Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Monday, October 6, 2014

"குடி குடியை கெடுக்கும்" இதுயாருடைய தவறு???


குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் வீட்டை கெடுக்கும் என பல வகையான புதுமொழிகளை கேட்டு இருந்தாலும் நம்ம ஊரில் சரக்கு விற்பனை குறைவதில்லை. குடிப்பவர்களுக்கு எல்லாம் நிச்சயம் தெரியும் குடல் வெந்து, கல்லீரல் வெந்து சாகப்போகிறோம் என்று ஆனாலும் குடிக்கத்தான் செய்கின்றனர்.

இப்போது எல்லாம் கம்பெனி மீட்டிங்கில் மட்டும் சரக்கு சாப்பிடுகிறேன் என்று சொல்பவர்கள் தான் இங்கு ஏராளம். அப்புறம் பொஞ்சாதி ஊருக்கு சென்று விட்டால் நண்பர்களோடு கூத்தடிப்பவர்களும் இங்கு அதிகம் தான். கொஞ்சம் தான் குடிச்சேன், அட பீர் தாம்பா குடிச்சேன் அதனால பிரச்சனை இல்லை என்று சொல்பவர்களும் தாராளமாக உள்ளனர்.

குடியைப்பற்றி இவ்வளவு பேசுகிறாயே நீ யோக்கியனா என்று நீங்கள் கேட்கலாம், மேலே சொன்ன வகைகளில் நானும் ஒருவன் தான், எனக்கு பேர் குடிகாரன் இல்லை ஏதோ அப்பப்ப குடிப்பவன், எனக்கு செல்ப் கன்ரோல் இருக்கிறது என்று வியாக்கானம் பேசும் பலபேர்களில் சத்தியமாக நானும் ஒருவனே.

குடியால் நிறைய குடும்பங்கள் அழிந்துள்ளன, அழிந்து கொண்டு இருக்கின்றன, அழியப்போகிறது என பல கருத்துக்கள் சொல்லலாம். இப்படித்தான் சொன்னான் பிரபு, அவன் யார் என்கிறீர்களா இன்றைய குடியைப்பற்றியான என் எழுத்துக்கு அவன் தான் ஹீரோ.

பிரபு சராசரியை விட நல்ல உயரம் அரசு போக்குவரத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறான், மனைவி மகள், மகன் என சந்தோசமான குடும்பத்துக்கு சொந்தக்காரன். வழக்கம் போல மீசையை முறுக்கிக்கொண்டு வண்டியை ஓட்டும் அவன் லாவகம் அனைவருக்கும் பிடித்தமானதே. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவனுக்கு பணி. பணி முடிந்து இறங்கி வரும் போது உடல் சூட்டுக்காக அவ்வப்போது பீர் குடிக்க ஆரம்பித்தவன், பின் பீர் பித்தன் ஆனான்.

பிரவுவை எல்லோருக்கும் பிடிக்கும் அதனாலயே அவனுக்கு உண்டான நட்பு வட்டம் பெருகியது, நட்பு வட்டம் பெருக பெருக குடியும் பெருகிவிட்டது. அதற்கேற்றாற் போல் தினமும் கர்நாடக சென்று வரும் பணி கொடுத்ததால் தமிழ்நாடடு சரக்கு போர் அடிக்கவே தினமும் கர்நாடகாவில் இருந்து விதவிதமான புல்லால் மனுசன் புல்லாகிப்போனார். என்ன தான் கட்டுமஸ்தான உடல், வட்டசாட்டமான உடலாக இருந்தாலும் சாப்பாட்டிற்கு பதில் சரக்கை குடித்தால் எத்தனை நாளைக்குத்தான் தாங்கும் அந்த குடல். ஆனால் நம்ம பிரபு எம்புட்டு குடிச்சாலும் தினமும் சாப்பாட்டில் எருமைத்தயிர் சாப்பிடுவதை குறைக்கவில்லை.

