Sunday, April 26, 2015

பயணமும், சுவையும்..

ஞாயிறு காலை அவரசமாக ஆந்தியூர் செல்ல வேண்டி இருந்ததால் இருக்கின்ற வேலை எல்லாம் விட்டுபுட்டு ஊருக்கு புறப்பட்டேன்.. எப்பவும் போல பெருமாநால்லுர் வழியாக சென்றேன். பெருமாநல்லுர் வரை மண்டை காய்ச்சல் தான் புதிய நான்கு வழிச்சாலை என்பதால் வழி எங்கும் ஒதுங்கி நிற்க ஒரு மரத்தையும் காணவில்லை. இந்த சாலை போட்டு முடித்ததற்கு பின் சாலை இரு பக்கத்திலும் உள்ள மிச்ச சொச்ச இடத்தில் மரத்தை நட்டு வைத்தால் புண்ணியமாக போகும்.
 
பவானி போய் அந்தியூர் போலம் என்றால் விசயமங்கலத்தில் டோல்கேட்டில்  50 ரூபாயை புடுங்கி விடுவார்கள் என்பதால் குன்னத்தூர், கோபி வழிய சென்று விடுவேன். எப்பவும் சாமக்கோழி போல ராத்திரியில் சென்றவனுக்கு பகலில் சென்றது ஓர் இன்ப அதிர்ச்சி தான்.
 
குன்னத்தூரில் தொடங்கி கோபி வரை வழி எங்கும் சாலையோர கடைகள். இரு பக்கமும் எதுவும் விளையாத காடுகள், சாலை இருபக்கமும் புளியமரம், இதை விட முக்கியம் அந்த சாலை நேர்த்தியாக போடப்பட்டு இருந்தது. முந்தைய நாள் பெய்த மலைக்கு மண்வாசத்தோடு இருந்தது அந்த சாலை. சாலையா நமக்கு முக்கியம் சாலையோரம் இருந்த கடைகள் தானய்யா முக்கியம்.
 

 
முதலில் நொங்கு கடையில் வண்டியை ஓரம் கட்டி, ஒரு ரவுண்டு கட்டினோம். அதுவும் நொங்கை சீவி அதில் இருக்கும் 3 கண்களை பாத்ததும் வாயில் வாட்டர்பால்ஸ் கொட்டியது. சீவிய நொங்கை வாங்கி பெருவிரலை உள்ளே விட்டு நோண்டி தண்ணீரை குடித்துவிட்டு, அந்த கண்களை பெருவிரல் பதம் பார்க்க நாக்கு நொங்கின் ருசியில் மதிமயங்கி தாண்டவமாடியது. நொங்கின் விலை மிக குறைவு தான் ஆனால் சுவைதான் அருமை.. அந்த சாலையின் செல்பவர்கள் மறக்காம நொங்கு சாப்பிடுங்க..
 
நொங்கை சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்து பயணத்தை துவக்கினால் கம்மங்கூழ் வா வா என்று வழி எங்கும் அழைக்கிறது. ஒரு பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் வண்டியை புளிய மரத்தடியில் ஓரங்கட்டினால், கம்மங்கூல் மற்றும் கரும்புச்சாறு கடைகள் இருந்தன.
 
எதை சாப்பிடுவது எதை விடுவது என்று தெரியாமல் அப்போதைக்கு கம்மங்கூழ் சாப்பிட்டோம். கம்மங்கூழ் வீட்டில் இருப்பது போல தயிர் சேர்த்து நன்றாக கரைத்து வைத்திருந்தனர் கூட கொஞ்சம் வெங்காயத்தை போட்டு கொடுத்தார். தொட்டுக்க நிறைய சைடிஸ் இருந்தாலும் நான் சாப்பிட்டது பச்சை மிளகாய் தான். ஒரு மிளகாய் ஒரு வாய் கம்மங்கூழ், காரமும் கூழும் உள்ளே போக போக வயிறு கின்னுன்னு ஆனது.
 
