Sunday, July 13, 2014

கிளுகிளுப்பான கதை சொல்லி "சொக்கன் தாத்தா"

ஒவ்வொரு ஊரிலும் பல பெரிசுங்கள் ஆலமரத்தடியிலே, வேப்பமரத்தடியிலோ உட்கார்ந்து, ஊர் நாயம், உலக நாயம் பேசும் வழக்கம் எல்லா கிராமங்களிலும்  இருப்பார்கள். இவர்கள் மரத்தடி இருப்பார்கள், பாட்டிகளோ திண்ணையிலும், கிணற்றடியிலும் வெற்றிலை மடித்து வைத்து உரலில் இடிச்சிகிட்டே ஊர் நாயமும், உள்ளுர் கிசு கிசுக்களையும் பேசியே காலத்தை போக்குவார்கள்.

இவர்கள் பேசும் பேச்சில் பல அனுபவங்களும், நிறைய கருத்துக்களும் அடங்கி இருக்கும், என்ன பேசும் போது கொச்சை வார்த்தைகளை நிறைய பயன்படுத்துவார்கள். இப்போது நமக்கு கொச்சை வார்த்தையாக பட்டாலும் அப்போதெல்லாம் அந்த வார்த்தைகளின் மேல் ஈர்ப்பு இருந்ததை மறக்க இயலாது.

அறிவியல் மாற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சி, தொலை தொடர்பு வளர்ச்சி எல்லாம் அதிகரித்து அனைவருக்கும் பாலியியல் கல்வி களைப்பற்றி நிறைய அறிந்து கொள்ள இப்போது ஏதுவாக இருக்கிறது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்னர் ஒருத்தருக்கும் ஒன்னும் தெரியாது, இந்த மாதிரி பெருசுங்கள் எல்லாம் தங்களின் அனுபவங்களை கதையாக சொல்லி சொல்லித்தான் வளர்த்தார்கள் தங்கள் சந்ததியினரை. இவர்கள் சொல்லும் கதைகள் எல்லாம் இன்று நாம் கேட்கும் போது, அட இதுவா என்று தான் கேட்கத் தோணும், ஆனால் அன்று கதை கேட்க பெருசுங்களை துரத்தி துரத்தி இளைஞர்கள் படையெடுத்த காலம் அது.

இப்படி கதை சொல்வதில் எங்கள் ஊரில் பேர் பெற்றவர் சொக்கன் தாத்தா இவரைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும், இருவருக்கு எங்கள் சிறுவயதில் நாங்கள் வைத்த பெயர் கெட்டவார்த்தை தாத்தா. இந்த தாத்தா எங்களை பார்க்கும் போது வாடாக் குஞ்சு மணி, உள் டவுசர் கீது ஒன்னும் போடாமா அப்படியே ஆட்டிக்கிட்டு வர்றாம்பாரு என்று சத்தமாக அவர் பேசும் போது வெட்கமாக அந்த இடத்தை விட்டு ஓடிடுவோம்.

புதுசா கண்ணாலம் ஆன சேகர் அண்ணன் எப்ப பாரு தாத்தாவையே சுற்றி வருவார், நாங்களும் அப்படி என்னடா சொல்லுது இந்த கெட்டவார்த்தை தாத்தா என்று ஒட்டு கேக்க திணறுவோம். ஒரு நாள் கிணற்றுமேட்டில் அவர்கள் உட்கார்ந்து பேச பஞ்சாயத்து திண்ணைக்கு அடியில் படுத்து கதை கேட்கும் போது சொக்கன் தாத்தா பார்த்து விட்டார். உங்களுக்கு எல்லாம் இன்னும் வயசாகனுமடா குஞ்சாண்டிகளே என்று அவர் கத்த, நாங்க எஸ்கேப்.

வயது ஆக ஆக எங்களுக்கும் பெண்கள் மேல் ஈர்ப்பு இருக்கும் ஆனால் சைட் அடிக்க பயந்து தலைய குணிந்து மாட்டை ஓட்டிகிட்டு போய்டுவோம், ஆனால் தாத்தாவோ பெண்களை கண்டால் என்ன கொமுரி சமைஞ்சுட்டா போல, வெட்கத்தை பாரு என்று சத்தமாகவே கிண்டல் செய்வார். இதற்கு பின் தான் சொக்கத்தாத்தாவை நண்பராக்கி அவரிடம் கதை கேட்க ஆரம்பித்தோம்.

மங்குனி, கிங்குனியில் ஆரம்பித்து ராஜா ராணி கதைகள் என பல பாலியியல் கதைகளை சொல்வார். ஒவ்வொரு கதையின் முடிவில் வெட்கம் இருந்தாலும் அதில் பின்னப்பட்ட விசயங்கள் நிறைய இருக்கும். 

