Monday, January 19, 2015

DJHSS Gobi - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இந்த காணும் பொங்கல் எனக்கு மறக்க முடியாத காணும் பொங்கல் என்றால் அது மிகையாகது. ஆம் 1996ம் ஆண்டு கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் எனது பள்ளி பருவத்தை நிறைவு செய்தேன். அதன் பின் அந்த சாலையில் செல்லும் போது அந்த பள்ளியையும், படித்த நாட்களையும் நினைவு கூர்வதோடு சரி. பள்ளி படிப்பில் கூட இருந்த நண்பர்கள் வட்டம் நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே சென்றது என்பது தான் உண்மை.
நிறைய பள்ளியிலும், கல்லூரியிலும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்று செய்தி வரும்போது எல்லாம் மனதில் தோன்றும், நாம் என்று இப்படி சந்திக்க போகிறோமோ என்று. சமூக வலைத்தளங்களுக்கு வந்த பின் பள்ளியின் நண்பர்களை எல்லாம் தேடுவேன் அப்படி தேடிம்போது ஆர்குட் காலத்திலேயே நண்பர் ஆக்கியது கோடீஸ்வரன் என்னும் நண்பரைத்தான்.
நண்பன் ரவிசங்கர் நீண்ட நாட்களாக சமூகவலைத்தளம் வழியாக பழக்கம் அவர் தான் அசோக் என்ற நண்பர் வாட்ஸ்அப்பில் ஒரு குரூப் தொடங்கி உள்ளார் நம் 1996 பேட்ச் நண்பர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிறார் என்று சொன்னதுடன் என்னையும் அதில் இணைத்தார். வாட்ஸ்அப்பில் இருந்து டெலகிராம் மாறிய உடன் 25 நண்பர்களாக இருந்த நட்பின் எண்ணிக்கை 100 தொட்டது.
கடந்த 2 மாதங்களாக நண்பர்கள் டெலிகிராமில் பேசிய பேச்சு அளவிடமுடியாதது அதே போல் ஒவ்வொன்றையும் படிக்க படிக்க 1996 ஆம் ஆண்டிற்கே போன மன திருப்தி. நம் பள்ளியில் தற்போது பணிபுரியும் செந்திலை எனக்கு முதலில் முகம் சரியாக ஞாபகத்திற்கு வரவில்லை. அங்கு பேசும் போது தான் கவுந்தப்பாடி மாரப்பா தியேட்டருக்கு படம் பார்க்க சென்று விட்டு பின் பேருந்துக்கு பணம் இல்லாததால் அங்கிருந்து கோபி வரை நடந்து வந்தோம் என்ற தருணம் ஞாபகம் வந்தது.

டெலிகிராம் பேச்சு பேச்சோடு முடியவில்லை அசோக்கின் சீரிய முயற்சியில் முபாரக், தியாகு, கணேசன் போன்ற நண்பர்களின் உறுதுணையால் 17ம் தேதி சந்திப்புக்கு தேதி குறிக்கப்பட்டது. இந்த சந்திப்பு எப்படி இருக்கும் என்று அப்போது எல்லாம் கற்பனைக்கு கூட நான் செல்லவில்லை. எப்படியும் கோபியில் எங்காவது சந்திப்போம் ஒரு 25 பேர் இருப்போம் என்றிருந்தேன்.

அதன் பின் அவ்வப்போது தான் டெலிகிராம் வருவேன், ஆப்போது பார்த்தால் ஷனவாஸ், விநோத், ரபி, சசி, GSK மற்றும் நண்பர்கள் ( நிறைய பேர் பேரை விட்டுட்டேன் மச்சி கோவிச்சுக்காதீங்கடா) எல்லாரும் மிக பழகியவர்களை இவர்களின் பேச்சை தினமும் கேக்க முடியாமல் போனாலும் டெலிகிராமில் சந்திக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

நண்பர்களின் அற்புத முயற்சியால் 17ம் தேதி நடக்க இருக்கும் இந்த சந்திப்பிற்கு 100 பேருக்கு மேல் வருவதாகவும் அதனால் நிகழ்வை சீதா கல்யாண மண்டபத்தில் நடத்துவதாகவும் நண்பர்கள் சொன்னவுடன் மிக மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு மட்டுமல்ல அந்த 100 பேருக்கும்...
நண்பர்கள் அழகாக திட்டமிட்டு பாரியூர் மற்றும் பொங்கல் திருவிழா என்பதால் அனைவரும் ஊரிற்கு வரும் நாளாக பார்த்து 17ம்தேதியை செலக்ட் செய்ததே அற்புதம். சரி இவர்கள் சந்திப்பை எப்படி நடத்துவார்கள் என்ற ஆர்வம் அன்று முதல் 17ம் தேதி காலை வரை நீடித்தது.
சந்திப்பு 17ம் தேதிதான் ஆனால் நிகழ்ச்சி நடக்க ஏதுவாக இருந்த நண்பர்கள், பல நாட்கள் கண்விழித்து ராப்பகலாக அவர்கள் உழைத்த உழைப்பு, மூன்று நாட்களுக்கு முன்பாக சந்தித்த எனக்கு புரிந்தது.
மேடையில் ஓர் பெரிய பேனர், மண்டபத்தின் முன்பு ஒரு பேனர், வரவேற்பு, நாற்காலி, போட்டோ என ஏற்பாடுகள் முந்தைய இரவே நண்பர்களின் திட்டமிடல் அற்புதமாக முடிந்திருந்தது.

மிகவும் நெகிழ்சியான, மகிழ்சியான அந்த 17ம் தேதி காலை 9 மணிக்காக காத்திருந்தேன். முந்தைய இரவில் யார் யார் வருவார்கள், எப்படி இருப்பார்கள் யார் என்று ஒவ்வொருவரின் முகத்தையும் பார்ப்பதற்காக ஏங்கி காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். நண்பர்களின் யார் என்ன நிலைமையில் இருப்பார்கள், எங்கு இருப்பார்கள் என்பதை விட சந்தித்த பின் எண்களை பறிமாறிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உதித்துக்கொண்டே இருந்தது அன்று இரவு முழுவதும்.
17ம் தேதி காலை 7 மணிக்கே மண்டப வாசலுக்க வந்திருந்தனர் வரவேற்பு குழுவினரானர். இரவெல்லாம் கண்விழித்து காலை 7 மணிக்கு மகிழ்வாக வருவதே பெரும் முயற்சிதான்.
நண்பர்கள் மண்டபத்திற்குள் வந்த உடன் அவர்ளின் வருகையை பதிவு செய்து கொள்ள பேப்பர், பேனா, அவர்களின் விபரங்களை கொடுக்க விண்ணப்பம் உள்ளிட்டவை நண்பர்களிடம் கொடுத்தனர்.
அசோக் நிகழ்வை தொடங்கி வைக்க ஒவ்வொரு நண்பர்களம் தங்களைப்பற்றியான சுய விபரங்களை கூறி அறிமுகப்படுத்தினர். கிட்டத்தட்ட 110 பேர், ஒவ்வொருவரையும் ஆரவாரமாக நட்புக்கள் பேசிய பின் கைதட்டி மகிழ்வித்தது மிக்க மகிழ்சியாக இருந்தாது ஒவ்வொருவருக்கும்.
அடுத்து அசோக்  நாம் ஒன்றிணைந்து என்ன செய்ய போகிறோம், நம் சந்திப்பின் நோக்கம் சந்தோசம் மட்டமல்லாமல், ஏழை குழந்தைகளின் படிப்புக்கு நாம் எப்படி உதவ இருக்கிறோம் என்று முன் மாதிரி திட்டத்தை நன்றாக செதுக்கி இருந்தார். அது வந்திருந்த அணைவருக்கும் மிக்க மகிழ்வான ஒன்றாக இருந்தது ( இந்த திட்டம் பற்றி நாம் சங்கம் பதிவு செய்த உடன் விரிவாக எழுதுகிறேன்) உயர்வோம் உயர்த்துவோம் என்ற நம் வாசகம் இனி எங்கும் மறக்கா...
அடுத்து குருப்போட்டோ செல்பி போட்டோ என ஆள் ஆளுக்கு தங்களின் செல்போனில் படத்தை சுட்டுக்கொண்டு இருந்தனர். 
நிகழ்வின் இறுதியாக சாப்பாடு. மனிதன் போதும் என்று சொல்லும் ஒன்றே ஒன்று சோறு தான் என்பதை நண்பர்கள் முன்னாடியே திட்டமிட்டு திகட்ட திகட்ட சாப்பாடு போட்டு கொங்கு மண்ணின் பாரம்பரிய மிக்க விருந்தோம்பலை அட்டகாசமாக நிறைவேற்றி இருந்தனர். 
முதலில் சாப்பாடு வைத்த முபா இத்தனை வகைகள் உள்ளது என்று சொல்லாமல் சாப்பாடு வைக்க  நான் சாம்பார் நிறைய வாங்கி பாதி வயிறை நிரப்பி விட்டேன், அடுத்து மோர் குழம்பை கணேசன் ஊற்ற ஆஹா என நினைக்கும், புளிக்குழம்பு அடுத்து பச்சை பயிர், தட்டைபயிர், கீரை மசியல் என ஒவ்வொன்றாக இலையை பதம் பார்க்க, வயிற்றில் இடம் இல்லாமல் சுவையால் என் நாக்கு தடுமாறியது.
உண்டகளைப்பில் நண்பர்களோடு நினைவுகளில் அசைபோடு அடுத்து எங்கள் பள்ளிக்கு சென்றோம். ஒடோடி நின்று என் வகுப்பறையின் முன் படம் எடுத்து கொண்டேன் அம்புட்டு மகிழ்வு.
எனக்கு கணித ஆசிரியராகவும், விடுதி காப்பாளாகராகவும் இருந்தவர் தான் தற்போது தலைமையாசிரியர் அவரை பார்த்ததும் அவர் என்னை விளாசு விளாசியது தான் ஞாபகம் வந்தது. எனக்கு மட்டுமல்ல என் 9, 10 ம் வகுப்பு நண்பர்கள் நீ எப்படி எல்லாம் மாத்து வாங்கினாய் என்று சொல்லி உசுப்பேற்றினார்கள்.
அவரைபார்த்து, அவருடன் பேசி அவரும் எங்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி, கேக் வெட்டி மகிழ்வோடு திரும்பினோம்... நிச்சயம் அன்றைய நிகழ்வில் கலந்த எம் நண்பர்கள் அன்று இரவு நினைவுகளோடு அவர்களின் நெஞ்சமும் கலந்திருக்கும்....
(சந்தித்த, வந்திருந்த அனைத்து நண்பர்களின் பெயரையும் குறிப்பிட இயலவில்லை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்)


Monday, January 12, 2015

காணமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்...

இப்போது எல்லாம் கடிதங்கள் வருவது மிக குறைந்துவிட்டது. வங்கியின் ஸ்டேட்மெண்ட் மற்றும் பணபரிவர்த்தனைக்கான அட்டைகள் மட்டுமே கடிதங்களாக வருகின்றன அதுவும் கூரியரில் தான் வருகின்றது.
பொங்கல் அட்டைகளை வாங்க காசு சேர்த்த காலம் எல்லாம் உண்டு. கயித்து கட்டில் மேல் ஆயா மூட்டாய் கடையில், பவானி போய் பொங்கல் வாழ்த்து அட்டை வாங்கி வரும் அதற்கு காசு சேர்க்க ஆகும் ஒரு வாரம். சித்தப்பன், பெரியப்பன், அங்காளி பங்காளி எல்லாம் வீட்டை சுற்றி இருப்பதால்  பொங்கல் அட்டைகள் அனுப்புவது அதிகபட்சம் தாய்மாமாவிற்கும், தாத்தாவிற்குமாகத்தான் இருக்கும்.
25 பைசாவிற்கு பொங்கல் அட்டை வாங்கி அதில் 5 பைசா ஸ்டாம் ஒட்டி ஊருக்கு நடுவில் இருக்கும் தபால் பெட்டியில் போட்டு அதை தபால்காரர் எடுக்கும் போது பார்த்து பரவசம் அடையும் தருணங்கள் எல்லாம் மீண்டும் கிட்டா..
சித்தார் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் படிக்கம் போது தான் எனக்கு முதன் முதலாக பொங்கல் வாழ்த்து வந்ததாக ஞாபகம்.
தபால்காரர் வீட்டுப்பக்கம் வருகிறார் என்றால் அது கொளப்பலுரில் இருந்து என் தாத்தா அனுப்பிய பொங்கல் வாழ்த்தாகத்தான் இருக்கும். அதுவும் அந்த பொங்கல் வாழ்த்து கலர் அட்டைகளாலும், அதன் உள் ஒரு தாள் இணைத்து அதில் சில வாழ்த்து வரிகளை எழுதி அன்புடன் தாத்தா என்று அனுப்பி இருப்பார்.
பொங்கலுக்கு 2 நாள் முன் பள்ளிவிட்டு வந்ததும் அந்த வாழ்த்தை கையில் வைத்துக்கொண்டு பக்கத்து வீடு, எதிர்த்த வீடு மற்றும் கில்லி விளையாட அழைக்கும் நண்பர்கள் என ஒவ்வொருவரிடம் அதை காண்பித்து அதில் காணும் சுகத்திற்கு தான் எல்லையே இல்லை.
மேல்படிப்புக்காக பேருந்து ஏரி செல்லும் போது, அதுதாங்க 6, 7, 8 ம் வகுப்பு படிக்க பேருந்து ஏரி செல்லும் போது வாழ்த்து அட்டை பற்றி பேசுவோம். எங்கள் பள்ளியில் ஒரு தபால் பெட்டி வைத்து விடுவார்கள் அதில் நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பினால் அது அவர்களின் வகுப்பில் தினமும் மாலை கொடுத்துவிடுவார்கள்.
நமக்கும் எதாவது நண்பர்கள் அனுப்புவார்கள் என்று ஆசையோடு காத்திருந்த தருணம் அது. நமக்கு அனுப்பினால் அவர்களுக்கு திருப்பி நாம் அனுப்பவேண்டுமே என எங்கு நல்ல வாழ்த்து அட்டை கிடைக்கும் என்று விசாரித்த போது பவானி தனா புத்தக நிலையத்தில் தான் நல்லா கிடைக்கும் என்று அறிந்து, அதன் பின் ஒரு மாத காலமாக காசு சேர்த்து, வீட்டுக்கு தெரியாமல் கிருஷ்ண மூர்த்தியையும், பரந்தாமனையும் ஒரு ரூபாய் பஸ் சார்ஜ் போட்டு பவானி போய் கடைவீதியில் உள்ள தனா கடைக்கு சென்றால் நிறைய கலர் கலரான அட்டைகளை எதை வாங்குவது, எதை விடுவது என பேந்த பேந்த விழித்து கொண்டே பார்த்தேன்.
நடிகர்கள் படம் கொண்ட வாழ்த்து, முருகன், விநாயகர், சரஸ்வதி என பக்தி மயமான வாழ்த்து, அரசியல் தலைவர்கள் வாழ்த்து, ஜிகினா ஒட்டியது, உள்ளே விரித்தால் சாமி தெரியுற மாதிரி இருக்கும் அந்த வாழ்த்து, எம்ஜிஆர், கலைஞர், ரஜினி, கமல் போட்ட வாழ்த்து என புதிய உலகமாக இருந்தது அந்த வாழ்த்து அட்டைகடை.
நல்ல ஜிகினா உடன் உள்ள சரஸ்வதி படம் போட்ட ஒரு வாழ்த்து அட்டையும், எங்க தாத்தாவிற்கு அவருக்கு பிடித்த கலைஞர் படம் போட்ட வாழ்த்து அட்டையும் வாங்கிட்டு அடுத்த நாள் பள்ளி சென்றேன். முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என  என்றுமே எனக்கு வாழ்த்து அட்டை வரவில்லை. 
சரி யாரும் நமக்கு அனுப்பவில்லை என்றால் என்ன நமக்கு நாமே அனுப்புவோம் என்று ஜிகினா போட்ட சரஸ்வதியை எனக்கு நானே வேறு பெயரில் அனுப்பி காத்திருந்தேன் கையில் கிடைக்கும் வரை.
தேன்மொழி, கயல்விழி, புனிதா எல்லாம் வகுப்பில் உட்கார்ந்திருக்க எங்க ரவி வாத்தியார் என் பெயரை அழைத்து அந்த அட்டையை என்னிடம் கொடுக்கும் போது ஏற்பட்ட ஆனந்தமும், அதற்கு பின் தேன்மொழி அந்த அட்டையை கொடு பாத்துட்டு தருகிறேன் என வாங்கி பின் அவள் கையால் எனக்க கொடுத்தது இன்றும் நிழல் ஆடுகிறது அந்த ஆனந்த தருனம்...
இன்று டெக்னாலஜி வளர்ந்து வாழ்த்து அட்டை காணமல் போனது வருத்தமாக இருந்தாலும் அதன் நினைவுகள் சுகமானதே....

Sunday, January 11, 2015

ஆண்மை வீரியத்திற்கு கருஞ்சதை நாட்டுகோழி சாப்பிடுங்க...