வயிறு கின்னுன்னு ஆனா சும்ம விட முடியுமா அதை போக்க எதவாது குடிக்க வேண்டும் என்று தோன்றியது கோபி, குன்னத்தூர், கொளப்பலுர் ஏரியாவில் கிடைக்கும் ஒயிட்ரோஸ் ஞாபகத்துக்கு வந்தது. அந்த ஏரியாவின் தண்ணீருக்கு சுவை அதிகம் அதுவும் கேஸ் கூட சேர்ந்ததால், கோலிசோடவில் ஒயிட்ரோஸ் வைத்திருந்தனர். ஒயிட்ரோஸ் நிரம்பி இருந்த வயிரை ஜீரணமாக்கியது.
 
அப்புறம் எங்கேயும் நிற்காமல் ஊர் செல்ல வேண்டும் என்று சென்று கொண்டு இருந்தோம். கோபி தாண்டி அத்தாணி செல்லும் சாலையில் வலைந்து நெளிந்து செல்ல வழி எங்கும் அப்போது பறித்த வெள்ளரி பிஞ்சுகளும், வெள்ளரி பழமும். வெள்ளரி பிஞ்சு அடிக்கடி சாப்பிடுவேன். பழம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆனதால் என் நாவின் கட்டுப்பாட்டில் நின்றது வண்டி. ஒரு வெள்ளரி பழம் 25 ரூபாய்க்கு வாங்கினேன். எப்படியும் 4 கிலோ வரும். வெள்ளரி பழம் வாங்கி செல்கையிலே வெள்ளரிபழத்தின் மனதோடு என் நாசி ஒன்ற, கூடவே நாக்கும் சேர்ந்து கொண்டது.
 

வீட்டுக்கு சென்றதும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து வெள்ளரி பழத்தை ஒரு பிரட்டு பிரட்டி சாப்பிட வேண்டும், இல்லையேல் வெள்ளரி பழத்தோடு நாட்டுச்சக்கரை சேர்த்த பழரசம் சாப்பிடவேண்டும் என்ற கற்பனையோடவே சென்று விட்டேன் ஊருக்கு.. சென்றதும் வெள்ளரிபழத்தோடு நாக்கு சண்டையிட்டு தோல்வி அடைந்திருந்தது.
 
இரவு ஊருக்கு கிளம்பி வந்ததால் பகல் எங்கும் பட்டைய கிளப்பிய சாலையோர கடைகள் எல்லாம் உறங்கி இருந்தன.
 
அந்த சாலையில் பயணிக்கும் போது மறக்காமல், நேரத்தை பற்றி கவலை இல்லாமல் நாக்கை கொஞ்சம் தாண்வமாடவிடுங்கள்...

Sunday, April 19, 2015

சவரக்காரனின் கவிதை மயிருகள்...

ஒவ்வொரு கிராமங்களிலும் நிச்சயம் நாவிதன் இருப்பார்கள். நாவிதன் இல்லாத கிராமத்தை பார்ப்பது அரிது. குடிமகன்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் உயர் வகுப்பினரின் நிகழ்வுகளில் சாங்கியம், சம்பிரதாயம் என்ற சடங்குகளை செய்வார்கள். சாங்கியம் சம்பிரதாயத்துக்கு வைத்துக்கொண்டாலும் அவர்களின் வாழ்வாதாரம் சற்று சிறப்பாக இல்லை என்றே சொல்லாம்.

இந்த நாவிதர்களை பற்றி நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும், சிறுவயதில் தகரடப்பாவில் கத்தியும், கத்திரியும் கொண்டு வீடு வீடாக வருவார்கள், வீட்டு பின்னால் உட்கார வைத்து கதற கதற இருக்கும் முடிகளை ஒன்ட வெட்டுவார்கள். பின் காலம் மாற மாற  ஊருக்குள் ஓரு கடை வைத்து அதில் ஒரு சேர் முன்னாடி பின்னாடி பார்க்க கண்ணாடி, கடை முழுவதும் அரசியல் தலைவர்கள் படம், நிறைய செய்தித்தாள்கள் என அவர்களை அலங்கரித்திருக்கும். அவர்கள் கடைக்கு சென்று பேச்சுக்கொடுத்தால் உள்ளுர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

எனக்கு பார்பர்ஷாப் என்றதும் உடனே நினைவுக்கு வருவது அங்கு சுவரில் சிறைபட்டு இருக்கும் அழகிகளின் படங்கள் தான். மது கோப்பையை ஏந்தி தலை முடிகளை பறக்கவிட்டு, ஒரு கண்ணை ஓரமாக பார்த்து உதடை பிதுக்கும் அந்த அழகி தான் என் அப்போதைய கனவு கன்னி.

பத்திரிக்கைகள் அறிமுகம் ஆனாது எல்லாம் பார்பர்ஷாப்பில் தான். இப்படி நிறைய விசயங்கள் கூடவே இருக்கும். ஒரு கிராமத்தில் அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை அவரின் கோபத்தை அவருக்கு உரித்தே வகையில் அவர் சமூகம் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தோலுருத்திகாட்டி உள்ளார் இந்த சவரக்காரனின் கவிதை மயிறுகளில் கவிஞர் கலைவாணர்.

சில நாட்களுக்கு முன் திருப்பூர் குணா அவர்கள் கீற்று இணையதளத்தில் சவரக்காரனின் கவிதை மயிறுகள் என்று புத்தகத்தின் விமர்ச்சனத்தை எழுதி இருந்தார். அதில் கலைவாணனின் கோபமான உண்மையான வரிகளை பற்றி எழுதி இருந்தார், அதில் இருந்து இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று தேடிக்கொண்டு இருந்தேன்.

நேற்று முன் தினம் அண்ணன் அவைநாயகத்திடம் இருந்து இந்த புத்தகத்தை பெற்று இந்த வார இறுதி நாட்களை சவரக்காரனின் கவிதை மயிருகளிடையே பயணித்தேன். நீண்ட நாட்களுக்கு பின் வாசிக்கும் கவிதை புத்தகம் என்பது மட்டுமல்ல, ஒரே மூச்சில் படித்து முடித்த தொகுப்பும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிதன்
முண்டிதன்
இங்கிதன்
சங்கிதன்
நால்விதன்
தெரிந்தவனே நாவிதன்

என்ற நாவிதன் பற்றியான அவரின் அறிமுகத்திலேயே எழுந்து உட்காந்து விட்டேன்.

படிப்பு வரலைன்னா
உங்கப்பங்ககூட
செரைக்கபோக வேண்டியது தானே..

என்ற வரி அந்த இனத்தின் மாணவர்கள் பலர் தான் காதுகளில் இந்த வரியை கேட்டு பதில் சொல்ல இயலாமல், கோபத்தை எல்லாம் மனதில் போட்டு பூட்டி வைத்த வரியாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஊரில் யார் வீட்டிலாவது பெண்கள் சமைஞ்சுவிட்டாள், அவர்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் இவர்கள் பார்த்து பாத்து செய்கின்றனர். ஆனால் இவர்கள் வீட்டு பெண் சமைஞ்சதை யாரிடமும் சொல்லவில்லை என்று அவர்களின் ஏழ்மைநிலமையை பகிரங்கமாக பதிவு செய்திருக்கிறார்.

தன் சாதியை கலப்பு திருமணம் நடக்கும் இடத்தில் தன் சித்தப்பா சொல்லிவிடுவாறோ என்ற பயத்தை இப்படி சொல்கிறார்.

அடுத்த மாசம்
அக்கா மகனுக்கு
மெட்ராசுல கல்யாணம்
நாயக்காமாரு வீட்ல
பொண்ணு எடுத்திருக்கு

ஊர்ல இருந்து
ஓட்ட வாயரு
விஜயன் சித்தப்பாவும்
வருவாராம்

பொண்ணு வீட்டுகாரன்கிட்ட
அவரு என்ன சொல்வாரோன்னு
அக்கா ஊருபட்ட சாமிய கும்பிடுக..

தன் சாதியை தன் சாதி மக்களே  சொல்லிடுவாங்களோ என்று அந்த அளவிற்கு சாதியை அவர்களே கீழ்தரமாக பார்க்கின்றனர் என்பதை சொல்லி இருக்கிறார்.

வீடு சுத்தமாக வைத்திருப்பதை மற்ற சமூகத்தினர் எப்படி பார்க்கின்றனர் என்பதை இப்படி சொல்கிறார்

ஒரு நாள் வீட்டுக்கு வந்த
செட்டி தெரு ஸ்ரீமதி
சொல்லிட்டு போனா

மல்லிகாளுக்க அடுக்கள
நாசுவத்தி குடி மாதிரியா இருக்கு
பிராமணத்தி வீடு
தோத்து போயிரும்.