எருமைத்தயிரைப்பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம் அதற்கு அம்புட்டு கொழுப்பு இருக்கு. கம்மஞ்சோத்தையும் தயிரையும் குடிச்சு வளர்ந்த உடலை எல்லாம் பார்த்தீங்கன்னா சும்ம தள தளன்னு இருக்கும். அழகான பொண்ணுகளை கிராமத்து பக்கம் பார்த்தோம் என்றால் நிச்சயம் தயிர் அந்த அழகிற்கு முக்கிய பங்காற்றி இருக்கும்... எதப்பத்தி பேசினாலும் இந்த அழகான பொண்ணுங்க வருவதை தவிர்க்க முடியவில்லை நட்புக்களே..

கிட்டத்தட்ட 20 வருடமாக குடி குடி என்று இருக்கும் சரக்கை எல்லாம் ஒரு கை பார்த்த பிரபு வயது ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக கிறங்கித்தான் போனான். 40 வயதுதான் ஆகிறது இப்போது முதலில் அவனுக்கு வந்தது மஞ்சள் காமாலை அப்போது பரிசோதனையில் தான் தெரிந்தது ஈரல் அழகிப்போகிவிட்டது என்று. கோவை அழைத்து வந்து 2 இலட்சம் செலவு செய்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். பட் 20 நாள் சரக்கு சாப்பிடாமல் இருந்த நாக்கு சும்மா இருக்குமா மீண்டும் ஒரு கட்டிங்விட உடல் எல்லாம வீங்க, உச்சா வராமல் அப்படியே பெரிதாகிக்கொண்டு போனது.

இப்போது நாள் குறித்து விட்டார்களாம் இன்னும் ஒரு வாரம் தாங்குவதே அதிகம் என்று. எதோ பிரவுவின் தாத்தா சம்பாரித்த தோட்டம் அவனின் புள்ளைகளை காப்பாற்றி விடும், ஆனால் இந்த மாதிரி பிரபுக்கள் ஊருக்கு நாலஞ்சு பேராவது நிச்சயம் இருப்பாங்க, அவர்களின் குழந்தையை எல்லாம் யார் காப்பாற்றுவது. பிரவுவை கடைசியாக மருத்துவமனைக்கு எனது காரில் தான் ராத்திரி தூக்கிப்போட்டுக்கொண்டு போய் சேர்த்தோம், அப்போது மனிதன் பேசினார் என் புள்ளைங்கள படிக்க வெக்காம போறேனே என்று மனிதன் அழுதார். இப்போது வந்த வியாக்கனம் குடிக்கும் போது வந்துருக்கனும் அண்ணே என்றேன்.

உண்மை தான் என்று தன் குழந்தைகளை பார்த்து அழுது கொண்டே சென்றார், இன்னும் சில நாட்கள் எல்லோரையும் நிச்சயம் அழவைப்பார். மனைவி ஸ்டடியாக நின்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இது தான் இனி அந்த குடும்பத்தின் நிலை.

இது யாருடைய தவறு...

இந்த பிரபு குடிகாரன் ஆனாதற்கு யார் காரணம்..

பிரபு படித்தவன் பட்டம் வாங்கியவன் அவருக்கு தெரியாதா குடித்தால் உடல்நலத்திற்கு கேடு என அப்புறம் ஏன் குடித்தார்??? 

அரசாங்கமே மது விற்றதால் குடித்தார் என்று சொல்ல முடியுமா ??

குடும்ப பிரச்சனைக்காக குடித்திருப்பாரா ???

ஒட்டுநர் பணியில் இருப்பதால் குடித்தால் தான் உடல் குளிர்ச்சி ஆகும் என குடிச்சிருப்பாரா??

இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்கலாம், என்னைப்பொறுத்த வரை திருடனாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு அது போலத்தான் குடிகாரனும் அவர்களாக பார்த்து நிறுத்தினால் தான் உண்டு. யாரும் ஊற்றிக்கொடுப்பதில்லை அவர்களாகவே அவர்களுக்கு ஊற்றி குடித்து தன் உயிரையும் மாய்த்துக்கொள்கின்றனர். 

ஒவ்வொரு பெக் அடிக்கும் போதும் தன் குழந்தை குடும்பம், மனைவி அப்பா அம்மா என்று ஒவ்வொருவரிடம் எவனக்கு பயம் இருக்குதோ அவன் குடியை விட குடும்பத்தின் நலனிலேயே அக்கரையாக இருப்பான்..

