Sunday, January 11, 2015

ஆண்மை வீரியத்திற்கு கருஞ்சதை நாட்டுகோழி சாப்பிடுங்க...

நாட்டுக்கோழி என்றாலே இங்கு பல பேருக்கு நாவில் எச்சில் ஊறும், அந்த அளவிற்கு சுவையானது. இன்று பிராய்லர் கோழியின் வருகையால் பலர் நாட்டுக்கோழியை சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி இருக்கும். இருந்தாலும் என்னை போல் நாட்டுக்கோழியை தேடி தேடி உண்ணும் நண்பர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கின்றனர்.

சமீபத்தில் நண்பர்களோடு ஓர் புத்துணர்வு முகாமிற்கு சென்றிருந்தோம், இந்த முறை கிராமத்தில் கிடைக்கும் நாட்டுக்கோழி மட்டுமே வாங்கி செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்ததால், நண்பனின் அப்பாவிடம் சொல்லி இருந்தோம். எங்கள் பக்கம் காவிரி கரையில் சுற்றி திரியும் கோழிகளுக்கு கொஞ்சம் மவுசு அதிகம்.

காவிரியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் டெல்டா மாவட்டங்களை அள்ளி அணைத்து அவர்களுக்கு வாரி கொடுக்கிறாள் காவிரி, ஆனா எங்களைப்போன்ற ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட மக்களை எல்லாம் அள்ளி அணைக்க மனமின்றி தள்ளிவிட்டு ஒரசியபடியே செல்கிறாள். எங்களை உரசி செல்லும் இந்த காவிரி கரையில் காவிரியின் நீரை குடித்து வளரும் கோழிகளின் சுவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நண்பனின் தந்தை எங்களுக்காக ஓரு கோழி 3 கிலோ எடை வரும் அளவிற்கு, காவிரி கரையில் சுற்றி திரிந்த 7 கோழிகளை வாங்கி கொடுத்திருந்தார்.

அந்த கோழிகளில் 3 கோழிகள் கருஞ்சதை நாட்டுக்கோழி, நாட்டுக்கோழிகளில் பெருஞ்சாதி, சிறுஞ்சாதி , கருஞ்சதை, கட்டுசேவல் என பல வகைகள் உண்டு. நம் கிராமங்களில் அதிகம் கிடைப்பது பெருஞ்சாதி வகையிலான நாட்டுகோழிகள் தான். அதுவும் 1 வருடம் அல்லது 2 வருடம் நன்கு வளர்ந்த கோழிகளை சாப்பிடுவதில் தான் நிறைய சத்துக்கள் இருக்கும் என்று சொல்வார்கள்.

இந்த கருஞ்சதை நாட்டுக்கோழி நான் சாப்பிட்டதே இல்லை, கோழியின் இறகுகள் கருப்பாக இருக்கும், கால்கள் நன்கு கருப்பாகவும், கறியின் சதையும் மிதமான கருப்பாக இருக்கும், நான் பல முறை இந்த கோழிகளை பாத்திருந்தாலும் கருப்பா இருந்தால் நோய் தாக்கி இருக்குமோ என்று அஞ்சி இத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தேன்.

சமீபத்தில் கோழி புடிக்க ஊர் பக்கம் சென்றிருந்த போது ஒரு பெருசை சந்தித்தேன் அவர் தான் சொன்னார் நாட்டுக்கோழி சாப்பிட்டால் கருஞ்சதை நாட்டுகோழியாக சாப்பிடனும் அப்பதான் உடம்புக்கும் மனசுக்கும் தெம்பு என்றார். அன்றில் இருந்து இந்த கோழி மேல் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் அந்த பெருசு சொல்லும் போது இதயத்திற்கு மிக நல்லதாம், சளி பிடிச்சிருக்கும் போது சாப்பிடும் கோழிச்சாறு இந்த கருஞ்சதை நாட்டுக்கோழியின் சாறாக இருந்தால் சளியும் காணமல் போய்விடுமாம்.

இதய நோய் இருப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாமாம் இந்த கோழியை, அதுவும் நன்கு வளர்க்கபட்ட இக்கோழிகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்களுக்கு எதிப்பு சக்தி உடலில் மிக அதிமாக வருமாம், குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி வர வர அவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருக்காதாம்.

மேலும் அந்த பெரியவர் சொல்லும் போது தம்பி அந்த காலங்களில் புதிதாக திருமணம் ஆனவர்களை விருந்துக்கு அழைப்பாங்க கேள்விபட்டு இருக்கியா என்றார், ஆமாங்க இப்பவும் அந்த சம்பிரதாயம் இருக்கு என்றேன். தம்பி இப்ப எல்லாம் ஒரு வேளை உணவு தான் விருந்துக்கு செல்கின்றனர். அப்போது எல்லாம் கோழி அடிச்சு 2 நாளைக்கு விருந்து போடுவோம், அதுவும் கருஞ்சதை நாட்டுக்கோழியை தேடிப்பிடிச்சு சமைச்சு போடுவோம். இக்கோழியின் கறி ஆண்மை வீரியத்திற்கு மிக அற்புதமான மருந்து என்றார். அதனால தான் கண்ணாலம் ஆனவர்களுக்கு விருந்து என்ற பெயரில் இக்கோழியை தேடி தேடி சமைச்சு போடுவாங்க என்றார்.


அப்போது எல்லாம் குழந்தை பிறக்காதவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவுதான்.. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை மிக அதிகம் தானே என்றார். ஆஹா பெருசு மிக தெளிவாத்தான் பேசுது என்று நினைத்துக்கொண்டு, தங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்றேன் எனக்கு பொட்ட புள்ளைங்க 4, ஆம்பள பசங்க 3 என்றார். அப்ப நிறைய விருந்துக்கு போயிருப்பீங்க போல என்றதும் அவர் சிரித்த சிரிப்பு மிக மகிழ்ச்சியாக இருந்தது.


இந்த கருஞ்சதை கோழியின் கதை கேட்டதில் இருந்து தேடி தேடி புடிச்சதில் இந்த முறை 3 கோழி மட்டுமே கிடைத்தது. ஆனாலும் ரசித்து ருசித்து மிக்க மகிழ்ச்சியாக சாப்பிட்டோம்... 

நீங்களும் கிடைச்சா சாப்பிடுங்க மக்களே 3 கிலோ எடையுள்ள ஒரு கோழி 1500 ரூபாய்க்கு வாங்கினோம்.....

Sunday, January 4, 2015

அஞ்சறைப்பெட்டி 2015

வணக்கம் என் இனிய வலைப்பூ நண்பர்களுக்கு...

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

வருடா வருடம் நிறைய எழுதவேண்டும் என்று தான், அந்த வருடத்தின் முதல் பதிவில் எழுதும் போது நிச்சயம் இடம் பெறும் வாசகமாக இருக்கும் ஆனால் அந்த வருடம் செல்லச்செல்ல அது நிச்சயம் நிறைவேறுவதில்லை, இது எனக்கு மட்டமல்ல நம் நிறைய பேருக்கு இப்படித்தான் போகிறது. அதுவும் முகப்புத்தகம் வந்ததில் இருந்து நிறைய எழுதவும் இயலவில்லை ஆனாலும் நிறைய நேரம் இணையத்தில் இருக்கமுடிகிறது. இது ஏன்என்று கண்டுபிடிக்கவெல்லாம் தேவையில்லை நமக்குத்தான் தெரியுமே வலைவதில்லை என்று. பார்ப்போம் இந்த வருடமாவது எழுதமுடிகிறதா என்று..

********************

இந்த வருட ஆரம்பமே எனக்கு பட்டையகிளப்புகிறது. அதாவது செலவில்லாத ஆண்டாக அமைந்ததில் சந்தோசமே. 30ம் தேதியில் இருந்து பல்வலி மருத்துவர் பல்லை புடுங்கித்தான் ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். இரண்டு நாள் போகட்டும் என்று இருக்கும் போது வலி அதிகமாக எதுவும் சாப்பிடஇயலவில்லை. எப்போதும் புத்தாண்டு பிறக்கும் போது பார்ட்டி, ஒட்டல் என செலவு கையை கட்டும், இந்த முறை செலவு மிச்சம், பல்லை புடுஙகியதால் அடுத்தநாள் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் என எங்கேயும் ஊர் சுத்தாததால் எனக்கு இந்த வருட ஆரம்பம் செலவு இல்லாமல் முடிந்ததில் எனக்கு மிக மகிழ்ச்சியே...

********************

கோவையில் தினமும் சுங்கம் நிர்மலா கல்லூரி வழியாகத்தான் அலுவலகத்திற்கு வருவேன். அவ்வழியில் தினமும் நிறைய இளைஞர்களும் பெற்றோர்களும் பெட்டியுடன் நிற்பார்கள். அவசரமாக வருவதால் என்ன என்று பார்க்க நேரம் இருக்காது.

சமீபத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த என் தம்பி நின்று இருந்தான் அவனையும் அவன் அப்பாவையும் பெட்டியுடன் பார்த்தேன். உடனே இங்க என்ன பன்ற எப்படி இருக்கின்றாய்? என்று விசாரிக்கும் போது, அவன் சந்தோசமாக அண்ணா எனக்கு இந்திய இராணுவத்தில் வேலை கிடைச்சிருக்கு என்று சந்தோசமாக சொன்னான்.

எனக்கும் இன்ம் புரியா ஓர் மகிழ்ச்சி.

தனது பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் விட்டு உயிரை துச்சம் என நினைத்து அவன் கண்களில் எந்த பயமும் இல்லாமல் அவன் மகிழ்ச்சியை மட்டும் பார்த்தேன்.

இன்று நம்நாட்டில் நிறைய வேலைகள் உள்ளன அனைத்துக்கும் நல்ல சம்பளம் கிடைக்கின்றது ஆனால் இந்த இளைஞனைப்போல் இரானுவத்தை தேர்ந்தெடுத்த இளைஞர்களுக்கு என் ராயல் சல்யூட்.

********************

நகரத்தில் உள்ள பாதி பேருக்கு புத்தாண்டு கொண்டாட்டம் ஹோட்டலில்தான் போல, எத்தனை விதமான ஆபா்கள், கப்புலுக்கு 6000 என்கிறாா்கள், 4 ஆயிரம் என்கிறாா்கள், எம்புட்டு வேண்டுமானாலும் தின்னுக்கலாம் என்கின்றனா். அதைவிட ஒரு படி மேலே போய் எம்புட்டு வேண்டுமானாலும் குடிச்சிக்கலாம் என்று இன்னொரு ஹோட்டலின் விளம்பரத்தை பாா்த்தேன். அம்மாடி இம்புட்டு செலவு செய்து குடிக்கவும், குத்தாட்டம் போடவும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற போது தான் திகைக்கவைக்கிறது....

புத்தாண்டை பொறுத்த வரை எப்பவும் என் கிராமத்தில் தான் கொண்டாடுவேன், ஊாில் உள்ள எல்லோரும் ஆளுக்கு 10, 20 என்று போட்டு பவானி போய் அந்தியூா் முக்கில் உள்ள பேக்காியில் கேக் வாங்கிட்டு வந்து எப்படா மணி 12 ஆகும் என்று குளிாிலும் ஊா், உலக நியாயங்களை பேசிவிட்டு, 12 மணிக்கு செட் செய்யப்பட்ட டேப்பில் கமலின் ஹேப்பி நியூ இயா் பாடலை பாடி விட்டு, கேக் வெட்டுகிறேன் என்ற பெயாில் எல்லாா் முகத்திலும் பூசிவிட்டு, சாலையில் போய் வரும், லாாிகளை எல்லாம் நிறுத்தி புத்தாண்டு வாழ்த்து சொல்லி, விடிய விடிய ஆட்டம் போடுவோம்... மிக குறைந்த செலவில், மிகப்பொிய சந்தோசம் கிடைத்த திருப்தி இருக்கும்... இந்த முறை நகரத்தில் கொண்டாடுகிறேன்... ஊரை சுற்றுலாம் என நினைத்திருக்கிறேன்... பாா்ப்போம், சந்திப்போம்... புத்தாண்டு ஆட்டத்தில்.....

********************

ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாட்களே.. வலைப்பதிவு, முகபுத்தகம் இவை எல்லாம் வந்த பிறகு வருடக்கடைசியில் நாம் அனைத்து முக்கிய நாட்களையும் நினைவில் கொண்டு எழுதுகிறோம்.. அந்த வகையில் இந்த ஆண்டு என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு முதன் முதலாக மகனை பள்ளிக்கு அனுப்பி அவன் வகுப்பறை செல்லும் வரை நின்று ரசித்து, எப்படி நடந்துக்குவானே, சண்டை எதாவது போடுவானா, அடி வாங்குவானே என நினைத்து நினைத்து அன்று முழுவதும் ஒரு பயத்தோடு கழிந்தது.

நான் பள்ளியில் செய்த குரும்புகள் எல்லாம் நிழல் ஆடின. ஆனால் மகன் என்னவோ சமத்து பிள்ளையாக இருந்தாலும் பெற்ற மனம் துடி துடிப்பது இன்று வரை தொடருகிறது...

Tuesday, November 4, 2014

பெ.கருணாகரனின்... காகிதப் படகில் சாகசப் பயணம்



இது தன்னம்பிக்கை புத்தகம் என்று சொல்வதை விட வாழ்வில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு வரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். விருத்தாச்சலத்தில் நூலகத்தில் ஆரம்பித்து இன்று புதிய தலைமுறை அலுவலகம் வரை அண்ணணோடு பயணித்த அனுபவம் இந்த புத்தகத்தில் படிக்க படிக்க கூடவே நானும் பயணித்த அனுபவம் எனக்கு..