இறந்தவருக்கு செய்யும் சடங்கை சொல்லி அதன் முடிவை சொல்லும் போது நெகிழவைக்கிறார்

மது போதையில்
மாரடைத்து போன
பரமேஸ்வரன் நாயருக்கு

சவரம் செய்து
மூக்குச்சளி, குண்டி பீ துடைத்து
குளிப்பாட்டி பவுடர் போட்டு
கை கால்
பெருவிரல்கள் சேர்த்து கட்டி
உடை மாற்றி சென்ட் அடித்து

பிரதேசத்தை கருநீள  பெஞ்சில்
நீளமாக படுக்க வைத்து விட்டு
கொஞ்சம் அரிசியுடன் வந்தார் அப்பா

அன்னைக்கு ராத்திரி
வீட்டுல சோறு பூரா
பொண நாத்தம்...

இந்த கவிதை வரிகளை போகுற போக்கில் நிச்சயம் பார்க்க இயலாது. இறந்த பிணத்தை வாய் கட்டி பொட்டு வைத்து விரல் கட்டி நடு வீட்டில் போடும் வரை அனைத்தையும் செய்பவர்கள் நாவிதர்களே. அதைச்சொல்லி கடைசியாக அன்று இரவு சாப்பிடும் சாப்பாட்டு பொண நாத்தம் முடித்துவிட்டார். அறிவியல் பூரணமாக பார்க்கும் போது இதில் நிறைய தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் நிறைய இருக்கு, ஆனால் இன்று வரை பல இடங்களில் இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த கவிதை புத்தகத்தில் தன்னை மட்டுமல்லாமல் அப்பா, அம்மா, அக்கா தங்கை என குடும்பம் தவிர அரசியல், சாதியின் சமூக அவலங்கள் என ஒவ்வொன்றாக பிரிச்சு மேய்ந்திருக்கிறார்.

இவர் சவரம் மட்டுமல்ல பல தொழில்கள் செய்துள்ளார், பலவற்றில் அவமானப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். அக்குள், அடிவயிறு, முகம், தலை என ஒதுக்கப்படும் மயிருகளை வைத்து கவிதையாக பிணைத்துள்ளார். ஒரு காலத்தில் இவர்கள் சமூகம் பூர்வ குடி சித்த மருத்துவர்களாக வாழ்ந்துள்ளனர். காலப்போக்கில் மருத்துவத்தை பணம் உள்ளவர்கள் எடுத்துகொண்டு சவரத்தை மட்டும் இவர்கள் கையில் கொடுத்துவிட்டனர்.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை புத்தகத்தை முழுமையாக வாசித்து அதைப்பற்றி எழுதவும் என்னை துண்டி உள்ளது இந்த கவிதை புத்தகம். தன் சமூகத்தின் அவலத்தை கவிஞர் நம்முன் அடையாளம் காட்டி, தன் கோபத்தையும் கொட்டி உள்ளார்.

நாவிதர்களின் வரலாறு என்று நிறைய சொல்லலாம் ஆனால் அது வட்டாரத்துக்கு வட்டாரம் மிக மாறுபடும், கலைவாணர் அவர்கள் கூறியது அவர்களின் வட்டாரத்தை பற்றியானலும் இவர் சொன்ன பல சடங்கு முறைகள் எல்லா வட்டாரத்துக்கும் ஒத்து போகும்.

நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு தொகுப்பு. கவிதையை ரசித்து ரசித்து வாசிப்பவர்களுக்கு எல்லாம் இது ஒரு பொக்கிசம் என்பதை பதிவு செய்வதில் பெருமையடைகிறேன்.

92 பக்கங்கள்
விலை ரூபாய்- 75
கீற்று வெளியீட்டகம்
1/47ஏ அழகியமண்டபம்
முளகுமூடு அஞ்சல்
குமரி மாவட்டம்- 629167

Sunday, April 12, 2015

இளநீ எம்புட்டுங்க??

உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி போகும் போது சிப்காட் அருகில் உள்ள ரயில்வே கேட் போடுவதற்குள், அந்த இடத்தை கடந்து விடவேண்டும் என்று நான் மட்டுமல்ல, அந்த வழியா போகும் பலர் மனதிலும் நிச்சயம் வந்து போகும் இந்த சாதாரண நிகழ்வு.

