Wednesday, February 17, 2016

சோத்துக்கடை: சாய் கபே, அண்ணா சிலை அருகில். கோவை.

தினமும் என் நண்பர்கள் காலை குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு பின் சிறு நட்புக் கூட்டத்தை முடித்து விட்டு அண்ணாசிலை அருகில் உள்ள இந்த சாய் உணவகத்தில் சிம்பிளா காலை உணவை உண்பார்கள்.

நான் சில மாதங்களாக அதிகம் உணவு விடுதியின் உணவை உண்பதில்லை என்பதால் இவர்களோடு அதிகம் சாப்பிட செல்வதில்லை. ஆனால் தினமும் பூரி செம்ம, புட்டும் கடலை குருமாவும் செம்ம, இன்னிக்கு மின்ட் பூரி என தினமும் ஒவ்வொரு மெனுவாக அடுக்கி என் வயிற்றில் பசியை உருவாக்குவார்கள். அதிலும் இந்த குழவில் 75 வயது யூத் ஒருவர் இருக்கிறார் அவர் காபியை பற்றி சொல்லி என் வயிற்றை கிள்ள வைத்து விடுவார்.

சரி என்று நேற்று நண்பர் அசோக் பிறந்தநாள் என்பதால் சாப்பிட வந்தே ஆகவேண்டும் என்று சொல்லி விட்டார். ஏற்கனவே வீட்டில் மூக்கு முட்ட தின்றதால் கொஞ்சம் திணறித்தான் சாப்பிட சென்றேன். இன்றைய ஸ்பெசல் மின்ட் பூரி என்றார்கள். நண்பர்கள் புட்டு கடலை, பொங்கல், கோதுமை உப்புமா, மினி இட்லி, ஊத்தாப்பாம் என ஒவ்வொன்றாக ஆர்டர் செய்ததில், இத்தனையும் திங்க முடியாது சாமி வேண்டும் என்றால் டேஸ்ட் பார்க்கிறேன் என்ற பெயரில் ஒவ்வொன்றையும் ருசி பார்த்தேன்.

சும்மா சொல்லக்கூடாது விலையும் குறைவு, தரமும் நிறைவு. மின்ட் பூரியும் அதற்கு கொடுத்த உருளை மசாலும் செம்மப்பா.. சுடச்சுட பூரியுடன் உருளையை உள்ளே வைத்து கப்புன்னு ஒரு கடி கடிக்கும் போது தான் தெரிந்தது, மின்ட் பூரியும் கிழங்கின் காம்பினேசனின் சுவை. கொண்டக்கடலையும் புட்டும் ஒரு துளி புட்டு, கடலையில் கலந்து சாப்பிட்ட அச்சச்சோ, அருமையோ அருமை.

மினி இட்லியில் நெய்யும், வெங்காயமும் மிதங்க வந்தது, இட்லி, சாம்பார், நெய் கூட வெங்காயம் இவை அனைத்தும் ஒன்று சேர ஒரு வாய் போட்ட பின், இட்லியிலும் சொர்க்கத்தை காண முடிந்தது.

கோதுமை ரவை நன்கு வேகவைக்கப்பட்டு, எண்ணெய் அதிகம் இல்லாமல் நிறைய வெங்காயம் போட்டு இருந்த உப்புமா, இன்னொரு முறை சாப்பிட வைத்தது.

இப்படி ஒவ்வொன்றாக டேஸ்ட் பார்த்து விட்டு கடைசியாக, காபி குடிச்சேன் பாருங்க பில்டர் காபி எல்லாம் எட்ட நிற்க வேண்டும் போல இருந்தது இந்த திக்கான காபி. தண்ணீர் கலக்காத பாலில் போட்டு இருப்பாங்க போல. நிறைவான சுவை...

8 பேர் காலை உணவை சாப்பிட்டு, பின் 1 பை 2 என்ற கணக்கில் காபி சாப்பிட்டும் வந்த பில் தொகை எண்ணவோ 340 தான்.

கோவை அவிநாசி ரோட்டில் பயணிப்பவர்கள், காலை உணவிற்கு தைரியமாக இந்த கடையை தேர்ந்தெடுக்கலாம். சுவையும், தரமும் நன்று.

அவிநாசி சாலையில் அண்ணாசிலையில் இருந்து ரயில்வே ஸ்டேசன் போகும் வழியில் திரும்பியதும் முதல் கடை இந்த சாய் கபே தான். மதிய உணவும், மாலை போண்டா வகைகளும் சூப்பரா இருக்கும் என்றனர் நண்பர்கள். நான் இன்னும் சாப்பிட்டு பார்க்கல விரைவில் அதையும் செய்யனும்..

இனி அடிக்கடி சந்திப்போம் சோத்துக்கடையில்...

1 comment: