Sunday, June 29, 2014

பரபரப்புக்கு பஞ்சமில்லை நம்ம ஊரில்...

தினமும் ஊடகங்களின் பரபரப்புக்கு தீனி கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது. இன்று ஒரு பிரச்சனை அதைப்பற்றியான நேரடி ஒளிபரப்புக்கள், யார் மீது குற்றம், இதற்கு என்ன தேர்வு என அந்நாள் முழுவதும் நம்மை கட்டிப்போடுகின்றனர். அடுத்த நாள் வேறு ஒரு பிரச்சனை வந்ததும் நம்மை அந்த பிரச்சனைக்கு அழைத்துப்போகின்றனர், முந்தியநாள் பிரச்சனைக்க தீர்வு கிடைச்சுதா இல்லை கிடைக்குமா என்ற பாலே அப் செய்திகளை காணுவது அரிது. அப்படியே பாலே அப் வந்தாலும் இரண்டு நாட்களுக்குத்தான் அதற்கான தீர்வு நிச்சயம் கிடைத்தபாடில்லை என்று தான் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக நம்மை கட்டிப்போட்ட விசயம் 11 மாடி குடியிருப்பு கட்டப்படும் போதே தரைமட்டம் ஆனது. இதற்கு யாரை குற்றம் சொல்ல, அந்த இடத்தை அப்ரூவல் செய்தவரையா, கட்டிடம் கட்டுபவரையா, அதற்கு அனுமதி கொடுத்தவரையா என்று ஒரு பக்கத்துக்கு கேட்டுகிட்டே போகலாம், ஆனால் இதற்கு முடிவு நிச்சயம் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இதற்கிடையே டிவி பேட்டியில் பொதுமக்கள் அப்படியே விழுந்தது என்கின்றனர், இடையில் புகுந்த சில பேர் இடி விழுந்ததால் கட்டிடம் நொறுங்கியது என்கின்றனர். இந்த கட்டிடம் கட்டிய மேலாளர் ஒருவர் இடி விழுந்ததற்கு நான் எப்படி சார் பொறுப்பாக முடியும் என்று அந்த பருப்பு வாய் கூசாமல் சொல்கிறது. அதுவும் அந்த இடத்தில் பலத்த மழை இல்லை என்ற தகவல் தான் அனைத்து மீடியாக்களும் சொல்கின்றனர். சொத்தை மழைக்கே பில்டிங்க இடியும் போது புயல் மழை பெய்தால் நிலமை மோசமாகி இருக்கும்.

இப்போது எல்லாம் பூமி பூஜை போடும் போதே வீட்டை விற்கின்றனர். இப்படித்தான் கோவையில் நிறைய விளம்பரங்கள் கொடுத்து, வீடு 30 இலட்சம் என்று இருந்தது, குறைந்த வீடுகளே உள்ளன, புக்கிங் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று மிக கவர்ச்சியான விளம்பரங்கள், விளம்பரங்கள் அனைத்தும் அழகாக வடிவமைக்கப்பட்டு பார்த்த உடனே வாங்கனும் போல இருந்தது. பாழப்போன நடுத்தர வர்க்கத்து மனசு சும்மா இருக்குமா உடனே எப்படியாவது வாங்கிடலாம் என்று நானும் குடும்பத்தில் இருக்கும் எல்லாத்தையும் அழைத்து போகலாம்ன்னு முடிவு செய்திட்டேன்.

அந்த சீட்டை எடுத்த இம்புட்டு பணம் வரும் மீதிக்கு நகைய அடகு வெச்சிக்கலாம் மீதி பாதிக்கு லோன் போட்டுக்கலாம் என்ற டாக்குமெண்ட் எல்லாம் தயார் செய்துவிட்டு எல்லாரும் வீடு பார்க்க போறத அக்கம் பக்கம் வீட்டுக்கும், ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் போனை போட்டு சொல்லிட்டேன் அம்புட்டு சந்தோசம், ஜிம், நீச்சல்குளத்தோடு வீடுன்னு பெருமை பீத்திக்கிறதில் அடிச்சுக்கு முடியுமா. அந்த அளவிக்கு பீத்திட்டு அடுத்த நாள் காலை எல்லாரையும் கூட்டிகிட்டு, வீடு வாங்குற இடத்துக்கு போனோம், அவன் சொன்னதில் இருந்து 2 கிலோ மீட்டர் அதிகம் போனதுக்கு பின் அந்த இடம் வந்தது, எங்களைப்போலவே நிறைய கார்கள் இருந்தன. இறங்கியதும் நறுக்குன்னு நாலு அரேபியன் குதிரை மாதிரி பிகருங்க வாங்க வாங்க என்றதும் என்க்கு ஜிவ்வின்னு ஆகிவிட்டது.

