Wednesday, July 18, 2012

ஆடி மாதமும்... திருவிழாவும்....

 
ஆடி மாதம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது புதிதாக திருமணம் ஆனவர்களை பிரித்து இருப்பார்கள் என்பது தான் ஆனால் அதற்கான காரணங்கள் ஊர் அறிந்தது இன்றை வேகமான நடைமுறைக்கு இந்த பழக்கம் தற்போது குறைந்து விட்டது என்பது தான் நிதர்சன உண்மை.
 
அம்மனுக்கு உகந்த மாதம், மற்றும் அனைத்து கோயில்களும் நிரம்பி வழியும் மாதம் என்றும் கூட சொல்லலாம்.

கிராமப்பின்னனியில் இருந்து வந்தவர்களுக்கு ஆடி மாதம் பொறந்தாலே சந்தோசந்தான். அதற்கான முக்கிய காரணம்  ஊரைச்சுற்றி உள்ள முனியப்பன் கோயிலில் எல்லாம் திருவிழா இக்காலத்தில் தான்.  சிறிய வயதில் இருந்தே ஆடி மாதம் என்றால் திருவிழாக்கள் தான் ஞாபகம் வரும். திருவிழாக்கள் மட்டுமல்ல ஆடி 1ம் தேதி துடங்கி ஆடி 18 ஆடி 28 மற்றும் ஆடி அம்மாவாசை என இந்த மாதத்தில் பல விசேசமான நாட்கள் உண்டு.
 
கடந்த பல வருடங்களாக இந்த துணிக்கடை எல்லாம் ஆடி தள்ளுபடி என்ற பெயரில் இருக்கும் துணிகளை பல மடங்கு விலை ஏற்றி தள்ளுபடி என்ற பெயரில் அதே விலைக்கு விற்கும் ஒரு வியாபார தந்திரம் தான் இந்த ஆடி தள்ளுபடி என்பது என் கருத்து.
 
அடுத்து ஆடியில் எங்கள் பகுதியில் இருந்து அதிகம் பேர் செல்லும் இடம் குற்றாலம். ஊரில் இருந்து ஒரு 20 பேர் ஒன்று சேர்ந்து 4 நாட்கள் சென்று 3 வேளையும் விதவிதமாக சமைச்சு சாப்பிட்டுவிட்டு விடுதி அறையில் நான்கு நாட்களும் சீட்டாட்டம் களை கட்டும். தினமும் இரவு பகல் என்று ஒவ்வொரு அருவியாக குளிச்சு அனுபவிப்போம். நான் 2 முறை சென்று இந்த மகிழ்ச்சியை அனுபவித்துள்ளேன்...
 
 

திருவிழாக்கள்

சிறுவயதில் ஆடி முதல் நாள் அன்று காலை காவிரிக்கரைக்குச் செல்லோம். எங்கள் வீட்டில் இருந்து காவிரிக்கரை 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆடி முதல் நாள் சென்று காவிரியில் நீராடிவிட்டு பக்கத்தில் உள்ள சொக்கநாச்சி அம்மனை வழிபட்டுத் திரும்புவோம். சிறுவயதில் ஆற்றுக்குப் போய் குளிப்பதே ஒரு தனி குஷி தான். அப்போதெல்லாம் காவிரி இருபுறமும் கரைபுரண்டு செல்வாள். சிலர் முளைப்பாரி கொண்டு வந்து காவிரியில் கரைப்பார்கள்..

ஆடி 18 அன்று பக்கத்து வீடு எதிர்த்த வீடு மற்றும் நண்பர்கள் என குடும்பமாக எல்லோரும் சேர்ந்து கட்டுச்சோறு (புளிச்சோறு, எழுமிச்சை மற்றும் தயிர் சோறு) ஒவ்வொரு வீட்டிலிருந்தும் முன்னரே பேசி சோத்தைக் கட்டிக்கொண்டு காவிரி ஆற்றிற்குச் சென்று குளித்து விட்டு ஆட்டம் போடுவோம். 
 
குளிக்கும் போது தலையில் 10பைசா வைத்து மூன்று முறை முழுகி எழுவோம் மூன்றாம் முறை முழுகும் போது 10 பைசாவை ஆற்றில் விட்டுவிடுவோம். பின் அங்கேயே கொண்டு போன கட்டுச்சோறை சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று திரும்புவோம். 
 
நான் 11வது படிக்கும் போது இருந்து காவிரிக்குச் செல்வதில்லை வீட்டிலேயே குளித்து விட்டு மேட்டூர் சென்று விடுவோம் மேட்டூர் அணையை ஒட்டி இருக்கும் அணை முனியப்பன் கோயில் திருவிழா நடக்கும் அணையின் முன் பகுதியில் இருந்து வரும் நீரில் ஆட்டம் போட்டுவிட்டு அணையை சுற்றி குறைந்த விலைக்கு மீன் கிடைக்கும் 3 கிலோ எடுத்து பக்கத்தில் சமைக்க ரெடிமேட் ஆட்கள் நிறைய இருப்பார்கள் அவர்களிடம் கொடுத்து மீன் குழம்பு மற்றும் மீன் பொறிச்சு சாப்பிட்டு விட்டு வருவோம்.

வேலைக்குச் சென்ற பின் ஆடி 18 அன்று நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 407 வண்டி வாடகைக்கு எடுத்து அதில் வைக்கோல் பிள் போட்டு அதற்கு மேல் தார் பாய் போட்டு சீட்டு ஆட்டம் களை கட்டும். ஆட்டம் பாட்டத்துடன் ஒகேனக்கல் செல்வோம். ஆடி 18 என்றாலே அழகான சுற்றுலாவோடு தான் கழிப்போம்.
 
படிக்கும் போது ஊரில் இருந்து வாடகை வண்டி எடுத்துக்கொண்டு பவானிசாகர் அணை, கொடிவேரி அணை என்று சுற்றுவோம் ஒரு முறை பவானி சாகர் அணையின் தண்ணீர் இருக்கும் கடைக்கோடிக்கு சென்று பள்ளிபாளையம் சிக்கன் செய்து சாப்பிடும்போது காவலர்கள் வந்து பிடித்துக்கொண்டார்கள் அவர்களிடம் பேசி அவர்களையும் சாப்பிட வைத்து அனுப்பியது ஒரு வகையான அனுபவம்.

ஆடி 18க்கு அடுத்த நாள் எங்கள் ஊரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மொன்டிபாளையம் என்னும் ஊரில் தன்னாசிமுனியப்பன் திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும் இங்கு சென்று தூரி ஆடுவது தான் எங்கள் உற்சாகம். எங்களுக்கு எல்லாம் அப்போது இந்த தூரி விளையாட்டுக்கள் எல்லாம் இந்த மாதிரி திருவிழாக்காலங்களில் தான்.
 

ஆடி கடைசியில் அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழா 5 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு இப்போதெல்லாம் 6 லட்சம் பேருக்கு மேல் கூடுவார்கள். இதிதிருவிழாவை ஒட்டி நடக்கும் குதிரைச்சந்தையும், மாட்டுச்சந்தையும் தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். ஐதர் அலி காலத்திற்கு முன் இருந்து இந்த சந்தை நடை பெற்று வருகிறது. 

இப்பொழுது எல்லாம் அங்காங்கே பொருட்காட்சி நடத்தி ராட்டினம், பைக்ரேஸ் போன்றவை நடத்துகிறார்கள். சிறுவயதில் எங்களுக்கெல்லாம்  ராட்டினம் என்றால் அந்தியூர் திருவிழா தான் ஞாபகத்திற்கு வரும்.
 
அந்த 5 நாட்களும் தினமும் சென்று ராட்டினம் மற்ற விளையாட்டுக்கள் ஒவ்வொன்றையும் விளையாடினால் தான் திருப்தி. எங்க பெரியப்பா கட்சி பதவியில் இருந்ததால் எங்களுக்கு பாஸ் கிடைக்கும் அதை வைத்துக் கொண்டு ஒவ்வொரு விளையாட்டையும் தினம் தினம் ரசித்து ரசித்து விளையாடுவோம்.
 
அதற்கடுத்த நாள் எங்க குடும்பத்தின் கிடா விருந்து அந்தியூர் வனத்தில் நடக்கும் இதில் சொந்த பந்தம் மற்றும் நண்பர்களோடு இன்று வரை வருடா வருடம் கிடா விருந்து களை கட்டும் எங்கள் சொந்தத்தில் எங்களின் விருந்து மறுபடியும் எப்ப எப்ப என்று கேட்கும் அளவிற்கு கொண்டாடுவோம்...இந்த வருடமும்...

13 comments:

  1. அண்ணே குருநாத சாமி பண்டிகைக்கு எப்போ வருவிங்கா ....

    ReplyDelete
  2. ஆடி மாத திருவிழாவை அருமையாகவும் அழகாகவும் தொகுத்து வழங்கி விட்டீர்கள்..படங்களின் பங்களிப்பு பதிவிற்கு மேலும் மெருகூட்டுகிறது..ஆடி மாத வாழ்த்துகள்..ஆடியை சிறப்பிப்பதில் நம் ஈரோடு மாவட்டத்தின் பங்கு முக்கியமானதுதான்.

    ReplyDelete
  3. கிராமத்து கெட்-டு-கெதெர்.

    ReplyDelete
  4. சிக்கன் மட்டன் கெடா விருந்து... Enjoy..

    ReplyDelete
  5. கிராமத்து விருந்து என்றும் இனிமையான நினைவுகள்...

    ReplyDelete
  6. அழகான படங்களுடன் அருமையான பதிவு சதீஷ்.

    ReplyDelete
  7. ஆடி மாத திருவிழாக்களைப் பற்றி நல்ல தொகுப்பு...
    அதுவும் இன்று ரொம்ப விசேஷம். (ஆடி அமாவாசை)

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 4)

    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
  8. ஆடிமாதத்தின் சிறப்புக்களை அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
  9. சிறப்பான பகிர்வு... வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. ஆடி மாத சிறப்புகள், அதை ஒட்டிய மலரும் நினைவுகள் அருமை.
    இந்த வருடமும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அருமையான பதிவு.... இது நம்ம ஊர ஞாபகப் படுத்திடுச்சு! நன்றி!

    ReplyDelete
  12. அருமையான பதிவு.... இது நம்ம ஊர ஞாபகப் படுத்திடுச்சு! நன்றி!

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete