Sunday, February 12, 2012

காதலர் தினம்


தந்தை தினம் வருகிறது  பல பேர்களுக்கு அது வந்து  போவதே தெரிவதில்லை. தாய் தினம் வருகிறது அதை நாம் யாரும் அந்த அளவிற்கு கொண்டாடுவதில்லை இன்னும்  நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பித்த பல தியாகிகளின் பிறந்த நாட்கள் நமக்கு நினைவுக்கு வருவதில்லை. ஆனால் இந்தக் காதலர் தினம் மட்டும் ஒரு பத்து நாட்கள் முன்பாகவே சூடு பிடிக்கத் தொடங்கி அனைவரையும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி உள்ளது அதற்கு மிக முக்கிய காரணம் மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம். இந்த வருடம் வாரப்பத்திரிக்கைகளில் எல்லாம் நல்ல முக்கியத்துவம் கொடுத்து நிறைய கவிதைகளை வெளியிட்டு காதலர் தினத்தை இளம் தலைமுறையினரிடையே சூடக்கி உள்ளது.

இன்று பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து பயணம் என எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சு காதலர் தினம் தான் நிறைய கடைவீதிகளில் பரிசுகள் வாங்க கூட்டங்களாக இருக்கின்றது. இன்றைய கால கட்டத்தில் சிறு குழந்தைகள் கூட காதலர் தினத்தை பற்றி அறிந்து வைத்துள்ளனர். என் பக்கத்து வீட்டுப்பையன் 5 ம் வகுப்பு படிக்கிறான் அவன் அம்மாவிடம் அம்மா எனக்கு அந்த பொம்மை வேண்டும் என அடம்பிடித்துள்ளான் அம்மா எதுக்குடா என்று கேட்டதற்கு என் Girl Friend சுபாவிற்கு நான் இதை பரிசா கொடுக்கிறேன் என்று அடம்பிடித்து அவன் அம்மாவிடம் வாங்கிவிட்டான் அவர்கள் இதை சொல்லி சொல்லி சிரிக்கின்றனர்.. அந்த அளவிற்கு இன்று மிக அதிகமானோர் விரும்புவது காதலர் தினத்தை..

ஒருவருக்கு அன்புடன் பரிசு கொடுப்பதில் தவறொன்றுமில்லை. பரிசு கொடுக்க கொடுக்கத்தான் எதிர்பார்ப்புகள் அதிகமாகி அன்பு அதிகமாகும். பரிசுகளை காதலர்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நாம் அன்பு வைத்திருக்கும் எவருக்கும் கொடுக்கலாம்..

நம் நாடு பெற்றோர்களைத் தெய்வமாக மதிக்கும் நாடு தாய் தந்தையைப் பராமரித்து கடைசிவரை அவர்களைப்  பாசத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமை. ஆகையால்  தனியாக தாய், தந்தை தினம் நமக்கு தேவையே இல்லை. நம் மனத்தில் தினமும் அவர்கள் குடியிருக்கிறார்கள். மேல் நாட்டினிலே மகன், மகள் 16 வயது வந்தால் தனியாக குடிபோகிறார்கள். அவர்கள் சுதந்திரத்தில் ஒருவரும் தலையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆகையால் இந்தத் தந்தை  தினம் ..,தாய் தினம் என்று அவர்களுக்காக ஒரு நாள் ஒதுக்குகிறார்கள். அதை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். அது போலத்தான் வேலண்டைன் என்பவரது நினைவு நாளை காதலர் தினமாக அறிவித்து அன்று பரிசுகள் கொடுத்து மகிழ்கின்றனர்.
நம்நாட்டுக்கலாசாரம். காதலைப் புனிதமாக மதிக்கிறது.  இலை மறைவு தலை மறைவு என்பார்கள் அது தான் நம் கலாச்சார காதல். இந்த காதலர் தினம்  ஒரு பதினைந்து வருடங்களாகத்தான் நம் ஊரில் பிரபலமாகிவிட்டது. காதலர் தினத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் அதை ஆரோக்கியமாக உண்மையான அன்பை தன்னலமில்லாத அன்பைச்செலுத்தி கொண்டாட அதைவிடச் சிறந்தது வேறில்லை. என்னைப்பொறுத்த வரை நாம் மிகுந்த அன்பு வைத்திருப்பவரை தினமும் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் காதலர் தினமே..

இந்த தினம் அன்பை வெளிப்படுத்த. ஆனால் அதை ரசாபாசமாக உபயோகிப்பதற்கு அல்ல.  இந்த நாளில் பூக்களின் மூலமாகவோ, பொருட்களின் மூலமாகவோ  அன்பை வெளிப்படுத்துகின்றனர். காதலர் தினத்தில் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு அன்பை மட்டுமின்றி, பரிசும் கொடுத்து அசத்துகின்றனர்.

உண்மைக் காதலுக்கு நாமும்  பச்சைக் கொடி காட்டுவோம். எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்பை அள்ளி வழங்குவோம். உலகக்காதல்ர்களுக்கு என்  காதலர் தின நல்வாழ்த்துகள்.

Friday, February 10, 2012

மூக்குத்தி முத்தழகு...


மூக்குத்தியைப்பற்றி ஒரு காலத்தில் பல பாடல்கள் வந்து உள்ளன, அதற்கு காரணம் அப்போதெல்லாம் மூக்குத்திய பெண்களை நிறைய பார்க்க முடியும் ஆனால் இப்போது மிக மிக குறைவு....அழகாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. மூக்குத்தி குத்திய பெண்ணின் அழகு தனிதான். பெண்கள் மூக்குத்தி அணிந்திருந்தால் அவர்களின் அழகு மிளிர்கிறது என்பார்கள். மூக்குத்தி குத்துவது அமைத்தனம் என்றும் கூற கேள்விப்பட்டு இருக்கிறேன். மூக்குத்தி அணிகலன் மட்டுமல்ல உடலுக்கும் நல்லது என்று கூறுகிறார்கள்.

கிராமப்புறங்கிளில் மூக்குத்தி அணிந்த பெண்கள் அதிகம் காணலாம் அன்று. இன்று மூக்குத்தி குத்திய பெண்களை கிராமம் மட்டுமல்ல எங்கும் பார்த்தாலும் கிடைக்கமாட்டர்கள் தேடினால் தான் கிடைப்பார்கள். முன்காலத்தில் பெண்கள் மூக்குத்தி அணிந்தது மருத்துவக்காரணம் அதிகம் அதனால் தான் மூக்குத்தி அணிந்துள்ளனர் காலப்போக்கில் அது அடிமைத்தனம் என்று கூறி கணவன் இறந்தால் பெண் மூக்குத்தியையும் கழட்ட வேண்டும் என்ற அடிமைத்தனத்தால் பல பெண்கள் மூக்குத்தி குத்துவதை தற்போது விரும்புவதில்லை. அதனால் மூக்குத்தி குத்திய பெண்களை இப்போது பார்ப்பது அரிதாகிவிட்டது. மூக்குத்தியை பெண்கள் பலங்காலத்தில் குத்தியதற்கு மருத்துவ காரணங்கள் தான் அதிகம்.



மருத்துவ காரணங்கள்

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.  மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். 

மூக்குக் குத்துவற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. மூக்குத்தி அணிவதால் பல நன்மைகள் உண்டு. ஆனால் கணவனை இழந்ததும் பெண் மூக்குத்தியைக் கழற்ற வேண்டுமென்பது  எப்படி வந்தது என்பது  தெரியவில்லை. அப்படிக் கழற்றும்  போதுதான் மூக்குத்தி அடிமைச்சின்னமாக மாறுகிறது.

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் காரணமாகத் தான் செய்கின்றனர் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் மூக்குத்தி...

Thursday, February 9, 2012

நானும் எனது ஊரும் (தொடர்பதிவு)


இன்று நிறைய பேர் தாம் பிறந்து வளர்ந்த ஊர்களை விட்டு கால ஓட்டத்தில் வேலை, வேலைப்பளு, குழந்தைகள் கல்வி என்று ஏதோ ஒரு காரணத்திற்காக நம் ஊரை விட்டு வேறு ஊரில் வாழ்ந்து வருகிறோம். இதில் அதிகம் பேர் தனது வேலைக்காகவும், தொழிலுக்காகவும் கிராமத்தை விட்டு நகரத்தில் சென்று வாழ்பவர்கள் அதிகம். இன்னும் பலர் வெளிநாட்டில் வேலை செய்து வாழ்கிறவர்களும் தன் சொந்த ஊரை விட்டு பிரிந்து தான் இருக்கின்றனர். நாம் அனைவரும் தினமும் ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் பிறந்து வளர்ந்த கிரமாத்தை நிச்சயம் நினைவில் கொள்கிறோம். அது போல எனது ஊரைப்பற்றி என் பதிவில் பதிவதை பெருமையாக நினைத்து ஊரையும் ஊர் நினைவுகளையும் பதிவாக்குகின்றேன்..