வெள்ளிக்கிழமை மாலை என் கையில் புத்தகம் கிடைத்தது, இந்த வார இறுதி அண்ணணோடு பயணம் என்று ஸ்டேட்டஸ் எல்லாம் போட்டு எப்படியும் ஞாயிறு இரவு முடித்துவிடவேண்டும் என்று தான் எண்ணினேன். ஆனால் இரவு 9மணிக்கு ஆரம்பிச்சு சில பக்கங்களை திரும்ப படித்து, சில இடங்களில் சிரித்து, பல இடங்களில் அடே போட வைத்தது அண்ணனின் எழுத்து.
முதலில் தன்னுடன் பணியாற்றிய தன்னை அறிந்த தோழியை அணிந்துரை எழுத சொல்லி அதை அவர்கள் சுவைபட எழுதியது மிக மகிழ்ச்சிக்குரியது.

ஒரு தெய்வம் தந்த பூவே இந்த பக்கத்தை படித்து கண்ணீரில் நீர் வரவில்லை என்று இந்த புத்தகத்தை படிப்பவர்கள் சொல்வது மிக குறைவாகத்தான் இருக்கும். விருத்தியை படிக்க படிக்க மருத்துவமனையில் அவர் மனைவி குழந்தையை அனைத்து முத்திட்ட அந்த வரிகள் கண் முன்னே இருக்கின்றது இன்னும்.

சிலநாட்களாக எனது வேலையில் சில குளறுபடிகளால் நிரம்பி இருந்தது அன்று அண்ணனுக்கு சுதாங்கன் கூறிய அறிவுரை இன்று எனக்கும் பொருந்தியதில் மிக்க மகிழ்சியாக இருந்தது. அந்த அறிவுரையை அடிக்கோடிட்டு இதுவரை 20 முறை படித்தாயிற்று.

ஒவ்வொன்றிலும் ஓர் அனுபவம் அண்ணனுக்கு ஆனால் என்னைப்போல தம்பிகளுக்கு எல்லாம் இது ஒரு நல்ல பாடம், அறிவுரை இன்னும் என்ன என்ன இருக்குதோ சொல்லிகிட்டே போகலாம்..

தனது சகாக்களை மறக்காமல் குறிப்பிட்டு அவர்களையும் தன்னுடன் இணைத்தது மிக மிக சந்தோசமானது. நாம் அவரது சகாவாக இல்லாமல் போய்விட்டோமே என்று மனசு வருத்தப்பட்டது..

அவர் எழுதி உள்ள அனைத்து தலைப்புகளையும் பற்றி எழுதிக்கொண்டே போகலாம், அதை கருத்தாக நான் எழுதுவதை விட அந்த புத்தகத்தோடு பயணித்து பாருங்கள், புத்துணர்வை பெறுவீர்கள்..

புத்தகத்தை அனுப்பிய அண்ணனுக்கு மிக்க நன்றி...

நிறைய எழுதனும் என்று புத்தத்தில் அடிக்கோடிட்டு இருந்தேன் எழுத இருந்தேன். தவிர்க்க இயலாத காரணத்தால் சொந்த ஊருக்கு வந்ததால் எழுத முடியவில்லை....
 

என்றும் உங்களின் அன்பு தம்பி
சதீஸ் சங்கவி..
புத்தகம் வாங்க விரும்புபவர்களுக்கு...
நூல்: காகிதப் படகில் சாகசப் பயணம்
ஆசிரியர்: பெ. கருணாகரன்
விலை: ரூ 150
வெளியீடு: குன்றம் பதிப்பகம்
73/31, பிருந்தாவனம் தெரு, 
மேற்கு மாம்பலம்,
சென்னை – 600 033.
மெயில் முகவரி: kagithapadagu@gmail.com

Friday, October 17, 2014

இராத்திரி நேரத்து பூஜையில்...


"இராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில்" என்ற இந்த பாடல் தான் இந்த தலைப்பை படித்ததும் நிச்சயம் எல்லோருக்கும் நினைவு வரும், அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கிளப்பிய பாடல் இது. இன்றும் கிராமப்புறங்களில் திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சி நடந்தால் 12 மணிக்கு மேல் இந்த பாடல் இடம் பெறாத நடன நிகழ்ச்சியே இருக்காது எனலாம். நடன நிகழ்வு அங்கு நடக்கும் ஆட்டம் பாட்டத்தை பற்றி சொன்னால் சொல்லிகிட்டே போகலாம். இந்த கதையில் நாம் பார்க்கபோகும் இராத்திரி நேரத்து பூஜையே வேறு..

கோவையின் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் தான் நம் ஹீரோ வேலை செய்கிறார். என்ன தான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து விதவிதமாக ஜீன்ஸ், டாப்சை எல்லாம் போட்ட பொண்ணுங்களை சைட் அடிச்சிகிட்டு இருந்தாலும் மனுசன் திங்கறதுல பலே ஆளு.. ஞாயிற்றுக் கிழமையான அவுங்க குக்கிராமத்தில் மீசைக்காரர் கறிக்கடையில் ( அது என்னங்க எல்லா ஊர்லியும் கறி போடுறவுங்க மட்டும் மீசையை முறுக்கி விட்டுகிட்டு இருக்காங்க) முன் தொடையில் இருக்கும் ஒத்தை எழும்பையும் எடுத்து விட்டு சதக்கறியாத்திங்கும் சாப்ட்டான ஆள்தாங்க நம்ம சாப்ட்வேர் ஆள்..

ஊருக்கு ஆள் வாரம் வாரம் வந்தாலும் வரும் போது மாரியப்பனிடம் விசாரிப்பான் நம்ம என்னடா பக்கத்து ஊர்ல டேன்ஸ் கீது போட்டங்களா போட்டா சொல்லு, அதுவும் எடப்பாடி பாபி சவுண்ட் சிஸ்டம் அழைத்து வருவாங்களே சேலத்து ரம்பா சங்கீதா வந்தா மறக்காம சொல்லுடா என்று மாரியப்பன் மட்டுமில்லாமல், பரந்தாமன், செந்தில், விஜி என எல்லாரிடம் பிட்டை ஓட்டி வைத்து விடுவான்.

எத்தனை நாளைக்குத்தான் சப்புன்னு போறது பக்கத்து ஊரான சுள்ளிமேட்டில் எடப்பாடி பாபி டேன்ஸ் நடக்குது அதுவும் வெசாழக்கிழமை ராத்திரி என்று கோயமுத்தூருக்கு போன போட்டதும், நம்ம ஹீரோ ஊருல அப்பன்னுக்கு உடம்பு சரியில்லைன்னு பிட்ட போட்டுட்டு பைபாஸ் ரைடரை பிடிச்சி லஷ்மி நகரில் இறங்கி, மேட்டூர் போற பஸ்ல ஏரி வீடு வந்து சேர்ந்துட்டான். எப்பவும் போல மெத்தையில் படுக்கிறேங்கற பேர்வழியில் சொம்பு தண்ணியும், தலைகணியும், பெட்சீட்டும் எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு வந்து பசங்க எப்ப போன் செய்வாங்கன்னு ஒரு தம்மை பத்த வெச்சி இழுத்து கிட்டே பராக்கு பார்க்க 4 வீடு தள்ளி மொட்டை மாடியில் மேட்டர் நடக்க பையனுக்கு கிளு கிளுன்னு ஆகிடுச்சு..

கிளு கிளுன்னு இருந்தாத்தான் நண்பர்களுக்கு பிடிக்காதே, அவனுக போன் செய்ய இவன் கட் செய்துவிட்டு சுவர் ஓரமாக, சுவரோடு சேர்ந்து நின்னு நிழலைப்பார்க்க, எல்லா கதையியிலும் வர்ற மாதிரி மொட்டை, மாடி நிலா வெளிச்சம், பக்கத்தில் தவளை சத்தம், அடிக்கம் காற்றுக்கும் தென்னை மரம் சிலு சிலுவென்ற காற்று வீசும் இப்படி எல்லாம் இருக்கும் என்று நினைச்சீங்கன்னா, நொம்பத் தப்புங்கோ.. அன்னிக்குன்னு பார்த்து அம்மாவாசை முடிஞ்சு மூனா நாளோ, நாலம் நாளோ, வெளிச்சமே இல்ல கும்மிருட்டு, மலையாளத்தான் டீக்கடை வெளிச்சம் மட்டும் தான் தெரியுது, அதுவும் மலையாளத்தான் வயித்த நீட்டிக்கிட்டு டீ ஆத்துர ஆத்துல அவங்கிட்ட டீ குடிக்க வந்தவன் எல்லாம் பேசாம ஒசூர் போயே குடிச்சிக்கலாம் என்ற எண்ணம் வரும் வரை ஆத்துவான்...

நம்ம ஹீரோவுக்கோ டவுட்டு இங்க இருக்கற சோடி மலையாளத்தான் பொஞ்சாதியா இருக்குமோன்னு, ஆனாலும் ஒன்னும் தெரியல 2 உருவம் மட்டும் விளையாடுவது தெரிகிறது. அந்த கும்மிருட்டும் வேளையிலும் ஒற்றை சுவரில் அடுத்தவன் என்ன செய்யறான்னு பார்க்கற வேலையை நம்ம ஊரு ஆட்களைத்தவிர எவனும் செய்யமாட்டான்.. என்று மனதில் திட்டிகிட்டே வந்து வானத்தை பார்த்து மல்லாக்க படுத்தவன், கால் மேல காலப்போட்டு ஊர்ல இருக்கற பாதி பேரை நினைச்சிட்டான், இது யாரா இருக்கும் என்று.. அவன் பார்க்க கூடாது என்றாலும் அவன் மனசு மறுபடியும் அந்த ஒற்றை கைப்பிடிச்சுவருக்கு அழைத்து சென்று விட்டது.

ஒற்றைச்சுவரை நன்றாக பிடித்துக்கொண்டு தலையை முழுவதுமாக வெளியே நீட்டி, கண்களை பட்டையை தீட்டி வைரத்தை அறுப்பது போல் தீட்டிக்கொண்டு பார்த்தான். இப்போது உருவம் உருண்டு புரண்டது, பின் எழுந்து நின்றது போல இருந்தது கரண்ட் போய்விட்டது. ஆமாங்க இந்த கிராமத்தில் எல்லாம் பத்து மணிக்கு கரண்ட பிடுங்கி 3 பீஸ் கரண்ட் கொடுப்பாங்க அதனால ஒரு நிமிடம் கரண்ட் போய் வரும். சரி என்று கரண்ட் வந்ததும் பார்க்கலாம் என்ற இவன் பராக்கு பார்த்து நிற்க கரண்ட் வந்ததும் அங்கு எந்த அசைவுகளையும் காணம். 

மறுபடியும் நின்றவனை பாஸ்கர் பாத்துவிட்டு டேய் எத்தனை தடவை போன் பன்றது இங்க என்னடா பன்றன்னு கேக்க, இல்லடா அங்க யாரோ 2 பேர் இருந்தாங்கடா உருண்டுகிட்டு, ஆனா யார்ன்னு தெரியல என இவன் பட படன்னு உளற, டேய் ரிலாக்ஸ் இத விட அங்க சேலத்து ரம்பா ஆட வந்தாச்சாம். 10 மணிக்கு ஆரம்பிச்சு 12 மணிக்கு முடிச்சிடுவாங்க.. 11 மணிக்கு மேல தான் கிளு கிளுன்னு இருக்கும். உனக்கு அது முக்கியமா இல்ல இங்கயாருன்ன கண்டுபிடிக்கறது முக்கியாமான்னு முடிவு செய் என சொல்ல, ஐய்யய்யோ இது யாரா இருந்தா எனக்கென்ன நாம் போகலாம் என்று அய்யப்பனின் டிவிஸ் சூப்பரில் 4 பேரும், மாரியப்பன் ஸ்ப்ளண்டரில் 3 பேரும், என ஆள்ஆளுக்கு கிடைச்ச வண்டியில் ஏரி சுடுகாட்டில் வந்து ஒன்னு சேர்ந்து தம் அடிச்சுக்கொண்டு இருந்தனர்...

நம்ம ஹீரோ தான் படபடப்பா சீக்கிரம் குடிங்கடா ராத்திரி நேரத்து பூஜை பாட்டுக்கு சேலத்து ரம்பா சங்கீதா ஆட்டத்தை பார்க்க முடியாது என்று பர பரன்னு பரந்து கொண்டு இருந்த போது.. பாஸ்கர் இவன் ஒற்றைச்சுவரில் எட்டிப்பார்த்த கதையை சொல்ல எல்லாரும் கலாய் கலாய் என்று கலாய்த்துக்கொண்டு இருந்தனர், இடையில் வேகமாக வந்த மோகன் டேய் டேன்ஸ்க்கு அனுமதி இல்லைன்னு சொல்லி கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி இருக்காங்களாம்.. சீக்கிரம் வாங்கடா நாலு ஆட்டத்தை நறுக் என்று பார்த்து விடலாம் என எல்லோரும் இராத்திரி நேரத்து பூஜையை ரசிக்க கிளம்பினர்...

(தொடரும், இராத்திரி நேரத்து பூஜைகள்...)

