Monday, March 17, 2014

நமக்கு தேர்தல் விதிமுறையை அறிய வைத்த டி.என்.சேஷன்


இந்திய துணைக்கண்டத்தில் 1990க்கு முன் தேர்தலை நடத்துவது மத்திய அரசாங்கமும், அதிகாரிகளும் தான் என மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தனர். 1990ல் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் டி.என். சேஷன். இவர் பதவி ஏற்புக்கு முன் பின் என்று இந்திய தேர்தலை பிரிக்கலாம். இதற்கு முன் இவ்வாணையம் செயல் பட்டு வந்தாலும் இவர் வரவிற்குப்பின்தான் சாமானிய மக்களும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் சுதந்திரமாக கேள்வி கேட்க இப்படி ஒரு ஆணையம் இருக்கின்றது என அனைவரும் அறிந்தனர்.
1990க்கு முன் நடந்த தேர்தலில் ஊழல் மிகுந்திருந்த நிலையில் இவரின் பதவிக்காலத்தில் கண்டிப்புமிக்க நேர்மையான செயலால் கொஞ்சம் தனிக்கப்பட்டது என்பது தான் வரலாற்று உண்மை. தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதுடன் தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றி நடக்கின்ன்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்புள்ள சவாலான பணியாகும்.
தேர்தல் அறிவித்துவிட்டால் ஒவ்வொலு ஊரிலும் ஒவ்வொரு கட்சிக்காரரும் ஒலிப்பான்களை வாகனங்களில் கட்டிக்கொண்டு 24 மணி நேரமும் கத்திக்கொண்டே இருக்கும் எப்ப வேண்டுமானாலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்கள், சுவற்றில் வரைவது, போஸ்டர் ஒட்டுவது என வரம்புக்கு மீறிய செயல்கள் அனைத்தும் கண்காணிப்பின்றி நடந்தது.
 


 டி.என். சேஷன், இந்தியத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த போது தனக்கிருந்த அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி, பல கெடுபிடிகளுக்கு மத்தியில் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்தார். வானளாவிய அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு உண்டு என்பதையும், ஆட்சியாளர்களின் கைப்பாவையாகத் தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டிய தேவையில்லை என்பதையும் டி.என். சேஷன் உணர்த்தினார்.

அதன் பின்னரே, தேர்தல் ஆணையத்திற்கு இவ்வளவு அதிகாரங்கள் இருப்பது வாக்காளர்களுக்குத் தெரிய வந்தது. பிறகு வந்த தேர்தல் ஆணையர்கள் தங்களுக்குள்ள அதிகாரங்களை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றனர்.
இதனால், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல் கட்சிகள் ஆளாகியிருப்பதுடன், விதி மீறல்கள் நடந்தால் அதற்குரிய தண்டனையை எதிர்கொள்ளவும் நேரிடுகிறது.
எனவே, தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள தேர்தல் நடத்தை விதிகளில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.
* தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விடுகின்றன.
* இதன் பிறகு, வாக்காளர்களுக்கு பயனளிக்கக் கூடிய எவ்வித சலுகை அறிவிப்புகளையும், அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ அறிவிக்கக் கூடாது.
* புதிய திட்டம் தொடர்பான அறிவிப்போ, அடிக்கல் நாட்டு விழாவோ நடத்தக் கூடாது. அது தொடர்பான வாக்குறுதிகளையும் அளிக்கக் கூடாது.
* அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் தனிப்பட்ட எந்தவொரு பணி நியமனத்தைச் செய்யக் கூடாது.
* வாக்குக்காக எந்தவொரு அரசியல் கட்சி, அல்லது வேட்பாளர்கள் ஜாதியினர், வகுப்பினரிடையே கருத்து வேறுபாடுகளை, மோதல்களை பதட்டம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது.
* வேட்பாளர் எவரும் எந்தவொரு தனி நபருடைய நிலம், கட்டிடம், மதிற்ச்சுவர் முதலியவற்றின் மீது, அதன் உரிமையாளரின் அனுமதியின்றி கொடிக் கம்பம் நடுதல், விளம்பரத் தட்டிகள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், விளம்பரம் எழுதுதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது.
* கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது.
* தேர்தல் கூட்டம் நடத்துவதற்காக ஆளுங்கட்சி எந்த வரையறைகள், நிபந்தனைகளின் பேரில் பொது இடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதே அடிப்படையில் பிற கட்சிகளும், வேட்பாளர்களும் அந்த இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* தேர்தல் நேரத்தில் பத்திரிக்கைகளிலும், பிற ஊடகங்களிலும் அரசு செலவில் அரசின் சாதனைகளை விளம்பரமாக வெளியிடுதல், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பயன்படுத்துதல் கூடாது.
* ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் நடத்துமிடத்தில், அதே நேரத்தில் மற்றொரு கட்சி ஊர்வலமோ, பேரணியோ நடத்தக் கூடாது. அதேபோல் ஒரு அரசியல் கட்சியின் விளம்பரங்களை மற்றொரு அரசியல் கட்சி அகற்றக் கூடாது.
* வாக்காளர்களுக்கு கையூட்டு, அன்பளிப்பு வழங்குதல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக் கோருதல் போன்றவை தேர்தல் விதிகளுக்கு மாறானவை.
* வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பாகவே மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறும். அதன் பின்னர் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் வேட்பாளர்கள் இறங்கக் கூடாது.
* வாக்குச் சாவடிக்கு வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வர வேட்பாளர் எவரும் ஏற்பாடுகள் செய்யக் கூடாது. 
 