நாட்டுக்கோழி என்றாலே இங்கு பல பேருக்கு நாவில் எச்சில் ஊறும், அந்த அளவிற்கு சுவையானது. இன்று பிராய்லர் கோழியின் வருகையால் பலர் நாட்டுக்கோழியை சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி இருக்கும். இருந்தாலும் என்னை போல் நாட்டுக்கோழியை தேடி தேடி உண்ணும் நண்பர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கின்றனர்.

சமீபத்தில் நண்பர்களோடு ஓர் புத்துணர்வு முகாமிற்கு சென்றிருந்தோம், இந்த முறை கிராமத்தில் கிடைக்கும் நாட்டுக்கோழி மட்டுமே வாங்கி செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்ததால், நண்பனின் அப்பாவிடம் சொல்லி இருந்தோம். எங்கள் பக்கம் காவிரி கரையில் சுற்றி திரியும் கோழிகளுக்கு கொஞ்சம் மவுசு அதிகம்.

காவிரியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் டெல்டா மாவட்டங்களை அள்ளி அணைத்து அவர்களுக்கு வாரி கொடுக்கிறாள் காவிரி, ஆனா எங்களைப்போன்ற ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட மக்களை எல்லாம் அள்ளி அணைக்க மனமின்றி தள்ளிவிட்டு ஒரசியபடியே செல்கிறாள். எங்களை உரசி செல்லும் இந்த காவிரி கரையில் காவிரியின் நீரை குடித்து வளரும் கோழிகளின் சுவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நண்பனின் தந்தை எங்களுக்காக ஓரு கோழி 3 கிலோ எடை வரும் அளவிற்கு, காவிரி கரையில் சுற்றி திரிந்த 7 கோழிகளை வாங்கி கொடுத்திருந்தார்.

அந்த கோழிகளில் 3 கோழிகள் கருஞ்சதை நாட்டுக்கோழி, நாட்டுக்கோழிகளில் பெருஞ்சாதி, சிறுஞ்சாதி , கருஞ்சதை, கட்டுசேவல் என பல வகைகள் உண்டு. நம் கிராமங்களில் அதிகம் கிடைப்பது பெருஞ்சாதி வகையிலான நாட்டுகோழிகள் தான். அதுவும் 1 வருடம் அல்லது 2 வருடம் நன்கு வளர்ந்த கோழிகளை சாப்பிடுவதில் தான் நிறைய சத்துக்கள் இருக்கும் என்று சொல்வார்கள்.

இந்த கருஞ்சதை நாட்டுக்கோழி நான் சாப்பிட்டதே இல்லை, கோழியின் இறகுகள் கருப்பாக இருக்கும், கால்கள் நன்கு கருப்பாகவும், கறியின் சதையும் மிதமான கருப்பாக இருக்கும், நான் பல முறை இந்த கோழிகளை பாத்திருந்தாலும் கருப்பா இருந்தால் நோய் தாக்கி இருக்குமோ என்று அஞ்சி இத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தேன்.

சமீபத்தில் கோழி புடிக்க ஊர் பக்கம் சென்றிருந்த போது ஒரு பெருசை சந்தித்தேன் அவர் தான் சொன்னார் நாட்டுக்கோழி சாப்பிட்டால் கருஞ்சதை நாட்டுகோழியாக சாப்பிடனும் அப்பதான் உடம்புக்கும் மனசுக்கும் தெம்பு என்றார். அன்றில் இருந்து இந்த கோழி மேல் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் அந்த பெருசு சொல்லும் போது இதயத்திற்கு மிக நல்லதாம், சளி பிடிச்சிருக்கும் போது சாப்பிடும் கோழிச்சாறு இந்த கருஞ்சதை நாட்டுக்கோழியின் சாறாக இருந்தால் சளியும் காணமல் போய்விடுமாம்.

இதய நோய் இருப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாமாம் இந்த கோழியை, அதுவும் நன்கு வளர்க்கபட்ட இக்கோழிகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்களுக்கு எதிப்பு சக்தி உடலில் மிக அதிமாக வருமாம், குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி வர வர அவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருக்காதாம்.