ஹா ஹா என்ன மக்களே கிளு கிளுன்னு சொல்லி கடைசியில் தொடரும்ன்னு போட்டுட்டானேன்னு யோசிக்கறீங்களா, நன்றாக யோசியுங்க சேலம் சங்கீதா ஆட்டம் எப்படி இருந்துச்சுன்னு நாளைக்கு பார்ப்போம், அதற்கு பின் தான் இருக்கு க்ளைமேக்ஸ்)

Monday, October 6, 2014

"குடி குடியை கெடுக்கும்" இதுயாருடைய தவறு???


குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் வீட்டை கெடுக்கும் என பல வகையான புதுமொழிகளை கேட்டு இருந்தாலும் நம்ம ஊரில் சரக்கு விற்பனை குறைவதில்லை. குடிப்பவர்களுக்கு எல்லாம் நிச்சயம் தெரியும் குடல் வெந்து, கல்லீரல் வெந்து சாகப்போகிறோம் என்று ஆனாலும் குடிக்கத்தான் செய்கின்றனர்.

இப்போது எல்லாம் கம்பெனி மீட்டிங்கில் மட்டும் சரக்கு சாப்பிடுகிறேன் என்று சொல்பவர்கள் தான் இங்கு ஏராளம். அப்புறம் பொஞ்சாதி ஊருக்கு சென்று விட்டால் நண்பர்களோடு கூத்தடிப்பவர்களும் இங்கு அதிகம் தான். கொஞ்சம் தான் குடிச்சேன், அட பீர் தாம்பா குடிச்சேன் அதனால பிரச்சனை இல்லை என்று சொல்பவர்களும் தாராளமாக உள்ளனர்.

குடியைப்பற்றி இவ்வளவு பேசுகிறாயே நீ யோக்கியனா என்று நீங்கள் கேட்கலாம், மேலே சொன்ன வகைகளில் நானும் ஒருவன் தான், எனக்கு பேர் குடிகாரன் இல்லை ஏதோ அப்பப்ப குடிப்பவன், எனக்கு செல்ப் கன்ரோல் இருக்கிறது என்று வியாக்கானம் பேசும் பலபேர்களில் சத்தியமாக நானும் ஒருவனே.

குடியால் நிறைய குடும்பங்கள் அழிந்துள்ளன, அழிந்து கொண்டு இருக்கின்றன, அழியப்போகிறது என பல கருத்துக்கள் சொல்லலாம். இப்படித்தான் சொன்னான் பிரபு, அவன் யார் என்கிறீர்களா இன்றைய குடியைப்பற்றியான என் எழுத்துக்கு அவன் தான் ஹீரோ.

பிரபு சராசரியை விட நல்ல உயரம் அரசு போக்குவரத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறான், மனைவி மகள், மகன் என சந்தோசமான குடும்பத்துக்கு சொந்தக்காரன். வழக்கம் போல மீசையை முறுக்கிக்கொண்டு வண்டியை ஓட்டும் அவன் லாவகம் அனைவருக்கும் பிடித்தமானதே. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவனுக்கு பணி. பணி முடிந்து இறங்கி வரும் போது உடல் சூட்டுக்காக அவ்வப்போது பீர் குடிக்க ஆரம்பித்தவன், பின் பீர் பித்தன் ஆனான்.

பிரவுவை எல்லோருக்கும் பிடிக்கும் அதனாலயே அவனுக்கு உண்டான நட்பு வட்டம் பெருகியது, நட்பு வட்டம் பெருக பெருக குடியும் பெருகிவிட்டது. அதற்கேற்றாற் போல் தினமும் கர்நாடக சென்று வரும் பணி கொடுத்ததால் தமிழ்நாடடு சரக்கு போர் அடிக்கவே தினமும் கர்நாடகாவில் இருந்து விதவிதமான புல்லால் மனுசன் புல்லாகிப்போனார். என்ன தான் கட்டுமஸ்தான உடல், வட்டசாட்டமான உடலாக இருந்தாலும் சாப்பாட்டிற்கு பதில் சரக்கை குடித்தால் எத்தனை நாளைக்குத்தான் தாங்கும் அந்த குடல். ஆனால் நம்ம பிரபு எம்புட்டு குடிச்சாலும் தினமும் சாப்பாட்டில் எருமைத்தயிர் சாப்பிடுவதை குறைக்கவில்லை.

எருமைத்தயிரைப்பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம் அதற்கு அம்புட்டு கொழுப்பு இருக்கு. கம்மஞ்சோத்தையும் தயிரையும் குடிச்சு வளர்ந்த உடலை எல்லாம் பார்த்தீங்கன்னா சும்ம தள தளன்னு இருக்கும். அழகான பொண்ணுகளை கிராமத்து பக்கம் பார்த்தோம் என்றால் நிச்சயம் தயிர் அந்த அழகிற்கு முக்கிய பங்காற்றி இருக்கும்... எதப்பத்தி பேசினாலும் இந்த அழகான பொண்ணுங்க வருவதை தவிர்க்க முடியவில்லை நட்புக்களே..

