Sunday, April 12, 2015

இளநீ எம்புட்டுங்க??

உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி போகும் போது சிப்காட் அருகில் உள்ள ரயில்வே கேட் போடுவதற்குள், அந்த இடத்தை கடந்து விடவேண்டும் என்று நான் மட்டுமல்ல, அந்த வழியா போகும் பலர் மனதிலும் நிச்சயம் வந்து போகும் இந்த சாதாரண நிகழ்வு.

அதுவும் எனது அலுலவகம் சில வருடத்திற்கு முன் இரத்தினம் டெக் பார்க்கில் இருந்ததால் வாரத்தின் 5 நாட்களும் என் நினைப்பு இரயில்வே கேட் மேலே தான் இருக்கும். அவ்வப்போது லாக் ஆகிடும் அப்புறம் ஊரைச்சுற்றித்தான் அலுவலகம் செல்லவேண்டும்.

மேம்பால பணிகள் முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் அந்த பக்கம் நான் செல்லும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது அடிக்கிற வெய்யிலில், அனல் காற்றோடு அந்த மேம்பாலத்தை கடக்கும் போது சும்மா ஜிவ்வென்று இருந்தது. என்ன அந்த வழியாக சாலையில் செல்லும் போதும் சரி, மேம்பாலத்தில் செல்லும் போதும் சரி, உயிரைகையில் பிடித்துக்கொண்டு தான் போகவேண்டி இருக்கும், ஆம் எமன் வடிவில் அந்த சாலையில் வரும் தனியார் பேருந்துகள் எல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் வந்து செல்லும்.

அடிக்கிற வெய்யிலுக்கு சாலையில் செல்வது நொம்ப கஷ்டந்தான். உடல் வெப்பத்தை தனிக்க அந்த சாலையில் இளநீர், நொங்கு, தெலுவு என வரிசையாக விற்றுக்கொண்டு இருப்பனர், கற்பகம் காலேஜ் தாண்டி இடது பக்கம் ஒரு இளைஞர் இளநீர் விற்றுக்கொண்டு இருந்தார். வண்டியை ஓரங்கட்டி நின்றேன். அவரை சுற்றிலும் செவந்த இளநீ, மற்றும் இளநீ குழை குழையாக இருந்தது. எந்த குழையில் எந்த இளநீ வேண்டும் என்று சொல்கிறோமோ அந்த இளநீயை வெட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
இந்த இளநீ கடை பையன் கிடா மீசை, மிரட்டும் பார்வை எல்லாம் இல்லை பையன் இந்தி பட ஹீரோ மாதிரி வழுவழுன்னு இருந்தார். ஒரு வேளை இந்திக்கார பையனோ என்று பேச்சை ஆரம்பித்தேன்.

"தம்பி, இளநீ எவ்வளவு ? "

" சார், 30 ரூபாய்ங்க "

"என்னய்யா இது ஊருக்குள்ள தான் 30, 35ங்குறாங்க பொள்ளாச்சிக்கு பக்கத்துல இருந்து கிட்டு 30 ரூபாய் சொன்னா நியாயமாப்பா ??"

" சார் உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் 25 ரூபாய்க்கு தர்றேன்"

"சரி தம்பி, 2 இளநீ கொடுப்பா, நல்ல வழுக்கையா கொடுப்பா, நீ பாட்டுக்கு தேங்காயா கொடுத்திடாதே, இல்ல அரை பதமா கொடுப்பா "

"சார், வழுக்கை இல்ல சார், வேனும்னா அரை பதமாக தருகிறேன் "

"சரிப்பா, இந்த குழல் எல்லாம் வேண்டாம் அப்படியே வாய வெச்சு ஊரிஞ்சுவது போல கொடு"

இரண்டு இளம் இளநீயை எடுத்து அவனுடைய நன்கு தீட்டப்பட்ட அருவாளில் இரண்டு சீவு தான் சீவினான், ஒரு கையில் இளநீ ஒரு கையில் அருவாள் என அவன் கத்தியை வீசிய இலாவகம் பயமாக இருந்தாலும், அழகாக இருந்தது இப்போது இளநீ..

" இந்தாங்க இளநீ என்று கொடுத்தான். "

நாங்க இளநீ வாங்கி கொடுக்கையில் அந்த சாலையை பார்த்துக்கொண்டே இளநீ குடித்தோம், சாலையில் எமன்கள் எட்டி எட்டி பார்த்துக்கொண்டு சென்று கொண்டு இருந்தார்கள். போதக்குறைக்கு கார்களும் அப்படித்தான் சென்று கொண்டு இருந்தன.

எங்கிருந்தோ வேகமாக வந்த ஸிப்ட் கார் அந்த கடையை நோக்கி வந்து சர்ர்ர் என்று பிரேக் அடித்து நின்றது. அந்த காரில் தேவதைகள் இருப்பது என் எக்ஸ்ரே கண்ணுக்கு பட. தேவதையை பார்க்க ஆர்வம் ஆனது எனது கண்கள்.

பின் இருக்கையில் ஜீன்ஸ் பேண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பரத்தை தாங்கிய ஒரு அரைக்கை பனியனோடு இறங்கியது அந்த தேவதை, அப்படி திரும்பி நின்றது அதன் நெஞ்சில் மேல் நின்று இருந்தார் டோணி ( மனுசன் கொடுத்து வெச்ச ஆளய்யா) தேவதையை பார்த்ததும் என் கண்கள் சப் என்று ஆகியது. உடையையும் அலங்காரத்தையும் கலைத்தான் நிச்சயம் அது என் கண்களுக்கு தேவதையாக தெரியாது, சுமாராகத்தான் இருந்தது  அதானல் அடுத்த இளநீக்கு ஆர்டர் தராமல் இளநீயை வெட்டி அரைப்பதத்தை சாப்பிடலாம் என்ற அந்த தம்பியிடம் நீட்டினேன்..

அப்போது அந்த பெண்ணோடு வந்திருந்த அழகு பையன் நல்ல வாட்டசாட்டமாக இருந்தான். "அழகு பையனுக்கு சுமார் பிகர் தான் வாய்க்கும் என்பது சரியாகத்தான் இருக்கும் போல" என்று மனதில் அசை போட்டுகிட்டே அவர்கள் அருகில் சென்றேன்.

அந்த பையன் தம்பி இளநீ எவ்வளவு என்றான், 1 நாற்பது ரூபாய் சார் என்றான். சரி தம்பி 2 கொடு என்றான். நான் அவன் வெட்டிக்கொடுத்த அரை பதத்தை சாப்பிட்டுக்கொண்டு, இவர்கள் மீண்டும் பேரம் பேசுவார்களா என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்தேன்.

ஒன்னும் நடக்கல என்பதால் வண்டியை ஸ்டார்ட் செய்ய உதைத்தேன். அந்த கார் கார ஹீரோ 80 ரூபாய் கொடுத்தான், அதை வாங்கிக்கொண்டே அந்த பையன் என்னை பார்த்தான் மெல்லிய புன்னகையோடு, அவன் முகத்தில் தெரிந்தது அவன் தொழில் விரைவில் அதிபர் ஆவதற்கான ஒளிவட்டம்...

3 comments:

  1. //மீண்டும் பேரம் பேசுவார்களா என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்தேன்.
    ஒன்னும் நடக்கல //
    பயங்கர சூட்டுல இருந்துருப்பாங்க போல.

    ReplyDelete
  2. ஆளுக்கொரு விலை. பிழைச்சுக்குவான் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் சங்கவி :)

    ReplyDelete