Wednesday, April 30, 2014

பருவங்கள் மீண்டும் கிடைப்பதில்லை...


+2 முடித்து கல்லூரி செல்லும் வரை இருக்கும் காலம் அனைவருக்கும் ஒரு துண்டு விழும் இந்த பருவத்தில் அனைத்தும் அறிந்திருப்போம், என்ற கர்வம் இருக்கும். உண்மையில் இது ஓர் அறியாப்பருவம் தான் அனைவருக்கும். எதை செய்தாலும் நாம் செய்வது தான் நல்லது, நாம் செய்வது தான் சரி என்ற அகந்தை உள்ள பருவம். நான் சொல்லும் இந்த பருவம் இப்போது உள்ளவர்களுக்கு ஒத்துப்போகாது நான் சொல்வது எல்லாம் 1995 இருந்து 2002 வரை  கல்லூரி சென்றவர்கள் இதை அனுபவித்திருக்ககூடும்.

வீட்டில் எந்த பொறுப்பும் கிடையாது, துக்கம் என்றாலும் சந்தோசமான காலகட்டம் அது, ஊரில் எதாவது பெரிசு இறந்தால் அங்கு அப்படியே ஆஜர் ஆவோம் ஒத்த வயதுடைய அனைவரும் அங்கு எல்லா காரியங்களையும், தம் வீட்டு காரியங்கள் போல் இழுத்துப்போட்டு வேலை செய்வது, கல்யாண வீட்டுக்கு சென்றால் எதைப்பற்றியும் யோசிக்காமல் பந்தி பரிமாறுவது என உதவிகளை அள்ளிக்கொடுக்கும் பருவம்.

அப்போது தான் ஊரில் எல்லா வீட்டுக்கும் போன் வந்தது மாதத்திற்கு 80 லோக்கல் கால் இலவசம் என்ற அறிவிப்போடு, காலை தூங்கி எழுந்ததும் காட்டுப்பக்கம் சொம்பைத்தூக்கிக் கொண்டு சென்ற காலம் அது. காட்டுப்பக்கம் போவதற்கு இந்த இலவச போன்கால் தான் அப்போது எல்லாம் எங்களுக்கு பயன்பட்டது. காட்டுப்பக்கம் போவதற்கு ஒருத்தன் தனியாக போக மாட்டோம் அது என்னவே திருவிழாவிற்கு போவது போல் குறைந்த பட்சம் 10 பேர் சென்று, வாய்க்காலை காலையிலேயே அசிங்கம் செய்து விட்டு வருவது நாங்களாகத்தான் இருக்கும்.

முந்தையநாள் வேலைக்கு சென்ற அனுபவம், நேர்முகத்தேர்வு அனுபவம், டியூசன் அனுபவம், பேருந்தில் பயணித்தபோது மேட்டூர் பொண்ணுகளை சைட் அடித்த அனுபவம் என்று ஆள் ஆளுக்கு தன் அனுபவத்தை சொல்லும் போது கிண்டல், கேலி, கதை சொல்பவனை கலாய்ப்பது என்று அன்றைய காலைப்பொழுது சந்தோசத்தோடு தொடங்கும்.

அடுத்து நேரா வீட்டுக்கு போகமாட்டோம், ஆயா கடையில் உட்கார்ந்து அன்றை செய்தித்தாளில் வந்த செய்திகளோடு எங்களுக்கு தெரிஞ்ச கிசுகிசுக்களை சொல்லிக்கொண்டே அந்த இடம் ஒரே போர்க்களமாக இருக்கும். இதில் தினமும் கஷ்டப்பட்டு பால் பீச்சி, பால் சொசைட்டிக்கு கொண்டு வரும் நண்பனிடம் பிட்டை போட்டு ஒரு டீ வாங்கி அதை 4 பேர் குடித்த காலம் அது.

எப்பவும் குடிப்பது வில்ஸ் பில்டர் என்பதால் வீட்டில் தேடிப்பிடிச்து 1.25 பைசா எடுத்து வந்திருப்பேன். அதில் வில்ஸ் பில்ட்ரை வாங்கி பத்த வைத்தால் ஆள் ஆளுக்கு எனக்கு ஒரு பப் என்று புடுங்கி புகையை உள்வாங்குவார்கள், விட்டால் எனக்கு கிடைக்காது என்று "Last pup of the cigrate, first kiss of the lady" என்று ஒரு கிளு கிளு பிட்டைப்போட்டால்தான், காசு கொடுத்து வாங்கிய எனக்கு 4 பப்பவாது கிடைக்கும். இப்படியாக காலை டிபன் சாப்பிட வீட்டுக்கு போவோம். காலை டிபன் என்றதும் இட்லி, பூரி பொங்கல் என்று நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. நேற்று இரவு மீதான நெல்லஞ்சோறு உடன் கொஞ்சம் எருமைத்தயிர், ரெண்டு சின்னவெங்காயம், ஒரு பச்சைமிளகாய், எழுமிச்சை ஊறுகாய் இது தான் அன்றைய காலை உணவு. இன்று எவ்வளவு பெரிய ஓட்டலில் சாப்பிட்டாலும் அந்த பழைய சோறு, பழைய சோறு தான்.  நாம் சாப்பிட நினைக்கும் போது இவைகள் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் ரசிச்சு ருசிக்க நேரம் இல்லை இது தான் இன்றைய நிலை.

பகலில் எல்லாம் கிரிக்கெட், அப்புறம் சாப்பாடு பின் மாலை வேளைகளில் ஊரைத்தாண்டி போகும் பேருந்துகளில் சைட் அடிப்பது தான் பொழுது போக்கு. டீக்கடையில் உட்கார்ந்து டீ குடிக்காமல் வெட்டியாக பேசும் பேச்சு, டீக்கடைக்காரர் எழுந்து போங்கடா, என்று சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு, அடுத்து சலூன் கடை கடையில் டிவி வைத்தற்காக அவர் ஏங்கிய ஏக்கம் நமக்கு இப்போது தான் சிரிப்பாக வருகிறது. அதுவும் கிரிக்கெட் மேட்ச் போட்டு விட்டால் சலூன்கடையை ஆக்கரமித்து உட்கார்ந்த பருவம், அடுத்தவரைப்பற்றி கவலைப்படாத பருவம் என சொல்லிகிட்டே போகலாம்..

தினமும் மாலை வேளையில் குளிச்சி பவுடர் அடிச்சி, தெளிவா வந்து நிற்போம் பஸ் நிலையத்துக்கு. இரு சக்கர வாகனங்களில் போகும் சுடிதார்களின் எண்ணிக்கையும், புடவைகளின் எண்ணிக்கை, பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்துருக்கும் மங்கைகளின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிய பருவம், மீண்டும் கிடைக்கா பருவம்...

4 comments:

  1. அனுபவிச்சு அசை போட்டிருக்கீங்க போல!

    ReplyDelete
  2. அது ஒரு கனாக்காலம் தான்! நினைவு பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. மீண்டும் கிடைக்கா பருவம்... !!! A very nice posting Sathish... kindling my childhood too....

    ReplyDelete
  4. மீண்டும் கிடைக்கா பருவம் - எனக்கு கிடைக்காத பருவம். கல்லூரி முடிந்த பத்தாவது நாளே வேலைக்கு வந்து விட்டேன் - தில்லிக்கு! :((((

    ReplyDelete