கிட்டத்தட்ட 20 வருடமாக குடி குடி என்று இருக்கும் சரக்கை எல்லாம் ஒரு கை பார்த்த பிரபு வயது ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக கிறங்கித்தான் போனான். 40 வயதுதான் ஆகிறது இப்போது முதலில் அவனுக்கு வந்தது மஞ்சள் காமாலை அப்போது பரிசோதனையில் தான் தெரிந்தது ஈரல் அழகிப்போகிவிட்டது என்று. கோவை அழைத்து வந்து 2 இலட்சம் செலவு செய்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். பட் 20 நாள் சரக்கு சாப்பிடாமல் இருந்த நாக்கு சும்மா இருக்குமா மீண்டும் ஒரு கட்டிங்விட உடல் எல்லாம வீங்க, உச்சா வராமல் அப்படியே பெரிதாகிக்கொண்டு போனது.

இப்போது நாள் குறித்து விட்டார்களாம் இன்னும் ஒரு வாரம் தாங்குவதே அதிகம் என்று. எதோ பிரவுவின் தாத்தா சம்பாரித்த தோட்டம் அவனின் புள்ளைகளை காப்பாற்றி விடும், ஆனால் இந்த மாதிரி பிரபுக்கள் ஊருக்கு நாலஞ்சு பேராவது நிச்சயம் இருப்பாங்க, அவர்களின் குழந்தையை எல்லாம் யார் காப்பாற்றுவது. பிரவுவை கடைசியாக மருத்துவமனைக்கு எனது காரில் தான் ராத்திரி தூக்கிப்போட்டுக்கொண்டு போய் சேர்த்தோம், அப்போது மனிதன் பேசினார் என் புள்ளைங்கள படிக்க வெக்காம போறேனே என்று மனிதன் அழுதார். இப்போது வந்த வியாக்கனம் குடிக்கும் போது வந்துருக்கனும் அண்ணே என்றேன்.

உண்மை தான் என்று தன் குழந்தைகளை பார்த்து அழுது கொண்டே சென்றார், இன்னும் சில நாட்கள் எல்லோரையும் நிச்சயம் அழவைப்பார். மனைவி ஸ்டடியாக நின்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இது தான் இனி அந்த குடும்பத்தின் நிலை.

இது யாருடைய தவறு...

இந்த பிரபு குடிகாரன் ஆனாதற்கு யார் காரணம்..

பிரபு படித்தவன் பட்டம் வாங்கியவன் அவருக்கு தெரியாதா குடித்தால் உடல்நலத்திற்கு கேடு என அப்புறம் ஏன் குடித்தார்??? 

அரசாங்கமே மது விற்றதால் குடித்தார் என்று சொல்ல முடியுமா ??

குடும்ப பிரச்சனைக்காக குடித்திருப்பாரா ???

ஒட்டுநர் பணியில் இருப்பதால் குடித்தால் தான் உடல் குளிர்ச்சி ஆகும் என குடிச்சிருப்பாரா??

இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்கலாம், என்னைப்பொறுத்த வரை திருடனாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு அது போலத்தான் குடிகாரனும் அவர்களாக பார்த்து நிறுத்தினால் தான் உண்டு. யாரும் ஊற்றிக்கொடுப்பதில்லை அவர்களாகவே அவர்களுக்கு ஊற்றி குடித்து தன் உயிரையும் மாய்த்துக்கொள்கின்றனர். 

ஒவ்வொரு பெக் அடிக்கும் போதும் தன் குழந்தை குடும்பம், மனைவி அப்பா அம்மா என்று ஒவ்வொருவரிடம் எவனக்கு பயம் இருக்குதோ அவன் குடியை விட குடும்பத்தின் நலனிலேயே அக்கரையாக இருப்பான்..

யாரையும் மதிக்காமல் அப்பா, அம்மா, மனைவி என குடிக்காகாது கொடுக்காதவர்களை தாக்கும் மனிதர்களும் நம்ம ஊரில் நிறைய.

இவர்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு....

பிரபுவின் நிலை நமக்க வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் போதுதான் குடிகாரர்களின் எண்ணிக்கை குறையும்... அதுவரை பல பிரபுக்கள் உருவாகிக்கொண்டு தான் இருப்பார்கள்...