எனது ஊர் ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் 13வது கிலோமீட்டரில் அமைந்துள்ள முற்றிலும் விவசாய பூமி. கிராமத்தை பொறுத்தவரை பூர்வீக கிராமம் தான் அதிகம் இருக்கும் எங்கள் ஊரைப்பொறுத்த வரை இது பூர்வீக கிராமம் இல்லை எங்கள் ஊரில் இருந்து குறிச்சி என்ற கிராமத்திற்கு செல்லும் வழி மேட்டூர் சாலையில் இருந்து பிரிகிறது இதனால் சுற்றி உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் கூடும் இடமாகவும், பேருந்துக்கு இங்கே தான் வரவேண்டிய நிலை இருந்தால் 1980க்கு அப்புறம் சிறிது சிறிதாக வளர்ந்த கிராமம். இன்று கிராமமும் இல்லாதா நகரமும் இல்லாத ஒரு 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஊராக இருக்கின்றது.

எங்கள் ஊரின் இரண்டாவது தலைமுறையினர் என் போன்றவர்கள். எமது தந்தை மற்றும் அவர் வயதையுள்ளவர்கள் முதல் தலைமுறையினர். எங்கள் ஊரின் ஒரு சிற்றாறு ஓடுகிறது இந்த ஆறு எங்கள் ஊரில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் சேருகிறது. இது காவிரியின் துணை ஆறு என்றும் சொல்லலாம். மேட்டூர் அணை கட்டும்போது கட்டுமானப்பொருட்கள் எல்லாம் இந்த வழியாகத்தான் கொண்டு செல்லவேண்டும் என்பதால் இந்த சிற்றாறின் குறுக்கே ஆங்கிலேயர் பாலம் ஒன்றை கட்ட முற்பட்டனர் அப்போது இந்த இடத்தில் ஊர் இல்லாததால் அந்த பாலத்திற்கு ஆங்கிலேயர் சிற்றாறு என்பதை சித்தார் பாலம் என்று பெயரிட்டனர் இதுவே இன்றும் தலைத்து நிற்கின்றது.

ஊரைச்சுற்றியும் வயல் அதுவும் முப்போகம் விளையும் நிலங்கள் காவிரின் நீர்ப்பாசனமும், கிணற்றுப்பாசனமும் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருப்பதால் இங்கு நெல், வாழை, கரும்பு, மஞ்சள் தான் அதிகம் பயிரிவர். தொழில் என்று பார்த்தால் விவசயாத்தை சார்ந்த தொழில்கள் மட்டுமே இங்கு அதிகம். தொழிற்சாலைகள் என்று ஒன்றும் கிடையாது.

இந்த ஊரில் பிறந்து வளர்ந்த போது முதலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்ந்து 5ம் வகுப்பு வரை இங்கு தான் படித்தேன். 8ம் வகுப்பு வரை பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்கும் 9 ம் வகுப்பில் இருந்தே ஊரைப்பிரிந்து விட்டேன்.. நாங்கள் விளையாடும் விளையாட்டுக்கள் காலத்திற்கு ஏற்றாற் போல் மாறும். முதலில் கண்ணாமூச்சு, திருடன் போலீஸ், 5க்கல், பல்லாங்குழி, நொண்டி, கொலை கொலையா மந்திரிக்கா, கோழிக் குண்டு, கல் ஆட்டம், பில்லுக்குச்சி, தாண்டில், கஞ்சி காய்ச்சுதல் என சிறுவயது விளையாட்டுக்கள் இன்று மறைந்து விட்டது.

பெண்கள் நெல் அடிக்கும் காலங்களில் நெல் அடித்து முடிந்த பின் சாமிக்கு பொங்கல் வைத்து கும்மியடித்து பாட்டு பாடுவார்கள் இது சிறுவயதில் மிகமிக ரசித்த ஒன்று இன்று இதுவும் ஊரில் நடப்பது இல்லை.

எங்கள் ஊர் சினிமா தியேட்டர் பெயர் வெங்கடேஸ்வரா இந்த தியேட்டர் மிக பிரபலம் காரணம் இது ஒரு ஓபன் தியேட்டர் தியேட்டரின்  உள் இருக்கைகள் அனைத்தும் சிமெண்ட்டால் வடிவமைக்கப்பட்டு இருக்கும், மேலிருந்து கீழ் காரை பூசப்பட்ட தரை என்ங்கும் மண் இல்லாத சினிமா கொட்டகை அது. மழைவந்தால் ஓரமாக நிற்க மட்டுமே அட்டை போட்ட இடம் இருக்கும். இங்கு டிக்கெட் விலை கடைசியாக நான் போன போது 5 ரூபாய். இந்த தியேட்டதில் நண்பரோடு படுத்துக்கொண்டு படம் பார்க்கும் சுகம் இன்று எந்த ஏசி தியேட்டரில் 300 ரூபாய் கொடுத்து பார்த்தாலும் கிடைப்பதில்லை. இங்கு நான் முதன் முதலாக பார்த்த படம் முதல்மரியாதை. இந்த தியேட்டர் இப்போது இயங்கவில்லை விரைவில் இடிக்கப்போகிறார்களாம்.

எங்கள் ஊரின் மிக முக்கிய விளையாட்டு கிரிக்கெட்தான் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை கிரிக்கெட் மட்டுமே எங்கள் ஊரின் பிரதான விளையாட்டு. நாங்கள் ஆரம்பித்த சித்தார் கிரிக்கெட் கிளப் இன்று எங்கள் தம்பிமார்கள் கலக்கிகொண்டு இருக்கின்றனர். சுத்து வட்டாரத்தில் சித்தார் அணி என்றாலே ஒரு பயம் இருக்கும். இந்த அணியின் பதினோராவது ஆள் தான் நான் ஆம் பந்து மட்டுமே வீசுவேன் மட்டை அந்த அளவிற்கு வீச வராது. எங்கள் அணியின் முதல் ஓவர் எங்கு சென்றாலும் அது என்னுடையதாகத்தான் இருக்கும். எங்கள் அணி சார்பாக தொடந்து 15 வருடம் கிரிக்கெட் போட்டி நடத்தினோம் தற்போது இப்போட்டிகள் குறைந்து விட்டன.

என் கிராமத்தில் மறக்க முடியாத மற்றொன்று கிணற்றுக்குளியல் வார இறுதி நாட்களில் காலை 11 மணிக்கு கிரிக்கெட் விளையாடிவிட்டு சென்றால் மதியம் 3 வரை கிணற்றுக்குளி குதித்துக்கொண்டு தண்ணீரில் படுத்துக்கொண்டும் இருப்போம். ஒரு சில நாட்களில் மோட்டார் ஓடும் போது மோட்டார் தண்ணீரில் தலை கொடுத்து குளிப்பதும் மிக மிக சுகமே. கிணற்றில் குளித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.

ஊரில் மிக முக்கியமான சந்தோசம் திருவிழாதான் கிராமம் என்றாலே திருவிழாவிற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் அந்த வகையில் எங்கள் ஊரும் அப்படியே. மாரியம்மன் கோவில் கம்பம் நட்டு விட்டால் போதும் தினமும் இரவு கோயிலுக்கு சென்று கம்பத்தை சுத்து ஆடும் ஆட்டம் இன்றும் திருவிழாக்காலங்களில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறேன். கோயிலுக்கு சென்று அந்த தாளத்துக்கு ஏற்ப இரண்டு ஆட்டம் ஆடினால் தான் அந்த ஆண்டு திருவிழா நிறைவு பெற்றது போல் ஒரு திருப்தி. எங்கள் ஊர் திருவிழா பதினைந்து நாள் இதில் கடைசி 5 நாட்கள் நிறைவாக இருக்கும். கிராமமாக இருந்தாலும் நிச்சயம் ஒரு நாள் பட்டிமன்றம், அடுத்த நாள் கரகாட்டம், நையாண்டி மேளம், நடன நிகழ்ச்சி, எங்கள் ஊர் பசங்க நடிக்கும் நாடகம், கிராமத்து கூத்து என்று ஒவ்வொரு நாளும் களை கட்டும்.. இன்றும் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. வருடா வருடம் 5 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு போய் திருவிழாவை அனுபவித்து வருகிறேன்.

என்னதான் நிறைய சம்பாரிச்சு, சொத்து பத்துக்கள் வெளியூரில் இருந்தாலும் சொந்த ஊரில் உள்ள  பழைய வீட்டில் படுத்து விட்டத்தைப்பார்த்து கனவு காணும் சுகமே தனிதான் எனக்கு...

இன்று பதிவுலகில் தொடர்பதிவு எல்லாம் எழுதும் அளவிற்கு யாருக்கும் நேரம் இல்லை ஏன் எனில் பதிவெழுதவே எல்லாருக்கும் நேரம் இல்லாத போது எங்க தொடர்பதிவெழுதுவது என அனைவரும் சொல்கின்றனர் இருந்தாலும் அனைவருக்கும் தனது ஊரைப்பற்றி நிச்சயம் எழுதால் என்ற எண்ணம் மனதில் இருக்கும் அதற்காகவே நான் இப்போது என் ஞபாகத்திற்கு வரும் நண்பர்களை எல்லாம் தொடர்பதிவு எழுத அழைக்கிறேன் நான் தொடர் பதிவிற்கு அழைத்தவர்கள் எல்லாம் நீங்களும் 10 பேரை தொடர்பதிவுக்கு அழைத்து அனைவரையும் அவர்கள் கிராமத்து நினைவுகளை பூக்கவைப்போம்..

பங்காளி பிரபாகர்
வீடு திரும்பல் மோகன்குமார்
ஆரூர் மூனா செந்தில்
தமிழ்வாசி பிரகாஷ்
வீடு சுரேஷ்
சிதறல்கள் தீபா
பலா பட்டறை சங்கர்
திண்டுக்கல் தனபாலன்
தென்றல் சசிகலா
விக்கியின் அகடவிகடங்கள்
மெட்ராஸ்பவன் சிவக்குமார்

இன்னும் நிறைய நண்பர்களை அழைக்கவேண்டும் இத்தொடர்பதிவிற்கு நான் அழைத்த நண்பர்கள் அனைவரும் குறைந்த பட்சம் 10 பேரையாவது தொடர்பதிவிற்கு அழைக்க வேண்டுகிறேன்...

Wednesday, February 8, 2012

அஞ்சறைப்பெட்டி 08/02/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
தமிழகம் முழுவதும் இன்று பரபபரப்பாக உள்ள ஒரே பிரச்சனை மின்வெட்டு தான். தினமும் 8 மணி நேரம் என்பது ரொம்ப கொடுமையான விசயம். இதில் சென்னைக்கு மட்டும் தினம் ஒரு மணி நேர மின்வெட்டு என்பது சென்னைவாசிகள் சந்தோசப்பட வேண்டிய விசயம்.  மின்வெட்டு பிரச்சனையை முதல்வர் சீக்கிரம் தீர்க்க வேண்டும் இல்லையேல் வருகிற கோடை காலத்தில் மக்கள் படாதபாடு படவேண்டிய இருக்கும்...

...............................................................................................
நண்பர்கள் எல்லாம் KFC இல் சாப்பிடலாம் என்று போனோம் இது தான் எனக்கு முதல் முறை.. இங்க சிக்கன் என்னடா ஸ்பெஷல்ன்னு பார்த்தா நம்ம ஊரு வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய்க்கு பதில் சிக்கன் வைத்திருக்கிறார்கள்... காரமே இல்ல... அதுவும் உப்பு வேற அதிகம்... இதைத்தான் உலகம் முழவதும் விரும்பி சாப்பிடுகிறார்களாம்... என்ன இருந்தாலம் நம்ம ஊரு நாட்டுக்கோழி சாருக்கும் கருவாட்டுக்குழம்புக்கு ஈடாகதப்பா... 
...............................................................................................
 
அமெரிக்காவில் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது டிவிட்டர் இணையதளத்தில், சிகிச்சை முடிந்து திடகாத்திரமான மனிதராக இந்தியா திரும்புவேன். எனக்காக பிரார்த்திருக்கும் இந்திய மக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊடகங்கள் அளிக்கும் ஆதரவுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன், என்று கூறியுள்ளார்.