அதுவும் எனது அலுலவகம் சில வருடத்திற்கு முன் இரத்தினம் டெக் பார்க்கில் இருந்ததால் வாரத்தின் 5 நாட்களும் என் நினைப்பு இரயில்வே கேட் மேலே தான் இருக்கும். அவ்வப்போது லாக் ஆகிடும் அப்புறம் ஊரைச்சுற்றித்தான் அலுவலகம் செல்லவேண்டும்.

மேம்பால பணிகள் முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் அந்த பக்கம் நான் செல்லும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது அடிக்கிற வெய்யிலில், அனல் காற்றோடு அந்த மேம்பாலத்தை கடக்கும் போது சும்மா ஜிவ்வென்று இருந்தது. என்ன அந்த வழியாக சாலையில் செல்லும் போதும் சரி, மேம்பாலத்தில் செல்லும் போதும் சரி, உயிரைகையில் பிடித்துக்கொண்டு தான் போகவேண்டி இருக்கும், ஆம் எமன் வடிவில் அந்த சாலையில் வரும் தனியார் பேருந்துகள் எல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் வந்து செல்லும்.

அடிக்கிற வெய்யிலுக்கு சாலையில் செல்வது நொம்ப கஷ்டந்தான். உடல் வெப்பத்தை தனிக்க அந்த சாலையில் இளநீர், நொங்கு, தெலுவு என வரிசையாக விற்றுக்கொண்டு இருப்பனர், கற்பகம் காலேஜ் தாண்டி இடது பக்கம் ஒரு இளைஞர் இளநீர் விற்றுக்கொண்டு இருந்தார். வண்டியை ஓரங்கட்டி நின்றேன். அவரை சுற்றிலும் செவந்த இளநீ, மற்றும் இளநீ குழை குழையாக இருந்தது. எந்த குழையில் எந்த இளநீ வேண்டும் என்று சொல்கிறோமோ அந்த இளநீயை வெட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
இந்த இளநீ கடை பையன் கிடா மீசை, மிரட்டும் பார்வை எல்லாம் இல்லை பையன் இந்தி பட ஹீரோ மாதிரி வழுவழுன்னு இருந்தார். ஒரு வேளை இந்திக்கார பையனோ என்று பேச்சை ஆரம்பித்தேன்.

"தம்பி, இளநீ எவ்வளவு ? "

" சார், 30 ரூபாய்ங்க "

"என்னய்யா இது ஊருக்குள்ள தான் 30, 35ங்குறாங்க பொள்ளாச்சிக்கு பக்கத்துல இருந்து கிட்டு 30 ரூபாய் சொன்னா நியாயமாப்பா ??"

" சார் உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் 25 ரூபாய்க்கு தர்றேன்"

"சரி தம்பி, 2 இளநீ கொடுப்பா, நல்ல வழுக்கையா கொடுப்பா, நீ பாட்டுக்கு தேங்காயா கொடுத்திடாதே, இல்ல அரை பதமா கொடுப்பா "

"சார், வழுக்கை இல்ல சார், வேனும்னா அரை பதமாக தருகிறேன் "

"சரிப்பா, இந்த குழல் எல்லாம் வேண்டாம் அப்படியே வாய வெச்சு ஊரிஞ்சுவது போல கொடு"

இரண்டு இளம் இளநீயை எடுத்து அவனுடைய நன்கு தீட்டப்பட்ட அருவாளில் இரண்டு சீவு தான் சீவினான், ஒரு கையில் இளநீ ஒரு கையில் அருவாள் என அவன் கத்தியை வீசிய இலாவகம் பயமாக இருந்தாலும், அழகாக இருந்தது இப்போது இளநீ..

" இந்தாங்க இளநீ என்று கொடுத்தான். "

நாங்க இளநீ வாங்கி கொடுக்கையில் அந்த சாலையை பார்த்துக்கொண்டே இளநீ குடித்தோம், சாலையில் எமன்கள் எட்டி எட்டி பார்த்துக்கொண்டு சென்று கொண்டு இருந்தார்கள். போதக்குறைக்கு கார்களும் அப்படித்தான் சென்று கொண்டு இருந்தன.

எங்கிருந்தோ வேகமாக வந்த ஸிப்ட் கார் அந்த கடையை நோக்கி வந்து சர்ர்ர் என்று பிரேக் அடித்து நின்றது. அந்த காரில் தேவதைகள் இருப்பது என் எக்ஸ்ரே கண்ணுக்கு பட. தேவதையை பார்க்க ஆர்வம் ஆனது எனது கண்கள்.

பின் இருக்கையில் ஜீன்ஸ் பேண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பரத்தை தாங்கிய ஒரு அரைக்கை பனியனோடு இறங்கியது அந்த தேவதை, அப்படி திரும்பி நின்றது அதன் நெஞ்சில் மேல் நின்று இருந்தார் டோணி ( மனுசன் கொடுத்து வெச்ச ஆளய்யா) தேவதையை பார்த்ததும் என் கண்கள் சப் என்று ஆகியது. உடையையும் அலங்காரத்தையும் கலைத்தான் நிச்சயம் அது என் கண்களுக்கு தேவதையாக தெரியாது, சுமாராகத்தான் இருந்தது  அதானல் அடுத்த இளநீக்கு ஆர்டர் தராமல் இளநீயை வெட்டி அரைப்பதத்தை சாப்பிடலாம் என்ற அந்த தம்பியிடம் நீட்டினேன்..

அப்போது அந்த பெண்ணோடு வந்திருந்த அழகு பையன் நல்ல வாட்டசாட்டமாக இருந்தான். "அழகு பையனுக்கு சுமார் பிகர் தான் வாய்க்கும் என்பது சரியாகத்தான் இருக்கும் போல" என்று மனதில் அசை போட்டுகிட்டே அவர்கள் அருகில் சென்றேன்.

அந்த பையன் தம்பி இளநீ எவ்வளவு என்றான், 1 நாற்பது ரூபாய் சார் என்றான். சரி தம்பி 2 கொடு என்றான். நான் அவன் வெட்டிக்கொடுத்த அரை பதத்தை சாப்பிட்டுக்கொண்டு, இவர்கள் மீண்டும் பேரம் பேசுவார்களா என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்தேன்.

ஒன்னும் நடக்கல என்பதால் வண்டியை ஸ்டார்ட் செய்ய உதைத்தேன். அந்த கார் கார ஹீரோ 80 ரூபாய் கொடுத்தான், அதை வாங்கிக்கொண்டே அந்த பையன் என்னை பார்த்தான் மெல்லிய புன்னகையோடு, அவன் முகத்தில் தெரிந்தது அவன் தொழில் விரைவில் அதிபர் ஆவதற்கான ஒளிவட்டம்...

Thursday, April 9, 2015

போகிற போக்கில்..

கோவையில் இருந்து கோபி செல்லும் பேருந்தில் கடந்த வாரத்தில் ஒரு நாள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது, லஷ்மி மில் பேருந்து நிலையத்தில் முன் வாசலில் ஏறி வண்டியை கடைசி வரை நோட்டமிட்டேன், இருக்கை இல்லாததால், பின் பாகத்தை கம்பியில் முட்டக்கொடுத்து நின்று ஊரை பராக்கு பார்க்க ஆரம்பித்தேன்.
 
ஒவ்வொரு நிறுத்தத்திலும் சிலர் ஏற ஏற வண்டி நிரம்பிக்கொண்டே வந்தது, மருந்துக்கு கூட நடத்துனர் சிரிக்கவே இல்லை மனிதன் உர் என்றே இருந்தார். ஒரு வேளை சிரித்தால் சில்லரை கொட்டி விடும் என்று நினைத்திருப்பார் போல. அக்கினி நட்சத்திரம் வரவில்லை ஆனால் அக்னியின் அனல் கதகதத்தது. பேருந்தின் மேற்கூரையை பொத்துக்கொண்டு வந்தது வெய்யிலின் உக்கரம்.
 
சித்ரா நிறுத்தத்தில் ஒரு பெரியவர் தள்ளாடி ஏறினார், இரண்டாவது இருக்கையில் இருந்த ஒருவர் எழுந்து பெரியவருக்கு இடம் கொடுக்க எழுந்தார். உண்மையிலே மிகவும் பாரட்ட தோன்றியது அந்த இடம் கொடுத்தவரை, பெரியவர்களுக்கு வழி விடும் மற்றும் இடம் கொடுக்கும் ஆட்களை எல்லாம் இங்கு விரல் விட்டு எண்ணலாம்.
 
இத்தனைக்கும் பெரியவர் மேலே ஏறியதும் அதன் பக்கத்தில் இருந்தவர் காதில் பெரியதாக ஸ்பீக்கரை வைத்துக்கொண்டு மண்டையை ஆட்டி ஆட்டி வந்தார். எனக்கு மண்டையில் போடனும் போல தோன்றியது. அதன் அருகில் இன்னொருவன் சின்ன ஒயரை காதில் விட்டுக்கொண்டு அவனுக்கு ஏத்தாற் போல் மண்டையை ஆட்டி வந்தார்.
 
மனிதாபிமானம் அற்ற ஊரில் நாம் இருக்கிறோம் என்று என் மனம் என்னை யோக்கியனாக காட்டியது. நான் அவ்வப்போது இடம் விடுவேன், எதாவது புத்தகம் கையில் இருந்தால் மருந்துக்கு கூட திரும்பி பார்க்கமாட்டேன் என்பது தான் நிதர்சனம். பேசிகிட்டே பெரியவரை விட்டுட்டேன் பாத்தீங்களா...
 
பெரியவருக்கு இடம் விட அந்த நல்ல மனிதர் எழுந்ததும் பெரியவர் அங்கே வந்தார் அப்போது என் அருகில் இருந்த ஒரு பன்னி மூஞ்சி வாயன் ஓடிப்போய் அந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டான், பெரியவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஆனால் அந்த இடம் விட்டவர் கேள்வி கேட்டார், அதற்கு அவன் சொன்ன பதிலோ இடம் இருந்தது உட்கார்ந்தேன் அவ்வளவு தான் என்றான்.
 
இப்போது பேருந்து கோல்டுவின்சை தாண்டி சென்றது.
 
இவர்கள் சத்தம் போடுவதை பார்த்த சிரித்தால் சில்லறை கொட்டும் என்று இருந்த நடத்துனர் பெரியவருக்கு சீட் விடலாமுள்ள தம்பி என்று பேசினார். இந்த பன்னி மூஞ்சு வாயனைப்பத்தி சொல்லாம விட்டுட்டேன் பாத்தீங்களா.. கட்டையா, குட்டையா நல்ல உயர்தர பேண்ட், சர்ட், வுட்லேண்ட் சூ என்று ஆள் பெரிய இடத்து பிள்ளையாகத்தான் இருந்தான் ஆனால் கருத்தவன் அதனால் தான் எல்லோர் கேள்வி கேட்கும் போதும் டக் டக்குன்னு பதில் சொன்னான்.
 
கடைசியா எல்லாரும்  உட்கார்ந்து தொலைகிறான் என்று விட்டு விட்டு, வேத்து ஊத்தும் உடலை வெப்பக்காற்றால் நனைத்துக்கொண்டு இருந்தனர் நானும் தான். பேருந்து கருமுத்தம்பட்டியை அடைந்தது இறக்கமற்ற அந்த பன்னி மூஞ்சிவாயன் இறங்கி போனன்.
 
படிச்சா மட்டும் போதாது கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டும், இவனுக எல்லாம் நாளைக்கு அடிபட்டா எவனும் கண்டுக்காம, போகும் போது தான் இவனுக்கு மனிதாபிமானம் என்றால் என்ன வென்ற தெரியும் என்று முனு முனுத்தார் சிரித்தால் சில்லறை கொட்டும் என்று நான் நினைத்த நடத்துனர்.

அஞ்சறைப்பெட்டி 09.04.2015

இந்த வாரம் தமிழ் சமூகத்திற்கு இழப்பான வாரம், இழப்புகள் ஒவ்வொன்றும் மீட்க முடியாதவை, எட்ட இருந்து பார்க்கும் நமக்கு அது செய்தியாகத்தான் இருக்கும், ஆனால் அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எவ்வழியிலும் ஆறுதல் சொல்ல இயலாமல் தவிக்கத்தான் வேண்டும்..

*************************

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச்சென்ற கூலித்தொழிலாளிகளை சுட்டுக்கொன்றுள்ளது ஆந்திர அரசு. இதன் மூலம் ஹைடெக் முதல்வர் என்று எல்லோராலும் அறியப்பட்டவர் என்ன சொல்ல வருகிறார் என்று தான் புரியவில்லை.

காட்டை அழிக்க சென்றார்கள் அதனால் சுட்டோம் என்கின்றனர். இவர்கள் வெறும் கைக்கூழிகள் தான் இவர்களை வெட்ட அனுப்பிய அந்த கொள்ளைக்கார கும்பல் தலைவனை இன்னும் பிடித்தாக தெரியவில்லை, முக்கியமாக சொல்லப்போனால் அம்புகளை சுட்டு வீரத்தை காண்பித்துள்ளனர் அம்பை எய்தவனை பிடிக்க முடியாமல். 

நிச்சயம் பெரிய பின்புலம் உள்ளவராகத்தான் இருப்பார் இந்த கும்பலின் தலைவன், மொத்தத்தில் பணம் படைத்தவனை காப்பாற்ற அப்பாவி மக்களை கூலித்தொழிலாளிகளை கொன்றள்ளனர். அப்பாவிகளை கொன்ற வீரர்களுக்கு என் கண்டனத்தை பதிவாக்குகிறேன்...

*************************



இந்த வாரத்தின் முக்கிய இழப்பு, முக்கியமாக தமிழ் இலக்கிய உலகில் எழுத்து உலகில் ஜேகே என்று கம்பீரமாக அழைக்கும் அந்த எழுத்து சிங்கம் ஜெயகாந்தன் அவர்கள். அவர் எழுதிய ஒரு பத்து கதைகளை மட்டும் தான் நான் இதுவரை படித்துள்ளேன். ஆனால் அவரின் எழுத்து வசீகரம் ரொம்ப ஈர்க்கிறது. படிக்க ஆரம்பித்தவுடன் முடித்து விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு அகலுவேன் அந்த அளவு ஈர்ப்பான எழுத்து.

இனி இவர் போல் இன்னொரு எழுத்தாளனை அடையாளம் காண்பது அரிது.

*************************

" இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை "  இப்போதும் இந்த கனீர் குரலை கேட்டுக்கொண்டுதான் எழுதிக்கொண்டு இருக்கேன். வசீகரமான குரல், ஒவ்வொருமுறை இவரின் பாடல்களை கேட்கும் போதெல்லாம் புத்தணர்வு வந்தது போலத்தான் இருக்கும், இவரின் மறைவு இசையுலகில் ஈடுசெய்ய இயலாத மறைவு..

*************************

ஊரில் இருந்து சொந்த பந்தங்கள் வீட்டுக்கு வந்தார்கள் என்றால் அவர்களை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்று தான் அழைத்துவருவேன், பின் அவர்கள் செல்லும் போது அங்கு தான் இறக்கி விட்டு பேருந்தில் ஏற்றிவிடுவேன். எப்போது சென்றாலும் பேருந்து நிலையத்தின் முன் உள்ள மரங்களின் முன் தான் வண்டியை நிறுத்துவேன்.

எப்போதும் அந்த இடம் குளிர்ச்சியாகவே இருக்கும், அதற்கு எதிர்புறம் உள்ள தமிழ்நாடு ஓட்டலை ஒட்டியுள்ள பகுதிகளும் அப்படித்தான் இருக்கும். அங்கு சென்று வருவேதே மனதிற்கு இதமான ஒன்றாகத்தான் இருக்கும்..

நேற்றும் ஒர் உறவினரை இறக்கிவிடச்சென்றேன் இப்போது எங்கள் ஊர் அந்த இயற்கை காற்றை தின்று செயற்கை காற்றும் இல்லாமல் மொட்டை வெய்யில் நங் என்று உச்சந்தலையை அழகு பார்க்கிறது.

ஏற்கனவே அவிநாசி சாலை வெய்யிலுக்கு ஒதுங்க சிறு இடம் கூட இல்லாமல் அத்தனை மரங்களையும் பலாத்காரம் செய்து சாலையை விரிவாக்கிவிட்டனர்..

எங்கள் ஊர் உலகத்தரத்திற்கு மாறகிறது, இயற்கையின் சுவடே இல்லாமல்...