Monday, April 9, 2012

கிராமத்து திருவிழாவும் ரெக்கார்ட்டு டேன்சும்...


ரெக்கார்ட்டு டேன்சு இல்லை எனில் கிராமத்திருவிழா இன்று களைகட்டாது என்று சொன்னால் அது மிகையாகது. ஆபாசம் அதிகரித்ததால் அந்நிகழ்ச்சியை தடை செய்துவிட்டார்கள்... 

திருவிழா ஒவ்வொரு ஊரிற்கும் மாறுபடும். ஒவ்வொரு ஊரிற்கும் ஒரு முறை இருக்கும் அதன்படி அந்த ஊரில் திருவிழாக்கள் அமைந்திருக்கும். திருவிழா அந்த ஊரின் மக்கள் ஒன்றாக சந்தோசமாக இருக்க அந்த ஊர் முன்னோர்களால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் என்றும் சொல்லலாம். எங்கள் ஊர் திருவிழா பற்றியும் அதன் முறைகள் பற்றியும் முன்னேரே எழுதி உள்ளேன். திருவிழாவில் இரவு நேர கலை நிகழ்ச்சிகள் மிக பிரபலம். ஒவ்வொரு ஊரிலும் ஒரு நிகழ்ச்சிகள் என ஊருக்கு ஊர் வித்தியாசப்படும் இந்நிகழ்ச்சி பற்றி என் நினைவில் உள்ள அனுபவங்கள்...

திருவிழாவை எங்கள் வட்டார வழக்கில் நோம்பி என்று சொல்வோம்.  நான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது அப்போது எல்லாம் மே மாதம் மட்டும் தான் பள்ளி விடுமுறை. மே முதல் வாரத்தில் தான் எங்கள் திருவிழா வரும் அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி அப்போது இருந்து இப்போது வரை ஊரில் இருக்கும் போது இரவு நேர கலை நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் பார்ப்பது என் வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சிகள் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அனுபவமும்...

கூத்து



முதலில் திருவிழாவின்போது பொங்கல் நாள் வைக்கும் அன்று இரவு கூத்து நடத்துவார்கள். கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன. முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்தக் கூத்துக்களின் கதையம்சமும், கூத்துக்களினூடாக கூறப்படும் செய்திகளும் தற்போதைய சமூகத்தினரையும் ஈர்ப்பவையாக அமைந்து இருக்கும். கூத்தில் இரமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் உண்டு.. இந்த கூத்தில் கோமாளியின் நகைச்சுவை அவைரும் ரசித்து பார்க்கலாம்.. ( இவர் இடையில் கெட்டவார்த்தைகள் அதிகம் பயன்படுத்துவார்). இன்று இந்த கூத்து நிகழ்ச்சியை பார்ப்பது ரொம்ப கடினம்.



கூத்தில் பேசும் 2 அர்த்த வசனங்கள் இப்படித்தான் இருக்கும்....

“ இந்த உலகில் உள்ள சர்வ ஜீவ ராசிகளையும் நான் தான் படைத்தேன்”
“சர்வ ஜீவ ராசிகள்னா?”
“புல், பூண்டு முதல் மனிதன் வரை படைத்தவன் நான்தான்”
“அப்படின்னா, என்னை படைச்சது?”
“உன்னைப் படைத்ததும் நான்தான் மகனே”
“அடி செருப்பால... எங்க ஆத்தா இதக் கேட்டுச்சி விளக்கமாறு பிஞ்சிடும். நான் எங்க அப்பனுக்கு பொறந்தவன்டா”


திரைப்படம்


திருவிழா சமையங்களில் ஊரில் திரைகட்டி புரெஜெக்டர் வைத்து படம் ஓட்டுவார்கள் விடிய விடிய மூன்று திரைப்படங்கள் ஓடும். வீட்டில் இருந்து பாய், தலையாணை, தண்ணீர் பாட்டிலுடன் சென்று படம் பார்ப்போம். முழு படம் முடிந்த பின் தான் வீட்டுக்கு வருவோம்.. விடிய விடிய படம் பார்த்தோம் என்று சொல்லித்திரிந்த காலங்கள் அது. அதற்கு பின் விடியோ கேசட் மூலம் படம் ஒளிபரப்புவார்கள். இது தொலைக்காட்சி முன் ஊரே உட்கார்ந்து படம் பார்க்கும் இவ்வாறு பார்க்கும் போது சின்னக்கல்லை எடுத்து பிடித்வர்கள் மேல் போட்டு விளையாடுவது தனி சுகம். படகோட்டி, இதயக்கனி என பல படங்கள் நன்கு ஞாபகம் இருக்கிறது திரையில் பார்த்தது.

