Monday, June 13, 2016

போகிர போக்கில்...

கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோடு எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை, மேல் தட்டு நடுத்தர வர்க்கம் எல்லாம் இங்கு தான் குண்டூசி கூட வாங்குவார்கள் அந்த அளவிற்கு பிரபலமான, மக்கள் அதிகம் நடமாடும் சாலை, அதுவும் தற்போது 100 அடி சாலையில் வேலை நடப்பதால் இங்கு எப்போது சென்றாலும் ஊர்ந்து தான் செல்ல வேண்டி இருக்கு அந்த அளவிற்கு வாகன நெறிசல்.

சிக்னலில் இருந்து முன்னாடி சென்ற உயர்தர வாகனங்களுக்கிடையே எறும்பு போல ஊர்ந்து சென்றது என் வாகனம், முன்னால் சென்ற பொலிரோவின் புகையால் தத்தளித்தது என் நாசி. இம்புட்டு கூட்டத்தின் நடுவிலே தேடினேன் அந்த பூக்கார அக்காவை. மங்களகரமாக உட்கார்ந்து அவுங்க பூ விற்கும் அழகே தனி. மல்லிகைப்பூ நெருக்கமாக கட்டியவை ஒரு கூடையின் மேலும், கொஞ்சம் லுசா கட்டிய பூக்கள் ஒரு கூடையிலும், துளசி கலந்து பூ ஒரு கூடையிலும், சாதி மல்லிகைப்பூ ஒரு கூடையின் மேலும் அழகாக வரிசையாக அடுக்கி அதன் நடுவே ஒரு பூப்போல அமர்ந்திருப்பார்.

வருபவர்களை வாஞ்சையாக வரவேற்று அவர் பூ அளக்கும் அழகே தனி, தம்பி வாங்க என்ன வேனும் என்று ஒவ்வொன்றின் விலையை அடுக்கி சொல்வோர் நமக்கு வேண்டியதை வாங்கி திரும்பும் போது, தம்பிக்கு புது கண்ணாலம் போல இந்த ரோசவையும் வாங்கிக்க சம்சாரம் சந்தோசமாக வாங்கிக்கும் என்று அங்கேயே வீட்டு நெனப்பை மனம் முழுவதும் பரப்பி விடுவார்.


எனக்கு அவுங்க எப்பவும் சென்டி மெண்ட், அதனால் அந்த சாலையில் பயணிக்கும் போது எல்லாம் பூ வாங்க மறக்கமாட்டேன். இம்புட்டு நெறிசலில் பூ வாங்க இயலவில்லை என்ற வருத்தத்தோடு வண்டியை உருட்டிக்கொண்டே சென்றேன். நான் பொருள் வாங்க வேண்டிய கடை வந்தது ஆனால் வாகனத்தை நிறுத்தத்தான் வழியக்காணம். வரிசையாக நிற்கின்றன இரு சக்கர வாகனங்கள். கடைசியாக ஒரு ஆண்டி தன் ஏக்டிவ்வாவை எடுத்ததும் அந்த இடத்தில் சொருகி நிறுத்தினேன்.

வண்டியில் இருந்து இறங்கி அப்படியே கண்ணாடிய பார்த்து புகைக்கு நடுவில் சிக்கிய என் முகத்தை சிறு துண்டின் மூலம் துடைச்சு கொஞ்சம் என் முகத்தை அழகாக்கி அந்த கண்ணாடியில் புன்னகையை காட்டி நடைய கட்டினேன் நான் செல்லும் கடைக்கு.

பொருளை வாங்கிவிட்டு கடையில் இருந்து காலை வெளியே வைத்தேன், அப்படியே ஒரு கூட்டம் இந்த பக்கம் தள்ளியது, இன்னொரு கூட்டம் எதிர்புறம் தள்ளியது, தள்ளி தள்ளி என் வாகனம் இருக்கும் இடைத்தை தாண்விவிட்டேன், எதிரே திரும்பினால் வழி எங்கும் வாகனங்கள் ஆமையை விட வேகம் குறைவாக நகர்ந்தன, ஸ்ரீதேவியில் இருந்து கூட்டம் இறங்குவதும், உள்ளே நுழைவதுமாக இருந்தது. கால் டெக்சி ஆட்களோ வழக்கம் போல நடுரோட்டில் ஆட்களை ஏற்றி இறக்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது தான் கவனித்தேன் என் வாகனத்தின் அருகே ஒரு டிப்டாப் ஆசாமியை, பார்ப்பதற்கு ஆள் இந்தி நடிகன் போல இருந்தார், ஆனால் இவரை எல்லாம் எங்க ஊர் ஆட்களிடம் காட்டினால் பெட்சீட் விக்கர இந்திக்கார பையனட்டியே இருக்குதும்பாங்க.. ஆம் அப்படித்தான் இருந்தார் ஒரு சாயலில். அவர் வந்து லாயமாக என் வண்டியின் பக்கத்தில் அவரின் பல்சரை நிறுத்திவிட்டு பந்தாவக இறங்கியவரை ஒரு நிமிடம் ஏற இறங்க பார்த்தேன், பின்னாடி பிகர் எதாவது கூட்டிக்கொண்டு வந்தாரா என்று... ம்கும் ஒன்னையும் காணம்.

அதற்குள் இறங்கிய அந்த இந்தி ஆசாமி வேகமாக என் வண்டியின் கண்ணாடியை திருப்பி தலையை வாரு வாரு என்று வாரினார். நீ எல்லாம் ஆல்ரெடி அழகு தான்டா அப்புறம் ஏன் சீவுகிறாய் என்று கேட்க தோன்றியது, வாட்ட சாட்டமா இருக்கிறான் ஒரு வீசு வீசினால் பல்லு 32ம் போய் விடும்மோ என்ற பயந்தான். இருந்தாலும் அவன் வண்டியை விட்டு விட்டு என் வண்டி கண்ணாடியை திருப்பி தலை சீவுபவனுக்கு ஒரு பஞ்ச் வெக்க வேண்டுமல்லாவா??

தலை வாரி முடித்த பின் அவன் திரும்புகையில், சார் இது என் வண்டி தான் என்றேன் தைரியத்தை வரவைத்துக்கொண்டு...

Sorry sir, sorry sir, very sorry sir என்று சொல்லிக்கொண்டே வேகமாக சென்று விட்டான்.. கண்ணாடியை சரி செய்யாமலே... 

தலையில் அடித்துகொண்டு வண்டியை எடுத்து வந்தேன், ஆனால் அவனை எத்தி போட்டு மிதித்துக்கொண்டு இருந்தேன் என் மனதில்...