியும் நாலஞ்சு பிகருங்க வரும் என்று ஹமாம் சோப்பை ஒரு தடவைக்கு நாலு தடவை போட்டு கழுவு கழுவு என்ற கழுவினேன்.
சோப்பு தான் தீர்ந்தது கருவா மூஞ்சி அப்படியே தான் இருந்தது என்றாலும் ஒரு மன திருப்தி இன்னிக்காவது நம்மள யாராவது பார்க்கமாட்டாங்களா என்ற எண்ணம்தான்.

ஜீன்ஸ் பேண்டை மாட்டிகிட்டு, வெள்ளைச் சட்டைய போட்டு நெற்றியில் திருநீரோடு காத்திருந்தேன், பஸ் வந்ததும் ஓடி வந்து முன்னாடி படிக்கெட்டில் தொத்தினேன். படிக்கட்டில் தான் நின்று பயணம் செய்வேன் அப்போது எல்லாம், இன்னிக்கு கூட்டம் கம்மியாக இருந்ததால் உள்ளே போ என்ற உந்தப்பட்டேன், சைடு கன்டக்ட்டரால்.

எனக்கு முன்னே ஏறிய பெண் மல்லிகைப்பூ இரண்டு முழம் வெச்சிகிட்டு வந்திருந்ததால் மல்லிகை வாசத்தில் மெய் மறந்து ஒரு கம்பியில சாய்ந்துகிட்டு மல்லிகைப்பூவின் வாசத்தில் கிறங்கி நின்னேன்.

டிரைவர் சீட்டில் இருந்து கடைசி சீட்டு வரை அப்படியே ஒரு நோட்டாம் போட்டேன் எத்தனை விதமான மனுசன்கள், அழகான பெண்கள் அழுக்கான பெண்கள் என களை கட்டியது பேருந்து. கொட்டாய் விட்டு வரும் ஆண்கள். ஒரு சிறு குழந்தை பல்லே இல்லாமல் சிரிப்பு காட்டியதில் பாதி பேர் அதன் ரசிகர்களாகி இருந்தனர்.

டிரைவேர் அருகே உள்ள பேனட்டு மேல் ஒரு நடுத்தர வயது உட்கார்ந்திருந்தது, விட்டாரா டிரைவர் அந்த பெண்ணிடம் ஊர் நாயம் உலக நாயம் எல்லாம் பேசினார். பேருந்தில் பாடிய இளையராஜாவையும் மீறி கேட்கிறது அவர்களின் ஞாயம்.

ஒரு சீட்டில் குடுப்பமே தூங்க வழிந்தது. இரட்டை சீட்டில் வரிசையாக 3 ஜோடிகள் கண்ணுக்குளிராக ஈருஉடல் ஒரு உடலாக கடலையை வறு வறுத்துக்கொண்டு இருந்தனர். இதனால் நின்று கொண்டிருந்தவர்களின் வயிறு எல்லாம் எரிந்தது என்றால் அது மிகையாகாது, இதில் நானும் அடக்கமே.

கடை சீட்டுக்க பக்கத்தில் இரண்டு பேர் காதில் ஹெட் போனை மாட்டிகிட்டு பூம்பூம் மாடு போல தலையசைத்தனர்.
நடு சீட்டில் நடுத்தரவயதுக்காரர் விட்ட குறட்டை இளையராஜாவின் குரலுக்கு போட்டியாக அமைந்தது. இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு குடும்பம் கச்சிதமாக அமர்ந்திருந்தது. அந்த குடும்பத்தை பார்க்கும் போது நாளைக்கு எனக்கும் கண்ணாலம் ஆனா இப்படித்தான் அமைய வேண்டும் என்று கண்ணைத்திறந்து கொண்டே கனவு காண ஆரம்பித்தேன்.
மூன்ரோடு தான்டி டிரைவர் அடித்த டக்குன்னு பிரேக்கில் தான் கனவு கலைந்தது. அப்புறம் அப்படியே இந்த பக்கம் திரும்பி பார்க்கும் போது தான்  நான் நின்ற சீட்டில் இருந்து தள்ளி 2 பெண்கள் உட்கார்ந்திருந்தனர் கருப்பு தான் என்றாலும் மீண்டும் திரும்பி பார்க்க வைத்த முகலட்சனம். இப்பத்தான் புரிகிறது கருப்பின் மகிமை.

இன்னிக்கு ஈரோடுக்கு போறதுக்கு நல்லா பொழுது போகும், முடிஞ்சா ஈரோட்டு பஸ் ஸ்டேண்டில் பேர் கேட்கலாமா என்று கூட யோசித்தது மனது.

இந்த மனசு பாருங்க இன்னேறம் வரைக்கும் குடும்பத்தை யோசிச்சது இப்ப என்னடான்னா இந்த பொண்ணைப்பற்றி யோசிக்குது. அது அப்படியே இருக்கட்டும் என்று பார்வையை சுழட்டி சுழட்டி அடித்தேன், எந்த ரியாச்னும் இல்லை.ஒரு பக்கம் அஜித் ரேஞ்சுக்கு காதல் பார்வை, அப்புறம் ஒவ்வொருத்தர் ஸ்டைலையும் பயன்படுத்தி ஒரு லுக்கு விட்டேன், ம்கூம் கடைசியா வடிவேலு லுக்குகூட விட்டேன் ஒன்னும் நடக்கல.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் நம் பார்வை கரைக்கும் என்று கூவி கூவி பார்த்தேன் ஒன்னும் நடக்கல..

பவானி வந்ததும் கூட இருந்த பெண்ணோடு ஏதோ பேசிக்கொண்டு ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தாள். அப்ப அடிச்சுது பாருங்க ஒரு புயல் சுனாமியே தோத்துடும் போல இருந்தது மனசுக்கு.

பின்ன இருந்த கருஞ்சதைக்காரனை ஒரு பொண்ணு திரும்பி பார்த்தா அப்படித்தானே இருக்கும். அப்படியே மனசு பறந்தது, கூடவே நானும் பறந்தேன். இருக்கற சினிமா பாடல்கள் எல்லாம் கலந்து ஊட்டி டூயட் பாடவே போய்ட்டேன்.

அப்பதான் தீடீர் என் ஒரு குரல் தம்பி தம்பி வெள்ளை கலர் சட்டை தம்பி என்று ஒரு குரல் மிக வேகமாக சத்தமிட்டது. யாரையோ என்று நான் நினைத்து ஊட்டியில் இருந்து பைகாராவிற்கு போனது என் மனது.

யோவ் தம்பி உன்னத்தானய்யா கடைசி சீட்டூ காலியா இருக்கு அங்க போய் உட்காரு என்று சொன்னதும் பைகாராவில் இருந்து கீழே விழந்தது போல இருந்தது. திக்கு தெரியாமல் பேயடித்தது போல அந்த சீட்டை நோக்கி சென்றேன். ஏன்தம்பி நிக்கறீங்க வாங்க உட்காருங்க என்று நடத்துனர் சிரித்தார்.
அடப்பாவி மக்கா இப்பத்தான்டா பாத்தது அதுவும் ஓரக்கண்ணலே வாழ்க்கையில் முதல் தடவையாக டூயட் பாடினேன் இப்படி ஆகிடுச்சே என்று நினைக்கையில் கடைசி சீட்டு வா வா என்று அழைத்தது...

--
Sangkavi.....

அஞ்சறைப்பெட்டி 18.03.2015

ஒவ்வொரு முறையும் சொல்வதைத்தான் இந்த முறையும் சொல்கிறேன், மிக நீண்ட நாட்களாகிவிட்டது உங்களை எல்லாம் சந்தித்து, ஆனாலும் முஞ்சிபுத்தகத்தில் சந்தித்து கொண்டு தான் இருக்கின்றேன். 

வலைப்பதிவு போல இல்லை அங்கு. வலைப்பதிவாளர்கள் நிறைய பேர் நண்பர்களாக இருந்தும் முகப்புத்தகத்தில் எல்லோரையும் சந்திக்க இயலவில்லை என்பது தான் நிதர்சனம். அதற்கு மிக முக்கிய காரணம் வலைப்பதிவாளர்களை விட முகப்புத்தக நண்பர்கள் அதிகம் என்பது தான். 

எது எப்படியோ இது தானே நம் பொறந்த வீடு அதனால் இந்த வாரம் ஒரு உங்களை சந்திக்க வந்து விட்டேன். மீண்டும் மீண்டும் நிச்சயம் வருவேன்...

**************************

சில நாட்களுக்கு முன் கோவை விழாவைக்காக செல்லும் போது பாலசுந்தரம் சாலை வழியாக சென்றேன் அப்போது வழி எங்கும் நிறைய பேர் உறங்கிக்கொண்டு இருந்தார்கள் சில இளைஞர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். என்னடா இது இந்த பனியிலும், கொசுக்கடியிலும் இங்கு உறங்குகின்றார்களே என்ற சந்தகத்தோடு நிகழ்ச்சியை காண சென்றேன்.

நிகழ்ச்சி முடிந்து திரும்ப அவிநாசி சாலை வழியாக வரும்போது நிறைய பேர் காவல் பயிற்சி பள்ளியை ஒட்டி ரெசிடென்சி ஒடடல் வரை வழியெங்கும் அதே கொசுக்கடியிலும், பனியிலும் உறங்கிக்கொண்டு இருந்தனர். வண்டியை மெதுவாக்கி நின்று கொண்டு இருந்த இளைஞர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். இன்று காலை நடக்கும் உடற் தேர்விற்கு வந்தவர்கள் என அறிந்தேன். வேலைக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு தேர்விற்கு வந்தவர்கள் எல்லாம் தேர்வு பெற வேண்டும் என வேண்டுவோம்...


**************************


செய்தித்தாளில் கோவையில் நடந்த ஒரு நிகழ்வைப் படித்து ரொம்ப நொந்து போனேன் காரணம் விபச்சார ரைடில் கைதான 3 பெண்களும் தற்போது படித்துக்கொண்டு இருப்பவர்கள். ஒவ்வொருவரும் சொல்வது ஒரு காரணம் இதில் மிக கேவலமானது தன்னை மிரட்டி பணம் பறிக்கும் காதலனால் விபச்சாரத்துக்கு போனது ரொம்பவே பாதிக்கிறது.

காதலிக்கும் போது காதலனுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்ததால் இந்த வினை. இந்த கால பெண்களுக்கு அதுவும் படித்த பெண்களுக்கு ஒரு பிரச்சனையில் சிக்கினால் அதில் இருந்து வெளியே வரத்தெரியவில்லை என்றால் தன் பெற்றோரிடம் உண்மையை சொல்லி இருந்தாலாவது நிச்சயம் காப்பாற்றி இருப்பார்கள்.

தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதிவும் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தேவை இல்லாத பயம் காரணமாக இன்று இப்படி ஒரு பழி சொல்லுக்கு ஆளான அந்த பெண் மேல் பரிதாபப்படுவதா? அந்த பெண் செய்த தவறுக்கு தண்டனை என்பதா? படித்திருந்தும் விழிப்புணர்வு இல்லை என்பதா? இப்படி பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் போகலாம்.

இவள் தான் அந்த பெண் என்ற அறிந்தவர்களுக்கு, நிச்சயம் இந்த சமூகம் மீண்டும் அதே பாதையில் தான் தள்ளும்.
 
**************************
 
மகளிர் தினத்துக்கு மகளிருக்கு விடுமுறை விட்டு அவர்களை அன்று கொண்டாடவேண்டும் என்பது எல்லாம் சரி தான். அதற்காக காத்தால இருந்து சமைச்சு, வூட்டப்பெறுக்கி, சமைச்ச பாத்திரத்தை எல்லாம் நீ தான் கழுவனும் என்று எல்லா வேலையையும் என் தலையில சாத்தி வேலை வாங்குவது நியாயமா? என்று கேட்டால் ஆண்கள் தினத்தன்று நீங்க ஜாலியா இருங்க அன்னிக்கு வூட்டுல நீங்க என்ன வேலை செய்யறீங்களோ அதை எல்லாம் நான் செய்கிறேன் என்று பன்னு கொடுத்து பக்குன்னு உட்கார வெச்சிட்டாங்க நேத்து என் தங்கமணி...
 
 **************************
 
குழந்தையின் உணவு விசயத்தில் மிகுந்த அக்கறை இல்லாமல் தான் இருப்பேன். பசிச்சால் சாப்பிடுவான் அவனை ஏன் தொந்தரவு செய்கின்றீர், என வீட்டில் உள்ளவர்களை சத்தமிடுவேன். செல்ல மகனோ அவனுக்கு பிடிச்சதை சாப்பிடுவான், அவனை அவன் போக்கில் விடுங்க குழந்தைக்கு என்ன ஆகப்போகிறது என்று தான் எப்போதும் பேசுவேன்..

சத்தான ஆகாரங்களை சாப்பிட்டாலும், எல்லா ஆகாரங்களிலும் எல்லா சத்தும் கிடைப்பதில்லை. பழங்கள் சாப்பிட அவனுக்கு பழக்கும் போது மாங்காய் மட்டும் தான் அவனுக்கு பிடித்தது என்பதால் எப்போதும் மாங்காய் வாங்கி தருவேன். பின் கமலா ஆரஞ்சு சாப்பிடுவான். அதுவும் அவனுக்கு பிடித்திருந்தால் அல்லது மூடு இருந்தால் தான் சாப்பிடுவான். நாங்களும் கட்டாயப்படுத்துவதில்லை.

குழந்தை ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற கனவு எல்லா பெற்றோரை போல எனக்கும் உண்டு. நான் சாப்பிடும் ஆகாரங்களை சாப்பிட பழக்குவேன், அதன் அருமை பெருமைகளை கூறுவேன் ஆனாலும் என் மகன் அதை எனக்கு வேண்டாம் என்று தான் ஒதுக்குவான்..

நேற்று என் கனவில் மண்ணை போடும் நாள் என்று நான் சற்றும் கூட எதிர்பார்க்கவே இல்லை, ஆம் அவனது பள்ளி ஆசிரியை தங்கள் மகன் கடந்த 10 நாட்களாக சரியாக எழுதுவதில்லை, எப்போதும் நன்றாக எழுதுபவன் தற்போது எழுத மறுக்கிறான் என்றார்கள். எனக்கு என்னமோ அவனின் பார்வை குறைபாடு உள்ளது போல இருக்கிறது மருத்துவரிடம் பாருங்கள் என்றார்.

ஆரோக்கியமாக வளர்த்தவேண்டும் அவனுக்கு பிடித்த விளையாட்டை விளையாட வைக்க வேண்டும் என்று இருந்த கனவெல்லாம் பொய்த்தது போல இருந்தது. அதை விட எங்கள் வீட்டில் யாருக்கும் கண் பிரச்சனை சுத்தமாக இல்லை இந்த 5 வயதில் பார்வை குறைபாட? என என்னை அறியாமல் கண்ணீர் தான் வந்தது.

மாலை மருத்தவரிடம் சென்றால் ஆம் பார்வை குறைபாடு தான் வைட்டமின் A குறைபாடுதான். கண்ணாடி போட வேண்டுமா? இல்லை உணவில் சரிபடுத்த முடியுமா? என்று மருந்து ஊற்றிதான் பார்க்கவேண்டும். சனி ஞாயிறுகளில் வாங்க என்று அனுப்பிவிட்டார்கள்..

ஒழுங்காக உணவுப்பழக்கத்தை பழக்கப்படுத்தி இருந்தால் இன்று இந்த நிலை வராது தான். மருத்துவ தொழில்நுட்பம் நிறைய வளர்ந்து விட்டது பார்க்காம் இனி என்ன நடக்கும் என்று...