மேலும் அந்த பெரியவர் சொல்லும் போது தம்பி அந்த காலங்களில் புதிதாக திருமணம் ஆனவர்களை விருந்துக்கு அழைப்பாங்க கேள்விபட்டு இருக்கியா என்றார், ஆமாங்க இப்பவும் அந்த சம்பிரதாயம் இருக்கு என்றேன். தம்பி இப்ப எல்லாம் ஒரு வேளை உணவு தான் விருந்துக்கு செல்கின்றனர். அப்போது எல்லாம் கோழி அடிச்சு 2 நாளைக்கு விருந்து போடுவோம், அதுவும் கருஞ்சதை நாட்டுக்கோழியை தேடிப்பிடிச்சு சமைச்சு போடுவோம். இக்கோழியின் கறி ஆண்மை வீரியத்திற்கு மிக அற்புதமான மருந்து என்றார். அதனால தான் கண்ணாலம் ஆனவர்களுக்கு விருந்து என்ற பெயரில் இக்கோழியை தேடி தேடி சமைச்சு போடுவாங்க என்றார்.


அப்போது எல்லாம் குழந்தை பிறக்காதவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவுதான்.. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை மிக அதிகம் தானே என்றார். ஆஹா பெருசு மிக தெளிவாத்தான் பேசுது என்று நினைத்துக்கொண்டு, தங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்றேன் எனக்கு பொட்ட புள்ளைங்க 4, ஆம்பள பசங்க 3 என்றார். அப்ப நிறைய விருந்துக்கு போயிருப்பீங்க போல என்றதும் அவர் சிரித்த சிரிப்பு மிக மகிழ்ச்சியாக இருந்தது.


இந்த கருஞ்சதை கோழியின் கதை கேட்டதில் இருந்து தேடி தேடி புடிச்சதில் இந்த முறை 3 கோழி மட்டுமே கிடைத்தது. ஆனாலும் ரசித்து ருசித்து மிக்க மகிழ்ச்சியாக சாப்பிட்டோம்... 

நீங்களும் கிடைச்சா சாப்பிடுங்க மக்களே 3 கிலோ எடையுள்ள ஒரு கோழி 1500 ரூபாய்க்கு வாங்கினோம்.....

Sunday, January 4, 2015

அஞ்சறைப்பெட்டி 2015

வணக்கம் என் இனிய வலைப்பூ நண்பர்களுக்கு...

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

வருடா வருடம் நிறைய எழுதவேண்டும் என்று தான், அந்த வருடத்தின் முதல் பதிவில் எழுதும் போது நிச்சயம் இடம் பெறும் வாசகமாக இருக்கும் ஆனால் அந்த வருடம் செல்லச்செல்ல அது நிச்சயம் நிறைவேறுவதில்லை, இது எனக்கு மட்டமல்ல நம் நிறைய பேருக்கு இப்படித்தான் போகிறது. அதுவும் முகப்புத்தகம் வந்ததில் இருந்து நிறைய எழுதவும் இயலவில்லை ஆனாலும் நிறைய நேரம் இணையத்தில் இருக்கமுடிகிறது. இது ஏன்என்று கண்டுபிடிக்கவெல்லாம் தேவையில்லை நமக்குத்தான் தெரியுமே வலைவதில்லை என்று. பார்ப்போம் இந்த வருடமாவது எழுதமுடிகிறதா என்று..

********************

இந்த வருட ஆரம்பமே எனக்கு பட்டையகிளப்புகிறது. அதாவது செலவில்லாத ஆண்டாக அமைந்ததில் சந்தோசமே. 30ம் தேதியில் இருந்து பல்வலி மருத்துவர் பல்லை புடுங்கித்தான் ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். இரண்டு நாள் போகட்டும் என்று இருக்கும் போது வலி அதிகமாக எதுவும் சாப்பிடஇயலவில்லை. எப்போதும் புத்தாண்டு பிறக்கும் போது பார்ட்டி, ஒட்டல் என செலவு கையை கட்டும், இந்த முறை செலவு மிச்சம், பல்லை புடுஙகியதால் அடுத்தநாள் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் என எங்கேயும் ஊர் சுத்தாததால் எனக்கு இந்த வருட ஆரம்பம் செலவு இல்லாமல் முடிந்ததில் எனக்கு மிக மகிழ்ச்சியே...

********************

கோவையில் தினமும் சுங்கம் நிர்மலா கல்லூரி வழியாகத்தான் அலுவலகத்திற்கு வருவேன். அவ்வழியில் தினமும் நிறைய இளைஞர்களும் பெற்றோர்களும் பெட்டியுடன் நிற்பார்கள். அவசரமாக வருவதால் என்ன என்று பார்க்க நேரம் இருக்காது.

