Wednesday, August 7, 2013

அந்தியூரில் தொடங்கியது கோடிகளில் புரளும் குதிரை சந்தை...

திருவிழா தோன்றிய வரலாற்றை பற்றி பேசினால் பேசிக்கொண்டே செல்லலாம். ஒவ்வொருவரும் ஒரு வரலாற்றை சொல்வார்கள் ஆனால் கடைசியில் அந்த வரலாறு நிற்கும் இடம் சந்தோசம் தான். திருவிழாக்கள் நகர்புறங்களை விட கிராமப்புறங்களில்தான் விசேசமாக இருக்கும் அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதுபோலத்தான் ஈரோடு மாவட்டத்தில் மிக பேர் சொல்லும் 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா குருநாதசுவாமி திருக்கோயில் திருவிழா.



தலவரலாறு

சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் வனப்பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி, மூன்று குழவிக்கற்களை மட்டும் நட்டு வழிபட்டனர். இந்த கோயில் பூஜாரி வீட்டுப் பெண்ணை, ஆற்காடு நவாப் திருணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெண் கேட்டுள்ளார். உறவினர்களிடம் கலந்து பின் சம்மதம் தெரிவிப்பதாக நவாபின் ஜவானிடம் பூஜாரி கூறினார். உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அப்போது உறவினர் ஒருவருக்கு அருள்வந்து, நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாக சென்றுவிடுங்கள், என்று கூறினார். பூஜாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர். அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்கு சென்று பார்த்த போது யாரும் இல்லை. கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களை சேதப்படுத்தினர். கற்களுடன் சென்றவர்கள் பல ஊர் கடந்து பசியாலும், பட்டினியாலும் வாடி வதங்கினர். தங்களையே பாதுகாக்க இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்தனர். அடுத்தநாள் அனைவரும் புறப்பட்ட போது, தங்களுடைய கூடையில் மூன்று கல் சிலைகளும் இருந்ததைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அவற்றைத் தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்தனர். அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் என்ற இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்தனர். பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று மூன்று கற்களையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநிலமன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார்.

 
கோயில் சுற்றுப் பிரகார நடுப்பகுதியில் 11 அடி நீளம், 11 அடி அகலம், 11 அடி உயரம் கொண்ட குலுக்கை என்னும் பெட்டகம் உள்ளது. அதனுள் பூஜை பொருட்களை வைத்து வந்தனர். ஆடி மாதத் திருவிழாவில், விழாவிற்கு முந்திய நாள் குலுக்கையைத் திறந்து பூஜைப் பொருட்கள் எடுப்பது வழக்கம். இக்குலுக்கைக்கு நான்குபுறமும் வாசற்படிகள் இல்லை. மேல்பகுதி வழியாக ஆள் புகுந்து வரும் நுழைவாயில் உள்ளது. கீழே துவாரம் காற்றோட்ட வசதிக்கு அமைத்து அத்துவாரத்தில் பாதுகாப்புக்காகப் பாம்புகளை விட்டு வைத்தனர். ஆகம விதிப்படி விரதம் இருந்து வரும் பூசாரிகளில் ஒருவர் மட்டும் திறப்பார். மற்றவர்கள் அந்த பெட்டகத்தில் நுழைய முயற்சித்தால் பாம்பால் கடியுண்டு இறப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. பக்தர்கள் தங்கள் தோட்டங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களால், தங்களுக்கு ஆபத்து நேராமல் இருக்க, குலுக்கைக்கு பூக்கள் இட்டு வணங்குகின்றனர். இந்த குலுக்கை பார்ப்பதற்கு புற்று போல உள்ளது.
இங்குள்ள காமாட்சியம்மன் தவமிருக்க அந்தியூர் வனத்துக்குச் சென்றாள். மாய மந்திரத்தில் பிரசித்தி பெற்ற உத்தண்ட முனிராயன் என்பவர் அம்பாளுக்கு வனப்பகுதியை விட மறுத்தார். அவனை குருநாத சுவாமியின் சீடரான, அகோர வீரபத்திரர் சண்டையிட்டு அழித்தார். அவன் அழியும் முன், “என் அகந்தையை அழித்த குருநாதா! உன் கையால் அழிவதால், என் பூர்வ ஜன்ம சாபம் நீங்கப் பெற்றேன். இவ்வனத்தில் தாய் காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ளட்டும். இந்த வனம் இன்றிலிருந்து ஸ்ரீகுருநாதர் வனமாக இருக்கும். நான், அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க, நீ இங்கேயே அருள்புரிவாய்” என்று வரம் கேட்டான். அந்த வரத்தை குருநாத சுவாமி கொடுத்தார். இதனடிப்படையில், அசுரகுணம் கொண்டவர்களுக்கு கூட குருநாத சுவாமி பூர்வ ஜன்ம சாபத்தையும், பாவத்தையும் தீர்ப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்தக் கோயிலில் சிறிய கல் உருவம் ஒன்றை வீரபத்திரரும், உத்தண்ட முனியும் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். அந்தக் கல் குன்றாக வளர்ந்துள்ளது. மக்களும், “குருநாதா. உன் குன்று வளர்வதைப் போல் என் குடும்பத்தையும் வாழ வையப்பா” என வேண்டுகின்றனர். காமாட்சி அம்மன் தவநிலையில் இருக்கிறாள். அருகில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன், நவநாயகிகள், ஏழு கன்னிமார்கள் உள்ளனர். பாட்டன், பாட்டி, நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன், அண்ணன்மார் என்னும் முன்னுடையார், 18 சித்தர்கள் உள்ளனர். அகோர வீரபத்திரர் எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் உள்ளது.
குதிரை சந்தை
அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுகுதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இக்குதிரை சந்தையில் பணம் கோடியில் புரளும் அந்த அளவிற்கு இன்றும் குதிரை விற்பனை நடைபெறுகிறது.
பழைய படம்

கடந்த ஆண்டு இத்திருவிழா பற்றி எனது பதிவில் பதிந்திருந்தேன் அப்போது பல நண்பர்கள் அடுத்த முறை திருவிழாவின் போது அழைக்க சொல்லி இருந்தனர். 
இன்றில் இருந்து குதிரை சந்தை தொட்ங்கிவிட்டது.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் இருப்பர் அந்தியூரில். சனி ஞாயிறு களிலும் குதிரை சந்தை கடைசி நாளாக களை கட்டும். இந்த வருடம் ரம்ஜான் விடுமுறை வார இறுதி நாட்களில் சேர்ந்து வருவதால் 3 நாட்கள் சந்தோசமாக சுற்றப்போகிறேன் குதிரை சந்தையை வர விருப்பம் உள்ள நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் சந்தோசமாக சுற்றுவோம் சந்தையை..  இப்படி ஒரு திருவிழாவை நாம் காண இயலாது. கடந்த ஆண்டு கூடிய மக்கள் 6 இலட்சத்திற்கும் அதிகம் என்றனர் இந்த ஆண்டு இன்னும் அதிகமாக இருக்கும்..

13 comments:

  1. நல்லா ஊர் சுத்தி பார்த்துட்டு விழாவை என்ஜாய் பண்ணிட்டு பதிவா போடுங்க சங்கவி

    ReplyDelete
    Replies
    1. ஒருவாரத்துக்கு பதிவ தேத்துடுவோமுள்ள...

      Delete
  2. அந்தியூர் கோவில் தலவரலாறு, குதிரை சந்தைப்பற்றி தெரிந்து கொண்டேன்.

    //கடைசியில் அந்த வரலாறு நிற்கும் இடம் சந்தோசம் தான்.//
    நீங்கள் சொல்வது உண்மை ,திருவிழா என்றாலே சந்தோஷம் தான் உற்றம், சுற்றம் எல்லோரையும் காணலாம்.

    திருவிழா கண்டு களித்து இறை அருள் பெற்று வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம்... தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

      Delete
  3. கோவில் வரலாறுகளை அழகாக பகிர்ந்தமை சிறப்பு! மீண்டும் உங்கள் குதிரை சந்தை அனுபவங்களை பதிவாக படிக்க காத்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் இந்த வருடம் பல புதிய தகவலுடன் காத்திருங்கள்...

      Delete
  4. தல வரலாறு... குதிரை சந்தை விவரம் அருமை...
    கலக்கிட்டு வந்து கலக்கல் பதிவை இடுங்கள்...

    ReplyDelete
  5. அந்தியூர் தலவரலாறு, குதிரைச் சந்தை என நல்ல தகவல்கள்....

    பகிர்வுக்கு நன்றி சங்கவி.

    ReplyDelete
  6. திருவிழா கொண்ட்டாட்டங்களை அனுபவித்து எங்களுக்கும் சொல்லுங்க தெரிஞ்சிக்குறோம் சதீஷ்.

    ReplyDelete
  7. திருவிழான்னாலே உற்சாகம்தான்!

    சந்தையில் ரேஸ் குதிரை கூட விற்பார்களா?

    ReplyDelete
  8. நல்ல தகவல்கள்....

    பகிர்வுக்கு நன்றி சங்கவி.

    ReplyDelete
  9. சந்தையில மிடுக்கான குதிரை ஒன்னு வாங்க்கிட்டு,
    அதில பதிவர் திருவிழாவுக்கு வாங்க மாப்பிள..!!

    ReplyDelete
  10. புராணமும், படங்களும், பகிர்வுகளும் மிக அருமை..!

    ReplyDelete