Wednesday, March 18, 2015

பயணங்கள்...

நீண்ட நாட்களுக்கு பின் நண்பர்களை சந்திக்க ஈரோடு செல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டியதும் சித்தாரில் இருந்து ஈரோட்டுக்கு பேருந்தில் செல்லவேண்டும் என்று முடிவு செய்ததேன் அதுவும் ABT யில் தான் போக வேண்டும் என சொல்லியது என் மனது. ஓரு காலத்தில் ரெகுலராக பயணிக்கும் பேருந்து என்பதால் எப்போதும் அதில் தான் பயணிக்கவேண்டும் என சொல்லும் மனது.

ஊருக்குள்ளே பால்ய நண்பர்களோடு பேசியதில் பொழுது போனதே தெரியவில்லை. எங்க ஊரில் அதிகம் பயன்படுத்தப்படும் மைலம்பாடி ஆட்டுக்கறியை காலையிலேயே ஒரு தாக்கு தாக்கியதால் அது ஜீரனமாகும் அளவிற்கு நாயம் அரங்கேறும் வெங்கிடு அண்ணா டீக்கடை அருகே. ஈரோடு எப்படா வருவாய் என்று குஞ்சான் போன் செய்ததுதான் ஞாபகம் வந்துது ஐய்யயோ நேரம் ஆச்சு என்று..

ஊர் நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டு அக்காவிடம் எல்லாம் பேசிக்கொண்டு இருந்த ஞாயத்தை மூட்டை கட்டி வெச்சிட்டு குளிப்பதற்கு துண்டை எடுத்துக்கொண்டு பொடக்காலிக்கு ஓடினேன். உள்ளே போய் காக்கா குளியல் தான் போடனும் என்றிருந்தேன் அப்போது தான் பொறி தாட்டியது, போகுவது ABT பஸ்ஸில் எப்படியும் நாலஞ்சு பிகருங்க வரும் என்று ஹமாம் சோப்பை ஒரு தடவைக்கு நாலு தடவை போட்டு கழுவு கழுவு என்ற கழுவினேன்.
சோப்பு தான் தீர்ந்தது கருவா மூஞ்சி அப்படியே தான் இருந்தது என்றாலும் ஒரு மன திருப்தி இன்னிக்காவது நம்மள யாராவது பார்க்கமாட்டாங்களா என்ற எண்ணம்தான்.

ஜீன்ஸ் பேண்டை மாட்டிகிட்டு, வெள்ளைச் சட்டைய போட்டு நெற்றியில் திருநீரோடு காத்திருந்தேன், பஸ் வந்ததும் ஓடி வந்து முன்னாடி படிக்கெட்டில் தொத்தினேன். படிக்கட்டில் தான் நின்று பயணம் செய்வேன் அப்போது எல்லாம், இன்னிக்கு கூட்டம் கம்மியாக இருந்ததால் உள்ளே போ என்ற உந்தப்பட்டேன், சைடு கன்டக்ட்டரால்.

எனக்கு முன்னே ஏறிய பெண் மல்லிகைப்பூ இரண்டு முழம் வெச்சிகிட்டு வந்திருந்ததால் மல்லிகை வாசத்தில் மெய் மறந்து ஒரு கம்பியில சாய்ந்துகிட்டு மல்லிகைப்பூவின் வாசத்தில் கிறங்கி நின்னேன்.

டிரைவர் சீட்டில் இருந்து கடைசி சீட்டு வரை அப்படியே ஒரு நோட்டாம் போட்டேன் எத்தனை விதமான மனுசன்கள், அழகான பெண்கள் அழுக்கான பெண்கள் என களை கட்டியது பேருந்து. கொட்டாய் விட்டு வரும் ஆண்கள். ஒரு சிறு குழந்தை பல்லே இல்லாமல் சிரிப்பு காட்டியதில் பாதி பேர் அதன் ரசிகர்களாகி இருந்தனர்.

டிரைவேர் அருகே உள்ள பேனட்டு மேல் ஒரு நடுத்தர வயது உட்கார்ந்திருந்தது, விட்டாரா டிரைவர் அந்த பெண்ணிடம் ஊர் நாயம் உலக நாயம் எல்லாம் பேசினார். பேருந்தில் பாடிய இளையராஜாவையும் மீறி கேட்கிறது அவர்களின் ஞாயம்.

ஒரு சீட்டில் குடுப்பமே தூங்க வழிந்தது. இரட்டை சீட்டில் வரிசையாக 3 ஜோடிகள் கண்ணுக்குளிராக ஈருஉடல் ஒரு உடலாக கடலையை வறு வறுத்துக்கொண்டு இருந்தனர். இதனால் நின்று கொண்டிருந்தவர்களின் வயிறு எல்லாம் எரிந்தது என்றால் அது மிகையாகாது, இதில் நானும் அடக்கமே.