அப்புறம் ஒரு இருட்டு அறைக்கு கூட்டிட்டு போனாங்க ( வேறு மாதிரி கற்பனை வேண்டாம் பாஸ்) அங்க போய் வீடு எப்படி இருக்கும் என்று டேமோ காட்டினாங்கா. அரேபியன் குதிரை வந்து வீடு பிடிச்சிருக்கா சார் என்றது. ம்ம்ம் என்று மண்டைய ஆட்டிகிட்டே நின்னேன். உங்களுக்கு எந்த தளம் பிடிச்சு இருக்கு என்றதும். 2 வது த்ளம் என்றேன் வாங்க பார்க்கலாம் என்று கூட்டிட்டுப்போனாங்க. நானும் வீட்டை பார்க்கற ஆசையில் குதிரை கூடவே சென்றேன். ஒரு வெட்ட வெளி புல் தரையில் நின்று இது தான் நீச்சல் குளம், நீச்சல் குளத்துக்கு மேலே உங்க வீடு இருக்கும். அப்படியே அன்னாந்து பாருங்கன்னு சொன்னாங்க. எனக்கு அன்னார்ந்து பார்த்தால் வானம் தான் தெரிஞ்சுது. தரையில் இருந்து 20 அடியில் உங்க வீடு என்று வெட்ட வெளியையும், வானத்தையும் காண்பித்து நாம் கனவு காண்பது போல பிட்டா இறக்கிட்டு போய்ருச்சு அந்த அழகு பதுமை..

10 நிமிடம் எனக்க கையும் ஓடல, காலும் ஓடல அட படுபாவிகளே சும்மா இருந்த என்ன இப்படி கேனப்பயல் ஆக்கிட்டிங்களேன்னு கடுப்புல வந்தேன், குறுக்கே வந்த மற்றொரு அரபியன் குதிரை, சார் மதிய உணவு ஏற்பாடு செய்திருக்கிறோம் மறக்காம சாப்பிடுங்க என்றனர், ஆள விட்ட போதும் என்று காரை நோக்கி வரும் போது மீண்டும் வந்தது அரேபியன் குதிரை, சார் எப்ப புக் பன்றீங்க. உங்க பேரை நோட் செய்துகொள்கிறேன் என் கேட்டதும், முதல்ல அடுக்குமாடிய கட்டுங்க, அப்புறம் வந்து வாங்கிக்கிறேன் என்று பின்னங்கால் பிடறி அடிக்க ஓடியாந்தேன்.

இப்போது இடிந்த கட்டிடத்தை எத்தனை பேர் வாங்கினார்களோ, அப்படி வாங்கியவர்கள் இனி கீழே நின்று, அதோ பாருங்க இங்கிருந்து 20 அடி உயரத்தில் மேலே எங்க வீட்டு சமையல் அறை இருந்தது, பெட்ரூம் இருந்தது என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளவேண்டியது தான்.

நாளை வேறு ஒரு பிரச்சனை வரும் அப்போது அனைவரும் இந்த பிரச்சனையை மறந்து விட்டு நம் வேலையை பார்க்க போக வேண்டியது தான்..

Thursday, June 19, 2014

புலம்பல்களுடன் வாழும் மனசு

தினமும் காலை எழுந்தோமா ! வேலைகளை முடிச்சோமா ! மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, குழந்தையை பள்ளியில் விட்டு, நாம் அலுவலகத்துக்கு வந்தோமா!! என்று தான் பயணிக்கிறது நமது வாழ்க்கை. ஆனால் நம் மனசு அப்படி பயணிப்பதில்லை, பேருந்தில் புட் போர்டு அடிச்சு செல்பவனை முதலில் திட்ட நினைக்கிறது, நாம் போலீஸ்காரனாக இருந்தால் அவன் பட்டக்சில் நாலு சாத்து சாத்தி இருப்பேன் என்கிறது மனசு. யாராலும் அவ்வளவு சுலபமாக அடக்க இயலாதது மனசு.

ஒரு மனிதன் இரண்டு வாழ்க்கை தான் வாழ்கிறான், நானும் அப்படித்தான் வாழ்கிறேன், நிறைய தவறுகளை தட்டிக்கேட்டவேண்டும் என்ற மனம் இருந்தாலும் காலமும், சூழ்நிலையும், அடுத்த வேளை சோறும் தான் கண் முன்னே உள்ளது.

தினமும் சாலையில் பயணிக்கும் போது அடுத்தவன் எப்படி போனல் நமக்கு என்ன நாம் சாலை விதிகளை பயன்படுத்துவோம் என்று முடிவெடுத்தாலம், பச்சை லைட் முடிஞ்சு, மஞ்சள் லைட் வரும் போது நாமும் வேகமாக வண்டியை இயக்கி சிக்னலை கடக்கத்தான் செய்கிறோம் இது தவறு என நம் மனதிற்கு 100 சதவீதம் தெரியும் ஆனாலும் லேட்டாக சென்றால் பாதி நாள் சம்பளத்தை கட் செய்திடுவாங்க என்ற பயத்தால் ஓடுகிறோம்.

இன்றைய சமூகத்தில் நடக்கும் அத்தனை சமூக குற்றங்களும் நமக்க தெரியும், அதற்கான தண்டனைகளும் தெரியும், அதற்கான போராட்டங்களும் தெரியும், ஆனால் செயல்படுத்த முடியாது நம்மால் காரணம் நாளைய தேவையும், நமக்கு ஏன் வம்பு என்ற படிப்பனையும்.

சாலையில் நடக்கும் விபத்துக்களை பல ஆயிரம் பேர் பார்த்தாலும், அவர்களுக்கு உதவி செய்ய நிச்சயம் அனைவருக்கும் மனது இருக்கும், ஆனால் உதவுபவர்கள் ஒரு சிலராகத்தான் இருப்பர். உதவாமல் போனவர்களுக்கு மனசு இல்லை என்று நாம் நினைத்தால் நிச்சயம் அது நம் தவறு, அவனின் காலங்களும், அப்போதைய சிந்தனையும் நமக்கு தெரியாது, ஆனால் அவனுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும், இவை அத்தனையும் கடந்து அவன் சாலை விபத்தை நினைக்கும் போது, உதவமுடியவில்லையே என்று அவன் மனம் அன்று அழுதிருக்கும்.

எத்தனையோ ஊழல்களை தினமும் தினசரியில் படிக்கின்றோம், அதைப்பற்றி தீவிரமாக பேசுகிறோம், அதற்கான தீர்வையும், அடுத்து இதில் என்ன நடக்கும் என்பதைப்பற்றி எல்லாம் பேசும் நாம் அதற்கான நமது பங்களிப்பை முயற்சியை எடுப்பதில்லை.

ரேசன் கார்டு வாங்க போகிறோம் போகும் போது லஞ்சம் கொடுக்காம வாங்கிவிட வேண்டும் என்று எண்ணத்தோடு தான் போகிறோம், இன்று போய் நாளை வா, என இரண்டு நாளைக்கு நம்மை அழைக்களிக்கும் போது, பேசாமல் காசை கொடுத்து காரியம் சாதிப்பவர்கள் தான் நாம். கொள்கைப்படி வாழ முடியாது என்பதால் கொள்கையில் சில சமரசங்களை செய்து கொள்கிறோம், நம் கொள்கை தானே, நம்மை யார் கேட்கப்போகிறார்கள் என்ற தைரியம் தான் காரணம். பட் மனசு கொள்கையை மீறிவிட்டோம் என்று ஓரிரு முறை உணர்த்தும் அப்புறம் அதுவும் மறந்து விடும்.

சமரசமே நமது வாழ்க்கையாகிவிட்டது, கொள்கைகள் எல்லாம் தூக்கி குப்பையில் எறியப்பட்டது தான் நம் வாழ்க்கை, இப்படித்தான் நான் நேர்மையாகவும், அனைத்து சட்ட திட்டங்களை அறிந்திருந்தும் அதன் படி வாழ நினைப்பவன் போகும் இடம் குப்பைத்தொட்டியாகத்தான் இருக்கனும். பிழைக்க தெரியாதவனாக இருக்கிறான் என்ற இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டாலும் நம் மனதை சமரசம் செய்து தான் நாம் வாழவேண்டி இருக்கு. மனசாட்சியோடும் அதன்படியும் வாழ்வது நம் சமூகத்திற்கு ஏற்றதல்ல. எப்போதும் புலம்பல்களோடு தான் வாழ்கிறது நம் மனசு...



Wednesday, June 18, 2014

நம்ம ஊரு வண்டி

மாட்டு வண்டி நான் சென்ற முதல் வாகனம் இதுதான். எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊர் திருவிழாவிற்கு முதன் முதலாக 4 மாத குழந்தையாக இருக்கும் போது சென்றேன் பின்னாளில் எனது அம்மா சொன்னதாக ஞாபகம். எனக்கு மட்டுமல்ல 25 ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் வாகனம் மாட்டு வண்டியாகத்தான் இருக்கும். இன்றும் மாட்டு வண்டிகள் அழியவில்லை ஆனால் குறைந்து இருக்கின்றது.
கிராமங்களில் விடாப்பிடியாக இன்னும் சில பேர் மாட்டு வண்டி வைத்து கொண்டு விவசாயம் பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .மாட்டு வண்டி ஓட்டுவது ஒரு கலை மாட்டின் சுபாவத்திற்கு ஏற்ப அதை அதட்டி ஓட்டுவார்கள்.
 