நாடகம்


இன்றும் கிராமத்திருவிழாவில் அழியாமல் ஊர் ஊருக்கு நடந்து கொண்டு இருப்பது நாடகம் தான்.  பழைய படி அதிகம் நடக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாடகத்தில் தான் எத்தனை சுவாரஸ்யங்கள் நாடகம் நடிக்க ரிகல்சர் பார்க்றேன் என்று  தம் அடிச்சு பழகியது எல்லாம் அப்பத்தான். நான் 6வது படிக்கும் போது முதன் முதலாக நாடகம் நடித்தேன் நாடகத்தின் பெயர் "நீந்தத்தெரியாத மீன்கள்" அந்த நாடகத்தில் நான் நடனமாடிய பாடல்  "வாடி என் கப்பங்கிழங்கே" என்ற பாடல் அப்புறம் ஒரு நான்கைந்து வருடம் நாடகம் நடித்தோம். நாடகத்தில் நடிக்க சேலத்தில் இருந்து நடிகைகளை அழைத்து வந்து நடத்துவார்கள். அவர்களுடன் நம்மாளுக அடிக்கும் லுட்டியை கிண்டல் செய்வது தான் அப்போதைய பொழுது போக்கு. கிராமத்து இளைஞனுக்கு அப்போதெல்லாம்  நாடகத்தை பற்றி தான் அவர்கள் பேச்செல்லாம் இருக்கும். இந்த நாடகம் இன்னும் மறையாமல் நிறைய இடங்களில் நடப்பது வரவேற்கத்ததக்கது ஆனால் விடிய விடிய பார்க்கனும் அது தான் கவலை...

நடன நிகழ்ச்சி

முதன் முதலாக எங்கள் ஊரில் மதுரை நீக்ரோ பாய்ஸ் நடனம் என்ற பெயரில் பாடலுக்கு நடனமும் பின் மிமிக்கிரி, தீ நடனம், பாம்பு நடனம் என்று பல்வேறு நடனங்கள் இடம் பெற்று பெருத்த எதிர்பார்ப்புகள் இருந்தன அப்போதெல்லாம் சுத்து வட்டாரத்தில் எந்த ஊரில் நீக்ரோ பாய்ஸ் நடனம் என்றாலும் மேடைக்கு முன் இருக்கும் இடம் எனக்குத்தான் இரவு 10 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு 6 மணிக்கு துண்டு போட்டு உட்கார்ந்த காலம் எல்லாம் உண்டு. இந்த வகையான நடனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பாடலுக்கு நடனம் அடுத்து அரைகுறை நடனம் என்று இன்று நடனங்கள் நடைபெறும் இடத்தில் இருந்து ஒரு அடி கூட நகரமுடியாத அளவிற்கு மக்களை ஈர்க்க ஆரம்பித்து விட்டன.

நடன நிகழ்ச்சியை பிற்காலத்தில் ஊரில் நாங்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கால கட்டம் வந்தது அதற்கு முன் நின்று வசூல் செய்து நடனம் ஆடும் நடிகைகளை தேர்வு செய்வதில் இருந்து அனைத்திலும் முன் நின்று செய்து செய்தது எல்லாம் இப்போது நினைவில். பின் சில வருடங்களுக்கு அப்புறம் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து விட்டார்கள் அப்புறம் நாடகம் நடத்தி அதில் இரண்டு காட்சிக்கு ஒரு நடனம் என்ற புதிய முறையாக நாடகத்தில் நடன நிகழ்ச்சியை புகுத்தி நாடகம் என்ற பெயரில் நடனம் இடம் பெறச்செய்தோம்.

இந்த வருடம் மீண்டும் நாடகம் மட்டுமே நடத்த அனுமதியாம் அதில் இடம் பெறும் பாடல்கள் 5க்குமேல் இருக்ககூடாது என்று சொல்கிறார்கள் என்றனர். இந்த வருடம் கிடாக்கறி சாப்பிட்டாலும் நடன நிகழ்ச்சி நடப்பதில்லை என்பது மிக வருத்தமே...

கரகாட்டம்



கிராமத்திருவிழாவில் இதற்கு அதிக இடம் உண்டு. கராகாட்டம், நையாண்டி மேளம் மற்றும் குறவன் குறத்தி ஆட்டம் என்று சூட்டைக்கிளப்பும் இந்த வகை ஆட்டங்கள். கராகட்டத்தில் கரகத்தை வைத்து சுற்று ஆடுவதும் அதில் பல வித்தைகளும் செய்து காட்டுவர் நடன மங்ககைகள் இப்போதெல்லாம் அந்த வகை ஆட்டத்தை பார்க்க இயவில்லை. சும்மா கரகத்தை வைத்து சீன் காட்டு ஆடும் ஆட்டம் தான் அதிகம். அதுவும் குறவன் குறத்தி ஆட்டத்தில் பேசும் வசனங்கள் எல்லாம் இரட்டை, மூன்று வசனங்கள் கொண்டதாக இருக்கும். பெண்ணுடன் பேசும் பேச்சு நேரடியாக வசனங்களை பேசி அனைவரையும் ரசிக்க வைப்பர்.. இதைப்பார்க்க கூட்டம் முண்டியடிக்கும்.