தேர்தல் ஆணையம் மூலம் அதிகாரவர்க்கத்தின் பிரச்சனைகளை முறையிட முடியும் என்பது இவர் மூலமாகத்ததான் அறிந்தோம் என்றால் அது மிகையாகது.
 
இது ஒரு மீள் பதிவு.. 
 
2011 சட்டமன்ற தேர்தலின் போது எழுதியது, இப்போதும் அனைவரும் அறிய வேண்டிய விதிமுறை என்பதால் மீள்பதிவு...

Sunday, March 16, 2014

குழந்தை வளர்பில் சூதனமா இருங்க பெத்தவங்களே...

 
குழந்தை வளர்ப்பு ஒரு கலை, அவர்களை முறையாக வளர்க்க வேண்டும் என்று சொல்கின்றனர் இப்போது எல்லாம். இதற்காகப் பல மருத்துவர்களும், குழந்தை வளர்ப்பு பற்றிப் பல புத்தகங்கள், பல வலைப்பதிவுகள் என அனைத்து மொழிகளிலும் உண்டு. இதைப்பற்றி எல்லாம் நம்ம வீட்டுப் பாட்டியிடம் சொன்னால் போடா போக்கத்தவனே, உன்னை எல்லாம் அப்படியா வளர்த்தோம், உனக்குத் துணியே போட மாட்டோம், அம்மணமா சுத்திகிட்டு இருந்த பய இன்னிக்கு என்ன பேச்சுப் பேசறாம் பாரு என்கின்றனர், எங்க வீட்டுப்பாட்டிகள்.

குழந்தைகள் வளர வளர பல பிரச்சனைகள் வரும் அதை நாம் அவர்களுக்குப் பக்குவமாக எடுத்துச்சொல்லவேண்டும், நம் குழந்தைகளுக்கு உண்டான தகுதி என்ன வென்று நாம் அறிந்து அவர்களை அதன் படி நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் இது தான் இப்போதைய அட்வைசாக உள்ளது.

எனது பால்ய நண்பன், நான் எப்போது ஊருக்கு சென்றாலும் ஆட்டம் பாட்டம் எல்லாம் இவனோடு தான், ரொம்பக் கஷ்டப்பட்டு இன்று சுயதொழிலில் ஈடுபட்டு நல்ல முறையில் உள்ளவன். இவருடைய குழந்தை சமீபத்தில் அதிகத் தலை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது, நடக்க இயலவில்லை என ஒவ்வொரு பிரச்சனையாக அடுக்கி அழ, எப்போதும் தொழிலையே பார்த்துக் கொண்டு இருந்தவர் பக்கத்தில் உள்ள டாக்டரிடம் காண்பித்து அவர் கொடுக்கும் மறுந்தை சாப்பிட்டாலும் இதே பிரச்சனை.

அம்மா தலை வலிக்குதும்மா, அம்மா தலை இழுத்துப் பிடிக்குதம்மா, அம்மா வயிறு எரியுதும்மா, அப்பா முட்டி காலையே ஊனமுடியவில்லை, நடந்தால் கால் வலி அதிகமாக உள்ளது, படுத்த உடம்பெல்லாம் வலியாக இருக்கிறது என்று குழந்தை அழுது கொண்டே இருந்தால் மருத்தவரிடம் தான் அழைத்துப் போவோம், அவரும் குழந்தைக்கு ஒன்றும் இல்லை என்றால், அப்போது பெற்றோர் படும் பாடுதான் அதிகம்.
 
இந்தக் குழந்தைக்கு அனைத்து டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்து விட்டார்கள் ஆனால் எங்கும் எந்தப் பிரச்சனையுமில்லை, அடுத்த என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவரை சந்தித்தோம். அவரும் அனைத்து டெஸ்ட்டையும் பார்த்து விட்டு, இரண்டு நாள்க்குப் பின் சொன்னார்.

குழந்தைக்கு எந்தப் பிரச்சனையுமில்லை அவளின் மனது தான் பிரச்சனை, எதிலும் நாம் தான் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்று பெற்றோர் சிறிய வயதில் அந்தக் குழந்தையை மற்றக் குழந்தைகளுடன் இணைத்து பேசியதால் வந்த வினை, முதல் இடம் பெற வில்லையா, ஏன், எப்படி என்று யோசித்து யோசித்துத் தலைவலி அதிகமாகிறது கூடவே அனைத்து வலிகளும்.

குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்ன விளையாடவேண்டும் என்று குழந்தை தான் முடிவெடுக்கவேண்டும், நாம் முடிவெடுக்கக் கூடாது, நமது கட்டாயத்தை ஆசையை, எதிர்பார்ப்பைப் குழந்தை மேல் திணிக்கக்கூடாது என்றார். இன்னும் 2 நாட்கள் சில கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைக்கிறேன் என்றார் மருத்துவர்.

மருத்துவர் சொன்னது நிச்சயம் 100 சதவீத உண்மை அப்பாவுக்கு டாக்டர் படிக்கவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் சூழ்நிலையால் படிக்க இயலாது அதற்காக் குழந்தையைக் கட்டாயப்படுத்துகின்றனர் இன்றைய பெற்றோர் என்றால் நிச்சயம் மறுக்க இயலாது. இதற்காகவே நிறைய பணங்களைப் புடுங்கிக்கொண்டு பிராய்லர் கோழிபோலப் படிக்க வைக்க நிறையக் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

பெற்றோர்களில் குழந்தையிடம் பேசும் போதும், அவர்களின் ஆசையைக் கேட்கும் போதும் அவர்கள் வழியில் சென்று தான் வளர்த்தவேண்டும், கட்டாயப்படுத்தப் படுத்த குழந்தைகள் மனதால் பாதிக்கப்படும் நாம் தான் அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்...

Thursday, February 6, 2014

பொம்பளப் பேயும் நண்பர்களும்...


தூக்கத்தில் உச்சாப் போவதற்காக, இரவு விழித்த போது தலையில் ' தீ ' உடன் ஆத்துப்பள்ளத்தில் ஓர் உருவம் சென்று கொண்டு இருந்தது. பேயைப்பற்றிக் கேள்விப்பட்ட நான், அன்று தான் பார்த்தேன், பேய் இருப்பது உண்மைதான் என அப்போது தான் அறிந்தேன். அடுத்த இரண்டு நாட்களாகக் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையானேன்.

எங்க ஊரில் இரவு டியூசனுக்குச் சென்றால், காலையில் எழுந்துக் கொஞ்ச நேரம் படித்துவிட்டு வீட்டுக்குக் காலை 6.30 மணிக்குத்தான் வருவோம். வந்த உடன் பள்ளிக்குச் செல்ல நேரம் சரியாக இருக்கும். டியூசனுக்குச் செல்வது என்றால் எல்லோருக்கும் அலாதிப் பிரியம். ஆம், எங்க ஊர் ஓப்பன் தியேட்டரில் போடும் படங்களை அன்று இரண்டாவது ஆட்டம் ( செகன்ட் ஷோவை நாங்க இப்படித்தான் சொல்வோம்) படத்துக்குச் சென்று வருவது வாடிக்கை. இதற்காகவே எப்பப் பெரிய பையன் ஆகி 9ம் க்ளாஸ் செல்வோம் என்று காத்திருப்போம்.

டியூசனில், இரவு தங்கி இருக்கும் போது தான் உச்சாவுக்கு, எழுந்த நான் பேயைக்கண்டேன். காய்ச்சல் நன்றாகிப் பேயைப்பார்த்தேன் என்று விஜியிடம் சொன்னேன். அவன் கேவலமாகச் சிரிக்கிறான். குமாரிடம் சொன்னேன் அவனும் அதே, சுந்தர் தான் கொஞ்சம் பயந்து உண்மைதானே என்றான். ஆம் என்று முழுக் கதையையும் சொன்னதும், அன்று இரவு அனைவரும் தூங்காமல் பேயை எதிர்பார்த்துக் காத்திருந்தோம் மொட்டை மாடியில். வழக்கம் போல அன்று பேய் வரும் போது நானும் சுந்தரும் விழித்திருந்தோம்.

தீ எரிந்து கொண்டு இருக்கிறது, அந்தத் தீ நடந்து வருகிறது, நாங்கள் இருந்த இடத்தில் இருந்து காணும் பொழுதுத் தீ சிறிதுத் தூரம் போய் நின்றது. அப்போது தான் சுந்தர் ஆமாண்டாப் பேய் என்றும், உடனே விஜியையும், குமாரையும் எழுப்பியதில், தூக்கக்கலக்கத்தில் இருந்த அவர்கள் பேயைப்பார்த்து நடுங்கினர், கூடவே நாங்களும். சரி பேய் நாளை வருகிறதா? என்று அடுத்த நாள், காத்திருந்துப் பார்த்தோம். அடுத்த நாளும் வந்தது.

இப்போது தான் நான் சொன்னது உண்மை என்று, அனைவரும் நம்பினர். என்னசெய்யலாம், என்று கிணற்று மேட்டில் அனைவரும் ஆலோசனையில் ஈடுபட்டப் போது பேயை ச்சந்திக்கலாம் என்று முடிவுசெய்தோம். இதற்குத் தைரியமான ஆள் வேண்டும், என்று முடிவெடுத்த போது, பரந்தாமனை அழைக்கலாம் என்று முடிவெடுத்து, அவனை ஆள் விட்டுக் கூட்டி வரச்சொன்னோம். அவன் பேய்யைப் பார்த்தோம் என்றதும், பயங்கரமாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

அன்று இரவு டியூசனில் அவனைத் தங்க வைத்து இரவில் பேய் தீயைக் காண்பித்ததும், தைரியசாலியான அவனும் நடுங்க ஆரம்பித்தான். எல்லோரும் மாரியம்மன் கோயிலில் பூ போட்டுக் கேட்டோம், பேயைச் சந்திக்கலாமா? வேண்டாமா ? என்று, அம்மன் " பூ " சந்தியுங்கள் என்று வந்தது.

பேயை சந்திக்கச் சரியான நாள் பார்த்தோம், சனிக்கிழமை என்று சொன்னார்கள். அதனால் ஒரு சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து அன்று பேய்க்கு "கருப்பு" என்றால் பயமாம், அதனால் எல்லோரும் கையில் "கருப்புக் கயிர்" கட்டிக்கொண்டோம், "செருப்பு" என்றால் பயம் என்றார்கள் எல்லோரும் செருப்பு போட்டுக்கொண்டோம், "சீவக்கட்டையில் அடித்தால் ஓடிவிடுமாம் 2 சீவக்கட்டை எடுத்துக்கொண்டு பேயை சந்திக்க தயாரானோம்". இவ்வளவு பயத்திலும் விஜிக்குமட்டும் ஒரு கிளுகிளுப்பு பொம்பளப் பேயாக இருந்தா, நான் ஒரு தடவை கட்டிப்பிடிச்சிக்கிறேனடா? என்று எங்களை சூடாக்கினான்.

பேயைச் சந்திக்க ஆத்துப்பள்ளத்துக்குச் செல்வதற்கு, அன்று மாலையில் இருந்தே, எந்ந வழியில் போவது, பேய் வந்தால் எப்படி ஒடுவது, என்று எல்லா இடங்களையும் ஆய்வு செய்தோம். அன்று இரவு டியூசன் முடிஞ்சதும் நாங்கள் 5 பேரூம் தயாராக இருந்தோம், மணி 12 ஆகப்போகுது பேய்யைக்காணம், ஆனால் எங்கள் பயம் மட்டும் குறையவே இல்லை. பேய்க்கு கால் இருக்காது, என்றும் அது வெனீர் நிறத்தில் இருக்கும் என்றும் , குலை நடுங்க முழித்திருந்தோம்.

எதிர்பாத்தப்படி பேய் வந்தது. பேய் நடந்து வர வர நாங்களும், மொட்டை மாடியில் இருந்து கீழே வந்து, எங்கள் ஆயுதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஆத்துப்பள்ளத்தை நோக்கி நடந்தோம். பேய் அக்கறையில் போக நாங்க இக்கரையில் நின்றோம். பேய்யை நாங்கள் புல் மறைவில் இருந்து யார்?, முதலில் பார்ப்பது என்று பயந்து கொண்டு இருந்தோம்.

பரந்தாமன் தான் முதலில் பார்த்தான், பார்த்தவன் பேய் அறைந்தது போன்று நின்றான், எங்களுக்கு பயம் தொற்ற. அவன் எங்களை எட்டி உதைத்தான், அடப்பன்னிங்களே. அது பேய்யல்லடா மீன்காரன் சண்முகம் என்றான். எட்டிப்பாத்ததை பார்த்த சண்முகம் என்னங்கடா மீன் வேண்டுமா?  என்ற கேட்க எங்களுக்கு சிரிப்பு கூடவே. பேயைப்பார்க்காத ஏமாற்றம், விஜிக்கோ கட்டிப்பிடிக்க இயலவில்லை என்று வருத்தம்.

அதன் பின் சண்முகத்திடம் பேசும் போது. தான் தெரிந்தது இரவு ஆத்து மேட்டில் கட்டிய வலையில் மீன் இருக்கிறதா? என்று பார்ப்பதற்காக. தீப்பந்தம் பிடித்துக்கொண்டு வருவேன், மீன் இருந்தால் எடுத்து இந்த வலையில் போட்டு விட்டு மீண்டும் காலை வந்து மார்க்கெட் செல்வேன் என்றார். எங்களுக்கோ பேயை பார்க்க இயலாத வருத்தம்...

Tuesday, February 4, 2014

சோத்துக்கடை - டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை..


கோவையில் உள்ள பழமையான ஊர்களில் ஒன்று பேரூர். கோவையைச்சுற்றிப் பார்ப்பவர்கள் பட்டியலில் நிச்சயம் பேரூர் இருக்கும். இந்த ஊரின் எல்லையிலேயே புரதான நகரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் பலகையோடு தான் ஆரம்பிக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் ஆலயம். பேரூர் சாந்திலிங்க அடிகளாரின் மடமும், தமிழ்கல்லூரியும் இங்கு அமைந்துள்ளது இந்த ஊரின் சிறப்பு.

சுற்றுலாத்தளம் அருகில் நல்ல உணவு விடுதி கிடைப்பது அரிது என்பதும் பேரூர்க்கும் பொறுந்தும். நிச்சயம் காலை வேலை தரிசனத்துக்கு வருபவர்கள் நல்ல உணவகம் இல்லை என்று வருத்தப்படுவர். ஆனால் மாலை வேளையில் அந்த பிரச்சனை இல்லை, கோயிலின் பின்பக்கம், சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது டோபாஸ் ஐயர் மெஸ். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடை இயங்குகிறது.

மாலை 4 மணியில் இருந்து கடை இயங்க ஆரம்பிக்கிறது, கோவையில் கும்பகோணம் டிகிரி காபி ஒரிஜினலாக குடிக்க விரும்புவர்கள் நிச்சயம் இங்கு வந்து குடிக்கலாம், அந்த அளவிற்கு சுவையான காபி இங்கு கிடைக்கும். மிக்சர், முறுக்கு போன்ற பலகாரங்களும் ஐயர் வீட்டு முறைப்படியும், அவர்களின் வீட்டு சுவையிலும் இருக்கும். 7 மணிக்கு மேல் சென்றால் முறுக்கு, மிச்சர் கிடைக்காது. அந்த அளவிற்கு பிரபலம்.

மாலை 6 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கிறது சிற்றுண்டி, இங்கு சாப்பிட 7 பேர் அமர்ந்து சாப்பிடும் படியான இடம் மட்டுமே அமைந்திருக்கும், பார்சல் கட்டுவதற்கு மட்டும் 3 பேர் இருக்கின்றனர். இங்கு வந்து ஆர்டர் செய்பவர்கள் மாமி எனக்கு 4 இட்லி, 2 புரோட்டா என்று ஆர்டர் சொல்லிக்கொண்டே இருப்பர். மாமியும் பொறுமையாக அனைவருக்கும், பொட்டலம் கட்டிக்கொடுத்துக் கொண்டு இருப்பார். 9 மணிக்கு மேல் சென்றால் தோசை மட்டுமே கிடைக்கும்.

மாலை வேளைகளில் இட்லி, சேவை, பிரியாணி, உப்புமா, புரோட்டா, தோசை, ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட், நெய் ரோஸ்ட், ராவா தோசை என ஆர்டர்கள் பறக்கும். இங்கு கொடுக்கப்படும் சாம்பாரின் சுவையே சுவைதான். தேங்காய் சட்டினி, காரச்சட்டினி, வெஜ் குருமா என அனைத்தும் வீட்டில் சாப்பிடுவது போலவே சுவையாக இருக்கும்.

நான் கடந்த 4 வருடமாக இந்த கடைக்கு வாடிக்கையார், அதாவது இந்த ஏரியா குடி வந்ததில் இருந்து வாரம் இரு முறை இங்கு பார்சல் வாங்கிடுவேன். இட்லிக்கும் இந்த ஐயர் மெஸ் சாம்பாருக்கும் அப்படியொரு சுவை. நான் இட்லியை இந்த சாம்பாரில் மூழ்கடிச்சு கரைத்து சுவைப்பேன் அப்படி ஒரு சுவை இந்த சாம்பார். எப்பவும் பார்சல் வாங்கிவிட்டு சாம்பார் பாக்கெட் எக்ஸ்ட்ராவாக கேட்டு வாங்காமல் வருவதில்லை இன்று வரை.

