Wednesday, October 30, 2013

அஞ்சறைப்பெட்டி 31/10/2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........



ஐப்பசியில் அடை மழை என்பது இந்த வருடம் கொஞ்சம் பழிக்கிறது போல அங்காங்கு மழை பெய்து நிலத்தை குளிரவைக்கிறது. எப்படியோ தீபாவளி அன்று மழை பெய்தால் தீ விபத்துக்கள் வெகுவாக குறையும் ஆதலால் வரவேற்போம் மழையை...
.......................................

 மோடி பேசிய பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்தது என்பது பாதுகாப்பு அலட்சியத்தை காட்டுகிறது. யாராக இருந்தாலும் சரியான பாதுகாப்பு கொடுக்கவேண்டியது அந்த மாநிலத்தின் கடமை. காழ்ப்புணர்ச்சியால் பாதுகாப்பை குறைத்தது அல்லது அலட்சியமாக இருந்தது கண்டிக்கத்தக்கது. இனியும் இது போன்ற தவறுகள் நடக்கா வண்ணம் இருக்கவேண்டும். ஒரு முறை போனால் கிடைக்காது உயிர் அது தலைவர்களது உடலாக இருந்தாலும் பொதுமக்கள் உடலாக இருந்தாலும் அதற்ககாவாவது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்...

 .......................................


தமிழகத்தின் அனைவரும் ஆவாலாக பார்ப்பது ஏற்காடு இடைத்தேர்தலைத்தான் அந்த அளவிற்கு மக்களுக்கு தேவையானவற்றை உடனே செய்து கொடுப்பாதல் மக்கள் இடைத்தேர்தலை விரும்ப ஆரம்பித்து விட்டனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அப்போது நடக்கும் இடைத்தேர்தலில் அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்பது அவர்களுடைய ஆவலாக இருக்கின்றது இப்போதும் அப்படித்தான். இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி நிச்சயமாக்கப்பட்ட ஒன்று..

.......................................

சென்னையில் புதிய பஸ்களில் இலைச்சின்னம் வரைந்துள்ளனர் இதனால் அவர்களது சின்னத்தை மக்களுக்கு விளம்பரப்படுத்துகின்றனர் என பலர் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். என்னைய பொறுத்தவரை பொதுக்கள் பேருந்தில் இடம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்களோ தவிர படத்தை பார்த்து யாரும் பேருந்தில் ஏறுவதில்லை. பொதுமக்களுக்கு இந்த பேருந்தால் பயன் இல்லையா என்றால் கோர்ட்டுக்கு சென்றவர்கள் எல்லாம் நிச்சயம் பதில் சொல்ல தயங்குவர்...

.......................................  



செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற் கொள்ள அமெரிக்காவின் 'நாசா' மையம் அங்கு கியூரியா சிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு மற்றும் மலையை போட்டோ எடுத்து அனுப்பி வைத்தது. காற்றின் வேகம், தட்ப வெப்ப நிலை போன்ற வற்றை அளவீடு செய்து தகவல்களை அனுப்பி வருகிறது.

கியூரியா சிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நிலப் பரப்பில் ஆங்காங்கே நகர்ந்து மாதிரிகளை சேகரித்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் உள்ள கொலந்தர் என்ற பெரிய மலையின் வடமேற்கு பகுதியில் ஏறி அங்குள்ள மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து வருகிறது.

15 முதல் 20 டிகிரி செங்குத்தான உயரத்தில் 2 முதல் 6 மீட்டர் வரை ஏறியுள்ளது. அது 40 மீட்டர் உயரம் ஏறி அங்குள்ள மண் மற்றும் பாறைகளை வெட்டி எடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்.

கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் சுமார் 10 ஆண்டுகள் தங்கியிருந்து ஆராய்ச்சி நடத்துகிறது.



..............................



இணைய நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மனம் திறந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
 
தீபாவளி அன்று அனைவரும் மறக்காமல் எண்ணெய் தேய்த்து குளித்து குடும்பத்துடன் கொண்டாடுங்கள் தீபாவளியை...


 
தகவல்

 
 
நார்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள எழில் மிகும் கிராமம், ர்ஜுக்கான்.

இதர பெரிய வசதிகள் ஏதுமற்ற இந்த கிராமத்தில் உள்ள நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு ஒர் உரத் தொழிற்சாலையும் ரெயில் பாதையும்  மட்டும் உண்டு.

