Monday, July 14, 2014

சோத்துக்கடை - வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை


தேடி தேடி உண்ணும் உணவகத்தில் இந்த கடையும் ஒன்று. நண்பர் ஒரு வர் இங்க போய் சாப்பிடுங்க நிச்சயம் பிடிக்கும் என்றார். சரி என்று சனிக்கிழமை இரவு சாப்பிட சென்றேன். ரேஸ்கோர்ஸ் காஸ்மாபாலிடன் க்ளபை ஒட்டு உள்ள சாலையில் சென்றபோது இடது பக்கம் வளர்மதி மெஸ், கொங்கு நாட்டு சமையல் முறைப்படி என்று எழுதி இருந்தது. காரை கடையின் எதிரில் பார்க் செய்து விட்டு குடும்பத்தோடு உள்ளே சென்றேன். ஒரு 30 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏர்கண்டிசனோடு அமைந்திருந்தது இந்த உணவகம்.
சாப்பிட உட்கார்ந்ததும் மெனு கார்டு கொடுங்க என்றேன், மெனு கார்டு இல்ல சார் எங்க ஸ்பெசல் என்று பிரியாணி, புரோட்டா, முட்டை புரோட்டா, சிக்கன் கறி தோசை, மட்டன் கறி தோசை, பிச்சு போட்ட சிக்கன் பெப்பர் வறுவல், மீன், நெத்திலி மீன் என்று வரிசையாக சொன்னார்.
நான் புரோட்டா, சிக்கன் கறி தோசை, பிச்சு போட்ட சிக்கன் வறுவல், நெத்திலி மீன், ஒரு ரோஸ்ட் என்று ஆர்டர் செய்து காத்திருந்தோன். இரண்டு சின்ன ஜக்கில் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு என்று வைத்தனர். தலைவாழை இலை போட்டு, தண்ணீர் தெளித்து காத்திருந்தேன் சாப்பிடுவதற்கு.

ஆர்டர் சொன்னவைகள் வர சிறிது நேரம் ஆகும் என்பதால் சிக்கன் குழம்பை கொஞ்சம் ஊற்றி, தொட்டு நக்கி பார்த்தேன். மசாலா கையில் அரைச்சிருப்பாங்க போல குழம்பு அதிகம் காரம் இல்லாமல், சரியான விகிதத்தில் உப்பு கலந்து, மசாலா மனம் இல்லாமல் குழம்பு மனத்தில் இருந்தது. ஊர்ப்பக்கத்தில் கையில் அரைச்சி குழம்பி வைக்கும் போது தான் இந்த பக்குவம் வரும், ஆஹா ஒரு கரண்டி குழம்பு உள்ளே போய்விட்டது.
மட்டன் குழம்பும் இது போலவே இருந்தது. உள்ளே ஒரு பீஸ் இருந்ததால் அதையும் சாப்பிட்டு பார்த்தேன், மசாலாவோடு நன்கு வெந்திருந்தது. மசாலாவும் கறியும் நல்ல சுவையில் இருந்தது.
சிக்கன் கறி தோசையும், பிச்சுப்போட்ட சிக்கன் வறுவலும் வந்தது. தோசையின் மேல் முட்டை மற்றும் வெங்காயம், சிறு பச்சை மிளகாய், கொத்தமல்லி தலையோடு சிக்கன் பீசை போட்டு நன்றாக முன்னும் பின்னும் சரியான பக்குவத்தில் சுட்டு கொடுத்திருந்தனர். கொஞ்சம் கூட தீயாமல் இருந்தது. அந்த தோசையை பிச்சு சிக்கன் கிரேவியில் தடவி அப்படியோ நாவில் கொண்டு போய் தோசையை வைக்கும் போது தான் தெரிந்தது அதன் உச்சபட்ச சுவை. நன்றாக ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டதில் 2 நிமிடத்தில் காணமல் சென்று விட்டது சிக்கன் கறி தோசை.
அடுத்து பிச்சு போட்ட சிக்கன் பிரை இதில் நன்கு வேகவைக்கப்பட்ட சிக்கனில் வெங்காயம், பச்சை மிளாகய், கறிவேப்பில்லை கூடவே பெப்பரும் போட்டு நன்றாக பிரட்டி கொடுத்திருந்தனர். தோசையின் நடுவே இந்த சிக்கனை வைத்து அப்படியே குழம்பில் துவட்டி துவட்டி சாப்பிடுவதில் தான் எவ்வளவு சுவை. இதற்காகவே மீண்டும் அங்கே போகனும் போல இருக்குங்க..
நெத்திலி மீன் வறுவல் கொடுத்தனர், மீனை முதலில் சாப்பிட்ட என் மனைவி மீன் வாசமே இல்லை நன்றாக ப்ரை செய்து இருக்காங்க, காரமும் குறைவு என்றதும் மகனுக்கும் கொடுத்தேன் அவனும் சாப்பிட்டு எனக்கு இன்னொன்று என்றான். அடுத்த நான் நெத்திலியை எடுத்து கடிக்கும் போது தான் தெரிந்தது அது புது நெத்திலிமீன் என்றும், மீன் வாடை துளியும் இல்லாமல் சுவையாக சமைத்திருந்தது பிடிச்சிருந்தது.
புரோட்டாவும் நன்றாகவே இருந்தது. மொத்தத்தில் மனசு நிறைய கொங்கு சமையலை சாப்பிட வளர்மதி மெஸ்க்கு போகலாம். மதிய உணவு இன்னும் சாப்பிட்டு பார்க்கவில்லை விரைவி போய் சாப்பிடனும். விலை மற்ற ஏசி உணவகங்களின் விலை போலத்தான் சுவைக்காக தைரியமாக கொடுக்கலாம். நாங்க 3 பேர் சாப்பிட்டதற்கு 425 ரூபாய் ஆச்சு இரவு உணவிற்கு...
அமைவிடம்: ரேஸ்கோர்ஸ் காஸ்மா பாலிடன் க்ளப் பக்கத்து ரோடு மற்றும் போட்டோ சென்டருக்கும் எதிர்ரோட்டில் அமைந்துள்ளது.

8 comments:

  1. Replies
    1. அப்ப கோயமுத்தூர் வாங்கோ

      Delete
  2. மெஸ் என்றால் கற்பனையில் தோன்றும் இடத்துக்கு முற்றிலும் மாறாக ஏ ஸி செய்யப்பட்டுள்ளது என்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க பாஸ்... ஏசி எல்லாம் போட்டு புதுப்பித்துள்ளார்கள். முன்னால் ஏசி எல்லாம இல்லையாம், இப்போது தான் புதுப்பித்துள்ளார்கள் போல...

      Delete
  3. ரேஸ்கோர்ஸ் என்றதும் ஓடோடி வந்தேன். பிறந்தது முதல் இருபது வருடங்கள் ரேஸ்கோர்ஸில் தான் என் சிறுவயது இனிமையான வாழ்க்கை.

    ReplyDelete
    Replies
    1. அழகான இடம்., கோவை மக்கள் அதிகம் பேர் ரசிக்கும் இடம்... இன்றும் என்றும்....

      Delete
  4. ரேஸ் கோர்ஸ் - அருமையானதோர் இடம்.... அந்த நடை பாதையும், மக்களும், ஆங்காங்கே கிடைக்கும் அருகம்புல் ஜூஸும் ஓஹோ......

    மெஸ் பக்கம் சென்றதில்லை.... :)

    ReplyDelete
  5. சோத்துக்கடை... பசிக்குதுங்கோ...

    ReplyDelete