Thursday, April 9, 2015

அஞ்சறைப்பெட்டி 09.04.2015

இந்த வாரம் தமிழ் சமூகத்திற்கு இழப்பான வாரம், இழப்புகள் ஒவ்வொன்றும் மீட்க முடியாதவை, எட்ட இருந்து பார்க்கும் நமக்கு அது செய்தியாகத்தான் இருக்கும், ஆனால் அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எவ்வழியிலும் ஆறுதல் சொல்ல இயலாமல் தவிக்கத்தான் வேண்டும்..

*************************

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச்சென்ற கூலித்தொழிலாளிகளை சுட்டுக்கொன்றுள்ளது ஆந்திர அரசு. இதன் மூலம் ஹைடெக் முதல்வர் என்று எல்லோராலும் அறியப்பட்டவர் என்ன சொல்ல வருகிறார் என்று தான் புரியவில்லை.

காட்டை அழிக்க சென்றார்கள் அதனால் சுட்டோம் என்கின்றனர். இவர்கள் வெறும் கைக்கூழிகள் தான் இவர்களை வெட்ட அனுப்பிய அந்த கொள்ளைக்கார கும்பல் தலைவனை இன்னும் பிடித்தாக தெரியவில்லை, முக்கியமாக சொல்லப்போனால் அம்புகளை சுட்டு வீரத்தை காண்பித்துள்ளனர் அம்பை எய்தவனை பிடிக்க முடியாமல். 

நிச்சயம் பெரிய பின்புலம் உள்ளவராகத்தான் இருப்பார் இந்த கும்பலின் தலைவன், மொத்தத்தில் பணம் படைத்தவனை காப்பாற்ற அப்பாவி மக்களை கூலித்தொழிலாளிகளை கொன்றள்ளனர். அப்பாவிகளை கொன்ற வீரர்களுக்கு என் கண்டனத்தை பதிவாக்குகிறேன்...

*************************



இந்த வாரத்தின் முக்கிய இழப்பு, முக்கியமாக தமிழ் இலக்கிய உலகில் எழுத்து உலகில் ஜேகே என்று கம்பீரமாக அழைக்கும் அந்த எழுத்து சிங்கம் ஜெயகாந்தன் அவர்கள். அவர் எழுதிய ஒரு பத்து கதைகளை மட்டும் தான் நான் இதுவரை படித்துள்ளேன். ஆனால் அவரின் எழுத்து வசீகரம் ரொம்ப ஈர்க்கிறது. படிக்க ஆரம்பித்தவுடன் முடித்து விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு அகலுவேன் அந்த அளவு ஈர்ப்பான எழுத்து.

இனி இவர் போல் இன்னொரு எழுத்தாளனை அடையாளம் காண்பது அரிது.

*************************

" இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை "  இப்போதும் இந்த கனீர் குரலை கேட்டுக்கொண்டுதான் எழுதிக்கொண்டு இருக்கேன். வசீகரமான குரல், ஒவ்வொருமுறை இவரின் பாடல்களை கேட்கும் போதெல்லாம் புத்தணர்வு வந்தது போலத்தான் இருக்கும், இவரின் மறைவு இசையுலகில் ஈடுசெய்ய இயலாத மறைவு..

*************************

ஊரில் இருந்து சொந்த பந்தங்கள் வீட்டுக்கு வந்தார்கள் என்றால் அவர்களை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்று தான் அழைத்துவருவேன், பின் அவர்கள் செல்லும் போது அங்கு தான் இறக்கி விட்டு பேருந்தில் ஏற்றிவிடுவேன். எப்போது சென்றாலும் பேருந்து நிலையத்தின் முன் உள்ள மரங்களின் முன் தான் வண்டியை நிறுத்துவேன்.

எப்போதும் அந்த இடம் குளிர்ச்சியாகவே இருக்கும், அதற்கு எதிர்புறம் உள்ள தமிழ்நாடு ஓட்டலை ஒட்டியுள்ள பகுதிகளும் அப்படித்தான் இருக்கும். அங்கு சென்று வருவேதே மனதிற்கு இதமான ஒன்றாகத்தான் இருக்கும்..

நேற்றும் ஒர் உறவினரை இறக்கிவிடச்சென்றேன் இப்போது எங்கள் ஊர் அந்த இயற்கை காற்றை தின்று செயற்கை காற்றும் இல்லாமல் மொட்டை வெய்யில் நங் என்று உச்சந்தலையை அழகு பார்க்கிறது.

ஏற்கனவே அவிநாசி சாலை வெய்யிலுக்கு ஒதுங்க சிறு இடம் கூட இல்லாமல் அத்தனை மரங்களையும் பலாத்காரம் செய்து சாலையை விரிவாக்கிவிட்டனர்..

எங்கள் ஊர் உலகத்தரத்திற்கு மாறகிறது, இயற்கையின் சுவடே இல்லாமல்...


1 comment:

  1. "எங்கள் ஊர் உலகத்தரத்திற்கு மாறகிறது, இயற்கையின் சுவடே இல்லாமல்..."
    உண்மையே.. உலகின் எல்லா இடங்களும் பொருந்தும்..!!!

    ReplyDelete