Thursday, February 10, 2011

உங்களுக்கு தெரியுமா ஈரோம் சர்மிளாவை?


நேற்று மாலை ஆறு மணி அளவில் காந்தி மியூஸியத்தில் ஈரோம் சர்மிளாவின் வாழ்வையொட்டி அமைக்கப்பட்ட "ஒளியேந்திய பெண்" என்கிற ஒரு நபர் நாடகம் நடத்தப்பட்டது. ஈரோம் சர்மிளா யாரெனக் கேட்பவர்களுக்கு... கடந்த பத்து வருடங்களாக இந்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மணிப்பூரைச் சேர்ந்த பெண். ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் - 1958 தன்னுடைய மாநிலத்திலிருந்து திரும்பிப் பெறப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு இவர் போராடி வருகிறார். பத்தாண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த அறப்போராட்டத்தை கலைக்க அரசால் மூக்கின் வழியே கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் சுட்டுக் கொன்று சித்திரவதை செய்யும் ராணுவத்தை எதிர்த்து சர்மிளா போராடி வருகிறார்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஓஜெஸ் என்கிற இளம்பெண் சர்மிளாவின் பாத்திரத்தை ஏற்று இந்த நாடகத்தை நடத்துகிறார். மணிப்பூரின் வரலாறு, வடகிழக்கு மாகாணங்கள் மீதான அரசின் மெத்தனம், ராணுவத்தின் பாலியல் அத்துமீறல்கள், சர்மிளாவின் தொடர்கைதுகள் என எல்லாமே நாடகத்தின் வாயிலாக அருமையாக சொல்லப்படுகிறது. நாடகத்தில் இருந்து சில துளிகள் உங்களுக்காக..
** உங்களை நான் இப்போது மணிப்பூருக்கு அழைத்துப் போகப்போகிறேன். அதற்கு முதலில் நாம் ரயில் டிக்கட் புக் செய்ய வேண்டும். ஆனால் எங்கள் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் ரயில் நிலையம் கிடையாது. மிக அருகில் இருக்கும் வேறொரு ஊரின் ரயில் நிலையமோ 260 கிமீ தொலைவில் உள்ளதே.. உங்கள் நேரம் நன்றாக இருந்தால் அங்கிருந்து சாலைவழிப்பயணமாக எட்டு மணி நேரத்தில் வந்து விடலாம்.

** உங்களுக்கு ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரமும் மின்சாரம் உண்டு. எங்களுக்கு அது வெறும் கனவு. பெட்ரோல் ஒரு லிட்டர் 150 ரூபாய். அதற்கும் மூன்று மணி நேரங்கள் க்யூவில் காத்திருக்க வேண்டும். இந்தியாவோடு எங்களை இணைக்கும் சாலையான NH31 இருந்தும் இல்லாத கதைதான்.

** எங்கள் தீஸ்தா - பிரம்மபுத்திரா நதிக்கரைகளில் மின் திட்டங்கள் எத்தனையோ செயல்படுத்தபடுகின்றன. மொத்த இந்தியாவும் எங்களால் ஒளிரக்கூடும். ஆனால் எங்கள் வாழ்வோ.. என்றும் மீள முடியாத இருளிலேயே இருக்கிறது.

** இந்த நாட்டின் தேசிய கீதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். புவியியல் ரீதியாக எல்லா மாநிலங்களுக்கும் இடமுண்டு. ஆனால் ஒரு வடகிழக்கு மாகாணம் கூட இல்லையே.. இதை எப்படி எங்களால் தேசியகீதமாக ஏற்றுக் கொள்ள முடியும்? உஷ்ஷ்ஷ்.. இதையெல்லாம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது.

** எங்கள் சமூகம் தாய்வழி சமூகம். இங்கெ இருக்கக் கூடிய மார்க்கெட்டுகள் எல்லாமே பெண்களால் நடத்தப்படுபவை. நாட்டிலேயே ரொம்பப் பெரிய இந்த மார்க்கெட்டுகளை “இமா மார்க்கெட்” என்றழைப்பார்கள். இதைத்தான் இந்திய அரசு மொத்தமாக இடித்து விட்டு பெருவணிக அரக்கர்களை இறக்குமதி செய்யத் துடிக்கிறது.

** பள்ளியில் நாம் படிக்கும்போது புத்தகங்களோடு எனக்கு சிநேகம் உண்டானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தனை எத்தனை பேர்.. அற்புதம். ஆனால்.. அவர்களில் ஒருவர் கூடவா எங்கள் மாநிலத்தில் இருந்து வரவில்லை? ஏன் அவர்கள் சரித்திரம் இருட்டடிக்கப்படுகிறது? இந்தியாவுக்கு வெகு முன்னரே எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?

** வளர்ந்து பெரியவளாகி ஒரு மனித நல இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். கிராமங்களுக்குச் சென்ற போது எனக்கு பல அதிர்ச்சிகள். வன்புணர்ச்சிகள், காரணமே இல்லாத ஆள் கடத்தல்கள், கொலைகள்.. இந்த சட்டம் எதை எல்லாம் தவறு என்று சொல்கிறதோ, அது எல்லாமே. எங்கள் கிராமங்களில் சர்வசாதரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

** ௨000 ஆம் ஆண்டின் ஒரு கறுப்பு தினம். அந்த கிராமத்தில் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு சிலர் நின்றுந்தார்கள். ஆனால் அங்கே வந்ததோ ஆயுதம் ஏந்திய வீரர்களைத் தாங்கிய ஒரு கவச வண்டி. சட் சட் சட்... துப்பாக்கிகள் அதிர்ந்து அடங்கின. பத்து சவங்கள். அந்த சாலையின் நடுவில் கிடந்தது. ஏன் இந்தப்படுகொலைகள்? தெரியாது. மறுநாள் செய்தித்தாளில் அதைச் செய்தது அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் என்கிற இந்திய ராணுவப்பிரிவு எனத் தெரிந்தது. இறந்து போனவர்களில் சிறுவயதிலேயே வீரச்செயல் புரிந்ததற்காக விருது வாங்கிய ஒரு சிறுவனும் இருந்தான். என்ன மாதிரியான கொடுமை இது?

** நான் யோசிக்க ஆரம்பித்தேன். எம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் இந்த நிலை மாறும்? நான் என்னுடைய எந்தப் பொருளை பணயம் வைத்தால் என் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? நான் அந்த தீர்மானத்துக்கு வந்தேன். அது அற வழியிலான உண்ணாவிரதம். என் முடிவைப் பார்த்து நிறைய பேர் சிரித்தார்கள். இந்த அரசாங்கம் கல்லைப் போன்றது. உன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள் என்று கேலி செய்தார்கள். ஆனால் உண்ணாவிரதம் ஆரம்பித்த இரண்டே நாட்களில் நான் கைது செய்யப்பட்டேன். எனக்கு நம்பிக்கை வந்தது. நான் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.

** போராட்டம் அதிகமாக இந்திய ராணுவம் எங்கள் ஊரைச் சூழ்ந்து கொண்டது. சொல்ல முடியாத அட்டூழியங்கள். ஜூலை 2004, எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சகோதரி மனோரமா இரவோடிரவாக ராணுவத்தால் வீட்டை விட்டு இழுத்துச் செல்லப்பட்டார். “ஏ பெண்ணே.. வீணாக சத்தம் போடாதே. அரசியல் உனக்கெதற்கு? நீ வெறும் சதைக்கோளம் மட்டுமே.. இரண்டு வட்ட மார்புகளும் ஒரு யோனியும் கொண்ட பெண் அவ்வளவே..” இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு காட்டுப்பகுதியில் அவருடைய பிணம் கிடைத்தது. அவருடைய யோனியில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவள் பெண்ணாக இருந்ததற்கான விலையைக் கொடுத்திருந்தார் மனோரமா.

** இதன் எதிர்வினையாகவே மணிப்பூரிப் பெண்கள் அஸ்ஸாம் ரைஃபிள்களின் அலுவலகம் முன்பு நிர்வாணமாக போராடினார்கள். “Indian Army Rape Us". நாங்கள் உங்கள் முன்பு திறந்த மார்புகளோடு இருக்கிறோம். வந்து உங்கள் மூவர்ணக்கொடியை எங்கள் உடம்புகள் மீது பொறித்துச் செல்லுங்கள் என அறைகூவல் விடுத்தார்கள்.

** பண்டிகைகள் வந்துபோவது போல நானும் வருடா வருடம் கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதுமாக இருந்தேன். என்னுடைய ஆதர்ஷமான காந்தி மகாத்மாவின் சமாதியில் நான் சங்கல்பம் எடுத்துக் கொண்டேன் தொடர்ந்து போராட. அதற்குப் பிறகு நான் தற்கொலைக்கு முயன்றதாக கைது செய்யப்பட்டேன். ஆனால் அது உண்மையல்ல. நான் என்னையும் என் உயிரையும் ரொம்பவே நேசிக்கிறேன். அதனாலேயெ அதை என் பகடைக்காயாக பயன்படுத்த விழைகிறேன். எனவேதான் என் உடம்பையும் உயிரையும் வருத்திக் கொண்டு போராடி வருகிறேன். நான் ஏற்றியிருக்கும் இந்த நெருப்பு பெரிதாகப் பரவும். கடைசியில் உண்மை வென்றே தீரும் என நான் தீவிரமாக நம்புகிறேன். கண்டிப்பாக ஒரு நாள் எனது ஊருக்கான விடிவுகாலம் பிறந்தே தீரும். அதுவரை நான் பொறுமையாகக் காத்துக் கிடப்பேன். நான் ஈரொம் சர்மிலா...

ரொம்ப அருமையாக நடந்த நாடகத்தின் முடிவில் சர்மிளாவுக்கு மதுரை நண்பர்களின் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டது. அதை ஈரோம் சர்மிளாவிடம் கொண்டு போய் சேர்ப்பிப்பதாக அவர் சொன்னதால் அதில் நண்பர்கள் அத்தனை பேரும் கையொப்பம் இட்டார்கள். அதன் பின்பாக கேள்வி பதில் நேரமும் சில அரசியல் விஷயங்களும் பகிரப்பட்டன. தன் மக்களின் நலனுக்காக போராடி வரும் சர்மிளாவின் கனவாகும் என நாமும் நம்புவோம்.

குறிப்பு: இதை வசிக்கும் நண்பர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் இதை எழுத முடிந்தால் இன்னும் நிறைய பேரைப் போய்ச்சேரும் வாய்ப்பு இருக்கிறது. பஸ்ஸிலும் ரீஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர் மதுரை கார்த்திகை பாண்டியன் இந்த அற்புதமான பதிவை பதிவிட்டு உள்ளார். அனைவரும் ஈரோம் சர்மிளாவை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு மறுபதிவு...

நன்றி கார்த்திகை பாண்டியன்.

22 comments:

  1. உண்மை தான், தேசிய கீதத்தில் தங்கள் மாகாணம் இல்லாமல் இருந்தால் வேதனையாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  2. ஈரோம் சர்மிளாவின் வாழ்க்கை உணர்த்தும் விஷயம் ஏராளம்..

    ReplyDelete
  3. பெண் காந்தி ஆனா தனியா..........

    உங்க பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  4. மிகத்தேவையான, அக்கபூர்வமான பதிவு. முன்னர் கேள்விப்பட்டாலும்கூட, பல தகவல்களை புதிதாக தெரிந்துகொள்ள கூடியதாக இருந்தது.

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு. சத்தியமாக, இப்போது தான் அறிந்தேன். நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கும் நன்றி. உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  7. இவரைப்பற்றி படித்திரிக்கிறேன்.......பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. இவரை இரும்பு பெண் என்று அழைக்கிறார்கள் ,இவரை பற்றி சில வருடங்களுக்கு முன் அறிந்தேன் -அப்பொழுது என்னிடம் இவரை பற்றி தெரியுமா என்று ஒரு வாடா கிழக்கு மாகாண நண்பர் கேட்டார் -நான் கேள்வி பட்டதில்லை என்று சொன்னேன் ,அதற்க்கு அவர் சொன்னது " எங்கள் நிலைமை ,எங்களை பற்றிய செய்திகள்,வாழ்வியல் பற்றிய அடிப்படை கூட சக இந்தியருக்கு இல்லையே " என்று வருத்தப்பட்டார் !!இவர் போற்ற பட வேண்டிய ,ஒரு ஆத்மா

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  10. சங்கவி சித்தார்க்கு பெருமை சேர்த்துட்டீங்க..

    ReplyDelete
  11. மிக மிக அருமையான தகவல்கள் நன்றி

    ReplyDelete
  12. i know her well, but when i said that i know her to my friends, they will ask "so what"?., but when i said that i know the name YATRA., lot of people replied quickly : oh you know danush's son name too!!:

    so .....

    ReplyDelete
  13. நல்ல பதிவு. நம் மாநிலத்துக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளை, குறிப்பாக, வட கிழக்கு மக்களைப் பற்றி அறியப்படாமலேதான் இருக்கிறது. அவர்கள் படும் துன்பங்கள், வசதிக்குறைவுகள்.... இரோம் ஷர்மிளா இன்றைக்கு நம்மிடையே வாழும் ஒரு மிக முக்கியமான ஆளுமை. நாம் மேலும் தேடி இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை ஒன்றின் தொடர்பைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
    http://tparameshwari.blogspot.com/2010/02/blog-post_3327.html

    ReplyDelete
  14. நல்ல தகவல்..

    பதிவின் அளவு இன்னும் கொஞ்சம் சுருக்கமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

    ReplyDelete
  15. இவரைப் பற்றி அறியும் போது ,நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று யோசிக்கிறேன்

    ReplyDelete
  16. மிக அருமை நன்றி சங்கவி

    ReplyDelete
  17. எங்கேயோ பெயரை மட்டும் அடிக்கடி கேட்டிருந்தேன் இப்போ தான் விபரம் தெரிகிறது நன்றிகள்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

    ReplyDelete
  18. Same thing happening in Kashmir....

    ReplyDelete
  19. சங்கவி,

    கேள்வியைத் தலைப்பிட்டு தகவலைப் படிக்கத்தூண்டியதற்கு முதலில் நன்றி.

    //அவருடைய யோனியில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவள் பெண்ணாக இருந்ததற்கான விலையைக் கொடுத்திருந்தார் மனோரமா.//

    இந்திய அரசாங்கத்தின் இறை”யாண்மை”யைக் கண்டு வியக்கிறேன்.

    ஆண்மை இல்லாதவர்களால் ஆளப்படும் நாட்டின் இராணுவம் வேறெப்படிச் செயல்படும்?

    ஆண்மை இல்லாதவனை “ஆள” அனுமதிக்கும் நா(ஓ)ட்டு மக்களாகிய நமக்கு வேறென்ன கிட்டும்?

    வரலாறு சோறு போடுமா? "IT" மட்டும் தான் சோறு போடும் என்றெண்ணி அந்த துறையை மட்டும் படித்து பட்டம் பெற்று, குளிரூட்டப்பட்ட அறையில் அடைந்து அடிமைகளாக இருக்கும் நமக்கு வேறென்ன வேண்டும்?

    நமக்கு, நம் அம்மாவுக்கு, நம் சகோதரிக்கு, நம் மனைவிக்கு, நம் மகளுக்கு ... இப்படி நம்மைச் சார்ந்தவர்களுக்கு நிகழ்ந்தால் மட்டும் வாயிலும்,வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவோம். அதற்கு பின்பும் ஒன்றும் செய்யத் துணிய மாட்டோம்.

    நம் (மக்கள்) ஆற்றல் என்னவென்று புரியாத ”மங்குனிகள்” நாம்.

    இதோ இன்று ’ஈராக்’-கில் மக்கள் சக்தி வென்று நிற்பதை நம்மில் எத்தனைப்பேர் அறிந்திருப்பார்கள்?

    வரலாறும், போராட்ட உணர்வும் நமக்கெல்லாம் “ ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்குமா என்ன?”

    இந்தப்பதிவின் பின்னூட்ட எண்ணிக்கையே ஒரு விசயத்தை உங்களுக்குத் தெரியப்படுத்தி இருக்குமே!

    நம்மில் எத்தனைப்பேர் இது போன்ற தகவல்களை அறிந்துக்கொள்வதில் ஆர்வப்படுகிறோம், என்பதை!

    நாமெல்லாம் கனவுலகில் மிதந்துக் கொண்டிருக்கிறோம். நமக்கெந்தப் பிரச்சினையும் இல்லை என்று இறுமாப்புக் கொண்டிருக்கிறோம். இன்று சகமனிதனுக்கு ஏற்படும் இந்த கதி நாளை நமக்கும்.. என்பதை உணரும் தொலை நோக்கின்றி குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

    ஆதங்கப்பட்டு விட்டு அமைதியாகி, அடிமையாகிப் போய் விடுகிறோம்.

    ReplyDelete
  20. தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நண்பரே....பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களையும், வாக்குகளையும் தரவும்.
    http://blogintamil.blogspot.com/2011/02/1-tuesday-in-valaichcharamrahim-gazali.html

    ReplyDelete
  21. அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம் நாமும் நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்

    ReplyDelete