கடை சீட்டுக்க பக்கத்தில் இரண்டு பேர் காதில் ஹெட் போனை மாட்டிகிட்டு பூம்பூம் மாடு போல தலையசைத்தனர்.
நடு சீட்டில் நடுத்தரவயதுக்காரர் விட்ட குறட்டை இளையராஜாவின் குரலுக்கு போட்டியாக அமைந்தது. இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு குடும்பம் கச்சிதமாக அமர்ந்திருந்தது. அந்த குடும்பத்தை பார்க்கும் போது நாளைக்கு எனக்கும் கண்ணாலம் ஆனா இப்படித்தான் அமைய வேண்டும் என்று கண்ணைத்திறந்து கொண்டே கனவு காண ஆரம்பித்தேன்.
மூன்ரோடு தான்டி டிரைவர் அடித்த டக்குன்னு பிரேக்கில் தான் கனவு கலைந்தது. அப்புறம் அப்படியே இந்த பக்கம் திரும்பி பார்க்கும் போது தான்  நான் நின்ற சீட்டில் இருந்து தள்ளி 2 பெண்கள் உட்கார்ந்திருந்தனர் கருப்பு தான் என்றாலும் மீண்டும் திரும்பி பார்க்க வைத்த முகலட்சனம். இப்பத்தான் புரிகிறது கருப்பின் மகிமை.

இன்னிக்கு ஈரோடுக்கு போறதுக்கு நல்லா பொழுது போகும், முடிஞ்சா ஈரோட்டு பஸ் ஸ்டேண்டில் பேர் கேட்கலாமா என்று கூட யோசித்தது மனது.

இந்த மனசு பாருங்க இன்னேறம் வரைக்கும் குடும்பத்தை யோசிச்சது இப்ப என்னடான்னா இந்த பொண்ணைப்பற்றி யோசிக்குது. அது அப்படியே இருக்கட்டும் என்று பார்வையை சுழட்டி சுழட்டி அடித்தேன், எந்த ரியாச்னும் இல்லை.ஒரு பக்கம் அஜித் ரேஞ்சுக்கு காதல் பார்வை, அப்புறம் ஒவ்வொருத்தர் ஸ்டைலையும் பயன்படுத்தி ஒரு லுக்கு விட்டேன், ம்கூம் கடைசியா வடிவேலு லுக்குகூட விட்டேன் ஒன்னும் நடக்கல.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் நம் பார்வை கரைக்கும் என்று கூவி கூவி பார்த்தேன் ஒன்னும் நடக்கல..

பவானி வந்ததும் கூட இருந்த பெண்ணோடு ஏதோ பேசிக்கொண்டு ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தாள். அப்ப அடிச்சுது பாருங்க ஒரு புயல் சுனாமியே தோத்துடும் போல இருந்தது மனசுக்கு.

பின்ன இருந்த கருஞ்சதைக்காரனை ஒரு பொண்ணு திரும்பி பார்த்தா அப்படித்தானே இருக்கும். அப்படியே மனசு பறந்தது, கூடவே நானும் பறந்தேன். இருக்கற சினிமா பாடல்கள் எல்லாம் கலந்து ஊட்டி டூயட் பாடவே போய்ட்டேன்.

அப்பதான் தீடீர் என் ஒரு குரல் தம்பி தம்பி வெள்ளை கலர் சட்டை தம்பி என்று ஒரு குரல் மிக வேகமாக சத்தமிட்டது. யாரையோ என்று நான் நினைத்து ஊட்டியில் இருந்து பைகாராவிற்கு போனது என் மனது.

யோவ் தம்பி உன்னத்தானய்யா கடைசி சீட்டூ காலியா இருக்கு அங்க போய் உட்காரு என்று சொன்னதும் பைகாராவில் இருந்து கீழே விழந்தது போல இருந்தது. திக்கு தெரியாமல் பேயடித்தது போல அந்த சீட்டை நோக்கி சென்றேன். ஏன்தம்பி நிக்கறீங்க வாங்க உட்காருங்க என்று நடத்துனர் சிரித்தார்.
அடப்பாவி மக்கா இப்பத்தான்டா பாத்தது அதுவும் ஓரக்கண்ணலே வாழ்க்கையில் முதல் தடவையாக டூயட் பாடினேன் இப்படி ஆகிடுச்சே என்று நினைக்கையில் கடைசி சீட்டு வா வா என்று அழைத்தது...

--
Sangkavi.....

2 comments:

  1. இருந்தாலும் இளையராஜா குரல் உங்களுக்கு இப்படி அலர்ஜீயா ! அவரின் பாட்டில் பயணம் செய்த காலம் இன்னும் நீங்கா நினைவுகள்§

    ReplyDelete