Thursday, April 7, 2011

அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன்லோக்பால் மசோதா


லோக்பால் என்றால் என்ன? அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் லோக்பால் சட்டம்.

இப்போதுள்ள ஊழல் குறித்த சட்டங்கள் எவை? இந்திய தண்டனை சட்டம், 1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம், 1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின் படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.

லோக்பால் அமைப்பினால் என்ன லாபம்? இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களை பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையை போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையை போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.

இதே போல் இந்தியாவில் வேறு அரசு நிறுவனம் உள்ளதா? ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இது கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும்? கடந்த 1968 முதல், லோக்சபாவில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது. லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஏன்? தற்போது அரசுக்கு பரிசீலிக்கப்பட்ட லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கின்றார்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் உள்ள குறைகள்

* நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.

* லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும், எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.

* புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.

* காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.

* லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.

* இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.

* இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.

* நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.

* புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.

* லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன் லோக்பால் மாதிரி மசோதா விவரம்

* அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு வரப்படும்.

* பொது மக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்கலாம். யாரிடமும் சரிபார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

* புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ளலாம்.

* லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ., இணைக்கப்பட்டு விட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவை மேற்கொள்ள முடியும்.

* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேருக்கு மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.

* தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

* லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்க கூடாது.

* ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.

* ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.

நன்றி தினமலர்...

22 comments:

  1. நல்ல முயற்சிதான் அன்னா ஹசாரே செய்வது. ஊழல் பெருச்சாளிகள் இதை நடக்க விட வேண்டுமே!...

    ReplyDelete
  2. இவரது போராட்டத்துக்கு நல்ல பலன் காண ஆவலுடன் வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  3. சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.

    இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
    சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்

    ReplyDelete
  4. எதை எதையோ காட்டும் தமிழக சேனல்கள் அன்னா ஹசாரே பற்றி மூச்சு கூட விடவில்லை... தமிழனை ஏமாற்ற தமிழ் சேனல்களே போதும் போலும்... வாருங்கள் நண்பர்களே ஊழல் இல்லாத பாரதத்தை படைப்போம்.. அன்னா ஹசாரே-வுக்கு தோள் கொடுப்போம்.....

    ReplyDelete
  5. நீதி, நேர்மைக்கு என்றும் ஆதரவு உண்டு!

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. அருமையான பதிவு சங்கவி..அன்னா ஹசாரே-வுக்கு தோள் கொடுப்போம்!

    ReplyDelete
  7. அசத்திட்டீங்க சங்கவி...
    ஹசாரே'வை ஆதரிப்போம் மக்களே....

    ReplyDelete
  8. சென்னை மெரீனா பீச்சிலும் ஹசாரேவுக்கு ஆதரவா அமைதி போராட்டம் நடக்குதாம்....

    ReplyDelete
  9. அன்னா ஹசாரே போராட்டம் வெற்றியடையட்டும்.. பகிர்வுக்கு நன்றி சங்கவி.

    ReplyDelete
  10. நல்ல விளக்கம் சங்கவி

    ReplyDelete
  11. காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டடார்....அடுத்து திகார் சிறையிலிருந்து ராசாவை விடுவித்துவிட்டால் அவரும் அன்ன ஹசாருடன் உண்ணாவிரதமிருப்பார்...... :))

    ReplyDelete
  12. ////லோக்பால்////

    இப்பத் தாங்க இவ்வளவு விளக்கமா அறியிறன் நன்றி....

    ReplyDelete
  13. விளக்கமான நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் சங்கவி

    அனைவரும் அவரது போராட்டத்திற்கு ஒருமித்த குரல் கொடுப்போம்


    http://kudanthaiyur.blogspot.com/2011/04/blog-post.html

    ReplyDelete
  14. நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள் போராடுபவரோடு சேர்த்து அதை அழகாய்ப் பதிவு செய்தவருக்கும்!

    ReplyDelete
  15. அண்ணா ஹசாரே வுக்கு நன்றி.இருப்பினும் ஊழல் பெருச்சாலிகளை ஒன்றும் செய்யமுடியாது.
    தகவல் அறியும் உரிமை சட்டம் பார்க்க அருமையாக இருக்கும்.ஆனால் அதை பயன்படுத்தி மனுபோட்டவர்களுக்கு ஒழுங்காக தகவல் கிடைக்கிறதா?பல பேர் மிரட்டப்படுகிறார்கள்.அதில் என் அனுபவமும் உண்டு.
    கடைசியாக அண்ணா ஹசாரே அவர்களுக்கு நம்ம தமிழ்நாட்டு அண்ணா சொன்ன வார்த்தையை நினைவுபடுத்த விறும்புகிறேன்,"சட்டம் ஒரு இருட்டரை-law is dark room"
    நன்றி

    ReplyDelete
  16. ஜன் லோக்பால் பற்றிய அனைத்து விபரங்களையும் தெளிவாக தொகுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  17. எனக்கு வங்கியில் பணம் ஏதும் கிடையாது. நான் பக்கத்தில் வைத்திருக்கும் ஜோல்னா பையில், ஏதாவது ஐந்து அல்லது 10 ரூபாயை போடச் சொல்லி மக்களிடம் கேட்பேன். அது தான் என் செலவுக்கு பணம்" என்று சொல்லும் அன்னாவின் நேர்மை நம்மை ஈர்க்கிறது

    ReplyDelete
  18. //எதை எதையோ காட்டும் தமிழக சேனல்கள் அன்னா ஹசாரே பற்றி மூச்சு கூட விடவில்லை... தமிழனை ஏமாற்ற தமிழ் சேனல்களே போதும் போலும்... வாருங்கள் நண்பர்களே ஊழல் இல்லாத பாரதத்தை படைப்போம்.. அன்னா ஹசாரே-வுக்கு தோள் கொடுப்போம்.....///

    ReplyDelete
  19. அன்புள்ள சங்கவி,
    தகவலுக்கு நன்றி.

    காண்க:
    ஹஸாரே உண்ணாவிரதம்: காரணத்திலும் தெளிவில்லை; காரியத்திலும் ஜெயமில்லை (http://saekkizhaan.blogspot.com/2011/04/blog-post_11.html)

    ReplyDelete
  20. நீண்ட காலமாக ஊழல் தடுப்புச் சட்டமான லோக்பாலைக் கொண்டு வர முயற்சித்த போதெல்லாம் உலக அழகிப் போட்டிகளையும், சினிமா நடிக நடிகையரையும், பங்குச் சந்தைக் கோடுகளையும் வெட்டி வெட்டிக் காட்டிக்கொண்டிருந்தன தொலைக்காட்சிகள். தேவகவுடா அரசை ஆதரிக்கும்போதும், பிறகு ஐக்கிய முன்னணி அரசில் காங்கிரஸை ஆதரிக்கும் நிலை வந்தபோதும் இடதுசாரிக் கட்சிகள் ‘லோக்பால் மசோதா’ நிறைவேற்றப்பட வேண்டுமென நிபந்தனைகள் விதிக்கத்தான் செய்தன. ஊழலில் திளைக்கும் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளே ஆளும்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்துகொண்டு அந்த மசோதாவைப் பற்றி கவனமாக பேசாமல் இருந்தன. காங்கிரஸ் ஊழலை ஒழிக்க முன் வரும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும். காரணம் சோனியா மீது ஊழல் புகாரும், கருப்புப்பண புகாரும் ஆதாரத்துடன் உள்ளது. ஆனால் அன்னா ஹசாரே ஏன் சோனியா ஊழல் குறித்து பேச மறுக்கிறார் என்பது புரியவில்லை. அதுமட்டுமல்ல ஊழலை ஒழிக்க அவருக்கு கடிதம் எழுதுவது ஏன் என்றும் புரியவில்லை. மத்திய அரசு தன்னுடன் பேசி ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் இயற்றப் போவதாக ஒரு குழு அமைத்து போட்ட நாடகத்தை நம்பிய அன்னா ஹசாரே இன்று அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக புலம்புகிறார். மதக் கலவரங்கள் தாண்டவமாடிய போது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது, அந்நிய நிறுவனங்கள் சாரி சாரியாய் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிற போதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம். அப்போதெல்லாம் மௌனவிரதம் கடைப்பிடித்த இந்த மகான் திடுமென சிலிர்த்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். பஸ்ஸில் சக இந்தியனை நெட்டித் தள்ளி இடம்பிடிக்கும் இந்தக் கூட்டம், கிரிக்கெட்டில் தேசபக்தியை ஆரவாரமாய்க் கொண்டாடும். அருகில் இருப்பவனுக்காக அழவோ, சிரிக்கவோ முடியாத இந்தக் கூட்டம் எங்கோ நடக்கும் போட்டியை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பார்க்கும். அது அட்சரசுத்தமாக அன்னா ஹசாரே விஷயத்திலும் நடந்தது. தேசபக்தி கொட்டோ கொட்டுவென்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. இந்த லோக்பால் மசோதா என்ன, இதன் எல்லைகள் என்ன, இதன் மூலம் எது ,சாத்தியம் என்ன என்பதைக் கடந்தகாலம், நிகழ்கால அனுபவங்களிலிருந்து பார்க்காமல், வழக்கம்போல் அந்தரத்தில் வைத்தே பார்க்கத் தலைப்படுகிறார்கள்.
    ஊழல் சகதியின் ஊற்றுக்கண்ணை பார்க்காமல் வெற்றிடத்தில் அவரது பார்வை துழாவும்போதுதான் சந்தேகம் வருகிறது. சக மனிதர்கள் ஒருவருக்கொருவரைப் போட்டியாக பாவிக்கச் செய்து, களத்தில் நிறுத்தி வைத்திருக்கிற இந்த முதலாளித்துவ அமைப்போடு ஒட்டிப் பிறந்ததுதான் ஊழல். தனியார் மயமும், தாராள மயமும் வழங்கிய கொடை அது. இது விதி. இந்த வேர்களை அண்டாமல், அன்னா ஹசாரேவும் கிளைகளை வெட்ட வாளைச் சுழற்றுகிறார். லோக்பால் மசோதாதான் ஊழல் அரக்கனின் உயிரையெடுக்கும் ஆயுதம் என்பதாகச் சித்திரம் தீட்டப்படுகின்றன. லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால் அடுத்த நொடியே நாட்டில் ஊழல் இல்லாமல் ஒழிந்துவிடும் என்பதுபோல அன்னா ஹசாரே மக்களை ஏமாற்றிவருகிறார். சினிமா பாணியில் ஒரு பாட்டு முடிவதற்குள் ஊழலை ஒழிக்க மக்கள் விரும்புகிறார்கள்.
    தீண்டாமை எதிரான வலுவானச் சட்டங்கள் இருக்கின்றன. தீண்டாமை ஒழிந்தாவிட்டது. பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான எவ்வளவோச் சட்டங்கள் இருக்கின்றன. பெண்கள் நலமாகவா இருக்கிறார்கள்? சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடு அமல்படுத்துகிற அரசு வேண்டும். அது எப்போது சாத்தியம் அன்னா ஹசாரே?
    அன்னா ஹசாரேதான் பூனைகளுக்கு மணி கட்டப் போகிறார் என்கிறார்கள். ஆனால் அவரே இப்போது பூனையாகி இருக்கிறாரே. முதலில் மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரேவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்கும், அவரது violence தான் எனக்கு ஒத்துவராது என தெரிவித்தார். Violence இல்லையென்றால் அது காந்தீயம் போலும் அவருக்கு. ‘மண்ணின் மக்கள்’ என்ற கோஷத்தோடு தமிழ், பீகாரி, இந்தி பேசும் பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடும் அவரது எந்தக் கொள்கைகள் அன்னா ஹசாரேவுக்குப் பிடித்துத் தொலைத்தனவோ? இனத் துவேஷம், மொழித் துவேஷம் கொண்டு அரசியல் நடத்தும் ராஜ்தாக்கரேவிடம் என்ன காந்தீயத்தை கண்டாரோ?
    இரண்டாவது, முஸ்லீம் மக்கள் நரவேட்டையாடப்பட்ட குஜாரத்தின் முதல்வர் நரேந்திர மோடிதான் இந்தியத் தலைவர்களில் அவருக்குப் பிடித்தமானவராம். அன்னா ஹசாரேதான் இப்படி வாய்க் கூசாமல் சொல்லியிருக்கிறார். மதசகிப்புத்தன்மைக்காக குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த மகாத்மா காந்தி எங்கே, இந்த அன்னா ஹசாரே எங்கே? இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள்? இவரை எப்படி இந்த நாடு கொண்டாடுகிறது? ஊடகங்கள் நேர்மையாக நடந்தால் ஜனநாயகத்தின் நாலாவது தூண் நிமிர்ந்து நிற்கும்

    நல்லையா தயாபரன்

    ReplyDelete