Thursday, February 9, 2012

நானும் எனது ஊரும் (தொடர்பதிவு)


இன்று நிறைய பேர் தாம் பிறந்து வளர்ந்த ஊர்களை விட்டு கால ஓட்டத்தில் வேலை, வேலைப்பளு, குழந்தைகள் கல்வி என்று ஏதோ ஒரு காரணத்திற்காக நம் ஊரை விட்டு வேறு ஊரில் வாழ்ந்து வருகிறோம். இதில் அதிகம் பேர் தனது வேலைக்காகவும், தொழிலுக்காகவும் கிராமத்தை விட்டு நகரத்தில் சென்று வாழ்பவர்கள் அதிகம். இன்னும் பலர் வெளிநாட்டில் வேலை செய்து வாழ்கிறவர்களும் தன் சொந்த ஊரை விட்டு பிரிந்து தான் இருக்கின்றனர். நாம் அனைவரும் தினமும் ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் பிறந்து வளர்ந்த கிரமாத்தை நிச்சயம் நினைவில் கொள்கிறோம். அது போல எனது ஊரைப்பற்றி என் பதிவில் பதிவதை பெருமையாக நினைத்து ஊரையும் ஊர் நினைவுகளையும் பதிவாக்குகின்றேன்..

எனது ஊர் ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் 13வது கிலோமீட்டரில் அமைந்துள்ள முற்றிலும் விவசாய பூமி. கிராமத்தை பொறுத்தவரை பூர்வீக கிராமம் தான் அதிகம் இருக்கும் எங்கள் ஊரைப்பொறுத்த வரை இது பூர்வீக கிராமம் இல்லை எங்கள் ஊரில் இருந்து குறிச்சி என்ற கிராமத்திற்கு செல்லும் வழி மேட்டூர் சாலையில் இருந்து பிரிகிறது இதனால் சுற்றி உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் கூடும் இடமாகவும், பேருந்துக்கு இங்கே தான் வரவேண்டிய நிலை இருந்தால் 1980க்கு அப்புறம் சிறிது சிறிதாக வளர்ந்த கிராமம். இன்று கிராமமும் இல்லாதா நகரமும் இல்லாத ஒரு 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஊராக இருக்கின்றது.

எங்கள் ஊரின் இரண்டாவது தலைமுறையினர் என் போன்றவர்கள். எமது தந்தை மற்றும் அவர் வயதையுள்ளவர்கள் முதல் தலைமுறையினர். எங்கள் ஊரின் ஒரு சிற்றாறு ஓடுகிறது இந்த ஆறு எங்கள் ஊரில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் சேருகிறது. இது காவிரியின் துணை ஆறு என்றும் சொல்லலாம். மேட்டூர் அணை கட்டும்போது கட்டுமானப்பொருட்கள் எல்லாம் இந்த வழியாகத்தான் கொண்டு செல்லவேண்டும் என்பதால் இந்த சிற்றாறின் குறுக்கே ஆங்கிலேயர் பாலம் ஒன்றை கட்ட முற்பட்டனர் அப்போது இந்த இடத்தில் ஊர் இல்லாததால் அந்த பாலத்திற்கு ஆங்கிலேயர் சிற்றாறு என்பதை சித்தார் பாலம் என்று பெயரிட்டனர் இதுவே இன்றும் தலைத்து நிற்கின்றது.

ஊரைச்சுற்றியும் வயல் அதுவும் முப்போகம் விளையும் நிலங்கள் காவிரின் நீர்ப்பாசனமும், கிணற்றுப்பாசனமும் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருப்பதால் இங்கு நெல், வாழை, கரும்பு, மஞ்சள் தான் அதிகம் பயிரிவர். தொழில் என்று பார்த்தால் விவசயாத்தை சார்ந்த தொழில்கள் மட்டுமே இங்கு அதிகம். தொழிற்சாலைகள் என்று ஒன்றும் கிடையாது.

இந்த ஊரில் பிறந்து வளர்ந்த போது முதலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்ந்து 5ம் வகுப்பு வரை இங்கு தான் படித்தேன். 8ம் வகுப்பு வரை பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்கும் 9 ம் வகுப்பில் இருந்தே ஊரைப்பிரிந்து விட்டேன்.. நாங்கள் விளையாடும் விளையாட்டுக்கள் காலத்திற்கு ஏற்றாற் போல் மாறும். முதலில் கண்ணாமூச்சு, திருடன் போலீஸ், 5க்கல், பல்லாங்குழி, நொண்டி, கொலை கொலையா மந்திரிக்கா, கோழிக் குண்டு, கல் ஆட்டம், பில்லுக்குச்சி, தாண்டில், கஞ்சி காய்ச்சுதல் என சிறுவயது விளையாட்டுக்கள் இன்று மறைந்து விட்டது.

பெண்கள் நெல் அடிக்கும் காலங்களில் நெல் அடித்து முடிந்த பின் சாமிக்கு பொங்கல் வைத்து கும்மியடித்து பாட்டு பாடுவார்கள் இது சிறுவயதில் மிகமிக ரசித்த ஒன்று இன்று இதுவும் ஊரில் நடப்பது இல்லை.

எங்கள் ஊர் சினிமா தியேட்டர் பெயர் வெங்கடேஸ்வரா இந்த தியேட்டர் மிக பிரபலம் காரணம் இது ஒரு ஓபன் தியேட்டர் தியேட்டரின்  உள் இருக்கைகள் அனைத்தும் சிமெண்ட்டால் வடிவமைக்கப்பட்டு இருக்கும், மேலிருந்து கீழ் காரை பூசப்பட்ட தரை என்ங்கும் மண் இல்லாத சினிமா கொட்டகை அது. மழைவந்தால் ஓரமாக நிற்க மட்டுமே அட்டை போட்ட இடம் இருக்கும். இங்கு டிக்கெட் விலை கடைசியாக நான் போன போது 5 ரூபாய். இந்த தியேட்டதில் நண்பரோடு படுத்துக்கொண்டு படம் பார்க்கும் சுகம் இன்று எந்த ஏசி தியேட்டரில் 300 ரூபாய் கொடுத்து பார்த்தாலும் கிடைப்பதில்லை. இங்கு நான் முதன் முதலாக பார்த்த படம் முதல்மரியாதை. இந்த தியேட்டர் இப்போது இயங்கவில்லை விரைவில் இடிக்கப்போகிறார்களாம்.

எங்கள் ஊரின் மிக முக்கிய விளையாட்டு கிரிக்கெட்தான் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை கிரிக்கெட் மட்டுமே எங்கள் ஊரின் பிரதான விளையாட்டு. நாங்கள் ஆரம்பித்த சித்தார் கிரிக்கெட் கிளப் இன்று எங்கள் தம்பிமார்கள் கலக்கிகொண்டு இருக்கின்றனர். சுத்து வட்டாரத்தில் சித்தார் அணி என்றாலே ஒரு பயம் இருக்கும். இந்த அணியின் பதினோராவது ஆள் தான் நான் ஆம் பந்து மட்டுமே வீசுவேன் மட்டை அந்த அளவிற்கு வீச வராது. எங்கள் அணியின் முதல் ஓவர் எங்கு சென்றாலும் அது என்னுடையதாகத்தான் இருக்கும். எங்கள் அணி சார்பாக தொடந்து 15 வருடம் கிரிக்கெட் போட்டி நடத்தினோம் தற்போது இப்போட்டிகள் குறைந்து விட்டன.

என் கிராமத்தில் மறக்க முடியாத மற்றொன்று கிணற்றுக்குளியல் வார இறுதி நாட்களில் காலை 11 மணிக்கு கிரிக்கெட் விளையாடிவிட்டு சென்றால் மதியம் 3 வரை கிணற்றுக்குளி குதித்துக்கொண்டு தண்ணீரில் படுத்துக்கொண்டும் இருப்போம். ஒரு சில நாட்களில் மோட்டார் ஓடும் போது மோட்டார் தண்ணீரில் தலை கொடுத்து குளிப்பதும் மிக மிக சுகமே. கிணற்றில் குளித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.

ஊரில் மிக முக்கியமான சந்தோசம் திருவிழாதான் கிராமம் என்றாலே திருவிழாவிற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் அந்த வகையில் எங்கள் ஊரும் அப்படியே. மாரியம்மன் கோவில் கம்பம் நட்டு விட்டால் போதும் தினமும் இரவு கோயிலுக்கு சென்று கம்பத்தை சுத்து ஆடும் ஆட்டம் இன்றும் திருவிழாக்காலங்களில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறேன். கோயிலுக்கு சென்று அந்த தாளத்துக்கு ஏற்ப இரண்டு ஆட்டம் ஆடினால் தான் அந்த ஆண்டு திருவிழா நிறைவு பெற்றது போல் ஒரு திருப்தி. எங்கள் ஊர் திருவிழா பதினைந்து நாள் இதில் கடைசி 5 நாட்கள் நிறைவாக இருக்கும். கிராமமாக இருந்தாலும் நிச்சயம் ஒரு நாள் பட்டிமன்றம், அடுத்த நாள் கரகாட்டம், நையாண்டி மேளம், நடன நிகழ்ச்சி, எங்கள் ஊர் பசங்க நடிக்கும் நாடகம், கிராமத்து கூத்து என்று ஒவ்வொரு நாளும் களை கட்டும்.. இன்றும் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. வருடா வருடம் 5 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு போய் திருவிழாவை அனுபவித்து வருகிறேன்.

என்னதான் நிறைய சம்பாரிச்சு, சொத்து பத்துக்கள் வெளியூரில் இருந்தாலும் சொந்த ஊரில் உள்ள  பழைய வீட்டில் படுத்து விட்டத்தைப்பார்த்து கனவு காணும் சுகமே தனிதான் எனக்கு...

இன்று பதிவுலகில் தொடர்பதிவு எல்லாம் எழுதும் அளவிற்கு யாருக்கும் நேரம் இல்லை ஏன் எனில் பதிவெழுதவே எல்லாருக்கும் நேரம் இல்லாத போது எங்க தொடர்பதிவெழுதுவது என அனைவரும் சொல்கின்றனர் இருந்தாலும் அனைவருக்கும் தனது ஊரைப்பற்றி நிச்சயம் எழுதால் என்ற எண்ணம் மனதில் இருக்கும் அதற்காகவே நான் இப்போது என் ஞபாகத்திற்கு வரும் நண்பர்களை எல்லாம் தொடர்பதிவு எழுத அழைக்கிறேன் நான் தொடர் பதிவிற்கு அழைத்தவர்கள் எல்லாம் நீங்களும் 10 பேரை தொடர்பதிவுக்கு அழைத்து அனைவரையும் அவர்கள் கிராமத்து நினைவுகளை பூக்கவைப்போம்..

பங்காளி பிரபாகர்
வீடு திரும்பல் மோகன்குமார்
ஆரூர் மூனா செந்தில்
தமிழ்வாசி பிரகாஷ்
வீடு சுரேஷ்
சிதறல்கள் தீபா
பலா பட்டறை சங்கர்
திண்டுக்கல் தனபாலன்
தென்றல் சசிகலா
விக்கியின் அகடவிகடங்கள்
மெட்ராஸ்பவன் சிவக்குமார்

இன்னும் நிறைய நண்பர்களை அழைக்கவேண்டும் இத்தொடர்பதிவிற்கு நான் அழைத்த நண்பர்கள் அனைவரும் குறைந்த பட்சம் 10 பேரையாவது தொடர்பதிவிற்கு அழைக்க வேண்டுகிறேன்...

21 comments:

  1. படங்களையும் நீங்கள் எழுதியதையும் படிக்கும் போது உங்கள் ஊருக்கு ஒரு முறை விசிட் அடிக்க
    தோன்றுகிறது. முடிந்தால் உங்களுடன் ஒரு முறை வருகிறேன்

    எங்க ஊர் பற்றி ஒரு புத்தகமே போடணும் என நினைத்து கொண்டிருக்கிறேன். ஒரு பதிவு எழுதுவதா சிரமம்? நிச்சயம்
    எழுதிடலாம்

    ReplyDelete
  2. சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல வருமா....? பாடல் கேட்டாலே மனசு கனக்கும் நானும் எங்க ஊர் பற்றி எழுதனும் என்று பல முறை நினைப்பதுண்டு. எங்க ஊர் மிகமிக அழகான கிராமம் என்று நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் கூறிய ஊர்....கண்டிப்பாக எழுதுகிறேன்.

    ReplyDelete
  3. மாப்ள ஊர் ஞாபகப்படுத்திட்டீங்கய்யா நன்றி...பல விஷயங்கள் பசுமயா இருக்குய்யா...சீக்கிரத்தில் எழுதரேன்!

    ReplyDelete
  4. விவரங்கள் அருமை பங்காளி. நீங்கள் சொன்னது போல் என்னதான் சம்பாதித்தாலும், கிராமத்து வீட்டில் ஓய்வாய் சந்தோஷித்திருப்பதுபோல் எங்கும் இருக்க இயலாது. உங்களின் வேண்டுகோளிற்கிணங்க, எழுதுகிறேன் பங்காளி.

    பிரபாகர்...

    ReplyDelete
  5. நல்லதொரு தொடர் பதிவு...

    ஊர் நினைவு என்றும் சுகமானது தான்.
    நீங்க சொன்னவிதம் மிக ரசிக்க வைத்தது...

    பதிவுலகம் சிறிது டல் அடித்து அமைதியாக இருக்கிறது...இது போன்ற தொடர் பதிவுகள் மூலம் பதிவுலகம் மீண்டும் உற்சாக களை கட்டட்டும்...

    தொடரை தொடரபோகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    உங்களுக்கு என் பாராட்டுகள் சதீஷ்

    ReplyDelete
  6. நான் எழுத ஆரம்பித்து விட்டேன் நாளைய பதிவே அதுதான் சதீஷ்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. எனது ஒரு சில பதிவுகளில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் எங்கள் ஊர் பற்றிய நினைவு நிச்சயம் தொடர்கிறேன் அருமையான பகிர்வு அருமை .

    ReplyDelete
  9. என்னங்க சொல்றீங்க..வெங்கடேஸா தியேட்டர இடிக்க போறாங்களா..அப்ப நடராஜூக்கு வேலை போச்சா..
    சித்தாரை பத்தின எல்லாம் சொல்லிட்டீங்க..சிறப்பு.

    ReplyDelete
  10. சொந்த ஊர் நினைவு எப்போது
    நினைக்கும் போதும் தாலாட்டும் உணர்வு வரும்.
    அதுவும் ஊர் விட்டு ஊர் வந்து இருப்பவர்களுக்கு இந்த உணர்வு நிச்சயம் இருக்கும்.

    ReplyDelete
  11. சொந்த ஊர் நினைவுகள் என்றுமே இனியவை தான்....

    நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
  12. Sathish,

    I thought you are from Chithode. Now I understood. My maternal grandmother and cousins are living in Chithar. I have sent a private message in Facebook.

    ~Srini

    ReplyDelete
  13. தொடர்பதிவு என்றாலே சிதறி ஓடிவிடுவேன். அப்படி எஸ்கேப் ஆனது பலமுறை. பிறந்து, வளர்ந்தது எல்லாமே 'மை டியர் சென்னை'தான். அந்த தாய் மண்ணை பற்றி எழுத தாங்கள் எனக்கு விடுத்த அழைப்பை தட்டாமல் ஏற்கிறேன் தலைவா. நன்றி.

    ReplyDelete
  14. அண்ணா மிகவும் அருமையாக இருக்கிறது. நம் ஊரின் பெருமைகளையும் நினைவுகளையும் நினைத்து மகிழவும் அதை அனைவருக்கும் தெரியபடுதியதற்கும் நன்றி. உங்கள் பதிவு தொடரட்டும்.....

    ReplyDelete
  15. இந்த காலத்துல யாரு மூக்குத்தி குதுறாங்க..

    ReplyDelete
  16. பேரச்சொன்னாலும் ஊரச்சொல்லாதே அப்படீன்னு சொல்வாங்க. உங்க ஊரு பேர சொல்லாமலேயே சமாளிச்சுட்டீங்க?

    ReplyDelete
  17. அழைப்புக்கு நன்றி, கொஞ்சம் டைம் எடுத்துகிட்டு எழுதறேன் சங்கவி :))

    ReplyDelete
  18. ஒவ்வொருவரும் தங்கள் ஊரின் சிறப்புகளை மறப்பதே இல்லை ஆனால் சொந்த ஊரை விட்டு தொலைவில் சென்று விட்ட போதுதான் அதன் அருமை பலருக்கும் புரிகிறது. மேலும் தமது ஊரை பற்றி அவர்களால் சுவைபட சொல்ல தெரிவதில்லை.

    ReplyDelete
  19. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete
  20. உங்கள் எண்ணம் ஈடேரட்டும் வாழ்த்துக்கள் ..............வரிகள் வழியாக ஊருக்குள் அழைத்து செல்கிறீர்கள் நன்றி

    ReplyDelete
  21. உங்கள் பதிவைப் படித்தவுடன் எல்லோருக்குமே கண்டிப்பாக அவர்களின் சொந்த ஊரின் நினைவலைகளைத் தூண்டி விடும்.ஆனால் அந்தக் கால சுவடுகள் கிராமத்திலும் இப்போது இல்லாததால் இதைப் போன்ற பதிவுகள் மூலம் தான் நம் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. என் சொந்த ஊருக்கு அந்த வழியில் சென்ற போது படகுத்துறையில் சுற்றிப் பார்த்த அனுபவம் உண்டு

    ReplyDelete