யாரையும் மதிக்காமல் அப்பா, அம்மா, மனைவி என குடிக்காகாது கொடுக்காதவர்களை தாக்கும் மனிதர்களும் நம்ம ஊரில் நிறைய.

இவர்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு....

பிரபுவின் நிலை நமக்க வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் போதுதான் குடிகாரர்களின் எண்ணிக்கை குறையும்... அதுவரை பல பிரபுக்கள் உருவாகிக்கொண்டு தான் இருப்பார்கள்...


Tuesday, July 17, 2012

கிராமத்து மனசு....2


கிராமம்  வயலும் வயலைச்சார்ந்த இடமும் வலதுகரை வாய்க்கால் தண்ணீர் பாய்ச்சலில் செழிப்பான கிராமமிது.. இந்த ஊரில் வாழம் மக்களில் பலதரப்பட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்து பெயரைச் சொன்னலே பக்கத்து கிராம மக்கள் அனைவரும் கொஞ்சம் பயப்படுவர் அந்த அளவிற்கு ஒற்றுமை இந்த ஊர் ஒரமாக உள்ள முனியப்பன் கோவிலும்  அங்கே அமைந்துள்ள ஆலமரமும் அதில் தூரிகட்டி அடும் அழகை என்றும் ரசிக்கலாம்.

அந்த அழகான கிராமத்து பள்ளியில் அமர்திருக்கையில் காயத்திரி மட்டும் அன்று பள்ளிக்கு வரவில்லை. சரவணனுக்கு வருத்தம் என்ன ஆச்சு ஏன் இன்று இன்னும் பள்ளிக்கு வரவில்லை என்று குழப்பத்தோடு காணப்பட்டான். அன்று மாலை அவன் வீட்டுக்கு பின் 4 வீடு தள்ளி இருக்கும் காயத்திரி வீட்டுக்கு போய் பார்க்கலாம் என்று முடிவு செய்து எப்படா மணி 5 ஆகும் வீட்டுக்கு போவோம் என்று காத்திருந்தான்..

வீட்டுக்கு சென்ற போது அவன் அம்மா அப்பத்தான் வீட்டுக்குள் நுழைந்தாள். வாப்பா இப்பத்தான் உங்கூட படிக்குதே காயத்திரி அவுங்க வீட்டுக்கு போய்ட்டு வந்தேன் காயத்திரி பெரிய மனுசி ஆகிட்டாப்பா இனி மேல் எல்லாம் உங்க கூட வந்து விளையாட வரமாட்டாள் என்று வீட்டினுள் நுழைந்ததும் அவன் திக்கு தெரிந்தாமல் விழி பிதுங்கினான்...

தினமும் விளையாடிய காயத்திரி அன்று முதல் விளையாட வரவில்லை அந்த பகுதியில் பெண் பெரியவள் ஆனால் நிறைய பேர் படிப்பை நிறுத்தி திருமணத்தை நடத்துவர்கள் ஆனால் காயத்திரியின் அப்பா ஊரின் முக்கியஸ்தர் நிறைய நல்லது செய்துள்ளார் பெண் பிள்ளை மேல் உள்ள பாசத்தில் பள்ளியில் படிக்க அனுப்பினார். பள்ளியில் காயத்திரியை பார்த்ததும் சரவணனுக்கு சந்தோசம். ஆனால் முதல் மாதிரி இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் கண்ணால் பேச ஆரம்பித்தான் சரவணன்.

பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதியதும் தனது காதலை சொல்ல காயத்திரியிடம் காத்திருக்குபோதும் சொல்ல இயலவில்லை எப்படி சொல்வது என்று நிறைய சந்தர்ப்பங்களை எதிர்பார்த்தான். ஊர்த் திருவிழாவில் அவள் இவனுக்காகவே காலை மாலை என இரு வேளையும் கம்பத்து தண்ணீர் ஊற்றினாள் காயத்திரி ஆனால் பேசும் சந்தர்ப்பம் அதிகம் அமையாமல் காத்திருக்கும் போது சைக்கிள் ஓட்டி பழகிய கொண்டிருந்த காயத்திரியிடம் பக்கத்தில் வந்து தன் காதலை சொல்லி இவன் ஓடுகையில் சைக்கிளை கீழே போட்டு விழந்து சிரித்துக்கொண்டி இருந்தாள்.. கால ஓட்டத்தில் காதல் கடிதத்தில் வளர்ந்தது காதல்.

