Thursday, March 26, 2015

அஞ்சறைப்பெட்டி 27.03.2015

வெற்றி தோல்வி வீரனுக்கு சகஜம் என்பது தான் நம்ம ஊர் மொழி.. உலக கோப்பையில் டோணியின் அணி செமி பைனலில் இருந்து வெளியே வந்து விட்டது என்பதை நம் இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எப்போதும் நாமே வெற்றி பெற்றுக்கொண்டு இருக்க இயலாது என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் எண்ணம் இங்கு இல்லை.

சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனால் மேட்ச் முடிந்தது என்ற காலம் போய் சமி வரை மேட்ச் பார்க்க வைத்த பெருமை டோணியை சேரும். அந்த வகையில் டோணி அணியை நடத்தும் விதம் மிக பாராட்டுக்குரியது.

உலககோப்பை கிரிக்கெட்டை ஊத்தி மூடியாச்சு, நம்மை வைத்து முழுக்க முழுக்க சம்பாரிப்பதற்காகவே விரைவில் வருகிறது ஐபிஎல். நாமும் நம்மால் முடிந்த அளவு ஸ்டேட்டஸ் போட்டு விளையாட்டை பறப்புறை செய்து பணம் உள்ளவர்களிடமே பணத்தை கொட்டை வைப்போம்....

 -----------------------------------------------------------------------------

வாட்ஸ் அப்பில் ஒரு புதிய எண்ணில் இருந்து Call me என்று இருந்தது. சரி என்று போனைப்போட்டு யார் என்று பார்த்தால் செல்லமுத்து அண்ணன் எங்க ஊர்க்காரர்தான். நன்றாக பழகுவார் சிறிய வயதில் இருந்தே பழக்கம் அண்ணனுக்கு ஒரு 60 வயதிருக்கும் பட் எப்பவும் பார்க்க இளமை ததும்புவது போலத்தான் காணப்படுவார்.

என்னன்னே போன் எல்லாம் மாற்றி வாட்ஸ் அப் எல்லாம் பயன்படுத்துவீங்க போல என்றேன். கால ஓட்டத்துக்கு நாமும் மாறிக்கவேண்டுமல்லவா அதனால தான் இந்த மாற்றம் அப்புறம் பேஸ்புக் எல்லாம் ஓபன் செய்துட்டீங்களா என்று அடுத்த அம்மை வீசினேன். ஓபன் பன்னிட்டேன்பா பட் எனக்கு என்னமோ அது கும்முன்னு இல்ல வாட்ஸ்அப்பத்தி தான் பேப்பரில் அதிகம் வருகிறது. அதனால அது தான் பிடிச்சிருக்கு என்றார். சரிண்ணே சரிண்ணே என்றேன்..

சரி தம்பி இந்த வாட்ஸ் அப்பில் நிறைய வீடியோ எல்லாம் வருதாம், நம்ம சிவாதான் சொன்னாரு ஆனா பாருப்பா எனக்கு எதுவுமே வரமாட்டிங்குது என்றார். சரிண்ணே இந்த fun video எல்லாம் இருக்கு அனுப்புறேன் என்றேன். தம்பி அது கிடக்க தம்பி இந்த நடிகை வீடியோ எல்லாம் வருதுன்னு நம்ம தினத்தந்தியில் பக்கம் பக்கமா எழுதுறாங்க அது எல்லாம் அனுப்புப்பா... எப்பப்பா அனுப்புவா என்ற கேள்விக்கான பதிலோடு போனை கட்செய்தேன்..
அப்புறம் ஒரு ரேசியோவில் அறிந்தேன்.... பல பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதே அதுக்குமட்டம்தான் போல...

--------------------------------------------------------------

குழந்தைகளுக்கு கதை சொல்வது செம்ம கடுப்பான வேலை என்று தான் நினைத்தேன், அதற்காக முதலில் நிறைய நாட்கள் மெனக்கெட்டேன் அப்புறம் அப்படியே மறந்து போய்விட்டன், மகனும் கதை கேட்பதை விட்டுவிட்டான். சரி இப்படியே போனால் மறுபடியும் சோட்ட பீன்க்கு அடிமையாகிடுவான் என்று திக்கு தெரியாமல் விழிக்க ஆரம்பித்தேன்.

சில நாட்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது அவனுக்கு காடுகள், விலங்குகள், யோகா போன்றவற்றில் விருப்பம் இருப்பதை அறிந்தேன். அவனுக்கு பிடிச்ச மாதிரியே பேசினால் தான் பேசுகிறான் என்பதால் எனக்கு தெரிந்த தகவலை சேர்த்து காடுகள் பற்றி பேசினேன், பேசிகிட்டே டேபிள் காடுகளை பற்றி தேடினால் தகவலாக கொட்டுகிறது. சில தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தேன்.

நம்ம ஊர் அந்தியூர் அங்க காடு இருக்குதுன்னு ஆரம்பிச்சு அப்படியே சத்தியமங்கலம் வந்து, திம்பம், தாளவாடின்னு கதை சொல்ல ஆரம்பிச்சு முதுமலை வரை வந்துட்டேன். இப்போது அவனுக்குள்ளான காடு பற்றியான பிம்பம் நிறைய வந்துவிட்டது. இரவில் பேசிய காட்டைப்பற்றி காலையில் சந்தேகம் கேட்பதும் இன்னிக்கு எதைப்பற்றி பேசப்போறப்பா என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டான்.

