Thursday, March 26, 2015

அஞ்சறைப்பெட்டி 27.03.2015

வெற்றி தோல்வி வீரனுக்கு சகஜம் என்பது தான் நம்ம ஊர் மொழி.. உலக கோப்பையில் டோணியின் அணி செமி பைனலில் இருந்து வெளியே வந்து விட்டது என்பதை நம் இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எப்போதும் நாமே வெற்றி பெற்றுக்கொண்டு இருக்க இயலாது என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் எண்ணம் இங்கு இல்லை.

சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனால் மேட்ச் முடிந்தது என்ற காலம் போய் சமி வரை மேட்ச் பார்க்க வைத்த பெருமை டோணியை சேரும். அந்த வகையில் டோணி அணியை நடத்தும் விதம் மிக பாராட்டுக்குரியது.

உலககோப்பை கிரிக்கெட்டை ஊத்தி மூடியாச்சு, நம்மை வைத்து முழுக்க முழுக்க சம்பாரிப்பதற்காகவே விரைவில் வருகிறது ஐபிஎல். நாமும் நம்மால் முடிந்த அளவு ஸ்டேட்டஸ் போட்டு விளையாட்டை பறப்புறை செய்து பணம் உள்ளவர்களிடமே பணத்தை கொட்டை வைப்போம்....

 -----------------------------------------------------------------------------

வாட்ஸ் அப்பில் ஒரு புதிய எண்ணில் இருந்து Call me என்று இருந்தது. சரி என்று போனைப்போட்டு யார் என்று பார்த்தால் செல்லமுத்து அண்ணன் எங்க ஊர்க்காரர்தான். நன்றாக பழகுவார் சிறிய வயதில் இருந்தே பழக்கம் அண்ணனுக்கு ஒரு 60 வயதிருக்கும் பட் எப்பவும் பார்க்க இளமை ததும்புவது போலத்தான் காணப்படுவார்.

என்னன்னே போன் எல்லாம் மாற்றி வாட்ஸ் அப் எல்லாம் பயன்படுத்துவீங்க போல என்றேன். கால ஓட்டத்துக்கு நாமும் மாறிக்கவேண்டுமல்லவா அதனால தான் இந்த மாற்றம் அப்புறம் பேஸ்புக் எல்லாம் ஓபன் செய்துட்டீங்களா என்று அடுத்த அம்மை வீசினேன். ஓபன் பன்னிட்டேன்பா பட் எனக்கு என்னமோ அது கும்முன்னு இல்ல வாட்ஸ்அப்பத்தி தான் பேப்பரில் அதிகம் வருகிறது. அதனால அது தான் பிடிச்சிருக்கு என்றார். சரிண்ணே சரிண்ணே என்றேன்..

சரி தம்பி இந்த வாட்ஸ் அப்பில் நிறைய வீடியோ எல்லாம் வருதாம், நம்ம சிவாதான் சொன்னாரு ஆனா பாருப்பா எனக்கு எதுவுமே வரமாட்டிங்குது என்றார். சரிண்ணே இந்த fun video எல்லாம் இருக்கு அனுப்புறேன் என்றேன். தம்பி அது கிடக்க தம்பி இந்த நடிகை வீடியோ எல்லாம் வருதுன்னு நம்ம தினத்தந்தியில் பக்கம் பக்கமா எழுதுறாங்க அது எல்லாம் அனுப்புப்பா... எப்பப்பா அனுப்புவா என்ற கேள்விக்கான பதிலோடு போனை கட்செய்தேன்..
அப்புறம் ஒரு ரேசியோவில் அறிந்தேன்.... பல பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதே அதுக்குமட்டம்தான் போல...

--------------------------------------------------------------

குழந்தைகளுக்கு கதை சொல்வது செம்ம கடுப்பான வேலை என்று தான் நினைத்தேன், அதற்காக முதலில் நிறைய நாட்கள் மெனக்கெட்டேன் அப்புறம் அப்படியே மறந்து போய்விட்டன், மகனும் கதை கேட்பதை விட்டுவிட்டான். சரி இப்படியே போனால் மறுபடியும் சோட்ட பீன்க்கு அடிமையாகிடுவான் என்று திக்கு தெரியாமல் விழிக்க ஆரம்பித்தேன்.

சில நாட்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது அவனுக்கு காடுகள், விலங்குகள், யோகா போன்றவற்றில் விருப்பம் இருப்பதை அறிந்தேன். அவனுக்கு பிடிச்ச மாதிரியே பேசினால் தான் பேசுகிறான் என்பதால் எனக்கு தெரிந்த தகவலை சேர்த்து காடுகள் பற்றி பேசினேன், பேசிகிட்டே டேபிள் காடுகளை பற்றி தேடினால் தகவலாக கொட்டுகிறது. சில தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தேன்.

நம்ம ஊர் அந்தியூர் அங்க காடு இருக்குதுன்னு ஆரம்பிச்சு அப்படியே சத்தியமங்கலம் வந்து, திம்பம், தாளவாடின்னு கதை சொல்ல ஆரம்பிச்சு முதுமலை வரை வந்துட்டேன். இப்போது அவனுக்குள்ளான காடு பற்றியான பிம்பம் நிறைய வந்துவிட்டது. இரவில் பேசிய காட்டைப்பற்றி காலையில் சந்தேகம் கேட்பதும் இன்னிக்கு எதைப்பற்றி பேசப்போறப்பா என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டான்.

ஆக குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு காம்ப்ளான் தான் சாப்பிடனும் என்று சொல்லாமல் எப்புவும் போல பாலை மட்டும் கொடுத்திட்டு நன்றாக கதை சொன்னால் போதும் அவர்களின் ஞாபகசக்தி அபாரமாக உள்ளது.
நான் தான் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைக்க ரொம்ப யோசிக்கிறேன். மூட்டை கட்டி வைத்து விட்டால் சிறந்த தகப்பனாகி விடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

-----------------------------------------------------------------------------

உடல் எடை அதிகமாக பல காரணங்கள் உள்ளன அதில் மிக குறிப்பிடத்தக்க காரணத்தில் சர்க்கரையும் உண்டு. பார்ப்பதற்கு கவர்ச்சியாக பளிச்சென்று இருப்பதால் நம் இல்லங்களில் கடந்த 30 வருடங்களாக நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டது வெள்ளைச் சர்க்கரை. வெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளைச் சர்க்கரை என்றைக்கு நம் அன்றாட உபயோகத்திற்கு வந்ததோ, அன்றைக்கே நாம் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டோம்.

நமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்படை வயிறு, அதாவது செரிமானம் கெடுவதுதான். இந்த அடிப்படையான வயிற்றை ஆட்டங்கான வைத்து, இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக இந்த வெள்ளைச் சர்க்கரையைச் சொல்லலாம்.
இந்த வெள்ளை சர்க்கரை வருவதற்கு முன் நாம் எதை பயன்படுத்தினோம் நாட்டு சர்க்கரையைத்தான் அப்போது எல்லாம் சுகர் வந்தவர்கள் நம்ம ஊரில் நிறைய என்பதை விட முக்கால்வாசி ஆட்கள் என்றால் அது மிகையாகாது.
டீ, காபி குடிப்பவர்கள் எப்பவும் போல குடிங்க ஆனால் அதற்கு வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சக்கரையை பயன் படுத்துங்கள்.

நாட்டுச்சக்கரையில் அதிரசம், லட்டு போன்ற பலகாரங்களைச் செய்யலாம். வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் மறக்காமல் நாட்டுச்சர்க்கரையை பயன்படுத்துங்கள்... தொடர்ந்து பயன்படுத்தும் போது தான் அதன் பலன் கிடைக்கும் என்பதை மறந்துடாதீங்க...

நாட்டுச்சக்கரைக்கு மிக பிரபலமான ஊர் எது தெரியுமா ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி தான் மிக பிரபலமான ஊருங்க..

----------------------------------------------------------------------------

சாப்பாட்டை பொறுத்தவரை ஒவ்வொருத்தரும் ஒரு சுவைக்கு அடிமை, நிச்சயம் அதற்கு நானும் விதிவிலக்கல்ல.. எனக்கு நிறைய பிடிக்கும் எது எதுன்னு பிரிச்ச சொன்னா நிறைய சொல்லாம், அதைப்பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் நான் இப்போது சொல்லும் என் அமிர்தம் நிச்சயம் எனக்கு மட்டுமல்ல நம்ம ஊரில் 80 சதவீத பேர் இந்த உணவிற்கு அடிமைதான் என்று அடிச்சு சொல்லாம்... அது என்னான்னா...

தலை வாழை இலையில் சூடாக சாப்பாட்டை போட்டு ரசம் (புளி அல்லது தக்காளி) மொத்தத்தில் ரசம் ஊத்தி நன்றாக சாப்பாட்டை பிசைஞ்சு ரசம் நிறைய ஊற்றி அப்படியே வலிச்சு வலிச்சு கையில் உள்ள ரசமும் சாப்பாடும் மிக்ஸ் ஆன கலவையை உறிஞ்சி பாருங்க...

அப்படியே நாவில் நிற்கும் இந்த காம்பினேஷன்...
இது அமிர்தம் தேவாமிர்தம் என்று கூட சொல்லாம்..

9 comments:

  1. இலைல ரசம் சாதம் கையில எடுத்துச் சாப்பிடறது ரோதனை. நல்ல விளிம்பு உள்ள பிளேட்டில் சூடான சாதத்தைப் போட்டு ஸ்பூனால் நன்றாக மசித்துக் கொள்ளவேண்டும் பிறகு தக்காளி ரசத்தை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி மசித்துக் கொண்டே வரவும். ஒரு கட்டத்தில் சாதம் தெரியாமல் ஆகி விடும். அப்போது பிளேட்டை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சி சாப்பிடோணும். இதை விட்டுட்டு இலையில் போட்டு ரசம் ஊத்தி, என்ன விவரம் புரியாத ஆசாமியா இருக்கீங்க. இத்தனைக்கும் கோயமுத்தூர் ஜில்லா ஆசாமி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா கந்தசாமி ஐயா., பின்னீட்டீங்க... இன்னிக்கே இப்படி சாப்பிட்டு பார்த்துட்டு சொல்றேன்... இந்த தேவாமிர்தத்தை...

      Delete
  2. சர்க்கரை பொங்கல் அஞ்சறைப்பெட்டி !

    ReplyDelete
    Replies
    1. வாய்யா மக்கா., ரொம்ப நாள் ஆச்சுய்யா நாம் எல்லாம் இங்க சந்திச்சு... சந்தோசமா இருக்கு...

      Delete
  3. வணக்கம்
    அஞ்சறைப்பெட்டியில் சொல்லிய ஒவ்வொரு தகவலும்... அருமை.. பகிர்வுக்கு நன்றி த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நீண்ட நாளுக்குப் பின் அஞ்சறைப்பெட்டியில் அசத்தலான தகவல்களுடன் அசத்திட்டீங்க! ரசத்துக்கு மயங்காதார் யார்?

    ReplyDelete
  5. அருமையான மணம் வீசிய அஞ்சறைப்பெட்டி

    ReplyDelete
  6. நம்பிக்கை சிறக்கட்டும்...

    பழனி ஐயாவின் அனுபவம் செம...! 100% உண்மை...!

    ReplyDelete
  7. ரொம்ப நாளைக்கு அப்புறம் அஞ்சறைப்பெட்டியின்னு நினைக்கிறேன்...
    வாசமாய் இருக்கு...
    வாழையிலையில் ரசச்சோறு, மோர்ச்சோறு,.... ஆஹா... அந்த் சுவைக்கு அளவேயில்லை..

    ReplyDelete