இவன் பிஇ படிக்க வெளியூர் செல்ல அவள் டீச்சர் டிரெயினிங் படித்து உள்ளுரிலேயே அரசு பள்ளியில் வேலையில் சேர்ந்தால் இவன் கல்லூரி விடுமுறை காலங்களில் ஊருக்கு வரும் போது கிணற்று மேட்டிலும், சோளக்காட்டிலும், ஆலமர தூரியிலும் வளர்ந்தது இவர்கள் காதல்.

சரவணன் படித்து முடிந்து வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் கழித்து திருமண பேச்சை வீட்டில் எடுத்த போது தன் காதலை தன் அம்மாவிடம் சொல்ல அம்மா அப்பாவிடம் சொல்ல சிறு எதிர்ப்பிற்குப்பின் சம்மதித்தனர். காயத்திரியின் தகப்பனாரிடம் யாரை அனுப்பி பேசலாம் என்று யோசிக்கும் போது குண்டுமணியை அனுப்பலாம் என்றும் அவர் ஊர் பெரியவர் மட்டுமல்ல கொஞ்சம் சண்டியர் நியாத்துக்கு போராடுபவர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் சரவணன் படிப்பிற்கு கொஞ்சம் உதவியர் என்பதல் சரவணின் அப்பா அவரிடம் விசயத்தை சொல்ல எத்தனை வருட காதல் என்று கேக்க 12 வருடம் என்றதும் கொஞ்சம் அசந்து போனார் குண்டுமணி..

கிடட்டத்தட்ட 8 வருடங்கள் வெளியூரில் இருந்தாலும் தன் முதல் காதலித்த பெண்ணையே கரம் பிடிக்க எண்ணிய சரவணனுக்கு உதவ காயத்திரி அப்பாவிடம் பேசினார். அவர் நாளை இதைப்பற்றி பேசலாம் என்றவர் வீட்டில் சென்று மனைவியை அழைத்து 12 வருடமாக காதலிக்கிறாளாம் உனக்கு தெரியாதா? பிள்ளை என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்று கூட பார்க்காமல் என்ன வளர்த்தாயோ என்றதும் நீங்க தான் அவளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்தீங்க இப்ப என்ன கேக்கறீங்க என்ற திரும்ப பேச என்ன செய்வது என்று விடிய விடிய யோசித்தார் ஆனால் தன் ஆசை மகளை ஒரு வார்த்தை கூட கேக்கவில்லை..

சரவணனும், காயத்திரியில் அலைபேசியில் பேசும் போது எங்கப்பா என்னை கேட்டால் நான் சரவணனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெளிவாக சொல்லிவிடுகிறேன் என்றாள் அவர் கேட்காததால் இருவருக்கும் குழப்பம்.

அடுத்த நாள் குண்டுமணியை சந்தித்த காயத்திரியின் அப்பா நீங்க சொல்வது சரிதான் நான் அந்த பையனிடம் தனியாக பேசவேண்டும் எப்ப ஊருக்கு வருவான் என்றார் வரும் வார இறுதியில் வருவான் என்றதும் சரி தோட்டத்துக்கு வரச்சொல்லிடுங்க கூட நீங்களும் வாங்க என்றார்.

ஞாயிறு அன்று தோட்டத்தில் சந்திக்க செல்லும் போது சரவணன் தனது அலைபேசியில் அழைத்து காயத்தியிடம் பேசிவிட்டு அவளும் எங்க அப்பா பேசுவதை நானும் கேட்க வேண்டும் என்று ஆன் செய்தே வை என்றாள்..