இந்த குறவன் குறத்தி ஆட்டத்தில் அவர்கள் பாடும் 2 அர்த்தம் கொண்ட பாடல்கள் அந்த நிகழ்ச்சிக்கு பின் சிறிது காலம் அனைவரையும் முனு முனுக்க வைக்கும். (சித்தாட கட்டிகிட்டு ) என்ற பாடலின் 2 அர்த்த முள்ள வேறொரு பாடல் இன்றும் நினைவில் உள்ளது.

அடுத்த பதிவு:

ஒரிஜனல் ரெக்கார்ட்டு டேன்ஸ் நடக்கும் இடமும் பார்க்க சென்ற போது ஏற்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளும்...

படங்கள் கூகுள்...

12 comments:

  1. //அதுவும் குறவன் குறத்தி ஆட்டத்தில் பேசும் வசனங்கள் எல்லாம் இரட்டை, //

    யூ டியூபில் சில குறவன் குறத்தி வீடியோக்கள் இருக்கு, அதில் இரட்டை எல்லாம் இல்லை, நேரடியாகவே ஆபாசம் தான். மக்கள் விரும்பியதை க்கொடுக்கிறார்களோ என்னவோ

    ReplyDelete
  2. ரிக்கார்ட் டான்ஸ் ஆபாசத்தை தான் தூண்டுது. அதை மட்டும் எடுத்ததில் தப்பில்லைன்னு தான் தோணுது

    ReplyDelete
  3. சதீஷ் .........மீண்டும் பால்ய பருவத்தில் திருவிழா கூட்டத்தில் புத்தாடை கட்டி குதுகலமாக விடிய விடிய கரகாட்டம் பார்த்து தோழிகளோடு சேர்ந்து ஆடிய நினைவுகளை தட்டி எழுப்பிய உங்கள் பதிவிற்கு ஒரு கைதட்டல் ...............

    ReplyDelete
  4. சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததாலே இதையெல்லாம் பார்த்ததே இல்லை.. ஆனால் அந்தக்குறையை போக்கிவிட்டது உங்கள் பதிவு

    ReplyDelete
  5. இள வயது ஞாபகங்கள கிளப்பி விட்டுட்டீங்க. புளுதி பறக்கும் படியான நிகழ்வை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  6. நானும் கொஞ்சம் உங்க பதிவை படித்ததால் எங்க ஊர் திர்விழாப்பக்கம் போய் வந்தேன் நினைவுகளில்

    ReplyDelete
  7. அந்தியூர்ல....ஜமுனா ஆடிய ஆட்டம் பல பேரு தூக்கத்த கெடுத்தது....இப்ப இல்லை...சின்ன வயசுல புரியாம பார்த்திட்டு வந்து பள்ளியில பசங்க கிட்ட சட்டை யை சுருட்டி வயிற்றை காமிச்சு ஜமுனா இப்படித்தான்டா ஆடுனா என்று நண்பன் ஆடியதை பார்த்து சிரித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது...ஹஹ!

    ReplyDelete
  8. எங்க ஊர் ஜாபகம் வருதுங்க இப்ப எங்க கூத்து பறக்க முடியுது . அழியும் கலைகளை அருமையாக பதிவாக்கி அசத்திடிங்க போங்க .

    ReplyDelete
  9. சங்கவியண்ணே..!

    கூத்துக் கலையை வளர்க்க வேண்டியிருந்த ஒரு நிகழ்வை தலைமுறை வளர்ச்சி அழிவை நோக்கி தள்ளிவிட்டது..

    இணையத்தில் வில்லேஜ் ரிக்கார்டு டான்ஸ் என்று போட்டால் பிட்டு படக் காட்சிகளைப் போல நடனங்கள் வந்து கொட்டுகின்றன..!

    இதனைத் தடை செய்தது சரியானதுதான்..!

    ReplyDelete
  10. மிகவும் ரசித்த பதிவு. இதை மேற்கோள் காட்ட அனுமதிக்க வேண்டும்.

    ReplyDelete
  11. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்,விரும்பி அதை அவர்கள் செய்யவில்லை.கட்டாயத்திற்கு ஆட்பட்டுதான் அப்படி ஆகிறார்கள்.

    ReplyDelete