Monday, February 29, 2016

கையை நீட்டும் முட்டாள் பெற்றோர்கள்...

 
குழந்தையை வளர்க்கும் விதம், அவர்களின் எதிர்காலம் குறித்த கவலை நிச்சயம் பெற்றோருக்கு இருக்கும், இருக்க வேண்டும் அதில் தவறில்லை. ஆனால் குழந்தை இப்படித்தான் செல்ல வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவர்களை நம் கைக்குள் கொண்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல.
அவ்வாறு குழந்தைகளை அடக்க ஒடுக்கும் போது அவர்கள் இயலாமை வரை நம்மிடம் அடங்கி இருப்பார்கள், ஒரு கட்டத்துக்கு மேல் நம்மை அவர்கள் எதிர்க்க தவறுவதில்லை என்பதை நாம் கண்கூட கண்டிருக்கிறோம்.. நான் அவ்வாறு கண்டசம்பவம்....
தினமும் பள்ளிக்கு குழந்தைகள் சரியான நேரத்திற்கு வரவேண்டும் என்பது பள்ளியின் சட்டம், அப்போது தான் அவனுக்கு காலத்தின் அருமை தெரியும். குழந்தை பள்ளிக்கு 8.45க்கு போக வேண்டும் என்றால் நமது வீட்டுக்கும், பள்ளிக்கும் உள்ள இடைவெளி மற்றும் செல்லும் வழியில் உள்ள போக்குவரத்து நெறிசலை கணக்கிட்டு, நாம் முன்னதாக கிளம்பவேண்டும் இது தான் எல்லா வீட்டிலும் வழக்கம்..
நானும் வழக்கம் போல் மகனை பள்ளியில் விட்டு விட்டு, பள்ளியின் வாசலில் பராக்கு பார்த்து கொண்டு இருக்கும் போது, நேரத்திற்கு வராதவர்கள் எண்ணிக்கை தினமும் சிலபேர் இருப்பார்கள். சிறிதி நேரத்தில் பள்ளி காவலர் வந்து கதவை திறந்து உள்ளே அழைத்து செல்வார்.
அன்றும் கொஞ்சம் வித்தியாசமான நாளாக பட்டது எனக்கு, குழந்தையை அதன் அம்மா காரில் வந்து இறக்கிவிட்டார் 10 நிமிடம் தாமதமாக, வழக்கம் போல காவலர் வந்து திறந்தார் ஆனால் அந்த குழந்தை அன்று பள்ளி போக மறுத்தது, ஒரு முறை போ என்று கத்திய அந்த குழந்தையின் தாய் அடுத்து தனது அஸ்திரத்தை எடுத்தார். ஆம் கைகளால் தாக்க துவங்கினார்.
இதை கண்ட எமது நண்பர் ஏன்மா அடிக்கறீங்க? என்று கேட்டார், இது என் குழந்தை விடுங்க நான் பார்த்து கொள்கிறேன் என்றார். நமக்கு ஏன் வேண்டாத வேலை என்று நாங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை தான் பார்த்தோம், வேற வழி..
நான்கு, ஐந்து அடி, அந்த குழந்தையின் தாயின் கண்களில் காளி குடியிருந்தது போல முழி, ஒரு ருத்திர தாண்டவமே ஆடினார், அந்த பொது இடத்தில். நான்கு அடி வாங்கிய குழந்தை அழுது கொண்டே அவள் அம்மாவின் கையில் இருந்த பையை பிடுங்கிக்கொண்டு பள்ளி கதவை நோக்கி நடந்தது.
அந்த கேட் அருகே போய் நின்று, அவள் அம்மாவை நோக்கி நீ அடிச்சிக்கோ, எத்தனை அடிச்சாலும் நான் உள்ளே போக மாட்டேன், நீ தானே என்னை லேட்டா கூட்டி வந்த போய் தாத்தா கிட்ட சொல்றேன் பார் என்று அழுது கொண்டே கத்தியது... இப்போது அந்த அம்மாவிற்கு கோபம் தலைக்கு ஏறி இருந்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல் வாரி அணைத்து கொண்டு, இல்லை இல்லை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றது.
குழந்தைக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று நாம் முடிவு செய்தாலும் அவர்களிடம் கருத்து கேட்க வேண்டும், குறைந்த பட்சம் அவர்கள் சொல்ல வருவதையாவது என்ன ஏது என்று கேட்கவேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்து கை நீட்டுவதை இந்த பெற்றோர்கள் என்று தான் விடுவார்களோ.
நீ அடிச்சுக்கோ நான் போகலை இந்த வார்த்தை எவ்வளவு வீரியமான வார்த்தை, அப்போ அதுக்கு அடிமேல் பயம் இல்லை, எத்தனை அடி அடிப்பாங்க என்று இந்த வயதிலேயே நன்றாக யோசித்து பேசுகிறது. முட்டாள் பெற்றோர்கள் தான் யோசிக்க மறுத்து அடியை மட்டுமே பிரதானமாக கொண்டு குழந்தையை வளர்கின்றனர்..
பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றாலும், குழந்தைக்காக தினமும் ஒரு அரை மணி நேரம் செலவிடுவதில் தவறே இல்லை. நம் வேலையை பார்த்து கொண்டே அவனிடம் பேசலாம், சமைக்கும் போதும், அலுவலக வேலை இருந்தாலும் அதை பார்த்து கொண்டே அந்த குழந்தையிடம் பேசலாம், இதை விட்டு விட்டு எங்க அவனோடு பேசவே நேரம் இல்லை என்று நேரத்தின் மீது தான் பழிபோடுகின்றனர் இங்குள்ளவர்கள்.
 

தினமும் பேஸ்புக்கிற்கும், வாட்ஸ் அப்பிற்கும் ஒதுக்கம் நேரத்தை விட குழந்தைக்கு ஒதுக்கம் நேரம் குறைவாகத்தான் இருக்கிறது.  குழந்தை அடம் பிடிக்கும் போது, அடிக்கிறதை விட்டு விட்டு, எல்லா கோபத்தையும் அடக்கிகொண்டு பேசிபாருங்கள், நிச்சயம் விரைவில் உங்கள் செல்லக்குட்டி, உங்களோடு சிறிதி நேரமே பேசினாலும், அந்த சிறிது நேரம் எப்போது வரும் என்று ஏங்கித்தவிப்பான்...

1 comment:

  1. அவர்கள் பேச விரும்பும்போது நாம் பேசுவதில்லை. நாம் அவர்களை எதிர்பார்க்கும்போது அவர்கள் விலகிப் போயிருப்பார்கள்.

    ReplyDelete