எனக்கு சிறுவயதில் இருந்து அதிகம் மாட்டுவண்டியுடன் புழக்கம் உள்ளது. இவ்வண்டியை நெல் சுமக்க, அரைக்க, சந்தைக்கு செல்ல என அனைத்து பொருட்களையும் தூக்கி செல்ல மாட்டு வண்டியைத்தான் பயன்படுத்தினர் ஒரு காலத்தில். இப்போது இதை பயன்படுத்துவது குறைந்தாலும் கிராமத்தில் இதற்கான வரவேற்பு இன்றும் உண்டு.

பழைய திரைப்படங்களில் மாட்டு வண்டியைப்பற்றிய பாடல்களும், மாட்டு வண்டிகளும் அதிகம் இடம் பெற்று இருக்கும் கிராமத்து படம் என்றால் மாட்டு வண்டிக்கு நிச்சயம் இடம் உண்டு. மாட்டு வண்டியைப்பற்றி புகழ் பெற்ற பாடல்கள் நிறைய இருக்கின்றன.

முன்காலத்தில் சரக்கு வாகனமாக மக்கள் பய்னபடுத்தியது மாட்டு வண்டியைத்தான் இவ்வண்டியைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பனின் தாத்தா கூறிய தகவல் இன்னும் நன்றாக இருந்தது. அவர் காலத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் அதிகம் நடக்குமாம் ஊர் ஊராக சென்று மாட்டு வண்டி ஓட்த்தில் நிறைய பரிசுகள் பெற்று இருக்கின்றாராம். மாட்டு வண்டி பந்தயத்திற்கு சென்ற இடத்தில் தான் பந்தயத்தை பார்க்க வந்த அவர் மனைவியையும் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். வண்டிக்கு பெயிண்ட் அடித்து அழகாக பராமரித்து வருகிறாராம் இப்ப பட்டணத்துக்கு குடி வந்தாதால் அதெல்லாம் நினைவுகளோடு சரி என்கிறார்.
இன்றும் பல ஊர்களில் ரேக்ளா ரேஸ் என்ற பெயரில் மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.
 
அந்த காலத்தில் சுற்றுலா என்றால்  பழனிதான் அதிகம் செல்வார்கள் பழனி செல்லும்போது வீட்டில் உள்ள மாட்டு வண்டியின் மேல் சாக்கு கட்டி விட்டு அதுதான் நிழல் போகும் போது கட்டுச்சோறு செய்து கொண்டு போவோம். வரும் போது விறகு பொறுக்கி சில இடங்களில் கல் வைத்து சாப்பாடு செய்து கொள்வோம். பழனி சென்று வர ஐந்து நாட்கள் ஆகும் இவர் திருப்பதிக்கும், ராமேஸ்வரத்துக்கும் மாட்டு வண்டியிலேயே குடும்பத்துடன் சென்று வந்த காலங்கள் இன்று இல்லை...
 
15 வருடத்திற்கு முன்பு திருமணம் என்றால் எல்லாரும் வண்டி கட்டிக்கொண்டு தான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்வார்கள் அதானால் தான் அக்காலங்களில் 3 நாட்களுக்க திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இப்போது 3 மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது திருமண நிகழ்வுகள்..

மாட்டு வண்டியில் கரும்பு ஏற்றிக்கொண்டு செல்வார்கள் பின்னால் சென்று கரும்பை சத்தம் வராமல் உடைத்து வந்து சாப்பிடுவோம். மாட்டு வண்டியில் இரு மாடுகளை பூட்டி அதை லவகமாக கையில் பிடித்து சின்ன சாட்டையை வைத்து அடித்து மேதுவாக நகரும் போது ஆடி ஆடி செல்லும.பொருட்கள் ஆட்கள் என எல்லோரையும் இழுக்கும் வண்டி நம்ம ஊரு மாட்டுவண்டி..
மாட்டுவண்டியை ஒவ்வொருவரும் அவர்களது வசதிக்கேற்ப வண்டியை அழகு படுத்தி வைத்திருப்பர்.  சிலர் அழகாக கூண்டு அடித்து அதற்கு பெயின் அடித்து வைத்திருப்பர். இன்னும் சிலர் கட்டை வண்டியாகவே வைத்திருப்பர். வைக்கோள் போட்டு அதன் மேல் பெட்சீட் போட்டு மெத்தை போல வடிவமைத்து வைத்துருப்பர் இதை எல்லாம் நின்று பொறுமையாக ரசிக்கத்தோணும்.
இவ்வண்டிகளைப் பொறுத்த வரை ஹய் ஹய் என்று கத்தி சாட்டையில் மெதுவாக ரெண்டு போட்டால் வேகமாக செல்லும். ஹோ ஹோ என்று சத்தமிட்டு கயிரை இறுக்கப்பிடித்தால் அப்படியே நிற்கும். இதற்கு இதுதான் எக்ஸ்லேட்டர், பிரேக் எல்லாம். வண்டி ஓட்டுபவரின் குரல் தான் இதற்கு மிகப்பெரிய பலம் அவரின் குரலுக்கேற்ப நகரும்..
இவை இரண்டும் மாட்டு வண்டிக்கு முக்கிய தேவைகள்...
அச்சாணி: இரவு நேரங்களில் பயனம் முடிந்ததும் வண்டியை லாக் செய்வது போல் மாட்டு வண்டிக்கு வண்டி சக்கரம் கழண்டு விடாமல் தடுக்கும் இரும்பு பட்டை.

நோத்தடி: மாடு வண்டியில் பூட்டபடும் கம்பு. வண்டி சும்மாக இருக்கு பொழுது சீசா மாதிரி விளாயாடலாம்.

இன்றும் ஊருக்கு சென்றால் மாட்டு வண்டியில் செல்ல மனம் அடித்து கொள்ளும். சமீபத்தில் வண்டியில் இருந்து இறங்கி ஒரு 5 நிமிடம் மாட்டு வண்டியில் சென்றேன் ஆடி ஆடி குழியில் இறங்கி செல்லும் போது பின்புறம், முதுகு, கை எல்லாம் வலி எடுத்தது. அந்த வலியும் ஒரு சுகமான கிராமத்து நினைவுகள் தான்....

Tuesday, June 17, 2014

சோத்துக்கடை - அவிநாசி ரோடு வடக்கடை

சோத்துக்கடை பகுதியில் வடக்கடை எழுதலாமா? வேண்டாமா? என்று நெடுநாளாக யோசித்து, கடைசியாக இதிலே எழுதிவிடவேண்டும் எனவும், உணவகங்களை பற்றி எழுதும் அனைத்து கட்டுரைகளையும் இனி சோத்துக்கடையில் எழுதுவது என்று முடிவெடுத்துவிட்டேன், நிறைய டீக்கடைகளைப்பற்றியும் விரைவில் எழுதனும்.


அவிநாசி ரோடு வடக்கடை

இந்த வடக்கடைக்கு நாங்கள் வைத்த பெயர் தான் அவிநாசி ரோடு வடக்கடை, கடையின் முதலாளி இந்தக்கடைக்கு பேரே வைக்கவில்லை என்பது தான் இந்த கடையின் ஸ்பெசல்.

எனது அலுவலகத்தின் மிக அருகில் இந்தக்கடை உள்ளது. ஒரு 3 வருடங்களுக்கு முன் மாலை நேர பசி காரணமாக லஷ்மி மில்ஸ் ஜங்சனில் அதிக கடைகள் இல்லை, எங்க போய் என்ன சாப்பிடலாம் என்று யோசிச்சு திரும்பும் போது ஏர்டெல் ஆபிசின் நேர் எதிர்புறம், அம்மன் குளம் போகும் வழிக்கு பக்கத்தில் இடதுபுறம் கூட்டமாக நின்று கொண்டு கையில் தட்டை ஏந்தி சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர், சரி நாமும் போய் பார்ப்போமே என்று ஒரு தட்டை வாங்கி 2 மெது வடைகள் வாங்கினேன், சாப்ட் என்றால் சாப்ட் அப்படி ஒரு மெதுமெதுப்பு, லபக் லபக் என்று உள்ளே போனதே தெரியாமல் போனது. காரம் அதிகம் இல்லாமலும், உப்பு அதிகம் இல்லாமலும் அவர்கள் கொடுத்த தேங்காய் சட்டினியோடு வழுக்கி விழந்தது நாவில் அப்புறம் என்ன மெது வடை மட்டும் 6 உள்ள போய்டுச்சு, கூட்டம் அதிகமானதால் அடுத்த முறை வந்து மற்ற வடைகளை சாப்பிடவேண்டும் என்று கிளம்பிவிட்டேன்..


மீண்டும் நான்கு நாட்கள் கழிச்சு ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் சப்பாத்தி சாப்பிட்டதால் 4 மணிக்கு பசி மீண்டும் வயிற்றை எட்டிப்பார்த்து கிள்ளியது, ஓவராக கிள்ளியதால், யாரையும் துணைக்கு அழைக்காமல் வடக்கடை முன் நின்றேன். கூட்டமும் குறைவாக இருந்ததால் முதலில் கட்லெட் சொன்னேன், கட்லெட் சைஸ் சின்னதாகத்தான் இருந்தது ஆனால் சுவை செம்ம.. அடுத்து வெஜ்ரோல் இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தனர் ஒரு உருண்டையில் எல்லா காய்கறிகளையும் வேக வைத்து அதை அந்த உருண்டையில் வைத்து, எண்ணெய்யில் பொறிச்சு எடுத்து தருகின்றனர், சுடச்சுட வெஜ் ரோல் சாப்பிடும் போது அற்புதமான சுவையால், 1 எல்லாம் பத்த மாட்டிங்குது, குறைந்தது 4 சாப்பிட்டால் தான் "நா" அடங்குகிறது.