இந்த வயதில் கண்ணாடியா என்று கலங்கிக்கொண்டு இருக்கிறேன்.. வைட்டமின் A பிரச்சனை தான் ஆகாரத்தில் சரி செய்திடலாம் என்று மருத்துவர் சொல்வார், சொல்லவேண்டும் என்று எல்லா கடவுளையும் பிராத்திக்கிறேன்.

 **************************
 
சிக்னலில் நின்று பிச்சை எடுப்பவர்கள் மேல் பரிதாபம் வராது, நல்லாத்தானே இருக்கிறான் உழைச்சு சாப்பிட்டால் என்ன என்று தோன்றும், அதுவும் மிக வயதானவர்களாக இருந்தால் வண்டிகளின் இடையில் புகுந்து வந்து பிச்சை கேட்கும் போது கோபம் தான் வரும். சிக்னல் போட்டால் என்ன ஆவதுன்ன யோசிக்கவே மாட்டேன் என்கின்றனரே என்று.

சிக்னலில் பிச்சை கேட்பதற்கு பதில் சின்ன சின்ன விளையாட்டுப்பொருட்களை விற்பனை செய்வார்கள் இது கூட பரவாயில்லை என்று தோன்றும், பிச்சை எடுப்பதற்கு பதில் உழைக்கிறார்களே என்று.

இரவு 7 மணி இருக்கும் வீட்டிற்கு வந்த உறவினர்களை வழிஅனுப்ப லஷ்மி மில் பேருந்து நிறையத்தில் நின்று கொண்டு இருந்தேன். சிக்னலில் பொம்மை விற்கும் பையன் ஒரு உயர்தர காரை துரத்திக்கொண்டு ஓடினான், அந்த கார் நிற்காமாலே சென்று விட்டது. பின்பு திரும்பி வந்த பையன் திட்டிக்கொண்டே வந்தான். என்ன என்று பார்த்தால் 3 பொம்மைகள் வாங்கி உள்ளனர் காரில் உள்ளவர்கள் ஆனால் பணம் எடுப்பதற்குள் சிக்னல் விழுந்துவிட்டது. பரவாயில்லை என்று வண்டியை கொஞ்ச முன் சென்று ஓரம் கட்டி பணம் கொடுத்திருந்தால் மனிதாபிமானம் மிக்கவர் என்று சொல்லலாம்.

சிக்னல் போட்டதே போதும் என்று அந்த 3 பொம்மைக்கும் பணம் கொடுக்காமல் செல்லும் இந்த உயர்தர காரில் சொகுசாக பயணிக்கம் இவர்களை என்ன சொல்ல... பிச்சை எடுப்பதற்கு பதில் உழைத்து வாழ நினைக்கும் இவர்களை இந்த மாதிரி செய்வதால் தான் அவர்கள் விரக்திக்கு சென்று மேலும் தவறுகளை செய்ய உந்துகிறார்கள்..

Tuesday, March 3, 2015

துடிக்கிறேன் பாஸ், துடிக்கிறேன்...

மகனை பள்ளியில் இருந்து மதியம் அழைத்து வந்தேன். மதிய நேரம் எனக்கு கொஞ்சம் அவரச நேரம் தான், மகனை வீட்டில் இறக்கி விட்டு பின் அலுவலகம் செல்லவேண்டும். எனக்கு ஒதுக்கிய மதிய உணவு நேரத்திலேயே இதை செய்யவேண்டும் என்பதால் மிக அவசர நேரம் என்று கூட சொல்லலாம்.

எப்போதும் போல அன்றும் பள்ளியில் இருந்து பிரசன்னாவை அழைத்துக்கொண்டு அவிநாசி சாலையில் நுழைந்தேன். அண்ணாசாலை சிக்னலில் இருந்து அதி வேகமாக செல்லும் உலகப்புழ்பெற்ற கார்களுடன் போட்டி போட இயலாமல் எப்போதும் எனது யமஹா 60 கிலோ மீட்டர் வேகத்தை மட்டுமே தொட்டுச் செல்லும், எனக்கும் அது தான் பிடிக்கும். உடன் வரும் ஸ்கூட்டி பெப்களும், மகனின் தோழிகளை அழைத்து வரும் ஆட்டோக்கள் என இருவரும் பராக்கு பாத்துக்கொண்டு தான் வருவோம்.

இது அத்தனைக்கும் நடுவில் எமனை அவ்வப்போது காண்பது போல எமன் வடிவில் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு செல்லும் தனியார் பேருந்துகள் கண் மூடி கண் திறப்பதற்குள் காணமல் சென்று விடும்.

இந்த சம்பவங்கள் எல்லாம் தினமும் நடக்கும் ஒன்று தான். ஆனால் அன்று எங்கள் வண்டி ரெசிடென்சி ஓட்டலை தாண்டி வருகையில், குப்புசாமி நாயுடு சிக்னலில் பச்சைவிளக்கு 10,9,8,7,6,5, என்று குறைந்து கொண்டே வர வர எனது வண்டி அன்று 60வதை தாண்டி வேகம் எடுத்தது.

சிக்னலை நான் தொடும் முன் மஞ்சள் விளக்கு எரிய ஆரம்பித்தது, ஆனாலும் நான் வண்டியை முடுக்கி சிகப்பு விளக்கு எரியும் போது சிக்னலை கடந்துவிட்டேன், அந்த ஆனந்தத்திலேயே லஷ்மி மில் சிக்னலை அடைந்தேன்.

எப்போதும் எதையாவது பேசும் பிரசன்னா, அன்று சிக்னலில் நிற்கும் போது அவனது ஆட்டோ தோழிக்கு டாட்டா காண்பித்துவிட்டு என்னிடம் பேச ஆரம்பித்தான்..

அப்பா, அப்பா !

என்ன தங்கம், சொல்லு !

ஏம்ப்பா, yellow light எரியும் போது வண்டியின் வேகத்தை குறைத்துவிட்டு, Red Light எறியும் போது வண்டியை நிறுத்தத்தானே வேண்டும்??

ஆமாம் தங்கம், இப்ப மஞ்சள் விளக்கு எறியும் போது, வண்டியை தயாராக வைத்துக்கொண்டு, பச்சை விளக்கு எறியும் போது புறப்படனும் !

அது எனக்கு தெரியும்பா !!

அம்மா நிறைய தடவை சொல்லிருக்கு, ஸ்கூல்லியும் எங்க மேடம் சொன்னாங்க...

குட் குட்.. சமத்துடா என் செல்லம்...

அப்பா?

என்னடா?

நீ எதுக்கு அங்க மஞ்சள் லைட் போடும் போது வண்டிய மெதுவாக்காமால், சிகப்பு விளக்கு எரியும் போது வேகமாக வந்தாய்

அது வந்து தம்பி...

அப்பா சொல்லுப்பா? நீ எதுக்க வந்த?

அட இருப்பா சிக்னல் போட்டாச்சு, போகலாம் என்று அவனிடம் இருந்து தப்பவேண்டும் என்று வண்டியை எடுத்து ஏர்டெல் ஆபிசில் சந்தில் விட்டு,  வீட்டை நோக்கி வந்தேன்...

அப்பா எதுக்கப்பா சிக்னல்ல தாண்டி வந்த ??

அது பிரசன்னா, என்று மழுப்பிக்கொண்டே, இவனிடம் பொய் சொல்வதா? இல்லை தப்பு என்பதா? அவசரத்தில் வந்துவிட்டேன் என்று சொல்வதா? என ஒரே மண்டக்குழப்பம் !!

பதில் சொல்லவில்லை என்றால் விடமாட்டான் என்பதால் யோசித்தேன். கடைசியில் உண்மையை சொல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்...

தம்பி பிரசன்னா, அப்பா செய்தது தப்பு தான், அவசரத்தில் வந்துவிட்டேன், இனி வரமாட்டேன் என்றேன்..

தப்பு தானே ??

ஆமாண்டா !!

நான் தப்பு செய்தா மட்டும் அடிக்கி வர, இப்ப உன்னைய யாரு அடிக்கவருவாங்க?

சரி வீடு வந்திட்டது, நாம் மாலை பேசலாம், நான் ஆபிஸ் போகிறேன் என்ற இறக்கி விட்டேன்.

அவனது புத்தக பையையும், சாப்பாட்டு பையையும் எடுத்துக்கொண்டு, இன்னிக்கு சாப்பிட்டானா? இல்லையா? என்ற கவலையில் சாப்பாட்டு பையை பிரித்து பார்த்தேன்...

அப்பா, நீ தப்பு செய்தாய்யல்லவா? இந்த வாங்கிக்க, என்று அவனது கைவிரல்களை மடக்கி குத்துச்சண்டை பாத்து பழகி அதே போல் கையை வேகமாக இறக்கினான் என்னை நோக்கி...

அவன் உயரத்துக்கு அவன் இறக்கிய இறக்கு சரியாக என்னை தாக்கியது...

என் அடிவயிருக்கும் கீழ்...

நீங்க நினைக்கிற அதே இடம் தான் பாஸ்... ரெண்டு நாளா துடிக்கிறேன் பாஸ், துடிக்கிறேன்...

Monday, January 19, 2015

DJHSS Gobi - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இந்த காணும் பொங்கல் எனக்கு மறக்க முடியாத காணும் பொங்கல் என்றால் அது மிகையாகது. ஆம் 1996ம் ஆண்டு கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் எனது பள்ளி பருவத்தை நிறைவு செய்தேன். அதன் பின் அந்த சாலையில் செல்லும் போது அந்த பள்ளியையும், படித்த நாட்களையும் நினைவு கூர்வதோடு சரி. பள்ளி படிப்பில் கூட இருந்த நண்பர்கள் வட்டம் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே சென்றது என்பது தான் உண்மை.
நிறைய பள்ளியிலும், கல்லூரியிலும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்று செய்தி வரும்போது எல்லாம் மனதில் தோன்றும், நாம் என்று இப்படி சந்திக்க போகிறோமோ என்று. சமூக வலைத்தளங்களுக்கு வந்த பின் பள்ளியின் நண்பர்களை எல்லாம் தேடுவேன் அப்படி தேடிம்போது ஆர்குட் காலத்திலேயே நண்பர் ஆக்கியது கோடீஸ்வரன் என்னும் நண்பரைத்தான்.
நண்பன் ரவிசங்கர் நீண்ட நாட்களாக சமூகவலைத்தளம் வழியாக பழக்கம் அவர் தான் அசோக் என்ற நண்பர் வாட்ஸ்அப்பில் ஒரு குரூப் தொடங்கி உள்ளார் நம் 1996 பேட்ச் நண்பர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிறார் என்று சொன்னதுடன் என்னையும் அதில் இணைத்தார். வாட்ஸ்அப்பில் இருந்து டெலகிராம் மாறிய உடன் 25 நண்பர்களாக இருந்த நட்பின் எண்ணிக்கை 100 தொட்டது.
கடந்த 2 மாதங்களாக நண்பர்கள் டெலிகிராமில் பேசிய பேச்சு அளவிடமுடியாதது அதே போல் ஒவ்வொன்றையும் படிக்க படிக்க 1996 ஆம் ஆண்டிற்கே போன மன திருப்தி. நம் பள்ளியில் தற்போது பணிபுரியும் செந்திலை எனக்கு முதலில் முகம் சரியாக ஞாபகத்திற்கு வரவில்லை. அங்கு பேசும் போது தான் கவுந்தப்பாடி மாரப்பா தியேட்டருக்கு படம் பார்க்க சென்று விட்டு பின் பேருந்துக்கு பணம் இல்லாததால் அங்கிருந்து கோபி வரை நடந்து வந்தோம் என்ற தருணம் ஞாபகம் வந்தது.

டெலிகிராம் பேச்சு பேச்சோடு முடியவில்லை அசோக்கின் சீரிய முயற்சியில் முபாரக், தியாகு, கணேசன் போன்ற நண்பர்களின் உறுதுணையால் 17ம் தேதி சந்திப்புக்கு தேதி குறிக்கப்பட்டது. இந்த சந்திப்பு எப்படி இருக்கும் என்று அப்போது எல்லாம் கற்பனைக்கு கூட நான் செல்லவில்லை. எப்படியும் கோபியில் எங்காவது சந்திப்போம் ஒரு 25 பேர் இருப்போம் என்றிருந்தேன்.

அதன் பின் அவ்வப்போது தான் டெலிகிராம் வருவேன், ஆப்போது பார்த்தால் ஷனவாஸ், விநோத், ரபி, சசி, GSK மற்றும் நண்பர்கள் ( நிறைய பேர் பேரை விட்டுட்டேன் மச்சி கோவிச்சுக்காதீங்கடா) எல்லாரும் மிக பழகியவர்களை இவர்களின் பேச்சை தினமும் கேக்க முடியாமல் போனாலும் டெலிகிராமில் சந்திக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

நண்பர்களின் அற்புத முயற்சியால் 17ம் தேதி நடக்க இருக்கும் இந்த சந்திப்பிற்கு 100 பேருக்கு மேல் வருவதாகவும் அதனால் நிகழ்வை சீதா கல்யாண மண்டபத்தில் நடத்துவதாகவும் நண்பர்கள் சொன்னவுடன் மிக மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு மட்டுமல்ல அந்த 100 பேருக்கும்...
நண்பர்கள் அழகாக திட்டமிட்டு பாரியூர் மற்றும் பொங்கல் திருவிழா என்பதால் அனைவரும் ஊரிற்கு வரும் நாளாக பார்த்து 17ம்தேதியை செலக்ட் செய்ததே அற்புதம். சரி இவர்கள் சந்திப்பை எப்படி நடத்துவார்கள் என்ற ஆர்வம் அன்று முதல் 17ம் தேதி காலை வரை நீடித்தது.
சந்திப்பு 17ம் தேதிதான் ஆனால் நிகழ்ச்சி நடக்க ஏதுவாக இருந்த நண்பர்கள், பல நாட்கள் கண்விழித்து ராப்பகலாக அவர்கள் உழைத்த உழைப்பு, மூன்று நாட்களுக்கு முன்பாக சந்தித்த எனக்கு புரிந்தது.
மேடையில் ஓர் பெரிய பேனர், மண்டபத்தின் முன்பு ஒரு பேனர், வரவேற்பு, நாற்காலி, போட்டோ என ஏற்பாடுகள் முந்தைய இரவே நண்பர்களின் திட்டமிடல் அற்புதமாக முடிந்திருந்தது.

மிகவும் நெகிழ்சியான, மகிழ்சியான அந்த 17ம் தேதி காலை 9 மணிக்காக காத்திருந்தேன். முந்தைய இரவில் யார் யார் வருவார்கள், எப்படி இருப்பார்கள் யார் என்று ஒவ்வொருவரின் முகத்தையும் பார்ப்பதற்காக ஏங்கி காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். நண்பர்களின் யார் என்ன நிலைமையில் இருப்பார்கள், எங்கு இருப்பார்கள் என்பதை விட சந்தித்த பின் எண்களை பறிமாறிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உதித்துக்கொண்டே இருந்தது அன்று இரவு முழுவதும்.
17ம் தேதி காலை 7 மணிக்கே மண்டப வாசலுக்க வந்திருந்தனர் வரவேற்பு குழுவினரானர். இரவெல்லாம் கண்விழித்து காலை 7 மணிக்கு மகிழ்வாக வருவதே பெரும் முயற்சிதான்.
நண்பர்கள் மண்டபத்திற்குள் வந்த உடன் அவர்ளின் வருகையை பதிவு செய்து கொள்ள பேப்பர், பேனா, அவர்களின் விபரங்களை கொடுக்க விண்ணப்பம் உள்ளிட்டவை நண்பர்களிடம் கொடுத்தனர்.
அசோக் நிகழ்வை தொடங்கி வைக்க ஒவ்வொரு நண்பர்களம் தங்களைப்பற்றியான சுய விபரங்களை கூறி அறிமுகப்படுத்தினர். கிட்டத்தட்ட 110 பேர், ஒவ்வொருவரையும் ஆரவாரமாக நட்புக்கள் பேசிய பின் கைதட்டி மகிழ்வித்தது மிக்க மகிழ்சியாக இருந்தாது ஒவ்வொருவருக்கும்.
அடுத்து அசோக்  நாம் ஒன்றிணைந்து என்ன செய்ய போகிறோம், நம் சந்திப்பின் நோக்கம் சந்தோசம் மட்டமல்லாமல், ஏழை குழந்தைகளின் படிப்புக்கு நாம் எப்படி உதவ இருக்கிறோம் என்று முன் மாதிரி திட்டத்தை நன்றாக செதுக்கி இருந்தார். அது வந்திருந்த அணைவருக்கும் மிக்க மகிழ்வான ஒன்றாக இருந்தது ( இந்த திட்டம் பற்றி நாம் சங்கம் பதிவு செய்த உடன் விரிவாக எழுதுகிறேன்) உயர்வோம் உயர்த்துவோம் என்ற நம் வாசகம் இனி எங்கும் மறக்கா...
அடுத்து குருப்போட்டோ செல்பி போட்டோ என ஆள் ஆளுக்கு தங்களின் செல்போனில் படத்தை சுட்டுக்கொண்டு இருந்தனர். 
நிகழ்வின் இறுதியாக சாப்பாடு. மனிதன் போதும் என்று சொல்லும் ஒன்றே ஒன்று சோறு தான் என்பதை நண்பர்கள் முன்னாடியே திட்டமிட்டு திகட்ட திகட்ட சாப்பாடு போட்டு கொங்கு மண்ணின் பாரம்பரிய மிக்க விருந்தோம்பலை அட்டகாசமாக நிறைவேற்றி இருந்தனர். 
முதலில் சாப்பாடு வைத்த முபா இத்தனை வகைகள் உள்ளது என்று சொல்லாமல் சாப்பாடு வைக்க  நான் சாம்பார் நிறைய வாங்கி பாதி வயிறை நிரப்பி விட்டேன், அடுத்து மோர் குழம்பை கணேசன் ஊற்ற ஆஹா என நினைக்கும், புளிக்குழம்பு அடுத்து பச்சை பயிர், தட்டைபயிர், கீரை மசியல் என ஒவ்வொன்றாக இலையை பதம் பார்க்க, வயிற்றில் இடம் இல்லாமல் சுவையால் என் நாக்கு தடுமாறியது.
உண்டகளைப்பில் நண்பர்களோடு நினைவுகளில் அசைபோடு அடுத்து எங்கள் பள்ளிக்கு சென்றோம். ஒடோடி நின்று என் வகுப்பறையின் முன் படம் எடுத்து கொண்டேன் அம்புட்டு மகிழ்வு.
எனக்கு கணித ஆசிரியராகவும், விடுதி காப்பாளாகராகவும் இருந்தவர் தான் தற்போது தலைமையாசிரியர் அவரை பார்த்ததும் அவர் என்னை விளாசு விளாசியது தான் ஞாபகம் வந்தது. எனக்கு மட்டுமல்ல என் 9, 10 ம் வகுப்பு நண்பர்கள் நீ எப்படி எல்லாம் மாத்து வாங்கினாய் என்று சொல்லி உசுப்பேற்றினார்கள்.
அவரைபார்த்து, அவருடன் பேசி அவரும் எங்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி, கேக் வெட்டி மகிழ்வோடு திரும்பினோம்... நிச்சயம் அன்றைய நிகழ்வில் கலந்த எம் நண்பர்கள் அன்று இரவு நினைவுகளோடு அவர்களின் நெஞ்சமும் கலந்திருக்கும்....
(சந்தித்த, வந்திருந்த அனைத்து நண்பர்களின் பெயரையும் குறிப்பிட இயலவில்லை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்)


Monday, January 12, 2015

காணமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்...

இப்போது எல்லாம் கடிதங்கள் வருவது மிக குறைந்துவிட்டது. வங்கியின் ஸ்டேட்மெண்ட் மற்றும் பணபரிவர்த்தனைக்கான அட்டைகள் மட்டுமே கடிதங்களாக வருகின்றன அதுவும் கூரியரில் தான் வருகின்றது.
பொங்கல் அட்டைகளை வாங்க காசு சேர்த்த காலம் எல்லாம் உண்டு. கயித்து கட்டில் மேல் ஆயா மூட்டாய் கடையில், பவானி போய் பொங்கல் வாழ்த்து அட்டை வாங்கி வரும் அதற்கு காசு சேர்க்க ஆகும் ஒரு வாரம். சித்தப்பன், பெரியப்பன், அங்காளி பங்காளி எல்லாம் வீட்டை சுற்றி இருப்பதால்  பொங்கல் அட்டைகள் அனுப்புவது அதிகபட்சம் தாய்மாமாவிற்கும், தாத்தாவிற்குமாகத்தான் இருக்கும்.
25 பைசாவிற்கு பொங்கல் அட்டை வாங்கி அதில் 5 பைசா ஸ்டாம் ஒட்டி ஊருக்கு நடுவில் இருக்கும் தபால் பெட்டியில் போட்டு அதை தபால்காரர் எடுக்கும் போது பார்த்து பரவசம் அடையும் தருணங்கள் எல்லாம் மீண்டும் கிட்டா..
சித்தார் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் படிக்கம் போது தான் எனக்கு முதன் முதலாக பொங்கல் வாழ்த்து வந்ததாக ஞாபகம்.
தபால்காரர் வீட்டுப்பக்கம் வருகிறார் என்றால் அது கொளப்பலுரில் இருந்து என் தாத்தா அனுப்பிய பொங்கல் வாழ்த்தாகத்தான் இருக்கும். அதுவும் அந்த பொங்கல் வாழ்த்து கலர் அட்டைகளாலும், அதன் உள் ஒரு தாள் இணைத்து அதில் சில வாழ்த்து வரிகளை எழுதி அன்புடன் தாத்தா என்று அனுப்பி இருப்பார்.
பொங்கலுக்கு 2 நாள் முன் பள்ளிவிட்டு வந்ததும் அந்த வாழ்த்தை கையில் வைத்துக்கொண்டு பக்கத்து வீடு, எதிர்த்த வீடு மற்றும் கில்லி விளையாட அழைக்கும் நண்பர்கள் என ஒவ்வொருவரிடம் அதை காண்பித்து அதில் காணும் சுகத்திற்கு தான் எல்லையே இல்லை.
மேல்படிப்புக்காக பேருந்து ஏரி செல்லும் போது, அதுதாங்க 6, 7, 8 ம் வகுப்பு படிக்க பேருந்து ஏரி செல்லும் போது வாழ்த்து அட்டை பற்றி பேசுவோம். எங்கள் பள்ளியில் ஒரு தபால் பெட்டி வைத்து விடுவார்கள் அதில் நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பினால் அது அவர்களின் வகுப்பில் தினமும் மாலை கொடுத்துவிடுவார்கள்.
நமக்கும் எதாவது நண்பர்கள் அனுப்புவார்கள் என்று ஆசையோடு காத்திருந்த தருணம் அது. நமக்கு அனுப்பினால் அவர்களுக்கு திருப்பி நாம் அனுப்பவேண்டுமே என எங்கு நல்ல வாழ்த்து அட்டை கிடைக்கும் என்று விசாரித்த போது பவானி தனா புத்தக நிலையத்தில் தான் நல்லா கிடைக்கும் என்று அறிந்து, அதன் பின் ஒரு மாத காலமாக காசு சேர்த்து, வீட்டுக்கு தெரியாமல் கிருஷ்ண மூர்த்தியையும், பரந்தாமனையும் ஒரு ரூபாய் பஸ் சார்ஜ் போட்டு பவானி போய் கடைவீதியில் உள்ள தனா கடைக்கு சென்றால் நிறைய கலர் கலரான அட்டைகளை எதை வாங்குவது, எதை விடுவது என பேந்த பேந்த விழித்து கொண்டே பார்த்தேன்.
நடிகர்கள் படம் கொண்ட வாழ்த்து, முருகன், விநாயகர், சரஸ்வதி என பக்தி மயமான வாழ்த்து, அரசியல் தலைவர்கள் வாழ்த்து, ஜிகினா ஒட்டியது, உள்ளே விரித்தால் சாமி தெரியுற மாதிரி இருக்கும் அந்த வாழ்த்து, எம்ஜிஆர், கலைஞர், ரஜினி, கமல் போட்ட வாழ்த்து என புதிய உலகமாக இருந்தது அந்த வாழ்த்து அட்டைகடை.
நல்ல ஜிகினா உடன் உள்ள சரஸ்வதி படம் போட்ட ஒரு வாழ்த்து அட்டையும், எங்க தாத்தாவிற்கு அவருக்கு பிடித்த கலைஞர் படம் போட்ட வாழ்த்து அட்டையும் வாங்கிட்டு அடுத்த நாள் பள்ளி சென்றேன். முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என  என்றுமே எனக்கு வாழ்த்து அட்டை வரவில்லை. 
சரி யாரும் நமக்கு அனுப்பவில்லை என்றால் என்ன நமக்கு நாமே அனுப்புவோம் என்று ஜிகினா போட்ட சரஸ்வதியை எனக்கு நானே வேறு பெயரில் அனுப்பி காத்திருந்தேன் கையில் கிடைக்கும் வரை.
தேன்மொழி, கயல்விழி, புனிதா எல்லாம் வகுப்பில் உட்கார்ந்திருக்க எங்க ரவி வாத்தியார் என் பெயரை அழைத்து அந்த அட்டையை என்னிடம் கொடுக்கும் போது ஏற்பட்ட ஆனந்தமும், அதற்கு பின் தேன்மொழி அந்த அட்டையை கொடு பாத்துட்டு தருகிறேன் என வாங்கி பின் அவள் கையால் எனக்க கொடுத்தது இன்றும் நிழல் ஆடுகிறது அந்த ஆனந்த தருனம்...
இன்று டெக்னாலஜி வளர்ந்து வாழ்த்து அட்டை காணமல் போனது வருத்தமாக இருந்தாலும் அதன் நினைவுகள் சுகமானதே....