Sunday, April 19, 2015

சவரக்காரனின் கவிதை மயிருகள்...

ஒவ்வொரு கிராமங்களிலும் நிச்சயம் நாவிதன் இருப்பார்கள். நாவிதன் இல்லாத கிராமத்தை பார்ப்பது அரிது. குடிமகன்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் உயர் வகுப்பினரின் நிகழ்வுகளில் சாங்கியம், சம்பிரதாயம் என்ற சடங்குகளை செய்வார்கள். சாங்கியம் சம்பிரதாயத்துக்கு வைத்துக்கொண்டாலும் அவர்களின் வாழ்வாதாரம் சற்று சிறப்பாக இல்லை என்றே சொல்லாம்.

இந்த நாவிதர்களை பற்றி நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும், சிறுவயதில் தகரடப்பாவில் கத்தியும், கத்திரியும் கொண்டு வீடு வீடாக வருவார்கள், வீட்டு பின்னால் உட்கார வைத்து கதற கதற இருக்கும் முடிகளை ஒன்ட வெட்டுவார்கள். பின் காலம் மாற மாற  ஊருக்குள் ஓரு கடை வைத்து அதில் ஒரு சேர் முன்னாடி பின்னாடி பார்க்க கண்ணாடி, கடை முழுவதும் அரசியல் தலைவர்கள் படம், நிறைய செய்தித்தாள்கள் என அவர்களை அலங்கரித்திருக்கும். அவர்கள் கடைக்கு சென்று பேச்சுக்கொடுத்தால் உள்ளுர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

எனக்கு பார்பர்ஷாப் என்றதும் உடனே நினைவுக்கு வருவது அங்கு சுவரில் சிறைபட்டு இருக்கும் அழகிகளின் படங்கள் தான். மது கோப்பையை ஏந்தி தலை முடிகளை பறக்கவிட்டு, ஒரு கண்ணை ஓரமாக பார்த்து உதடை பிதுக்கும் அந்த அழகி தான் என் அப்போதைய கனவு கன்னி.

பத்திரிக்கைகள் அறிமுகம் ஆனாது எல்லாம் பார்பர்ஷாப்பில் தான். இப்படி நிறைய விசயங்கள் கூடவே இருக்கும். ஒரு கிராமத்தில் அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை அவரின் கோபத்தை அவருக்கு உரித்தே வகையில் அவர் சமூகம் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தோலுருத்திகாட்டி உள்ளார் இந்த சவரக்காரனின் கவிதை மயிறுகளில் கவிஞர் கலைவாணர்.

சில நாட்களுக்கு முன் திருப்பூர் குணா அவர்கள் கீற்று இணையதளத்தில் சவரக்காரனின் கவிதை மயிறுகள் என்று புத்தகத்தின் விமர்ச்சனத்தை எழுதி இருந்தார். அதில் கலைவாணனின் கோபமான உண்மையான வரிகளை பற்றி எழுதி இருந்தார், அதில் இருந்து இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று தேடிக்கொண்டு இருந்தேன்.

நேற்று முன் தினம் அண்ணன் அவைநாயகத்திடம் இருந்து இந்த புத்தகத்தை பெற்று இந்த வார இறுதி நாட்களை சவரக்காரனின் கவிதை மயிருகளிடையே பயணித்தேன். நீண்ட நாட்களுக்கு பின் வாசிக்கும் கவிதை புத்தகம் என்பது மட்டுமல்ல, ஒரே மூச்சில் படித்து முடித்த தொகுப்பும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிதன்
முண்டிதன்
இங்கிதன்
சங்கிதன்
நால்விதன்
தெரிந்தவனே நாவிதன்

என்ற நாவிதன் பற்றியான அவரின் அறிமுகத்திலேயே எழுந்து உட்காந்து விட்டேன்.

படிப்பு வரலைன்னா
உங்கப்பங்ககூட
செரைக்கபோக வேண்டியது தானே..

என்ற வரி அந்த இனத்தின் மாணவர்கள் பலர் தான் காதுகளில் இந்த வரியை கேட்டு பதில் சொல்ல இயலாமல், கோபத்தை எல்லாம் மனதில் போட்டு பூட்டி வைத்த வரியாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஊரில் யார் வீட்டிலாவது பெண்கள் சமைஞ்சுவிட்டாள், அவர்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் இவர்கள் பார்த்து பாத்து செய்கின்றனர். ஆனால் இவர்கள் வீட்டு பெண் சமைஞ்சதை யாரிடமும் சொல்லவில்லை என்று அவர்களின் ஏழ்மைநிலமையை பகிரங்கமாக பதிவு செய்திருக்கிறார்.

தன் சாதியை கலப்பு திருமணம் நடக்கும் இடத்தில் தன் சித்தப்பா சொல்லிவிடுவாறோ என்ற பயத்தை இப்படி சொல்கிறார்.

அடுத்த மாசம்
அக்கா மகனுக்கு
மெட்ராசுல கல்யாணம்
நாயக்காமாரு வீட்ல
பொண்ணு எடுத்திருக்கு

ஊர்ல இருந்து
ஓட்ட வாயரு
விஜயன் சித்தப்பாவும்
வருவாராம்

பொண்ணு வீட்டுகாரன்கிட்ட
அவரு என்ன சொல்வாரோன்னு
அக்கா ஊருபட்ட சாமிய கும்பிடுக..

தன் சாதியை தன் சாதி மக்களே  சொல்லிடுவாங்களோ என்று அந்த அளவிற்கு சாதியை அவர்களே கீழ்தரமாக பார்க்கின்றனர் என்பதை சொல்லி இருக்கிறார்.

வீடு சுத்தமாக வைத்திருப்பதை மற்ற சமூகத்தினர் எப்படி பார்க்கின்றனர் என்பதை இப்படி சொல்கிறார்

ஒரு நாள் வீட்டுக்கு வந்த
செட்டி தெரு ஸ்ரீமதி
சொல்லிட்டு போனா

மல்லிகாளுக்க அடுக்கள
நாசுவத்தி குடி மாதிரியா இருக்கு
பிராமணத்தி வீடு
தோத்து போயிரும்.

இறந்தவருக்கு செய்யும் சடங்கை சொல்லி அதன் முடிவை சொல்லும் போது நெகிழவைக்கிறார்

மது போதையில்
மாரடைத்து போன
பரமேஸ்வரன் நாயருக்கு

சவரம் செய்து
மூக்குச்சளி, குண்டி பீ துடைத்து
குளிப்பாட்டி பவுடர் போட்டு
கை கால்
பெருவிரல்கள் சேர்த்து கட்டி
உடை மாற்றி சென்ட் அடித்து

பிரதேசத்தை கருநீள  பெஞ்சில்
நீளமாக படுக்க வைத்து விட்டு
கொஞ்சம் அரிசியுடன் வந்தார் அப்பா

அன்னைக்கு ராத்திரி
வீட்டுல சோறு பூரா
பொண நாத்தம்...

இந்த கவிதை வரிகளை போகுற போக்கில் நிச்சயம் பார்க்க இயலாது. இறந்த பிணத்தை வாய் கட்டி பொட்டு வைத்து விரல் கட்டி நடு வீட்டில் போடும் வரை அனைத்தையும் செய்பவர்கள் நாவிதர்களே. அதைச்சொல்லி கடைசியாக அன்று இரவு சாப்பிடும் சாப்பாட்டு பொண நாத்தம் முடித்துவிட்டார். அறிவியல் பூரணமாக பார்க்கும் போது இதில் நிறைய தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் நிறைய இருக்கு, ஆனால் இன்று வரை பல இடங்களில் இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த கவிதை புத்தகத்தில் தன்னை மட்டுமல்லாமல் அப்பா, அம்மா, அக்கா தங்கை என குடும்பம் தவிர அரசியல், சாதியின் சமூக அவலங்கள் என ஒவ்வொன்றாக பிரிச்சு மேய்ந்திருக்கிறார்.

இவர் சவரம் மட்டுமல்ல பல தொழில்கள் செய்துள்ளார், பலவற்றில் அவமானப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். அக்குள், அடிவயிறு, முகம், தலை என ஒதுக்கப்படும் மயிருகளை வைத்து கவிதையாக பிணைத்துள்ளார். ஒரு காலத்தில் இவர்கள் சமூகம் பூர்வ குடி சித்த மருத்துவர்களாக வாழ்ந்துள்ளனர். காலப்போக்கில் மருத்துவத்தை பணம் உள்ளவர்கள் எடுத்துகொண்டு சவரத்தை மட்டும் இவர்கள் கையில் கொடுத்துவிட்டனர்.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை புத்தகத்தை முழுமையாக வாசித்து அதைப்பற்றி எழுதவும் என்னை துண்டி உள்ளது இந்த கவிதை புத்தகம். தன் சமூகத்தின் அவலத்தை கவிஞர் நம்முன் அடையாளம் காட்டி, தன் கோபத்தையும் கொட்டி உள்ளார்.

நாவிதர்களின் வரலாறு என்று நிறைய சொல்லலாம் ஆனால் அது வட்டாரத்துக்கு வட்டாரம் மிக மாறுபடும், கலைவாணர் அவர்கள் கூறியது அவர்களின் வட்டாரத்தை பற்றியானலும் இவர் சொன்ன பல சடங்கு முறைகள் எல்லா வட்டாரத்துக்கும் ஒத்து போகும்.

நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு தொகுப்பு. கவிதையை ரசித்து ரசித்து வாசிப்பவர்களுக்கு எல்லாம் இது ஒரு பொக்கிசம் என்பதை பதிவு செய்வதில் பெருமையடைகிறேன்.

92 பக்கங்கள்
விலை ரூபாய்- 75
கீற்று வெளியீட்டகம்
1/47ஏ அழகியமண்டபம்
முளகுமூடு அஞ்சல்
குமரி மாவட்டம்- 629167

4 comments:

  1. வணக்கம்
    புத்த விமர்சத்தை படித்த போது படிக்க தூண்டுகிறது அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறப்பான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  3. புத்தக ஆசிரியர் அய்யாவின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை நண்பா ?

    நல்லசிவம்

    ReplyDelete
  4. AYYA PLS ENAKKU INTHA BOOK VENDUM NAAN ENNA SEYYA VENDUM

    PLS CONTACT ME =9445944514
    sampathjayam55@gmail.com

    pls pls contact me

    ReplyDelete