Thursday, July 26, 2012

நாட்டுப்புற மழலைப் பாடல்கள்... நினைவலைகள்..


நான் சிறுவயதில் பாடிய பாடல்களை எல்லாம் இப்போது என் மகனுக்கு சொல்லிக்கொடுப்பதற்காக தேடும் போது முதல் இரண்டு வரிகளை படித்ததும் அந்த பழைய பாடல்கள் எல்லாம் தானாக வருகிறது மனதில் இருந்து...

இந்த பாடல்கள் எல்லாம் நீங்களும் நிச்சயம் பாடியிருப்பீர்கள் இதை  என் பக்கத்தில் பதிவதில் மிக ஆனந்தம்...

குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
பந்தலிலே பாவைக்கா
தொங்குதடி டோ லாக்கு

------------------------------

கட்டிலும் கட்டிலுஞ் சேர்ந்ததா
கண்டங் கத்திரி காய்ச்சதா
வாடா மல்லி பூத்ததா
வாடாம வதங்காம
என் கருவேப்பிலையே ஓடி வா

---------------------------------------

தோசையம்மா தோசை
அரிசிமாவும் உளுந்தமாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு ஒன்னு
அண்ணனுக்கு ரெண்டு
எனக்கு மட்டும் நாலு

-------------------------------------------

காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு முட்டாயி
குண்டாங்குண்டாங் தலகாணி
குதிரை மேலே சவ்வாரி
ஏண்டியக்கா அழுகிறாய்
காஞ்சிபுரம் போகலாம்
ல்ட்டு மிட்டாய் வாங்கலாம்
பிட்டுபிட்டு தின்னலாம்
எங்க வீட்டு மாடியிலே
தாம்தூம் குதிக்கலாம்

---------------------------------

கை வீசம்மா கை வீசு
கடைக்கு போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் தின்னலாம் கை வீசு
அப்பம் வாங்கலாம் கை வீசு
இருந்து திங்கலாம் கை வீசு
பூந்தி வாங்கலாம் கை வீசு
ருசித்து திங்கலாம் கை வீசு
பழங்கள் வாங்கலாம் கை வீசு
அழகாய் திங்கலாம் கை வீசு
ஜிமிக்கி வாங்கலாம் கை வீசு
காதிலே போடலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் போடலாம் கை வீசு
கோவிலுக்கு போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு
தேரைப் பார்க்கலாம் கை வீசு
திரும்பி வரலாம் கை வீசு

----------------------------------------

பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ
பாட்டி எனக்குப் பரிசளித்த
பல்லாங்குழியைப் பாரிதோ

மாமா நேற்று வாங்கித் தந்த
மாணிக்கத்தை பாரிதோ
அத்தை தந்த கட்டி முத்தின்
அழகை வந்து பாரிதோ

சேரருக்கு மங்கலங்கள்
செப்பி விளையாடலாம்
சோழருக்குச் சோபனங்கள்
சொல்லி விளையாடலாம்

இன்னும் பாண்டி யாடலாம்
ஓய்ந்து விட்டால் நிறுத்தலாம்
கட்டும் பாண்டியாடலாம்
களைத்து விட்டால் நிறுத்தலாம்

எய்யாப் பாண்டியாடலாம்
ஏய்த்து விட்டால் நிறுத்தலாம்
பசும் பாண்டியாடலாம்
பசித்தவுடன் நிறுத்தலாம்

பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ.

----------------------------------

மொட்டை பாப்பாத்தி !
ரொட்டி சுட்டாளாம் !
எண்ணெய் பத்தலையாம் !
கடைக்கு போனாளாம் !
காசு பத்தலையாம் !
கடைகாரன பாத்து !
கண்ணு அடிச்சாலாம் !

------------------------------------

மழை வருது மழை வருது
நெல்லுக் குத்துங்க‌!
முக்காப்படி அரிசி எடுத்து
முறுக்குச் சுடுங்க‌!
ஏர் ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க‌!
சும்மா இருக்குற மாமனுக்கு
சூடு போடுங்க!

------------------------------

பனமரமே பனமரமே பச்சக் கண்ணாடி!
பல்லுப் போன கெழவனுக்கு ரெண்டு பொண்டாட்டி !!

------------------------------

அவரைக்கா சோத்துக்கு
பிள்ளைபெத்த வீட்டுக்கு
புளியங்கா சோத்துக்கு
நான் போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வர்றேன் விளையாட்டுக்கு....

-------------------------

பருப்பாம் பருப்பாம்.........
பன்னெண்டு பருப்பாம்
சுக்கத்தட்டி சோத்துல போட்டு
குள்ளீம்மா குழலூத
ராக்காத்தா வெளக்கெடுக்கங்
கொப்பம் பேரென்ன?

முருங்கைப்பூ.....

முருங்கைப்பூவும் தின்னவனே
முன்னூறு காசு கொடுத்தவனே
பாம்புக்கைய மடக்கு
மாட்டேன்………

--------------------------

மொட்டையும் மொட்டையும் - சேந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டு எறும்பு கடிச்சுச்சாம்
காள்காள்ன்னு கத்துச்சாம்!

-------------------------------

17 comments:

  1. குழந்தை பருவத்துக்கே கூட்டிட்டு போயிட்டீங்க போங்க..

    ReplyDelete
  2. (பல பேர் மறந்து போன)நல்ல தொகுப்பிற்கு பாராட்டுக்கள்...

    நன்றி... (த.ம. 3)

    ReplyDelete
  3. தலைவா கலக்கல் தொகுப்பு..!!! மறக்க முடியாத மற்றும் பசுமை மாறாத நினைவுகளை அனைவருக்கும் மீண்டும் நினைவுபடுத்தீட்டீங்க...!! சூப்பர்.

    ReplyDelete
  4. இன்னும் தொடரும்னு நினைக்கிறேன்

    மாட்டேனா மாட்டேன்
    மாதுளங்கா கோட்டை………

    ReplyDelete
  5. இந்த பாடல்கள்...
    நம் முன்னோர் வாழ்வியலின் கண்ணாடிகள்.

    அசத்தல் சங்கவி.

    ReplyDelete
  6. அருமை. இதெல்லாம் இந்தக்கால தலைமுறை மறந்து போன விஷயம்

    ReplyDelete
  7. மறுக்க மறைக்க முடியாத மலரும் நினைவுகள். அருமை. ஆனால், எந்த விவரமும் தெரியாத பிஞ்சுகளிடம் கூட திராவிடம் தனது வேலையைக் காட்டியிருப்பதை இப்போது தான் உணர்கிறேன்.

    ///// மொட்டை பாப்பாத்தி !
    ரொட்டி சுட்டாளாம் !
    எண்ணெய் பத்தலையாம் !
    கடைக்கு போனாளாம் !
    காசு பத்தலையாம் !
    கடைகாரன பாத்து !
    கண்ணு அடிச்சாலாம் !/////

    நானுமே கூட இதனை சிறுவயதில் பாடியுள்ளேன். இதில் மொட்டை பாப்பாத்தி என்று அக்கால பிராமண விதவைகளைத்தான் திராவிடம் கேலி செய்திருக்கிறது. மழலைப் பாடல்களில் கூட தங்கள் அட்டூழியத்தை அரங்கேற்றி பரப்பியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  8. சிறப்பான தொகுப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  9. குத்தடி குத்தடி சைலக்கா
    குனிஞ்சு குத்தடி சைலக்கா
    பந்தலிலே பாவைக்கா
    தொங்குதடி டோ லாக்கு

    _________________

    பையன் வரான் பாத்துக்கோ
    பணம் தருவான் வாங்கிக்கோ
    சில்லறையா மாத்திக்கோ
    சிலுக்குப் பையில போட்டுக்கோ
    ஜிலுஜிலுனு ஆட்டிக்கோ :)

    ReplyDelete
  10. அப்படியே காலங்களை
    உருட்டிக்கொண்டு
    சில ஆண்டுகள் பின்னால் பயணித்து வந்தேன்...
    மனதுக்கு நிறைவாய்...

    ReplyDelete
  11. ச்சே ஒரு பட்டு கூட முழுசா ஞாபகம் இல்லையே.., :(

    ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி பிரதர்!

    ReplyDelete
  12. ninaivukal alaikkazhikkirathu!

    ReplyDelete
  13. //தோசையம்மா தோசை//
    அம்மா சுட்ட தோசை

    //அரிசிமாவும் உளுந்தமாவும்
    கலந்து சுட்ட தோசை// ...

    ReplyDelete
  14. இந்தப் பாடல்கள் எல்லாம் இப்போ மறந்து இல்ல மறஞ்சே போச்சு...

    ReplyDelete
  15. மலரும் நினைவுகள் கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. திரு சங்கவியின் மழலை நினைவுகள். அற்புதம்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள் திரு சங்கவி.

    ReplyDelete
  17. படிக்கும்போது என்னை அறியாமல் புன்னகை மலர்ந்தது பல பாட்டு கேட்டிருக்கேன் ; சில மட்டும் கேட்டதில்லை

    ReplyDelete