இந்த உரத்தொழிற்சாலையையும், இப்பகுதியில் வளமான மண் உள்ளதால் விவசாயம் செய்து பிழைத்து கொள்ளலாம் என நம்பி 1900-ம் ஆண்டு வாக்கில் வெறும் 300 பேர் இங்கு குடியேறினார்.

தற்போது சுமார் 3500 மக்கள் வசிக்கும் இந்த கிராமம் ஆண்டில் 6 மாதங்கள் (மழை மற்றும் குளிர் காலம்) சூரிய ஒளியை சந்திக்க முடியாதபடி சுற்றிலும் உள்ள மலை முகடுகள் தடைக்கற்களாக இருந்தன.

இங்குள்ள மக்களின் உடலில் சூரியனின் கதிர்கள் விழ வேண்டும் என்றால் பல மைல்களுக்கு அப்பால் மலையை கடந்து செல்ல வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் இருந்த இங்கு வந்த மார்ட்டின் ஆண்டர்சன் என்பவர் இந்த கிராமத்தை கவ்வியிருந்த இருளை போக்க ஒரு வழியை கண்டுபிடித்தார்.

சூரிய காந்தி பூவைப் போல் சூரியன் போகும் திசையில் எல்லாம் அதை பின்தொடர்ந்து செல்லும் தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர்களின் உதவியுடன் இயங்கும் ராட்சத நிலைக் கண்ணாடிகளை மலைகளின் வடக்கு பகுதி உச்சியில் அவர் அமைத்தார்.

8 1/2 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட இந்த நிலைக்கண்ணாடிகள் மூலமாக இந்த கிராமத்தின் மையப் பகுதியான  சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதி ஆண்டின் 365 நாட்களிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கிறது.

தத்துவம்


பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.

ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.

Wednesday, October 9, 2013

அஞ்சறைப்பெட்டி 10.10.2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........




மீண்டும் புயல் வருகிறது தமிழகத்துக்கு அவ்வளவு அபாயமில்லை என்று தினமும் ஒரு செய்தியாக வருகிறது.. உண்மைய சொன்னால் எங்க ஊரில் கடந்த சில நாட்களாக வெய்யில் பட்டைய கிளப்புது. மழை வந்தால் சந்தோசமாகத்தான் இருக்கும். மழை வரனும், குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பனும், விவசாயம் செழிப்பாக இருக்கனும் இது தான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும்... பார்ப்போம் என்ன நடக்குது என்று...

.......................................

நிறைய முறை எழுதி இருந்தாலும் நான் அடிக்கடி செல்லும் வழித்தடம் என்பதால் மிக மிக ரசிப்பேன் நான் மட்டுமல்ல கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அனைவரும் நிச்சயம் ரசிக்கவேண்டிய பாதை அது.. கோபியில் இருந்து அத்தாணி செல்லும் பாதையும், கோபியில் இருந்து கள்ளிப்பட்டி செல்லும் பாதை, கோபியில் இருந்து பங்களாப்புதூர் செல்லும் இந்த 3 பாதைகளையும் தான் நான் மிக ரசிப்பது.. எவ்வளவு மனச்சுமை இருந்தாலும் அந்த பாதைகளில் சொல்லும் 20 நிமிடத்தில் நம் மனது சுத்தமாக ரிலாக்ஸ் ஆவது நன்றாக தெரியும்... கோபி போன நிச்சயம் இந்த பக்கம் போய்ட்டு வாங்கப்பா...



 .......................................

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி  முதல்வர் சுரேஷ், இவரை மாணவர்கள் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றது. இந்த செய்தியை படித்ததும் நிச்சயம் அந்த தவறு  செய்த மாணவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இந்த சம்பவத்திற்கு தரும் தண்டைனயால் மற்ற மாணவர்களுக்கு பாடமாக அமையவேண்டும்.

இன்று கல்லூரியில் சேரும் முன்பே எப்படியாவது கேம்பசில் வேலை வாங்கிட வேண்டும் என்று வெறியுடன் படிக்கும் மாணவர்கள் நிறைய கேள்விப்பட்டு இருக்கோம். கேம்பசில் வேலை கிடைக்காமல் வெளியே வந்து 5000ற்கு வேலைக்குச்செல்லும் பல மாணவர்கள் இருக்கின்றனர் இன்றும். இந்த மாதிரி தவறுகள் எதோ சில மாணவர்கள் செய்வதால் பாதிப்பு எல்லோருக்கும் தான் என்பதை இன்னும் உணரவேண்டும் மாணவர்கள்...

.......................................


இந்த வருடம் ஏற்காடு சட்டமன்றத்தில் வசிக்கும் மக்களுக்கு ஏறுமுகம் தான் எல்லா சாலைகளும் செப்பனிட்டு இருப்பர், எல்லா குடிநீர் குழாய்களிலும் தண்ணிர் வரும், மின்சாரம் தடைபடாது, தேவைகளை அனைத்தையும் உடனே செய்து கொடுப்பர் எல்லாம் இடைத்தேர்தல் படுத்தும் பாடு  இந்த முறை திமுக முன்னதாகவே களம் இறங்கி உள்ளதால் ஏற்காடு வாக்காளர்களுக்கு கொண்டாட்டம் தான்....

.......................................  

மோடி, மோடி எங்கும் இந்த பேச்சுதான், 10 வருடம் காங்கிரஸ் ஆட்சியில் அத்தியாவிசயப்பொருட்களின் விலை ஏற்றம், தமிழக மீனவர்கள் தாக்கல், கூடங்குளம், முல்லை பெரியார் என நிறைய தீர்க்கப்படாத பிரச்சனைகள், மோடிக்கும் இணையதளங்கள், மீடியாக்களால் பொது மக்களிடமும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது இது மோடி வெற்றிக்கான அறிகுறி என்று கூட சொல்லாம்.. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

..............................

தமிழக கட்சிகள் மத்திய ஆட்சிக்கு கூட்டணிக்கு அச்சாரம் இன்னும் தெளிவாக அறிய இயலவில்லை இங்கு மும்முனை போட்டி இருக்குமா அல்லது வழக்கம் போல் இரு முனை போட்டியா என்று குழப்பம் எல்லோரையும் போல எனக்கும் உள்ளது ஏற்காடு தேர்தலுக்கு பின் முழுதாக தெரியும்... அதற்கு பின்தான் இங்கு யாருக்கு 40க்கு 40 என்ற விவாவதம் களைகட்டும்..



..............................



குழந்தைகள் முதல் முதியவர் வரை சாக்லேட் என்ற மந்திர வார்த்தையை கேட்டவுடன் இளமுறுகலான அந்த பொன்னிறமும், மனதை சுண்டி இழுக்கும் அதன் மணமும், சுவையும் நாக்கில் நீரை சுரக்கச் செய்து விடும்.

கோக்கோ என்னும் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் அசல் சாக்லேட்களுக்கு உலகளாவிய அளவில் கடும் கிராக்கி உள்ளது. ஒருபுறம் சாக்லேட் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம், கோக்கோவை பயிரிடும் விளை நிலங்கள் நாளடைவில் குறுகிக்கெண்டே போகின்றன.

கோக்கோவை பணப் பயிராக விளைவித்து வந்த விவசாயிகள் பலர் தற்போது அதிக லாபம் தரக்கூடிய ரப்பர் மரத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கி விட்டனர்.

தரமான கோக்கோ விளைச்சலுக்கு பெயர் போன தென்னாப்பிரிக்க நாடுகளும் இனி கோக்கோவை பயிரிடுவதால் பெரிய லாபத்தை பார்க்க முடியாது என்று முடிவெடுத்து விட்டது.

இந்நிலையில், தேர்வில் 'பாஸ்' ஆகிய செய்தியை சொல்ல, காதலை வெளிப்படுத்த என ஆண்-பெண் இருபாலருக்கும் அருமையான தூதுவனாக இருந்து வந்த சாக்லேட்டின் விலை தாறுமாறாக எகிறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுவும், முழுக்க முகுக்க பதப்படுத்திய கிரீமி சாக்லேட்களுக்கு பதிலாக, சிறிதளவு சாக்லேட் கலக்கப்பட்ட மொறுமொறுப்பான 'வேஃபர்' வகைகள் தான் சந்தையில் கிடைக்கும்.

2020-க்கு பிறகு தூய சாக்லேட் என்பது சாமான்ய மக்களின் கைகளுக்கு எட்டாத அரிபொருளாகி விடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



 
தகவல்


உலகின் ஏல நிறுவன வரலாற்றில் முதன்முறையாக ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அரிய வகை வைரம் ஒன்று 3 கோடி டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 180 கோடி ரூபாய்) ஏலம் போனது.

பிரபல சோத்பை ஏல நிறுவனம் இந்த முட்டை வடிவ வைரத்தை ஏலம்விட போவதாக அறிவித்த போது 2 கோடியே 80 லட்சம் மற்றும் 3 1/2  கோடி டாலர்களுக்கு இடையே இது விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹாங்காங்கில் நேற்று 6 நிமிடம் நீடித்த இந்த ஏலத்தின் போது போன் மூலம் ஏலம் கேட்ட ஒருவர் இறுதியாக 238.68 ஹாங்காங் டாலர்களுக்கு இந்த வைரத்தை தனதாக்கி கொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள வைர சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட போது இந்த வைரம் 299 கேரட் எடை கொண்டதாக இருந்தது. பட்டை தீட்டி இந்த வடிவத்திற்கு வந்துள்ள அதன் தற்போதைய எடை 118.28 கேரட் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தத்துவம்

உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால், எதிலும் மிதமாக இரு

அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே

தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே

 

 


Wednesday, October 2, 2013

அஞ்சறைப்பெட்டி 03/10/2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........


எனது இதழில் எழுதிய கவிதைகள் புத்தகத்திற்கு நண்பர்களின் விமர்ச்சனம் எழுதியது மிக சந்தோசமாக இருந்தது. நமக்கு பிடிச்சதை எழுதுகிறோம் அதை விமர்ச்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு அதில் தூற்றுதலும் இருக்கலாம், போற்றுதலும் இருக்கலாம். என்னைப்பொறுத்தவரை போற்றுதலை பார்த்து விட்டு, தூற்றுதலைதான் ரொம்ப வரவேற்றேன். எனக்கு பிடித்ததும் அது தான். அடுத்தமுறை இந்த தவறுகள் வராமல் பார்த்து கொள்ளவேண்டும். விமர்ச்சித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...

.......................................

ஒரு மாதமாக படாத பாடு படுகிறேன் ஒரு சின்ன Hair Line Fracture ஏற்பட்டதால் தற்போது தான் வழிகள் குறைந்து ஓரளவிற்கு நடக்க முடிகிறது கட்டு பிரிக்க இன்னும் 2 நாட்கள் உள்ளதால் எப்போது பிரிப்போம் என்று ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.. அந்த அளவிற்கு கட்டு வெயிட்டாக உள்ளது. கை, கால்கள் உடைந்தால் கூட கட்டுப்போட்டு பொறுத்துக்கலாம் இந்த சின்ன விரிசலுக்கு பொறுத்துக்கொள்வதற்குல் போதும் போதும் என்றாகிவிட்டது.


 .......................................

 
மனைவிக்கு பைக் ஓட்டி பழக்கிறேங்கற பேர்ல பின்னாடி உட்கார்ந்து பழக்கிவிடும் இந்த கணவன்கள் பன்ற இம்சை தாங்கல...

சம்பவம்
சனிக்கிழமை இரவு மனைவி வண்டியை ஓட்ட கணவன் பின்னாடி உட்கார்ந்து கையபுடிச்சி ஓட்டிய மனுசன் கைய எடுக்கும் போது மனைவி இடுப்பை கிள்ள மனைவி தடுமாற வண்டிய திருப்ப வீட்டு வாசலில் நின்று இருந்த நடுத்தரவயதுக்காரார் மேல விழ தம்பதியினர் ரோட்டில் விழுந்துட்டாங்க.. பாவம் வேடிக்கை பார்த்தவர் சாக்கடையில் விழுந்து படாத பாடு பட்டார்... ( இடுப்பை கிள்ளாம இருந்திருந்தா தப்பிச்சிருப்பார்) அவர் நேரம்...

.......................................



பெட்ரோல் விலையை 3 ரூபாயை குறைத்து டீசல் விலையை ஏற்றிவிட்டனர் டீசல் விலையை உயர்த்துவதால் தினமும் புழுங்கும் பொருட்கள் விலை இன்னும் உயரும் என்பதை அறிந்தும் உயர்த்துகின்றனர். எவ்வளவு உயர்த்தினாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் அந்த பொருளை அந்த விலை கொடுத்து வாங்கும் நாம் இருக்கும் வரை உயர்த்திகொண்டு தான் இருப்பர்.
 
.......................................  


2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை அப்போது உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 970 கோடியாக உயரும் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த 200 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 7 மடங்கு அதிகரித்து தற்போது 710 கோடியாக உள்ளது.

இதில் 130 கோடி பேர் சீனாவிலும், 120 கோடி பேர் இந்தியாவிலும் உள்ளனர். அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியா மற்றும் சீனாவில் பிறந்தவர்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


..............................


 
எந்த பத்திரிக்கை எடுத்தாலும் மோடி பற்றி செய்தி இல்லாமல் இருப்பதில்லை அந்த அளவிற்கு தினமும் ஒரு மாநிலத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அந்த மாநிலம் மட்டும் இல்லாமல் எல்லா இடத்திலும் பேசவைக்கிறார் அவர் பேச்சை. மக்களிடம் நன்கு பிரபலமான ஒருவராக உருவெடுத்து வருகிறார் நிச்சயம் இந்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு என தனி அந்தஸ்து கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.


..............................



இங்கிலாந்து பெண்ணுக்கு ஒரே கருமுட்டையில் உருவான 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த பெண் கில்பெர்ட். இவர் கர்ப்பிணி ஆக இருந்தார். டாக்டரிடம் சென்று சோதனை செய்தபோது ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகி இருந்தது தெரிய வந்தது.

இது போன்று ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகுவது ஆபூர்வமாகும். 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும். எனவே டாக்டர்கள் அவரை தீவிரமாக பரிசோதித்தனர்.

அப்போது, இக்குழந்தைகளை தாங்கி சுமந்து பெற்றெடுக்கும் வகையில் கில்பெர்ட் உடல் நிலை இல்லை என தெரிந்தது. எனவே, இக்குழந்தைகளை கருக்கலைப்பு செய்யும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் அதை கில்டெர்ட்டும் அவரது கணவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக கடந்த ஆகஸ்டு மாதத்தில் நியூபோர்ட்டில் உள்ள ராயல் ஜிவென்ட் ஆஸ்பத்திரியில் 3 குழந்தைகளும் பிறந்தன. அவை அனைத்தும் பெண் குழந்தைகளாகும்.

அக்குழந்தைகள் தலா 1.75 கிலோ எடை இருந்தன. இவர்களுக்கு பியான், மட்டிசான், பாய்ஜ் என பெயரிட்டுள்ளனர். 6 வாரங்கள் ஆஸ்பத்திரி பராமரிப்பில் இருந்த அக்குழந்தைகள் சமீபத்தில் வீடு திரும்பினர்.



 
தகவல்



சனி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘காசினி’ விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது சனியின் துணை கிரகமான டைட்டனிலும் ஆய்வு மேற்கொண்டது. அப்போது டைட்டனின் கீழ்மட்ட வான்வெளியில் ‘புரோபைலீன்’ என்ற மூலப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தது. அது சனி கிரகம் மற்றும் அவற்றின் துணை கிரகங்களிடம் இருந்து வெளியாகும் வெப்ப அளவை ‘இன்பிராட் ஸ்பெக்ட்ரோ மீட்டர்’ மூலம் காசினி விண்கலம் அளந்த போது அது தெரிய வந்தது.

‘புரோபைலீன்’ என்ற இந்த ரசாயன மூலப்பொருள் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இதில் இருந்து தான் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. அது ‘பாலிபுரோபைலீன்’ என்றழைக்கப்படுகிறது.

இந்த தகவலை நாசா விஞ்ஞானி கார்னர் நிஸான் தெரிவித்துள்ளார். கடந்த 1980–ம் ஆண்டில் ‘வாயேஜர்–1’ என்ற விண்கலம் சனி கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டது. அது டைட்டன் கிரகத்தை ஒட்டி பறந்த போது அங்கு புரோபைலீன் இருப்பதை சூசகமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தத்துவம்


நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.

மிகக் குறைந்த செல்வத்தைக் கொண்டு எவன் திருப்தி அடைகின்றானோ அவன்தான் முதன்மை செல்வன். ஏனெனில் இயற்கையின் செல்வம் திருப்திதான்.

சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி