Tuesday, August 5, 2014

இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு...



கோவை சேலம் ஹைவே ரோட்டில் சித்தோடு என்ற ஊரிற்குள் செல்லும் வழியில் அந்த ஊர் எல்லையில் உங்களை வரவேற்கும் இந்தியன் பஞ்சாபி தபா.

12 வருடங்களுக்கு மேல் இருக்கிறது இந்த தாபா. ஈரோடு சுற்றி உள்ள ஊர்களில் தாபா ரொம்ப பிரபலம். ஈரோடு பெருந்துறை ரோட்டில் நிறைய தாபா இருக்கின்றனது அதைப்பற்றி பிறகு பார்ப்போம். இன்று ஈரோடு பவானி சாலையில் உள்ள இந்தியன் பஞ்சாபியை பற்றி பார்ப்போம்.

பெரிய சாலை போட்டு அதில் கயித்து கட்டில் போட்டு வைத்து இருப்பார்கள், கட்டில் நடுவே ஒரு பலகை இருக்கும். கட்டிலில் இரண்டு பக்கமும் இருவர் அமர்ந்து கொண்டு சாப்பிடும் படி அமைந்திருக்கும். இந்த கட்டிலில் அமர்ந்ததும் நமக்கு சின்ன வயதில் தாத்தா வீட்டு கயித்து கட்டிலில் ஆட்டம் போட்டது ஞாபகம் வரும்.

நாங்கள் நான்கு பேர் சென்ற இருந்ததால் இரண்டு கட்டிலை ஆக்கரமித்திருந்தோம். உட்கார்ந்ததும் பெல்லாரி வெங்காயத்தை ரவுண்டாக வெட்டி, அதன் கூட எழுமிச்சை ஊர்காய் வைத்து தட்டிலில் கொடுத்தனர். வெங்காயத்தை எடுத்து ஊர்காயில் தொட்டு ஒரு கடி கடித்தால் வெங்காய காரமும் எழுமிச்சையின் காரம் மற்றும் புளிப்பு இணைந்து நாக்கில் படும் போது மீண்டும் சாப்பிடத்தூண்டும் சுவை.

எல்லா இடங்களிலும் இடம் பெறும் வழக்கமான மெனுக்கள் தான் என்றாலும் சுவையில் தான் அதன் தரம் இருக்கின்றது. ஓரு ஹோட்டல் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க வேண்டும் எனில் நிச்சயம் அங்கு எதாவது சுவையாக இருக்கும் அதற்காகவே அந்த ஓட்டல் நன்றாக இயங்கும்.

இங்கும் அதுபோலத்தான் ரொட்டி, டால், நான் என வகை வகையாக கொடுத்தாலும் இங்கு கிடைக்கும் ப்ரைடு ரைஸ் நன்றாக இருக்கும். மிக சன்னமான அதே சமயம் உதிரி உதிரியாக உள்ள சாப்பாட்டில், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் மற்றும் முட்டை சம விகிதத்தில் கலந்து சாப்பாட்டோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். அந்த சாப்பாட்டை ஒரு கை வாயில் துணிக்கும் போது தான் அதன் சுவையும் தரமும் மனதில் நிற்கும்.

தயிர்சாதம் பஞ்சாபி தாபாக்களில் தயிர்சாதம் அருமையாக இருக்கும் என்று கேள்விபட்டு இருப்பீர்கள், இங்கு காணலாம் அந்த சுவையை. நன்கு குழைந்த சாப்பாட்டில் கெட்டி தயிர் ஊற்றி, அளவான உப்பு கலந்து கொடுக்கும் இந்த தயிர்சாதம் ஒரு கப் எல்லாம் நமக்கு பத்தாது, அவ்வளவு அருமையான சுவை.
இந்த பஞ்சாபியில் முக்கியமாக சாப்பிடவேண்டிய ஒன்று பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் இரண்டும் கிடைக்கும். நான் எப்போதும் ஆர்டர் செய்வது நாட்டுக்கோழி பள்ளிபாளயம் தான். இங்கு கிடைக்கும் நாட்டுக்கோழி பள்ளிபாளையத்தில் வெங்காயமும், தேங்காயும் நிறைய கலந்து இருக்கும் சிக்கன், வெங்காயம் மற்றும் தேங்காய் என ஒவ்வொன்றும் சாப்பிட சாப்பிட அதன் காரமும், தேங்காயின் இனிப்பும் நாவை பதம் பார்க்கும். இந்த பள்ளிபாளையம் சிக்கனுக்கு ஈரோட்டு மக்கள் ரசிகர்கள். எல்லா கடையிலும் கிடைக்கும் பட் இந்த சுவை கிடைக்காது.

கடைசியில் பாயாசம் சில் என்று இருக்கும் பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும் மிதக்கும் இதுவும் ஒரு கப் பத்தாது. நன்கு காரம் சாரமாக சாப்பிட்டு முடித்ததும் இந்த பாயசம் ஒரு தேவார்மிதம். நிச்சயம் தாபாவில் ஒரு நாள் சாப்பிடுங்க, சாப்பிடும் போது பள்ளிபாளையம் சிக்கன், பிரைடு ரைஸ், தயிர்சாதம் மற்றும் பாயாசத்தை மறந்திடாதீங்க...

3 comments:

  1. தாபா வில் சாப்பிட்டதில்லை. கேள்விப் பட்டிருக்கிறேன். கட்டிலில் உட்கார்ந்து சாப்பிடுவது புதுமை.

    பத்தி பிரித்துப் போட்டால் படிக்க எளிதாக இருக்குமே..

    ReplyDelete
  2. நானும் தாபாக்களில் உண்டது இல்லை! நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டு இருக்கேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. வயசுப்பிள்ளை, சாப்பிடறீங்க, நாங்க என்ன பண்றது, உங்க வாயைப் பாத்துகிட்டு இருக்கவேண்டியதுதான்.

    ReplyDelete