புருசன் பொஞ்சாதி, மாமனார், மாமியார், அத்தை  என ஒவ்வொரு உறவுக்கும் ஒரு கதை சொல்வார். புருசன் பொஞ்சாதி பிரச்சனைகளையும், அவர்கள் தப்பு செய்த போது எப்படி சமாளித்தார்கள் என்று பாலியில் கலந்து அவர் சொல்லும் கதைகள் நிறைய மணதில் ஓடுகின்றன. ராஜா ராணி கதைகள் தான் எப்போதும் செம்ம சூடா இருக்கும். அண்ணன் தம்பி கதைளில் சொத்துக்காக அவர்கள் செய்யும் திருட்டுத்தனத்தை நிறைய சொல்வார், அவர் சொன்னதில் "மங்குனிக்கு மங்குனியும் கெட்டு, கிங்குனிக்கு கிங்குனியும் கெட்டு, போதக்குறைக்கு வாயும் கெட்டு" என அவர் சொல்லும் போது எங்கள் சிரிப்புச்சத்தம் பக்கத்து ஊருக்கு கேக்கும்.
ஒரு நாள் கோயிலுக்கு போய்ட்டு வந்தேன் தாத்தா திருநீறு எடுத்துக்கோ என்றேன், எந்த கோயிலுக்கு என்றவரிடம் பவானி கூடுதுறைக்கு என்றேன். அங்கு இருக்கும் சிற்பங்களை எல்லாம் பாத்திருக்கிறாயா என்றார், எங்க தாத்தா எங்கப்பனும், ஆத்தாலும் தலையில் தண்ணிய தெளிச்சிகிட்டு, அந்த அர்ச்சனை, இந்த அர்ச்சனை என்று கோயிலில் என்னை கைய எடுத்து கும்பிடச்சொல்லி நச்சு நச்சுன்னு நச்சுங்கறாங்க...

அட போடா போக்கத்தவனே, அங்க நிறைய கண்ணாலம் ஆன புது புது சோடிகள் எல்லாம் வருவாங்களே, ஆமாம் தாத்தா நிறைய இருந்தாங்க என்றதும், அட அவுங்க எல்லாம் சாமி கும்பிட்டுட்டு அப்படியே, அங்க இருக்கும் சிற்பத்தை பார்க்கவந்தவங்க என்றும், அடுத்த முறை போய் ஒவ்வொரு சிற்பமாக பாருடா எங்குஞ்சாமணி, ஒவ்வொன்றும் ஓர் கதை சொல்லும் என்பார்.

தனியா போனா எப்படி என்று கூட்டாளிகளோடு கோயிலுக்கு சென்று அங்குள்ள சிலைகளை பார்த்து எங்களுக்கு தெரிஞ்ச விளக்கத்தை அப்போதைக்கு விளக்கி கொண்டோம். நாங்கள் ஒவ்வொருத்தனும் படிச்சு வெளியூரு வேலைக்கு போனாலும் சொக்கன் தாத்தாவை நினைச்சாலே மனசு செம்மையாக சிரிக்கும். நண்பர்கள் திருவிழா சமையத்தில் சரக்கடிக்க ஒன்னு சேரும் போது சொக்கன் தாத்தாவின் பேரனை கலாய்ப்பது வழக்கம்.

கண்ணாலம் ஆன புதிதில் சொக்கன் தாத்தா வீட்டுக்கு சென்றபோது என் பொஞ்சாதிய இருக்கும் போது சிலை சிலையா பார்த்தபையன் என்று கலாய்த்து அனுப்பினார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் சொக்கன் தாத்தாவின் பேரன் போன் செய்தான், தாத்தா  94 வயதில் சாமிகிட்ட போய்ட்டாருடா, ரெண்டு நாள் ஆச்சு இன்னிக்குத்தான் காரியம்டா, தகவல் சொல்லாம்ன்னு கூப்பிட்டேன், உங்க அப்பாவும், அம்மாவும் வந்திருந்தாங்கடா அப்படியே நம்ம பசங்களுக்கு சொல்லிடுடா என்று போனை துண்டித்தான்.

இரண்டு நாட்களாக அவர் நினைவுதான். கிராமத்தை பொறுத்த வரை எல்லா தாத்தாவும் நம் தாத்தாக்கள் தான் சொந்த தாத்தாவை விட மற்றவர்கள் தான் மிக கிண்டலும் கேலியுமாக இருப்பார்கள். இந்த சொக்கன் தாத்தா அவர் மட்டுமா போனார், அவரின் நினைவுகள், பல பாலான கதைகள், அந்த கிராமத்தின் மண்ணை அறிந்த அந்த மகராசன் போனபோதே, அவரின் நினைவுகளையும், கதைகளையும் கொண்டு போய்ட்டார். இன்னும் இருப்பதோ சில தாத்தாக்கள் தான் அவர்களிடம் உள்ள கதைகளும் சீக்கிரம் அவர்களுடனே போய்விடும்....

3 comments:

  1. ஒவ்வொரு கிராமத்திலும் இது போன்ற வெள்ளந்தியான பெருசுகள் உண்டு! சொக்கன் தாத்தாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  2. வணக்கம்
    உண்மைதான் தாத்தாக்கள் சொல்லும் கதை மிக அருமையாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கிராமங்களில் வாழும் தாத்தாக்கள் பெரும்பாலும் வெள்ளந்தியான மனிதர்கள்... பாசம்... நேசம் எல்லாம் கிராமத்தில் மட்டுமே கிடைக்கும்...

    சொக்கன் தாத்தாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete