Sunday, August 5, 2012

கிராமத்து மனசு... 4


ஊரில் இருக்கும் போது காலையில் குளிப்பது கிணற்றில் தான் கிராமங்களில் நகரங்களில் உள்ளது போல் 3 க்கு 3 அடியில் இருக்கும் குளியலறை நிச்சயம் இருக்காது.. வீட்டை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி தான் இருக்கும் ஆனால் எங்களைப்போல் ஆறும் கிணறும் உள்ள பகுதியில் உள்ளவர்கள் ஆற்றில் அல்லது கிணற்றில் குளிப்பது தான் பழக்கம்... இதனால் இங்குள்ள அனைவருக்கும் நீச்சல் கை வந்த கலை..

கிராமத்தில் புரடை ( புரடை என்பது சுறைக்காயை நன்கு காயவைத்தால் அது காய்ந்த பின் புரடை என்போம்) அது தான் அப்ப எங்களுக்கு மிதப்பதற்காக உதவும். சிறுவயதில் அதாவது 5 அல்லது 6 வயதில் நீச்சல் கற்று விடுவோம். தினமும் காலை அப்பா அல்லது அண்ணன்களுடன் குளிக்க செல்லும் இடம் நேரத்திற்கு தகுந்தாற் போல் இருக்கும் சனி ஞாயிறுகளில் நிச்சயம் ஆறு தான் மற்ற நாட்களில் கிணற்றுக்குத்தான் செல்வோம்...

நீச்சலைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் அற்புதமான உடற்பயிற்சி தினமும் 1 மணி நேரம் நீச்சல் அடித்தால் போதும் காலின் பெருவிரலில் இருந்து உச்சந்தலை வரை அனைத்து நரம்புகளும் வேலை செய்யும். அத்தனை தசைகளும் இழுத்துபிடிச்சு வேலை கொடுக்கும் அந்த அளவிற்கான அற்புதமான பயிற்சி. இந்த பயிற்சியை எங்கள் 6 வயதில் எல்லாம் கற்றுவிடுவோம் இதில் ஆற்று, கிணற்று நீச்சல் என்று கொஞ்சம் மாறுபடும்.

நீச்சல் கற்றதும் எங்கள் வீடுகளில் எங்களை கண்டுக்க மாட்டார்கள் காலை குளிக்க செல்கின்றோம் என்றதும்  ம் சரி என்பர்.. கிராமத்து குளியலை சொல்லவேண்டு மெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனையிருக்கும் அதில் முதலில் மோட்டார் குளியல்.. கிணற்றில் தொட்டி கட்டி இருப்பார்கள் அங்கு பம்பு செட் இருக்கும் இதில் மின்சாரம் குறிப்பிட்ட நேரத்திற்கு தான் ( 3 பீஸ் கரெண்ட் என்போம்) இருக்கும் அந்நேரங்களில் இந்த பம்பு செட் குளியல் தான் அனைவருக்கும்.


முதல் நாள் கிரிக்கெட் விளையாண்டு பந்து பட்டு கால் வீங்கி இருக்கும் அடுத்த நாள் பம்பு செட் தண்ணீர் வேகத்தில் அந்த வீக்கத்தை நனையவிடும் போது வலியுடன் அந்த வீக்கம் கரையும். எவ்வளவு எண்ணெய் தேய்த்து இருந்தாலும் பம்பு செட் தண்ணீரின் வேகத்தில் கரையும் இந்த குளியல் சுகம் நகர வாசத்தில் இழந்ததில் இந்த சுகத்திற்கு அதிக இடம் உண்டு.
அடுத்து ஆற்றுக்குளியல் எங்கள் ஆற்றின் பெயர் சித்தாறு. இது காவிரியின் இணையும் சிற்றாறுகளில் ஒன்று எங்கள் வீட்டில் இருந்து காவிரிக்கு 1 கிலோ மீட்டர் தொலைவு அதானால் வார விடுமுறை நாட்களில் தான் அங்கு செல்வோம். விடுமுறை நாட்களில் கூட்டாஞ்சோறு உடன் ஆற்றில் குதித்து ஆடி சாப்பிட்டு விட்டு மறுபடியும் ஆடுவது அங்கு தான்..

ஆற்றுக்குளியல் கொஞ்சம் ஆபத்தானதும் கூட சுழலில் சிக்கிடுவோம் பார்த்து குளிக்கவேண்டும் என்பார்கள் சுழல் உள்ளபகுதிக்கு போகதீங்க என்று சின்னதில் இருந்து எங்களுக்கு சொன்னாதால் அந்த பகுதிக்கு செல்ல மாட்டோம் யாணைப்பாறை என்ற இடம் தான் எங்கள் குளியல் இடம் நடு ஆற்றில் தண்ணீரில் இருக்கும் பாறையின் மீது தண்ணீர் செல்லும் இங்கு தலையை மேலே வைத்து காலை உந்தி தண்ணீரில் படுத்துக்கொல்வோம். இதில் காலை மீன் கொத்தும் என்பதால் காலில் உள்ள வெடிப்புகள் குணமாகும் என்பார்கள்.


ஆற்றில் எதிர்நீச்சல் ஒன்று உண்டு தண்ணீர் சீறி வருகையில் அந்த தண்ணீரை எதிர்த்து நீச்சல் அடிக்க வேண்டும் இவ்வாறு அடிக்கும் போது மேல் முச்சு கீழ் மூச்சு வாங்கும் இதுவும் உடலில் உள்ள வியர்வை மற்றும் ஊளை சதைகளை குறைக்க மிக உதவும். இதே போல் தான் வாய்க்கால் நீச்சலும். ஆற்றில் அகலம் 2 கிலோமீட்டர் இருக்கும். வாய்க்கால் என்பது 120 அடி தான் இருக்கும் ஆனால் தண்ணீரின் வேகம் இரண்டிலும் நன்றாக இருக்கும்..

கிணறு தான் மிக பக்கதில் இருக்கும் கிணற்றில் புரடை கட்டி உள்ளே படுத்து இருப்பதும் தனித்துவமான சுகம். அப்புறம் கொஞ்ச நாளில் இந்த சுவர் அந்த சுவர் என நீந்தி பழகிடுவோம்.. அதற்கடுத்து ஒவ்வொரு படியா ஏறி மேலே இருந்து குதிப்பதும் ஒரு சுகம். பக்கத்தில் உள்ள தென்னைமரத்து மேல் ஏறி அங்கிருந்து கிணற்றுக்குள் குதிப்போம்.. இப்படி தண்ணீரில் விளையாடியவர்கள் எல்லாம் இன்று 2 பக்கெட் நீரில் குளித்தாகவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம்...

கிராமத்தில் இயற்கை நீரில் குளிப்பது சுகம் என்றால் அந்த மனசை அசைபோடும் போது நினைவாகிறது கிராமத்து மனசு....

13 comments:

  1. கிணறு, குளம், வாய்க்கால்ஆறு என நீங்க சொன்ன எல்லாத்திலையும் குளிச்சி இருக்கேன்...ஏன்னா நானும் கிராமத்து காரன் சொர குடுக்கா அப்படிதான் கேள்வி பட்டு இருக்கேன்..புரடை...புது பேரா இருக்கு...

    ReplyDelete
  2. மலரும் நினைவுகள் ..அருமை ..

    சொர குடுக்காவின் இன்னும் ஒரு வழக்கு பெயர் புறடை இப்போதுதான் கேவிபடுகிறேன்

    ReplyDelete
  3. அந்தக் கால நினைவுகள்...

    அந்த சந்தோசமே தனி... நீச்சலடித்த களைப்பில் வீட்டில் வந்து இட்லி, தோசை, பொங்கல் என நிமிடத்தில் காணாமல் போகும்... ...ம்...

    நன்றி…
    (த.ம. 2)

    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  4. பம்ப் செட் குளியல் நானும் ரசித்திருக்கிறேன்....

    நல்ல பகிர்வு....

    ReplyDelete
  5. மற்ற குறைகளை விட நீச்சல் கற்றுக் கொள்ளாததையே பெரிய குறையாக கருதுகிறேன். எனக்கு அந்த அனுபவம் கிடைக்கவில்லை. மேல் நின்று வேடிக்கை பார்த்ததுடன் சரி. அஞ்சில் வளையாதது அப்புரம் வளையுமா ? இளவயது பயம் கருதிக்கூட கற்றுக் கொள்ளமல் விட்டு விட்டேன். என் நண்பர்கள் பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது.

    ReplyDelete
  6. கிணறுஇ பம்பு செட் குளியல் நினைக்கும் போதே இனித்திடுதே ...

    ReplyDelete
  7. படங்களைப் பார்க்கவே ஆசையாயிருக்கு.எனக்கு இந்த அதிஷ்டம் இல்லை !

    ReplyDelete
  8. அத்திக்கடவு தண்ணீர் வருமா? என குழாயை பார்த்துக்கொண்டிருக்கும் போது கிணற்று குளியலை கற்பனைக்கு வரவழைத்தமைக்கு நன்றி. எங்களூரில் அதுதான். சுரை குடுக்கைக்கு புக்கிங் செய்து காத்திருந்த நாட்கள் நியாபகத்தில்.மேலிருந்து குதித்து தண்ணீரடியில் தாக்குப்பிடிக்கும் அண்ணன்களை நினைக்க ஒரு வாய்ப்பு

    ReplyDelete
  9. கிராமத்துக்குளியல் அற்புதம்!நானும் குளம் ஆறுகளில் குளித்து இருந்தாலும் நீச்சல் பழகாததை நினைத்து வருத்தமாக உள்ளது! சிறப்பான பதிவு!

    இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

    ReplyDelete
  10. நீச்சல் மிக சிறந்த உடற் பயிற்சி உடலுக்கு!

    ReplyDelete
  11. கிராமத்து மண் வாசனை நன்றாக இருக்கிறது.

    சிறந்த உடற் பயிற்சிதான் நீச்சல்.

    ReplyDelete