மீண்டும் திரும்பி வந்து உங்கள் கிரிக்கெட் உடையையும், தொப்பியையும் அணிந்து கொண்டு இந்தியாவிற்காக விளையாட வேண்டும் நீங்கள் மீண்டும் ஆறு பந்துக்கு ஆறு சிக்ஸ் அடிச்சு உங்கள் சாதனையை நீங்களே முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்... மீண்டும் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையில்...
................................................................................................

இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்.) இந்திய போலீஸ் பணி (ஐ.பி.எஸ்.) இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்.) ஆகிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் இதுவரை 30 ஆண்டுக்கு ஒரு முறை தான் அவர்கள் திறன் ஆய்வு செய்யப்பட்டது இனி 15 ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு திறமையற்றவர்களுக்கு கட்டாய ஓய்வு என்று புதிய திருத்தம் கொண்டுவந்துள்ளனர்... அ

ப்படியே அவர்கள் வேலைக்கு சேரும் போது இருந்த சொத்து மதிப்பும் 15 வருடத்துக்கு அப்புறம் இருக்குற சொத்து மதிப்பையும் கணக்குபோடுங்க...
 
...............................................................................................

ஜான் எப் கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையின் பிரஸ் அலுவலகத்தில் பயிற்சி பெற வந்தவர் மிமி ஆல்போர்ட்(69). அப்போது அவருக்கு வயது 19. அவர் முன்னாள் அதிபர் கென்னடியுடன் தனக்கிருந்த ரகசிய உறவு குறித்து ஒரு புத்தம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் வெள்ளை மாளிகையில் பயிற்சிக்கு சென்ற 4வது நாளே அங்குள்ள நீச்சல் குளத்திற்கு வருமாறு என்னை கென்னடி அழைத்தார். அதன் பிறகு கென்னடியின் நெருங்கியநண்பர் டேவ் பவர்ஸ் என்னை ஒரு பார்ட்டிக்கு அழைத்தார். கென்னடி நிறைய குடித்துவிட்டு எனக்கு வெள்ளை மாளிகையை சுற்றிக்காண்பித்தார். அப்போது அவர் தனது மனைவியின் அறைக்கு அழைத்துச் சென்று எனக்கு மிக அருகில் வந்தார்.

பின்னர் என்னுடன் உறவு கொண்டார். நீ இதற்கு முன்பு உறவு கொண்டுள்ளாயா என்று அவர் என்னிடம் கேட்டார். இல்லை என்று சொல்ல வந்த நான் பிறகு ஆமாம் என்று கூறினேன். உறவுக்குப் பிறகு அவர் ஆடையை அணிந்து கொண்டு ஒரு அறைக்கு சென்றுவிட்டார்.

நான் அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால் அவரோ மிகவும் சகஜமாக இருந்தார். அன்று வீட்டுக்கு செல்லும் வழியெல்லாம் இனி நான் கன்னியில்லை என்பது தான் என் நினைவுக்கு வந்தது.

மறுவாரம் நான் மீண்டும் அவருடன் நீச்சல் குளத்திற்கு சென்றேன். அதன் பிறகு ஒரு அறைக்கு சென்று உறவு வைத்தோம். அன்றில் இருந்து 18 மாதங்கள் எங்களுக்கு இடையே ரகசிய உறவு இருந்தது. அவர் அதிபர் என்பதால் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. நாட்டின் மிகவும் முக்கியமான நபர் என் மீது ஆசைப்படுகிறார் என்ற எண்ணத்தால் என்னால் அவரை ஒதுக்க முடியவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
..................................................................................................

அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினர் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் வரியாக 15 பில்லியன் டாலரை அந்த நாட்டுக்குச் செலுத்தியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார்.

பரவாயில்லை நம்ம மக்கள் அங்க போயாவது ஒழுக்கமா வரி செலுத்துகிறார்களே கொஞ்சம் பாராட்டப்பட வேண்டிய விசயந்தான்...

..................................................................................................

தற்போது இந்தியா முழுவதும் மிக பரபரபப்பாக பேசப்படும் விசயம் கர்நாடகாவில் அமைச்சர்கள் செல்போனில் சீன்படம் பார்த்த விசயந்தான்... இவர்களை சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனையைப்பற்றி பேச அனுப்பினால் அங்க உட்கார்ந்து பொறுமையாக சீன்படம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் இவர்களை எல்லாம் ஓடவிட்டு துரத்தனும்...

..................................................................................................