அடுத்து பன்னீர் போண்டா, இது பெரும் ஓட்டலில்தான் அதிகம் கிடைக்கின்றது, இதைப்போல சின்ன கடைகளில் இப்போது தான் சாப்பிட்டேன், இதன் சுவையும் செம்ம.. என்ன கடந்த 2 முறையாக சென்ற போது பன்னீர் போண்டா அதிகம் போடுவதில்லை என்று என் "நாக்கை" காய வைத்து விட்டனர்.

சமோசா வழக்கான சுவையில்லாமல் வீட்டில் செய்வது போன்ற சுவை, வாழக்காய் பஜ்ஜி, பருப்பு வடை என ஒரு 7 விதமான வடைகள் போட்டு கொடுக்கின்றனர், குறைஞ்ச பட்சம் 7 வகைகளையும் சாப்பிடும்போது தான் சாப்பிட்ட திருப்தி ஏற்படுகின்றது.



இந்த கடையின் சுவைக்கு காரணம் என்ன வென்று பார்த்தால் இவர்கள் தரமான பொருட்களை உபயோகிப்பதோடு, எண்ணெய் அடிக்கடி மாற்றுகின்றனர், 3 முறைக்கு மேல் எண்ணெய்யை உபயோகிப்பதில்லை என்பதால் சுவை கூடுகிறது. கோவை பக்கம் வருபவர்கள் மாலை வேலையில் பஜ்ஜி, போண்டா சாப்பிட இந்த கடைக்கு நிச்சயம் வரலாம்..

பெயர்: அவிநாசி ரோடு வடக்கடை

இடம்: லஷ்மி மில்ஸ் சந்திப்பில் இருந்து அவிநாசி செல்லும் வழியில் ஏர்டெல் ஆபிசிக்கு எதிரே, கேஆர்எஸ் பேக்கரியின் பக்கத்துல் இருக்கிறது ( மதியம் 12 மணியில் இருந்து ஒருவர் வடை போட்டுக்கொண்டே இருப்பார், 4 பேர் நின்று சாப்பிட்டுக்கொண்டே இருப்பர்)
விலை: எந்த வடை எடுத்தாலும் 7 ரூபாய் மட்டுமே...

Sunday, June 15, 2014

மஞ்சப்பை - இது சினிமா விமர்ச்சனம் அல்ல...


தற்போது வாழ்க்கைக்காக இடம் பெயறுபவர்கள் தான் நிறைய, அதுவும் படித்து முடிச்சு பட்டணத்தில் வேலை பார்த்து, அப்படியே தங்கள் இலட்சியமாக அமெரிக்கா போவது எப்படி என்பதைத்தான் அடுத்த இலக்காக வைத்து செயல்படுகின்றனர், இது தான் இன்றைய இளம் தலைமுறையினரின் இலட்சியமும் கூட.

பட்டணத்தில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எத்தனை பேர் தன் தாய், தந்தையரை பட்டணத்துக்கு அழைத்து வந்து ஊரைச்சுற்றிக்காட்டுகின்றனர் என்றால், சொற்ப எண்ணிக்கைதான் என்று அடிச்சு சொல்லமுடியும் நம்மால். அதுவும் தாய், தந்தையர் படிச்சு இங்கு கிராமத்தில் வேலையில் இருப்பவர்களாக இருந்தால் அவர்களை அழைத்து வந்து இதுதாம்மா நீ ஆனந்த விகடனில் படித்த வேளச்சேரி மால், கிழற்கு கடற்கரை சாலை என ஒவ்வொன்றையும் சுற்றிக்காட்டுவர். கிராமத்தில் கூலி விவசாயியாக இருந்தால் இதை எல்லாம் தவிர்ப்பவர்களே இங்கு அதிகம்.

கிராமத்தில் ஏழை விவசாயியாக இருந்தால் அதிகபட்சம் சென்னைக்கு வர ஆசைப்படுபவர்கள் தலைவர் எம்ஜிஆர் சமாதியை ஒருநாளைக்காவது கூட்டிட்டுப்போய் காட்டுப்பா என்று தவமாய் தவமிருப்பர், அப்புறம் அவர்களை அழைத்து வந்து ஊரைச்சுற்றிக்காட்டுவது அதிகபட்சம் ஒரு வார இறுதி நாட்களாகத்தான் இருக்கும்.

நான் தற்போது இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த எனது அப்பா, காலை எழுந்ததும் கைலியும், முண்டா பனியனும் போட்டுகிட்டு வாக்கிங் கிளம்பி விடுவார் நான் இப்படி எல்லாம் போகாதே சட்டையும், வெள்ளை வேஷ்டியும் கட்டிட்டுப்போங்க என்று கட்டாயப்படுத்துவேன் இந்த மஞ்சப்பை பார்த்ததும் நான் செய்தது மிக தவறு என்பதை உணர்ந்து வருத்தப்பட்டேன், அடுத்த முறை வரும் போது கைலியும், முண்டா பனியனோடுமே நீங்க வாக்கிங் செல்லுங்க என்று கூறுவது என்று இப்போதே முடிவெடுத்து விட்டேன்.

இந்த மஞ்சப்பை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம், தனது அப்பா, அம்மாவை தன்னோடு வைத்துக்கொள்ளாதவர்கள் நிச்சயம் பட்டணத்தில் படும் பாடு அவர்களுக்கு நன்றாக தெரியும், தன்னை வளர்த்த தாத்தாவை நிச்சயம் இப்போதிருப்பவர்கள் தன்னோடு வைத்துக்கொள்வது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று ஆனால் இந்த படத்தில் தாத்தாவை தன்னோடு வைத்துக்கொண்டு அவர் செய்யும் எதாச்சையான சேட்டைகளை நம்மால் மிக ரசிக்க முடிகிறது. அதனால் அவர் அறியாமல் வரும் விபரீதங்கள் நம் கண்களில் நீர் வரை வைக்கிறது.

படத்தின் முதல் பாதி நல்ல ஜாலியாக போன படம் பின் பாதியில் நிறைய முறை என்னையும் அறியாமல் என் கண்களில் நீர் வரவைத்து விட்டது. சினிமாவுக்கு செல்லும் போது சந்தோசமான இடங்களிலும், நெகிழ்ச்சியான இடங்களிலும் என் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வரும் என்பது நான் அறிந்ததே, படத்திற்கு சென்றால் மனைவியையும் அழைத்து செல்லவேண்டும், அங்கு நான் அழுததை அவள் ரசிப்பாள் என்பதற்காகவே படத்திற்கு செல்வதை தவிர்த்து வந்த நான், என் மச்சானுடன் இந்த படத்திற்கு சென்று, கொஞ்சம் நிறையவே என்னை கண்ணீர் சிந்த வைத்து விட்டது இந்த படம்.. என்ன கடைசியாக மச்சானின் பக்கத்தில் உட்கார்ந்ததால் என் கண்ணீரை யாரும் காணவில்லை, பட் படம் முடிஞ்சு வரும்போது எங்க வீட்டில் எல்லோரும் அழுதிருந்தது நிறைய மனதில் இடம் பிடித்து விட்டது இந்த படம்.

சிலர் விமர்ச்சனம் என்ற பெயரில் இந்த மாதிரி எல்லாம் தாத்தா சேஷ்டைகள் செய்ய மாட்டார் என்றும், கொஞ்சம் ஓவர் என்றெல்லாம் பில்டப்போடுவாங்க, தீவிர சினிமா ரசிகன் அல்லாத எனது பார்வையில் நிச்சயம் இந்த படத்தை பார்க்கவேண்டும், நம் பெற்றோரையும், தாத்தாக்களையும் பாடாது பாடு படுத்துவதை நாம் அறிய இந்த படம் மிக உதவியாக இருக்கும். இந்த படம் பார்த்த அன்று எனக்கு என் தாத்தாவின் நினைவுகளும், நான் அவரிடம் செய்த சேட்டைகளும் மனதில் வந்து நினைவுகளை இனிமையா தந்தது அன்றைய இரவு.

Monday, June 9, 2014

மகனும் முதல் நாள் பள்ளியும்....



முதல் நாள் மகன் பள்ளிக்கு எப்போது செல்வான் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு காத்திருந்தேன், அதற்கு முதலில் பள்ளியில் சேர்த்தவேண்டும், நாங்கள் நினைத்த பள்ளிக்கூடத்தில் இடம் கிடைக்கவேண்டும், ஏகப்பட்ட பணத்தை கட்டணமாக கட்ட வேண்டும், என 4 வருட கணவாக இருந்தது மகனை பள்ளிக்கு அனுப்புவது. மகனை பள்ளிக்கு அனுப்புவது என்பது நடைமுறையான ஒன்று, ஆனால் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போது அவன் போகமாட்டேன் என்று அடம்பிடிப்பதும், அவனை கட்டாயப்படுத்தி விட்டுவிட்டு வந்து, அவன் என்ன செய்வானோ, ஏது செய்வானோ என்று மனம் அவனைச்சுற்றிக்கொண்டே வரும், நிச்சயம் இதை எல்லாம் அனுபவிக்கும் போது தான் மனது மிக சந்தோசமடைகிறது.

என் மகன் Pre KG வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சிறிய பள்ளியில் அது பள்ளி என்று சொல்ல இயலாது வீட்டில் வைத்து நடத்துகின்றனர் கிட்டத்தட்ட Home Care போலத்தான், அங்கு 1 வருடம் தினமும் அரை நாள் மட்டும் சென்று வந்து கொண்டு இருந்தான், கடந்த அக்டோபரில் இருந்து பல பள்ளிகளுக்கு படை எடுத்து, அப்ளிக்கேஷன் வாங்கி அதை கொடுத்து, நேர்முகத்தேர்வுக்கு பையனைக்கிளப்பி என அப்போதே ஆரம்பித்தோம் பள்ளி செல்லும் அளப்பறையை.

எங்கள் அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து அவர்களும் பள்ளிகளை தேட, நானும் தேடினேன், ஊரில் பாதி சிபிஎஸ்சி பள்ளிகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஓர் ஒற்றுமை உண்டு கட்டணத்தில். ஒரு இடத்திற்கு இன்னொரு இடம் அதிகமாகத்தான் இருக்கிறது, குறைந்த பாட்டைக் காணம்.

இப்படி வலைவீசி தேடுகையில் எதேச்சையாக அமைந்தது ஓர் 150 வருட பாரம்பரிய பள்ளியில் இருந்து ஓர் நேர்முகத்தேர்வு, மனைவி சகிதமாக சென்றோம், எந்த பள்ளியிலும் நேர்முகத்தேர்வில் பதிலே சொல்லாத மகன் இந்த பள்ளியில் அனைத்து கேள்விகளுக்கும் அழகாக பதில் சொன்னான், அதனாலயே எங்களுக்கு அந்த பள்ளியிலேயே சீட்டும் கிடைத்தது.

பணம் கட்டிய பின் ஏப்ரலில் ஒரு நாள் துணி, புத்தகம் என் ஒவ்வொரு நாளாக கொடுத்தனர், சூன் 2 அன்று பள்ளி என்றதும் சந்தோசத்தில் மகனுடன் நாங்களும் திளைத்தோம். அதே அன்று என் மச்சானுக்கும் திருமணம்  என்றதும் என்ன செய்வது, பள்ளிக்கு அனுப்பி ஆகவேண்டும் என முடிவு செய்தோம்.

ஆசை ஆசையாக புறப்பட்டு பள்ளிக்கு செல்ல முடியவில்லை, மச்சானின் திருமண மேடையில் நாங்கள் இருந்தோம், தாலி கட்டி முடித்ததும் அடிச்சு பிடிச்சு துணியை பையனுக்கு மாற்றிவிட்டு, காரில் வேகமாக சென்றால் அன்று பார்த்து எங்கே பார்த்தாலும் போக்குவரத்து நெறிசல், அங்கிருந்து பள்ளிக்கு சென்றால் காரை நிறுத்த இடம் இல்லை. அப்புறம் வஉசி பூங்காவில் நிறுத்தி விட்டு பையனைத்தூக்கிகிட்டு போனோம், முதலிலேயே பள்ளியில் தெளிவாக சொல்லி இருந்தனர், ஒன்னும் கொண்டு வரவேண்டாம் என்று, ஆனால் அங்கு எல்லா பெற்றோரும் அனைத்து புத்தகத்தையுத் தூக்கி கொண்டு வர, என் மனைவி நீ போய் எடுத்து வா என்று என்னை துரத்த மீண்டும் ஓடி புத்தகத்தை எல்லாம் எடுத்து வந்தேன்.

பள்ளிக்கு உள்ளே வந்ததும் பையனை மட்டும் வாங்கிக்கொண்டு எங்களை வெளியே அனுப்பினர். அவனும் அழுகாமல் சமத்தாக சென்றவன் பைபை கூட சொல்ல முடியவில்லை, அதற்குள் வகுப்புக்கு அழைத்து சென்றுவிட்டனர், பின் நாங்க திருமண மண்டபத்துக்கு சென்றோம், இப்படித்தான் சென்றது கடந்த வாரம் முழுவதும், திருமண வீடு, பள்ளி என சுவாரஸ்யம் குறைவாகத்தான் போனது.

இன்று காலை பள்ளிக்கு மகனை தூக்கத்தில் இருப்பவனை எழுப்பினால் நான் போகவில்லை, எனக்கு பள்ளி பிடிக்கவில்லை என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தவனை தூக்கி கொஞ்சி, ஒவ்வொரு வேலை செய்யும் போதும் அவனுக்கு கதை சொல்லி, சின்ன சினுங்களுடன் மிரட்டி என 1 மணி நேரம் போராடி புறப்பட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

பள்ளிக்கு புறப்பட்டவனை வேனில் ஏற்றுவது தான் அடுத்த பெரும் வேலை, வேன் வாசலை நோக்கி வந்ததும் அழுக ஆரம்பித்தவனை வலுக்கட்டாயமாக தூக்கி வண்டியில் உட்காரவைக்க, உள்ளே சென்றவன் கண்களில் நீர் இல்லாமல், அழுகாமல் இங்கியே இரு, இங்கியே இரு என்று டாட்டா சொல்லிக்கொண்டே பள்ளிக்கு சென்றுவிட்டான்...

மகன் முதல் நாள் பள்ளி சென்றதை விட இன்று தான் எனக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டாம் மற்றும் திண்டாட்டமாக இருந்தது அவனை வழி அனுப்புவதில்...