Friday, October 17, 2014

இராத்திரி நேரத்து பூஜையில்...


"இராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில்" என்ற இந்த பாடல் தான் இந்த தலைப்பை படித்ததும் நிச்சயம் எல்லோருக்கும் நினைவு வரும், அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கிளப்பிய பாடல் இது. இன்றும் கிராமப்புறங்களில் திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சி நடந்தால் 12 மணிக்கு மேல் இந்த பாடல் இடம் பெறாத நடன நிகழ்ச்சியே இருக்காது எனலாம். நடன நிகழ்வு அங்கு நடக்கும் ஆட்டம் பாட்டத்தை பற்றி சொன்னால் சொல்லிகிட்டே போகலாம். இந்த கதையில் நாம் பார்க்கபோகும் இராத்திரி நேரத்து பூஜையே வேறு..

கோவையின் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் தான் நம் ஹீரோ வேலை செய்கிறார். என்ன தான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து விதவிதமாக ஜீன்ஸ், டாப்சை எல்லாம் போட்ட பொண்ணுங்களை சைட் அடிச்சிகிட்டு இருந்தாலும் மனுசன் திங்கறதுல பலே ஆளு.. ஞாயிற்றுக் கிழமையான அவுங்க குக்கிராமத்தில் மீசைக்காரர் கறிக்கடையில் ( அது என்னங்க எல்லா ஊர்லியும் கறி போடுறவுங்க மட்டும் மீசையை முறுக்கி விட்டுகிட்டு இருக்காங்க) முன் தொடையில் இருக்கும் ஒத்தை எழும்பையும் எடுத்து விட்டு சதக்கறியாத்திங்கும் சாப்ட்டான ஆள்தாங்க நம்ம சாப்ட்வேர் ஆள்..

ஊருக்கு ஆள் வாரம் வாரம் வந்தாலும் வரும் போது மாரியப்பனிடம் விசாரிப்பான் நம்ம என்னடா பக்கத்து ஊர்ல டேன்ஸ் கீது போட்டங்களா போட்டா சொல்லு, அதுவும் எடப்பாடி பாபி சவுண்ட் சிஸ்டம் அழைத்து வருவாங்களே சேலத்து ரம்பா சங்கீதா வந்தா மறக்காம சொல்லுடா என்று மாரியப்பன் மட்டுமில்லாமல், பரந்தாமன், செந்தில், விஜி என எல்லாரிடம் பிட்டை ஓட்டி வைத்து விடுவான்.

எத்தனை நாளைக்குத்தான் சப்புன்னு போறது பக்கத்து ஊரான சுள்ளிமேட்டில் எடப்பாடி பாபி டேன்ஸ் நடக்குது அதுவும் வெசாழக்கிழமை ராத்திரி என்று கோயமுத்தூருக்கு போன போட்டதும், நம்ம ஹீரோ ஊருல அப்பன்னுக்கு உடம்பு சரியில்லைன்னு பிட்ட போட்டுட்டு பைபாஸ் ரைடரை பிடிச்சி லஷ்மி நகரில் இறங்கி, மேட்டூர் போற பஸ்ல ஏரி வீடு வந்து சேர்ந்துட்டான். எப்பவும் போல மெத்தையில் படுக்கிறேங்கற பேர்வழியில் சொம்பு தண்ணியும், தலைகணியும், பெட்சீட்டும் எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு வந்து பசங்க எப்ப போன் செய்வாங்கன்னு ஒரு தம்மை பத்த வெச்சி இழுத்து கிட்டே பராக்கு பார்க்க 4 வீடு தள்ளி மொட்டை மாடியில் மேட்டர் நடக்க பையனுக்கு கிளு கிளுன்னு ஆகிடுச்சு..

கிளு கிளுன்னு இருந்தாத்தான் நண்பர்களுக்கு பிடிக்காதே, அவனுக போன் செய்ய இவன் கட் செய்துவிட்டு சுவர் ஓரமாக, சுவரோடு சேர்ந்து நின்னு நிழலைப்பார்க்க, எல்லா கதையியிலும் வர்ற மாதிரி மொட்டை, மாடி நிலா வெளிச்சம், பக்கத்தில் தவளை சத்தம், அடிக்கம் காற்றுக்கும் தென்னை மரம் சிலு சிலுவென்ற காற்று வீசும் இப்படி எல்லாம் இருக்கும் என்று நினைச்சீங்கன்னா, நொம்பத் தப்புங்கோ.. அன்னிக்குன்னு பார்த்து அம்மாவாசை முடிஞ்சு மூனா நாளோ, நாலம் நாளோ, வெளிச்சமே இல்ல கும்மிருட்டு, மலையாளத்தான் டீக்கடை வெளிச்சம் மட்டும் தான் தெரியுது, அதுவும் மலையாளத்தான் வயித்த நீட்டிக்கிட்டு டீ ஆத்துர ஆத்துல அவங்கிட்ட டீ குடிக்க வந்தவன் எல்லாம் பேசாம ஒசூர் போயே குடிச்சிக்கலாம் என்ற எண்ணம் வரும் வரை ஆத்துவான்...

நம்ம ஹீரோவுக்கோ டவுட்டு இங்க இருக்கற சோடி மலையாளத்தான் பொஞ்சாதியா இருக்குமோன்னு, ஆனாலும் ஒன்னும் தெரியல 2 உருவம் மட்டும் விளையாடுவது தெரிகிறது. அந்த கும்மிருட்டும் வேளையிலும் ஒற்றை சுவரில் அடுத்தவன் என்ன செய்யறான்னு பார்க்கற வேலையை நம்ம ஊரு ஆட்களைத்தவிர எவனும் செய்யமாட்டான்.. என்று மனதில் திட்டிகிட்டே வந்து வானத்தை பார்த்து மல்லாக்க படுத்தவன், கால் மேல காலப்போட்டு ஊர்ல இருக்கற பாதி பேரை நினைச்சிட்டான், இது யாரா இருக்கும் என்று.. அவன் பார்க்க கூடாது என்றாலும் அவன் மனசு மறுபடியும் அந்த ஒற்றை கைப்பிடிச்சுவருக்கு அழைத்து சென்று விட்டது.

ஒற்றைச்சுவரை நன்றாக பிடித்துக்கொண்டு தலையை முழுவதுமாக வெளியே நீட்டி, கண்களை பட்டையை தீட்டி வைரத்தை அறுப்பது போல் தீட்டிக்கொண்டு பார்த்தான். இப்போது உருவம் உருண்டு புரண்டது, பின் எழுந்து நின்றது போல இருந்தது கரண்ட் போய்விட்டது. ஆமாங்க இந்த கிராமத்தில் எல்லாம் பத்து மணிக்கு கரண்ட பிடுங்கி 3 பீஸ் கரண்ட் கொடுப்பாங்க அதனால ஒரு நிமிடம் கரண்ட் போய் வரும். சரி என்று கரண்ட் வந்ததும் பார்க்கலாம் என்ற இவன் பராக்கு பார்த்து நிற்க கரண்ட் வந்ததும் அங்கு எந்த அசைவுகளையும் காணம். 

மறுபடியும் நின்றவனை பாஸ்கர் பாத்துவிட்டு டேய் எத்தனை தடவை போன் பன்றது இங்க என்னடா பன்றன்னு கேக்க, இல்லடா அங்க யாரோ 2 பேர் இருந்தாங்கடா உருண்டுகிட்டு, ஆனா யார்ன்னு தெரியல என இவன் பட படன்னு உளற, டேய் ரிலாக்ஸ் இத விட அங்க சேலத்து ரம்பா ஆட வந்தாச்சாம். 10 மணிக்கு ஆரம்பிச்சு 12 மணிக்கு முடிச்சிடுவாங்க.. 11 மணிக்கு மேல தான் கிளு கிளுன்னு இருக்கும். உனக்கு அது முக்கியமா இல்ல இங்கயாருன்ன கண்டுபிடிக்கறது முக்கியாமான்னு முடிவு செய் என சொல்ல, ஐய்யய்யோ இது யாரா இருந்தா எனக்கென்ன நாம் போகலாம் என்று அய்யப்பனின் டிவிஸ் சூப்பரில் 4 பேரும், மாரியப்பன் ஸ்ப்ளண்டரில் 3 பேரும், என ஆள்ஆளுக்கு கிடைச்ச வண்டியில் ஏரி சுடுகாட்டில் வந்து ஒன்னு சேர்ந்து தம் அடிச்சுக்கொண்டு இருந்தனர்...

நம்ம ஹீரோ தான் படபடப்பா சீக்கிரம் குடிங்கடா ராத்திரி நேரத்து பூஜை பாட்டுக்கு சேலத்து ரம்பா சங்கீதா ஆட்டத்தை பார்க்க முடியாது என்று பர பரன்னு பரந்து கொண்டு இருந்த போது.. பாஸ்கர் இவன் ஒற்றைச்சுவரில் எட்டிப்பார்த்த கதையை சொல்ல எல்லாரும் கலாய் கலாய் என்று கலாய்த்துக்கொண்டு இருந்தனர், இடையில் வேகமாக வந்த மோகன் டேய் டேன்ஸ்க்கு அனுமதி இல்லைன்னு சொல்லி கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி இருக்காங்களாம்.. சீக்கிரம் வாங்கடா நாலு ஆட்டத்தை நறுக் என்று பார்த்து விடலாம் என எல்லோரும் இராத்திரி நேரத்து பூஜையை ரசிக்க கிளம்பினர்...

(தொடரும், இராத்திரி நேரத்து பூஜைகள்...)

ஹா ஹா என்ன மக்களே கிளு கிளுன்னு சொல்லி கடைசியில் தொடரும்ன்னு போட்டுட்டானேன்னு யோசிக்கறீங்களா, நன்றாக யோசியுங்க சேலம் சங்கீதா ஆட்டம் எப்படி இருந்துச்சுன்னு நாளைக்கு பார்ப்போம், அதற்கு பின் தான் இருக்கு க்ளைமேக்ஸ்)

1 comment:

  1. ஆஹா... அமர்க்களம்...
    நாளைய பகிர்வுக்காக... அந்த கிளைமேக்ஸ் படிக்க ஆவல்.

    ReplyDelete