Monday, March 17, 2014

நமக்கு தேர்தல் விதிமுறையை அறிய வைத்த டி.என்.சேஷன்


இந்திய துணைக்கண்டத்தில் 1990க்கு முன் தேர்தலை நடத்துவது மத்திய அரசாங்கமும், அதிகாரிகளும் தான் என மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தனர். 1990ல் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் டி.என். சேஷன். இவர் பதவி ஏற்புக்கு முன் பின் என்று இந்திய தேர்தலை பிரிக்கலாம். இதற்கு முன் இவ்வாணையம் செயல் பட்டு வந்தாலும் இவர் வரவிற்குப்பின்தான் சாமானிய மக்களும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் சுதந்திரமாக கேள்வி கேட்க இப்படி ஒரு ஆணையம் இருக்கின்றது என அனைவரும் அறிந்தனர்.
1990க்கு முன் நடந்த தேர்தலில் ஊழல் மிகுந்திருந்த நிலையில் இவரின் பதவிக்காலத்தில் கண்டிப்புமிக்க நேர்மையான செயலால் கொஞ்சம் தனிக்கப்பட்டது என்பது தான் வரலாற்று உண்மை. தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதுடன் தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றி நடக்கின்ன்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்புள்ள சவாலான பணியாகும்.
தேர்தல் அறிவித்துவிட்டால் ஒவ்வொலு ஊரிலும் ஒவ்வொரு கட்சிக்காரரும் ஒலிப்பான்களை வாகனங்களில் கட்டிக்கொண்டு 24 மணி நேரமும் கத்திக்கொண்டே இருக்கும் எப்ப வேண்டுமானாலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்கள், சுவற்றில் வரைவது, போஸ்டர் ஒட்டுவது என வரம்புக்கு மீறிய செயல்கள் அனைத்தும் கண்காணிப்பின்றி நடந்தது.
 


 டி.என். சேஷன், இந்தியத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த போது தனக்கிருந்த அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி, பல கெடுபிடிகளுக்கு மத்தியில் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்தார். வானளாவிய அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு உண்டு என்பதையும், ஆட்சியாளர்களின் கைப்பாவையாகத் தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டிய தேவையில்லை என்பதையும் டி.என். சேஷன் உணர்த்தினார்.

அதன் பின்னரே, தேர்தல் ஆணையத்திற்கு இவ்வளவு அதிகாரங்கள் இருப்பது வாக்காளர்களுக்குத் தெரிய வந்தது. பிறகு வந்த தேர்தல் ஆணையர்கள் தங்களுக்குள்ள அதிகாரங்களை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றனர்.
இதனால், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல் கட்சிகள் ஆளாகியிருப்பதுடன், விதி மீறல்கள் நடந்தால் அதற்குரிய தண்டனையை எதிர்கொள்ளவும் நேரிடுகிறது.
எனவே, தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள தேர்தல் நடத்தை விதிகளில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.
* தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விடுகின்றன.
* இதன் பிறகு, வாக்காளர்களுக்கு பயனளிக்கக் கூடிய எவ்வித சலுகை அறிவிப்புகளையும், அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ அறிவிக்கக் கூடாது.
* புதிய திட்டம் தொடர்பான அறிவிப்போ, அடிக்கல் நாட்டு விழாவோ நடத்தக் கூடாது. அது தொடர்பான வாக்குறுதிகளையும் அளிக்கக் கூடாது.
* அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் தனிப்பட்ட எந்தவொரு பணி நியமனத்தைச் செய்யக் கூடாது.
* வாக்குக்காக எந்தவொரு அரசியல் கட்சி, அல்லது வேட்பாளர்கள் ஜாதியினர், வகுப்பினரிடையே கருத்து வேறுபாடுகளை, மோதல்களை பதட்டம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது.
* வேட்பாளர் எவரும் எந்தவொரு தனி நபருடைய நிலம், கட்டிடம், மதிற்ச்சுவர் முதலியவற்றின் மீது, அதன் உரிமையாளரின் அனுமதியின்றி கொடிக் கம்பம் நடுதல், விளம்பரத் தட்டிகள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், விளம்பரம் எழுதுதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது.
* கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது.
* தேர்தல் கூட்டம் நடத்துவதற்காக ஆளுங்கட்சி எந்த வரையறைகள், நிபந்தனைகளின் பேரில் பொது இடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதே அடிப்படையில் பிற கட்சிகளும், வேட்பாளர்களும் அந்த இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* தேர்தல் நேரத்தில் பத்திரிக்கைகளிலும், பிற ஊடகங்களிலும் அரசு செலவில் அரசின் சாதனைகளை விளம்பரமாக வெளியிடுதல், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பயன்படுத்துதல் கூடாது.
* ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் நடத்துமிடத்தில், அதே நேரத்தில் மற்றொரு கட்சி ஊர்வலமோ, பேரணியோ நடத்தக் கூடாது. அதேபோல் ஒரு அரசியல் கட்சியின் விளம்பரங்களை மற்றொரு அரசியல் கட்சி அகற்றக் கூடாது.
* வாக்காளர்களுக்கு கையூட்டு, அன்பளிப்பு வழங்குதல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக் கோருதல் போன்றவை தேர்தல் விதிகளுக்கு மாறானவை.
* வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பாகவே மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறும். அதன் பின்னர் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் வேட்பாளர்கள் இறங்கக் கூடாது.
* வாக்குச் சாவடிக்கு வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வர வேட்பாளர் எவரும் ஏற்பாடுகள் செய்யக் கூடாது. 
 
தேர்தல் ஆணையம் மூலம் அதிகாரவர்க்கத்தின் பிரச்சனைகளை முறையிட முடியும் என்பது இவர் மூலமாகத்ததான் அறிந்தோம் என்றால் அது மிகையாகது.
 
இது ஒரு மீள் பதிவு.. 
 
2011 சட்டமன்ற தேர்தலின் போது எழுதியது, இப்போதும் அனைவரும் அறிய வேண்டிய விதிமுறை என்பதால் மீள்பதிவு...

3 comments:

  1. இது நடந்ததா ??? இனியும் நடக்குமா ????

    ReplyDelete
  2. அறிந்து கொண்டேன்! நன்றி!

    ReplyDelete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

    வலைச்சர தள இணைப்பு : வலையுலக நண்பர்களும்.... பதிவுகளும் !

    ReplyDelete