Wednesday, March 25, 2015

புடவை செலக்ட் செய்வது கஷ்டம்தானுங்க...

பொஞ்சாதிக்கு பிறந்தநாள் அன்றைக்கு தீடீர் இன்பம் கொடுக்கலாம் என்று முடிவுசெய்து என்ன பரிசு கொடுக்கலாம் என்று பரீசீலித்தேன். பெண்களைப் பொறுத்த வரை தங்க வைர ஆபரணங்களை பரிசாக கொடுத்தால் தான் மிக சந்தோசமாக இருப்பார்கள் ஆனால் அந்த அளவிற்கு எனக்கு படஜெட் இல்லை, வேறு என்ன வாங்கிக்கொடுத்தால் குதுகலமாக இருப்பார்கள் என்று என் களிமண் மண்டையை கவுட்டி கவுட்டியாக யோசிக்க வைத்தேன் கடைசியாக முடிவுக்கு வந்தேன். இவளுக்கு மட்டுமல்ல இவளை பார்க்கும் எல்லோரும் இதைப்பற்றி பெருமையா பேசவேண்டும் என்று புடைவை வாங்கிகொடுக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

புடவை வாங்கலாம் ஆனால் வாழ்க்கையில் மிக முக்கியமானது பட்ஜெட் தானே, சரி என்ற அடுத்து 3 மாதங்களுக்கான செலவை கணக்கிட்டேன், ஆனால் பட்ஜெட்டில் ஓட்டை விழுந்தது. சரி வாயக்கட்டி வயித்தக்கட்டி பட்ஜெட்டை அதிகமாக்கிடலாம் என்று முடிவுக்கு வந்தேன். இந்த இடத்தில் வாயைகட்டி வயித்தைக்கட்டி என்றால், ஓட்டலுக்கு போய் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற முடிவெடுத்தேன், அடுத்து வயித்தக்கட்டி என்பது அப்படியே தவிர்க்க இயலாமல் போய்விட்டால் எப்பவும் வரும் பில் தொகையை விட பாதியாக வருமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து என் சக்திக்கு மீறிய ஒரு பட்ஜெட்டை ஒதுக்கிவிட்டேன்.

புடவை வாங்கலாம் சரி எங்க வாங்கலாம் என்று அதற்கு தனியாக மூளையை மீண்டும் கவுட்டி கவுட்டியாக யோசிக்கவிட்டேன். பல இடங்களை என் கண் முன் நிறுத்தியது என் மூளை. முதலில் நங்கவள்ளி, வனவாசி பட்டு எடுக்கலாம் என்று முடிவு செய்து ஊருக்கு சென்ற போது யாருக்கும் தெரியாமல் தோழனை அழைத்துக்கொண்டு நங்கவள்ளி சென்றேன். வழி நெடுக தென்னை மர நிழலியே சென்று அந்த ஊருக்க போய் நிறைய கடைய பார்த்தேன் அப்போதும் என் மனசுக்கு எதுவுமே பிடிக்கல. பிடிக்கல என்பதை விட நான் எதிர்பார்த்தது இல்லை, தலையை தொங்கபோட்டுட்டு மீண்டும் ஊரு வந்து சேர்ந்தேன்.

அடுத்து கோவைக்கு அருகில் உள்ள சிறுமுகைக்கும், சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டாம்பாளையத்துக்கும் சேலை வாங்க போனேன் ஆனாலும் நான் எதிர்பார்த்த சேலை இல்லை, பரவாயில்லை என்று ஒரு நாலு சேலை எடுத்து வந்தேன். அதை வீட்டுக்கு கட்டிலுக்கு அடியுல் ஒளித்து வைத்துவிட்டு, மனதுக்கு பிடிச்ச நடிகை எல்லாம் எப்படி சேலை உடுத்துறாங்கன்னு மனச அலை அலை என்று அலைய விட்டேன்.

ஒரு கட்டத்தில் சாலையில் மிக அழகாக புடவை கட்டி வந்த ஒரு பெண்மணியை ரொம்ப பிடிச்சிருந்தது சத்தியமாக புடவை மட்டும் தாங்க புடிச்சிருந்தது. அவரிடம் சென்று எப்படி அழைப்பது என்று தவித்தேன் கடைசியில் அக்கா என்றழைத்து இந்த புடவை எங்க வாங்கியது என் மனைவிக்கு எடுக்கனும் சொல்லுங்களேன் என்றதும், அந்த அக்கா சிரித்துக்கொண்டே இது நெகமம் பட்டு என்றது இதற்காக நெகமத்துக்கு அழைய முடியாது என்று கோவையிலேயே எங்க எடுக்கலாம் என்று விசாரித்தேன்.

ஆனால் இப்ப தாங்க தெரியுது ஒரு புடவை எடுக்க தேவையில்லாமல் 4 புடவை எடுத்துவிட்டேன் ஆனாலும் மனசுக்கு பிடிச்ச புடவை கிடைக்கலீயே என்ற வருத்தம் தான் அதிகம் இருந்தது.

புடவைக்கடைக்கு போனா பொண்ணுங்க ஆதிக நேரம் தேடி தேடி கடைசியில் மனசுக்கு பிடிச்சும் பிடிக்காமலும் ஒரு புடவை எடுக்க எம்புட்டு நேரம் ஆகிறது என்பதை அறிய முடிந்தது.

கோவையிலேயே சென்னை சில்க்சில் ஆரம்பித்து, ஸ்ரீதேவி, போத்தீஸ், பிஎஸ்ஆர்  என கடை கடையா ஏறி சுத்தினாலும் அந்த புடவை கிடைக்கல. சரி இப்படியே போனா புடைவ எடுக்க முடியாது அப்புறம் பிறந்தநாள் போய் பொங்கலே வந்துடும் என்று புடவைக்காக அழை அழை என்று அழைந்து கடைசியா மஹாவீர்ல புடிச்சங்க அந்த அழகான புடைவையை, வாயக்ட்டி வயித்தக்கட்டி சேர்த்து வைத்த பணம் எல்லாம் கொடுத்தாலும் புடவை அம்சமாக இருந்தது.

இதில் சிறப்புஅம்சமே என்றாலும் நான் எடுத்த புடவையை எனக்கு வேண்டும் என்று இரண்டு அழகு ஆண்ட்டிகள் என்னிடம் வந்து கேட்டதில் தான் சந்தோசம், ஆனந்தத்தில் மஹாவீரில் இருந்து கீழே கிராஸ்கட் ரோட்டில் குதிக்கலாமான்னு இருந்துச்சு.. அப்படி ஒரு மகிழ்ச்சி.

புடவை எடுத்த காசுல கால் பங்கு கொடுத்து பிளவுஸ்ம் தெச்சு, பொறந்தநாள் அன்னிக்கு பொஞ்சாதிக்கு கொடுக்கும் போது செம்ம சந்தோசம் !!

இருக்காதா பின்ன எச்சை கையில் காக்கா ஓட்டாத பையன் இம்புட்டு செலவு செய்து புடவை எடுத்து கொடுத்தா மகிழ்ச்சியாத்தானே இருக்கும். சரி எதுக்கு இம்புட்டு செலவுல எனக்கு புடவைன்னு ஒரு கேள்வி, எல்லாம் உனக்காகத்தான் இந்த வருசம் ஸ்பெசல் என்று ஒரு பிட்ட போட்டுட்டு மனசுக்குள்ள நெனச்சேன், சோழியும் குடுமையும் சும்மா ஆடுமா, பசங்களோடு கோவா டூர் திட்டம் போட்டு இருக்கேன்னு, நேரம் வரும் போது கப்புனு சொல்லனும்ன்னு முடிவு செய்துட்டேன்...

புடவை கட்டிகிட்டு வேலைக்கு போய் வந்த மனைவி  சந்தோசமாத்தான் கோயிலுக்கு போகலாம், அங்க போகலாம்ன்னு பேசிகிட்டு இருந்தா, நான் தான் வாய வெச்சிகிட்டு இருக்காமல் ரெண்டு கடலைய போட்டு மென்னுகிட்டே அப்புறம் என்ன சொன்னாங்க உன் தோழிகள் எல்லாம் கேட்டது தான் மீதி. அடப்போங்க ஒருத்தங்க பார்டர் பெரிசா வெச்சா நல்லா இருக்கும்ங்குறாங்க, ஒருத்தர் சின்னதா வெச்சா நல்லா இருக்கும்ங்குறாங்க, இன்னொருத்தர் அந்த கலர் இருந்தா நல்லா இருக்கும்ங்குறாங்க, ஆனா யாருமே நல்லா இருக்குன்னு சொல்லலீங்க ஆனா கருத்து மட்டும் சொன்னாங்கன்னு பொசுக்குன்ன சொல்லிட்டா.

அடப்பாவி தோழிகளே இது உங்களுக்கே நியாயமா கஷ்டப்பட்டு  துணி எடுத்து கொடுத்தேன், இப்படி பொசுக்குன்னு கருத்து சொல்லாமா போய்ட்டீங்களே, இனி எப்படி நான் கோவா போறது???

4 comments:

  1. எல்லாக் கடைக்கும் நாங்க தான் சப்ளையே...! சீக்கிரம் இங்கே வாங்க...!

    ReplyDelete
    Replies
    1. பாருங்க, நீங்க இருக்கச் சொல்லோ எங்கெங்கியோ போயிருக்காரு நம்ம தோஸ்த்து.

      Delete
  2. ஹாஹா! ரொம்ப சிரமம்தான்!

    ReplyDelete
  3. ஆனா உங்களுக்கு ஏன் இந்த விபரீத புத்தி வந்திச்சு?

    ReplyDelete