தோட்டத்துக்கு சென்றதும் அன்போடு விசாரித்த காயத்திரியின் அப்பா வேலை மற்ற விபரங்களை எல்லாம் கேட்டுவிட்டு உன்னை சிறுவயது முதலே எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் காதலிப்பதும் எனக்கு நன்றாக தெரியும் மகள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவள் தேர்வு சரியாக இருக்கும் என்பதற்ககாக மட்டுமல்ல உங்க குடும்பம் நல்ல குடும்பம் என்பதற்காகவும், இந்த வயதில் உங்களை மிரட்னால் நன்றாக படிக்க மாட்டீங்கள் எனவும் நான் உங்களை எந்த கேள்வியும் கேட்கவில்லை..

நீ படிக்கும் ஊரில் ஓரிருமுறை உன்னை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது அப்போது தான் தெரிந்து கொண்டேன் உன்னிடம் எந்த கெட்டபழக்கமும் இல்லை என்று. நன்றாக படித்துள்ளாய் நல்ல வேலையில் உள்ளாய் நீ ஏன் வேறு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்றார் நிதானமாக.... சரவணன் கண்ணில் நீர் பொழ பொழ வென்று வந்தது.

காயத்திரியை சந்தோசமாக வைத்துக்கொள்ளத்தான் நான் இந்த அளவிற்கு முன்னேறினேன். இன்று நன்றாகவும் இருக்கின்றேன் இப்படி சொல்கிறீர்கள் என்றான்.

குறிக்கிட்ட குண்டுமணி என்னய்யா பேசற இவ்வளவு நேரம் பாரட்டிட்டு கடைசியில் இப்படி சொல்கிறாய் நீ சாதி பார்க்கமாட்டாய் என்று தெரியும் அதுவும் சரவணன் உன் சாதிதான் என்ன நெருங்கிய உறவு கிடையாது அப்புறம் ஏன் இப்படி சொல்ற நீ ரொம்ப தப்பு செய்கிறாய் என்று அவர் அதட்ட...

இல்ல மணி நான் சரவணன் நன்றாக இருக்கவேண்டும் என்தற்காகத்தான் சொல்கிறேன் அவன் என் மகளை திருமணம் செய்தால் நன்றாக வாழ இயலாது அதனால் சொன்னேன் என்றான். ஏனய்யா வாழ முடியாது அவனுக்கு சொத்து பத்து இல்லையா இல்ல உனக்குத்தான் சொத்து பத்து இல்லையா என்று குண்டு மணி கோபமாக பேச...

அவளுக்கு இதயமே இல்லையா என்று கதறினார் காயத்திரி அப்பா... இது வரை யாருக்கும் ஏன் காயத்திரிக்கே தெரியாது பார் அவளின் டாக்டர் ரிப்போட்டை என்று புல்லட்டில் வைத்திருந்த அவளது 12 வயதாகும் போது எடுத்த ரிப்போட்டை கான்பித்தார் அதில் காயத்திரிக்கு சிறுவயதிலேயே இதய வால்வுகள் சரியான அளவு வேலை செய்யவில்லை இந்த ரிப்போட்டை நான் கான்பிக்காத மருத்தவர்  30 வயது வரை தான் இருப்பாள் எனவும் இதயத்தை மாற்றினாள் இன்னும் ஒரு வருடம் சேர்ந்து இருப்பாள் என்று சொல்றாங்க.. தெரிஞ்சு எப்படியா கட்டி வைப்பேன்..

இதைக் கேட்ட காயத்திரி திக்கெற்று நின்றாய் நெஞ்சில் சளி அப்படின்னு தானே இத்தனை நாளும் அப்பா மருத்துவமனைக்கு கூட்டி சென்றார் என்று ரிப்போட்டை தேடி பார்த்தாள் ஆனால் அவளால் புரிந்து கொள்ள இயலலில்லை...

அவள் இருக்கும் வரை அவளைப்பார்துகொண்ட இருக்கிறேன் என்று இன்றும் மும்பையில் வேலை செய்யும் சரவணன் திருமணம் செய்து கொள்ளவில்லை..