சீனாவில் ஏராளமான பெண்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குயிங்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஷாங் பெல்சுயான் தலைமையிலான குழுவினர் எய்ட்ஸ் நோய் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெண்களுக்கு அவர்களது கணவர்களால் எய்ட்ஸ் நோய் பரவியது தெரியவந்தது. அதுகுறித்து மேலும் விரிவாக ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், ஓரின சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் நாட்டின் கலாசார சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகும் தாங்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழாமல் ஓரின சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் தங்களது எய்ட்ஸ் நோயை மனைவிகளுக்கும் பரப்புகின்றனர்.

ஓரின சேர்க்கை ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்கள் மூலம் சுமார் 1 கோடியே 60 லட்சம் பெண் கள் எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்களால் அவதிப்படு கின்றனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சீனமக்கள் எல்லாவிசயத்திலேயும் உலகத்தில் முதல் இடத்தை சீக்கிரம் பிடித்துவிடுவார்கள் போல...

.................................................................................................

2ஜி வழக்கில் மீண்டும் திருப்பம் அடுத்த கைது யார்? கடந்த சில வருடங்களாக பத்திரிக்கைகளில் அதிகமாக வந்த செய்தி எதுவென்றால் அது 2ஜி விவகாரமாகத்தான் இருக்கும். இப்போது மீண்டும் இவ்வழக்கில் நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் நடந்து வருகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்து உள்ளே போகப்போவது யார் என்று...

.................................................................................................

இந்தியாவில் உள்ள அனைவரது கவனமும் உபியில் நடக்கும் சட்டமன்ற தேர்தலைத்தான் அனைத்து அரசியல் ஆர்வலர்களும் உற்று நோக்குகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் அதிக எம்எல்ஏக்களை கொண்ட சட்டமன்றம் அது. இங்கு மீண்டும் யார் ஆளப்போகிறார்கள் என்பது மட்டுமல்ல தற்போது நடக்கும் தேர்தல் தேர்தல் கமிஷன் தமிழகம் மற்றும் பீகாரில் நடத்தியது போல மிக கட்டுப்பாடுடன் நடத்துகின்றனர் இதனால் அங்கு இருக்கும் தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் வாக்களர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். எத்தனை பேர் ஓட்டு போட வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்... தமிழகம் போல் எதிர்பாராதவிதமாக 70 சதவீத வாக்குகள் பதிவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..



தகவல்
 
 
பனி படர்ந்து இருக்கும் அண்டார்டிகாவில் உலக நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் அண்டார்டிகாவின் பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தெரிய வந்துள்ளது. இதை ரஷிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ரஷியாவின் ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் அங்கு உறைந்து கிடக்கும் ஐஸ்கட்டியை டிரில்லிங் எந்திரம் மூலம் துளையிட்டனர். சுமார் 3,768 மீட்டர் ஆழத்துக்கு (4 கி.மீட்டர் ஆழத்துக்கு) பூமியில் துளையிட்டனர்.

அப்போது அதன் அடியில் ஏரி மறைந்து இருப்பது தெரியவந்தது. அதுவும் பனிக்கட்டியாகதான் உள்ளது. அந்த ஏரியின் மீது 2 கோடி ஆண்டுகளாக ஐஸ் மூடிக்கிடக்கிறது. அந்த ஏரியில் ஆக்சிஜன் உள்ளது. எனவே அங்கு சில நுண்ணிய உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த தகவல் ஐஸ்கட்டியை துளையிட்டு ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் தேன்சிட்டு என்ற பெயரில் தனது கவிதையை பதிவாக்கி வருகிறார் திவ்யா என்கிற தேன்மொழி அவர்கள்.. மிகவும் ரசிக்கவைக்கும் கவிதைகள் பதிவு... அனைவரும் நிச்சயம் அறிய வேண்டிய பதிவு...

http://thiviyathanancheyan.blogspot.in/2012/01/blog-post_25.html

 
தத்துவம்
 
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும் கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்.

உயிர் பிரியும் முன் பலமுறை இறப்பார்கள் கோழைகள், வீரனுக்கு மரணம் ஒருமுறைதான்.

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

Wednesday, February 1, 2012

மனைவியின் அன்பை பெற...


இல்லற வாழ்வு இனிமையாக கழிய அன்பு தான் முக்கியம். மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது.

பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்.....

முதலில் மனைவியிடம் நிறைய நேரம் பேசுங்கள் ஆபிசில் இருந்து வந்ததும் அவளின் உடையைப் பார்த்துவிட்டு கொஞ்சம் பாராட்டுங்க. அடுத்து சாப்பிட்டாயா, காலைல இருந்து என்ன செய்தாய் என்று பேசிகிட்டே இருங்க..
உங்க அலுவலக டென்சனை எல்லாம் வீட்டின் முன் நுழையும் போது செப்பலை கழட்டு விடும் போது அந்த நினைப்புகளை கழட்டிவிட்டுறுங்க.

இன்று தான் திருமணம் ஆனது போல் ஒவ்வொரு நாளையும் நினைச்சுகுங்க. புதுமாப்பிள்ளை போல் எப்பவும் சந்தோகமாக திரியுங்கள் உங்கள் மனைவியின் முன்.

வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள் வேற வழியில்லை வீட்டு வேலைகளை நீங்க தான் நண்பர்களே செய்ய வேண்டும் .. என்னை அடிக்க வர வேண்டாம் ஒகேவா? பெண்களை மயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதுக்கே சோர்ந்து போனா எப்படி?

பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.

மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் ( மல்லிகை பூ, அல்வா ) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள் .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள். வெளியில் அழைத்து சென்று அதாவது ஒரு அன்பு பரிசை அளியுங்கள் (அப்புறம் உங்களிடம் அன்பு பொங்கும்)

ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப உண்மை. அதற்க்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. உணர்வு பூர்வமான இடங்களில் அழுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்..

நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள். அவர்கள் முடிவு சரியாக இருந்தால் அதன் படி நடங்கள்..

பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். (நண்பர்களே மனைவியிடம் சண்டைப்போட்டு சாப்பாடு கிடைக்காத நாள்களில் இது நமக்கு மிகவும் கை கொடுக்கும்.. மாதத்தில் பாதி நாள் சண்டைதானே?) அவர்களுக்கு பிடித்தமானவற்றை நீங்களே சமைக்க முயலுங்கள் சாப்பிட்டதும் உங்களை மிக பாராட்ட வேண்டும். மாதத்தில் 4 முறையாவது சமைச்சு போடுங்க ( என்னைப்போல் தினமும் சமைத்து மாட்டிக்காதீங்க)

பெண்களுக்கு பேசுவது என்றால் பிடிக்கும். எனவே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல் , பொருளாதாரம் , ஊழல், உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக்கும் சைட்டுக்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுங்கள். நீங்கள் அடிக்கும் சைட்டைப்பற்றி அரை குறையாக சொல்லுங்கள் அப்புறம் உங்களுக்கு எமன் ஆகிவிடும் பார்த்து சொல்லுங்க.. மற்ற பெண்கள் அழகை மனைவியின் முன் விவரிக்காதீங்க ( அப்புறம் விவாகரத்தாகிவிடும்)

உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகிவிட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத்தாரோடு ஒத்து போங்கள்.அவர்கள் வீட்டில் உள்ளவர்களையும் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். ( முக்கியமாக மச்சினிச்சு கேட்டத வாங்கிக்கொடுத்துடுங்க )

மிக முக்கியமாக உங்கள் மனைவியின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் வெளியே செல்லும் போது அவர்களுக்கான புடவை, நகைகளை நீங்களே அவர்களிடம் கொடுத்து இன்று இதை அணி இந்த புடவைக்கு இது தான் அழகு என்று கொஞ்சலை அதிகரியுங்கள்... (திரும்ப உங்களுக்கு ஏகப்பட்ட கொஞ்சல்கள் வரும்)

அவ்வப்போது டயலாக் பேசுவதை விட்டுவிடாதீர்கள் டயலாக் பேசும் போது நீதான் என் உலக அழகி.. உன்னைத்தவிர எனக்கு வேற எதுவும் அழகா தெரியலை என்று பேசுங்க ( ஒரு பொய் சொல்வதான் ஒன்னும் குறைஞ்சு போக மாட்டிங்க.. மற்றொன்று அழகான பொய்களை பெண்கள் ரொம்ப விரும்புவாங்க)....

இதை எல்லாம் மறக்காமல் செய்து பார்த்து எனக்கு சொல்லுங்க நானும் எங்க வீட்டில் முயற்சி செய்கிறேன்.. விடா முயற்சி பலனைத்தருமாம்...