சமீபத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த என் தம்பி நின்று இருந்தான் அவனையும் அவன் அப்பாவையும் பெட்டியுடன் பார்த்தேன். உடனே இங்க என்ன பன்ற எப்படி இருக்கின்றாய்? என்று விசாரிக்கும் போது, அவன் சந்தோசமாக அண்ணா எனக்கு இந்திய இராணுவத்தில் வேலை கிடைச்சிருக்கு என்று சந்தோசமாக சொன்னான்.

னக்கும் இன்ம் புரியா ஓர் மகிழ்ச்சி.

தனது பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் விட்டு உயிரை துச்சம் என நினைத்து அவன் கண்களில் எந்த பயமும் இல்லாமல் அவன் மகிழ்ச்சியை மட்டும் பார்த்தேன்.

இன்று நம்நாட்டில் நிறைய வேலைகள் உள்ளன அனைத்துக்கும் நல்ல சம்பளம் கிடைக்கின்றது ஆனால் இந்த இளைஞனைப்போல் இரானுவத்தை தேர்ந்தெடுத்த இளைஞர்களுக்கு என் ராயல் சல்யூட்.

********************

நகரத்தில் உள்ள பாதி பேருக்கு புத்தாண்டு கொண்டாட்டம் ஹோட்டலில்தான் போல, எத்தனை விதமான ஆபா்கள், கப்புலுக்கு 6000 என்கிறாா்கள், 4 ஆயிரம் என்கிறாா்கள், எம்புட்டு வேண்டுமானாலும் தின்னுக்கலாம் என்கின்றனா். அதைவிட ஒரு படி மேலே போய் எம்புட்டு வேண்டுமானாலும் குடிச்சிக்கலாம் என்று இன்னொரு ஹோட்டலின் விளம்பரத்தை பாா்த்தேன். அம்மாடி இம்புட்டு செலவு செய்து குடிக்கவும், குத்தாட்டம் போடவும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற போது தான் திகைக்கவைக்கிறது....

புத்தாண்டை பொறுத்த வரை எப்பவும் என் கிராமத்தில் தான் கொண்டாடுவேன், ஊாில் உள்ள எல்லோரும் ஆளுக்கு 10, 20 என்று போட்டு பவானி போய் அந்தியூா் முக்கில் உள்ள பேக்காியில் கேக் வாங்கிட்டு வந்து எப்படா மணி 12 ஆகும் என்று குளிாிலும் ஊா், உலக நியாயங்களை பேசிவிட்டு, 12 மணிக்கு செட் செய்யப்பட்ட டேப்பில் கமலின் ஹேப்பி நியூ இயா் பாடலை பாடி விட்டு, கேக் வெட்டுகிறேன் என்ற பெயாில் எல்லாா் முகத்திலும் பூசிவிட்டு, சாலையில் போய் வரும், லாாிகளை எல்லாம் நிறுத்தி புத்தாண்டு வாழ்த்து சொல்லி, விடிய விடிய ஆட்டம் போடுவோம்... மிக குறைந்த செலவில், மிகப்பொிய சந்தோசம் கிடைத்த திருப்தி இருக்கும்... இந்த முறை நகரத்தில் கொண்டாடுகிறேன்... ஊரை சுற்றுலாம் என நினைத்திருக்கிறேன்... பாா்ப்போம், சந்திப்போம்... புத்தாண்டு ஆட்டத்தில்.....

********************

ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாட்களே.. வலைப்பதிவு, முகபுத்தகம் இவை எல்லாம் வந்த பிறகு வருடக்கடைசியில் நாம் அனைத்து முக்கிய நாட்களையும் நினைவில் கொண்டு எழுதுகிறோம்.. அந்த வகையில் இந்த ஆண்டு என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு முதன் முதலாக மகனை பள்ளிக்கு அனுப்பி அவன் வகுப்பறை செல்லும் வரை நின்று ரசித்து, எப்படி நடந்துக்குவானே, சண்டை எதாவது போடுவானா, அடி வாங்குவானே என நினைத்து நினைத்து அன்று முழுவதும் ஒரு பயத்தோடு கழிந்தது.

நான் பள்ளியில் செய்த குரும்புகள் எல்லாம் நிழல் ஆடின. ஆனால் மகன் என்னவோ சமத்து பிள்ளையாக இருந்தாலும் பெற்ற மனம் துடி துடிப்பது இன்று வரை தொடருகிறது...