ஆக குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு காம்ப்ளான் தான் சாப்பிடனும் என்று சொல்லாமல் எப்புவும் போல பாலை மட்டும் கொடுத்திட்டு நன்றாக கதை சொன்னால் போதும் அவர்களின் ஞாபகசக்தி அபாரமாக உள்ளது.
நான் தான் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைக்க ரொம்ப யோசிக்கிறேன். மூட்டை கட்டி வைத்து விட்டால் சிறந்த தகப்பனாகி விடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

-----------------------------------------------------------------------------

உடல் எடை அதிகமாக பல காரணங்கள் உள்ளன அதில் மிக குறிப்பிடத்தக்க காரணத்தில் சர்க்கரையும் உண்டு. பார்ப்பதற்கு கவர்ச்சியாக பளிச்சென்று இருப்பதால் நம் இல்லங்களில் கடந்த 30 வருடங்களாக நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டது வெள்ளைச் சர்க்கரை. வெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளைச் சர்க்கரை என்றைக்கு நம் அன்றாட உபயோகத்திற்கு வந்ததோ, அன்றைக்கே நாம் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டோம்.

நமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்படை வயிறு, அதாவது செரிமானம் கெடுவதுதான். இந்த அடிப்படையான வயிற்றை ஆட்டங்கான வைத்து, இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக இந்த வெள்ளைச் சர்க்கரையைச் சொல்லலாம்.
இந்த வெள்ளை சர்க்கரை வருவதற்கு முன் நாம் எதை பயன்படுத்தினோம் நாட்டு சர்க்கரையைத்தான் அப்போது எல்லாம் சுகர் வந்தவர்கள் நம்ம ஊரில் நிறைய என்பதை விட முக்கால்வாசி ஆட்கள் என்றால் அது மிகையாகாது.
டீ, காபி குடிப்பவர்கள் எப்பவும் போல குடிங்க ஆனால் அதற்கு வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சக்கரையை பயன் படுத்துங்கள்.

நாட்டுச்சக்கரையில் அதிரசம், லட்டு போன்ற பலகாரங்களைச் செய்யலாம். வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் மறக்காமல் நாட்டுச்சர்க்கரையை பயன்படுத்துங்கள்... தொடர்ந்து பயன்படுத்தும் போது தான் அதன் பலன் கிடைக்கும் என்பதை மறந்துடாதீங்க...

நாட்டுச்சக்கரைக்கு மிக பிரபலமான ஊர் எது தெரியுமா ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி தான் மிக பிரபலமான ஊருங்க..

----------------------------------------------------------------------------

சாப்பாட்டை பொறுத்தவரை ஒவ்வொருத்தரும் ஒரு சுவைக்கு அடிமை, நிச்சயம் அதற்கு நானும் விதிவிலக்கல்ல.. எனக்கு நிறைய பிடிக்கும் எது எதுன்னு பிரிச்ச சொன்னா நிறைய சொல்லாம், அதைப்பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் நான் இப்போது சொல்லும் என் அமிர்தம் நிச்சயம் எனக்கு மட்டுமல்ல நம்ம ஊரில் 80 சதவீத பேர் இந்த உணவிற்கு அடிமைதான் என்று அடிச்சு சொல்லாம்... அது என்னான்னா...

தலை வாழை இலையில் சூடாக சாப்பாட்டை போட்டு ரசம் (புளி அல்லது தக்காளி) மொத்தத்தில் ரசம் ஊத்தி நன்றாக சாப்பாட்டை பிசைஞ்சு ரசம் நிறைய ஊற்றி அப்படியே வலிச்சு வலிச்சு கையில் உள்ள ரசமும் சாப்பாடும் மிக்ஸ் ஆன கலவையை உறிஞ்சி பாருங்க...

அப்படியே நாவில் நிற்கும் இந்த காம்பினேஷன்...
இது அமிர்தம் தேவாமிர்தம் என்று கூட சொல்லாம்..

Wednesday, March 25, 2015

புடவை செலக்ட் செய்வது கஷ்டம்தானுங்க...

பொஞ்சாதிக்கு பிறந்தநாள் அன்றைக்கு தீடீர் இன்பம் கொடுக்கலாம் என்று முடிவுசெய்து என்ன பரிசு கொடுக்கலாம் என்று பரீசீலித்தேன். பெண்களைப் பொறுத்த வரை தங்க வைர ஆபரணங்களை பரிசாக கொடுத்தால் தான் மிக சந்தோசமாக இருப்பார்கள் ஆனால் அந்த அளவிற்கு எனக்கு படஜெட் இல்லை, வேறு என்ன வாங்கிக்கொடுத்தால் குதுகலமாக இருப்பார்கள் என்று என் களிமண் மண்டையை கவுட்டி கவுட்டியாக யோசிக்க வைத்தேன் கடைசியாக முடிவுக்கு வந்தேன். இவளுக்கு மட்டுமல்ல இவளை பார்க்கும் எல்லோரும் இதைப்பற்றி பெருமையா பேசவேண்டும் என்று புடைவை வாங்கிகொடுக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

புடவை வாங்கலாம் ஆனால் வாழ்க்கையில் மிக முக்கியமானது பட்ஜெட் தானே, சரி என்ற அடுத்து 3 மாதங்களுக்கான செலவை கணக்கிட்டேன், ஆனால் பட்ஜெட்டில் ஓட்டை விழுந்தது. சரி வாயக்கட்டி வயித்தக்கட்டி பட்ஜெட்டை அதிகமாக்கிடலாம் என்று முடிவுக்கு வந்தேன். இந்த இடத்தில் வாயைகட்டி வயித்தைக்கட்டி என்றால், ஓட்டலுக்கு போய் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற முடிவெடுத்தேன், அடுத்து வயித்தக்கட்டி என்பது அப்படியே தவிர்க்க இயலாமல் போய்விட்டால் எப்பவும் வரும் பில் தொகையை விட பாதியாக வருமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து என் சக்திக்கு மீறிய ஒரு பட்ஜெட்டை ஒதுக்கிவிட்டேன்.

புடவை வாங்கலாம் சரி எங்க வாங்கலாம் என்று அதற்கு தனியாக மூளையை மீண்டும் கவுட்டி கவுட்டியாக யோசிக்கவிட்டேன். பல இடங்களை என் கண் முன் நிறுத்தியது என் மூளை. முதலில் நங்கவள்ளி, வனவாசி பட்டு எடுக்கலாம் என்று முடிவு செய்து ஊருக்கு சென்ற போது யாருக்கும் தெரியாமல் தோழனை அழைத்துக்கொண்டு நங்கவள்ளி சென்றேன். வழி நெடுக தென்னை மர நிழலியே சென்று அந்த ஊருக்க போய் நிறைய கடைய பார்த்தேன் அப்போதும் என் மனசுக்கு எதுவுமே பிடிக்கல. பிடிக்கல என்பதை விட நான் எதிர்பார்த்தது இல்லை, தலையை தொங்கபோட்டுட்டு மீண்டும் ஊரு வந்து சேர்ந்தேன்.

அடுத்து கோவைக்கு அருகில் உள்ள சிறுமுகைக்கும், சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டாம்பாளையத்துக்கும் சேலை வாங்க போனேன் ஆனாலும் நான் எதிர்பார்த்த சேலை இல்லை, பரவாயில்லை என்று ஒரு நாலு சேலை எடுத்து வந்தேன். அதை வீட்டுக்கு கட்டிலுக்கு அடியுல் ஒளித்து வைத்துவிட்டு, மனதுக்கு பிடிச்ச நடிகை எல்லாம் எப்படி சேலை உடுத்துறாங்கன்னு மனச அலை அலை என்று அலைய விட்டேன்.

ஒரு கட்டத்தில் சாலையில் மிக அழகாக புடவை கட்டி வந்த ஒரு பெண்மணியை ரொம்ப பிடிச்சிருந்தது சத்தியமாக புடவை மட்டும் தாங்க புடிச்சிருந்தது. அவரிடம் சென்று எப்படி அழைப்பது என்று தவித்தேன் கடைசியில் அக்கா என்றழைத்து இந்த புடவை எங்க வாங்கியது என் மனைவிக்கு எடுக்கனும் சொல்லுங்களேன் என்றதும், அந்த அக்கா சிரித்துக்கொண்டே இது நெகமம் பட்டு என்றது இதற்காக நெகமத்துக்கு அழைய முடியாது என்று கோவையிலேயே எங்க எடுக்கலாம் என்று விசாரித்தேன்.

ஆனால் இப்ப தாங்க தெரியுது ஒரு புடவை எடுக்க தேவையில்லாமல் 4 புடவை எடுத்துவிட்டேன் ஆனாலும் மனசுக்கு பிடிச்ச புடவை கிடைக்கலீயே என்ற வருத்தம் தான் அதிகம் இருந்தது.

புடவைக்கடைக்கு போனா பொண்ணுங்க ஆதிக நேரம் தேடி தேடி கடைசியில் மனசுக்கு பிடிச்சும் பிடிக்காமலும் ஒரு புடவை எடுக்க எம்புட்டு நேரம் ஆகிறது என்பதை அறிய முடிந்தது.

கோவையிலேயே சென்னை சில்க்சில் ஆரம்பித்து, ஸ்ரீதேவி, போத்தீஸ், பிஎஸ்ஆர்  என கடை கடையா ஏறி சுத்தினாலும் அந்த புடவை கிடைக்கல. சரி இப்படியே போனா புடைவ எடுக்க முடியாது அப்புறம் பிறந்தநாள் போய் பொங்கலே வந்துடும் என்று புடவைக்காக அழை அழை என்று அழைந்து கடைசியா மஹாவீர்ல புடிச்சங்க அந்த அழகான புடைவையை, வாயக்ட்டி வயித்தக்கட்டி சேர்த்து வைத்த பணம் எல்லாம் கொடுத்தாலும் புடவை அம்சமாக இருந்தது.

இதில் சிறப்புஅம்சமே என்றாலும் நான் எடுத்த புடவையை எனக்கு வேண்டும் என்று இரண்டு அழகு ஆண்ட்டிகள் என்னிடம் வந்து கேட்டதில் தான் சந்தோசம், ஆனந்தத்தில் மஹாவீரில் இருந்து கீழே கிராஸ்கட் ரோட்டில் குதிக்கலாமான்னு இருந்துச்சு.. அப்படி ஒரு மகிழ்ச்சி.

புடவை எடுத்த காசுல கால் பங்கு கொடுத்து பிளவுஸ்ம் தெச்சு, பொறந்தநாள் அன்னிக்கு பொஞ்சாதிக்கு கொடுக்கும் போது செம்ம சந்தோசம் !!

இருக்காதா பின்ன எச்சை கையில் காக்கா ஓட்டாத பையன் இம்புட்டு செலவு செய்து புடவை எடுத்து கொடுத்தா மகிழ்ச்சியாத்தானே இருக்கும். சரி எதுக்கு இம்புட்டு செலவுல எனக்கு புடவைன்னு ஒரு கேள்வி, எல்லாம் உனக்காகத்தான் இந்த வருசம் ஸ்பெசல் என்று ஒரு பிட்ட போட்டுட்டு மனசுக்குள்ள நெனச்சேன், சோழியும் குடுமையும் சும்மா ஆடுமா, பசங்களோடு கோவா டூர் திட்டம் போட்டு இருக்கேன்னு, நேரம் வரும் போது கப்புனு சொல்லனும்ன்னு முடிவு செய்துட்டேன்...

புடவை கட்டிகிட்டு வேலைக்கு போய் வந்த மனைவி  சந்தோசமாத்தான் கோயிலுக்கு போகலாம், அங்க போகலாம்ன்னு பேசிகிட்டு இருந்தா, நான் தான் வாய வெச்சிகிட்டு இருக்காமல் ரெண்டு கடலைய போட்டு மென்னுகிட்டே அப்புறம் என்ன சொன்னாங்க உன் தோழிகள் எல்லாம் கேட்டது தான் மீதி. அடப்போங்க ஒருத்தங்க பார்டர் பெரிசா வெச்சா நல்லா இருக்கும்ங்குறாங்க, ஒருத்தர் சின்னதா வெச்சா நல்லா இருக்கும்ங்குறாங்க, இன்னொருத்தர் அந்த கலர் இருந்தா நல்லா இருக்கும்ங்குறாங்க, ஆனா யாருமே நல்லா இருக்குன்னு சொல்லலீங்க ஆனா கருத்து மட்டும் சொன்னாங்கன்னு பொசுக்குன்ன சொல்லிட்டா.

அடப்பாவி தோழிகளே இது உங்களுக்கே நியாயமா கஷ்டப்பட்டு  துணி எடுத்து கொடுத்தேன், இப்படி பொசுக்குன்னு கருத்து சொல்லாமா போய்ட்டீங்களே, இனி எப்படி நான் கோவா போறது???

Wednesday, March 18, 2015

பயணங்கள்...

நீண்ட நாட்களுக்கு பின் நண்பர்களை சந்திக்க ஈரோடு செல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டியதும் சித்தாரில் இருந்து ஈரோட்டுக்கு பேருந்தில் செல்லவேண்டும் என்று முடிவு செய்ததேன் அதுவும் ABT யில் தான் போக வேண்டும் என சொல்லியது என் மனது. ஓரு காலத்தில் ரெகுலராக பயணிக்கும் பேருந்து என்பதால் எப்போதும் அதில் தான் பயணிக்கவேண்டும் என சொல்லும் மனது.

ஊருக்குள்ளே பால்ய நண்பர்களோடு பேசியதில் பொழுது போனதே தெரியவில்லை. எங்க ஊரில் அதிகம் பயன்படுத்தப்படும் மைலம்பாடி ஆட்டுக்கறியை காலையிலேயே ஒரு தாக்கு தாக்கியதால் அது ஜீரனமாகும் அளவிற்கு நாயம் அரங்கேறும் வெங்கிடு அண்ணா டீக்கடை அருகே. ஈரோடு எப்படா வருவாய் என்று குஞ்சான் போன் செய்ததுதான் ஞாபகம் வந்துது ஐய்யயோ நேரம் ஆச்சு என்று..

ஊர் நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டு அக்காவிடம் எல்லாம் பேசிக்கொண்டு இருந்த ஞாயத்தை மூட்டை கட்டி வெச்சிட்டு குளிப்பதற்கு துண்டை எடுத்துக்கொண்டு பொடக்காலிக்கு ஓடினேன். உள்ளே போய் காக்கா குளியல் தான் போடனும் என்றிருந்தேன் அப்போது தான் பொறி தாட்டியது, போகுவது ABT பஸ்ஸில் எப்படியும் நாலஞ்சு பிகருங்க வரும் என்று ஹமாம் சோப்பை ஒரு தடவைக்கு நாலு தடவை போட்டு கழுவு கழுவு என்ற கழுவினேன்.
சோப்பு தான் தீர்ந்தது கருவா மூஞ்சி அப்படியே தான் இருந்தது என்றாலும் ஒரு மன திருப்தி இன்னிக்காவது நம்மள யாராவது பார்க்கமாட்டாங்களா என்ற எண்ணம்தான்.

ஜீன்ஸ் பேண்டை மாட்டிகிட்டு, வெள்ளைச் சட்டைய போட்டு நெற்றியில் திருநீரோடு காத்திருந்தேன், பஸ் வந்ததும் ஓடி வந்து முன்னாடி படிக்கெட்டில் தொத்தினேன். படிக்கட்டில் தான் நின்று பயணம் செய்வேன் அப்போது எல்லாம், இன்னிக்கு கூட்டம் கம்மியாக இருந்ததால் உள்ளே போ என்ற உந்தப்பட்டேன், சைடு கன்டக்ட்டரால்.

எனக்கு முன்னே ஏறிய பெண் மல்லிகைப்பூ இரண்டு முழம் வெச்சிகிட்டு வந்திருந்ததால் மல்லிகை வாசத்தில் மெய் மறந்து ஒரு கம்பியில சாய்ந்துகிட்டு மல்லிகைப்பூவின் வாசத்தில் கிறங்கி நின்னேன்.

டிரைவர் சீட்டில் இருந்து கடைசி சீட்டு வரை அப்படியே ஒரு நோட்டாம் போட்டேன் எத்தனை விதமான மனுசன்கள், அழகான பெண்கள் அழுக்கான பெண்கள் என களை கட்டியது பேருந்து. கொட்டாய் விட்டு வரும் ஆண்கள். ஒரு சிறு குழந்தை பல்லே இல்லாமல் சிரிப்பு காட்டியதில் பாதி பேர் அதன் ரசிகர்களாகி இருந்தனர்.

டிரைவேர் அருகே உள்ள பேனட்டு மேல் ஒரு நடுத்தர வயது உட்கார்ந்திருந்தது, விட்டாரா டிரைவர் அந்த பெண்ணிடம் ஊர் நாயம் உலக நாயம் எல்லாம் பேசினார். பேருந்தில் பாடிய இளையராஜாவையும் மீறி கேட்கிறது அவர்களின் ஞாயம்.

ஒரு சீட்டில் குடுப்பமே தூங்க வழிந்தது. இரட்டை சீட்டில் வரிசையாக 3 ஜோடிகள் கண்ணுக்குளிராக ஈருஉடல் ஒரு உடலாக கடலையை வறு வறுத்துக்கொண்டு இருந்தனர். இதனால் நின்று கொண்டிருந்தவர்களின் வயிறு எல்லாம் எரிந்தது என்றால் அது மிகையாகாது, இதில் நானும் அடக்கமே.

கடை சீட்டுக்க பக்கத்தில் இரண்டு பேர் காதில் ஹெட் போனை மாட்டிகிட்டு பூம்பூம் மாடு போல தலையசைத்தனர்.
நடு சீட்டில் நடுத்தரவயதுக்காரர் விட்ட குறட்டை இளையராஜாவின் குரலுக்கு போட்டியாக அமைந்தது. இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு குடும்பம் கச்சிதமாக அமர்ந்திருந்தது. அந்த குடும்பத்தை பார்க்கும் போது நாளைக்கு எனக்கும் கண்ணாலம் ஆனா இப்படித்தான் அமைய வேண்டும் என்று கண்ணைத்திறந்து கொண்டே கனவு காண ஆரம்பித்தேன்.
மூன்ரோடு தான்டி டிரைவர் அடித்த டக்குன்னு பிரேக்கில் தான் கனவு கலைந்தது. அப்புறம் அப்படியே இந்த பக்கம் திரும்பி பார்க்கும் போது தான்  நான் நின்ற சீட்டில் இருந்து தள்ளி 2 பெண்கள் உட்கார்ந்திருந்தனர் கருப்பு தான் என்றாலும் மீண்டும் திரும்பி பார்க்க வைத்த முகலட்சனம். இப்பத்தான் புரிகிறது கருப்பின் மகிமை.

இன்னிக்கு ஈரோடுக்கு போறதுக்கு நல்லா பொழுது போகும், முடிஞ்சா ஈரோட்டு பஸ் ஸ்டேண்டில் பேர் கேட்கலாமா என்று கூட யோசித்தது மனது.

இந்த மனசு பாருங்க இன்னேறம் வரைக்கும் குடும்பத்தை யோசிச்சது இப்ப என்னடான்னா இந்த பொண்ணைப்பற்றி யோசிக்குது. அது அப்படியே இருக்கட்டும் என்று பார்வையை சுழட்டி சுழட்டி அடித்தேன், எந்த ரியாச்னும் இல்லை.ஒரு பக்கம் அஜித் ரேஞ்சுக்கு காதல் பார்வை, அப்புறம் ஒவ்வொருத்தர் ஸ்டைலையும் பயன்படுத்தி ஒரு லுக்கு விட்டேன், ம்கூம் கடைசியா வடிவேலு லுக்குகூட விட்டேன் ஒன்னும் நடக்கல.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் நம் பார்வை கரைக்கும் என்று கூவி கூவி பார்த்தேன் ஒன்னும் நடக்கல..

பவானி வந்ததும் கூட இருந்த பெண்ணோடு ஏதோ பேசிக்கொண்டு ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தாள். அப்ப அடிச்சுது பாருங்க ஒரு புயல் சுனாமியே தோத்துடும் போல இருந்தது மனசுக்கு.

பின்ன இருந்த கருஞ்சதைக்காரனை ஒரு பொண்ணு திரும்பி பார்த்தா அப்படித்தானே இருக்கும். அப்படியே மனசு பறந்தது, கூடவே நானும் பறந்தேன். இருக்கற சினிமா பாடல்கள் எல்லாம் கலந்து ஊட்டி டூயட் பாடவே போய்ட்டேன்.

அப்பதான் தீடீர் என் ஒரு குரல் தம்பி தம்பி வெள்ளை கலர் சட்டை தம்பி என்று ஒரு குரல் மிக வேகமாக சத்தமிட்டது. யாரையோ என்று நான் நினைத்து ஊட்டியில் இருந்து பைகாராவிற்கு போனது என் மனது.

யோவ் தம்பி உன்னத்தானய்யா கடைசி சீட்டூ காலியா இருக்கு அங்க போய் உட்காரு என்று சொன்னதும் பைகாராவில் இருந்து கீழே விழந்தது போல இருந்தது. திக்கு தெரியாமல் பேயடித்தது போல அந்த சீட்டை நோக்கி சென்றேன். ஏன்தம்பி நிக்கறீங்க வாங்க உட்காருங்க என்று நடத்துனர் சிரித்தார்.
அடப்பாவி மக்கா இப்பத்தான்டா பாத்தது அதுவும் ஓரக்கண்ணலே வாழ்க்கையில் முதல் தடவையாக டூயட் பாடினேன் இப்படி ஆகிடுச்சே என்று நினைக்கையில் கடைசி சீட்டு வா வா என்று அழைத்தது...

--
Sangkavi.....

அஞ்சறைப்பெட்டி 18.03.2015

ஒவ்வொரு முறையும் சொல்வதைத்தான் இந்த முறையும் சொல்கிறேன், மிக நீண்ட நாட்களாகிவிட்டது உங்களை எல்லாம் சந்தித்து, ஆனாலும் முஞ்சிபுத்தகத்தில் சந்தித்து கொண்டு தான் இருக்கின்றேன். 

வலைப்பதிவு போல இல்லை அங்கு. வலைப்பதிவாளர்கள் நிறைய பேர் நண்பர்களாக இருந்தும் முகப்புத்தகத்தில் எல்லோரையும் சந்திக்க இயலவில்லை என்பது தான் நிதர்சனம். அதற்கு மிக முக்கிய காரணம் வலைப்பதிவாளர்களை விட முகப்புத்தக நண்பர்கள் அதிகம் என்பது தான். 

எது எப்படியோ இது தானே நம் பொறந்த வீடு அதனால் இந்த வாரம் ஒரு உங்களை சந்திக்க வந்து விட்டேன். மீண்டும் மீண்டும் நிச்சயம் வருவேன்...

**************************

சில நாட்களுக்கு முன் கோவை விழாவைக்காக செல்லும் போது பாலசுந்தரம் சாலை வழியாக சென்றேன் அப்போது வழி எங்கும் நிறைய பேர் உறங்கிக்கொண்டு இருந்தார்கள் சில இளைஞர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். என்னடா இது இந்த பனியிலும், கொசுக்கடியிலும் இங்கு உறங்குகின்றார்களே என்ற சந்தகத்தோடு நிகழ்ச்சியை காண சென்றேன்.

நிகழ்ச்சி முடிந்து திரும்ப அவிநாசி சாலை வழியாக வரும்போது நிறைய பேர் காவல் பயிற்சி பள்ளியை ஒட்டி ரெசிடென்சி ஒடடல் வரை வழியெங்கும் அதே கொசுக்கடியிலும், பனியிலும் உறங்கிக்கொண்டு இருந்தனர். வண்டியை மெதுவாக்கி நின்று கொண்டு இருந்த இளைஞர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். இன்று காலை நடக்கும் உடற் தேர்விற்கு வந்தவர்கள் என அறிந்தேன். வேலைக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு தேர்விற்கு வந்தவர்கள் எல்லாம் தேர்வு பெற வேண்டும் என வேண்டுவோம்...


**************************


செய்தித்தாளில் கோவையில் நடந்த ஒரு நிகழ்வைப் படித்து ரொம்ப நொந்து போனேன் காரணம் விபச்சார ரைடில் கைதான 3 பெண்களும் தற்போது படித்துக்கொண்டு இருப்பவர்கள். ஒவ்வொருவரும் சொல்வது ஒரு காரணம் இதில் மிக கேவலமானது தன்னை மிரட்டி பணம் பறிக்கும் காதலனால் விபச்சாரத்துக்கு போனது ரொம்பவே பாதிக்கிறது.

காதலிக்கும் போது காதலனுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்ததால் இந்த வினை. இந்த கால பெண்களுக்கு அதுவும் படித்த பெண்களுக்கு ஒரு பிரச்சனையில் சிக்கினால் அதில் இருந்து வெளியே வரத்தெரியவில்லை என்றால் தன் பெற்றோரிடம் உண்மையை சொல்லி இருந்தாலாவது நிச்சயம் காப்பாற்றி இருப்பார்கள்.

தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதிவும் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தேவை இல்லாத பயம் காரணமாக இன்று இப்படி ஒரு பழி சொல்லுக்கு ஆளான அந்த பெண் மேல் பரிதாபப்படுவதா? அந்த பெண் செய்த தவறுக்கு தண்டனை என்பதா? படித்திருந்தும் விழிப்புணர்வு இல்லை என்பதா? இப்படி பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் போகலாம்.

இவள் தான் அந்த பெண் என்ற அறிந்தவர்களுக்கு, நிச்சயம் இந்த சமூகம் மீண்டும் அதே பாதையில் தான் தள்ளும்.
 
**************************
 
மகளிர் தினத்துக்கு மகளிருக்கு விடுமுறை விட்டு அவர்களை அன்று கொண்டாடவேண்டும் என்பது எல்லாம் சரி தான். அதற்காக காத்தால இருந்து சமைச்சு, வூட்டப்பெறுக்கி, சமைச்ச பாத்திரத்தை எல்லாம் நீ தான் கழுவனும் என்று எல்லா வேலையையும் என் தலையில சாத்தி வேலை வாங்குவது நியாயமா? என்று கேட்டால் ஆண்கள் தினத்தன்று நீங்க ஜாலியா இருங்க அன்னிக்கு வூட்டுல நீங்க என்ன வேலை செய்யறீங்களோ அதை எல்லாம் நான் செய்கிறேன் என்று பன்னு கொடுத்து பக்குன்னு உட்கார வெச்சிட்டாங்க நேத்து என் தங்கமணி...
 
 **************************
 
குழந்தையின் உணவு விசயத்தில் மிகுந்த அக்கறை இல்லாமல் தான் இருப்பேன். பசிச்சால் சாப்பிடுவான் அவனை ஏன் தொந்தரவு செய்கின்றீர், என வீட்டில் உள்ளவர்களை சத்தமிடுவேன். செல்ல மகனோ அவனுக்கு பிடிச்சதை சாப்பிடுவான், அவனை அவன் போக்கில் விடுங்க குழந்தைக்கு என்ன ஆகப்போகிறது என்று தான் எப்போதும் பேசுவேன்..

சத்தான ஆகாரங்களை சாப்பிட்டாலும், எல்லா ஆகாரங்களிலும் எல்லா சத்தும் கிடைப்பதில்லை. பழங்கள் சாப்பிட அவனுக்கு பழக்கும் போது மாங்காய் மட்டும் தான் அவனுக்கு பிடித்தது என்பதால் எப்போதும் மாங்காய் வாங்கி தருவேன். பின் கமலா ஆரஞ்சு சாப்பிடுவான். அதுவும் அவனுக்கு பிடித்திருந்தால் அல்லது மூடு இருந்தால் தான் சாப்பிடுவான். நாங்களும் கட்டாயப்படுத்துவதில்லை.

குழந்தை ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற கனவு எல்லா பெற்றோரை போல எனக்கும் உண்டு. நான் சாப்பிடும் ஆகாரங்களை சாப்பிட பழக்குவேன், அதன் அருமை பெருமைகளை கூறுவேன் ஆனாலும் என் மகன் அதை எனக்கு வேண்டாம் என்று தான் ஒதுக்குவான்..

நேற்று என் கனவில் மண்ணை போடும் நாள் என்று நான் சற்றும் கூட எதிர்பார்க்கவே இல்லை, ஆம் அவனது பள்ளி ஆசிரியை தங்கள் மகன் கடந்த 10 நாட்களாக சரியாக எழுதுவதில்லை, எப்போதும் நன்றாக எழுதுபவன் தற்போது எழுத மறுக்கிறான் என்றார்கள். எனக்கு என்னமோ அவனின் பார்வை குறைபாடு உள்ளது போல இருக்கிறது மருத்துவரிடம் பாருங்கள் என்றார்.

ஆரோக்கியமாக வளர்த்தவேண்டும் அவனுக்கு பிடித்த விளையாட்டை விளையாட வைக்க வேண்டும் என்று இருந்த கனவெல்லாம் பொய்த்தது போல இருந்தது. அதை விட எங்கள் வீட்டில் யாருக்கும் கண் பிரச்சனை சுத்தமாக இல்லை இந்த 5 வயதில் பார்வை குறைபாட? என என்னை அறியாமல் கண்ணீர் தான் வந்தது.

மாலை மருத்தவரிடம் சென்றால் ஆம் பார்வை குறைபாடு தான் வைட்டமின் A குறைபாடுதான். கண்ணாடி போட வேண்டுமா? இல்லை உணவில் சரிபடுத்த முடியுமா? என்று மருந்து ஊற்றிதான் பார்க்கவேண்டும். சனி ஞாயிறுகளில் வாங்க என்று அனுப்பிவிட்டார்கள்..

ஒழுங்காக உணவுப்பழக்கத்தை பழக்கப்படுத்தி இருந்தால் இன்று இந்த நிலை வராது தான். மருத்துவ தொழில்நுட்பம் நிறைய வளர்ந்து விட்டது பார்க்காம் இனி என்ன நடக்கும் என்று...

இந்த வயதில் கண்ணாடியா என்று கலங்கிக்கொண்டு இருக்கிறேன்.. வைட்டமின் A பிரச்சனை தான் ஆகாரத்தில் சரி செய்திடலாம் என்று மருத்துவர் சொல்வார், சொல்லவேண்டும் என்று எல்லா கடவுளையும் பிராத்திக்கிறேன்.

 **************************
 
சிக்னலில் நின்று பிச்சை எடுப்பவர்கள் மேல் பரிதாபம் வராது, நல்லாத்தானே இருக்கிறான் உழைச்சு சாப்பிட்டால் என்ன என்று தோன்றும், அதுவும் மிக வயதானவர்களாக இருந்தால் வண்டிகளின் இடையில் புகுந்து வந்து பிச்சை கேட்கும் போது கோபம் தான் வரும். சிக்னல் போட்டால் என்ன ஆவதுன்ன யோசிக்கவே மாட்டேன் என்கின்றனரே என்று.

சிக்னலில் பிச்சை கேட்பதற்கு பதில் சின்ன சின்ன விளையாட்டுப்பொருட்களை விற்பனை செய்வார்கள் இது கூட பரவாயில்லை என்று தோன்றும், பிச்சை எடுப்பதற்கு பதில் உழைக்கிறார்களே என்று.

இரவு 7 மணி இருக்கும் வீட்டிற்கு வந்த உறவினர்களை வழிஅனுப்ப லஷ்மி மில் பேருந்து நிறையத்தில் நின்று கொண்டு இருந்தேன். சிக்னலில் பொம்மை விற்கும் பையன் ஒரு உயர்தர காரை துரத்திக்கொண்டு ஓடினான், அந்த கார் நிற்காமாலே சென்று விட்டது. பின்பு திரும்பி வந்த பையன் திட்டிக்கொண்டே வந்தான். என்ன என்று பார்த்தால் 3 பொம்மைகள் வாங்கி உள்ளனர் காரில் உள்ளவர்கள் ஆனால் பணம் எடுப்பதற்குள் சிக்னல் விழுந்துவிட்டது. பரவாயில்லை என்று வண்டியை கொஞ்ச முன் சென்று ஓரம் கட்டி பணம் கொடுத்திருந்தால் மனிதாபிமானம் மிக்கவர் என்று சொல்லலாம்.

சிக்னல் போட்டதே போதும் என்று அந்த 3 பொம்மைக்கும் பணம் கொடுக்காமல் செல்லும் இந்த உயர்தர காரில் சொகுசாக பயணிக்கம் இவர்களை என்ன சொல்ல... பிச்சை எடுப்பதற்கு பதில் உழைத்து வாழ நினைக்கும் இவர்களை இந்த மாதிரி செய்வதால் தான் அவர்கள் விரக்திக்கு சென்று மேலும் தவறுகளை செய்ய உந்துகிறார்கள்..

Tuesday, March 3, 2015

துடிக்கிறேன் பாஸ், துடிக்கிறேன்...

மகனை பள்ளியில் இருந்து மதியம் அழைத்து வந்தேன். மதிய நேரம் எனக்கு கொஞ்சம் அவரச நேரம் தான், மகனை வீட்டில் இறக்கி விட்டு பின் அலுவலகம் செல்லவேண்டும். எனக்கு ஒதுக்கிய மதிய உணவு நேரத்திலேயே இதை செய்யவேண்டும் என்பதால் மிக அவசர நேரம் என்று கூட சொல்லலாம்.

எப்போதும் போல அன்றும் பள்ளியில் இருந்து பிரசன்னாவை அழைத்துக்கொண்டு அவிநாசி சாலையில் நுழைந்தேன். அண்ணாசாலை சிக்னலில் இருந்து அதி வேகமாக செல்லும் உலகப்புழ்பெற்ற கார்களுடன் போட்டி போட இயலாமல் எப்போதும் எனது யமஹா 60 கிலோ மீட்டர் வேகத்தை மட்டுமே தொட்டுச் செல்லும், எனக்கும் அது தான் பிடிக்கும். உடன் வரும் ஸ்கூட்டி பெப்களும், மகனின் தோழிகளை அழைத்து வரும் ஆட்டோக்கள் என இருவரும் பராக்கு பாத்துக்கொண்டு தான் வருவோம்.

இது அத்தனைக்கும் நடுவில் எமனை அவ்வப்போது காண்பது போல எமன் வடிவில் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு செல்லும் தனியார் பேருந்துகள் கண் மூடி கண் திறப்பதற்குள் காணமல் சென்று விடும்.

இந்த சம்பவங்கள் எல்லாம் தினமும் நடக்கும் ஒன்று தான். ஆனால் அன்று எங்கள் வண்டி ரெசிடென்சி ஓட்டலை தாண்டி வருகையில், குப்புசாமி நாயுடு சிக்னலில் பச்சைவிளக்கு 10,9,8,7,6,5, என்று குறைந்து கொண்டே வர வர எனது வண்டி அன்று 60வதை தாண்டி வேகம் எடுத்தது.

சிக்னலை நான் தொடும் முன் மஞ்சள் விளக்கு எரிய ஆரம்பித்தது, ஆனாலும் நான் வண்டியை முடுக்கி சிகப்பு விளக்கு எரியும் போது சிக்னலை கடந்துவிட்டேன், அந்த ஆனந்தத்திலேயே லஷ்மி மில் சிக்னலை அடைந்தேன்.

எப்போதும் எதையாவது பேசும் பிரசன்னா, அன்று சிக்னலில் நிற்கும் போது அவனது ஆட்டோ தோழிக்கு டாட்டா காண்பித்துவிட்டு என்னிடம் பேச ஆரம்பித்தான்..

அப்பா, அப்பா !

என்ன தங்கம், சொல்லு !

ஏம்ப்பா, yellow light எரியும் போது வண்டியின் வேகத்தை குறைத்துவிட்டு, Red Light எறியும் போது வண்டியை நிறுத்தத்தானே வேண்டும்??

ஆமாம் தங்கம், இப்ப மஞ்சள் விளக்கு எறியும் போது, வண்டியை தயாராக வைத்துக்கொண்டு, பச்சை விளக்கு எறியும் போது புறப்படனும் !

அது எனக்கு தெரியும்பா !!

அம்மா நிறைய தடவை சொல்லிருக்கு, ஸ்கூல்லியும் எங்க மேடம் சொன்னாங்க...

குட் குட்.. சமத்துடா என் செல்லம்...

அப்பா?

என்னடா?

நீ எதுக்கு அங்க மஞ்சள் லைட் போடும் போது வண்டிய மெதுவாக்காமால், சிகப்பு விளக்கு எரியும் போது வேகமாக வந்தாய்

அது வந்து தம்பி...

அப்பா சொல்லுப்பா? நீ எதுக்க வந்த?

அட இருப்பா சிக்னல் போட்டாச்சு, போகலாம் என்று அவனிடம் இருந்து தப்பவேண்டும் என்று வண்டியை எடுத்து ஏர்டெல் ஆபிசில் சந்தில் விட்டு,  வீட்டை நோக்கி வந்தேன்...

அப்பா எதுக்கப்பா சிக்னல்ல தாண்டி வந்த ??

அது பிரசன்னா, என்று மழுப்பிக்கொண்டே, இவனிடம் பொய் சொல்வதா? இல்லை தப்பு என்பதா? அவசரத்தில் வந்துவிட்டேன் என்று சொல்வதா? என ஒரே மண்டக்குழப்பம் !!

பதில் சொல்லவில்லை என்றால் விடமாட்டான் என்பதால் யோசித்தேன். கடைசியில் உண்மையை சொல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்...

தம்பி பிரசன்னா, அப்பா செய்தது தப்பு தான், அவசரத்தில் வந்துவிட்டேன், இனி வரமாட்டேன் என்றேன்..

தப்பு தானே ??

ஆமாண்டா !!

நான் தப்பு செய்தா மட்டும் அடிக்கி வர, இப்ப உன்னைய யாரு அடிக்கவருவாங்க?

சரி வீடு வந்திட்டது, நாம் மாலை பேசலாம், நான் ஆபிஸ் போகிறேன் என்ற இறக்கி விட்டேன்.

அவனது புத்தக பையையும், சாப்பாட்டு பையையும் எடுத்துக்கொண்டு, இன்னிக்கு சாப்பிட்டானா? இல்லையா? என்ற கவலையில் சாப்பாட்டு பையை பிரித்து பார்த்தேன்...

அப்பா, நீ தப்பு செய்தாய்யல்லவா? இந்த வாங்கிக்க, என்று அவனது கைவிரல்களை மடக்கி குத்துச்சண்டை பாத்து பழகி அதே போல் கையை வேகமாக இறக்கினான் என்னை நோக்கி...

அவன் உயரத்துக்கு அவன் இறக்கிய இறக்கு சரியாக என்னை தாக்கியது...

என் அடிவயிருக்கும் கீழ்...

நீங்க நினைக்கிற அதே இடம் தான் பாஸ்... ரெண்டு நாளா துடிக்கிறேன் பாஸ், துடிக்கிறேன்...