ஒரு நாள் வீட்டில் எல்லாரும் ஊருக்கு சென்றாதால் அங்கு சாப்பிடச் சென்றேன். இன்று ஆணியன் ரோஸ்ட் ஸ்பெசல் என்றனர், சரி என்று ஒரு ரோஸ்ட்டை ஆர்டர் செய்தேன், கையில் தட்டோடு சாம்பாரை வலிச்சு நக்கிக்கொண்டே காத்திருந்தேன். முக்கோண வடிவில் வந்த ஆணியன் ரோஸ்ட்டை பிச்சு அவர்கள் கடை சாம்பாரில் முக்கி வாயில் துணித்தேன் அவ்வ்வ்... அப்படியே வழுக்கியது தோசை. அளவான உப்பில், புளிக்காத மாவில் நன்கு எண்ணெய் ஊற்றப்பட்ட ஆணியன் தோசை என்னோடு சண்டையிடாமல் வேகமாக உள் இறங்கியது. ஆணியன், கேரட் துறுவல், முந்திரி, திராட்சை போட்டு சுட்டு இருந்தனர். அன்றில் இருந்து இன்று வரை அந்த கடை ஆணியன் ரோஸ்ட்டுக்கு அடிமை நான்.

நெய் ரோஸ்ட், ரவா ரோஸ்ட் அவ்வப்போது சாப்பிடுவேன், புரோட்டாவும் குருமாவும் என் மகனின் பேவரைட். இங்கு பார்சலுக்கு வரும் கூட்டத்தை பார்த்தாலே புரியும் இந்த கடையின் சுவைபற்றி. இந்த ஐயர் மெஸ்  சுகாதாரமாகவும் இருக்கும்.

இந்த மெஸ்சில் விலைப்பட்டியல் நிச்சயம் அதிகமாக இல்லை. வயிறு நிறைய சாப்பிட்டாலும் 60 ரூபாயை தாண்டாது அந்த அளவிற்கு குறைவான விலை, தரமான உணவு நிச்சயம் நம்பி சாப்பிடலாம். எங்கு சாப்பிட்டாலும் அடுத்த நாள் காலை பிரச்னை இன்றி இருக்கவேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருப்போம். நம்பி சாப்பிடலாம் வயிற்றை எந்த பதமும் பார்க்காது என்பது உறுதி.

பெயர்: டோபாஸ் ஐயர் டிபன் சென்டர்

இடம்: பேரூரில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் வலது பக்கம்.

விலை: 2 இட்லி 10, ஆணியன் ரோஸ்ட் 30, புரோட்டா 10

Monday, February 3, 2014

சொம்படிக்கும் சுயபுராணம்...


எதை, எதையோ எழுதினாலும் அதில் கருத்து இருக்கிறதா? இல்லையா? என்று பார்ப்பதில்லை. நமக்குப் பிடிச்சிருக்கு எழுதுகிறோம்! படிச்சாப் படி, இல்லை என்றால் விடுங்க, இது என் ஏரியா, அப்படித்தான் எழுதுவேன் என்று இருந்த எனக்குப் பயன் உள்ளதாக எழுத வேண்டும், எழுத்துப்பிழை, சந்திப்பிழை எல்லாம் எழுதிப் பழக வேண்டும் என்ற எண்ணம் இப்பபொழுதுதான் வந்திருக்கு. நான் தினமும் ஒரு பதிவு எழுதுவது எழுத்தாளன் ஆவதற்கு அல்ல. என் தமிழை முறையாக எழுதிப் பழகுவதற்கு என்று தான் சொல்வேன். எப்ப இருந்து படிக்க ஆரம்பிச்சேன், எப்ப இருந்து எழுத ஆரம்பிச்சேன்னு ஒரு சுயபுரணம்.