சரவணின் திருமணத்திற்காக தனது சம்பளத்தை தனியாக அவன் பேரில் வங்கியில் போட்டுவைத்த காயத்திரி சரவணன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வான் என்று கடந்த மூன்று மாதமாக படுத்த படுக்கையாக நம்பிக்கையோடு இருக்கிறாள்...

கிராமத்து மனசு....

Monday, May 14, 2012

குடும்பத்தில் பெண்களின் விருப்பம்...


ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களுக்கு என எதிர்பார்ப்பும் விரும்பமும்  நிச்சயம் இருக்கும். அது தனது கணவர் மற்றும் குழந்தையின் பேரில் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் இருவரும் கஷ்டப்பட்டாலும் கணவனை விட மனைவிக்கு பொறுப்பு அதிகம் என்பதை மறுக்க இயலாது குறைந்த பட்சம் பெண்களின் விரும்பம் என்னவாக இருக்கும் என்பதில் கிடைத்த வரிகள்....

உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா? (சமையல் கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் இருந்தாலும் பாராட்டினால் அடுத்த நாள் இன்னும் நன்றாக சமைக்க முயற்சி செய்வர்)

 வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

தன் கணவன் சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது பொறுப்பாக கணவனே அனைத்தையும் முன்னரே எடுத்து வைத்து விட்டு சந்தோசமாக செல்ல வேண்டும்.

உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.

சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

“இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என அடிக்கடி பாராட்ட வேண்டும் (இரவு ஆடையை கூட சொல்லலாம்)

நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்.

கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது. பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு வர வேண்டும்

குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
 
 நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

 நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

 பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

 அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

 படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

 பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

 சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

மனைவி எதிர்பார்க்காத நேரத்தில் தினமும் ஒரு திடீர் என நச்சுன்னு முத்தம் கொடுக்க வேண்டும்.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

Wednesday, August 3, 2011

கணவனிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்...


ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும்.

பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களிடம் பெண்கள் பொதுவாக எதிர்பார்ப்பது என்ன

பெண்கள் ஒரு விசயம் குறித்து ஆண்களிடம் பேசும் போது அதை தெளிவாகவும் கவனமாகவும் கேக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவ்வாறு கேட்டுக்கொண்டு அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொண்டால் அவளது மன உணர்வை ஆண்கள் புரிந்துகொண்டதாக நினைக்கின்றனர்.

பெண்களின் கோப, எதிர்மறைவான எல்லா உணர்வுகளும் அவர்களின் 3 நாள் பிரச்சனையுடன் தொடர்புடையவை அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்கள் இரக்க உணர்ச்சியை முன்னேற்றிக்கொண்டால் நல்லது. அதற்காக கண்ணீர் விட்டு அழவேண்டியதில்லை. தோழமையின் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்த வரை தனிமையில் தொட்டு பேசுவது, மெல்ல அடித்து விளையாடுவது போன்றவற்றை மிக்க விரும்புவர் அதனால் அடிக்கடி பேச வேண்டும்

தனது கணவர் மாதத்திற்கு ஒரு முறையாவது தமக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புவர். இது பொதுவானது தான் ஆனால் எதிர்பார்க்காவண்ணம் சமைத்து அசத்த வேண்டும் இதை மிக ரசிப்பார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள் ஆனால் அவர்களை சொந்த உடமைகளாக கருதாதீர்கள்.

தனது ஆண் எப்போதும் தங்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதை பெண்கள் விரும்புவர், பெண்களை விட்டு செல்லும் தருணங்களில் அந்த அன்பை வித்தியாசமாக வழியில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆண்கள் விரும்பும் பெண்களை மிக வேகமாக இழப்பதற்கு ஒரு வழி பொய் சொல்வது ஆண்கள் மிக நேர்மையாக இருப்பதை அதிகம் விரும்புவர்.

வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அதிகமாக கணவனிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.

விடுமுறை நாளில் கூட இருக்கும் போது வேலையை பகிர்ந்து கொண்டு வெளியில் சென்று வரலாம் என்று அவர்களை அழைப்பதை மிக விரும்புகின்றனர்.

பெண்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறினால் குடும்பமும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...