சிறுவயதில் இருந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் எனக்கு உண்டு. முதலில் வாரம் தவறாமல் படிப்பது காமிக்ஸ் புத்தகங்கள் தான். அதுவும் மாயாவிக் கதை என்றால் மிகப் பிடிக்கும், அப்போதுதான் கப்பல் கொள்ளை, கடல் கொள்ளை, செவ்விந்தியர்களைப் பற்றி எல்லாம் அறிய முடிந்தது. தினமும் காலையில் தினத்தந்திப் படிக்கும் பழக்கம் நான் படிச்சுப் பழகிய காலத்தில் இருந்தே உண்டு. அப்போது எல்லாம் வெள்ளிமலர்ப் பேப்பரைப்பார்த்ததும் ச்சீ அசிங்கம் என்று சொல்லும் அளவிற்கு நல்லவன்.

பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லாக் கதைகள் எனக் கோயிலுக்குப் போகும் போதெல்லாம் அங்கிருக்கும் புத்தகக் கடையில் அழுது அடம் பிடிச்சு வாங்குவேன். வீட்டிற்கு வந்ததும் ஒரே மூச்சில் படிச்சி முடிச்ச உடன் தான் அடுத்த வேலை.

9ம் வகுப்பு படிக்கும் போது ஹாஸ்டல் செல்லப் பவானியில் இருந்து கோபி செல்லும் 21 நெம்பர்ப் பேருந்தில் 1 மணி நேரத்தில் ஆனந்த விகடன், குமுதம், ஸ்பேர்ட்ஸ் ஸ்டார் போன்ற வார, மாத இதழ்களைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் பின் பேருந்துப் பயணம் என்றாலே என்னுடன் புத்தகங்களும் பயணிக்கும் எனக்குத் தெரிந்து 17 வயதில் இருந்து நக்கீரன், ஜீவி, நெற்றிக்கண், குமுதம் ரிப்போர்ட்டர்ப் சில வருடங்களுக்கு முன் வந்த தமிழக அரசியல் போன்ற அரசியல் பத்திரிக்கைகளை வாரம் தவறாமல் இன்று வரை படித்து வருகிறேன்.

குமுதத்தின் ஒரு பக்க சிறுகதை, விகடனின் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை என அப்படித்தான் சிறுகதைகள் அறிமுகம். எனக்கு தெரிந்த நாவல் எல்லாம் ராஜேஸ்குமாரின் பாக்கெட் நாவல்கள் தான். அப்படி இப்படி என்று பல புத்தகத்தை படித்து எழுத்தார்வத்தை வளர்த்து கொண்ட நான் சில சிறுகதைகள், துணுக்குகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பினேன் கன்னித்தீவு போல இன்று வரை படிக்கிறேன் ஒன்னும் வரவில்லை. இலவசமாக கிடைத்த இணையத்தில் இலவசமாக பலவற்றை பதிந்தாச்சு, திரும்பி பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது அத்தனை பிழைகள்.

இந்த சுயபுராணமே இதுக்குத்தாங்க நன்றாக எழுத வேண்டும் முக்கியமாக பிழைகள் இன்றி எழுதனம். ஒரு முறை ஆங்கிலம் கற்க ஒரு பேராசிரியரிடம் போய் கற்றுக்கொண்டேன் அப்போது அவர் சொன்னார் உனக்கு ஆங்கிலம் வரவில்லை என்று சொல்லதே!! "உனக்கு சரியாக தமிழ் தெரியவில்லை என்று காயடித்துவிட்டார்". உனக்கு மட்டுமல்ல இந்த வகுப்பில் உள்ள அனைவருக்கும் என்று நங்குன்னு ஒரு போடு போட்டார் எல்லோருக்கும்...

மக்களே தினமும் இப்போது பதிவெழுத ஆரம்பித்தாற்கு காரணம் நான் தமிழை ஒழுங்காக எழுதி பழகத்தான். இதற்கு சுயபுராணம் என்று பெயர் வைத்திருந்தால் சரி அது எதுக்குடா சொம்படிக்கும் சுயபுராணம் என்று நீங்க கேட்பது  புரிகிறது. ஒரு விளம்பரம்....